Monday 26 June 2017

ஆற்றுக்கால் பகவதி..

அழுத கண்ணும் சிவந்த மூக்குமாக தலைவிரி கோலத்துடன் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி. மதுரையில் தன்னுடைய சிலம்பை உடைத்து அதிலிருந்த மாணிக்கப்பரல்களே சாட்சியாக, தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தபின், ஆவேசம் கொண்டு மதுரையைத் தீக்கிரையாக்கி விட்டு, அதே ஆவேசம் எள்ளளவும் குறையாமல் பரசுராம ஷேத்திரத்தில் அந்த ஆற்றங்கரைக்கு வந்தடைந்திருந்தாள். அங்கு இருந்த பெரியவர் ஒருவர் அவளை ஆற்றுப்படுத்தி அமைதியடையச்செய்தபின் அவள் பொன்னுடலோடு தனக்காகக் காத்திருந்த கோவலனுடன் புஷ்பக விமானத்திலேறி வானுலகம் சென்றாள் என்பது செவி வழிச் செய்தி. அவள் யார் என்பதைக் கண்டுகொண்ட பெரியவர் அந்த ஆற்றங்கரையிலேயே அவளுக்காக ஒரு கோவில் கட்டினார். பொதுவாக கேரளக்கோவில்களில் தேவியை "பகவதி" என அழைப்பது மரபு. அந்தப்படியே இவளும் "ஆற்றுக்கால் பகவதி" எனப் பெயர் கொண்டாள்.

திருவனந்தபுரத்தின் பத்மநாபசுவாமி கோவிலிலிருந்து இரண்டு கி.மீ. தொலைவிலிருக்கும் இக்கோவில் உள்ளூர் மக்களால் "தேவி ஷேத்ரம்" எனவும் அழைக்கப்படுகிறது. "பெண்களின் சபரிமலை" எனவும் அழைக்கப்படும் இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பூர நட்சத்திரம் பவுர்ணமி தினத்தன்று நடைபெறும் "பொங்காலை" மிகப்பிரசித்தி பெற்றது. லட்சக்கணக்கான பெண்கள் இவ்விழாவில் கலந்து கொள்வதால் இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்ற பெருமையுடையது.

தேவி சன்னிதியிலிருந்து எடுத்துச்செல்லப்படும் தீபத்தினால் கோவிலின் பெரிய மற்றும் சிறிய பள்ளி அடுப்புகளும் பண்டார அடுப்புகளும் குலவை மற்றும் மங்கல ஓசைகள் முழங்க தீப்பெருக்கப்படும். இவ்வோசை கேட்டதும் அனைவரும் தத்தம் அடுப்புகளில் தீப்பெருக்குவர். கோவில் வளாகத்தில் மட்டுமன்றி சுற்றுப்பட்டு பத்து கி.மீ. அளவில் ரோடுகள் சந்துபொந்துகளில் அடுப்பு கூட்டி, புது மண்பானையில் பொங்கலிடுவர். அதன்பின் மேல்சாந்தியும் நம்பூதிரியும் பொங்கல் பானைகளில் நீர் தெளித்து நிவேதனம் செய்வர். ஆகாயத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூமழை தூவியதும், மக்கள் தங்கள் நிவேதனத்தை தேவி ஏற்றுக்கொண்டாள் என்ற மகிழ்ச்சியுடன் வீடு செல்வர்.

கோவிலின் முற்றத்திலேயே ஒரு பக்கமாக இருக்கும் கவுண்டர்களில் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக்கொண்டு தேவிக்குப் பிரியமான தெச்சிப்பூ மாலையும் கையில் சுமந்து தரிசனத்துக்கான வரிசையில் நின்றோம். முற்றத்தின் இன்னொரு பக்கத்தில் கேரளக்கோவில்களுக்கேயுரிய வெடி வழிபாட்டுக்கான அனுமதிச்சீட்டுக் கவுண்டரும் இருக்கிறது. கோவிலின் கோபுரவாசல்களில் சக்தியின் வெவ்வேறு வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. வாசலில் நிற்கும்போதே மூலவரைத் தரிசிக்க முடியுமளவிற்கு மிகச் சிறிய கோவில். இதை நாடியா எங்கெங்கிருந்தோ பக்தர்கள் வருகிறார்கள்!!!? என்ற வியப்பு தோன்றுவது இயல்பே. மூர்த்தி சிறிதெனினும் இவளது கீர்த்தி பெரிது.
வாசலைத்தாண்டினால் முன் மண்டப முகப்பிலும் பகவதியே சிறுவடிவில் அமர்ந்திருக்கக் காண்கிறோம். மூலவரைப்போலவே இவளுக்கும் வஸ்திரம் அணிவித்து அலங்காரங்கள் செய்யப்படுகிறது. அதைப்பார்த்துக்கொண்டிருந்தபோதே சங்கநாதத்துடன் கேரளத்துக்கேயுரிய செண்டை மேளம் முழங்கியது. என்னவொரு தாளநடை.!!! அதில் மயங்கி நின்றுவிட்டால் தீபாராதனையைக் காணாமல் தவறவிட நேரும்.. கவனம்.

மூலவரான பகவதி ரத்னாங்கி அணிந்து மலர்களினூடே மதிவதனம் காட்டி, "அஞ்சேல்" என அருள்பாலிக்கிறாள். அவளைத்தரிசித்துக்கொண்டு சற்றே முன்நகர்ந்து அர்ச்சனைச்சீட்டையும் வாங்கி வந்த தெச்சிமாலையையும் நீட்டினேன். மாலையை அருகிலிருந்த ஆணியில் ஏற்கனவே தொங்கிக்கொண்டிருந்த மாலைகளுடன் சேர்த்துப் போட்டு விட்டு "பிரசாதம் அந்தப்பக்கம்" என எதிர்ப்பக்கத்தைக் கை காண்பித்தார். அந்த ஆணி செய்த பாக்கியம்தான் என்னே!!.. எதிர்ப்பக்கத்தில், ஆஸ்பத்திரி மற்றும் வங்கிகளில் உரக்க டோக்கன் எண்ணைச் சொல்லி அழைப்பது போல் பெயர் மற்றும் நட்சத்திரத்தைச் சொல்லி உரக்க அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். உரியவர் போய், குங்குமம் களபம், பூக்கள் மற்றும் ஒரு வாழைப்பழம் வைக்கப்பட்டிருக்கும் இலைத்துண்டை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். வெகுநேரமாக நாம் அழைக்கப்படவில்லையென்றாலும் பாதகமில்லை. விவரங்களைச் சொன்னால் போதும். பிரசாதம் வழங்கப்பட்டு விடும்.

பிரசாதம் வாங்கிக்கொண்டு திரும்பும்போது மறுபடி செண்டைமேளம் முழங்கியது. சன்னிதியின் முன் ஓடி வந்து நின்றால் அடடா!! உற்சவ மூர்த்தி சன்னிதிக்கு வெளியே கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. எல்லா அபிஷேகங்களும் முடியும் வரை செண்டை மேளம் தொடர்ந்தது ஓர் வித்தியாசமான அனுபவம். அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடத்தியதும் உற்சவ மூர்த்தி மறுபடியும் உள்ளே கொண்டு செல்லப்பட்டு விட்டது. ஒவ்வொரு வழிபாட்டின்போதும் செண்டையும் சங்கும் முழங்க தேவிக்கான பாடல்களும் பாடப்படுவதைக் கேட்பது நமக்கெல்லாம் ஒரு புது அனுபவம்தான்.

கோவிலினுள் சிற்பங்களுக்குக் கணக்கேயில்லை. விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், ரதி மன்மதன் சிலைகள், வினாயகர், ஆஞ்சநேயர் மற்றும் சிவன் என அனைவரும் ஆளுயரச் சிலைகளாக ஒவ்வொரு தூணிலும் வடிக்கப்பட்டிருக்கின்றனர். கண்ணகியின் வாழ்வு நிகழ்ச்சிகளும் சிற்பங்களாக இடம் பெற்றிருப்பதாக அறியப்படுகிறது. இரண்டாம் பிரகாரத்தில் வினாயகருக்கென தனிச்சன்னிதியும் அமைந்துள்ளது. அதன் அருகே கேரளக்கோவில்களுக்கேயுரிய சர்ப்பக்காவு அமைக்கப்பட்டு, பிரதி மாதமும் ஆயில்ய பூஜையும் நடந்து வருகிறது.

நாங்கள் பிள்ளையாரை வணங்கி நகரும்போது சர்ப்பக்காவினருகே சிறு கூட்டமாக ஆட்கள் நிற்பதும் நடுவில் நின்ற ஒருவர் ஏதோ பாடிக்கொண்டிருந்ததும் தெரிந்தது. என்னவென்று அங்கே போய்ப்பார்த்தால்,.. மக்கள் ஒவ்வொருவராக தங்கள் பெயரையும் நட்சத்திரத்தையும் சொன்னதும் அவர் தன் கையில் வைத்திருந்த, கொட்டாங்கச்சி வயலின் போன்ற சிறு கருவியை இசைத்தவாறே நாலைந்து வரிகள் பாடினார். இதுவும் அங்கே ஒரு விதமான வழிபாடாக நடத்தப்படுகிறது.

பிரகாரம் சுற்றி வரும்போது, பிரசாத ஸ்டால் தாண்டியதும் இருந்த சிறு முற்றத்தில், மணைப்பலகை முன் வைக்கப்பட்டிருந்த குத்துவிளக்குகள், நெல் நிரப்பப்பட்ட பாத்திரம், அதில் செருகப்பட்டிருந்த தென்னம்பூக்குலை, நாணத்துடன் மணமக்கள் என திருமணச்சூழல் நிரம்பியிருந்தது. கேரள முறைப்படி நடக்கும் கல்யாணம்.. அதுவும் கோவிலில் நடக்கும் கல்யாணத்தைப் பார்த்தே ஆக வேண்டுமென ஆவல் முட்டினாலும், இன்னும் போக வேண்டிய இடங்கள் நினைவில் வந்து அழைக்க மனதில்லா மனதோடு அங்கிருந்து கிளம்பினோம்.

இக்கோவிலில் பொங்கல் வழிபாடு நடத்தப்படும் சமயம் "தாலப்பொலி" என்ற நேர்ச்சையும் பெண்குழந்தைகளால் நிறைவேற்றப்படும். இதனால் அக்குழந்தைகளுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிட்டுமென்பது நம்பிக்கை.

Wednesday 21 June 2017

வாய் பிளந்தான் மணி(மேத்தன் மணி)

திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் பத்மநாப சுவாமி கோவிலின் கிழக்கு வாயிலை நோக்கிச் செல்லும்போது, நமக்கு இடது புறமிருக்கும் கட்டிடத்தின் முகப்பில், தெப்பக்குளத்தைப் பார்த்தாற்போல் இருக்கிறது மேத்தன் மணி என அழைக்கப்படும் வாய் பிளந்தான் மணி.
கேரளா யூனிவர்சிட்டியில் வேலை பார்த்து வந்த சித்தப்பா அப்போது கரியவட்டத்தில் வசித்து வந்தார். ஒரு தடவை, ஸ்கூல் பெரிய லீவில் அங்கே சென்றிருந்த சமயம் பப்பநாதனைத் தரிசித்து விட்டு வெளியே வந்தபோது இந்த மணியைப் பார்த்து வியந்து நின்றது மங்கலாக நினைவிருக்கிறது. அதன்பின், பல வருடங்களுக்குப்பிறகு, என் அண்ணன் உடம்பு சரியில்லாமல் பத்மதீர்த்தக் குளத்தின் வடகரையிலிருக்கும் ஆர்யவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் தங்கியிருந்த அறை தெப்பக்குளம் வ்யூ ஆதலால் பால்கனியில் நின்று பார்த்தாலே கடிகாரமும், அந்த மனிதத்தலையின் வாய் திறந்து மூடுவதையும், ஆடுகள் மனிதத்தலையில் வந்து முட்டுவதையும் அதைக்காண கூடியிருக்கும் கூட்டத்தையும் காண முடியும். மிகச்சிறு வயதில் அதிசயித்த காட்சி ஒரு நாளிலேயே பார்த்துப்பார்த்து அலுத்துப்போனது.

