Sunday, 31 December 2017

பழங்கணக்கு..

மயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரரின் தரிசனத்துடன் ஆரம்பித்த 2016 ஓரளவு இனிமையான நினைவுகளையே தந்து சென்றிருக்கிறது. பயணத்துடன் ஆரம்பித்ததாலோ என்னவோ!! போதும் போதுமென உடலும் மனமும் அலுக்குமளவுக்கு, சென்னை முதல் குமரி வரையிலான ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுப்பயணமாகச் சென்று கண்டு களித்து வந்தோம். அவற்றில் இராமேஸ்வரம், திருநள்ளாறு போன்ற இடங்களில் தீர்த்தமாடியதும், ஆற்றுக்கால் பகவதி கோவிலுக்கு முதன் முறையாகச் சென்றதும் மறக்க முடியாத ஒன்று. திருப்பதியில் ஆரம்பித்த அப்பயணத்தில் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்லுமுன், முந்தின நாள்தான் தத்கால் முறையில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து கொண்டே சென்றோம். ஏனெனில், ஒவ்வொரு ஊரிலும் எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமென எங்களுக்கே தெரியாது.  சீட்டுகள் உறுதிப்படுத்தப்படும் வரை சற்றே திக்திக்கென இருந்த அந்தப்பயணம் த்ரில்லிங்காகவும் இருந்தது. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் எதிரிலிருந்த ராயாஸில் தங்கியிருந்தும் கோவிலுக்குச் செல்லாமல் வந்தது பெரிய மனக்குறை. வரும் வருடங்களிலாவது கும்பகோணத்துக்கு மட்டுமென ஒரு பயணம் சென்று வர வேண்டும். 

சென்னையில்நுனிப்புல் உஷா, நம் வல்லிம்மா மற்றும் அவர்கள் வீட்டு செடிகொடிகளுடன் நடந்த பதிவர் சந்திப்பும், வித்யா சுப்ரமணியன் அவர்களுடன் நடந்த ஒன் டு ஒன் பதிவர் சந்திப்பும், ஃபேஸ்புக் தோழிகளான கீதா, செல்வி, மாலா, சுமதி, ஜெயந்தி, கலைச்செல்வி, ஆகியோரைச் சந்தித்து அடித்த கொட்டமும் பசுமையானவை. 

எழுத்திலும் வாசிப்பிலும் ஒரு சிறிய மைல்கல்லை எட்ட முடிந்தது சிறு மகிழ்ச்சி. வலைப்பூவை வாடவிடாமல் சராசரியாக மாதந்தோறும் ஒரு இடுகையாவது இட முடிந்ததும், முதன்முறையாக புத்தக விமர்சனம் எழுத ஆரம்பித்ததும் மகிழ்ச்சியே. தவிர, எங்கள் "பயோனியர் குமாரசுவாமி கல்லூரி"யின் பொன்விழா ஆண்டு மலரில் என் படைப்பு வெளியானது பெருமகிழ்ச்சியைத்தந்தது.

உடல் நலிவும், எங்கள் குடும்பத்திலேற்பட்ட ஒரு பேரிழப்பின் காரணமாக விளைந்த மனநலிவும் சற்றே சோர்வுறச்செய்ததால், வாசிப்பு மற்றும் ஒளிப்படமெடுப்பதில் மனதைத் திசை திருப்பி சற்றே மீண்டு வந்திருக்கிறேன். எது எப்படியானாலும், காமிராவைக் கீழே வைத்து விடாமல் ஃப்ளிக்கரில் தினமும் இரண்டு படங்களைப் பதிவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் அதுதான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்கிறது. டியெஸ்ஸெல்லார் வகை காமிராக்களுடன் போட்டி போடும் வகையில், நல்ல பிக்ஸல் எண்ணிக்கையுடன் மொபைல் அலைபேசிகள் வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், ஒளிப்படக்கலையின் விதிமுறைகட்குட்பட்டு மொபைலிலும் ஏராளமான படங்களை எடுக்க முயன்று ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.  "மொபைல் க்ளிக்ஸ்" என்ற குறிச்சொல்லுடன் அவற்றை ஃபேஸ்புக்கில் வலையேற்றி வருகிறேன். விரைவில் அவை வலைப்பூவிலும் காணக்கிடைக்கும்.

சோம்பி முடங்கியிராமல், முடிந்ததைச் செய்து உடலையும் மனதையும் இயக்கத்தில் வைத்திருப்பது இருத்தலின் பொருட்டென்றாலும், அதிலும் ஓர் மனநிறைவு ஏற்படும்படி இயங்குவதே அதன் வெற்றி. இல்லையெனில் நேரமும் உழைப்பும் வீணே.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.


