Wednesday, 13 January 2016

பிரியாத வரம் வேண்டும்..

மாதாந்திர ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு டி-மார்ட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். வழியில் நிற்பவர்களை இடித்துத்தள்ளாத குறையாக கண்ணீருடன் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் அந்த இளவயதுப்பெண். வந்தவள் உள்ளே பில் போடுமிடத்தின் அருகே நின்று கொண்டிருந்த கணவனிடம் நேராகச்சென்று, “புள்ளையைக் காணலைங்க. பக்கத்துலதான் நின்னுட்டிருந்தா. ஒரு செகண்ட் இந்தப்பக்கம் திரும்பிட்டு அந்தப்பக்கம் பார்த்தா காணலை” என்று அழுது கொண்டே கூறினாள். 

நல்லவேளை,.. அவள் அளவுக்கு கணவன் பதட்டப்படவில்லை. பதறாத காரியம் சிதறாது என்று பழமொழியே இருக்கிறதே. “இங்கேதான் எங்கியாச்சும் நிப்பா. வா ஆளுக்கொரு பக்கமா தேடிப்பாக்கலாம்” என்று நிதானமாகக்கூறியபடி கடையின் உள்ளே சென்று தேட ஆரம்பித்தான். அவள், வெளிப்பக்கமாக குழந்தையின் பெயரைக்கூவி அழைத்தபடி தேட ஆரம்பித்தாள். டி-மார்ட்டின் வெளிப்பக்கத்திண்ணையில் ஐஸ்க்ரீம் ஸ்டால், மிட்டாய்க்கடை இரண்டும் உண்டு. போதாக்குறைக்கு திண்ணையிலிருந்து இறங்கும் படிக்கட்டுகளின் அருகே பலூன், பொம்மை இத்யாதிகளை விற்கும் கடையும் உண்டு. குழந்தை அங்கே கூட வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க வாய்ப்பு உண்டே. 

இந்த களேபரங்களையெல்லாம் அப்போதுதான் கவனித்த காவலாளி, “அந்த கண்ணாடிக்கதவு கிட்ட ஒரு குழந்தை ரொம்ப நேரமா நிக்குது. உங்க குழந்தையான்னு பாருங்க” என்று கை காண்பித்தார். திரும்பிப்பார்த்த அந்தத்தாய், ஓடிச்சென்று குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டு கதறி விட்டார். பாவம்.. இந்தப் பதட்டங்கள் எதுவுமே பாதிக்காத குழந்தை பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தது. அழுதழுது மயக்கமடையும் நிலைக்கே அந்தத்தாய் வந்து விட்டாள். குழந்தையை வாங்கிக்கொண்ட கணவன் மனைவியை மெல்லத்தேற்றி சமாதானப்படுத்தினான். சற்றே ஆசுவாசமடைந்து ஃபேமிலி ரியூனியனெல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அப்பாவும் அம்மாவும் குழந்தைக்கு மாறி மாறி ஐஸ்க்ரீம் ஊட்டி பாசத்தைப் பொழிந்தார்கள். 

“அப்பா, அம்மான்னு ரெண்டு பேரும் வந்திருக்கீங்க. பிள்ளையை கூட்டத்துல பத்திரமாக் கூட்டிட்டுப்போகணுமேங்கற பொறுப்பு கொஞ்சங்கூட இல்லாம, பாய்ஞ்சு பாய்ஞ்சு ஷாப்பிங் செஞ்சு ஆளுக்கொரு பக்கமா வேடிக்கை பார்த்து என்னைய தொலைச்சுட்டு இப்ப கொஞ்சுறீங்களா?. போகட்டும்.. எங்க போய்த்தொலைஞ்சன்னு முதுகுல சாத்தாம விட்டாங்களே. அந்த வரைக்கும் பாசப்பொழியலையாவது அனுபவிப்போம்” என்று அந்தக்குழந்தை நினைத்திருக்கலாம். யார் கண்டது? :-))

அவர்கள் என்னவோ குழந்தையும் ஐஸ்கிரீமுமாக செட்டில் ஆகிவிட்டார்கள். நாங்கள்தான் வரும் வழியெல்லாம் விவாதித்துக்கொண்டே வந்தோம்.

“கையைப்பிடிச்சுக்க முடியாத அளவுக்கு பைகள் இருந்திருந்தா, குறைஞ்ச பட்சம் அம்மாவோட புடவை அல்லது துப்பட்டாவைப்பிடிச்சுக்கிட்டு கூடவே வான்னு சொல்லிக்கொடுத்திருக்கணும். (என் குழந்தைகள் சின்னவர்களாக இருந்தபோது மார்க்கெட் கூட்டிப்போக நேர்ந்த பொழுதுகளில் நான் அப்படித்தான் செய்தேன்)

“அதெதுக்கு,.. சின்னப்புள்ளைக்கு என்ன தெரியும். ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்காங்க இல்லே. பெத்தவங்கதான் பத்திரமாக் கூட்டிட்டுப் போகணும்”

நல்லவேளை,.. "உன்னால்தான் குழந்தை தொலைஞ்சுது. கொஞ்சங்கூடப் பொறுப்பில்லை உனக்கு" என்று ஒருவரையொருவர் மாறிமாறிக் குற்றம் சாட்டி பொது இடத்தில் சண்டை போட்டுக்கொள்ளாமல் இருந்தார்களே என்று நிம்மதிப்பட்டுக்கொண்டேன்.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் 'காணவில்லை' போஸ்டரில் சிறு குழந்தைகளின் படங்களைக்காண நேரும்போது சற்று அதிகமாகவே வேதனையாக இருக்கும். பாவம், குழந்தையைத் தொலைத்து விட்டு என்ன மனக்கஷ்டப்படுகிறார்களோ!! குழந்தை சீக்கிரமே கிடைத்து விடட்டும் என்று தன்னையறியாமலேயே மனதுக்குள் தோன்றும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமற்போவதாக புள்ளி விவரம் சொல்கிறது. இதில் எத்தனை பேர் தனது குடும்பத்துடன் மறுபடி இணைகிறார்கள் என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.

பொதுவாகவே திருவிழாக்கள், கண்காட்சி போன்ற கூட்ட நெரிசல் அதிகமிருக்கும் இடங்களில், ஏதாவது குழந்தை தொலைந்து போவதும் அப்பா அம்மா திக்குத்தெரியாமல் தேடித்தேடி இளைப்பதும் நடப்பதுதான். நல்ல மனம் கொண்டவர் யாராவது, குழந்தையை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டுச் சென்று விட ஐந்து நிமிடத்துக்கொரு முறை பிள்ளையின் உடை மற்றும் அங்க அடையாளங்களைச்சொல்லி அறிவிப்பு அலறிக்கொண்டே இருப்பது சகஜம். கூட்டத்தின் களேபரக்கூச்சலையும் தாண்டி பெற்றோர் காதில் அறிவிப்பு விழுந்து, குழந்தையைக் கூட்டிக்கொண்டு போவது வரை அது அழுது அழுதே ஐஸ்க்ரீம், சாக்லெட் என்று சாதித்துக்கொண்டிருக்கும். ஒரு பக்கம் பெற்றவர்களும் உற்றவர்களும் பிள்ளையைத்தேடி இற்று இடியாப்பமாகிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் பிள்ளையும் ஏங்கித்தவித்துக் கொண்டிருப்பது உண்டுதானே?!

சோகங்களில் மிகப்பெரிது புத்திரசோகம் என்பார்கள். ஆனானப்பட்ட தசரதரே ராமனை இழந்து புத்திர சோகத்தால் வாடினாரே. கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் செல்லும்போது யாராவது ஒருத்தர் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கே குறிப்பிட்ட நிகழ்வில் ஏதோ.. குழந்தையும் சமர்த்தாக இருந்து, வாசலிலேயே நின்றும் கொண்டதால் திரும்பக்கிடைத்தது. இதுவே, வால்தனமுள்ள குழந்தையாயிருந்தால்!!. அதுவும் படிக்கட்டில் இறங்கி சாலைக்கு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? குழந்தை பக்கத்தில் நிற்கிறதா இல்லையா என்று கூடக் கவனிக்காமல் இப்படியா அலட்சியமாக இருப்பது? ஏதேதோ காரணங்களால் சின்ன வயசில் பிரிந்து ஆளுக்கொரு திசையில் பிரிந்து போய், ஒவ்வொரு விதமாக வளர்ந்தபின் மறுபடி குடும்பப்பாட்டு பாடிக் கூடிக்கொள்ள வாழ்க்கை என்ன இரண்டரை மணி நேர சினிமாவா? ஒண்ணும் புரியலை.. என்னவோ போங்க. 

Monday, 11 January 2016

நல்ல மனம் வாழ்க..

பாஸ்போர்ட் மற்றும் இன்ன பிற விஷயங்களுக்குத் தேவைப்படும் என்பதால் என் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களின் இன்னொரு பிரதியை வாங்குவதற்காக சமீபத்தில் நாகர்கோவில் செல்ல நேரிட்டது. இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் தரவிறக்கிக்கொள்ளும் வசதி வந்து விட்டது என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த வசதி இன்னும் வரவில்லை எனத்தெரிந்தது. ஆகவே நேரில் போய்த்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பதால் ஊருக்குப்போக தத்காலில் டிக்கெட் ரிசர்வ் செய்தோம். சான்றிதழ்கள் கிடைக்க எத்தனை நாட்களாகும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த வாரத்திலேயே கிறிஸ்துமஸ், சனி ஞாயிறு விடுமுறைகள் என வரிசை கட்டி நின்றதால் வந்த வேலை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியாததால் முனிசிபல் ஆப்பீசில் போய் நிலைமையைச்சொல்லி, குத்துமதிப்பாக எத்தனை நாட்கள் ஆகுமென்று தெரிந்து கொண்டு அதன் பின் மும்பை திரும்ப டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். 

விண்ணப்பிக்கும்போது என்னென்ன டாகுமெண்ட்டுகள் தேவைப்படும் எனத்தெரியாததால் பிள்ளைகளின் போட்டோக்கள், வாக்காளர் அட்டை, பள்ளி இறுதிச்சான்றிதழ் முதற்கொண்டு அத்தனை டாக்குமெண்டுகளும் அடங்கிய ஃபைல், மகளின் பிறப்புச்சான்றிதழின் எஞ்சியிருந்த ஜெராக்ஸ் காப்பி, பஞ்சிங் மெஷின், ஸ்டாப்ளர், பேனாக்கள், ஃபெவிகால் மற்றும் ஒரு சில வெள்ளைத்தாள்கள் அடங்கிய பையோடு நாகர்கோவில் முனிசிபல் ஆப்பீசில் போய் இறங்கினேன். வளாகத்தில் மரங்களினூடே ஒளிந்திருந்த, திருப்பிப்போட்ட ‘ப்’ வடிவிலான கட்டிடத்தின் எந்தப்பகுதியில் சான்றிதழ்களுக்காக அணுக வேண்டும் எனத்தெரியாமல் காவலாளியை அணுகிக்கேட்டதும் அவர் ‘ப’வின் நடுவில் புள்ளியாய் அமைந்திருந்த சிறிய கட்டிடத்தைக் கை காண்பித்தார். நாலைந்து படிகள் ஏறிச்சென்று கவுண்டரில் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்தவரிடம் விசாரித்தேன். “இந்த அப்ளிகேஷனை மட்டும் நிரப்பிக்கொடுங்க. வேற டாக்குமெண்ட்ஸ் எதுவும் தேவையில்லை” என்றார். 

அவரிடம் சான்றிதழ்களுக்காகவே மெனக்கெட்டு மும்பையிலிருந்து வந்திருப்பதைச்சொல்லி கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டேன். நிச்சயம் உதவுவதாகச்சொன்னவர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பக்கத்துக் கவுண்டரிலிருந்த பெரிய ஆப்பீசரிடம் கொடுக்கச்சொன்னார். விண்ணப்பங்களை நிரப்பியபின் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தபோது இனம் புரியாத பதற்றத்தாலும் முதல் நாள் மாத்திரை எடுத்துக்கொள்ளாததாலும் இருதயத்துடிப்பு சற்று அதிகரித்திருந்தது. போதாக்குறைக்கு மும்பையிலிருந்து கடுமையான ஜலதோஷம் மற்றும் இருமலோடு கிளம்பியிருந்தேன். மூக்கோடு சேர்ந்து காதும் அவ்வப்போது அடைத்துக்கொண்டு படுத்திக்கொண்டிருந்ததால் எதிரில் யாராவது பேசும்போது சற்றுக்கூர்மையாக அவதானித்துக்கேட்க வேண்டியிருந்தது வேறு கடுப்பைக்கிளப்பியது. 

ஒரு வழியாக பெரிய ஆபீசரின் முன் சென்று விண்ணப்பங்களைக்கொடுத்ததும் விஷயத்தைச்சொல்லி “இதுக்குன்னே மும்பைலேர்ந்து வந்திருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சா கொள்ளாம்” என்று அவரிடமும் எனது வேண்டுகோளைச்சொன்னேன். அவரது பதிலைப்பொறுத்துதான் மும்பைக்கு ரிடர்ன் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றும் சொன்னேன். “எம்மா ரெண்டு நாள்ல கிடைக்காதே. கிறிஸ்மஸ், சனி, ஞாயிறுண்ணு எல்லாம் வருது. அடுத்த வாரம் ஆயிருமே. வந்தது வந்தீங்க.. கூடுதலா ரெண்டு நாள் நாரோயில்ல தங்கி வாங்கிட்டுப்போங்க” என்றவர் கொஞ்சம் யோசித்தார். பின், “சரி.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. ரெண்டு ஃபார்முக்கும் அறுவது ரூவா கொடுங்க. சாயந்திரம் ஒரு மூணு மணி வாக்குல வாங்க. இங்க மேடத்துக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன்” என்றார். அவர் அறுபது என்று சொன்னது கண்ணாடி ஜன்னலைத்தாண்டி வரும்போது தேய்ந்து, ஜலதோஷத்தால் அடைத்திருந்த என் காதில் அறுநூறு என்று விழவே ரூபாயை எடுத்து நீட்டினேன். 

அதிர்ச்சியான அவர், “ எம்மா.. எதுக்கு இவ்ளோ? அறுவதுதான்” என்று கூறியபடியே அதிகப்படியான பணத்தைத்திருப்பித்தந்தார். “அவ்ளோதானே சொன்னீங்க?” என்று குழம்பிய என்னிடம் “இல்லம்மா.. அறுவதுதான்” என்றவர் ‘இங்கே யாருக்கும் அதிகப்படி காசு எதுவும் கொடுத்துராதீங்க’ என்று ஜாடை செய்தபோதுதான் ஒருவேளை நான் அதை லஞ்சமாகக் கொடுத்ததாக நினைத்துக்கொண்டு விட்டாரோ என்று சந்தேகம் வந்தது. அடடா!!.. எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று வழி தேடும் இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான அரசாங்க அதிகாரியா?. நான் தவறுதலாகக் கொடுத்திருந்தாலும் அதை சாக்குப்போக்குச் சொல்லி தக்க வைத்துக்கொள்ளாமல் திருப்பிக்கொடுத்தது அந்த நல்ல மனம். 

பகலுணவை முடித்துக்கொண்டு நாகர்கோவில் மணிமேடைப் பகுதியிலிருக்கும் சுதர்சன் புக்ஸில் சென்று சற்று நேரம் அலசி ஆராய்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டபின் சொன்னது போல் சாயந்திரம் மூன்று மணிக்கு மேல் முனிசிபல் ஆபீசிற்குப்போனேன். அங்கே ஒரு மேடத்திடம் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, “சர்ட்டிபிகேட்டுக்குன்னே மெனக்கெட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் சட்ன்னு முடிச்சுக்கொடுங்க” என்று நிலைமையையும் எடுத்துச்சொன்னார். பக்கத்துக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச்சென்ற மேடம், “மகனுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நாளைக்குத்தான் ரெடியாகும். மகளோட சர்ட்டிஃபிகேட் காப்பி இருக்கதால இப்பம் சாயந்திரம் அஞ்சு மணிக்கு கிடைச்சுரும். இப்பம் மூணரை மணி ஆவுது. இருந்து வாங்கிட்டுப்போங்க..  இல்லண்ணா சாயந்திரம் அஞ்சு மணிக்கி வாங்க" என்றவர் சற்று யோசித்து விட்டு, "ஒண்ணு செய்யலாம், ரெண்டையும் சேத்து நாளைக்கே வாங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார். இரண்டு மணி நேரத்துக்குள்ளாக இன்னொரு முறை தங்குமிடத்துக்கும் முனிசிபல் ஆபீசுக்கும் அலைய தெம்பில்லை. மறு நாள் வந்து வாங்கிக்கொண்டால் இன்றைய அதிகப்படி அலைச்சல் மிச்சமாகும் என்பதால் இரண்டையும் மறுநாள் ஐந்து மணி வாக்கில் வந்து வாங்கிக்கொள்வதாகச்சொல்லி விட்டு தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் சென்றபோது பையனின் சான்றிதழ் தயாராகி ஆபீசரின் கையெழுத்துக்காகக் காத்திருந்தது. பெண்ணின் சான்றிதழை கீழே ஆபீசில் சென்று கையெழுத்திட்டு வாங்கியபின், ஓட்டமும் நடையுமாக பக்கத்துக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஓடிச்சென்று சற்றுக்காத்திருந்து பையனின் சான்றிதழையும் கையெழுத்திட்டு வாங்கியபின்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதிப்பெருமூச்சு வந்தது. முனிசிபல் ஆபீசுக்குள் அங்கே இங்கே என்று ஊழியர்களிடம் சொல்லி வைத்து, அனைவரும் விடுமுறைக்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்த அவசரத்திலும், சான்றிதழ்களைத்தயார் செய்ய வைத்து, விரைவில் கிடைக்க உதவிய பெரிய ஆபீசருக்கு நேரில் சென்று நன்றி சொல்லி விட்டு, லேசான மனதுடன் நாகராஜா கோவிலுக்குச்சென்று மனங்குளிர தரிசித்து வந்தோம். 

பொதுவாகவே அரசாங்க அலுவலகம் என்றால், வேலை சட்டென்று முடியாது, இழுத்தடிப்பார்கள், சுலபமாக முடித்துக்கொடுக்க மேற்படி எதிர்பார்ப்பார்கள் என்றெல்லாம் சில அபிப்ராயங்கள் மக்களிடையே உண்டு. அதிலும் சான்றிதழ்கள் ஏதாவது வழங்க வேண்டுமென்றால் ஆதாயம் ஏதுமில்லாமல் நிச்சயமாகச்செய்து கொடுக்க மாட்டார்கள் என்று பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பேர்ப்பட்ட இடத்திலும், இக்கட்டான நிலையிலிருக்கும் மக்களுக்கு எவ்வித பலனையும் எதிர்பாராமல் வேண்டிய சேவையைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் நினைத்திருந்தால், விடுமுறையைக் காரணம் காட்டி வேலையை இழுத்தடித்திருக்கலாம். அல்லது சீக்கிரம் முடித்துக்கொடுக்க ஆதாயம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மெனக்கெட்டு சான்றிதழ்களுக்காகவே ஊருக்குச்சென்றிருந்த எங்களிடம், எதையும் எதிர்பாராமல் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உதவி செய்த அந்த நல்ல மனம் நீடூழி வாழ்க.

Friday, 8 January 2016

சித்தூர் தென்கரை மஹாராஜன்

சன்னிதி வாசல்
எத்தனை தெய்வங்களை விருப்பப்பட்டு வணங்கினாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குலதெய்வம் என ஒரு தெய்வத்தை தனிப்பட்ட முறையில் வணங்கி வழிபடுவது நம் வழக்கம். முறையாக தன் குலதெய்வத்தை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தத்தீங்கும் வராமல் அத்தெய்வம் காக்கும் என்று நம்புபவர்கள் அதிகம். “கொலதெய்வத்துக்கப்றம்தான் மத்த சாமியெல்லாம்” என்பது அவர்களின் உறுதியான பிடிப்பு. “வாள்க்கைல நிம்மதியே இல்ல. எப்பமும் சங்கடமும் கண்ணீருமாத்தான் இருக்கு” என்று நொந்து கொள்பவர்களுக்கு “கொலதெய்வத்துக்கு எதாம் கொற வெச்சிருப்பீங்க. மொதல்ல போயி ரெண்டு பூப்போட்டு கும்புட்டுட்டு வாங்க. அது கண்ணெடுத்துப்பாத்தா எல்லாஞ்சரியாப்போவும்” என்று ஆறுதல்  கூறுபவர்களும் உண்டு. பெரும்பாலான குடும்பங்களின் குலதெய்வம் எதென ஆராய்ந்தால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாகவோ, அல்லது சிறு கிராம தேவதைகளாகவோதான் இருக்கும். குலதெய்வத்தை சாஸ்தா எனக்குறிப்பிடுவது தென் மாவட்ட வழக்கு. பேச்சு வழக்கில் சாத்தாங்கோவில். என்னதான் நாள் கிழமைகளில் வணங்கினாலும் பங்குனி உத்திரம் அன்று பொங்கலிட்டு வழிபடுவது தனிச்சிறப்பு. 
 நம்பியாற்றை நோக்கிய மண்டபமும் படித்துறையும்
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைப்பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களுக்கு குலதெய்வமாக தென்கரை மஹாராஜேஸ்வரர் விளங்குகிறார். இவர் வடக்கு வள்ளியூருக்கு அருகேயிருக்கும் சித்தூர் என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார். “பங்குனி உத்திரம் அன்னிக்கு எள்ளுப்போட எடமிருக்காது. அன்னிக்கி அவ்வளவு கூட்டம் சாடும். எங்க இருந்துல்லாமோ பொங்க வச்சுக் கும்புட ஆட்கள் வருவாங்க. இருக்கந்தொறைக்கிப் போறதுக்குப் பதிலா இப்ப நான் இங்கதாம் போயிட்டு வாரேன்” என்றான் கடந்த சில வருடங்களாக அங்கே சென்று வரும் இரண்டாவது தம்பி. எங்கள் குலதெய்வம் நெல்லை மாவட்டம் இருக்கந்துறையில் இருக்கிறது. குலதெய்வம் யாரென்றே தெரியாதவர்களும், குலதெய்வக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும் கூட இங்கே வந்து பிரார்த்தனையைச் செலுத்தினால் பலனுண்டு, மேலும் சமுதாயத்தில் பல்வேறு சாதி அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் இது குடும்பக்கோவில் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

இக்கோவில் அத்துவானக்காட்டில் அமைந்திருப்பதால் வள்ளியூரிலிருந்தே ஆட்டோ ஏற்பாடு செய்து கொண்டு சென்றோம். மதியமே கிளம்ப வேண்டும் எனச்சொல்லியிருந்தும், கல்யாணத்துக்கு அழைத்தால் வளைகாப்புக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி மாலை நான்கு மணிக்கு மேல் ஆட்டோ வரவழைத்தான் பெர்ரிய தம்பி. வளைகாப்புக்கு அழைத்தால் பெயர் சூட்டு விழாவுக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி தாமதமாக வந்து சேர்ந்தது ஆட்டோ. ‘போட்டோ எடுக்க வேண்டுமே.. வெளிச்சம் இருக்குமா?’ என்ற எனது கவலையை அந்த தெங்கரையாரிடமே சமர்ப்பித்து விட்டு நண்டு, நாழி, உழக்குகளை அதாவது பிள்ளை குட்டிகளை சேகரித்துக்கொண்டு கிளம்பினோம். தாமதமானதால் நஷ்டப்பட்ட நேரத்தை மீட்டு விடும் நோக்கோடு விர்ர்ர்ர்ர்ரென ஓடியது ஆட்டோ. 

“ரோட்ல ஒரு பாம்பு வந்திச்சி. ஆட்டோ சத்தங்கேட்டதும் மறிஞ்சு ஓடிட்டுது” என்று பாம்பைக்கடந்து அரை மைல் வந்தபின் சொல்லி படம் எடுக்கும் ஆசையில் மண்ணைப்போட்டார் டிரைவர். “இனும எதாம் வந்தா சொல்லுங்க” என்று சொல்லி வைத்ததால் சற்றுத்தொலைவு சென்ற பின் ஆட்டோவை நிறுத்தி “அந்தா ஒரு மயில் நிக்கி. படம் எடுக்கணுமா?” என்று கேட்டார். அவர் குறிப்பிட்ட மயில் நிற்கும் இடத்துக்குச் செல்லவே இன்னொரு ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும் எனத்தோன்றியதால் பிள்ளைகளுக்கு வனப்பகுதியில் மயில் மேய்ந்து கொண்டிருந்த அரிய காட்சியைக் காண்பித்ததோடு திருப்தியடைந்து கொண்டேன். 

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில் அளவுக்கு இந்த தென்கரை சாஸ்தா கோவிலும் புகழ் வாய்ந்ததே. தேர் இருக்கும் ஒரே சாஸ்தா கோவில் இதுதான் என்ற தனிச்சிறப்பும் இதற்குண்டு. கோவிலில் பணிபுரிபவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் கோவில் வளாகத்திலேயே அமைந்திருக்கின்றன. அதைத்தவிர ஊரில் வீடுகள் ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை. கோவிலையொட்டி ஓடும் நம்பியாற்றின் தென் கரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் தென்கரை சாஸ்தா எனப்பெயர் பெற்றார். இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தவிர சமீபத்தில் கட்டப்பட்ட முன் மண்டபம் மற்றும் சில மண்டபங்கள் காணப்படுகின்றன.
சன்னிதியின் முன் கொடிமரம்
கொடிமரம் கடந்து உள்ளே போய் சாஸ்தாவை வணங்கி கற்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். சபரிமலை சாஸ்தாவை அப்படியே சின்னஞ்சிறு உருவில் கண்ணெதிரே காண்பது போல் தோன்றியது. அஞ்சேல் என்று அபயமளித்த அபயஹஸ்தத்தைத் தரிசித்ததும் மனம் லேசானது போல் ஓர் உணர்வு. கூடவேயிருக்கும் தளவாய் மாடனையும், பிரகாரம் சுற்றி வந்து முதற்பிரகாரத்திலிருக்கும் பேச்சியம்மனையும் தரிசித்துக்கொண்டோம். பேச்சியம்மனின் சன்னிதிக்கு எதிரே வேண்டுதலுக்காகச் செலுத்தப்பட்ட ஆணிச்செருப்புகள் குவிந்து கிடந்தன. இதை அணிந்து கொண்டு சாஸ்தா இரவில் ஊரைச்சுற்றி வந்து காவல் புரிவதாக ஐதீகம்.

பிரார்த்தனைகள்
கோவிலையொட்டி ஓடும் நம்பியாறு
கோவிலையொட்டினாற்போல் குளுகுளுவென்று ஓடிக்கொண்டிருக்கிறது நம்பியாறு. கோவிலிலிருந்து ஆற்றை நோக்கிய ஒரு வாசலும், அங்கிருந்து ஆற்றுக்குள் இறங்குவதற்கு படித்துறையும் இருக்கிறது. கார்த்திகை மாதமாதலால் நிறைய ஐயப்ப சாமிகளும், பிற ஆசாமிகளுமாக நீராடிக்கொண்டிருந்தார்கள். பளிங்கு போல் ஓடிய தண்ணீரில் பயமில்லாமல் காலை நனைத்ததும் அடுத்த முறை வந்தால் ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. எப்போது கூப்பிடுகிறாரோ பார்ப்போம். சற்று இருட்ட ஆரம்பித்து விட்டதால் மேலும் சுற்றிப்பார்க்கவோ, தேர் இருக்கும் பகுதிக்குச்செல்லவோ இயலவில்லை. கோவிலைப்பற்றி இன்னும் விவரங்கள் சேகரித்துக்கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பெல்லாம் ஆற்றங்கரையில் காற்று வாங்கியபோதே கரைந்து விட்டிருந்தன. திரும்பி வரும்போதுதான் “அடடா!!.. கோட்டை விட்டு விட்டேனே” என்று வருத்தமாக இருந்தது. பரவாயில்லை.. இதைச்சாக்கிட்டு இன்னொரு முறை போய் வந்தால் ஆயிற்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் இக்கோவிலைப்பற்றி எழுதியிருக்கிறார்.
  நம்பியாற்றை நோக்கிய கோவில் வாசல்
இத்திருக்கோவிலில் திருமணம், காது குத்து போன்றவையும் நடைபெறுகின்றன. சிலர் இவற்றை ஒரு வேண்டுதலாகவே செய்வார்கள். நல்ல காரியங்களை நல்லபடி முடித்துக்கொடுத்த குலதெய்வத்துக்கு நன்றிக்கடனாகவும் செய்வதுண்டு. ஆற்றை நோக்கி ஒரு கலையரங்கம் இருப்பதையும் காண முடிந்தது. மற்ற நாட்களை விட பங்குனி உத்திரத்தன்று இந்தக்கோவில் ஜே ஜே என்று இருக்கும். இதோ.. பங்குனி மாதம் சமீபிக்கிறது. முடிந்தால் சித்தூருக்கு ஒரு நடை போய் தென்கரை மஹாராஜரைத் தரிசித்து வாருங்கள்.

Friday, 1 January 2016

அடிச்சுவடுகள் - 2015

ராமேஸ்வரம்- சீதா தீர்த்தக் கட்டத்தின் முகப்பிலிருக்கும் சிவனார் சிற்பம்
சென்ற வருடம் முழுவதும் தென்றலும் சூறாவளியும் மாறி மாறி முறை போட்டு அடித்துத் துவைத்துக் காயப்போட்டு விட்டுச் சென்று விட்டன. உருப்படியாக ஏதாவது செய்தேனா என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தால் எதுவுமே தேறவில்லை. இருப்பினும் இருத்தலை நிரூபிக்கும் விதமாக மாதத்திற்கு ஒரு இடுகையாவது எழுதி வந்திருப்பதும், ஃப்ளிக்கரில் முடிந்தபோதெல்லாம் படங்களைப் பகிர்ந்து வருவதும் எனக்குக்கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. தவிர, கவிதைகளில் "நல்லாச்சி"க்குக் கிடைத்து வரும் வரவேற்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டிற்குச் செய்யும் நன்றிக்கடனாக அதன் பாரம்பரிய உணவு வகைகளைப் பதிந்து வரும் பணியையும் ஆரம்பித்திருக்கிறேன். தொடர்வேனென்று நம்புகிறேன் :-)

சென்ற வருடத்தில் கடந்து போன கசப்பான அனுபவங்களை எண்ணிக்கொண்டே இருப்பதை விட வரவிருக்கும் இனிய அனுபவங்களை வரவேற்க மனதை உற்சாகமாய் வைத்திருப்பது மேலல்லவா. 

சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து 
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு 
தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

என்று பாரதியும் பாடிச்சென்றிருக்கிறாரே. எத்தனையோ இயற்கைப்ப்பேரிடர்கள் வந்து குலைத்துப்போட்டு விட்டுச் சென்ற போதிலும் மனித குலம் மறுபடியும் கரம் கோர்த்து மீண்டெழுகிறது. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது ஒருவருக்கொருவர் உதவியதே இதற்குச் சான்று. மனிதம் இன்னும் செத்து விடவில்லை. நீறு பூத்த நெருப்பாய் அது ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. 

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே. மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.
சுசீந்திரம் கோயிலின் விடையேறிய பெருமான்
கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல், புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இந்த வருடம் மிக இனிய வருடமாக அமையட்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails