Saturday 19 January 2019

பலாக்கொட்டை துவரன் (நாஞ்சில் நாட்டு சமையல்)

ஜனவரி மாத ஆரம்பத்திலிருந்தே பலாப்பிஞ்சுகள் சந்தையில் வந்திறங்கத்தொடங்கி, பிப்ரவரி மார்ச்சில் முற்றிய பலாக்காய்கள் கிடைக்க ஆரம்பித்து கோடைக்காலம் முழுவதும் பலாப்பழங்கள் மலிந்து கிடக்கும். இடிசக்கைத்தொவரன், ஊறுகாய் என பிஞ்சுகளைப் பக்குவமாக்கி உண்டது போக, பலாக்காய்ச்சுளைகளையும் அதிலிருக்கும் இளங்கொட்டைகளையும் போட்டு புளிக்கறியும் செய்வர் எம்மக்கள். பழம் மலியும் காலத்திலோ பலாக்கொட்டைகள் வீடெங்கும் இறைபடும். அவற்றையும் வீணாக்காமல் அவித்தோ, வறுத்தோ இல்லையெனில் தணலில் சுட்டோ சாப்பிடலாம். இன்னும் மீதமிருக்கும் கொட்டைகளை அளவாக நீளநீளமாக நறுக்கி தேங்காயெண்ணெய்யில் பொரித்து, அதில் உப்பும் மிளகாய்த்தூளும் அளவாய்க்கலந்து தூவிக்குலுக்கி வைத்தால் சாயந்திர நேர காப்பிக்கு தொட்டுக்கிட ஆயிற்று. இத்தனைக்குப் பின்னாலும் மீதமிருக்கும் பலாக்கொட்டைகளைச் சக்கொட்டைத்தொவரன் செய்தால் "இன்னா பிடி" என்று காலியாகி விடும்.

பலாக்கொட்டைகளை அரிவாள்மணையில் இரண்டாக வகிர்ந்தால் அதன் மேலிருக்கும் ப்ளாஸ்டிக் லேமினேஷன் போன்ற மேல்தோல் சுலபமாகக் கழண்டு விடும். இல்லையெனில் சுத்தியல், அம்மிக்கல் போன்ற ஏதேனும் கனமான பொருளால் 'நச்'சென அதன் தலையில் ஒரு போடு போட்டாலும் இலகுவாகக் கழண்டு விடும். பின்பு, ப்ரவுன் நிற உள்தோலை கத்தி அல்லது கரண்டியால் சுரண்டி எடுக்கவும். முழுவதும் எடுக்க வராவிட்டாலும் பாதகமில்லை. அதன்பின் பலாக்கொட்டைகளை நன்கு அலசிக் கழுவிக்கொண்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு சிறிது உப்புடன் முக்கால் வேக்காடு வரை வேக விடவும். வெந்தபின் தண்ணீரை வடித்து விட்டு சிறிது ஆறியபின் வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஐந்து நல்லமிளகு, கொஞ்சம் சீரகம் இவற்றைப் பொடித்துக்கொண்டு இத்தோடு கைப்பிடி தேங்காய்த்துருவலுடன் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூள் மஞ்சட்பொடி சேர்த்து கரகரவென அரைத்துக் கொண்டால் துவரன் மசால் ரெடி. கடாயில் கொஞ்சம் எண்ணெயை சூடாக்கி கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து, மசாலாவைச் சேர்த்து துளி உப்பிட்டு கிளறி இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக விட்டபின், நறுக்கிய பலாக்கொட்டைத் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் வேக விட்டால் போதும். சக்கொட்டை துவரன் மணமணத்துக்கொண்டு சாப்பிட ரெடியாக இருக்கும். இறக்கும்போது ஒரு ஸ்பூன் தேங்காயெண்ணை சேர்த்தல் சிறப்பு.

சக்கைக்குரு என்று கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்கப்படும் பலாக்கொட்டைக்கு வாயு பகவான் தனது அருளை மிதமிஞ்சி வழங்கியிருப்பதால் சக்கொட்டையால் ஆன பதார்த்தங்களை அளவோடு உண்ணுதல் நலம். இல்லையெனில், "சாப்பிட்டவர் வருவார் பின்னே... ஏப்பம் வரும் முன்னே" என்பது போல் ஆகி விடும். இன்ன பிற பக்கவிளைவுகள் சபை நாகரீகம் கருதி இங்கே விலக்கப்படுகின்றன.

2 comments:

Nagendra Bharathi said...

அருமை

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாகேந்திர பாரதி,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails