Thursday 20 September 2012

வெறுமை- செப்டம்பர் மாத 'பிட்' போட்டிக்கானவை

"வெற்றிடம்" அல்லது "வெறுமை".. இதுதான் இந்த மாச 'பிட்' போட்டிக்கான தலைப்பு. படத்தைப் பார்த்ததுமே வெற்றிடம் அல்லது வெறுமை தெரியணும். இதான் போட்டிக்கான விதி. சுருக்கமாச் சொன்னா ஆளேயில்லாத டீக்கடை :-)). அங்கே போயி கடமையை ஆத்தோ ஆத்துன்னு ஆத்திக் கொஞ்சூண்டு கொண்டாந்துருக்கேன்.

'அலிபாக்' போகும் பாதையிலிருக்கும் அணைக்கட்டு.
ரயிலுக்காகக் காத்திருக்கும் வரை கதை பேசும் தண்டவாளங்கள்..
காலியான இருக்கைகள்..
வசந்த மண்டபம்..
பொன்னூஞ்சல்..

வெறிச்சோடிய மைதானம்..
இதில் பொன்னூஞ்சல் போட்டிக்குப் போயிருக்கு.. இருந்தாலும் மத்த படங்களையும் இங்கே பகிர்ந்துருக்கேன். எஞ்சாய்....

Tuesday 4 September 2012

சாயம் வெளுத்த நீல நிலா.. (வல்லமையில் வெளியானது)

ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு பௌர்ணமி மட்டுமே வருவதுண்டு. அப்படியில்லாமல் இரண்டு பௌர்ணமி வந்தால் இரண்டாவதாக வரும் பௌர்ணமியை "ப்ளூ மூன்"என்று அழைக்கிறார்கள். சென்ற ஆகஸ்ட் மாதமும் இப்படித்தான் 2-ம் தேதி ஒரு பௌர்ணமியும், 31-ம் தேதி இன்னொரு பௌர்ணமியும் வந்தது. இதில் 31-ம் தேதி வந்த பௌர்ணமியே "ப்ளூ மூன்" என்று அழைக்கப்பட்டது. உலகெங்கும் இதைப் பார்க்கவும், படம் பிடிக்கவும் ஆர்வலர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். நானும் காமிரா, ட்ரைபாட் சகிதம் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், மும்பையில் அன்றைக்கென்று, அதுவும் பகல் முழுவதும் சுளீரென்று காய்ந்து கொண்டிருந்த சூரியனைக் குளிர்விக்கும் முகமாக சாயந்திரம் பெய்ய ஆரம்பித்த மழை வலுத்து விடவே, நீல நிலவுப்பெண் தான் நனைந்து விடக்கூடாதே என்றெண்ணி மேகத்துகில்களால் தன்னை மறைத்துக்கொண்டு விட்டாள். வெகு நேரம் விழித்திருந்து காத்திருந்து கண்கள் சிவந்ததுதான் மிச்சமானது எனக்கு :-)

மறு நாள் வந்த நிலாப்பெண், முந்தைய நாளின் பௌர்ணமியின் அழகை விட, தான் ஒன்றும் குறைந்து விடவில்லை என்பது போல் ஜொலித்துக் கொண்டிருந்தாள். என்ன.. முதல் நாள் பெய்த மழையில் நீலச்சாயம்தான் கொஞ்சம் வெளுத்துப்போய் விட்டது. வெள்ளியை உருக்கி ஊற்றினாற்போல் பால் வெள்ளையில் பளீரென்றிருந்தாள் :-))

நீல நிலா என்ற பெயருக்கேற்றார்போல் இது நீல நிறமாக இருப்பதில்லை. இது ஒரு குறியீட்டுச்சொல், அவ்வளவே. ஒவ்வொரு வருடமும் 12 பௌர்ணமிகள் வருகின்றன. சில வருடங்களில் மட்டும் 13 பௌர்ணமிகள் வருகின்றன. இந்த அதிகப்படியான பௌர்ணமியை அடையாளப்படுத்திச்சொல்லவே "ப்ளூ மூன்" என்ற பெயரிடப்பட்டுள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் மாதத்தின் ஒவ்வொரு பௌர்ணமிக்கென்றும் ஒரு பெயருண்டு. அமெரிக்கப் பழங்குடியினர் இப்பெயர்களை இட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வுகளைக்கொண்டு இப்பெயர்களை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெயரைக் கேட்டாலே பெயர்க்காரணமும் விளங்கி விடும்.

ஜனவரி-  Wolf Moon - ஓநாய் நிலவு- இந்த மாதத்தில் கடும் பனி மற்றும் குளிர் காரணமாக காட்டுக்குள் உணவு கிடைக்காமல் ஓநாய்கள் கிராமங்களில் புகுந்து கோழி ஆடு போன்றவற்றைத் தூக்கிச் சென்று விடுவது, மற்ற மாதங்களை விட அதிகமாக நடக்குமாம். ஆகவே இப்பெயரிடப்பட்டது.

பிப்ரவரி-  Snow Moon - பனி நிலவு - இம்மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருப்பதால் இப்பெயர். பனிப்பொழிவு காரணமாக வேட்டைக்குச் செல்வது கடினமாகி, உணவு கிடைக்காமல் பட்டினி கிடக்கவும் நேரிடுவதால் இதை "பசி நிலவு" என்றும் சில பழங்குடியினர் அழைக்கிறார்கள்.

மார்ச்-  Worm Moon - புழு நிலவு - பனிக்கால விடுமுறை முடிந்து சூரியன் எட்டிப்பார்க்கும் காலம். மிதமான சூடு காரணமாக பூமிக்குள்ளிருந்து புழுக்கள் வெளி வர ஆரம்பிக்கும். இவற்றைத் தின்னவென்றே ராபின் பறவைகளும் நிறைய கூட்டம் கூட்டமாக வந்திறங்கும்.

ஏப்ரல்-  Pink Moon -  பிங்க் நிலவு - மாஸ் பிங்க் என்றழைக்கப்படும் ஒரு வகை வசந்தகாலப்பூக்கள் அதிகம் பூக்கும் காலமாதலால் இப்பெயரிடப்பட்டது.

மே-  Flower Moon - பூ நிலவு - தாவரங்கள் அனைத்தும் பூத்துக்குலுங்கும் காலத்தில் வரும் பௌர்ணமி. ஆகவே இப்பெயரிடப்பட்டது.

ஜூன்- Strawberry Moon - ஸ்ட்ராபெர்ரி நிலவு - ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள் அதிகம் கிடக்கும் மாதத்தில் வரும் பௌர்ணமியாதலால் நிலாப்பெண்ணுக்கும் இப்பெயர்.

ஜூலை- Buck Moon -  மான் நிலவு - பொதுவாக இம்மாதத்தில்தான் இளம் மான் குட்டிகளுக்குக் கொம்பு முளைக்க ஆரம்பிப்பதாக அப்பழங்குடியினர் நம்புவதால் இப்படிப் பெயரிடப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட்- Sturgeon Moon - ஸ்டர்ஜன் நிலவு - ஸ்டர்ஜன் என்ற ஒரு வகை மீன்கள் அதிகம் கிடைக்கும் மாதத்தில் வருவதால் இப்பௌர்ணமிக்கு இப்பெயர்.

செப்டம்பர் - Harvest Moon - அறுவடை நிலவு - மக்காச்சோளம் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இம்மாதத்தில் வரும் பௌர்ணமியின் பிரகாசம் பகலைப்போல் ஒளிருமாம். அந்த வெளிச்சத்திலேயே கூட அறுவடை நடக்குமாம்.

அக்டோபர் - Hunter's Moon - வேடுவரின் நிலவு - இதற்கு ரத்த நிலவு என்றும் இன்னொரு பெயர் உண்டு. இம்மாதத்தில் கிட்டத்தட்ட அறுவடை முடிந்து வயல்களெல்லாம் கட்டாந்தரையாகக் கிடப்பதால் வயல்களில் நடமாடும் நரிகள், சிந்திய தானியங்களைத்தின்ன வரும் மான்கள் போன்றவை எளிதில் புலப்பட்டு விடும். அவற்றை வேட்டையாடி, அந்த மாமிசத்தை அடுத்து வரும் குளிர்காலத்துக்கென சேமித்து வைத்துக் கொள்வர். அதிகம் ரத்தம் சிந்தும் மாதமாதலால் இதற்கு ரத்த நிலவு என்று பெயரிடப்பட்டிருக்கிறதோ என்னவோ?

நவம்பர்-  Beaver Moon - நீர் நாய் நிலவு - இம்மாதத்தில் பீ(b)வர்ஸ் என்று அழைக்கப்படும் நீர் நாய்களை வேட்டையாடி அதன் உரோமங்களைக் குளிர்கால ஆடைகள் நெய்யப் பயன்படுத்திக் கொள்வர். ஆகவே இம்மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு இக்காரணப் பெயரிடப்பட்டது.

டிசம்பர்-  Cold Moon - குளிர் நிலவு - டிசம்பர் மாதக் குளிருக்குச் சொல்லவா வேண்டும். இம்மாதத்தில் சூரியனே தணிந்து இருக்கும்போது நிலவு மட்டும் சுடுமா என்ன?.. குளிர் நிலவு மேலும் குளிர்ந்து போய் இருக்கும்.

சில சமயம் ஒரே வருடத்தில் இரண்டு நீல நிலவுகள் கூட வருவதுண்டாம். கடைசியாக இந்நிகழ்வு 1999-ம் வருடம் நிகழ்ந்தது. ஜனவரியில் இரண்டு பௌர்ணமிகள் வந்த காரணத்தால் வருடத்தின் மிகக்குறைந்த நாட்கள் கொண்ட பிப்ரவரி மாதத்தில் பௌர்ணமியே இல்லாமல் போய் விட்டது. பதிலாக மார்ச் மாதத்தில் மீண்டும் இரண்டு பௌர்ணமிகள் வந்தன. இப்படிப்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகள் 19 வருடங்களுக்கு ஒரு முறையே நடக்குமென்று சொல்லப்படுகிறது. அடுத்த இரட்டை நீல நிலவுகளை இனிமேல் 2018-ல் காணலாம்.

சாதாரணமாக நிலவு ஒரு முறை பூமியைச் சுற்றி வர 29.53 நாட்கள் ஆகின்றன. அதாவது இக்காலம் இரண்டு பௌர்ணமிகளுக்கிடையேயான காலமாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் பார்த்தால் முப்பது நாட்கள் கொண்ட ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பௌர்ணமிகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. அப்படி வர வேண்டுமானால் முதல் பௌர்ணமியானது மாதத்தின் முதல் தேதியிலோ அல்லது ஆரம்ப ஒன்றிரண்டு நாட்களிலோ வர வேண்டும். அப்படியிருந்தால் நிலவின் சுழற்சி முறையில் அடுத்த பௌர்ணமி அந்த மாதமே வந்து விடும். இப்படி ஒரு மாதத்தில் இரண்டாவதாக வரும் பௌர்ணமியே நீல நிலவு என்றழைக்கப் படுகிறது. ஆனால் இது ஒவ்வொரு மாதமும் சாத்தியப்படுவதில்லை. நிலவின் சுழற்சிக்காலத்தின் அடிப்படையில் இந்நிகழ்வு இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறையே சாத்தியப்படுகிறது. அடுத்த நீல நிலவு 2015-ம் வருடம் ஜூலை மாதம் 31-ம் தேதி காட்சி தரவிருக்கிறது.

"உச்சியில் நிற்கும் நீல நிலா வெளுத்து விட்ட போதிலும், தவணை முறையில் மேகங்கள் வந்து சூழ்ந்து நின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை" என்று சூளுரைத்து விட்டு, கிடைத்ததைப் பிடிப்போமென்று காமிரா, ட்ரைபாட் எல்லாம் தயார் செய்து வைக்கவும் மேகங்கள் சூழ்ந்து கொண்டன. பொறுமை எருமையை விடப் பெரியது என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்!!.. அதன்படிக் கொஞ்ச நேரம் பொறுமையைச் சோதித்தபின் வெள்ளித்தட்டாய் தகதகவென ஆடினாள் நிலாப்பெண். காமிராவில் அளவுகளைச் சரி பார்த்தபின் சட்.. சட்டென்று ரெண்டே க்ளிக்கவும் அடுத்த தவணை மேகங்கள் வந்து குசலம் விசாரித்தன. ச்சரி.. அவர்கள் தனிமையைக் கெடுக்க வேண்டாமென்று கடையைக் கட்டி விட்டேன். பிடித்து வந்ததில் ஒண்ணே ஒண்ணு,.. கண்ணே கண்ணைப் பகிர்ந்திருக்கிறேன். தரிசித்துக் கொள்ளுங்கள்.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails