Sunday 25 March 2012

நித்திய கண்டம் பூரண ஆயுசாம் பூரண் போளிக்கு..

பூரண் போளி என்னும் இந்த அருமையான சுவையான வஸ்துவைச் சமைக்க ஆரம்பிக்குமுன், நாள் நட்சத்திரம் நன்றாக இருக்கிறதா என்பதைப் பஞ்சாங்கத்தில் பார்த்துக் கொள்வது முக்கியம். குறிப்பாகப் “போறாத” காலம் இல்லாத பொழுதில் சமைக்க ஆரம்பிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு போளியும் சமைக்கும் போது ஒவ்வொரு கண்டத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் அமைந்து விடும்.

இந்த பூமியும் அதில் உலவும் கட்டைகளாகிய நாமும் மட்டுமல்ல, போளியும் பஞ்சபூதங்களால் தயார் ஆனவையே என்று என்னப்பன் நெய்யப்பன் புளுகிய புராணத்தில் அருளிச்செய்திருக்கிறான். அதாவது, மாவு நிலமாகித் தாங்கி நிற்க, நெய்யானது நீராகப் பெய்யப்பட்டு, சமையல்வாயு பகவானின் அருளுடன், லைட்டாக எரியும் அக்னி பகவானின் கருணையால் சுடப்படும் போளியில் அண்டசராசரம் ஆகாயமெங்கும் பரவி நிற்கும் பரம்பொருளெனப் பூரணம் விரவி நிற்கும். மும்மூர்த்திகளை இணைத்துப் பரம்பொருளென்று அழைப்பது போலவே கடலைப்பருப்பு, வெல்லம், ஏலக்காய் இவற்றின் கூட்டணியும் பூரணமென்று பொதுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
நானும் என் காமிராவும் சுட்டவை..
விசேஷ தினமொன்றில் ஒரு வீட்டில் பூரண்போளி சமைக்கப்படும் வாசனை தேவலோகம் வரை எட்டிப்பார்க்கிறது. அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டவர்களுக்காக, அந்த வீட்டின் அடுக்களையிலிருந்து இதோ.. லைவ் டெலிகாஸ்டாக நிகழ்ச்சி தொடருகிறது.

“என்னாங்க.. ஒரு கப் கடலைப்பருப்பை குக்கரில் வேக வைக்கச் சொன்னேனே.. செஞ்சீங்களா?..”

“எப்பவோ ஆச்சும்மா.. பருப்பு வெந்து இறக்கவும் இறக்கியாச்சு. இனிமே என்ன செய்யணும்?”

“தண்ணீரை நல்லா வடிகட்டிட்டு, நல்லா மசிச்சு வையுங்க. பருப்பு நல்லா மசியணும். இல்லைன்னா போளியா இடறப்ப மாவுலேர்ந்து வெளிநடப்புச் செஞ்சுரும்”

“ஹூம்.. கொடுத்து வெச்சது அவ்ளோதான்”

“என்ன அங்கே முணுமுணுப்பு?.. எனக்குக் கையிலே சுளுக்குப் பிடிச்சுருக்கற நேரம் பார்த்து, பூரண்போளி வேணும்ன்னு கேட்டீங்கல்லே. கொஞ்சம் ஒத்தாசை செஞ்சாத்தான் என்னவாம்?..”

“ஒண்ணுமில்லே.. வெல்லம் எங்கே வெச்சிருக்கேன்னு கேட்டேன். எவ்வளவு வெல்லம் போடணும்?”

“இந்த அரைக்கிலோ வெல்லத்தைப் பொடிச்சுட்டு அதுலேர்ந்து ஒன்னரை கப் அளவுலே எடுத்துக்கோங்கோ..”

“அப்ப மிச்ச வெல்லத்தை என்ன செய்யறது?”

“அதைப் ஃப்ரிஜ்ஜுல வையுங்க. அடுத்த தடவைக்கு ஆகுமில்லே. இப்ப எடுத்துக்கிட்ட வெல்லத்தோட கால் கப் தண்ணி ஊத்தி அடுப்புல வெச்சுச் சூடாக்கிக்கோங்க. வெல்லம் கரைஞ்சதும் கல், மண் போக வடிகட்டிக்கோங்க. வடிகட்டினதுக்கப்புறம் அடுப்புல வெச்சு, பாகுபதம் வர்ற வரைக்கும் மறுபடியும் சூடாக்கணும்..”

“பாகுபதம் வந்ததும் மசிச்ச கடலைப்பருப்பை அதுல போட்டு, நல்லாச் சுருண்டு வர்ற வரைக்கும் கிண்டீட்டு, ரெண்டு ஏலக்காயைப் பொடிச்சுப்போட்டுரணும். நல்லாக் கெட்டியானதும் இறக்கி ஆற விடணும். ரைட்டுதானேம்மா?..”

“அட!.. எப்டீங்க?.. இவ்ளோ சீக்கிரம் கத்துக்கிட்டீங்க!!”

“ஆங்.. போன தீவாளிக்கு பூரணம் செய்ய, நாந்தானே எல்ப் செஞ்சேன். அப்பக் கத்துக்கிட்டேன்.”

“சமத்து.. பூரணம் ஆறட்டும். அதுக்குள்ள போளிக்கு மேல்மாவு தயார் செஞ்சுருவீங்களாம். சரியா?. இப்பல்லாம் மைதாவுக்கு மவுசு குறைஞ்சுட்டு வருது. அதுல சத்து இல்லேன்னு வேற சொல்றாங்க. அதுனால கோதுமை மாவுலயே மேல்மாவு தயார் செஞ்சுருங்க”

“எங்க ஆத்தா சாம்பார் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, ரசம் வைக்கச் சொல்லிக்கொடுத்தா, இவ்வளவு ஏன்? பாயசம் வைக்கக்கூட சொல்லிக்கொடுத்தா. ஆனா, போளிக்கு மாவு பிசையச் சொல்லிக் கொடுக்கலையே..”

“சப்பாத்திக்கு மாவு பிசையச்சொன்னா, தோசைக்கான பக்குவத்துல கரைச்சு வெச்ச ஆளாச்சே நீங்க.!! அதான் அவங்க சொல்லித்தரலை. அழுவாதீங்க, நான் சொல்லித்தரேன். ரெண்டு கப் கோதுமை மாவை எடுத்துக்கோங்க. நாலு பேர் இருக்கற நம்மூட்டுக்கு இதுவே போறும். இப்ப மூணு டேபிள் ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி மாவுல விட்டு, ஸ்பூனால நல்லா கலக்கி விடுங்க. நேரடியா கையை வெச்சு, விரலைச் சுட்டுக்காதீங்க. நெய் மாவுல கலந்ததும், சிட்டிகை உப்பும், மஞ்சப்பொடியும் போட்டுப் பிசிறி விடுங்க. நல்லாச் சேர்ந்ததும், கொஞ்சம் கொஞ்சமாத் தண்ணி தெளிச்சு, பொறுமையாப் பிசைஞ்சு வையுங்க. மாவு பிசையுறதுலதான் மென்மையான போளியோட சூட்சுமமே இருக்குது. பிசைஞ்ச மாவை சமமான உருண்டைகளாப் பிரிச்சு வையுங்க."

"ஆச்சா.. இப்ப ஒவ்வொரு உருண்டையையும் சொப்பு மாதிரி செஞ்சுக்கிட்டு, அதுல கொஞ்சம் பூரணத்தை வெச்சு, அழகா மூடிரணும். இப்ப அதை சப்பாத்தியாத் திரட்டணும். பொறுமையா திரட்டலைன்னா ஒவ்வொண்ணும் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஒவ்வொரு கண்டமாத்தான் இருக்கும். தோசைக்கல்லுல போட்டு ரெண்டு பக்கமும் நெய் தடவிச் சுட்டெடுக்க வேண்டியதுதான். பக்குவமாச் சுட்டெடுத்தா ரெண்டு நாள் வரைக்கும் கெட்டுப்போகாம மிருதுவா இருக்கும்”

“இனிப்புப் பத்தலை, மிருதுவா இல்லைன்னு ஈஸியா நொட்டை சொல்லிச் சாப்பிடற போளிக்குப் பின்னால இவ்ளோ உழைப்பு இருக்குதா!.. ஸாரிபா, இனிமே சமையல்ல குறை கண்டு பிடிக்கவே மாட்டேன்”

“அடடா.. பூரணம் வெளியே வராம அழகாத் திரட்டணும். இல்லைன்னா சப்பாத்திப் பலகையில மாவு ஒட்டிக்கிட்டு, பெரிய இம்சையாப்போயிரும். நகருங்க, நான் சுட்டெடுக்கறேன்”

“அப்ப, கையில் சுளுக்குப்பிடிச்சுருக்குன்னு சொன்னியே?”

“சமையக்கட்டுச் சிரமங்கள் உங்களுக்குத் தெரியணும்ன்னுதான் அப்படிப் புளுகினேன்.”

“அப்ப,.. நானும் ஒரு உண்மையைச் சொல்லவா?.. என்ன இருந்தாலும் உன் கையால் சமைச்சது போல் ஆகுமா?.. அதான் நானும் போளி திரட்டறப்ப வேணும்ன்னே சொதப்பி வெச்சேன்..”


Friday 23 March 2012

எங்க ஊர்ல விசேஷம்ங்க..

இன்னிக்கு எங்கூர்லயும் புது வருஷக் கொண்டாட்டம்தான். தமிழ்நாட்ல விஷூன்னும், ஆந்திராவில் யுகாதின்னும் கொண்டாடற மாதிரி மஹாராஷ்டிராவில் “குடி பாட்வா”ங்கற பேர்ல புது வருஷம் கொண்டாடப்படுது. இங்கே உள்ள மக்களுக்கு இன்னிக்குத்தான் சித்திரை முதல் தேதியாக்கும். சித்திரையை இங்கேயுள்ளவங்க “சைத்ர”ன்னு சொல்லுவாங்க.

எப்பவுமே பொறந்த ஊரைப்பத்தி மட்டுமே நெனைச்சிட்டிருக்காம, கொஞ்சம் புகுந்த ஊரையும் அப்பப்ப கண்டுக்கணும். என்ன இருந்தாலும் நமக்கு அன்னந்தண்ணி தர்ற இடம் இல்லையோ. அதனாலத்தான் இங்கே உள்ள பண்டிகைகளையும் கொஞ்சம் நாங்க கண்டுக்குவோம்.
சுட்ட படம்...
பண்டிகைக் கொண்டாட்டம்ன்னா என்ன?.. மனசும் வயிறும் குளிர்றதுதானே. அந்தக் கணக்குல நாங்களும் இங்கே உள்ள பண்டிகைகளை அடுக்களையளவில் கொண்டாடுவோம். விளக்கமாச் சொன்னா, அன்னிக்கு எங்கூட்லயும் விருந்து இருக்கும். பக்கத்து ஊட்டு அடுக்களை ஜன்னல்லேர்ந்து நெய்யும் வெல்லமுமா வாசனை மிதந்து வந்து நம்மூட்டுல மணக்கும்போது நம்மால சும்மா இருக்க முடியுதா சொல்லுங்க.

“Gudi Padva” இங்கே வசந்தத்தின் முதல் தினத்தைக் குறிக்குது. ராவணனை அழிச்சப்புறம் ராமன் அயோத்திக்கு வந்த நாள்தான் இதுன்னு சில பேர் சொல்றாங்க. இல்லேல்ல… இன்னிய தினம் ராமன் முடி சூட்டிய நாளாக்கும்ன்னு சில பேர் சொல்றாங்க. அதெல்லாம் இல்லை பிரம்மா இன்னிக்குத்தான் உலகத்தைப் படைக்க ஆரம்பிச்சார்ன்னு இங்கே உள்ளவங்க சொல்லிக்கிறாங்க. சிவாஜி மஹராஜ் சாலிவாகனர்களை வெற்றி கொண்ட தினம்தான் இன்னிய தினம் அப்டீன்னு மஹராஜை தெய்வமாக வணங்கி வழிபடற மராட்டிய மக்கள் விட்டுக் கொடுக்காம சொல்றாங்க. காரணம் எதுவாயிருந்தா என்ன?.. சந்தோஷமாக் கொண்டாடணும். அதானே முக்கியம்.

அமாவாசைக்கு அடுத்து வர்ற முதல் தினத்தை இங்கே பாட்வான்னு சொல்லுவாங்க. வடக்கே ரெண்டு பாட்வா தினங்கள் ரொம்பவும் முக்கியம் வாய்ஞ்சவை. தீபாவளிப் பண்டிகையின்போது கிருஷ்ண பட்சத்துல வர்ற பாட்வாவும், சைத்ர மாசம் சுக்ல பட்சத்துல வந்துருக்கும் இன்னிய பாட்வாவும் கொண்டாட்டத்துக்கான தினங்கள். பண்டிகைக்கு முன்னாடியே வீடு வாசல் எல்லாம் சுத்தம் செஞ்சுருவாங்க. கிராமங்களைப் பொறுத்தவரைக்கும் இன்னிக்கு வீட்டு முற்றத்துல சாணமிட்டு மொழுகி வெச்சிருப்பாங்க.

பாட்வா அன்னிக்கு காலைல தீபாவளியன்னிக்கு செஞ்சுக்கற மாதிரியே அப்யங்க ஸ்நானம் எல்லாம் செஞ்சு, புது ட்ரெஸ்ஸெல்லாம் போட்டுக்குவாங்க. வாசல்ல அலங்காரத்தோரணம், மாவிலைத்தோரணம், ரங்கோலின்னு பண்டிகை களை கட்டிரும்.

இப்ப Gudi-ஐ வீட்டுத்தலைவர் தயார் செய்வார். ஒரு நீளமான மூங்கில் கம்பையெடுத்துக்கிட்டு அதோட ஒரு நுனியில் அழகான ஜரிகை போட்ட புதுத்துணியைக் கட்டி வைப்பாங்க. சில வீடுகள்ல நல்ல அழகான துப்பட்டாவையோ அல்லது புதுப்புடவையையோ கட்டி விடறதும் உண்டு. சில புத்திசாலி தங்க்ஸுகள் இதுக்குன்னே வெலை கூடுன புடவையா எடுத்துக்கறது வழக்கம். எப்படியும் அது அவங்க கைக்குத்தானே போய்ச் சேரப்போவுது.

அப்றம் நல்லா பளபளன்னு பொன்னு போலத் துலக்கி வெச்சிருக்கும் தாமிரச்சொம்பை கம்பு நுனியில் கவிழ்த்து வைப்பாங்க. சில வீடுகள்ல வெள்ளிச்சொம்பையும் வைக்கிறதுண்டு. அப்றம் பூமாலை, சர்க்கரை மாலை, மாவிலைத்தோரணம் இல்லைன்ன ஒரு கொத்து வேப்பிலை எல்லாம் போட்டு அலங்கரிச்சு வெச்சதுமே பார்க்கறதுக்கு ஒரு அம்சமா ஆகிரும். இதை குடும்பத்தலைவர் வீட்டு வாசல்ல வலப்பக்கம் கொண்டாந்து வெச்சு, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமமிட்டு, அட்சதை போட்டு தூப தீபம் காட்டி ஆராதனை செய்வாங்க. பூஜை முடிஞ்சதும் யுகாதிக்கு நாம செய்யறது மாதிரியே இங்கியும் வேப்பங்கொழுந்து, ஓமம், வெல்லம் இத்யாதிகளை அரைச்சு உருண்டை பிடிச்சு பிரசாதமா முதல்ல சாப்பிடுவாங்க.


இந்த 'Gudi'க்கு பிரம்மாவின் கொடின்னும் இன்னொரு பெயர் உண்டாம். கொடிதான் மழுவி 'குடி'ன்னு ஆகிருச்சு போல இருக்கு. உசரமான வீடுகள்லயும் கட்டிடங்கள்லயும் மூங்கில் கம்பு நுனியில் பளபளன்னு காத்துல பறக்கற துணிகள் அசப்புல பார்க்கறதுக்கு கொடி மாதிரியேத்தான் தோணும். காலையில் ஏத்தப்படற இந்தக்கொடி சாயந்திரம் சூரிய அஸ்தமனம் சமயம் எடுக்கப்பட்டுரும்.

சாமி கும்பிட்டு, முடிஞ்சதும் வீட்ல செஞ்ச இனிப்பை நைவேத்தியமா படைக்கிறதுண்டு. இன்னிக்கு பூரி, ஸ்ரீகண்ட், பூரண்போளின்னு விருந்து அமர்க்களப்படும். சில வீடுகள்ல சேமியா கீர் செய்யறதும் உண்டு. எனவே ஊரோடு ஒத்து வாழும் முறைப்படி எங்கூட்லயும் இன்னிக்கு கீரும், பூரண்போளியும் செஞ்சாச்.
பூரண் போளி..
இந்த குடி பாட்வா அன்னிக்கு எந்த ஒரு சுபகாரியம் ஆரம்பிச்சாலும் அது பன்மடங்காப் பெருகும்ன்னு ஒரு நம்பிக்கை உண்டு. நம்மூர் அட்சய திருதியை மாதிரின்னு வெச்சுக்கோங்களேன். புது வீட்டுக்கான பத்திரப் பதிவுகள், அட்வான்ஸ் கொடுத்து புக்கிங் செஞ்சுக்கறதுன்னு இன்னிக்கு ரியல் எஸ்டேட் காரங்க காட்டுல ஒரே அடைமழைதான். நாலஞ்சு நாளாவே செய்தித்தாள்கள்ல தள்ளுபடிக்கான விளம்பரங்கள்தான் பக்கங்களை அடைச்சுக்கிட்டு இருக்குது.

வடக்கே அட்சய திருதியை, குடி பாட்வா, நவராத்திரி, அப்றம் தந்தேரஸ் இந்த நாலு தினங்களையும் “ஸாடே தீன் முஹுரத்”ன்னு ரொம்பவும் விசேஷமாச் சொல்லுவாங்க. இந்த தினங்கள் முழுக்க நல்ல நேரமாத்தான் இருக்குமாம். ராகு, எம, இத்யாதிகளையெல்லாம் கடவுள்கள் கெட்டவுட் சொல்லிருவாங்களாம். அதனால அன்னிக்கு முழுக்க கல்யாணம், கிரகப்பிரவேசம்ன்னு எந்தவொரு விசேஷமானாலும் எப்போ வேண்ணாலும் நடத்திக்கலாம்.” முஹூர்த்தம் முடியப்போறது, பொண்ணைக் கூப்பிடுங்கோ”ன்னு இன்னிக்கு பண்டிட்ஜீ சீன் போட முடியாது.

‘ஸாடே தீன்’ அப்டீன்னா மூணரைன்னு அர்த்தம். மொத்தம் நாலு தினங்கள் வருது. அப்றம் அதென்ன ஸாடே தீன் கணக்கு??. எங்கியோ இடிக்குதேன்னு என்னோட தோழியான மராட்டிய மைந்தி ஒருத்தங்க கிட்ட கேட்டேன். அவங்க சொன்ன விளக்கப்படி அட்சய திருதியையை முழுக் கணக்குல எடுத்துக்க மாட்டாங்களாம். அது அரை நாள் கணக்குலதான் வருமாம்.

இந்தியா ஒரு விவசாய நாடு. அதனால இங்கே எல்லாப் பண்டிகைகளுமே ஏதோ ஒரு விதத்துல விவசாயத்தோட பலனை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறதாவே அமைஞ்சுருது. இங்கேயும் கிராமப்புறங்கள்ல "Gudi Padva" அன்னிக்கு விவசாயிகள் பொன்னேர் பூட்டி உழவை ஆரம்பிக்கிறது வழக்கம். வெவ்வேறு பெயர்கள்ல கொண்டாடப்பட்டாலும் பண்டிகை ஒண்ணுதானே. வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்களல்லவா நாம். ஆகவே,

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..



Friday 16 March 2012

காது கொடுத்துக் கேளுங்க...

மனுஷங்களுக்கிடையேயான உறவு சீர் படுறதும், கெடுறதும் இந்த ஒரு செயல்லதான் அடங்கியிருக்குன்னே சொல்லலாம். “அப்பவே சொன்னேன்.. கேட்டாத்தானே”ன்னோ, “நான் சொல்றதை எப்பவுமே காதுல போட்டுக்கறதேயில்லை"ன்னோ,.. மத்தவங்க எப்பவுமே குறைபட்டுக்கற அளவுக்கு நடந்துக்கறது நிச்சயமா நம்மைப் பத்தின ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தாது. 

ஒரே ஒரு வாயை படைச்ச ஆண்டவன் ஏன் ரெண்டு காதுகளைப் படைச்சான் தெரியுமா?.. மத்தவங்களோட வார்த்தைகளைக் காது கொடுத்துக் கேக்கறதுக்காகத்தான். ஒருத்தர் வந்து நம்ம கிட்ட தன்னோட மனக் கஷ்டத்தைச் சொல்றாருன்னு வெச்சுப்போம். அதுக்கான தீர்வை நாம கொடுக்காட்டியும் கூட அதைக்கேக்கறதே அவருக்கு ரொம்ப ஆறுதலைக் கொடுக்கும். “இன்னொருத்தர் சொல்றதை முழுசும் காது கொடுத்துக் கேட்டாலே உலகத்துல பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துடும்”ன்னு மேனேஜ்மெண்டின் குருவான ‘பீட்டர் ட்ரக்கர்(Peter Drucker)’ என்பவர் சொல்லியிருக்கார். நிஜம்தானே.. 

கேக்கறதுங்கறது நிஜமாவே கேக்கறதா இருக்கணும். மத்தவங்க என்ன சொல்றாங்கங்கறதை உன்னிப்பா முழு கவனத்தோட கேக்கப் பழகணும். அப்பத்தான் மத்தவங்க சொல்ல வர்றதை முழுசாப் புரிஞ்சுக்க முடியும். நம்ம உடல்மொழியும் அதை உறுதிப் படுத்தறதா இருக்கணும். உம் கொட்டறது சின்னதா தலையாட்டிக் கேக்கறது, ‘அப்றம் என்னாச்சு’ன்னு அவங்களை மேலும் சொல்லத் தூண்டறதுன்னு நாம்தான் நம்பிக்கை கொடுக்கணும்.

அப்டியில்லாம அவங்க சொல்றப்ப இடையிடையே குறுக்குக் கேள்விகள் கேட்டு அவங்களைக் குழப்பி, அவங்க சொல்ல வந்த விஷயத்தையே திசை திருப்பி, “ஏந்தான் இவங்க கிட்ட சொல்ல வந்தோமோ”ன்னு எரிச்சல் பட வைக்கிற நல்ல ஆத்மாக்களும் நிறையவே இருக்காங்க. அப்படியில்லாம அவங்க சொல்லி முடிச்சப்புறம் கேள்வி கேட்டுத் தெளிவு படுத்திக்கறது நல்லது.

சில பேர் இருக்காங்க.. மத்தவங்க சொல்றதை முழுசும் காதுல வாங்கிக்காம அரைகுறையாக் கேட்டு, இவங்களா ஒரு முடிவு செஞ்சுக்கிட்டு அறிவுரை சொல்றேன் பேர்வழின்னு படுத்தியெடுப்பாங்க.  அவங்க சொல்றதை மத்தவங்க கேக்கணும், ஆனா மத்தவங்க இவங்க கிட்டே ஏதாவது சொல்ல வர்றப்ப நழுவிடுவாங்க. எதிராளிதான்.. பாவம். நொந்து நூடுல்ஸாகிடுவார்.

“ஏதோ அவங்க சொல்றாங்க.. நாம கேட்டு வைப்போமே”ன்னு கடமையேன்னு நின்னோம்னா அது சொல்ற விஷயத்தையும் சொல்ற நபரையும் அலட்சியப் படுத்தற மாதிரி ஆகிடும். இல்லையா?.. அது நிச்சயமா அவங்களுக்கிடையேயான உறவையும் பாழ்படுத்திடும். அது நண்பர்களாகவோ, உறவுகளாகவோ, பெற்றோர் மற்றும் குழந்தைகளாகவோ, இல்லைன்னா கணவன் மனைவியாகவோ யாரா வேண்ணாலும் இருக்கலாம்.

மத்தவங்களையாவது சமாளிச்சுடலாம். ஆனா, கணவன் மனைவிக்கிடையில இது பூதாகரமான பிரச்சினையை உண்டு செய்யும். அதுலயும் சில குடும்பங்கள்ல மத்தவங்க என்ன சொன்னாலும் காது கொடுத்துக் கேப்பாங்க.. ஆனா, தன்னோட துணை ஏதாவது சொல்ல வர்றப்ப மட்டும் ரொம்ப முக்கியமான வேலை இருக்கற மாதிரி அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவாங்க. இல்லைன்னா, கேக்கற மாதிரி பாவ்லா செஞ்சுக்கிட்டே டிவியிலயோ இல்லை செய்தித்தாளுலயோ மூழ்கிடுவாங்க. “நான் இப்ப என்ன சொன்னேன்”னு மட்டும் துணை இவங்களை க்ராஸ்செக் செஞ்சா அவ்ளோதான். “ஹி..ஹி.. நான் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன்”ன்னு ரொம்ப மரியாதையா திருதிருன்னு முழிச்சுட்டே வழிவாங்க. ஆரம்பத்துல பொறுத்துப் போற துணை கடைசியில என்னிக்காவது கோடையிடி மாதிரி குமுறித் தீர்த்துடுவாங்க. சாது மிரண்டா வீடும் கொள்ளாதுங்க..

சரி.. ஒருத்தர் உங்க கிட்ட தன்னோட மனசுல உள்ளதைச் சொல்ல வரார்ன்னு வெச்சுப்போம். அவரைப் பத்தி நாம ஏற்கனவே நம்ம மனசுல “இவங்க இப்டித்தான்”னு ஒரு பிம்பம் வரைஞ்சு வெச்சுருப்போமே.. அதைக் கொஞ்ச நேரம் ஒரு போர்வையைப் போட்டு மூடி வெச்சுடறது நல்லது. அவங்க கொட்டற சொற்களுக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருக்கற நிஜத்தையும், உண்மையான மன உணர்வுகளையும் கொஞ்சம் புரிஞ்சுக்கறது அவசியம். ஒரு வேளை அவங்களுக்குத் தன்னோட உணர்வுகளை சரியான வார்த்தைகள்ல விளக்கிச் சொல்லத் தெரியாம இருக்கலாம். அதுக்காக அதை அலட்சியப் படுத்திட முடியாதே. உதாரணமா மாமியார்ன்னா அவங்க மருமகளைக் கண்டிப்பாக் குத்தம் சொல்றவங்களாத்தான் இருப்பாங்கன்னு ஒரு பிம்பம் இருக்கு. அப்படியில்லாம மருமகளால கொடுமைப் படுத்தப்படற மாமியாராகவும் கூட இருக்க வாய்ப்பிருக்கே.

ரொம்ப நாளுக்கு முன்னாடி நடந்த நிஜக்கதை இது.. நிறையப்பேர் கேள்விப் பட்டிருப்பீங்க. பள்ளிக் கூடத்துக்குப் புறப்பட்டுக்கிட்டிருந்த பையனுக்கு சாக்ஸ் போடறப்ப பையன் கால் வலிக்குதுன்னு அழுதிருக்கான். குழந்தை ஸ்கூலுக்குப் போறதுக்கு அடம் பிடிச்சு அழறது சகஜம்தானேன்னு அதை அசட்டையா விட்டுட்டாங்க. வற்புறுத்தி ஸ்கூலுக்கும் அனுப்பி வெச்சுட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி ரொம்ப நேரத்துக்கப்புறம், பெத்தவங்களுக்கு சாக்ஸுல ஒளிஞ்சுருந்த தேள் ஒண்ணு பையனைக் கொட்டிடுச்சுன்னு ஸ்கூல்லேர்ந்து தகவல் வருது. அலறியடிச்சுட்டு ஓடினாங்க, “ஐயோ.. காலைல கால் வலிக்குதுன்னு குழந்தை சொல்லுச்சு.. நான் கேக்காம விட்டுட்டேனே”ன்னு அழுது தீர்த்துட்டாங்க. காலம் கடந்த ஞானம்!!

இதுல இன்னொண்ணையும் சொல்லணும்.. நம்ம குடும்பங்கள்ல ஒரு பொண்ணு புகுந்த வீட்டுல என்ன கஷ்டப்பட்டாலும் சரி.. எத்தனை கொடுமைகளை அனுபவிச்சாலும் சரி, ”மாமியார் மெச்சிய மருமகள் உண்டா?.. அதெல்லாம் அப்படித்தான் இருக்கும். நீதான் அனுசரிச்சுப் போகணும்”ன்னு அந்தப் பொண்ணு உண்மையிலேயே தான் படற கஷ்டத்தைச் சொல்லும் போதெல்லாம் பூசி மெழுகி அனுப்பிடுவாங்க. அதைக் காது கொடுத்துக் கேக்கறதோ, இல்லை பிரச்சினைக்கு தன்னோட அனுபவத்துலேர்ந்து ஒரு நல்ல முடிவு சொல்றதோ நிறையப் பேர் செய்யறதேயில்லை.

எனக்குத் தெரிஞ்சு இப்படியொரு பொண்ணு வாழ்க்கையில இப்டித்தான் நடந்தது. அந்தப் பொண்ணு அழும் போதெல்லாம் அதுக்கு புடவையோ இல்லை பணமோ கொடுத்து சமாதானப் படுத்தி புகுந்த வீட்டுக்கு அனுப்பிச்சுடுவாங்க. கடைசியில வெறுத்துப் போன அந்தப் பொண்ணு தன்னோட உயிரையே மாய்ச்சுக்கிச்சு. “எம் பொண்ணு அப்பவே சொன்னாளே.. கேக்காம போயிட்டேனே”ன்னு அந்த அப்பா அவ்ளோ கதறினார். என்ன பிரயோசனம்??.. இதை முன்னாடியே செஞ்சுருக்கலாம் இல்லியா?. தன்னோட மகள் வாழ்க்கையில் தான் தலையிட்டுக் கெடுத்துடக் கூடாதுன்னு நினைச்ச தகப்பன் தன்னோட பெண்ணின் வார்த்தைகள்ல எத்தனை உண்மையிருக்குன்னு கொஞ்சம் உணர முயற்சி செஞ்சுருந்திருந்தா இது தவிர்க்கப் பட்டிருக்குமே.

குழந்தைங்க சொல்ல வர்றதை,.. முக்கியமா டீனேஜ் குழந்தைங்க சொல்ல வர்றதை நிச்சயமா கேக்கணும். இது அவங்களுக்குள்ளயும் இந்த நல்ல பழக்கத்தை கண்டிப்பா வளர்க்கும். நல்ல பேச்சாளனா இருக்கறதைவிட நல்ல கேட்பவரா இருப்பதுங்கறது ஒரு கலை. தன்னோட மன உணர்வுகளை பகிர்ந்துக்க குடும்பத்துல உள்ளவங்க தயாரா இல்லாதப்ப, அந்தக் குழந்தை ரொம்பவே ஏங்கிப் போயிடுது. தன்னோட மனசை உண்மையாவே காது கொடுத்துக் கேக்கறவங்க, அல்லது அப்டி கேக்கற மாதிரி நடிக்கிறவங்க பக்கம் அது நிச்சயமா திரும்பிடுது. பெத்தவங்க மேல ஒரு வெறுப்பு உண்டாகவும் மத்தவங்களோட கைப்பொம்மையா அந்தக் குழந்தை திசை மாறித் தீய வழிகள்ல போறதுக்கும் இது ஒரு காரணமா அமைஞ்சுடுது. நம்ம வீட்டுல கொழுகொம்பை சரியாக் கட்டலைன்னா, நம்ம வீட்டுக்கொடி பக்கத்து வீட்ல படர்றது இயற்கைதானே..

சில வீடுகள்ல குழந்தைங்கதானேன்னு அவங்க பேச்சை சரியா கேக்கறதேயில்லை. பள்ளிக்கூடத்துல நடந்தது, ஸ்கூல் பஸ்ஸுல நடந்தது, ஃப்ரெண்டோட நடந்த சண்டைன்னு அது எதையாவது பேச வரும்போதெல்லாம் “டோண்ட் டிஸ்டர்ப் மீ.. போய் விளையாடு, இல்லைன்னா டிவி பாரு”ன்னு திருப்பி அனுப்பிட்டு, அதுங்க சொல்ல வர்றதைக் கேக்கறதேயில்லை. இந்த “டோண்ட் டிஸ்டர்ப் மீ”யையே கேட்டு வளர்ற குழந்தைங்க வளர்ந்து பெரிசானதும் அதையே பெத்தவங்களுக்கு திருப்பிச் சொல்லுவாங்க. வயசானப்புறம் “பிள்ளைங்க நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட பேச மாட்டேங்குது.. நேரமில்லைன்னுட்டு ஓடிடுது”ன்னு குறைபடற பெத்தவங்க அதிகம். ஆனா, இதுக்கு வித்திட்டதும் நாமதான்ங்கறதை ஏனோ மறந்துடறோம்.


Tuesday 13 March 2012

அறுவடை செஞ்ச அமோக பல்புகள்..


ஆனாலும் இது கொஞ்சம் பேராசைதான். இந்த ஊருக்கு வந்தப்புறம், தமிழ் நாட்டுல கிடைக்கறதெல்லாம் இங்கே கிடைக்கலியே.. முக்கியமா நமக்குத் தேவையான இந்தப் பொருளெல்லாம் கிடைக்கலையேன்னு அங்கலாய்க்கறதுல அர்த்தமே இல்லை. (மும்பையே என்றாலும் அது தமிழ் நாட்டைப் போலாகுமா!!.ன்னுதான் இப்பவும் பாடிக்கிட்டுத் திரியறது தனிக்கதை) அதுவும் சுமார் இருபது வருஷத்துக்கு முந்தைய நிலைமை. இப்போ மாதிரியா?.. இப்பல்லாம் வேணுங்கறதை நம்மாட்கள் கடையில் போயி சட்ன்னு வாங்கியாறலாம். அத்தியாவசப் பொருட்கள் தவிர தேவைப்படும் விசேஷப் பொருட்களும் சட்ன்னு கிடைச்சிருது.

புது ஊருக்கு ஏத்தமாதிரி வாழ்க்கையை நகர்த்தப் பழகிட்டாலும் இந்த ஊருக்கு வந்தப்புறம் முதல் பொங்கல் பண்டிகை வந்தப்ப மனசுக்கு ஏக்கமா இருந்தது. வீடு கழுவல், சுத்தப் படுத்தல்ன்னு அவலை நினைச்சு உரலை இடிச்சு பண்டிகையை வரவேற்க ஆயத்தமானாலும், கரும்பும் மஞ்சக்குலையும் வாழைப்பழமும், பனங்கிழங்குமா மணக்கும் நம்மூர்ப் பொங்கல் பண்டிகைக்கு ஈடாகலை!! அது செம்பூர், மாட்டுங்கா பகுதிகளைத் தவிர புற நகர்ப் பகுதிகளுக்கு தமிழகப் பொருட்கள் விற்பனைக்கு வராத போறாதகாலம் என்பதை நினைவில் கொள்க. ஜூஸ் கடையிலிருந்து ஒரு அடி நீளத்துல ரெண்டு வெள்ளைக் கரும்புத் துண்டுகளை வாங்கி வந்து சாஸ்திரத்துக்கு வெச்சாலும் பொங்கப் பானையைச் சுத்திக் கட்டுறதுக்கு மஞ்சள் குலைக்கு எங்கே போறது?ன்னு உக்காந்து அரிசியில் கல் பொறுக்கிக்கிட்டே யோசிச்சேன்.

ஊர்லேர்ந்து வரச்சே மங்களகரமா பேக்கிங்கை ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி, அரிசிப்பானைக்குள் அரிசியுடன் ஏழெட்டு குண்டு மஞ்சள்களையும் சேர்த்து வெச்சுருந்தாங்க. ஆஹா!!.. ஆப்டுச்சு ஐடியா. இங்கேயெல்லாம் பூக்கடைகளில் பூச்சரத்தை தேக்கிலையில் பொதிஞ்சு நல்ல ஏழெட்டு இழைகளாலான நூல்கயித்தால கடையில் கட்டிக் கொடுப்பாங்க. எதுக்காச்சும் உபயோகப்படுமேன்னு அந்த நூல்கயித்தைச் சேகரிச்சு வீட்ல எப்பவும் வெச்சிருப்பேன். அதுல கொஞ்சத்தை எடுத்தேன். மஞ்சப்பொடியை நல்லா தண்ணீர்ல குழைச்சு கயித்துல தடவிக் காய விட்டேன். காய்ஞ்சதும், அஞ்சாறு குண்டு மஞ்சள்களை அதுல கட்டி விட்டேன். நம்ம மஞ்சக்குலை ரெடி. அதை பானையின் கழுத்துல சுத்திக்கட்டி தலைப்பொங்கலை அமரிக்கையாக் கொண்டாடியாச்சு.

அங்கிருந்து நவி மும்பைப் பகுதிக்கு வீடு மாத்திக்கிட்டு போனப்ப ஆஹா!!.. ஒரு மினியிலும் மினி தமிழ் நாடே இங்க இருக்குதேன்னு கண்டுக்கிட்டேன். மஞ்சக்குலையும் கரும்புமா அங்கயிருந்தவரைக்கும் வாசனையோட பொங்கல் அமர்க்களப்பட்டது. நமக்கோ அடிக்கடி மாத்தலாகும் வேலைச்சூழ்நிலை. எல்லா இடத்துலயும் மஞ்சக்குலை கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவும் முடியாது. அதனால விவசாயி ஆகறதுன்னு முடிவு செஞ்சு ஒரு துண்டு மஞ்சளைத் தொட்டியில் நட்டு வெச்சேன்.

வந்தா சாமிக்கு,.. வரலைன்னாலும் சாமிக்குன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டாலும் தண்ணீர் ஊத்திக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டதுக்கு நல்லாவே விளைச்சல் கொடுத்துச்சு. அப்புறமென்ன?.. வருஷா வருஷம் பொங்கலுக்கு மஞ்சக்குலை நம்ம தோட்டத்தோட உபயத்துல தங்கு தடையில்லாமக் கிடைச்சிட்டிருந்தது. எப்பவுமே பொங்கல் முடிஞ்சதும் அறுவடை செஞ்ச கிழங்குகள்ல ஒரு துண்டை மறுபடி நட்டு வைக்கிறதுக்குன்னு எடுத்து வெச்சிட்டு, மிச்சத்தை சமையலுக்கும், காஸ்மெடிக் உபயோகத்துக்கும்ன்னு உபயோகப் படுத்துவேன்.

பசுமை மாறாம இருக்கற மஞ்சக்கிழங்கைத் தோல் சீவிட்டுச் சின்னச்சின்னத் துணுக்குகளா நறுக்கி நிழலில் நல்லாக் காயவெச்சு எடுத்துக்கிட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கலாம். கெமிக்கல் நிறமிகள் எதுவும் சேர்க்காத சுத்தமான மஞ்சப்பொடி சமையலுக்குத் தயார். இதே மாதிரி கடைகளில் கிடைக்கும் காய்ஞ்ச விரலி மஞ்சளை வாங்கிட்டு வந்து நல்லாக் கழுவி ஒரு இரவு முழுக்க தண்ணீரில் ஊற விட்டுட்டு, அப்புறம் இன்னொருக்கா ரெண்டு மூணு முறை தண்ணீரில் அலசிட்டு துணுக்குகளா நறுக்கிக் காயவெச்சும் வீட்லயே மஞ்சப்பொடி தயாரிச்சுக்கலாம்.

இது ஒரு சிறந்த கிருமி நாசினியா இருக்கறதுனால மருந்துகள்லயும் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள்லயும் அதிகமா உபயோகப்படுத்தப் படுது. நம்மூரைப் பொறுத்தமட்டில் உணவே மருந்து. மருந்தே உணவுன்னு நோய்களை சாப்பாட்டாலயே விரட்டியடிச்சு ஆரோக்கியமா வாழறோம். அதனால சமையல்லயும் இது அதிக அளவுல சேர்க்கப்படுது. மஹாராஷ்ட்ரா,கோவா, கொங்கண், இந்தோனேஷியா போன்ற பகுதிகள்ல மஞ்சள் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்தறாங்க.

கடலைமாவுடன், வெங்காயம், இஞ்சி, உப்பு, எண்ணெய், ரெட் சில்லி பவுடர், காயப்பொடி, மற்றும் எக்கச்சக்கமான கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பிசைஞ்சு, சேப்பங்கிழங்கு இலைகளில் தடவிச்சுருட்டி, ஆவியில் வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஸ்லைஸ் செஞ்சு அப்படியேவோ இல்லைன்னா தவாவில் ரெண்டு சொட்டு எண்ணெய்யில் வாட்டியோ சாப்பிடப்படும் ‘ஆலு வடி’ என்ற வஸ்து இங்கே ரொம்பவும் பிரசித்தம். இதில் சே.இலைகளுக்குப் பதிலா ம.இலைகளையும் பயன்படுத்திச் செய்வாங்க. மஞ்சள் வாசனையோட ரொம்பவே அருமையா, டேஸ்டியா, சத்தா இருக்கும். முக்கியமா மஹாராஷ்ட்ராவில் மஞ்சள் அதிகம் விளையும் சாங்க்லி பகுதியில் இது ரொம்பவே பிரபலமான உணவு.
சேப்பங்கிழங்கின் இலையில் செஞ்ச ஆலுவடி..
தாய்லாந்து, பெர்ஷியன் நாட்டுச் சமையல்ல இதுக்கு முக்கிய இடம் உண்டாம். மஞ்சப்பொடி சேர்க்காத இந்தியச் சமையல் உண்டோ!!.. அதுவும் அசைவம்ன்னா அதோட உடம்பு முழுக்க மஞ்சப்பொடி தடவி மஸாஜ் செஞ்சுட்டு அப்றம் சமைச்சு எடுக்கறதுதானே வழக்கம். இப்படிச் செய்யறதால அசைவத்துல இருக்கற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுது. உலகத்துல பெருகி வரும் சுற்றுப்புற மாசு காரணமா நம்ம உடம்புக்குள்ள எவ்வளவு அசுத்தக் காத்து, வாகனங்கள் வெளியேத்தும் விஷ வாயுக்கள், நடமாடும் புகைபோக்கி எந்திரங்கள் வெளியேத்தும் சிகரெட் புகை எல்லாம் சேருது, அதனால நம்ம உடம்பு எவ்வளவு பாதிக்கப்படுதுன்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, நம்ம உணவில் தினசரி மஞ்சளைச் சேர்த்துக்கிட்டோம்ன்னா நம்ம ரத்தத்தைச் சுத்திகரிச்சு, அசுத்த வாயுக்கள் ஏற்படுத்தற பாதிப்புகள்லேருந்து நம்மைக் காப்பாத்துது.

வெளித்தாக்குதல்லேர்ந்து மட்டுமல்ல, உடம்புக்குள்ளே நடக்கும் அல்ஸீமர்ஸ், ஆர்த்ரைடிஸ் மாதிரியான தாக்குதல்கள்லேர்ந்தும் இது நம்மை பாதுகாக்குதான்னு கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்துட்டிருக்குது. கான்சர் செல்களை இது அழிக்குதுன்னும் இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு, அதை நிரூபிக்க மேற்கொண்டு ஆராய்ச்சிகளும் நடந்துட்டு வருது. மஞ்சளிலிருக்கும் Tetrahydrocurcuminoids(THC)-ஐ பிரிச்செடுக்க தாய்லாந்து அரசு அந்தூரு ஆராய்ச்சியாளர்களுக்குப் பொருளுதவி செய்யுது. இந்த THC தோலின் நிறத்தைக் கூட்டுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள், காஸ்மெடிக்குகளில் இதை உபயோகப்படுத்தப் போறாங்களாம். வெள்ளைத்தோல் மோகம் யாரைத்தான் விட்டு வெச்சிருக்குது.

மங்களகரம்ன்னதும் நம்ம மனக்கண்ணுல மொதல்ல மஞ்சள்தான் வந்து நிக்குது. அதனாலத்தான் மாதாந்திர மளிகை லிஸ்ட்டாகட்டும், சுப நிகழ்ச்சிகளுக்காக தயாரிக்கிற பலசரக்கு லிஸ்ட்டாகட்டும், மஞ்சளைத்தான் லிஸ்டுல மொதல்ல எழுதுவாங்க. சுபச்செலவோட ஆரம்பிக்கணுமாம்.. அதேமாதிரி நாலு மூலைகளிலும் மஞ்சள் தடவி வர்ற அழைப்பிதழைப் பார்த்ததுமே, இது சுப நிகழ்ச்சிக்கானதுன்னும் நமக்குப் புரிஞ்சிருது இல்லையா..

நம்ம முன்னோர்கள் ரொம்பவே கில்லாடிகள்தான். இல்லைன்னா வெளி நாட்டுக்காரங்க ஆராய்ச்சி செஞ்சு இப்போ கண்டு பிடிச்சதையெல்லாம்,  எப்பவோ அந்தக் காலத்துலயே கண்டுபிடிச்சுச் சுவடிகள்ல எழுதி வெச்சுருக்க முடியுமா?. ஆயுர்வேதத்துலயும், நம்ம பாட்டிகளின் கைவைத்தியத்துலயும் இதுக்குத் தனியிடம் இருக்குதே. சளி, காய்ச்சல், இருமல், தீப்புண்,சரும வியாதிகள்ன்னு எந்த வியாதிக்கும் கஷாயத்தோட சேர்த்து உள்ளுக்குக் கொடுத்தும், வெளிப்பூச்சாகத் தடவியுமே குணப்படுத்திடுவாங்க. இருமல் வந்தாத்தான்னு இல்லை, பொதுவாகவே ராத்திரியில் ஒரு சிட்டிகை மஞ்சப்பொடி சேர்த்த பாலைக் குடிக்கிறதை வழக்கமா வெச்சுக்கிறது ரொம்பவே நல்லது.

வியாதிகளுக்கு மட்டுமல்ல பாம்பு, முதலை மாதிரியான விலங்குகளுக்கும் கூட மஞ்சள்ன்னா அலர்ஜி. வீட்ல மஞ்சள்செடி இருந்துச்சுன்னா அந்தப் பக்கமே பாம்பு எட்டிப் பார்க்காதுன்னு சொல்லிக்கிறாங்க. அதேமாதிரி உடம்பு முழுக்க மஞ்சளை அரைச்சுத் தடவிக்கிட்டு முதலைகள் இருக்கற குளத்துல இறங்கினா முதலைகள் நம்மை விட்டு ஓடிருமாம். ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்லே.. விஷப்பரீட்சைக்குத் துணிஞ்சு யாரும் குளத்தில் ஐமீன் களத்துல இறங்கிடாதீங்க. அப்றம் மஞ்சள் தடவின கோழி நமக்கு விருந்தாகற மாதிரி, (மஞ்சள் தடவிக்கிட்ட) நாம முதலைக்கு விருந்தாகிருவோம். சாப்பிடறதுக்குத் தயாராத்தான் நம்மை அனுப்பியிருக்காங்கன்னு முதலை தப்புக் கணக்குப் போட்டுச் சாப்பிட்டுட்டு, “நல்லாத்தான் இருக்கு. காரம்தான் கொஞ்சம் கம்மி”ன்னு நொட்டை சொல்லிட்டுப் போயிரும் :-))

வருஷா வருஷம் செய்யும் வழக்கப்படி புதுத்தொட்டியில் மஞ்சக்கிழங்கை நட்டு வெச்ச கொஞ்ச நாளுக்கப்புறம் பார்த்தா பழைய தொட்டியிலும் கன்னுகள் முளைச்சு வந்துக்கிட்டிருந்தது. கொஞ்சமா வேர் மிச்சமிருந்தாக்கூடப்போதும். அதுலேர்ந்தும் புதுச்செடிகள் முளைச்சு வந்துருது போலன்னு நினைச்சுட்டு, அந்த கன்னுகளை வீணாக்க வேணாமேன்னு பிடுங்கி, புதுச்செடியோடவே நட்டு வெச்சு வளர்த்தேன். நல்லா தளதளன்னு தொட்டி நிறைய வளர்நது நின்னதுகளை சமீபத்திய பொங்கலுக்காக அறுவடை செஞ்சாச்சு. கொஞ்சம் அவசரப்பட்டதில் ஓரளவு பெரிய இலைகளோட இருந்த ஒரு செடி கிழங்கை தொட்டியிலேயே விட்டுட்டு, இலைப்பகுதி மட்டும் கையோட வந்துருச்சு. அப்றம் நிதானமா இன்னொரு செடியை எடுத்து பொங்கப்பானையில் கட்டி பண்டிகை கொண்டாடி முடிச்சது தனிக்கதை.

நல்ல மகசூல் இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு அகழ்வாராய்ச்சி செஞ்சதில் சுமார் ஐம்பது கிராம் அளவுக்கு மஞ்சள் தேறிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஏனோதானோன்னு கவனிக்கிறப்பல்லாம் நல்ல மகசூல் கொடுத்துட்டு, இப்ப பார்த்துப் பார்த்து கவனிக்கிறப்ப பல்பு கொடுத்துருச்சு.. சின்னச்சின்னதா சுமார் ஐம்பது கிராம் அளவுலான குண்டு பல்புகள். பல்புகளை உபயோகிக்கிறதைத் தவிர்க்கணும்ன்னு நடக்கற பிரச்சாரத்தை இது இப்படி தப்பாப் புரிஞ்சுக்கிச்சோ என்னவோ :-) சரி,.. உலகத்துல இருக்கற அத்தனை ஜீவன்கள் கிட்டயும் பாரபட்சமில்லாம பல்பு வாங்கியே தீரணும்ன்னு நாம கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருக்கறப்ப இது மட்டும் ஏமாத்திருமா என்ன?? :-)) 

ஊசிக்குறிப்பு: படங்கள்ல இருக்கறது எங்கூட்டுச் செடிகள்ன்னு சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டிருப்பீங்களே :-))


Thursday 8 March 2012

குடத்திலிட்ட தீபம் - சாவித்திரிபாய் ஃபுலே


                                                            
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் வரை நம் கண்முன் எத்தனையோ சாதனைப்பெண்கள் உலா வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்பதே பாவம் என்று கற்பிக்கப் பட்டிருந்த நம் நாட்டில் அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு இன்று கல்வியில் ஆண்களைவிட அதிகத் தேர்ச்சி விகிதமும் காட்டுகின்றனர். இந்த முன்னேற்றங்களெல்லாம் ஓரிரவில் நடந்து விடவில்லை. பெண்களுக்காக எத்தனையோ தியாக உள்ளங்கள் மெழுகுவர்த்தியாகத் தன்னையே உருக்கிக்கொண்டு நமக்காகப் பாடுபட்டதால்தான் நாம் இன்று இணையம் வரை கோலோச்ச முடிகிறது. இப்படிப்பட்ட தியாக விளக்குகளில் எத்தனையோ பேர் வெளியுலகத்திற்கு அதிகம் அறியப்படாமலேயே குடத்திலிட்ட தீபங்களாய் இருந்து மறைந்தும் போயினர். அத்தகையவரில் மராட்டிய மண்ணில் பிறந்த சாவித்திரிபாய் ஃபுலேயும் ஒருவர்.

இவர் மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தின் நைகாய் கிராமத்தில் லக்ஷ்மி பாய்க்கும், கண்டோஜி நாவ்ஸே பாட்டிலுக்கும் மகளாக 1831-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் மூன்றாம் தேதியன்று பிறந்தார். கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனக்குச் சிறுவயதில் கிறிஸ்தவ அமைப்பொன்று கொடுத்த புத்தகத்தை அவர் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதும் உடன் எடுத்துச் சென்றதே புத்தகங்களின் மேலும், கல்வியின் மேலும் கொண்டிருந்த அவரது தணியாத ஆர்வத்தைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறைப்படி ஒன்பது வயதுச் சிறுமியான அவர், பதின்மூன்று வயது ஜோதிராவ் ஃபுலேயைக் கைப்பிடித்து பூனா வந்த போது இந்தத் திருமணம் தன்னுடைய வாழ்வையே மாற்றிவிடப்போகிறது என்று அறிந்திருக்கவில்லை.

தாயை இழந்திருந்த ஜோதிராவ் அச்சமயம் தன்னுடைய உறவினரான சகுணா பாயால் வளர்க்கப்பட்டு வந்தார். ஆங்கிலேயர் ஒருவரின் மகனைப் பார்த்துக்கொள்ளும் தாதிப் பொறுப்பில் அச்சமயம் இருந்த சகுணா பாய் நன்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் ஈர்க்கப்பட்ட ஜோதிராவுக்கும் கல்வியில் இயற்கையாகவே ஆர்வம் ஏற்பட்டது. பூவோடு சேர்ந்த நார் மணப்பது இயல்பு. ஆனால் இயற்கையாகவே மணமிக்க பூக்கள் ஒன்று சேர்ந்தால் அது கதம்பமாகி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது. அவ்வாறே இக்குடும்பத்தில் வந்து இணைந்த சாவித்திரி பாயும் தன் பங்குக்குக் கல்வி மணம் பரப்பியதில் ஆச்சரியமில்லை.

தான் கற்ற கல்வியைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணி பூனாவின் நாராயண் பேட் என்ற பகுதியில் 1847-ல் மே ஒன்றாம் தேதியன்று ஜோதி ராவ் ஃபுலே ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஒரு சில காரணங்களால் இப்பள்ளியை மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவே கல்விப்பணி தற்காலிகமாகத் தடைபட்டது. அச்சமயம் பூனாவில் பெண் குழந்தைகளுக்கெனத் தனிப்பள்ளி அமைக்கவேண்டுமென்று விரும்பிய ஜோதிராவ் அதன் முதற்கட்டமாகத் தன்னுடைய மனைவிக்குக் கல்விப்பயிற்சியளித்தார். கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த சாவித்திரிபாயும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

பெண்கள் தாம் வேறு பிற வழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெற முடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன,
முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி;
மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர
வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது
என்பது கருத்து”

என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிப்பது போல், அடிமைப் பட்டுக்கிடந்த பெண் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதே ஒரே வழி என்று எண்ணி 1848-ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி பெண்குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்துத் தங்களுடைய கல்விப்பணியைத் தொடர்ந்தனர். ஒன்பது மாணவிகளைக்கொண்ட இப்பள்ளியில் அனைத்து மாணவியரும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்பட்டிருந்தனர். பூனாவில் அச்சமயம் நிலவிய சாதித்துவேஷச் சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இவர் மிகுந்த எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரு தாழ்த்தப்பட்ட பெண் தங்களுக்கு நிகராகக் கல்வி கற்றதுமல்லாமல் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தினமும் பாடசாலைக்கு சாவித்திரி பாய் நடந்து போகும்போது அவரைச் சொல்லாலும் செயலாலும் அவமானப்படுத்தினர். அவர் மீது கற்கள், சாணம், குப்பைகள் போன்றவையும் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்த சாவித்திரிபாய் தான் இனிமேல் கல்விச்சாலைக்கு செல்லப் போவதில்லை என்று கூறி விட்டார். மனைவியைத் தேற்றிய ஜோதி ராவ் அவரிடம் இரண்டு புடவைகளைக் கொடுத்து, “இதில், சுமாரான புடவையைக் கட்டிக்கொண்டு பாடசாலைக்குப் போ. எதிர்ப்பாளர்கள் வீசும் அக அழுக்கையும் புற அழுக்கையும் அது சந்திக்கட்டும். பள்ளிக்குப் போனபின் நல்ல புடவையைக் கட்டிக்கொள்” என்று கூறினார்.

அதன் படியே நடந்த சாவித்திரி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த எதிர்ப்பாளர்களில் ஒருவனைக் கன்னத்தில் அறைந்தார். புழுவேயானாலும் ஒரு கட்டத்தில் பாம்பாய்ச் சீறி தன்னெதிர்ப்பைக் காட்டத்தானே செய்கிறது. அதன் பின் அவரைத் தொந்தரவு செய்தவர்கள் அவரது வழிக்கே வருவதில்லை. சாதிக்க வேண்டுமென்று உழைப்பவர்களின் பாதையில் மலர்கள் மட்டுமல்ல முட்களும் நிறைந்திருக்கும். சாவித்திரி பாயைப் போல் ஒரு சிலர் மட்டுமே அந்த முட்களையும் மலரச்செய்து தன்னுடைய பாதையில் மணம் வீசச் செய்கின்றனர். அவ்வருடமே பூனாவில் ஐந்து மகளிர் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதுவே இவர்களது இடைவிடாத உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமும் பலனுமாகும். இவர்களது கல்விப்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு இவர்களைக் கௌரவித்து சாவித்திரி பாயைச் சிறந்த ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தனர்.

இதை மட்டும் கண்ணுற நேர்ந்திருந்தால்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

என்று பாரதி அப்போதே ஆனந்தக் கூத்தாடியிருப்பார்.

அந்தக் காலத்தில் பத்துப்பன்னிரண்டு வயது நிரம்பியதுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வித்து விடுவார்கள். பூனாவிலும் குழந்தைத்திருமணம் எனும் இக்கொடுமை நடந்து வந்தது. பால்ய விவாகத்தின் பலனாகப் பால்ய விதவைகளின் எண்ணிக்கையும் பெருமளவில் இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாத சிறுமிகளான அவர்களின் நிலை மிகக்கொடியதாக இருந்தது. சதி என்றழைக்கப்பட்ட உடன் கட்டை ஏறுவதும், இல்லையெனில் தலை மழிக்கப்பட்டு வெள்ளையுடுத்தி மூலையில் முடங்குவதுமே அவர்களது தலையெழுத்தாக இருந்து வந்தது. பால்ய விதவைகள் குடும்பத்திலுள்ள சில ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக் கர்ப்பமுறும் கொடுமையும் நடந்து வந்தது. அப்படிக் கர்ப்பமுறும் பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது செய்து கொள்ளத் தூண்டப்படுவார்கள், இல்லையெனில் பிறக்கும் குழந்தையைக் கொன்று விடுவார்கள்.

ஒரு சமயம் இப்படித் தற்கொலை முயற்சியில் இறங்கிய காசிபாய் என்னும் பால்யவிதவையைக் காப்பாற்றிய இத்தம்பதி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைச் சமூகத்தில் மற்றவர்களைப்போல் தலை நிமிர்ந்து வாழச்செய்வதாக உறுதியளித்தனர். அவருக்குக் குழந்தை பிறக்கும் வரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டனர். குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தையாகவே வளர்த்தனர். யஷ்வந்த ராவ் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற டாக்டரானது. இப்படி ஒவ்வொருவராகத் தம்மால் கண்டுபிடித்துக் காப்பாற்ற இயலாதே என்று எண்ணிய தம்பதியினர் ஆங்காங்கே இதற்கெனப் பிரசவ விடுதிகளை அமைத்தனர். “சிசுக்கொலைத் தடுப்பு மையங்கள்” (பால்ஹத்யா ப்ரதிபந்தக் க்ருஹ) என்று பெயரிடப்பட்ட இந்த விடுதிகளில் ஆதரவற்ற பால்ய விதவைகள் தஞ்சமடைந்தனர்.

இனிமேல் பால்யவிதவைகளுக்கு தலை மழிக்க மாட்டோம் என்று அத்தொழிலைச் செய்து வந்தவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தார் சாவித்திரி. விதவை மறுமணத்தையும் ஆதரித்து அவ்வாறு செய்து கொள்ள விருப்பப் பட்டவர்களுக்கு மறுமணமும் செய்வித்தார். இவையெல்லாம் அவர் மீது உயர்சாதியினர் கொண்டிருந்த வன்மத்தை இன்னும் தூண்டியது. அடித்தட்டு மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கூட கல்வி புகட்டினாலொழிய ஒரு சமுதாயத்தை முழுவதுமாக முன்னேற்றி விட முடியாது என்பதை உணர்ந்திருந்த தம்பதியினர், அவர்களுக்கென 1855-ல் இரவுப்பள்ளியையும் தொடங்கினர்.
படங்கள் கொடுத்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி
பெண்கல்வி மற்றும் விதவைகளுக்காக மட்டுமல்லாது, ‘சத்ய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் சமூகத்திற்கும் தன்னாலியன்ற சேவை செய்து வந்தார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிந்தால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அக்காலத்தில் தீண்டாமை என்னும் கொடுமை தலை விரித்தாடியது. எனவே தங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொள்ளுமாறு கூறி அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். பூனாவில் சாவித்திரி பாய் எனும் கல்வித்தெய்வம் வாழ்ந்த அந்த வீடு நினைவிடமாக்கப்பட்டு தினமும் மக்கள் தரிசித்துச் செல்லும் கோயிலாக உள்ளது. ஒரு சமயம் பூனா சென்றிருந்த போது, அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழகான சிறிய வீடுதான். சாணம் பூசி மெழுகப்பட்ட மண் தரையுடன் கூடிய அந்த வீடும், அதிலிருக்கும் கிணறும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு எல்லா வகையிலும் துணையிருந்த கணவர் ஜோதிராவ் ஃபுலே 1890-ம் ஆண்டு இயற்கையெய்தி தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் தன் கணவரின் சிதைக்குத் தானே கொள்ளி வைத்து அவர் காட்டிய மன உறுதி அசாத்தியமானதும் கூட. கணவர் இறந்த பின், மூலையில் முடங்கி விடாமல் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அத்தகையதொரு சமூகப் பணியின் போதே தன் இன்னுயிரையும் நீத்தார். பூனாவில் அச்சமயம் பரவியிருந்த ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த சாவித்திரிபாயையும் நோய் தாக்கியதன் காரணமாக 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

மாணவி, ஆசிரியை, சமூக சேவகி, ஆதரவற்றவர்களுக்கு அன்னை என்று மட்டுமல்லாது கவிதாயினி என்றொரு முகமும் இவருக்குண்டு. இன்றைய நவீன மராட்டியக் கவிதைகளுக்கு அடி கோலிய சாவித்திரி பாயின் கவிதைகள் “காவ்ய ஃபுலே”, “பவன் கஷி சுபோத் ரத்னாகர்” என்ற பெயர்களில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சாவித்திரி பாயின் நினைவு தினத்தன்று அவரது உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்திய அரசாங்கம் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது. சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்குச் சாவித்திரி பாய் நினைவு விருதை அளிப்பதன் மூலம் அவர் பிறந்த மராட்டிய மாநிலமும் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது.

வரலாற்றின் பக்கங்களில் சிலர் மட்டுமே இடம் பெறுகிறார்கள். சிலர் செய்த நற்செயல்களும், தியாகங்களும் வெளியில் தெரியாமலேயே குடத்திலிட்ட விளக்காக மறைந்தும் மறைக்கப்பட்டும் விடுகிறது. ஒரு தீபத்திலிருந்து கோடிக்கணக்கான தீபங்களை ஏற்றினாலும் தீபத்தின் ஒளி குன்றுவதில்லை, மாறாக அது ஒன்று பலவாகப் பல்கிப் பெருகுவதன் மூலம் மேலும் பிரகாசமாகவே ஒளிர்கிறது. அவ்வாறே இத்தகைய தீபங்களும் வரலாற்றில் இடம் பெறவில்லையெனினும் தானிருக்கும் இடத்தை மட்டுமாவது ஒளிரச் செய்கின்றன.

அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


Friday 2 March 2012

மகளிர் வாரக் கொண்டாட்டம் - வல்லமை மின்னிதழில்..

வர்ற மார்ச் 8-ம் தேதியன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுதுன்னு எல்லோருக்கும் தெரியும்.வெறுமே ஒரு நாள் மட்டும் கொண்டாடுனாப் போதுமா,.. போதாதுன்னுதான் கொண்டாட்டத்தை ஒரு வாரத்துக்கு நீட்டிச்சிருக்கோம். இன்னியிலிருந்து மார்ச் 8-ம் தேதி வரைக்கும் மகளிர் வாரம் வல்லமை மின்னிதழில் கொண்டாடப்படுது.

இந்த ஒரு வாரமும் பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மட்டுமே வல்லமையில் வெளியாகும். கதை, கவிதை, கட்டுரை, சின்னச்சின்ன துணுக்குச் செய்திகள், பயணக் கட்டுரைகள், சமையல் குறிப்புகள்ன்னு எதை வேணும்னாலும் எழுதலாம்.

பெண்களின் நிலையை, அவங்க தினமும் சந்திக்க நேரிடும் பிரச்சினைகளை மையமாக் கொண்டதாகவோ இல்லைன்னா நீங்க சந்திச்ச ஒரு அற்புதமான பெண்மணியைப் பற்றியதாவோ கூட எழுதலாம். நம் குரலை ஒலிக்க வைக்க ஒரு அருமையான வாய்ப்பு , தவற விடாமக் கலந்துக்கோங்க சகோதரிகளே..

சகோதரர்கள் மன்னிச்சுக்கோங்க :-))

படைப்புகளை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்க. மகளிர் வாரத்தைக் கொண்டாடுங்க. 

LinkWithin

Related Posts with Thumbnails