Tuesday 17 March 2015

சாரல் துளிகள்

வெயிலில் உருகிய மேகத்துளிகளைச் சுவைத்துக்கொண்டிருக்கிறது மும்பை பூமி..

எத்தனை நெரிசலான போக்குவரத்திலும் வாகனங்களின் வகைகளைக் கண்டுணரும் ஆணின் திறமையையும், பார்த்த மாத்திரத்திலேயே சேலையின் வகைகளைக் கண்டுபிடித்துவிடும் பெண்ணின் திறமையையும் படைத்த இறைவனின் திறமையை நான் வியக்கேன்..

அமாவாசை வானின் நட்சத்திரங்களுக்கு நிலாக்குட்டிகள் என்று பெயரிட்டது குழந்தை. புதுப்பெயருக்காக வரிசை கட்டி நின்றன பால்வீதியில் அலைந்த அனைத்தும்..

பண்டிகை நாட்களில் பெண்கள் மட்டுமல்ல கடவுளரும் ஓவர்டைம் பார்க்க நேரிடுகிறது..

தூங்கும்போது குழந்தைகள் அழகுதான், அதே சமயம் ' அப்பாடா.. ' என்றொரு நிம்மதியை உணர்வதையும் தடுக்க முடிவதில்லை :-))

தூக்கத்தினுள் நழுவிய இரவுக்காவலாளிக்கு, தூக்கம் தொலைத்த காகம் நினைவுறுத்தியது. 
கா.. கா.. கா.

குழந்தைகளின் பள்ளி ஆண்டுவிழாவின் போது நடன நிகழ்ச்சிகளுக்காக குழந்தைகளை ஒருங்கிணைப்பவருக்கும், சர்க்கஸின் ரிங் மாஸ்டருக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டு பேருக்குமே நாக்கு தள்ளி விடுகிறது.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் ஒருவரோடொருவர் நின்று பேசிக்கொள்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக மின்தூக்கி பழுது பட்டிருக்கும் நாளாகத்தான் இருக்கும்.

(காதில் விழுந்தது)
முதலாமவர்(முறைப்பாக): எங்கிட்ட வெச்சுக்காதே.. நான் எத்தன ஊரு தண்ணி குடிச்சவன்னு உனக்குத்தெரியாது..
இரண்டாமவர்(அமைதியாக): ஏண்ணே!.. தண்ணி குடிக்கதுக்குன்னே ஊரூரா போனீங்களா?
முதலாமவர் கப்சிப்.

சோதனைக்காக ரத்தத்தின் மாதிரியை எடுத்த வல்லுநரை விட்டு, அழைத்து வந்த தந்தையைக் குரோதத்துடன் முறைக்கிறது குழந்தை..

Wednesday 11 March 2015

தினகரன் கேலரியில் எனது ஒளிப்படங்கள்..

இரண்டு வருடங்களுக்கு முன் குங்குமம் தோழியிலும் தினகரன் நாளிதழிலும் எனது பேட்டி வெளியானதும் அதைத்தொடர்ந்து உங்களுக்கெல்லாம் அல்வா கொடுத்து நான் கொண்டாடி மகிழ்ந்ததுமான அந்த சரித்திர முக்கியத்துவம் மிக்க சம்பவங்களை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)) தொடர்ந்து தினகரன் நாளிதழின் மின்பதிப்பிலும் பேட்டி வெளியானதும் ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியர்கள் மெர்வின் மற்றும் சுந்தரராஜன் அறிவித்து சந்தோஷக்கடலில் ஆழ்த்தினர். 

குங்குமம் தோழியில் வெளியான படங்கள் தவிர நான் எடுத்த ஒளிப்படங்களிலிருந்து மேலும் பல படங்களையும் தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வண்ணப்படங்களின் அணிவகுப்பாக "கேலரி" பகுதியில் வெளியிட்டுச்சிறப்பித்துள்ளது. மிக்க நன்றி தினகரன்.

வெளியான படங்கள்:














 






படங்களை தினகரன் கேலரியிலும் கண்டு களிக்க இங்கே சொடுக்குங்கள்..

தினகரன் நாளிதழின் மின்பதிப்பில் வந்த பேட்டி..

குங்குமம் தோழியில் படங்களுடன் வெளியான அதே பேட்டி..

Sunday 8 March 2015

குங்குமமும் பிடித்த கவிதையும் பின்னே சாரலும்..