சமீபத்தைய திருவனந்தபுரம் விசிட்டின்போது, பப்பநாதனைக் காணச்சென்றோம். கோவிலை நெருங்கியதும் மணியின் ஓர்மை வர ஏறிட்டுப்பார்த்தேன். ஹைய்யோ!!.. ஐந்து மணிக்கு இன்னும் ஒரு நிமிடமே இருந்தது. தகவலைச் சொன்னபோது, "அது இப்பவுமா வொர்க்கிங் கண்டிஷனில் இருக்கப்போவுது?" என குடும்பம் அவநம்பிக்கை தெரிவித்தது. அவர்கள் சொல்லி வாய் மூடவில்லை. மணி அடிக்கத்தொடங்கியது. வாய் பிளக்கும் மனிதத்தலையையும், ஒவ்வொரு மணி அடிக்கும்போதும் அதை முட்டும் ஆடுகளையும் கண்டு,  ஆச்சரியத்தால் அப்படியே நின்று விட்டார்கள். மும்பை திரும்பியபின், மணியைப்பற்றி மேலும் தகவல் அறியும் பொருட்டு இணையத்தைத் துழாவினால் தகவல்களை அள்ளிக்கொட்டியது மகேஷ் ஆச்சார்யாவின் வலைப்பூ.

தகவல்கள் இங்கே..

//திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலை ஒட்டியுள்ள கருவேல்புர கொட்டாரத்தின் உச்சியில் பத்ம தீர்த்த குளத்தை நோக்கி வட திசையை பார்த்தாற் போல ஒரு அதிசய கடிகாரம் இருக்கிறது. இது 1892 ம் ஆண்டில் அமைக்கப்பட்டதாக திருவாங்கூர் சமஸ்தானச் சுவடிகளிலிருந்து தெரிகிறது. இதை நாளிகை சூத்திரச் சுவடி என்றும் கூறுவர்…

அன்றிலிருந்து இன்று வரை இந்தக் கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பதுடன் , துல்லியமாக நேரமும் காட்டுகிறது. இது ஒரு புதுமையான விந்தையான கடிகாரம். கடிகாரத்தின் மேலே ஒரு மனிதனின் தலை, அந்த தலையின் இரு பக்கங்களிலும் இரண்டு ஆட்டுக்கடாக்கள் ஒன்றையொன்று பார்ப்பது போல் அமைந்துள்ளது. கடிகாரத்தின் முட்கள் 1 மணி காட்டும் போது அந்த மனிதனின் வாய் மெதுவாக திறக்க ஆரம்பிக்கும். வாய் முழுவதும் திறந்ததும் 2 ஆட்டுக் கடாக்களும் ஒரே நேரத்தில் அந்த மனிதத் தலையில் வந்து மோதும். ஒரு மணி அடிக்கும். மனிதனின் வாய் மூடிக்கொள்ளும். அவ்வாறாக 12 மணியானால் மனிதனின் வாய் 12 தடவை திறந்து , திறந்து மூடும். ஆட்டுக்கடாக்களும் 12 தடவை முட்டும்.