Sunday, 24 December 2017

நாஞ்சில் நாட்டு சமையல் (இடிசக்கை துவரன்)

காயாகி.. கனிந்து.. என ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வரும் பலாவை பிஞ்சுப்பருவத்தில் மட்டும் விட்டு வைப்போமா என்ன? கேரளாவிலும் அதை அடியொற்றி நாஞ்சில் நாட்டிலும் பொடித்துவள், இடிசக்கை துவரன் என வெவ்வேறு பெயர்களில் சமைக்கப்படும் பலாப்பிஞ்சு துவரன் மிகவும் பிரசித்தி பெற்றது. நெல்லை மாவட்டத்திலும் ஒரு சில பகுதிகளில் இது சமைக்கப்படுகிறது. இதைச்செய்வதற்கு சுமார் ஏழு அங்குலம் அளவு விட்டமுள்ள பலாப்பிஞ்சே மிகவும் பொருத்தமானது. அதிகம் முற்றியதானால் விளைய ஆரம்பித்திருக்கும் பலாக்கொட்டைகள் வாயில் கடிபட்டு, இடிசக்கைத்துவரத்தின் ருசியைக் கெடுத்து விடும். 

அந்தக்காலத்திலெல்லாம், தோல் சீவிய பலாப்பிஞ்சை நிற்க வைத்து,  கத்தியால் கொத்திக்கொத்தியே துண்டுகளாக்குவார்களாம். இல்லையெனில் பெரிய துண்டுகளாக்கிக்கொண்டு உரலிலிட்டு இடித்துச் சதைப்பார்களாம். இதன் பொருட்டே இது இடிசக்கைத்துவரன் எனப்பெயர் கொண்டிருக்கக்கூடும் என்பது ஊகம். மிகவும் ருசியான இந்த துவரனைச் சமைக்க கையில் ஓரளவு வலு இருக்கும் தினமாக தேர்வு செய்து  கொண்டாலொழிய இதைச்சுவைக்கும் பாக்கியம் கிடைப்பதரிதாகவேயிருந்திருக்கக்கூடும்.

முதலில், பலாப்பிஞ்சை நிற்க வைத்து, கூர்மையான கத்தியில் சொதசொதவென எண்ணெய்யைத் தடவிக்கொண்டு  முள்முள்ளாக சொரசொரவென்றிருக்கும் பலாப்பிஞ்சின் தோலைச் சீவிக்கொள்ள வேண்டும். பின், நான்காக வகுந்து, நடுவிலிருக்கும் கெட்டியான பகுதியை வெட்டி அகற்றி விட வேண்டும். எண்ணெய்யைத் தடவிக்கொள்வதால் பலாப்பிசின் கைகளிலோ கத்தியிலோ ஒட்டாதென அறிக. பின், பலாப்பிஞ்சை ஓரங்குல அளவில் துண்டுகளாக வெட்டிக்கொண்டு, மிக்ஸியில் நாலைந்தாகப் போட்டு, துருவிய தேங்காய் அளவிலான பக்குவத்தில் துருவிக்கொள்ளவும். அதற்கேற்ற ப்ளேடையே மிக்ஸியிலும் பொருத்திக்கொள்ள வேண்டும். நேரத்தை மிச்சப்படுத்த எண்ணி, துண்டுகளை அதிகமாக அள்ளிப்போட்டு அரைத்தால், மிக்ஸி ஓவர்லோட் ஆகி மண்டையைப் போட்டு விடும்.. கவனம்.

இத்தனை சிரமப்படாமல் தோல் சீவி, துருவ இன்னொரு உபாயத்தையும் கையாளலாம். அதாவது, பலாப்பிஞ்சை காம்பு நீக்கி, வட்ட வட்டமாக வெட்டிக்கொண்டு, ஆவியில் வேக வைத்தால் தோலை எளிதாக நீக்கி விடலாம். அதன் பின் துண்டு போட்டு, மிக்ஸியில் துருவிக்கொண்டால் பிசின் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியும். துருவுவதும் எளிது. இந்த டிப்ஸைக்கொடுத்த நானானிம்மாவுக்கு நன்றிகள்.
துவரனுக்கான மசாலாவையும் எளிதாகத் தயாரித்துக்கொள்ளலாம். ஒரு கை நிறைய அள்ளிக்கொண்ட தேங்காய்த்துருவலுடன்அரை ஸ்பூன் சீரகம், நாலைந்து நல்லமிளகு, ஒரு பல் பூண்டு, மஞ்சட்பொடி, காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நல்லமிளகு சேர்ப்பதால் வாயுத்தொந்தரவு தவிர்க்கப்படும். மேலும் பச்சை மிளகாய் வேண்டாமென்று நினைத்தால் மிளகாய்ப்பொடி சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், சாஸ்திரோக்கமாகச் செய்ய நினைப்பவர்கள் பச்சைமிளகாயையே நாடுவர்.

ஒரு வாணலியில் சிறிது தேங்காயெண்ணெய்யைச் சூடாக்கி, கடுகும் உளுத்தம்பருப்பும் போட்டு வெடித்தவுடன், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பொரிந்ததும், துருவிய பலாப்பிஞ்சை அதிலிட்டு, லேசாகத்தண்ணீர் தெளித்து ருசிக்கேற்ப உப்பு சேர்த்துக்கிளறி மூடியிட்டு முக்கால் பதம் வரை வேக விடவும். இடையிடையே சற்றுக்கிளறி விட்டால் அடிப்பிடித்து கருகுவது தவிர்க்கப்படும். பிஞ்சுத்துருவல் வெந்ததும், துவரன் மசாலாவை அதில் சேர்த்து, கரண்டிக்காம்பால் லேசாகக் கிளறி மறுபடியும் மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக விடவும். மசாலாவும் பலாப்பிஞ்சுத்துருவலும் செம்புலப்பெயல் நீர் போல் இரண்டறக்கலந்து மணம் வந்ததும், அரை ஸ்பூன் தேங்காயெண்ணெய்யைச் சேர்த்து, ஒரு நிமிடம் கிளறி நீர்ப்பதம் வற்றி வந்ததும் இறக்கி விடலாம்.

இதுவே, வேக வைத்தபின் தோல் நீக்கித்துருவப்பட்டதானால் தாளிதத்துடன் துவரன் மசாலாவைச் சேர்த்து உப்பிட்டு, மூடியிட்டு வேக வைக்கவும். மூன்று நிமிடங்களில் மசாலா வெந்து விடும். அதன் பின் பலாப்பிஞ்சுத் துருவலையிட்டு லேசாகக் கிளறி மூடியிட்டு இரண்டு நிமிடம் வேக விடவும். பின்னர் மூடியைத்திறந்து நீர்ப்பதம் வற்றி பொடித்துவள் பக்குவமானதும் இறக்கி விடலாம்.

ரசம், தயிர், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு என்று சாதங்களுடன் மட்டுமலாது, ஒரு கிண்ணத்திலிட்டு சும்மாவே ஒரு பிடி பிடிக்கலாம்.

Sunday, 3 December 2017

ஃபேஸ்புக்கில் பேசியவை - 10

ஜன்னலோர இருக்கையிலமர்ந்து, இரவில் முழுமையடையாத தூக்கத்தைத் தொடரும் அவளுக்கோ அருகமர்ந்திருந்த மற்றவர்களுக்கோ, அவளது நிறுத்தத்தை ரயில் கடந்து செல்வது தெரிந்திருக்க நியாயமில்லைதான்.

மடியிலிருத்திய குழந்தையை
முந்தானையால் மூடிக்காப்பதையொத்ததே
கொத்தாய்க் காய்த்தவற்றை
இலைகளால் கவிந்து காக்கும் மாமரத்தின்
தாய்மையும்.

தன் மனப்போக்கில்
எல்லாம் செய்து முடித்தவன்
இறுதிவிளைவுகளுக்கு மட்டும்
விதியைத் துணைக்கழைக்கிறான்
நினைக்க வைத்ததுவும்
நடத்தி வைத்ததுவும் விதியேயென்றால்
முடித்து வைத்ததுவும்
அதுவேயாய் இருக்கட்டும்.

சிலர் இறந்தபின்தான் அத்தனை நாள் அவர்கள் இருந்ததையே நினைவுகூர்கிறோம்.

செம்பாய் இருக்கும் இலைகளை மரகதமாக்கும் இயற்கையை விடப்பெரிய இரசவாதி யாருமில்லை.

விலகிச்செல்வது போல் போக்குக் காட்டி விட்டு சரேலென்று திரும்பி தாக்க வரும் யானையைப்போன்றதே, நீளுறக்கத்திலிருந்து மறுபடியும் விழித்தெழும் பிரச்சினைகள்.

கிளம்புவதும் சென்றடைவதுமாக, இன்னும் நிலை சேராமல் பயணப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன சாலைகள்.

பூசைகள் முடங்கிய வனக்கோவிலாயினும் ஆண்டிற்கு ஒருமுறையேனும் சிறப்பு கிடைத்து விடுகிறது தேவியாய் அமர்ந்த தெய்வத்திற்கு.

விழுந்து விழுந்து படித்த பதிலை மாங்கு மாங்கென்று விடைத்தாளில் எழுதிக்கொண்டிருந்தபோது கணகணவென்று அடித்த கடைசி மணியால் பாதியிலேயே விட்டு வந்ததையெண்ணி மூசுமூசென விசும்பிக் கொண்டிருந்த போது கிணுகிணுவென அடித்தது மொபைல் அலாரம்.

எதையாவது ஏற்றுக்கொள்ளவோ தள்ளிப்போடவோ இயலாவிடில், சமயோசிதமாக சமாளித்து விடல் நன்று. இம்மூன்றில் பிற இரண்டு அம்சங்களுக்கும் கூட இந்த விதி சாலப்பொருந்துவது ஒரு முக்கோணக்காதல் கதையை ஒத்திருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails