Sunday 30 January 2011

நான் கையெழுத்திட்டுவிட்டேன்..



உயிர் தரித்திருப்பதென்பது
மீனுக்கு மட்டுமல்ல
மீனவனுக்கும் போராட்டமாகிவிட்டது
தினந்தோறும்!!!..
கடலுக்குள் அழுவதால்
எங்கள் மீனவனின் கண்ணீரும்
வெளியில் தெரிவதில்லை போலும்..
காராக்கிரகத்தையும் குண்டுகளையும்தவிர
மரணமும் பரிசாய்க்கிடைப்பதுண்டு அவனுக்கு.

வாக்குச்சீட்டில் 
குத்திய பாவத்துக்கு
முதுகில் குத்தப்படுவதென்பது,
சாபக்கேடான வாடிக்கையாகிவிட்டதென்றாலும்;
மறுபடியும் நாடித்தான் செல்கிறோம்
விட்டில்பூச்சிகளாய்,
விடிவெள்ளியென பொய்மினுங்கை பூசிக்கொண்ட
தீப்பந்தங்களை நோக்கி.

இறையாண்மையென்று பொய்க்கூக்குரலிட்டு
தன்சொத்தைப்பாதுகாக்கும்
மயில்வேடமிட்ட வான்கோழிகளுக்கு,
உயிரையே சொத்தாய்க்கொண்ட
எளியவனை 
இலவசமெதுவும் பெற்றுக்கொள்ளாமல்
மனிதனாய் நீடிக்கும் யாரேனும் அறிமுகப்படுத்தி வையுங்கள்..
நம்முடைய இரைக்காகவும்தான்
அவன் செத்துமடிகிறான்.

எல்லை கடந்தும் தாக்கும்
எல்லையில்லா பயங்கரவாதத்தை
தடுக்கவொட்டா எல்லைச்சாமிகளாய்..
வாக்குறுதிகளை
வரமெனவீசிவழங்கும் கூட்டம் வருமுன்
நமக்கு நாமே
உறுதிக்காப்பிட்டுக்கொள்வோம் 
மனிதம்மட்டுமே காப்போமென்று..

டிஸ்கி:  தமிழக மீனவர்களின் மீது நடைபெறும் கட்டவிழ்த்த வன்முறையை கண்டித்து, அனைவரும் கூட்டு முயற்சியில், அனுப்பவிருக்கும் இந்த மனுக்கடிதத்தில் நான் 1870 ஆவது நபராக கையெழுத்திட்டு விட்டேன். அப்ப நீங்க?????



விண்ணப்பம் இங்கே இருக்கு.



Thursday 27 January 2011

இப்படி ஒளிஞ்சுக்கிட்டா எப்படி கண்டுபிடிக்கிறதாம்..

ரொம்ப நாளா தள்ளிப்போட்டுப்போட்டு கடைசியில கிளம்பிட்டோம். எங்கேயா!!.. ஷிர்டி+சனிஷிங்னாப்பூருக்குத்தான். இங்கே மஹாராஷ்டிராவில் மூன்று கோவில்களை விசேஷமா சொல்லுவாங்க. மும்பையிலிருக்கும் மஹாலஷ்மி கோயில், அப்புறம், ஷிர்டி சனி ஷிங்கனாப்பூர், அப்புறம் கோலாப்பூர் மஹாலஷ்மி. அதிலும் ஷிர்டிக்கு போறதை, நம்மூர்ல திருப்பதிக்கு போறதுமாதிரியே ரொம்ப சிலாகிச்சு சொல்லுவாங்க.

இங்கே உள்ளவங்களுக்கு ஷிர்டியையும், ஷிங்கனாப்பூரையும் பிரிச்சுப்பார்க்கத்தெரியாது. போனா ரெண்டையும் தரிசனம் செய்யணும். அப்பத்தான் யாத்திரை பூர்த்தியான பலனாம். எல்லாம் நாமே உண்டாக்கினதுதானே. உண்மையில் ரெண்டும் பக்கத்துப்பக்கதுலதான் இருக்கு,.. அதனால அலைச்சல் மிச்சமாகும்ன்னு நினைச்ச யாரோ கெளப்பிவிட்டதாத்தான் இருக்கணும். மெனக்கெட்டு இன்னொரு பயணம் புறப்படப்போறோமா என்ன?..

மொதல்ல அதாவது 2002ல், கார்வாங்கின புதிதில் லாங்க் ட்ரைவ் போனாப்லயும் இருக்கும், ரங்க்ஸின் ட்ரைவிங் திறமையை செக் பண்ணதாவும் இருக்கும்,(இது நான் வெச்ச டெஸ்ட் :-)), கோவிலுக்கு போனாப்லயும் இருக்கும்னு மூணு அம்சத்திட்டம் போட்டு போயிருந்தோம். அதுக்கப்புறம் இப்பத்தான்.. மும்பையிலிருந்து ரெண்டு பாதைகள் இருக்கு. நாசிக் வழியா போறது ஒண்ணு. இன்னொண்ணு, மும்பை பூனா ஹைவேயில் போய் அதுக்கப்புறம் சக்கன், ஷிரூர், அஹமது நகர் வழியா போறது. இது ரெண்டும் ரொம்ப ஃபேமஸ். இதுதவிரவும் வேற பாதைகளும் இருக்குது.

நாங்க நாசிக் வழியாத்தான் முதல்தடவை போயிட்டு வந்தோம். அதனால இப்போ, மும்பை பூனா ஹைவே வழியா போலாம்ன்னு முடிவாச்சு. இதுல குறுக்கே பாதைகள் வந்து இணையாது. சும்மா சல்ல்ல்லுன்னு ஃபுல் ஸ்பீடுல வேண்ணாலும் போகலாம். செம த்ரில்லிங்கா இருக்கும். அதுவும் ghatன்னு சொல்லப்படற மலைப்பாதைகள் நிறைய வருவதால் ரொம்பவே அழகாவும் இருக்கும். ஆனா, வெய்யில் காலத்துல வெக்கை சுட்டெரிச்சுடும். இந்த ஹைவேவழியாத்தான் குஜராத் போற பஸ்களெல்லாம் போகும். அதனால நல்ல மோட்டல்களும் நிறையவே உண்டு. ஆனா,.. நாசிக் வழியில்!!.. ம்ஹூம். நம்மூர்ல சென்னை போறப்ப பஸ்ஸை நிறுத்துவாங்களே!!.. அதுமாதிரி ரொம்ப 'தரமான??..' டீக்கடைகள்தான் இருக்கும். தண்ணீர்பாட்டிலைத்தவிர ஒண்ணும் நல்லதா கிடைக்காது.



மும்பை- பூனா நெடுஞ்சாலை..

கூகிள் மேப்பை ஒரு ப்ரிண்ட் எடுத்துக்கலாம்ன்னு சொன்னேன். கேட்டாத்தானே.. அதெல்லாம் போறப்ப அங்கங்கே விசாரிச்சுக்கலாமாம். எப்படியும் ஆறுமணி நேரப்பயணமாகும். அதனால் காருக்குள்ளயே மிச்ச தூக்கத்தை தொடர்ந்துக்கலாம்ன்னு சுதியும் லயமும் ஆளுக்கொரு பெட்ஷீட் சகிதமா சுருண்டுட்டாங்க. இருள்பிரியாத அந்த காலைப்பொழுதும், குளிரும், அடிக்கிற எதிர்காத்தும் ஜிவ்வுன்னு இருந்தது. வழியில் ஒரு மோட்டலில் வண்டியை நிறுத்தி, காபி, சாப்பிட்டுட்டு பயணத்தை தொடர்ந்தோம்.

சிலதெல்லாம், ச்சும்மா ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மாதிரியே இருக்குது. சின்னச்சின்ன ரெஸ்டாரண்டுகள், பத்திரிக்கைகளும், புதுப்பட டிவிடிக்களும் விற்கிற கடைகள், ஜூஸுக்கு தனிக்கடைகள், அப்புறம் அதே காம்ப்ளெக்ஸ்ல சின்ன சர்வீஸ் ஸ்டேஷனோட, ஒரு பெட்ரோல் பங்க்ன்னு பக்காவா இருக்கு. வண்டிக்கும் தனக்கும் எரிபொருள் நிரப்பிக்கிட்டு, மக்களெல்லாம் டிவிடிக்களை மேஞ்சுக்கிட்டிருக்காங்க. பெரும்பாலான வண்டிகள் அவுரங்காபாத் வரைக்கும் போகுமாம். அதுவரை பொழுதுபோகணுமே!.. இதுல, டிபன் சாப்பிட நிறுத்தின இன்னொரு மோட்டலில் அழகா தோட்டமெல்லாம் போட்டு, ஈமு, வாத்துன்னு செல்லப்பிராணிகளை அதுல விட்டிருந்தாங்க. பார்க்க ரொம்ப அழகாயிருந்தது.

இந்த ரெஸ்டாரண்டின் பெயர் சிரிக்கும் கல்.. smile stone in english :-)))))))

நாங்க முதல்ல ஷிங்கனாப்பூர் போயிட்டு அப்புறம் ஷிர்டி போகலாம்ன்னு ப்ளான் பண்ணியிருந்தோம்.  நமக்கு பூனா ஊருக்குள்ள போகத்தேவையில்லை. அவுட்டரிலேயே போகணும். வழியெங்கும் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டுகள்... சென்ட்ரல் எக்ஸைசின் பூனா டிவிஷனுக்குட்பட்டதாம். லோனாவ்லா என்ற மலைப்பிரதேசத்தையொட்டி சாலை போகுது. அங்கங்கே கட்டிவிட்டிருக்கிற ரிஸார்ட்டுகள் கண்ணுக்கு தட்டுப்படுது.

இனி சின்னச்சின்ன கிராமங்களை கடந்து போகவேண்டியிருக்கும். கோடேகாவ்க்கு அப்புறம், அஹமத் நகர் போய் அங்கிருந்து ஷிங்கனாப்பூருக்கு தனிச்சாலை பிரியுதுன்னு, வலையில் தேடினப்ப பார்த்தோம். 'அஹமத் நகர்.. அஹமத் நகர்'ன்னு போறவழியெல்லாம் ஏலம்போட்டுக்கிட்டே போய், கடைசியில் கண்டுபிடிச்சோம். அஹமது நகர் கழிஞ்சதும், ரெண்டு பக்கங்களிலும் அறிவிப்பு பலகைகளை எதிர்பார்த்துப்போயிட்டே இருக்கோம்.

முஹூர்த்த நாள் போலிருக்கு.. எங்க பார்த்தாலும் பா(bha)ராத்திகள்.. அதாவது கல்யாண ஊர்வலங்களும், அதுல டான்ஸ் ஆடுறவங்களும். பெரிய வண்டியொண்ணில் மியூசிக் சிஸ்டத்தை வெச்சு அந்த பிராந்தியத்தையே அலறவெச்சுக்கிட்டிருக்காங்க. நல்ல வேளைப்பா.. இந்த சிஸ்டம் இன்னும் மும்பைக்கு வரலை.. வந்தா அவ்வளவுதான் :-))))))))
ம்யூசிக் சிஸ்டத்துக்கு தனி சவாரி..

அரை மணி நேரத்துக்கப்புறம்தான் தப்பான சாலையில் வந்துட்டோமோன்னு ஒரு ஐயப்பாடு. வந்தவழியே யு டர்ன் எடுத்து திரும்பு.... ஏழெட்டுக்கிலோமீட்டர் கடந்திருப்போம். வலதுபக்கம் நீலக்கலர்ல சின்னதா ஒரு ஆர்ச். சனி ஷிங்கனாப்பூர்ன்னு எழுதியிருக்கு. மொதல்ல அதைக்கடந்துதான் கவனிக்காம வந்திருக்கோம். எப்படி கண்டுபிடிக்கமுடியும்??.. ரோட்டுலேர்ந்து பத்தடி உள்ளே தள்ளியில்ல இருக்கு :-)). ரோட்டோரத்துல போர்டு வைக்கிறதுக்கு இன்னும் யாரும் சொல்லிக்கொடுக்கலை போலிருக்கு!!

மெயின்ரோட்டிலிருந்து கோவில் எட்டுகிலோமீட்டர் தூரத்துலதான் இருக்கு. போய்ச்சேர கால் மணிக்கூராவதுஆகாது? கண்டிப்பா ஆகும்.. அதுவரைக்கும் தலபுராணத்தைப்பார்க்கலாம்..

இந்த சுட்டியை பிடிச்சுட்டே போனீங்கன்னா கூகிளாண்டவர் வழி சொல்லுவார்.

தொடரும்..




Monday 24 January 2011

தெளிந்த மனம்..


ஆயிரம் முயன்றும் தன்னுடைய மனப்போராட்டங்களை அடக்கமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள் தீப்தி. 'கீச்..கீச்.. ' என்று குரலெழுப்பியபடி அவள் காலடியில் சிந்திக்கிடந்த கடலையொன்றை கொறிக்க முயன்றுகொண்டிருந்தது குருவியொன்று. அதை ஏதோ விளையாட்டுப்பொருளாய் எண்ணி, அதைப்பார்த்து நகைத்துக்கொண்டிருந்தது , பக்கத்திலிருந்தவளின் கைக்குழந்தை. வழக்கமான மனநிலையில் இருந்திருந்தால் அவளும் இதையெல்லாம் ரசிக்கக்கூடியவள்தான். சில காலமாகவே கவலை மூட்டமிட்டுக்கொண்டிருந்தது அவள் மனதை. இன்று காலை, புயல் கரையைக்கடந்துவிட்டது.

எல்லாம், அந்த ஆனந்தை சொல்லணும்.. அவளுடைய கல்லூரித்தோழன்தான். படிப்பு முடிந்ததும், மேற்படிப்புக்காகவும், வேலைக்காகவும், திருமணத்தை நோக்கியும் புறாக்கூட்டமாய் இருந்த நண்பர்கள் ஒவ்வொருவராய் பிரிந்துசென்றுவிட, சிலர் மட்டும் தொடர்பில் இருப்பதாய் வாக்குக்கொடுத்து, சிலவருடங்களிலேயே மீறினார்கள். அதில் இவர்களும் அடக்கம். காலப்போக்கில் அனைவரும் நினைவுகளாக மட்டுமே தங்கி, கிட்டத்தட்ட மறந்தேபோய்விட்ட நிலையில்தான் திடீரென்று முளைத்திருக்கிறான்.அதுவும் அவளுடைய ஆபீசிலேயே, அவளுக்கு மேலதிகாரியாக..

முதலில் அலுவலகத்தில் சந்தித்தபோது அவளால்,அவனை அடையாளம் கண்டுகொள்ளவே முடியவில்லை. குறுந்தாடியும், புஸ்புஸ் கன்னங்களும், லேசான தொப்பையுமாக காலம் அவனை சிறிதளவு மாற்றியிருந்தது. ஆனால், அவனுக்கு அவளை கண்டுகொள்வதில் கஷ்டமிருக்கவில்லை. "ஹேய்.. நீ தீப்திதானே!!.." என்று கூவியவாறே கல்லூரிக்கால நினைவில் அவள் கைகளை பற்றிக்கொண்டான். அவள் தர்மசங்கடத்துடன், சுற்றுமுற்றும் பார்த்தவாறே கைகளை விடுவித்துக்கொண்டாள்.

"ஓ.கே.. உங்கிட்ட நிறையப்பேசணும். எப்ப என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகப்போறே.. உன் கணவர் வித்தியாசமா நினைக்கமாட்டார் இல்லியா.. அவரும் நம்ம ஜெனரேஷன்தானே.. மாட்டார்.." என்று அவனே கேள்விகேட்டு அவனே பதிலும் சொல்லிக்கொண்டான்.

"மாட்டார்... எங்களுக்குள்ள ஒளிவுமறைவே கிடையாது தெரியுமா?.. என்னோட ஃப்ரெண்ட்சைப்பத்தி அவருக்கும், அவரோட ஃப்ரெண்ட்சைப்பத்தி எனக்கும் நல்லாவே தெரியும். இன்ஃபாக்ட் உன்னைப்பார்த்ததுமே அடையாளம் கண்டுக்கிட்டா கூட ஆச்சரியமில்ல.."

""ஹவ் நைஸ்... எங்களைப்பத்தி ரொம்ப 'பெருமையாத்தான்' சொல்லிவெச்சுருக்கேன்னு நம்புறேன்..." அவன் கண்களில் அதே பழைய விஷமப்பார்வையுடன் சிரித்தான். "நிஜமா, நல்லாத்தான் சொல்லிருக்கேன்ப்பா.. என் ஃப்ரெண்ட்செல்லாம் கடைஞ்செடுத்த 'நல்லவங்க'ன்னு அவருக்கு நல்லாவே தெரியும். அவள் குரலிலும் அதே கேலி வந்து ஒட்டிக்கொண்டது.

இருந்தாலும், ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து, கடைசியில் நச்சரிப்பு தாளாமல் வீட்டுக்கு வரச்சொன்னாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அவள் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு இறங்கியவன், அவள் கணவனுடன் சினேகமாக கைகுலுக்கினான். அவள் அறிமுகப்படுத்துமுன்பே , " நீங்க ஆனந்த் தானே" என்று கேட்டு அதிரவைத்தான் கிஷோர். "எப்படி!!.. எப்படி தெரியும் என்பெயர்". ஆச்சரியமானான்.

"உங்க மேனரிசம் காட்டிக்கொடுத்துச்சு.. அடிக்கடி மூக்கை நீவிவிட்டுக்கறீங்களே..."

"அடிப்பாவி... எல்லாமே சொல்லியிருக்கியா.. பெண்கள் கிட்ட ரகசியங்கள் தங்காதுன்னு சொல்றது சரியாத்தான் இருக்கு.." அதிர அதிர சிரித்தான் ஆனந்த்.