இந்த விந்தையான கடிகாரத்தைத் திறம்பட செய்து முடித்தவர் திருவனந்தபுரம் அருகிலுள்ள வஞ்சியூரை சார்ந்த ப்ரம்ம ஸ்ரீ குளத்தூரான் ஆச்சாரியா என்னும் விஸ்வகர்மா ஆவார். நுட்பமான வேலைகளில் திறமை மிக்கவர். துப்பாக்கி முதல் பீரங்கி வரை எது வேண்டுமானாலும் செய்து கொடுப்பவர். வெள்ளையர்கள் தங்கள் இயந்திரங்கள் பழுது பட்டால் இவரிடம் வந்து தான் ஆலோசனை கேட்பார்கள். திருவனந்தபுரம் மகாராஜாவும் , ஆலப்புழையில் இருந்த ஜான்கால்டிகேட் என்ற வெள்ளையரும் சேர்ந்து குளத்தூரான் ஆச்சாரியாவிடம் சொல்லி கடிகாரத்தைச் செய்ய வைத்தனர். இந்தக் கடிகாரம் இன்று வரை ஓடிக்கொண்டு இருப்பதுடன் துல்லியமாக நேரமும் காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை மேத்தன் மணி என்றும் வாய் பிளந்து மூடுவதால் வாய் பிளந்தான் மணி என்றும் கூறுவார்கள்.//

நன்றி மகேஷ் ஆச்சார்யா.

யாராவது பேசுவதை வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருப்பவர்களையும், நாம் பேசுவதை சற்றே அசமஞ்சமாக, புரிந்ததோ இல்லையோ!!.. என்ற குழப்பமான முகபாவத்துடன் கேட்டுக் கொண்டு நிற்பவர்களையும் "ஏம்டே வாப்பொளந்தான் மணி மாரி நிக்கே? போயி உள்ள சோலிகளப்பாரு" என்று திட்டுவது கன்யாகுமரி வழக்கு.

Tuesday 20 June 2017

அயினிச்சக்கை என்ற அயினிப்பலா.

அயினிப்பலா அல்லது அயினிச்சக்கை என அழைக்கப்படும் இந்தப்பழத்தின் தாவரவியல் பெயர் Artocarpus hirsutus ஆகும். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலுள்ள பசுமையிலைக்காடுகளில் அதிகமாக வளர்கிறது. முப்பத்தைந்து மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இம்மரம் வீட்டு ஜன்னல்கள், நிலை போன்றவற்றைச்செய்ய அதிகம் பயன்படுகிறது. கேரளாவின் புகழ் பெற்ற snake boats அயினி மரத்தை உபயோகித்தே அதிகமும் செய்யப்படுகிறது. தேக்கைப்போன்று இந்த மரமும் வலிமை கொண்டதே. கன்யாகுமரி மாவட்டத்திலிருக்கும் மாத்தூர், திருவட்டார், திற்பரப்பு போன்ற மலையும் மலை சார்ந்த இடங்களில் இது அதிகம் விளைகிறது. தொட்டிப்பாலத்தைக் காணச்செல்லும்போது வழி நெடுக இருக்கும் ரப்பர் தோட்டங்களினூடே அயினி மரங்களும் அதிகம் வளர்ந்திருப்பதைக்காணலாம். 

அயினிப்பலா உருவில் பலாப்பழத்தின் மினியேச்சர் போலவே இருக்கும். நன்கு பழுத்ததும் முள்முள்ளான மேல்தோல் அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். இப்பழத்தின் தோலை வெறும் கைகளாலேயே மெதுவாகப் பிரித்தெடுத்தால், உள்ளே ஆரஞ்சு நிறத்தில் புளியம்பழ அளவிலான சுளைகள் நடுத்தண்டுடன் ஒட்டிக்கொண்டு கொத்தாக இருப்பதைக் காண முடியும். வேனிற்காலங்களில் அதிகம் கிடைக்கும். லேசான புளிப்பும் இனிப்புமாக உண்ண மிகச்சுவையாக இருக்கும் இந்தப்பழம் சிறுவர்களுக்கும் குழந்தையுள்ளம் கொண்டவர்களுக்கும் மிக விருப்பமானது. ஆகவே, பள்ளிக்கூடங்களின் வெளியே இதை விற்றுக்கொண்டிருப்பது சகஜமான காட்சி. நான் தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு பழம் பத்துப்பைசாவிற்கு விற்கும். அப்போதெல்லாம் அது பெரிய தொகை. ஆகவே இரண்டு மூன்று பேர் சேர்ந்து காசு போட்டு பழம் வாங்கி பங்கு பிரித்துக் கொள்வோம்.
பழத்தினுள் இருக்கும் விதைகள் கருமை நிறத்திலிருக்கும். அவற்றையும் வறுத்துத் தோலுரித்துத் தின்னலாம். இவ்விதையின் பொடி, ஆஸ்துமாவிற்கு அருமருந்து எனச்சொல்லப்படுகிறது.

சமீபத்தில் நாகர்கோவிலுக்குப் போயிருந்த சமயம், டதி ஸ்கூலை ஆட்டோ கடந்தபோது அயினி கண்ணில் பட்டது. சிறுவயது நினைவுகள் மேலெழ, சுவைத்தே ஆக வேண்டுமென கொதியுண்டாயிற்று. மறுநாள் போய் வாங்கி வந்து விட்டேன். ஆஹா.. ஆஹா.. இதைக் கையிலெடுத்து எத்தனை வருடங்களாயிற்று. பழத்தை மெல்லக்கையிலெடுத்து சுளை பிரித்து வாயிலிட்டேன். அபாரம்!! அப்படியே நினைவுத்தேரிலேறி பள்ளி நாட்களுக்கே போய் விட்டாற்போலொரு ஆனந்தம். யாம் பெற்ற இன்பம் என் மக்களும் பெறட்டுமென்று பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். பழத்தைச் சுவைத்த மகள் சில விதைகளை மும்பைக்குக் கொண்டு வந்து மண்ணில் ஊன்றி அவையும் முளைத்திருக்கின்றன. கன்றுகளானதும் வெளியே கொண்டு போய் மண்ணில் நட வேண்டுமாம். நல்ல விஷயங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தி விட்டது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.
நாகர்கோவிலில் பள்ளிகளின் வெளியே மட்டுமன்றி, வடசேரியிலிருக்கும் கனகமூலம் சந்தையிலும் கிடைக்கும். மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம் நெடுஞ்சாலையிலும், சுங்கான்கடை எனும் இடத்தினருகே குவியல் குவியலாக விற்பனைக்கு வைத்திருப்பதைக் காணலாம்.

Friday 16 June 2017

திரு. நாறும்பூநாதனின் பார்வையில் - "சிறகு விரிந்தது"

நெல்லை மண்ணுக்கேயுரிய மண்வாசனையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு. நாறும்பூநாதன் அவர்களுக்கு கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையிலும் மிக முக்கிய இடமுண்டு.  "கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல" போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும், "கண் முன்னே விரியும் கடல், யானைச்சொப்பனம்" என்ற கட்டுரைத்தொகுப்புகளையும், வெளியிட்டுள்ளார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவருமாவார். எனது கவிதைத்தொகுப்பான  "சிறகு விரிந்தது" பற்றி அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 
 
சாந்தி மாரியப்பனின்"சிறகு விரிந்தது"(கவிதைத் தொகுப்பு )
---------------------------------------------------------
கடந்த ஜனவரி மாதமே சென்னை புத்தகக்கண்காட்சியில் வாங்கிப் படித்து விட்டேன் என்றபோதிலும், உடனடியாக அபிப்பிராயம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டேன். 

இவரது நிழற்படங்களை ரசித்த எனக்கு, தற்போது தான் கவிதைகளை வாசிக்க நேரம் கிடைத்தது. திருநெல்வேலியில் பிறந்து (சரிதானா..?) தற்போது மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், அவ்வப்போது நெல்லை பாஷையில் பின்னூட்டங்கள் இடுவார். அவரது முதல் கவிதை தொகுப்பு இது.
"கால் தடம் பதியாப்பாதையெனவும் 
எழுதப்படாத வெற்றுக் காகிதமெனவும் 
முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம்"
என்றொரு கவிதை துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை தெளித்து விட்டு, இறுதியில் 
"அற்புதமானதாகவோ 
சாதாரணமாகவோ 
ஏதேனும் ஒரு கிறுக்கலையாவது 
பரிசளிப்பது மிக நன்று 
அதை வெறுமையாகவே விட்டு செல்வதை விட.."
என்று அற்புதமாக முடித்திருக்கிறார். 

கள்ளிப்பால் குடித்த சிசுவொன்றின் சன்னமான குரல் இன்னொரு கவிதையில் ..
"உணவென்று நம்பி அருந்திய பால் 
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே 
உறக்கம் கொண்டு விட்டோம் 
கள்ளித்தாய் மடியிலேயே 
பெற்றவள் முகம் கண்ட திருப்தியினூடே 
அறுக்கிறதொரு கேள்வி 
என் முகம் அவள் பார்த்த 
தருணமென்றொன்று இருந்திருக்குமா"
என்று கேள்வி பெற்றவளுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் தான்.

இவரது கவிதைக்குள் சஞ்சரிக்கும்போது, சில வரிகளில் கடக்க முடியாமல் மனம் நங்கூரமிட்டு அங்கேயே நின்று விடுகிறது. 
உதாரணத்திற்கு...
"சட்டைப் பையைத்துழாவும் கைகள் 
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும் 
கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெல்லாம் .."
என்ற வரிகள் நம்மை வேறொரு நினைவுக்கு திசை திருப்பி விடுவது தற்செயலானதா அல்லது இவரது கவிதையின் இயல்பா என்று தெரியவில்லை. 

"துரத்தித்திரிந்த தும்பிகளையும் 
பூவரச இல்லை பீப்பியையும் 
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து 
விவரிக்கும்போது 
பனையோலைக் காற்றாடிகளுடன் 
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள் 
சென்ற தலைமுறையின் 
மனதெங்கும் அப்பிக்கிடக்கும் 
செம்மண் புழுதியில்.."
என்று பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, கணினியில் உழலும் கூண்டுக்கிளிகளை பார்த்து நகைக்கிறார்.

"பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து 
மெல்லக் கண்பொத்தி 
கன்னம் கடித்த தருணங்களில் 
சீறிச்சினந்ததை பொருட்படுத்தாமல் 
சில்லறையாய் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை"
என அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதை உச்சம்..!

ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தைகள் உண்டா என்ன ?
கி.ரா.வின் கதவு கதையை நினைவுபடுத்தும் கவிதை இவரது"ரயிலோடும் வீதிகள்".
"அலுத்துப்போன கடைசிப்பெட்டி 
சட்டென்று திருப்பிக்கொண்டு இஞ்சினாகியதில் 
வேகம் பிடித்த ரயிலில் 
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது 
முன்னாள் இன்ஜின் 
வலியில் அலறிக்கொண்டு"
என்று வாழ்வின் அவலங்களை சற்றே மறந்து சிரிக்க வைக்கிறார்.

இவரது நிழற்படங்களை போலவே, நுட்பமான வாழ்வின் பதிவுகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவர்"வல்லமை"என்ற மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர்."அமைதிச்சாரல்"மற்றும்,"கவிதை நேரம்"போன்ற வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வரும் சாந்தி மாரியப்பன் தொடர்ந்து அடுத்தடுத்து தொகுப்புக்கள் கொண்டு வர வாழ்த்துகிறேன்!


மதிப்புரைக்கு நன்றி திரு. நாறும்பூநாதன் அண்ணாச்சி.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.


நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.

முகவரி:

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com

LinkWithin

Related Posts with Thumbnails