Sunday 14 May 2017

சக்கையப்பம் என்ற பலாப்பழப் பணியாரம்.

பலாப்பழ சீசன் வந்ததும், பழமாகவே செழிக்கத்தின்று அலுத்த நாக்கு வேறு சுவையை நாடும் சமயம், வீடுகளில் சக்கையப்பம் அவிக்கப்படும். பொதுவாகவே பழச்சாறு அருந்துவதை விட பழமாகச் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்பார்கள். ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட விடாமல் வெவ்வேறு வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட வைக்கிறது மனிதனின் நாலு இஞ்ச் நாக்கு. அதைத் திருப்திப்படுத்தும் முயற்சியில் மனிதன் வெற்றியடைந்தானா எனக்கேட்டால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

பலாப்பழத்தை கீற்றுகளாக அரிந்தும் விற்பனைக்கு வைப்பார்கள். அந்தக்கீற்றுகளை கன்யாகுமரி மாவட்டத்தில் "முறி" என்று அழைப்பதுண்டு. சில வீடுகளில் தேவைக்குத்தக்கபடி ஒன்றிரண்டு கீற்றுகள் வாங்கி வருவர். சில வீடுகளிலோ முழுப்பழமும் வாங்கினால்தான் கட்டுபடியாகும். அப்படி வாங்கி வந்தாலும், அத்தனையும் கொடுக்காமல் "நெறயத்திண்ணா செமிக்காது மக்ளே" எனக்கூறி விட்டு கொஞ்சத்தைப் பதுக்கி விடுவாள் அம்மை. எதற்கா?.. எல்லாம் பலாப்பழ பணியாரம் செய்வதற்குத்தான்.

ஊறப்போட்ட சம்பா பச்சரிசியை நன்கு கழுவி, கல் இல்லாமல் வடிகட்டி ஆட்டுரலிலோ கிரைண்டரிலோ இட்டு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, முக்கால் பக்குவம் அரைந்ததும் பலாச்சுளைகளைச்சேர்த்து அதையும் அரைத்து, இட்லி மாவு பக்குவத்தில் அரைந்ததும் பொடித்து வைத்த வெல்லம் மற்றும் துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கை அள்ளிப்போட்டு கெட்டியாக அரைத்து வைக்க வேண்டும். அரைக்கும்போதே மணம் நாவூறச்செய்யும். 

இரண்டு உள்ளங்கையளவு அகலமாக அரிந்து வைத்த வாழையிலைத்துண்டில், ஒரு பக்கமாக மாவைப்பரத்தி புத்தகத்தை மூடுவதுபோல் மீதமிருக்கும் இலைப்பகுதியால் மூடி, இலேசாக அழுத்தித் தடவினால் மாவு நன்கு படர்ந்து கொள்ளும். இதை இட்லித்தட்டில் அடுக்கி ஆவியில் வேக வைத்தால், பத்து நிமிடத்தில் சக்கையப்பம் சாப்பிட ரெடியாகி விடும். இது பாரம்பரிய முறை.

ஆனால், இப்போதிருக்கும் அவசர யுகத்தில், இப்படியெல்லாம் ரொம்பவும் மெனக்கெடத்தேவையில்லை. உங்கள் வீட்டில் சம்பா புட்டு மாவு இருந்தால், சட்டென்று செய்து பட்டென்று பரிமாறி விடலாம். நான் அப்படித்தான் பரிமாறினேன். வாங்கி வந்ததில் பதுக்கி வைத்த பத்து பலாச்சுளைகளை விதை நீக்கி வைக்கவும். மிக்ஸியின் சட்னி ஜாரில் மூன்று அச்சு வெல்லத்தை உடைத்துப்போட்டு, whip பட்டனை லேசாகத் திருகித்திருகி அரைக்கவும். நன்கு அரைபட்டவுடன் வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். பின், அதே ஜாரில் பலாச்சுளைகளைப்போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும். அதிகம் அரைந்தால் பரமாத்மாவுடன் ஒன்றிய ஜீவாத்மாபோல் மாவில் கரைந்து காணாமற்போய் விடும். சாப்பிடும்போது ஓரிரு இழைகள் பழமும் பல்லில் பட வேண்டும். அப்போதுதான் சக்கையப்பம் சாப்பிட்டதாக அர்த்தம். 

இப்படியாக அரைக்கப்பட்ட பழத்தை, வெல்லத்துடன் சேர்க்கவும். பின் ஒரு கப் சம்பா புட்டு மாவு, அல்லது சாதா புட்டு மாவு, அதுவுமில்லையெனில் இடியாப்ப மாவு என எது கைவசமிருக்கிறதோ அதைச் சேர்க்கவும். அரிசி சேர்க்க விருப்பப் படாதவர்கள் சோளமாவு, ராகி, கேழ்வரகு என சிறுதானிய மாவுகளையும் சேர்த்துக்கொள்ளலாம். நான் புட்டு மாவுடன் சோள மாவு சேர்த்தேன். இதோடு துருவிய தேங்காய்ப்பூவை ஒரு கையளவு சேர்க்கவும். நாஞ்சில் நாட்டில் வெல்லம் சேர்த்து செய்யப்படும் இனிப்புகளுக்கு சுக்கு பொடித்து சேர்ப்பது வழக்கம். அந்தப்படியே மிளகளவு சுக்குப்பொடியும் சேர்த்தாயிற்று. இத்தனையையும் சேர்த்து, தேவைப்பட்டதால் சிறிது தண்ணீரும் சேர்த்துப்பிசைந்து, வீட்டில் வளர்க்கும் வாழைமரத்திலிருந்து நறுக்கி வந்த இலையில் பரத்தி வேக வைத்து எடுத்தாயிற்று. அவித்த முதல் நாளே காலி செய்து விட வேண்டும். இல்லையெனில், ஊசிப்போய் நூல் கோர்த்துக்கொள்ளும். ஆனால், அப்படி ஆக விட மாட்டார்கள் நம் வீட்டுக் குழந்தைகளும், பெரிய குழந்தைகளும். தெவிட்டாமலிருக்க மாங்காய்ப்பச்சடி, ஊறுகாய் போன்றவற்றையும் துளி எடுத்து நாக்கில் தடவிக்கொள்வது சுவை கூட்டும். அதை விட, மொறுமொறுவென சுடப்பட்ட பருப்பு வடை உத்தமச்சுவை.

எப்போது பலாப்பழம் வாங்கி வந்தாலும், சக்கையப்பம் செய்யவென எடுத்து வைக்கப்படும் சுளைகள், "அப்புறம் செய்து கொள்ளலாம்" என திட்டம் தள்ளிப்போடப்பட்டு அப்படியே சாப்பிடப்பட்ட காலம் போய், சக்கையப்பம் செய்து பிள்ளைகளும் சாப்பிட்டது இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறை. இனி இது தொடரும்..

LinkWithin

Related Posts with Thumbnails