வீட்டுக்குள் போய் ரொம்ப நேரம் அரட்டையடித்துவிட்டுத்தான் கிளம்பினான். அதற்கப்புறம் அவன், அடிக்கடி வருவது வாடிக்கையாயிற்று. கல்லூரிக்காலங்களில் தாங்கள் அடித்த லூட்டிகள், கட் அடித்துவிட்டு படம் பார்க்கச்சென்று மன்னிப்புக்கடிதம் எழுதிக்கொடுத்தது.. அதிலும்,.. பெற்றோர் கையெழுத்தை ஒருவர் மற்றொருவருக்காக போட்டுக்கொண்டது என்று பழைய காலங்கள்தான் அரட்டையில் இடம்பெறும். அப்படி ஒரு பொழுதில்தான், மனதில் கல்மிஷமில்லாமல்,..  விபரீதம் தெரியாமல் தங்களுடைய நெருக்கத்தை மற்றவர்கள் காதல் என்றே நினைத்ததையும், அப்படியல்ல என்று கடைசியில் எல்லோரையும் கடிந்துகொண்டதையும் சொல்லிவிட்டான் . அதில்தான்,  விழுந்தது முதல்பொறி

அவனளவில் நல்லவன்தான். ஆனாலும் நாளடைவில் அவ்வப்போது சந்தேக நெருப்பு எழுவதும், 'சீச்சீ.. இருக்காது' என்று தணிவிப்பதுமாக தவித்துக்கொண்டிருந்தான் கிஷோர். எது அவனை இப்படி எண்ண வைத்தது? அவனும் பர்சனாலிட்டியிலோ, மற்ற தகுதிகளிலோ..  யாருக்கும் குறைந்துவிடவில்லை. ஆனாலும் ஒரு பயத்தை உணர்ந்தான். வழக்கம்போலவே இருவரும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தது,  நெருப்பை இன்னும் விசிறிவிட்டது. ஆனால், அவர்களுக்கு அவன் மன நிலை தெரிய நியாயமில்லையே..

அவனுடைய மனச்சீற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வார்த்தைகளில் வீசத்துவங்கியது. கணவனிடம் ஏற்பட்ட மாற்றங்களை அவளும் கவனிக்காமல் இல்லை. 'ஜஸ்ட் பொஸசிவ் நெஸ்' என்றே நினைத்தவள் அதில் பெருமையும் பட்டுக்கொண்டாள். ஆனால் நாட்கள் செல்லச்செல்ல எதையோ உணரத்துவங்கினாள்.கடைசியில், ஆனந்த் இங்கு வருவதில் தனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் கோடிகாட்டிவிட்ட அன்றுதான் முற்றிலும் உடைந்துபோனாள். அவன் தன்னை சந்தேகிக்கிறான் என்பதை அவளால் ஒரு சதவீதம்கூட நம்பமுடியவில்லை. அந்தளவுக்கு அவளை நேசித்திருந்தான்.

'பின் ஏன்.. இந்த விஷவிதை விழுந்தது??..' அவளுடைய கேள்விகளுக்கு அவனிடம் சரியான பதிலில்லை. கல்லூரிக்கால கிசுகிசுவா.. அதைத்தான் இல்லையென்று அவர்களிடமே மறுத்தாகிவிட்டதே.. இல்லை,  அவர்கள் கலகலப்பாக பழகுவதுதான் காரணமா!!.. இதென்ன சிறுபிள்ளைத்தனமாக?.. என்று சமயங்களில் தோன்றும். விவாதம் வளரக்கூடாதேயென்று மனதிலேயே போட்டுப்புதைத்துக்கொள்வாள். அதேசமயம் ஆனந்தை வீட்டுக்கு வராதேயென்று சொல்லவும் முடியவில்லை. கிஷோரைப்பற்றிய நல்ல அபிப்ராயம் குலைந்துவிடக்கூடாதேயென்றும் கவலைப்பட்டாள்.

'தட..தட'வென்ற சத்தத்துடன் புயலாய் நுழைந்த ரயில் அவளை இவ்வுலகிற்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் பெண்கள் பெட்டியில் ஏறிக்கொண்டவள், ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். வரவேற்புப்புன்னகைகளுக்கு பதிலைக்கொடுத்துவிட்டு காலியான ஒரு இருக்கையை நோக்கிச்சென்றாள்.  கையிலிருந்த இன்னொரு பையை மேலடுக்கில் வைத்துவிட்டு அமரப்போனவள் திடீரென தலைசுற்றி தடுமாறினாள்.

"மேடம்.. மெதுவா.. பார்த்து உக்காருங்க. தண்ணி குடிக்கிறீங்களா.." என்று கேட்டபடி பாட்டிலைத்திறந்தாள் ஒருத்தி. ரயில் சினேகிதம்..

"அக்கா.. இந்த சாக்லெட்டை வாய்ல போட்டுக்கோங்க. வெள்ளிக்கிழமை, இன்னிக்கு சாப்பிட்டிருக்க மாட்டீங்களே.. சாப்பிடாம இருந்ததுல சர்க்கரை குறைஞ்சுருக்கும். இது உடனடி நிவாரணம் கொடுக்கும்.." தோள்பையிலிருந்து நிம்மி எடுத்து பிரித்துக்கொடுத்த சாக்லெட்டுக்கு இப்படி ஒரு பரிமாணம் இருப்பதை இன்றைக்குத்தான் கண்டுகொண்டாள். 'காலேஜ் பொண்ணுங்களுக்கு சாக்லெட்டை சாப்பிடத்தான் தெரியும். இதுவும் தெரியுமா.'  அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிம்மியிடம் பேசிக்கொண்டிருந்தால் பொழுதுபோவதே தெரியாது. பேச்சு அங்கிங்கு சுற்றிவிட்டு படிப்பில் வந்து நின்றது.

"அப்புறம்... படிப்பெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?.. செமஸ் எப்போ வருது நிம்மி"

"நான் இந்த கோர்ஸை விடப்போறேங்க்கா.."

"ஏன்ம்மா.. ரொம்ப வேல்யூ உள்ளதாச்சே.. விட்டுட்டு என்ன பண்ணப்போறே!!.."

"எனக்கு ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கணும்ன்னு ஆசை. அப்பாவோட நச்சரிப்பு தாங்காமத்தான் இதுல சேர்ந்தேன். அவர் இஞ்சினியர் ஆகமுடியாத ஆசையை என்னைவெச்சு நிறைவேத்திக்கிறாராம். அப்ப என்னோட ஆசையை நிறைவேத்தறதுக்கு நான் யாரைப்பிடிக்கிறதாம். அதனால, அப்பாகிட்ட தெளிவா சொல்லிட்டேன். ஆரம்பத்துல பிடிவாதம் பிடிச்சாரு. நானும் மொதல்ல பிடிவாதம் பிடிச்சேன்.."

"ஐயையோ.. அப்பறம்.."

"அப்புறம் எனக்கும் ஒண்ணு தெளிவா புரிஞ்சது. பிடிவாதத்தால ஒண்ணும் ஆகப்போறதில்ல. பிரச்சினை இன்னும் சிக்கலாத்தான் ஆகும். அதனால, அப்பாவ ஒரு நாள் உக்காரவெச்சு பேசினேன். என்னோட எண்ணங்களையெல்லாம் எடுத்துச்சொன்னேன். அவர் பயப்படறமாதிரி இல்லாம என்னோட எதிர்காலம் நல்லாவே இருக்கும்,எனக்கு என்மேல நம்பிக்கை இருக்குன்னு புரியவெச்சேன். அப்பா.. ஒத்துக்கிட்டாரு. இப்ப, காலேஜ்ல லீவிங் சர்ட்டிபிகேட்டுக்கு அப்ளிகேஷன் கொடுக்கத்தான் போயிக்கிட்டிருக்கேன்"

"நல்லதும்மா.. உன் ஸ்டாப் வரப்போவுது. வெளியே கூட்டமா இருக்கே, பார்த்து இறங்கிடுவேயில்ல"

"பை...க்கா"

ரயில் மீண்டும் கிளம்பியது. இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். இந்த சின்னப்பெண்ணுக்கு வாழ்க்கையில் இருக்கும் தெளிவு,  தனக்கு ஏன் இல்லாமல் போனது.  பேசினால் பிரச்சினை கூடும் என்று,  ஆரம்பத்திலேயே சும்மா இருந்தது தன்னுடைய தப்போ?? உட்காரவைத்து புரியவைத்திருந்தால் இன்றைக்கு எல்லாம் நல்லபடியாக இருந்திருக்குமோ.. தன்மீது இருந்த பிரியம் குலையாத நிலையில் நிச்சயமாக காது கொடுத்துக்கேட்டிருப்பான்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை. 'இன்றைக்கு சாயந்திரமாவது அவனிடம் விளக்கமாக பேசிவிடவேண்டும். என்னுடைய மனதில் களங்கமில்லை என்பதை நிச்சயமாக புரிந்துகொள்வான்'. எடுத்த முடிவு கொஞ்சம் ஆசுவாசம் தர,  இருக்கையில் நிம்மதியாய் சாய்ந்து உட்கார்ந்துகொண்டாள். ஜன்னல்வழியே நுழைந்த காற்றின் கீற்றொன்று, அவள் கூந்தலில் கொஞ்சம் விளையாடிவிட்டுப்போனது. ரயிலின் தடக்தடக் சத்தம்கூட..  அவளுக்கு 'குட்.. லக்' என்று வாழ்த்துச்சொல்லுவதாகவே பட்டது.

டிஸ்கி: பொங்கல் தினத்திலிருந்து தன்னுடைய பயணத்தை ஆரம்பித்திருக்கும் அதீதம் இணைய இதழில் வெளிவந்தது இந்த சிறுகதை. அதீதத்துக்கு நன்றி.


Thursday 20 January 2011

பாலக் பேட்டீஸ் கறி.

உடம்புல வேணுங்கிற ஹீமோக்ளோபின் இல்லைன்னா, அதாங்க.. இரும்புச்சத்து இல்லைன்னா டாக்டர்கள் மொதல்ல சொல்றது, 'ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. நெறைய கீரைவகைகள் சாப்டுங்க, பேரீச்சம்பழம், வெல்லமெல்லாம் சாப்டுங்க'ன்னுதான். பேரீச்சம்பழமும் வெல்லமும் எப்படியாவது வயித்துக்குள்ள தள்ளிடலாம். இந்த கீரைவகைகள் இருக்கே.. சிலபேருக்கு இறங்கவே செய்யாது.பொரியல், மசியல்ன்னு சிலவெரைட்டிகள்தான் அதுல செய்யவும் முடியும். குழந்தைகளைப்பற்றி கேக்கவே வேணாம். கீரையை தட்டுல வெச்சாலே முகம் அஷ்டகோணலாகும்.  தெனமும் ஒரேமாதிரி செஞ்சா போரடிக்காதா என்ன!!.. கொஞ்சம் நடையை மாத்துங்க :-))) எங்கேயா??.. மார்க்கெட்டுக்குத்தான் ...

நல்லதா ரெண்டு கட்டு பசலைக்கீரை வாங்கிக்கோங்க. இதை ,  'பாலக்'ன்னும் சொல்லுவாங்க .ஒரு சின்னகட்டு வெந்தயக்கீரை வாங்கிக்கோங்க. (வீட்டுல ஒரு தொட்டியில வெந்தயத்தை கொஞ்சூண்டு தூவிவிட்டுட்டா முளைச்சுடும். தேவையானப்ப பறிச்சுக்கலாம்), அப்புறம் வீட்டுல வெங்காயம், தக்காளி,   இஞ்சி, கொத்தமல்லி இலையெல்லாம் இருக்குதுதானே.. இல்லைன்னா அதையும் வாங்கிடுங்க. அப்புறம் உருளைக்கிழங்கும் வேணும். எல்லாம் வாங்கியாச்சா..

ரைட்டு.. இப்ப.. ஒரு வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு தக்காளியும் பொடியா நறுக்கிக்கோங்க.  ஒரு ஸ்பூன் நறுக்குன இஞ்சியும் ரெடியா இருக்கட்டும். அப்புறம் பசலைக்கீரை, வெந்தயக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணெல்லாம் போக கழுவி, தண்ணீரை வடியவிடுங்க. அப்புறம் பசலைக்கீரையை ஒரு பாத்திரத்திலும், ரெண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கி, இன்னொரு பாத்திரத்திலும் போட்டு, குக்கரில் வெச்சு வேகவிடுங்க. கிழங்குகளை கழுவியதே போதும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கவேண்டாம். நல்லா மசியறவரை வெந்ததும் எடுத்து ஆறவையுங்க. அப்புறம் கீரையை நல்லா மசிச்சு வையுங்க. மிக்ஸியில் போட்டும் அரைச்சுக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் போட்டு வெடிக்கவிடுங்க. இப்ப, வெங்காயம், இஞ்சியை போட்டு லேசா வதக்குங்க. கொஞ்சம் வாசனை வந்ததும், தக்காளியைப்போட்டு நல்லா கரையுறவரை வதக்குங்க. ஆச்சா!!.. இப்ப மசிச்ச கீரையை அதுல ஊத்துங்க. கீரை ரொம்ப கட்டியா இருந்தா அரைகப் தண்ணியும் சேத்துக்கலாம். இப்ப, அரைஸ்பூன் மிளகாய்த்தூளும், சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு கிளறிவுடுங்க. அரைஸ்பூன் கரம்மசாலாவும் போட்டு கொதிக்கவிடுங்க. கொதிவந்ததும், அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வெச்சாப்போதும். அவ்ளோதான்..

இப்ப, பேட்டீஸ் செய்யலாம்... பொடியாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயம்(விக்கிற விலைக்கு ஒண்ணுபோதும் :-)), கால்கப் கொத்தமல்லி இலை,  நறுக்கிய வெந்தயக்கீரை,வெந்த உருளைக்கிழங்கு,அரை ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, அப்புறம் சிட்டிகை மஞ்சள்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அதே அளவு உப்பு எல்லாத்தையும் கலந்து எலுமிச்சையளவு உருண்டைகளா பிடிச்சு, லேசா வடை மாதிரி தட்டிக்கோங்க. இந்த பேட்டீஸ்களை ரவையில் புரட்டி அடுக்கிவெச்சுக்கோங்க.

பேட்டீஸுக்கு தேவையானவை.

தயாரான பேட்டீஸ்.
அடுப்பில் லேசா குழிவான தோசைக்கல்லை(இதை அடைக்கல்லுன்னும் சொல்லுவாங்க)சூடாக்கி,  ரெண்டுமூணா பேட்டீஸ்களை அடுக்கி சுத்திலும் எண்ணெய்விட்டு, ரெண்டுபக்கமும் பொன்னிறமாகுறவரைக்கும் பொரிச்செடுங்க. டீப் ஃப்ரை செய்யவேணாம். பேட்டீஸ் உதிர்ந்து எண்ணெய் வேஸ்டாயிடும். shallow fryதான் இதுக்கு லாயக்கு.

பரிமாறும்வரைக்கும் ரெண்டும் தனித்தனியாத்தான் இருக்கணும். இல்லைன்னா, ரெண்டும் சேர்ந்து குழம்பிடும். சாப்பிடப்போகும்போது பேட்டீஸ்களை க்ரேவியில் போட்டாப்போதும். தனியா கிண்ணத்தில் பரிமாறுறதா இருந்தா பேட்டீஸைப்போட்டு, அது தலைல க்ரேவியை ஊத்திடுங்க.. சப்பாத்திக்கு அருமையான ஜோடி..
சப்ஜி ரெடி.
லிஸ்டை ஒருக்கா சரிபார்த்துக்கலாமா..
       
க்ரேவிக்கு:                                                                          :
பாலக்கீரை - ரெண்டு கட்டு 
ஒரு வெங்காயம்- நறுக்கியது
தக்காளி - 1 பொடியா நறுக்கியது.
இஞ்சி - நறுக்கியது அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரைடீஸ்பூன்,
மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
கரம்மசாலா- அரைடீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப.

பேட்டீஸுக்கு:
வெந்தயக்கீரை- ஒரு சிறுகட்டு
ஒரு வெங்காயம்- பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை - கால்கப்
நறுக்கிய இஞ்சி - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2.
ரவை- கொஞ்சூண்டு..
உப்பு- ருசிக்கேற்ப.

வெறுமனே பேட்டீஸ் மட்டும் செஞ்சுக்கிட்டு, அதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்டார்ட்டராவும் வெச்சுக்கலாம்.



Tuesday 18 January 2011

மும்பை மின்சார ரயில்கள்.. ஒரு பயணம்.

மும்பைக்கு மொதமொதல்ல வர்ற யாருமே, ரொம்பவும் அதிசயிச்சுப்பார்க்கிறது இங்குள்ள , பரபரப்பான ஆட்களையும், மின்சார ரயில்களையும்தான். அதிலும் எங்கூர் ரயில் நிலையங்கள்ல உள்ள கூட்டத்தைப்பார்த்தா, திருவிழாக்கூட்டம் தோத்துடும் :-)). நாம சும்மா கூட்டத்துக்கு நடுவுல நின்னுக்கிட்டா போதும். அப்படியே ட்ரெயின்ல ஏத்தி, இறக்கிவிட்டுடுவாங்க. சந்தேகமா இருந்தா ஒரு நடை சத்ரபதி சிவாஜி டெர்மினல்ஸ போயி பாத்துட்டு வாங்க.இங்க உள்ளவங்களுக்கு நடக்கவே தெரியாதோன்னுதான் நினைப்பீங்க.

ஒரு நாளைக்கு மின்சார ரயில்கள் ஓடலைன்னாலும், எங்கூரு ஸ்தம்பிச்சுப்போயிடும்,.. மும்பையின் ரத்த நாளங்கள்ன்னே இதை சொல்லலாம். ரயில்களின் முதல்வகுப்புகளை குறிவெச்சு வெடிகுண்டு சம்பவம் நடந்தப்ப மும்பையே கிடுகிடுத்துப்போச்சு :-((. ஒரு நாளைக்கு 6.9 மில்லியன் மக்கள் லோக்கல் ரெயில்களை பயன்படுத்தறதா புள்ளிவிவரங்கள் சொல்லுது. மின்சார ரயில்களை நாங்கள் லோக்கல்ன்னுதான் குறிப்பிடுவோம். மும்பை ரெயில்வேக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.  இந்தியாவின் முதல் , மற்றும் ஆசியாவின் பழமையான ரயில்வே என்ற சிறப்பு இதற்குண்டு. இந்தியாவுல முதல் ரெயில் மும்பைக்கும், ஜஸ்ட் முப்பத்து நாலே கிலோமீட்டர்ல இருக்கிற தானேக்கும் இடையில ஓடியிருக்கு.

மும்பை ரெயில்வே ரெண்டுபிரிவுகளா இயங்குது. ஒண்ணு வெஸ்டர்ன் ரெயில்வே(WR), இன்னொண்ணு, சென்ட்ரல் ரெயில்வே(CR).இதை நாங்க வெஸ்டர்ன்,மற்றும் சென்ட்ரல் லைன்ன்னு சொல்லுவோம். மொத்தம் 183 லோக்கல் ரயில்கள் 2624 ட்ரிப்கள் அடிக்குது. ஆனாலும், மும்பையின் மக்கள்தொகைக்கு முன்னே இது யானைவாயில் சோளப்பொறிதான். அதனால, இப்போ புதுசா மெட்ரோ மற்றும் மோனோ ரயில்கள் ஓடவிடணும்ன்னு ஏற்பாடுகளெல்லாம் நடந்துக்கிட்டிருக்கு. இங்கே பஸ்களை மாதிரியே மெதுஓட்டம் மற்றும் விரைவு ரயில்கள்ன்னு ரெண்டுவகையா பிரிச்சிருக்காங்க. இதில் மெது ஓட்ட ரயில்கள் எல்லா ஸ்டேஷன்களிலும், விரைவு ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களிலும் நிற்கும். ஒவ்வொண்ணுக்கும் தனித்தனி தடங்களும் உண்டு.

இங்கே மும்பையில் C.S.T., மற்றும் சர்ச்கேட் என்று ரெண்டு முக்கியமான டெர்மினஸ்கள் இருக்குது. மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸைத்தான் நிறைய மக்களுக்கு, குறிப்பா தென்னிந்தியர்களுக்கு தெரியும். ஒரு காலத்துல V.T.ன்னு சுருக்கமா அழைக்கப்பட்ட விக்டோரியா டெர்மினஸ்தான் பலத்த போராட்டத்துக்கப்புறம் C.S.T.(சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்)  ஆகியிருக்கு. முக்கியமான ரயில்களெல்லாம் இங்கிருந்துதான் புறப்படும். ஆனா, இப்பல்லாம் விரைவு ரயில்கள் ரெண்டு டெர்மினஸ்களிலும் இருந்து புறப்படுது.

இதுல, வெஸ்டர்ன் லைன்ல, சர்ச்கேட்ல இருந்து தஹானுரோட் வரைக்கும் போகிறபாதையில்,

முதலான ஸ்டேஷன்கள் வருகின்றன. தடித்த எழுத்துக்கள்ல குறிப்பிட்டிருக்கும் இடங்களில் மட்டுமே விரைவு ரயில்கள் நிற்கும். 

C.S.T.லேர்ந்து ஆரம்பிக்கும் செண்ட்ரல் லைன் ரொம்ப முக்கியமானது. கூடுதலான கூட்டம் இந்த லைன்லதான் அள்ளும். இதுல மூணு லைன்கள் இருக்குது. ஒண்ணு, C.S.T.லேர்ந்து ஆரம்பிச்சு கல்யாண் வரைக்கும் போகுது. அதுக்கப்புறம் அது ரெண்டா பிரிஞ்சு ஒண்ணு கஸாராவுக்கும் இன்னொண்ணு கோப்போலி-க்கும் போகுது. இந்த லைன்லதான் குர்லா, தாதர், தானா, கல்யாண்ன்னு முக்கியமான நமக்கெல்லாம் ரொம்ப பரிச்சயப்பட்ட நிலையங்கள் வருது. இதில் குர்லா ஸ்டேஷனில், ட்ரெயினிலிருந்து ஏறுவதும் இறங்குவதும் ஒரு சாகசப்பயணமாகவே இருக்கும்.. கொஞ்சநாள் பழகியாச்சுன்னா அந்த பரபரப்பு உங்களுக்கும் தொத்திக்கும் :-))

இந்த லைன்ல , Chhatrapati Shivaji Terminus , Masjid Bunder, Sandhurst Road, Byculla, Chinchpokli, CurreyRoad,  Parel, Dadar, Matunga, Sion, Kurla, Vidyavihar, Ghatkopar, VikhroliKanjurmarg, Bhandup, Nahur, Mulund, Thane, Kalwa, Mumbra, Diwa, Kopar,  Dombivli, Thakurli, Kalyanபோன்ற நிறுத்தங்கள் வரும். இதில் டிட்வாலாவுல இருக்கிற புள்ளையார் கோயிலும், 'மாத்தேரன்' என்ற மலைவாசஸ்தலத்துக்கு பக்கத்துல இருக்கிற 'நேரல்' என்ற நிலையங்களும் முக்கியமானவை. மாத்தேரனுக்கு டாய் ட்ரெயினில் போக விருப்பமிருந்தா நேரல்ல இருந்துதான் கிளம்பணும்.

சென்ட்ரல் லைனில் வரும் நிறுத்தங்கள்:


துணை லைன் 1:Kalyan, Shahad, Ambivli, Titwala, Khadavli, Vasind, Asangaon, Atgaon, Khardi, Kasara

துணை லைன் 2: Vasai Road, Juchandra , KamanRoad, Kharbav, Bhiwandi, Kopar, Dativali, Nilaje, Taloja, Navade Road, Kalamboli, Panvel.

இதில் இரண்டாம் துணை லைன் கிட்டத்தட்ட தொழிற்பேட்டைகளை ஒட்டியே போகுது. 

சென்ட்ரல் லைனில் ஒரு பகுதிதான் ஹார்பர் லைன். இதுவும் C.S.T.லேர்ந்துதான் புறப்படுது. இது மும்பையை பன்வெலுடன் இணைக்கிறது. முக்கியமா நவிமும்பை மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதிலும் மூணு துணைலைன்கள் இருக்குது.

