Friday 8 January 2016

சித்தூர் தென்கரை மஹாராஜன்

சன்னிதி வாசல்
எத்தனை தெய்வங்களை விருப்பப்பட்டு வணங்கினாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குலதெய்வம் என ஒரு தெய்வத்தை தனிப்பட்ட முறையில் வணங்கி வழிபடுவது நம் வழக்கம். முறையாக தன் குலதெய்வத்தை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தத்தீங்கும் வராமல் அத்தெய்வம் காக்கும் என்று நம்புபவர்கள் அதிகம். “கொலதெய்வத்துக்கப்றம்தான் மத்த சாமியெல்லாம்” என்பது அவர்களின் உறுதியான பிடிப்பு. “வாள்க்கைல நிம்மதியே இல்ல. எப்பமும் சங்கடமும் கண்ணீருமாத்தான் இருக்கு” என்று நொந்து கொள்பவர்களுக்கு “கொலதெய்வத்துக்கு எதாம் கொற வெச்சிருப்பீங்க. மொதல்ல போயி ரெண்டு பூப்போட்டு கும்புட்டுட்டு வாங்க. அது கண்ணெடுத்துப்பாத்தா எல்லாஞ்சரியாப்போவும்” என்று ஆறுதல்  கூறுபவர்களும் உண்டு. பெரும்பாலான குடும்பங்களின் குலதெய்வம் எதென ஆராய்ந்தால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாகவோ, அல்லது சிறு கிராம தேவதைகளாகவோதான் இருக்கும். குலதெய்வத்தை சாஸ்தா எனக்குறிப்பிடுவது தென் மாவட்ட வழக்கு. பேச்சு வழக்கில் சாத்தாங்கோவில். என்னதான் நாள் கிழமைகளில் வணங்கினாலும் பங்குனி உத்திரம் அன்று பொங்கலிட்டு வழிபடுவது தனிச்சிறப்பு. 
 நம்பியாற்றை நோக்கிய மண்டபமும் படித்துறையும்
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைப்பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களுக்கு குலதெய்வமாக தென்கரை மஹாராஜேஸ்வரர் விளங்குகிறார். இவர் வடக்கு வள்ளியூருக்கு அருகேயிருக்கும் சித்தூர் என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார். “பங்குனி உத்திரம் அன்னிக்கு எள்ளுப்போட எடமிருக்காது. அன்னிக்கி அவ்வளவு கூட்டம் சாடும். எங்க இருந்துல்லாமோ பொங்க வச்சுக் கும்புட ஆட்கள் வருவாங்க. இருக்கந்தொறைக்கிப் போறதுக்குப் பதிலா இப்ப நான் இங்கதாம் போயிட்டு வாரேன்” என்றான் கடந்த சில வருடங்களாக அங்கே சென்று வரும் இரண்டாவது தம்பி. எங்கள் குலதெய்வம் நெல்லை மாவட்டம் இருக்கந்துறையில் இருக்கிறது. குலதெய்வம் யாரென்றே தெரியாதவர்களும், குலதெய்வக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும் கூட இங்கே வந்து பிரார்த்தனையைச் செலுத்தினால் பலனுண்டு, மேலும் சமுதாயத்தில் பல்வேறு சாதி அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் இது குடும்பக்கோவில் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

இக்கோவில் அத்துவானக்காட்டில் அமைந்திருப்பதால் வள்ளியூரிலிருந்தே ஆட்டோ ஏற்பாடு செய்து கொண்டு சென்றோம். மதியமே கிளம்ப வேண்டும் எனச்சொல்லியிருந்தும், கல்யாணத்துக்கு அழைத்தால் வளைகாப்புக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி மாலை நான்கு மணிக்கு மேல் ஆட்டோ வரவழைத்தான் பெர்ரிய தம்பி. வளைகாப்புக்கு அழைத்தால் பெயர் சூட்டு விழாவுக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி தாமதமாக வந்து சேர்ந்தது ஆட்டோ. ‘போட்டோ எடுக்க வேண்டுமே.. வெளிச்சம் இருக்குமா?’ என்ற எனது கவலையை அந்த தெங்கரையாரிடமே சமர்ப்பித்து விட்டு நண்டு, நாழி, உழக்குகளை அதாவது பிள்ளை குட்டிகளை சேகரித்துக்கொண்டு கிளம்பினோம். தாமதமானதால் நஷ்டப்பட்ட நேரத்தை மீட்டு விடும் நோக்கோடு விர்ர்ர்ர்ர்ரென ஓடியது ஆட்டோ. 