"போற்றவும் வேண்டா 
தூற்றவும் வேண்டா
சரிசமமாய் நடத்தப்படுவதெப்போ?''
முனைவர் அண்ணா கண்ணனின் "உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையின் சில வரிகள் குங்குமம் இதழ் சென்ற வருடம் மகளிர்தின சிறப்பாக வெளியிட்ட 'பிடித்த பெண் மொழிக்கவிதை' பகுதியில் வெளியாகியிருந்தது.. அண்ணா கண்ணனின் அத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையை அவரது தளத்திலேயே வாசிக்கலாம்.
குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு முன் அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் தன்னுள்ளேயே எழுப்பப்பட்ட கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார். ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும் அப்படித்தான். இதற்கு மட்டும் ஜாதி, இன, மத, நாடு வேறுபாடுகளே கிடையாது. ஏதாவதொரு அளவில் எல்லா நாடுகளிலும் ஏதாவதொரு வகையில் அவள் வன்முறைக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறாள். ஆகவேதான் துணிந்து எதிர்க்குரலெழுப்பும் பெண்களையும், 'இதென்ன ஊர்ல நடக்காததா? வீட்டுக்கு வீடு வாசப்படி. பொம்பளைன்னா பொறுத்துத்தான் போகணும்" என்று சுலபமாக அடக்கி விடுகிறார்கள். உட்செலுத்தப்படும் காற்றின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டேபோகும்போது சட்டென்று வெடித்துவிடும் பலூனைப்போல் ஒரு கட்டத்தில்  அவள் வெடித்தெழும்போது இவளால் என்ன செய்து விட முடியும் என்று அலட்சியமாக அதுகாறும் ஆதிக்கத்துக்குட்படுத்தி வந்த கூட்டம் திகைத்துத்தான் போய் விடுகிறது.

முற்காலம் போல் தற்சமயம் எல்லாப்பெண்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அடுத்தவர்களின் கருத்துகளுக்குத் தலையாட்டுவதில்லை. அன்பினால் சிலர் கட்டுண்டிருந்தனர் என்றால் தங்களது சுயநலத்திற்காக அவர்களைச் சிந்திக்கத்தெரியாதவர்களாய்,  எல்லாவற்றிற்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி ஆக்கியிருந்தவர்களிடம் சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். இதனால் தங்கள் வாழ்க்கை, பொருள், நிம்மதி என்று தொலைத்தவர்களும் அதிகமே. இப்பொழுதோ பெண்கள் நல்லது கெட்டதை சுயமாகச்சிந்திக்கிறார்கள், திருமணம் போன்ற தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னை விட பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் நிலை எந்தளவு மேம்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு முறை அலசும்போதும், பெண்சிசுவை வெறுத்தல், வரதட்சணைக்கொடுமை, பொருந்தாத்திருமணங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற அம்சங்களில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற நிலையே தெரிகிறது. வரதட்சணை கேட்கும் தாயை மகன் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு பக்கம் என்றால் அப்படித்தடுக்கும் மகனை தாயே கடுஞ்சொற்கள் கூறியும், பயமுறுத்தியும் பணிய வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. பெண் பிறந்தால், 'என் பிள்ளை பாரம் சுமக்க வேண்டி வருகிறதே' என்று புலம்பும் மாமியார்கள் அதே பிள்ளைக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி அலைந்த சரித்திரத்தையெல்லாம் வெகு வசதியாக மறந்தே விடுவார்கள். இதில் பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்.. மனச்சித்திரவதை செய்தே அவளைச் சாகடித்து விடுவார்கள். சமீபத்தில் கூட குமரி மாவட்டத்தில் தன்னை கருப்பாக இருப்பதாக அடிக்கடி இடித்துக்கூறி வந்த கணவனின் கொடுமை தாங்க மாட்டாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடந்த பெண்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அப்பெருங்கல்லைப் புரட்டிக்கொடுக்கும் நெம்புகோலாக இருந்த பெண்கள் எத்தனையோ பேர். குடும்பம், வேலை என்று இரட்டைச்சுமையுடன் சிரமப்பட்டபோதிலும், பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கும் காலகட்டத்தில் வாழ நேர்ந்த போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து சிகரங்கள் தொடுகிறார்கள் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அப்படியென்றால் காலம் மாறவேயில்லையா?.. நிச்சயமாக மாறுகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக... பெண்களுக்கு திருமணப்பத்திரிகையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளவோ, அல்லது வேலைக்குப்போய் சம்பாதிக்கவெனவோ வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் அளிக்காமல் தற்காப்புக்கலை, தன்னம்பிக்கை, தனக்கு நேரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், அவற்றை நல்ல முறையில் தீர்க்கும் அறிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் படித்த பெண்களை விட படிக்காதவர்களே தைரியமாக தங்களுக்கு நேரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.
வால்: பிடித்த பெண்மொழிக்கவிதையையும், சாரல் துளியையும் வெளியிட்ட குங்குமம் இதழுக்கு நன்றி.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

Wednesday 4 March 2015

மலைத்தேனும் மாத்தேரனும்..


சுற்றுலாவோ அல்லது சாதாரணப் பயணமோ.. நாம் சென்று வரும் ஒவ்வொரு ஊரும் தனது நினைவுத்தடங்களை நமது மனதில் பதித்து விடுகின்றன. பழைய நினைவுகளை அசைபோடும் தருணங்களில் பனியின் பின்னிருந்து மெல்ல மெல்ல புலப்படத்தொடங்கும் உருவங்களாய் ஒவ்வொரு ஊரின் நிகழ்வுகளும் மெல்ல மெல்ல ஒன்றைத்தொட்டு ஒன்றென மேலெழும்பி வருகின்றன. சுருக்கமாய்ச் சொன்னால் வாழ்நாள் முழுவதும் அந்த ஊர்களை மனதில் சுமந்து கொண்டுதான் நாம் திரிகிறோம். நிகழ்வுகளைப்பொறுத்தோ அல்லது ஏதாவதொரு காரணத்தாலோ சில ஊர்களின் மேல் நம்மையறியாமல் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டு மறக்க முடியாததாக்கி விடுகிறது. 

அவ்வப்போது சொந்தங்களின் ஊர்களுக்கும் ஒரு நாள் விசிட்டாக ஒரு சில ஊர்களுக்கும் போய் வந்திருந்தாலும், பக்காவாகத் திட்டம் போட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு எங்குமே அதுவரையிலும் பிக்னிக் சென்றதில்லை. இந்தக்குறையை நிவர்த்தி செய்ய பக்கத்திலிருக்கும் மலைப்பிரதேசங்களான ‘மாத்தேரன்’ போகலாமா? அல்லது ‘மஹாபலேஷ்வர்’ போகலாமா என்று ஹாலில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தோம். மாத்தேரனுக்கு அதிகபட்ச ஓட்டுகள் விழுந்ததால் அந்த வாரத்தின் சனி,ஞாயிறை மாத்தேரனுக்கு நேர்ந்து விட்டோம். 

கிளம்புவது என்று முடிவானதும், ரிஸார்ட்கள், ஹோட்டல்கள் எதிலும் தங்கவேண்டாம், அங்கிருக்கும் பேயிங் கெஸ்ட் வசதி கொண்ட வீடுகளில்தான் தங்குவது என்ற முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டது. அது எவ்வளவு சரியானது என்பதை அங்கே போனதும் உணர்ந்தோம். அழகான அந்தக் கிராமத்துச் சூழல் அட!!.. அட!! அட.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நகரத்துச் சூழலையே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு அந்த மலைக்கிராமம் எத்தனையோ குளுமையாக இருந்தது 

 மாத்தேரனுக்குள் வாகனங்கள் எதையுமே அனுமதிப்பதில்லை. நம் ஊட்டி ரயிலைப்போன்று ஒரு பொம்மை ரயில் மட்டுமே நேரல் ஸ்டேஷனிலிருந்து மாத்தேரனுக்குத் தைரியமாகச் சென்று வருகிறது. மற்றபடி புகையில்லாக் கிராமம்தான் மாத்தேரன். சுற்றுலா வரும் பயணிகளுக்கு இடங்களைச் சுற்றிக்காண்பிப்பதற்காக நிறையக் குதிரைகளையும், மட்டக்குதிரைகளையும் கூட்டிக்கொண்டு வீரர்கள் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். போக வேண்டிய இடங்களைச் சொல்லி பேரம் படிந்தால் குதிரைகளில் பயணிக்கலாம். இல்லையெனில் மூட்டு பலமுள்ளவர்களுக்காக இருக்கவே இருக்கிறது 11-ம் நம்பர் பஸ்.. அது வேறொன்றுமில்லை, நம் கால்கள்தான் :-)

 விடியற்காலையில் போய் இறங்கியதும் ஒரு வீட்டைப் பிடித்து, மூட்டை முடிச்சுகளை அங்கே போட்டோம். அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை மட்டுமே மொத்த ரூமும். வீட்டின் ஒரு பகுதியை இப்படி மாற்றியமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். போய் வர நமக்குத் தனி வழி. வீட்டுக்காரர்கள் ஒரு பக்கத்தில் வசிப்பார்கள். வேண்டியதைச்சொன்னால் சமைத்தும் கொடுப்பார்கள் என்பது முக்கியமான ஒன்று. காந்தாபோஹா,.. பாக்ரியுடன் கூடிய மஹாராஷ்ட்ரியன் தாலி என்று சிம்பிளான அதேசமயம் ருசியுடன் கூடிய சுத்தமான வீட்டுச்சாப்பாடு கிடைத்ததால் வயிறும் பாதிக்கப்படவில்லை. 

இயற்கை சிலம்பாட்டமாடும் மாத்தேரனில் ஒவ்வொரு இடமும் பார்க்க வேண்டியவைதான் என்றாலும் முக்கியமான ஒரு சில இடங்கள் மட்டும் பாயிண்ட்ஸ் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சில பாயிண்டுகளில் பைனாகுலர் வைத்து மலையும் அடுத்துள்ள சமவெளியும் சுற்றுலாப்பயணிகளுக்குக் காண்பிக்கப்படுகின்றன. இந்த மலையிலிருந்து லோனவ்லாவை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியுமாம். அவசியம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலமென்று அங்கிருந்த கைடு எங்களுக்குக் காட்டியது ‘மனிஷா கொய்ராலாவின் பண்ணை வீடு’.

படம் - இணையத்திலிருந்து
மாத்தேரனில்  மொத்தம் 28 பாயிண்டுகள் எனப்படும் பார்வையிடங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகத்தூரத்தில் அமைந்திருக்கும் one tree point எனப்படும் இடத்திற்கு குதிரையில் மட்டுமே செல்ல இயலும்.  ஒவ்வொரு பாயிண்டிலும் பாயிண்டுகளின் மேப்பும் செல்லும் வழியும் பேனராக வைத்திருக்கிறார்கள். ஆகவே அவ்வளவு பெரிய காட்டில் வழி தவறும் வாய்ப்பில்லை. ஒரு சில உள்ளடங்கிய பகுதிகளில் பழங்குடியினரும் வசிக்கிறார்கள். அவர்களது முக்கியத்தொழிலே தேனெடுப்பதுதான். மலைகளின் செங்குத்தான பகுதிகளில் தேனடைகள் இருக்கும் பகுதிகளில் நூலேணிகள் மூலமாகப் போய் தேனெடுத்து வருவார்களாம். ஒரு சில நூலேணிகள் அபாயகரமான கோணங்களில் தொங்கிக்கொண்டிருப்பதை பைனாகுலர் மூலம் பார்த்த போது நடுக்கமாக இருந்தது. மலைத்தேனுக்கு இருக்கும் கிராக்கிதான் இவர்களை இப்படிக் கஷ்டப்படச்செய்கிறது என்பதை அறிந்து மலைத்தேன். 

மாத்தேரன் மொத்தத்தையும் சுற்றிப்பார்த்து இயற்கைச்சூழலில் திளைத்து வர குறைந்தது 3 அல்லது 4 நாட்களாவது தேவை. நாங்கள்  சென்ற முதல் நாளில் கால்களில் வலுவிருந்ததால் நடந்தே நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மறுநாள் ‘இதுக்கு மேல முடியாது சாமி’ என்று கால்கள் எங்களைக் கெஞ்சியதால் குதிரைகளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. கால்வலி போதாதென்று குதிரைப்பயணம் கொடுத்த இடுப்புவலியும் சேர்ந்து கொண்டது தனிக்கதை.

லோனாவ்லாவைப்போலவே இங்கேயும் கடலை, பாதாம், ராஜ்கீரா, இவற்றைத்தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ செய்யப்படும் 'சிக்கி' எனப்படும் இனிப்புப்பண்டம் மிகப்பிரபலம். சுற்றுலாப்பிரதேசங்களில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவது இயல்பு. அந்த வகையில் இங்கே கடைகளில் தேன், சிக்கி, மற்றும் பருவ காலங்களில் ஸ்ட்ராபெர்ரியும் கிடைக்கின்றன.

இதற்குப்பின் கொடைக்கானல், ஊட்டி என்று எத்தனையோ பிரயாணங்கள் சென்று வந்து விட்டாலும் மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)

வால்: தேனக்காவின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அளித்த பேட்டியை இன்னும் சற்றுக்கூடுதல் விவரங்களுடன் இங்கே கல்வெட்டிலும் செதுக்கி வைக்கிறேன். நன்றி தேனக்கா.

LinkWithin

Related Posts with Thumbnails