முக்கியமான C.S.T.லேர்ந்து பன்வெல் வரைக்குமான லைன்ல, Chhatrapati Shivaji Terminus, Masjid Bunder, Sandhurst Road, Dockyard Road, Reay Road, Cotton Green, Sewri, Wadala, Guru Tegh Bahadur Nagar, Chunabhatti, Kurla, Tilak Nagar, Chembur, Govandi, Mankhurd, Vashi, Sanpada, Juinagar, Nerul, Seawoods-Darave, CBD Belapur, Kharghar, Mansarovar, Khandeshwar,Panvel

வாஷியிலிருந்து தானா வரைக்குமான லைன்ல, Vashi, Sanpada, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும்,

பன்வெல்லில் இருந்து தானா வரைக்குமான லைன்ல, Panvel, Khandeshwar, Mansarovar, Kharghar, CBD Belapur, Seawoods-Darave, Nerul, Juinagar, Turbhe, Kopar Khairane, Ghansoli, Rabale, Airoli, Thane முதலான நிறுத்தங்களும் 

வடாலாவிலிருந்து அந்தேரி வரைக்குமான லைன்ல Wadala, King's Circle, Mahim, Bandra, Khar Road, Santacruz, Vile Parle, Andheri .. முதலான நிறுத்தங்களும் வருது.


கிட்டத்தட்ட இந்தியாவின் எல்லாப்பாகங்களிலேர்ந்தும் வேலைதேடி தினமும் மக்கள் வந்து குவிஞ்சுக்கிட்டே இருப்பதால, எவ்ளோ ரெயில்கள் ஓடினாலும் பத்தமாட்டேங்குது. 1700பேர் இருக்கவேண்டிய ஒரு ரயில்ல கிட்டத்தட்ட 4500 பேர் பயணம் செய்யறதா சொல்றாங்க. இட நெரிசல்ல...  ஜன்னல்ல, அப்புறம் கதவுலயெல்லாம் தொங்கிக்கிட்டும், சிலசமயங்களில் மேல்கூரையிலும் பயணம் செய்யறதெல்லாம் சர்வசாதாரணம். இதனாலயே விபத்துக்களும் நடக்குது. வெளிநாட்டுக்காரங்க யாராச்சும் ரயில்ல பயணம் செய்யணும்ன்னு ஆசைப்பட்டா, கூட்டமில்லாத ஞாயிற்றுக்கிழமைதான் சவுகரியப்படும். அப்படியும் உக்கார இடமிருக்காது.

 நிறைய சிறுவியாபாரிகளுக்கு மும்பை ரயில்கள்தான் இலவச வியாபாரஸ்தலம்.. வெளியில் ப்ளாட்பார்மில்கூட கிடைக்காத எக்கச்சக்க சிறுசிறு பொருட்களெல்லாம் இங்கே மலிவுவிலையில் கிடைக்கும். காய்கறிகள், பழங்கள், பெண்களுக்கான ஃபேன்ஸி பொருட்கள் எல்லாம் அழகா பாக்கெட் போட்டு வெச்சிருப்பாங்க. இந்த வியாபாரத்தை நம்பியே எக்கச்சக்க குடும்பங்கள் பிழைக்குது.

ட்ரெயின் நிக்கிற சொற்ப நேரத்துல ஏறுறதையும், இறங்கறதையும்... மும்பைக்கு புதுசா வந்தவங்க மொதமொத பார்க்கிறப்ப மலைச்சுப்போயிடுவாங்க. பழக்கப்பட்டவங்களுக்கே சிலசமயம் கஷ்டமாயிடும். இப்படித்தான் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னே, ஒருதடவை, ரங்க்ஸும் நானும் பிள்ளைகளை கூட்டிக்கிட்டு தானாவுக்கு கிளம்பினோம். ரங்க்ஸும் பையரும் முதல்வகுப்பிலும்,  நானும் பெண்ணும் பெண்கள் பெட்டியிலும் இருந்தோம்.

தானாவில் ரங்க்ஸும் பையரும் இறங்கிட்டாங்க. நானும் பெண்ணும் இறங்கப்போகும்போது ஒரு கூட்டம் அப்படியே எங்களை உள்ளயே தள்ளிட்டுப்போயிடுச்சு. இறங்கறதென்ன!!.. அந்தக்கூட்டத்துல எங்களால அசையக்கூடமுடியலை. பொண்ணு பயத்துல கத்த ஆரம்பிச்சுட்டா.. அப்புறம் ரொம்ப கஷ்டப்பட்டு, தானாவுக்கு அடுத்து இருக்கும் முலுண்டில் இறங்கி, எதிர்ப்புறம் வந்த ட்ரெயினில் தானாவுக்கு வந்து சேர்ந்தோம். ரொம்ப நாளைக்கு அந்தபயம் இருந்துக்கிட்டேருந்தது :-))

இங்கே ட்ரெயினால நடக்குற விபத்துக்களைப்பத்தி சொல்லியே ஆகணும், ரயில் வருதுன்னு தெரிஞ்சாலும், தண்டவாளத்தை ஓடிக்கடக்கறதும், ஒரு ப்ளாட்ஃபார்மிலிருந்து இன்னொரு ப்ளாட்ஃபார்முக்கு போகணும்ன்னா, மேம்பாலத்தை உபயோகப்படுத்தாம, அப்படியே இறங்கி ஓடறதும், முக்கியமா .. சாலைகளில் கேட்டை அப்படியே குனிஞ்சு கடக்கறதும் கூடுதல். பத்தாததுக்கு தொங்கிட்டுப்போறவங்கள்ல, தள்ளுமுள்ளு காரணமா எத்தனையோ பேரு ட்ராக்ல கீழே விழுறதும் சகஜம். எவ்வளவுதான் எச்சரிக்கை செஞ்சாலும் பொறுப்பில்லாம நடந்துக்கிட்டு, 'இட் ஈஸ் த ஸ்பிரிட் ஆஃப் மும்பை'ன்னு சொல்றவங்களும் இருக்காங்க. என்ன நடந்தாலும், மும்பை ரயில் அதுபாட்டுக்கு ஓடிக்கிட்டே இருக்கு. நிற்காமல்.....







LinkWithin

Related Posts with Thumbnails