“ரோட்ல ஒரு பாம்பு வந்திச்சி. ஆட்டோ சத்தங்கேட்டதும் மறிஞ்சு ஓடிட்டுது” என்று பாம்பைக்கடந்து அரை மைல் வந்தபின் சொல்லி படம் எடுக்கும் ஆசையில் மண்ணைப்போட்டார் டிரைவர். “இனும எதாம் வந்தா சொல்லுங்க” என்று சொல்லி வைத்ததால் சற்றுத்தொலைவு சென்ற பின் ஆட்டோவை நிறுத்தி “அந்தா ஒரு மயில் நிக்கி. படம் எடுக்கணுமா?” என்று கேட்டார். அவர் குறிப்பிட்ட மயில் நிற்கும் இடத்துக்குச் செல்லவே இன்னொரு ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும் எனத்தோன்றியதால் பிள்ளைகளுக்கு வனப்பகுதியில் மயில் மேய்ந்து கொண்டிருந்த அரிய காட்சியைக் காண்பித்ததோடு திருப்தியடைந்து கொண்டேன். 

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில் அளவுக்கு இந்த தென்கரை சாஸ்தா கோவிலும் புகழ் வாய்ந்ததே. தேர் இருக்கும் ஒரே சாஸ்தா கோவில் இதுதான் என்ற தனிச்சிறப்பும் இதற்குண்டு. கோவிலில் பணிபுரிபவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் கோவில் வளாகத்திலேயே அமைந்திருக்கின்றன. அதைத்தவிர ஊரில் வீடுகள் ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை. கோவிலையொட்டி ஓடும் நம்பியாற்றின் தென் கரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் தென்கரை சாஸ்தா எனப்பெயர் பெற்றார். இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தவிர சமீபத்தில் கட்டப்பட்ட முன் மண்டபம் மற்றும் சில மண்டபங்கள் காணப்படுகின்றன.
சன்னிதியின் முன் கொடிமரம்
கொடிமரம் கடந்து உள்ளே போய் சாஸ்தாவை வணங்கி கற்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். சபரிமலை சாஸ்தாவை அப்படியே சின்னஞ்சிறு உருவில் கண்ணெதிரே காண்பது போல் தோன்றியது. அஞ்சேல் என்று அபயமளித்த அபயஹஸ்தத்தைத் தரிசித்ததும் மனம் லேசானது போல் ஓர் உணர்வு. கூடவேயிருக்கும் தளவாய் மாடனையும், பிரகாரம் சுற்றி வந்து முதற்பிரகாரத்திலிருக்கும் பேச்சியம்மனையும் தரிசித்துக்கொண்டோம். பேச்சியம்மனின் சன்னிதிக்கு எதிரே வேண்டுதலுக்காகச் செலுத்தப்பட்ட ஆணிச்செருப்புகள் குவிந்து கிடந்தன. இதை அணிந்து கொண்டு சாஸ்தா இரவில் ஊரைச்சுற்றி வந்து காவல் புரிவதாக ஐதீகம்.

பிரார்த்தனைகள்
கோவிலையொட்டி ஓடும் நம்பியாறு
கோவிலையொட்டினாற்போல் குளுகுளுவென்று ஓடிக்கொண்டிருக்கிறது நம்பியாறு. கோவிலிலிருந்து ஆற்றை நோக்கிய ஒரு வாசலும், அங்கிருந்து ஆற்றுக்குள் இறங்குவதற்கு படித்துறையும் இருக்கிறது. கார்த்திகை மாதமாதலால் நிறைய ஐயப்ப சாமிகளும், பிற ஆசாமிகளுமாக நீராடிக்கொண்டிருந்தார்கள். பளிங்கு போல் ஓடிய தண்ணீரில் பயமில்லாமல் காலை நனைத்ததும் அடுத்த முறை வந்தால் ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. எப்போது கூப்பிடுகிறாரோ பார்ப்போம். சற்று இருட்ட ஆரம்பித்து விட்டதால் மேலும் சுற்றிப்பார்க்கவோ, தேர் இருக்கும் பகுதிக்குச்செல்லவோ இயலவில்லை. கோவிலைப்பற்றி இன்னும் விவரங்கள் சேகரித்துக்கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பெல்லாம் ஆற்றங்கரையில் காற்று வாங்கியபோதே கரைந்து விட்டிருந்தன. திரும்பி வரும்போதுதான் “அடடா!!.. கோட்டை விட்டு விட்டேனே” என்று வருத்தமாக இருந்தது. பரவாயில்லை.. இதைச்சாக்கிட்டு இன்னொரு முறை போய் வந்தால் ஆயிற்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் இக்கோவிலைப்பற்றி எழுதியிருக்கிறார்.
  நம்பியாற்றை நோக்கிய கோவில் வாசல்
இத்திருக்கோவிலில் திருமணம், காது குத்து போன்றவையும் நடைபெறுகின்றன. சிலர் இவற்றை ஒரு வேண்டுதலாகவே செய்வார்கள். நல்ல காரியங்களை நல்லபடி முடித்துக்கொடுத்த குலதெய்வத்துக்கு நன்றிக்கடனாகவும் செய்வதுண்டு. ஆற்றை நோக்கி ஒரு கலையரங்கம் இருப்பதையும் காண முடிந்தது. மற்ற நாட்களை விட பங்குனி உத்திரத்தன்று இந்தக்கோவில் ஜே ஜே என்று இருக்கும். இதோ.. பங்குனி மாதம் சமீபிக்கிறது. முடிந்தால் சித்தூருக்கு ஒரு நடை போய் தென்கரை மஹாராஜரைத் தரிசித்து வாருங்கள்.

5 comments:

'பரிவை' சே.குமார் said...

வரிசையாக ஆலயங்கள் பற்றிய பகிர்வாய் படித்து வருகிறேன்...
இன்று வெள்ளியோ அதனால்தான் என்று நினைக்கிறேன்...
படமும் பகிர்வும அருமை அக்கா...

த.ம. +1

துளசி கோபால் said...

அடடா.... இப்படி ஒரு கோவில் இருப்பதை இப்பத்தான் உங்க மூலம் கேள்விப்பட்டேன்.

பார்க்கலாம் எதாவது சந்தர்ப்பம் வாய்க்குமான்னு.

ஸ்ரீராம். said...

புதிய தகவல். எங்கள் குல தெய்வத்தையும் சாஸ்தா என்றுதான் அழைப்பார்கள். சாத்தியப்பா என்போம். அவரைப் பார்த்து பதினெட்டரை வருடங்கள் ஆகின்றன என்று மெதுவாகச் சொல்லிக் கொள்கிறேன். (அவர் காதில் விழுந்துடப் போகுது!) நீங்கள் பகிர்ந்திருக்கும் படத்தைப் பார்த்தே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள்.

எங்கள் குலதெய்வம் கோவில் விழுப்புரத்திற்கு அருகில்..... இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த பயணத்தில் செல்ல வேண்டும்.....

கிராமத்துச் சூழல் ரம்மியமாக இருக்கிறது. நம்பியாறு - பார்க்கும்போதே குளிக்கத் தோன்றுகிறது!

ராமலக்ஷ்மி said...

படங்களும் பகிர்ந்த விதமும் அருமை. சாஸ்தா கோவில் எங்களுக்கு உள்ளூரிலேயே.

LinkWithin

Related Posts with Thumbnails