Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Monday, 22 April 2024

அன்பின் ஆதியூற்று.


“காதல்” ஒரு அற்புதமான உணர்வு. எப்போது வரும்? எப்படி வரும்? யாருடன் வரும்? என்று சொல்லமுடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும். சிலரைப் பார்த்ததுமே பிடித்துப்போய் வரலாம், சிலரைப் பார்க்கப்பார்க்கப் பிடித்துப்போய் வரலாம், சிலரிடம் நட்பு கனிந்து ஏதோவொரு நொடியில் அது காதலாக மாறலாம். நதிமூலம் ரிஷிமூலம் போலவே காதல்மூலமும் புதிர்தான். இதெல்லாம் உண்மைக்காதலுக்கு மட்டுமே. பலாபலன்கள் ஆராய்ந்து லாபநோக்கில் சிந்தித்துக் கணக்கிட்டு உருவாக்கப்படுவதும், வற்புறுத்தி, மிரட்டி, வலுக்கட்டாயமாக ஏற்படுத்தப்படுவதும் காதலேயல்ல. 

“செம்புலப் பெயல் நீர் போல் அன்புடைநெஞ்சம் தான்கலந்து உருவான காதல் ஒருவரை என்னவெல்லாம் செய்ய வைக்கும்? 

‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ என்பார் பாரதிதாசனார். 

பாரதியாரோ, 
‘“காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்’ என்கிறார்.

ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!!  தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது. அதனால்தான், 

“காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்தல் வேண்டும்” என பாரதியும் விரும்புகிறார். கண்ணனைக் காதலனாக எண்ணி

“உணவு செல்லவில்லை – சகியே
உறக்கங் கொள்ளவில்லை
மணம் விரும்பவில்லை – சகியே
மலர் பிடிக்க வில்லை
குணமுறுதியில்லை எதிலும்
குழப்பம் வந்ததடீ
கணமு முள்ளத்திலே – சுகமே
காணக் கிடைத்ததில்லை
பாலுங் கசந்ததடீ – சகியே
படுக்கை நொந்ததடீ” என உருகவும் செய்கிறார். 

உயிரினங்கள் தோன்றிய காலம் முதல் இன்றுவரை, புழு,பூச்சி முதல் ஐந்தறிவுள்ள விலங்குகள் ஈறாக உலகில் அத்தனை உயிர்களும் காதலில் திளைக்கும்போது மனிதர் மட்டும் சளைத்தவரா என்ன? சங்க காலத்திலேயே தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் இழைந்திருந்ததற்குச் சான்றாக ஏராளமான பாடல்கள் உள்ளன. தமிழிலக்கியங்களில் காதலைக் கொண்டாடியவை “அகத்திணை” எனப்பட்டன. அகத்திணைப்பாடல்களில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான உவமைகள் சங்ககால மக்களின் காதல்வாழ்வை நமக்குப் படம் பிடித்துக்காட்டுகின்றன.

இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே! என்கிறது குறுந்தொகை. மிகக் குறைவாகவே நீர் இருக்கும் ஒரு சுனையில், இணைமான்களில் ஒன்றின் தாகம் தீர்க்க வேண்டி, இன்னொரு மான், தான் அருந்துவது போல் நடிக்கும். தத்தம் காதலை அந்த இருமான்களும் வெளிப்படுத்திய விதத்தை ஐந்திணை ஐம்பது நமக்குச் சொல்கிறது.

எப்பொழுதுமே ஆண்தான் முதலில் காதலைச்சொல்ல வேண்டும் என்ற ஒரு பொது எதிர்பார்ப்பு இருந்து வந்திருக்கிறது. முதலில் காதலைத் தெரியப்படுத்தும் பெண்ணை இச்சமூகம் பார்க்கும் பார்வையே வேறு. ஆனால், சங்க காலத்தில் பெண்கள் தம் காதலை ஒளிவுமறைவின்றி சுதந்திரமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயாகியரென் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர்பவளே” என்கிறாள் ஒருத்தி.
“சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவேன்
பிறப்புப் பிறிது ஆகுவதாயின்
மறக்குவேன் கொல் என் காதலன் எனவே“ என்கிறாள் இன்னொருத்தி.

இப்படி பழந்தமிழர் காலத்திலிருந்தே காதலைப்போற்றி வந்த நாம் சினிமாவிலும், கதைகளிலும், ஏன்.. பிற வீடுகளிலும் நடக்கும்போது அதற்கு ஆதரவளிக்கிறோம். அதுவே தன் வீடுகளில் நடக்கும்போது நத்தையாய்ச் சுருக்கிக்கொள்கிறோம். இதைத்தான் பாரதியார்,

“நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே” என்கிறார்.

சமீபகாலங்களில் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குப் பெரும் எதிர்ப்பு வளர்ந்து வரும் சூழலில், பொது இடங்களில் இளஞ்ஜோடிகள் ராக்கி அல்லது மஞ்சள் கயிற்றைக் கட்ட நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய மறுப்பவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி வளர்ந்த, கைத்தலம் பற்றிக் கடிமணம் கொள்ளும் நாள்வரையில் அவர்கள் நெஞ்சில் பரிசுத்தமான அன்பைப் பெய்து வளர்க்கும் காதல்பயிர், ராக்கி, மஞ்சள் கயிறு போன்றவற்றை வலுக்கட்டாயமாகக் கட்ட நிர்ப்பந்திக்கும் சில கலாச்சாரக் காவலர்களால் சிதைக்கப்படுவது வேதனை. வறட்டுப்பிடிவாதம், போலி கௌரவம், சுயநலம் போன்ற நோய்களால் பீடிக்கப்பட்ட பெற்றோர் வன்முறையைக் கையாளவும் துணிகின்றனர்.

வெறும் இனக்கவர்ச்சியைக் காதல் என தப்பர்த்தம் செய்து கொள்ளும் சிலராலும், படிக்க வேண்டிய வயதில் தவறான நபர்களிடம் காதலில் விழும் சிலராலும், உண்மையான நேசம் கொண்டவர்களும் அவ்வாறே தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அதனாலேயே, இத்தகு இன்னல்களுக்கும், சமூக விரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள். களவு, திணைக்கலப்பு, ஏறு தழுவுதல், மடலேறுதல் போன்ற தன் விருப்ப மணவகைகளை ஆதரித்த நம் சமூகம் இப்போது காதலுக்கு எதிராக, தான் பெற்ற குழந்தைகளையே ஆணவக்கொலை செய்யும் அளவுக்கு மாறிவிட்டது. அண்ணலும் அவளும் நோக்கிக்கொண்டதை அப்பனும் அண்ணனும் நோக்கியதுமே காதலர்கள் மென்மையாகவும் வன்மையாகவும் எச்சரிக்கப்பட்டு விடுகிறார்கள். அப்படியும் புரிந்து கொள்ளாதவர்கள் உடலுறுப்புகளையோ உயிரையோ இழக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

சங்க காலத்தில் களவு மணம் மதிக்கப்பட்டது, ஏனெனில், அதுவே கற்பு வாழ்க்கைக்கும் அடிப்படையாய் அமைந்தது. காதலர் மணம் புரிந்து இனிதாய் இணை பிரியாமல் இல்லறம் நடத்தினர். தற்காலத்தில், களவுக்காதலர் கொண்டு சென்ற செல்வமும் இருவருக்குமிடையே இருக்கும் ஈர்ப்பும் தீர்ந்ததும் பிணக்கும் பிரிதலும் நடைபெறுகிறது. அல்லது நரகை விடக் கொடிய ஒரு வாழ்வை வாழ நேரிடுகிறது. பெற்றோர் அஞ்சுவது அதையே. என் நட்பு வட்டத்திலேயே அப்படி இருவரைப் பார்த்திருக்கிறேன்.

என்னுடன் பயின்ற ஒரு பெண் காதல் வசப்பட்டு, அங்கும்இங்குமாக ரகசியமாகச் சந்தித்துப்பேசி காதல் வளர்த்து கடைசியில் ஒரு விடிகாலையில் அவனுடன் உடன்போனாள். காதலர்களாக இருந்தவர்கள் கணவன்மனைவியாகி அதன்பின் இரு குழந்தைகளுக்குப் பெற்றோரும் ஆனார்கள். அதன்பின்தான் பொருளாதாரப்பிரச்சினைகள் தலையெடுக்க ஆரம்பித்தன. “உன்னை நம்பி வந்து இப்படி சீரளியுதேனே” என அவள் மூக்கைச்சிந்த, “ஏகப்பட்ட வரதச்சணையோட எப்பேர்ப்பட்ட பொண்ணெல்லாம் எனக்கு வந்துது தெரியுமா? இங்க ஒரு சைக்கிளுக்கே வழியில்லை” என அவன் புலம்ப, இனி இவனை நம்பிப்பலனில்லை என அவள் ‘உன் குழந்தைகளை நீயே பார்த்துக்கொள்’ என விட்டுவிட்டு இன்னொரு புளியங்கொம்பைத்தேடிக்கொண்டாள். அவன் தன் பெற்றோரிடம் திரும்பினான். ஆண்குழந்தைகள் என்பதால் அவனது பெற்றோர் பெரும்பஞ்சாயத்துக்குப்பின் அவர்களை வளர்க்க ஒப்புக்கொண்டார்கள். “என்னமும் ஒரு பாவப்பெட்ட பொண்ணைப்பார்த்துக் கெட்டி வைக்கணும்” என அவனது பெற்றோர் அடுத்த முயற்சியில் இறங்கினர். 

இன்னொருத்தி, அண்ணன் வீட்டுக்குச் சென்ற இடத்தில் பக்கத்து வீட்டுப்பையனுடன் மையலாகி, வீட்டுக்குத்தெரியாமல் திருமணம் செய்து கொண்டாள். சில மாதங்களிலேயே அவள் மேல் இருந்த மோகம் வடிந்ததும் அவன் பறந்து விட்டான். இவள் அண்ணன் வீட்டுக்கும் செல்ல முடியாமல், கிராமத்திலிருக்கும் பெற்றோரிடமும் திரும்ப இயலாமல் தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு சமயம், அவளது பிறந்த வீட்டு உறவினரொருவர் அவளைக்கண்டபோது அடையாளம் காண இயலாத அளவுக்கு உருக்குலைந்திருந்தாள். இவள் அவரது கைகளைப்பற்றிக்கொண்டு, ‘ஏதாவது ஒரு சின்ன வேலையாவது வாங்கித்தாங்க மாமா, என் பாட்டை நான் பார்த்துக்கொள்வேன், யாருக்கும் பாரமாக வர மாட்டேன்” எனக் கதறியதைக் கேள்விப்பட்டபோது, எப்படியிருந்த பெண் இப்படியாகி விட்டாள்!! உலகம் தெரிந்திருந்தும் எப்படி விட்டில் பூச்சியாக விழுந்தாள்! என பரிதாபமே மேலிட்டது.

எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. என் உறவினர் வட்டத்திலும் நட்பு வட்டத்திலும் பெரும்பான்மையானவர், காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் புரிந்து, இன்று சீரும் சிறப்புமாக, பேரன் பேத்தியெடுத்து அன்று போல் இன்றும் அதே காதலுடன் ஒருவருக்கொருவர் காரியம் யாவிலும் கைகொடுத்து வாழ்வாங்கு வாழ்வதையும் காண்கிறேன். முதலில் காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோரே பின்னாட்களில், “நாங்களே பார்த்திருந்தால் கூட இப்படியொரு நல்ல மாப்பிள்ளை/பெண் கிடைத்திருக்காது” என பெருமிதமடைகின்றனர்.

ஆக, இதில் எங்கோ தவறு நேர்கிறது. காதல் தவறில்லை, காதல் வசப்பட்டவர்கள் அதைக் கையாளும் விதத்தால்தான் அதைப்பற்றிய நமது கண்ணோட்டம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதிலும் முக்கியமாக பெண்ணைப்பெற்றவர்கள் ‘நம் குழந்தையின் வாழ்வு கெட்டுப்போய்விடக்கூடாதே’ என வயிற்றில் நெருப்பைக்கட்டிக்கொண்டாற்போல் இருக்க நேரிடுகிறது. கருத்தொருமித்த, உண்மையான காதல் கொண்டவர்கள் அதைச் சரியான முறையில் வீட்டாரிடம் வெளிப்படுத்தவும் வேண்டும். சொல்லாத காதல் வெல்லாது என்பார்கள்.

காதல் என்பது அன்பின் ஆதியூற்று. ஆணும் பெண்ணும் இணைந்து கட்டியெழுப்பும் சமூகத்தின் அடிக்கல். ஒருவரைப் பலவீனமாக்குவதல்ல.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு என்பதைப் புரிந்து கொள்வதே. 

“ஆதலினால் காதல் செய்வீர்”





Friday, 7 July 2017

சின்னஞ்சிறு மனிதர்கள்.

எத்தனை வயதானாலும் சரி, மனிதன் எப்போதும் தன் நினைவுக்கிடங்கில் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வருவது அவனது குழந்தைப்பருவ நினைவுகளாய்த்தானிருக்கும். வளர்ந்தபின் தூக்கம் தொலைத்த இரவுகளில் கள்ளங்கபடமற்ற, சுமைகளற்ற அந்தப் பருவத்தை நினைத்துப் பார்ப்பதும், இயல்பே. "குழந்தையாவே இருந்துருந்தா எவ்ளோ நல்லாருந்துருக்கும்" என்ற பெருமூச்சினூடே நம்முடைய ஏக்கங்களையும் வெளியிட்டுக்கொள்கிறோம்.

உண்மையில் குழந்தைகளிடமும் அந்தந்த வயதுக்குரிய கவலைகளும் ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.  விளையாட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை, பொம்மையைப் பிடுங்கிக்கொண்டு விட்டாள்(ன்), அப்பா அம்மா குட்டிப்பாப்பாவையே அதிகம் கவனிக்கிறார்கள், நிலாவில் வடை சுடும் பாட்டிக்கு பருப்பு, எண்ணெய் எல்லாம் யார் கொண்டு போய் கொடுப்பார்கள், அப்பா வாங்கி வந்த இனிப்பில் தம்பிக்கு, தங்கைக்கு  ஒரு விள்ளல் அதிகம் கிடைத்து விட்டது என்று எத்தனையோ உலகமகாக்கவலைகளால் நாமும்தானே பாதிக்கப்பட்டிருந்தோம். நெல்லிக்காய் கொடுத்து நாம் தாஜா செய்து வைத்திருந்த ஃப்ரெண்டை, கலர் சாக்பீஸ் கொடுத்து தட்டிக்கொண்டு போன எதிரியை நினைத்து எத்தனை நாள் கறுவியிருப்போம். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பிறரறியாமல் நம்மை நறுக்கென்று கிள்ளி வைத்த எதிரியை, இமை தாண்டா நம் கண்ணீர் கண்டு பதறி, சமயம் பார்த்து தலையில் குட்டி பழி வாங்கிய நம் தோழமையை "மை ஃப்ரெண்டு" என்று தோள் சேர்த்து அணைத்திருப்போம். இப்படி நாளொரு கவலை, பொழுதொரு வருத்தம் என்று இருந்திருந்தாலும் நம் எனிமீஸ்களை பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசுடன் மன்னித்து விடும் பெருந்தன்மையும் நமக்கிருந்தது. அதே பெரீய்ய்ய்ய்ய்ய்ய மனசு நம் எதிரிகளுக்கும் இருந்தது என்பது வேறு விஷயம்.

ஆனால் இன்றைய குழந்தைகளின் நிலையே வேறு. எதற்கெடுத்தாலும் டென்ஷன் டென்ஷன் என்று குழந்தைப்பருவம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. அவர்களிடம் பேசிப்பாருங்கள். அவர்களை அலைக்கழிக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டு விடுவார்கள். இந்தச் சின்னஞ்சிறு மனிதனுக்கு இத்தனை பெரிய கவலையா என்று சிரிப்பாகத்தானிருக்கும். ஆனால் அவர்கள் நிலையில் இருந்து பார்த்தால்தான் அவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் புரியும். காலை எழுந்தவுடன் படிப்பு,.. பின்பும் படிப்பு, மேலும் படிப்பு என்றே நாளைக்கழிக்க வேண்டியிருக்கிறது. இதை விட்டால் இருக்கவே இருக்கிறது விளையாட்டு. விளையாட்டு என்றவுடன் மைதானத்திலும் தெருவிலும் ஓடியாடி விளையாடுவார்கள் என்று எண்ணிக்கொண்டால் நீங்கள் அந்தக்காலத்து ஆள் என்று அர்த்தம். இருந்த இடத்தை விட்டு இம்மி கூட அசையாமல் கம்ப்யூட்டரில் விளையாடுவார்கள் என்று பதில் சொன்னால் உங்களுக்கு ஒரு சபாஷ் கொடுத்துக்கொள்ளுங்கள்.

மதிப்பெண் போட்டியைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் எதிர் நீச்சல் போட்டுப்போட்டு இந்தப்பிஞ்சு உள்ளங்கள் களைத்துத்தான் விடுகின்றன. இப்பொழுதெல்லாம் கோடை விடுமுறைகளையும் விட்டு வைப்பதில்லை. கராத்தே, நீச்சல், டான்ஸ் , ஓவியம், கிரிக்கெட், மியூசிக் என்று ஆயிரத்தெட்டு வகுப்புகளில் குழந்தைகளைச் சேர்த்து விட்டு விடுகிறார்கள்.  அதையாவது முறைப்படி முழுப்பயிற்சி கொடுக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. குறுகிய காலப்பயிற்சி என்ற பெயரில் வெறும் இரண்டு மாதம், மூன்று மாதம் போய்வந்து கற்றுக்கொள்ளும் ஓவியம் அல்லது நடனத்தில் என்ன முழுமை இருக்க முடியும்? இசைக்கருவிகளை மீட்ட முழுவதுமாக அறிந்து கொள்ளுமுன் பயிற்சிக்காலம் முடிந்து விடும்.

வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் கற்றுக்கொடுக்கப்பட்ட அந்த ஒரே ஒரு பாடலை அக்குழந்தை வருடமுழுவதும் விருந்தினர் முன் அரங்கேற்றும் பாவம். ஆயிரக்கணக்கில் பணத்தைக் கொட்டி கற்றுக்கொள்ள வைத்த அக்குழலும் பியானோவும் நிச்சயமாக பெற்றோருக்கு இனிமைதான். வரும் விருந்தினர்தான் பாவம். பூனை முனகும் ஒலியைக்கூட ஆஹோ ஓஹோவென்று ரசிக்கும் பாவனையில் முகத்தை வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்படியொரு கொடுமைக்கு ஆட்பட்ட அவர் மேலும் சில மாதங்களுக்காவது அப்பக்கம் எட்டிப்பார்க்கத் துணியாரென்பது திண்ணம். இத்தோடு நின்று விடுவதில்லை.. வருடம் முழுக்க கல்விக்கூடங்களுக்குப் போய் வந்த குழந்தைகள் விடுமுறையில் மேல் வகுப்புகளுக்கான  பயிற்சி வகுப்புகளுக்குப் போகிறார்கள். அங்கேயும் ஹோம் வொர்க் போன்றவை உண்டாம். என் தோழியின் பையன் சொன்னபோது "அடப்பாவமே.." என்றிருந்தது. வளரும் வயதில் குழந்தைகள் எதையும் சீக்கிரம் கிரகித்துக்கொள்வார்கள், இது கற்றுக்கொள்ளும் வயது என்பதெல்லாம் சரிதான். அதற்காக இப்படியா?!!!!!  முன்பெல்லாம் விடுமுறை வந்தால் குழந்தைகள் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். இரண்டு மாதங்கள் அங்கு தங்கி, மற்ற உறவினர்களின் பிள்ளைகளோடு லூட்டியடித்து, பொழியும் வெயிலையெல்லாம் தாங்கள் வாங்கி உடல் கறுத்து வந்தாலும், ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், உறவு பேணுதல், பெரியோரை மதித்தல் என நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொண்டு வந்தார்கள். இப்பொழுதோ,. அந்த நல்ல பழக்கங்களெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய்தான் காணக்கிடைக்கின்றன.  

குழந்தைகளுக்குக் கதை சொல்லுதலைப் பற்றி நாம் யோசித்தே ஆக வேண்டும். அப்பொழுதெல்லாம் கதை நேரமாக சாப்பாட்டு நேரம் இருந்தது. பாட்டியின் கதையோடு இரண்டு கவளம் சாதம் கூடுதலாக உள்ளே இறங்கும். இல்லையென்றால் தாத்தா பாட்டியின் மேல் கால், கைகளைப் போட்டுக்கொண்டு 'உம்' கொட்டிக்கொண்டு குழந்தைகள் கதை கேட்டுக்கொண்டு விழித்திருக்க, கதை சொன்ன தாத்தா பாட்டிகள் தூங்கி விடும் இரவுகளும் உண்டு. சில சமயங்களில் குழந்தைகளையே கதை சொல்லவும் தூண்டும்பொழுது அவர்களும் நன்றாகக் கதை விடுவார்கள் :-)) இது குழந்தைகளின் கற்பனாசக்தியை வளர்ப்பதாகவும் இருந்தது. அப்பொழுதெல்லாம் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளும் நடக்கும். அதிலும் கூட குழந்தைகளை நல்ல நீதிக்கதைகளைச் சொல்லச்சொல்வது வழக்கம். இதனால் மேடைக்கூச்சமில்லாமல் பத்துப்பேருக்கு முன்னால் பேசவும், தன் கருத்துகளைத் தயங்காமல் எடுத்துரைக்கவும் பயின்றார்கள். பிள்ளைகளும் வளரும்போதே நல்ல பழக்கங்களுடன் வளர்ந்தார்கள். இந்த நீதிபோதனை வகுப்புகளின் அருமையை உணர்ந்ததால்தான் பள்ளிகளில் மறுபடியும் நீதிபோதனை வகுப்புகளைக் கொண்டு வரவேண்டும் என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பித்துள்ளது. நல்லது கெட்டது சொல்லித்தர, சரியான முறையில் வழி நடத்த ஆளில்லாத நிலையில் நாடு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் வளரும் இளம்பிள்ளைகளுக்கு அத்தகைய வகுப்புகள் அவசியமும் கூட.
வால்: நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியின் பொன்விழா ஆண்டு மலரில் இடம் பெற்றது.

Monday, 17 April 2017

நெடுமரம்..

நாம் சொல்லும் எந்தச்சொல்லுக்கும் எவ்வித எதிர்வினையும் காட்டாமல் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாமல் சும்மா அமைதியாக நிற்பவரை "மரம் மாதிரி நிக்கறியே"எனத் திட்டுகிறோம். உண்மையில் மரம் எதற்கும் எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் சும்மாவா நிற்கிறது? ஒவ்வொரு பருவகாலத்துக்குமேற்ப தன்னுடலில் அது வெளிப்படுத்தும் மாற்றங்கள் எத்தனையெத்தனை!!

வசந்த காலம் வந்ததும் மஞ்சள், சிவப்பு, ஊதா, ஆரஞ்சு, வெள்ளை என பலப்பல வண்ணங்களில் பூத்துக்குலுங்குகிறதே.. இத்தனை வண்ணமலர்களை அதுகாறும் எங்கே ஔித்து வைத்திருந்தது அது? உதிர்ந்து வழியெங்கும் பூம்பாய் விரித்த மலர்கள் போக சிலவற்றை தனது வம்சவிருத்திக்கென விதையுற்பத்திச்சாலை சுமக்கும் கனிகளாக உருமாற்றும் இரசவித்தையை ஒவ்வொரு நாளும் பிறரறியாமல் நிகழ்த்திக்கொண்டுதானே இருக்கிறது. இலைகளையெல்லாம் உதிர்த்து விட்டு உடலெங்கும் செம்பூக்களை மட்டும் அணிந்து நிற்கிறதே இந்த மரம்.. எந்தப் பருவகாலத்திலிருந்து இதற்காகத் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள ஆரம்பித்திருந்ததோ!! யாருக்குத் தெரியும்?

வாழும் ஒவ்வொரு நொடியும் தனக்காகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்காகவும் உயிர்ப்புடன் பேரமைதியுடன் இயங்கிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்ச்சாலையல்லவா அது!! புரட்டிப்போடும் புயலுக்கிசைந்து தன்னுடலில் ஒரு பகுதியைத் தியாகம் செய்தாலும், மறு நொடியிலிருந்தே அவ்விழப்பைச் சரிக்கட்டும் முயற்சியில் அதன் வேர்களும் திசுக்களும் ஒன்றிணைந்து சத்தமில்லாமல் பாடுபடத் தொடங்கி விடுவதை யாரறிவார்.

அசைவற்று அது நிற்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் அதற்குள் ஒரு பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருப்பதை நாம் அறிந்தோமில்லை. அதைப்போய் சும்மா நிற்கிறது என மனிதனோடு எப்படி ஒப்பிடவியலும்? வேண்டுமானால், காய்ந்து பட்டுப்போன மரத்தைப் பார்த்து, "மனிதனைப்போல் சும்மா நிற்கிறாயே" என்று ஒப்பிட்டுச் சொல்லிக்கொள்ளலாம்.

Monday, 11 January 2016

நல்ல மனம் வாழ்க..

பாஸ்போர்ட் மற்றும் இன்ன பிற விஷயங்களுக்குத் தேவைப்படும் என்பதால் என் பிள்ளைகளின் பிறப்பு சான்றிதழ்களின் இன்னொரு பிரதியை வாங்குவதற்காக சமீபத்தில் நாகர்கோவில் செல்ல நேரிட்டது. இப்பொழுதெல்லாம் ஆன்லைனில் தரவிறக்கிக்கொள்ளும் வசதி வந்து விட்டது என்றாலும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அந்த வசதி இன்னும் வரவில்லை எனத்தெரிந்தது. ஆகவே நேரில் போய்த்தான் வாங்க வேண்டியிருக்கும் என்பதால் ஊருக்குப்போக தத்காலில் டிக்கெட் ரிசர்வ் செய்தோம். சான்றிதழ்கள் கிடைக்க எத்தனை நாட்களாகும் என்று தெரியவில்லை. போதாக்குறைக்கு அந்த வாரத்திலேயே கிறிஸ்துமஸ், சனி ஞாயிறு விடுமுறைகள் என வரிசை கட்டி நின்றதால் வந்த வேலை முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என்றும் தெரியாததால் முனிசிபல் ஆப்பீசில் போய் நிலைமையைச்சொல்லி, குத்துமதிப்பாக எத்தனை நாட்கள் ஆகுமென்று தெரிந்து கொண்டு அதன் பின் மும்பை திரும்ப டிக்கெட் ரிசர்வ் செய்யலாம் என்று முடிவு செய்தோம். 

விண்ணப்பிக்கும்போது என்னென்ன டாகுமெண்ட்டுகள் தேவைப்படும் எனத்தெரியாததால் பிள்ளைகளின் போட்டோக்கள், வாக்காளர் அட்டை, பள்ளி இறுதிச்சான்றிதழ் முதற்கொண்டு அத்தனை டாக்குமெண்டுகளும் அடங்கிய ஃபைல், மகளின் பிறப்புச்சான்றிதழின் எஞ்சியிருந்த ஜெராக்ஸ் காப்பி, பஞ்சிங் மெஷின், ஸ்டாப்ளர், பேனாக்கள், ஃபெவிகால் மற்றும் ஒரு சில வெள்ளைத்தாள்கள் அடங்கிய பையோடு நாகர்கோவில் முனிசிபல் ஆப்பீசில் போய் இறங்கினேன். வளாகத்தில் மரங்களினூடே ஒளிந்திருந்த, திருப்பிப்போட்ட ‘ப்’ வடிவிலான கட்டிடத்தின் எந்தப்பகுதியில் சான்றிதழ்களுக்காக அணுக வேண்டும் எனத்தெரியாமல் காவலாளியை அணுகிக்கேட்டதும் அவர் ‘ப’வின் நடுவில் புள்ளியாய் அமைந்திருந்த சிறிய கட்டிடத்தைக் கை காண்பித்தார். நாலைந்து படிகள் ஏறிச்சென்று கவுண்டரில் கண்ணாடிக்கு அந்தப்பக்கம் இருந்தவரிடம் விசாரித்தேன். “இந்த அப்ளிகேஷனை மட்டும் நிரப்பிக்கொடுங்க. வேற டாக்குமெண்ட்ஸ் எதுவும் தேவையில்லை” என்றார். 

அவரிடம் சான்றிதழ்களுக்காகவே மெனக்கெட்டு மும்பையிலிருந்து வந்திருப்பதைச்சொல்லி கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க உதவுமாறு கேட்டுக்கொண்டேன். நிச்சயம் உதவுவதாகச்சொன்னவர் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து பக்கத்துக் கவுண்டரிலிருந்த பெரிய ஆப்பீசரிடம் கொடுக்கச்சொன்னார். விண்ணப்பங்களை நிரப்பியபின் வரிசையில் காத்து நின்று கொண்டிருந்தபோது இனம் புரியாத பதற்றத்தாலும் முதல் நாள் மாத்திரை எடுத்துக்கொள்ளாததாலும் இருதயத்துடிப்பு சற்று அதிகரித்திருந்தது. போதாக்குறைக்கு மும்பையிலிருந்து கடுமையான ஜலதோஷம் மற்றும் இருமலோடு கிளம்பியிருந்தேன். மூக்கோடு சேர்ந்து காதும் அவ்வப்போது அடைத்துக்கொண்டு படுத்திக்கொண்டிருந்ததால் எதிரில் யாராவது பேசும்போது சற்றுக்கூர்மையாக அவதானித்துக்கேட்க வேண்டியிருந்தது வேறு கடுப்பைக்கிளப்பியது. 

ஒரு வழியாக பெரிய ஆபீசரின் முன் சென்று விண்ணப்பங்களைக்கொடுத்ததும் விஷயத்தைச்சொல்லி “இதுக்குன்னே மும்பைலேர்ந்து வந்திருக்கேன். கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சா கொள்ளாம்” என்று அவரிடமும் எனது வேண்டுகோளைச்சொன்னேன். அவரது பதிலைப்பொறுத்துதான் மும்பைக்கு ரிடர்ன் டிக்கெட் எடுக்க வேண்டுமென்றும் சொன்னேன். “எம்மா ரெண்டு நாள்ல கிடைக்காதே. கிறிஸ்மஸ், சனி, ஞாயிறுண்ணு எல்லாம் வருது. அடுத்த வாரம் ஆயிருமே. வந்தது வந்தீங்க.. கூடுதலா ரெண்டு நாள் நாரோயில்ல தங்கி வாங்கிட்டுப்போங்க” என்றவர் கொஞ்சம் யோசித்தார். பின், “சரி.. ஒண்ணும் பிரச்சினையில்ல.. ரெண்டு ஃபார்முக்கும் அறுவது ரூவா கொடுங்க. சாயந்திரம் ஒரு மூணு மணி வாக்குல வாங்க. இங்க மேடத்துக்கிட்ட சொல்லி ஏற்பாடு செய்யறேன்” என்றார். அவர் அறுபது என்று சொன்னது கண்ணாடி ஜன்னலைத்தாண்டி வரும்போது தேய்ந்து, ஜலதோஷத்தால் அடைத்திருந்த என் காதில் அறுநூறு என்று விழவே ரூபாயை எடுத்து நீட்டினேன். 

அதிர்ச்சியான அவர், “ எம்மா.. எதுக்கு இவ்ளோ? அறுவதுதான்” என்று கூறியபடியே அதிகப்படியான பணத்தைத்திருப்பித்தந்தார். “அவ்ளோதானே சொன்னீங்க?” என்று குழம்பிய என்னிடம் “இல்லம்மா.. அறுவதுதான்” என்றவர் ‘இங்கே யாருக்கும் அதிகப்படி காசு எதுவும் கொடுத்துராதீங்க’ என்று ஜாடை செய்தபோதுதான் ஒருவேளை நான் அதை லஞ்சமாகக் கொடுத்ததாக நினைத்துக்கொண்டு விட்டாரோ என்று சந்தேகம் வந்தது. அடடா!!.. எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று வழி தேடும் இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு நேர்மையான அரசாங்க அதிகாரியா?. நான் தவறுதலாகக் கொடுத்திருந்தாலும் அதை சாக்குப்போக்குச் சொல்லி தக்க வைத்துக்கொள்ளாமல் திருப்பிக்கொடுத்தது அந்த நல்ல மனம். 

பகலுணவை முடித்துக்கொண்டு நாகர்கோவில் மணிமேடைப் பகுதியிலிருக்கும் சுதர்சன் புக்ஸில் சென்று சற்று நேரம் அலசி ஆராய்ந்து ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக்கொண்டபின் சொன்னது போல் சாயந்திரம் மூன்று மணிக்கு மேல் முனிசிபல் ஆபீசிற்குப்போனேன். அங்கே ஒரு மேடத்திடம் அறிமுகப்படுத்தி வைத்து விட்டு, “சர்ட்டிபிகேட்டுக்குன்னே மெனக்கெட்டு வந்திருக்காங்க. கொஞ்சம் சட்ன்னு முடிச்சுக்கொடுங்க” என்று நிலைமையையும் எடுத்துச்சொன்னார். பக்கத்துக் கட்டிடத்தின் இரண்டாவது மாடிக்கு அழைத்துச்சென்ற மேடம், “மகனுக்கு கொஞ்சம் டைம் ஆகும். நாளைக்குத்தான் ரெடியாகும். மகளோட சர்ட்டிஃபிகேட் காப்பி இருக்கதால இப்பம் சாயந்திரம் அஞ்சு மணிக்கு கிடைச்சுரும். இப்பம் மூணரை மணி ஆவுது. இருந்து வாங்கிட்டுப்போங்க..  இல்லண்ணா சாயந்திரம் அஞ்சு மணிக்கி வாங்க" என்றவர் சற்று யோசித்து விட்டு, "ஒண்ணு செய்யலாம், ரெண்டையும் சேத்து நாளைக்கே வாங்கிக்கிறீங்களா?" என்று கேட்டார். இரண்டு மணி நேரத்துக்குள்ளாக இன்னொரு முறை தங்குமிடத்துக்கும் முனிசிபல் ஆபீசுக்கும் அலைய தெம்பில்லை. மறு நாள் வந்து வாங்கிக்கொண்டால் இன்றைய அதிகப்படி அலைச்சல் மிச்சமாகும் என்பதால் இரண்டையும் மறுநாள் ஐந்து மணி வாக்கில் வந்து வாங்கிக்கொள்வதாகச்சொல்லி விட்டு தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.

மறுநாள் சென்றபோது பையனின் சான்றிதழ் தயாராகி ஆபீசரின் கையெழுத்துக்காகக் காத்திருந்தது. பெண்ணின் சான்றிதழை கீழே ஆபீசில் சென்று கையெழுத்திட்டு வாங்கியபின், ஓட்டமும் நடையுமாக பக்கத்துக் கட்டிடத்தின் மூன்றாவது மாடிக்கு ஓடிச்சென்று சற்றுக்காத்திருந்து பையனின் சான்றிதழையும் கையெழுத்திட்டு வாங்கியபின்தான் ‘அப்பாடா’ என்று நிம்மதிப்பெருமூச்சு வந்தது. முனிசிபல் ஆபீசுக்குள் அங்கே இங்கே என்று ஊழியர்களிடம் சொல்லி வைத்து, அனைவரும் விடுமுறைக்குத் தயாராகிக்கொண்டிருந்த அந்த அவசரத்திலும், சான்றிதழ்களைத்தயார் செய்ய வைத்து, விரைவில் கிடைக்க உதவிய பெரிய ஆபீசருக்கு நேரில் சென்று நன்றி சொல்லி விட்டு, லேசான மனதுடன் நாகராஜா கோவிலுக்குச்சென்று மனங்குளிர தரிசித்து வந்தோம். 

பொதுவாகவே அரசாங்க அலுவலகம் என்றால், வேலை சட்டென்று முடியாது, இழுத்தடிப்பார்கள், சுலபமாக முடித்துக்கொடுக்க மேற்படி எதிர்பார்ப்பார்கள் என்றெல்லாம் சில அபிப்ராயங்கள் மக்களிடையே உண்டு. அதிலும் சான்றிதழ்கள் ஏதாவது வழங்க வேண்டுமென்றால் ஆதாயம் ஏதுமில்லாமல் நிச்சயமாகச்செய்து கொடுக்க மாட்டார்கள் என்று பெயரைச் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அப்பேர்ப்பட்ட இடத்திலும், இக்கட்டான நிலையிலிருக்கும் மக்களுக்கு எவ்வித பலனையும் எதிர்பாராமல் வேண்டிய சேவையைச் செய்து கொடுக்கும் அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர் நினைத்திருந்தால், விடுமுறையைக் காரணம் காட்டி வேலையை இழுத்தடித்திருக்கலாம். அல்லது சீக்கிரம் முடித்துக்கொடுக்க ஆதாயம் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் மெனக்கெட்டு சான்றிதழ்களுக்காகவே ஊருக்குச்சென்றிருந்த எங்களிடம், எதையும் எதிர்பாராமல் எங்கள் நிலையைப் புரிந்து கொண்டு உதவி செய்த அந்த நல்ல மனம் நீடூழி வாழ்க.

Wednesday, 10 March 2010

ஆணென்ன....பெண்ணென்ன.!!!


ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள். என் மகள் பிறந்த சமயத்தில், சக பெண் ஒருவரின் உறவினர்களிடம்,அவர்களின் ஆண்குழந்தை பிறந்த செய்தியை சொல்லிவிட்டு பேரம் பேசியதை, கேள்விப்பட்டபோது ஏன் இப்படி?.. என்றுதான் தோன்றியது..

ஒரு வகையில் பார்த்தால், பெண்களாகிய நாமும், இதற்கு ஒரு காரணமாக இருக்கிறோம்..சென்ற தலைமுறைகளாகட்டும்.. இந்த தலைமுறையில் சில பேர்களாகட்டும், எத்தனை பேர் வீடுகளில்,இரண்டுபேரும் சமமாக நடத்தப்பட்டிருப்போம்?...நல்லவை எல்லாம் ஆண்குழந்தைக்கும், அவன் வேண்டாமென்று ஒதுக்கியவை பெண்ணுக்கும் என்பது எத்தனை வீடுகளில் தினசரி நிகழ்வுகளாகவே இருந்திருக்கும்!!!!.சில வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடுகூட இருக்காது.பாரபட்சம் என்பதை நிறையவே அந்த துரதிர்ஷ்டசாலி குழந்தைகள் அனுபவித்திருப்பார்கள்.

பெண்களுக்கான பொறுப்புகள் நிறையவே, அந்த சின்ன வயசிலேயே திணிக்கப்படும்.தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்வது சுகமான சுமைகள்தான் என்றாலும் அவளுக்கும் அந்த வயசுக்கான ஆசைகளும், ஏக்கங்களும் இருக்குமே.. அதை ஏனோ,வீட்டிலுள்ளவர்கள் நினைத்துப்பார்ப்பதில்லை. .

சில இடங்களில் பெண்ணின் ஆரோக்கியம் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படுவதில்லை.ஆணின் வயிறு நிறைந்தபின் மீதம்தான் பெண்குழந்தைக்கு. சொல்லப்போனால்,பெண்குழந்தைக்குத்தான் சாப்பாடு ஒருகை அதிகமாகவே வைக்க வேண்டும்.உடல்ரீதியாக அவள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை சமாளிக்க தெம்பு வேண்டாமா?..அவனது எச்சில் தட்டைக்கூட கழுவும் இடத்தில் எடுத்துப்போட மாட்டான். அதையும் அவள்தான் செய்து, கழுவி வைக்க வேண்டும்.தன் சகோதரனிடம் குரலுயர்த்தி,பேசுவதற்க்குக்கூட... அவள் அனுமதிக்கப்படுவதில்லை.ஒரு தாய் நினைத்தால், இந்த நிலைமையை மாற்றமுடியாதா என்ன!!!

இப்படி சில தாய்மார்களே, தங்கள் பெண்குழந்தைகளை ,நடத்தும்போது, அதைப்பார்த்து வளரும் ஆண் எப்படி.. பெண்ணை சகமனுஷியாக மதிப்பான்??..பெண் என்பவள் தன்னுடைய தேவையை நிறைவேற்றவே பிறந்தவள் என்றுதானே அவனுக்கு பாடமாகியிருக்கும்!!. இதுதானே வளர்ந்தபின் ஈவ் டீஸிங் செய்யும் துணிச்சலையும் கொடுக்கிறது.'ஆம்பளை அப்படித்தான் இருப்பான்' என்று கண்டு கொள்ளாமல் இருப்பதால்தானே பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.பெண்ணை ஒரு உடலாக மட்டும் பார்க்காமல், அவளும் தன்னைப்போல் ஓர் உயிர் என்ற நினைப்பை, பெற்றோர் நினைத்தால் ஏற்படுத்தலாம். தன் வீட்டு பெண்களை மதித்து பழக்கப்பட்டவன், நிச்சயமாக அடுத்த பெண்களையும் மதிப்பான்.

நம்முடைய தலைமுறையில் மாற்றங்கள் வருகிறதென்றாலும்,இன்னும் வெளிச்சத்துக்கு வராத மனிதர்களும் இருக்கின்றனர். 'ஆணை குற்றம் சொல்வதை விட்டு நம்வீட்டு ஆண்குழந்தைகளை சரியாக வளர்க்கலாமே.'..
அவள் மேல் பாசமும், மதிப்பும் வருவதற்கு நாமே வழிகாட்டியாக இருக்கலாம்.
சிறுவயதிலேயே வீட்டு வேலைகள் பெண்ணுக்கானவை என்று ஒதுக்காமல் ஆண்களையும் சிறுகச்சிறுக ஈடுபடுத்தலாம். சாப்பிடமட்டும், எட்டிப்பார்த்துவிட்டு போய்விடாமல் கொஞ்சம் சமையலையும் பழக்கப்படுத்தலாம்.

இது அவர்கள் தனியாக ஹாஸ்டல், வெளிநாடு ,போன்ற இடங்களில் தங்க நேரிடும்போதும், பந்த் சமயங்களிலும் பட்டினி கிடக்காமல் காப்பாற்றும்.பீமன், நளன் ..இவர்களும் ஆண்கள்தானே.. இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு உணவகங்களிலும்,கல்யாண சமையல்துறையிலும் ஆண்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். ஆகவே, ஆண் சமைப்பது கேவலமானது அல்ல. குறிப்பிட்ட வயதுக்குப்பின் அவர்களுடைய கர்சீப், சாக்ஸ்,உள்ளாடைகள் போன்ற சின்னச்சின்ன துணிகளை துவைக்கப்பழக்கலாம். இப்பத்தான் வாஷிங் மெஷின் வந்துவிட்டதே என்று சொல்லக்கூடாது.கரண்ட் இல்லாத சமயங்களில் தன் கையே தனக்குதவி செய்யும்.சின்னச்சின்ன வீட்டு வேலைகளையும் செய்ய பழக்கப்படுத்தலாம்.பெண்ணின் சுமைகளை பகிர்ந்து கொண்டு வளரும் ஆண் நிச்சயமாக அவளை,அவள் வலிகளை புரிந்து கொள்வான்.

பெண் குழந்தைகளை வேண்டாம் என்று சொல்வதற்கு சிலர் காரணங்களாக சொல்வதில்... வரதட்சிணை, குடும்ப வன்முறை .. இவைதான் முக்கியமானவை. சாப்பிட இன்னொரு வயிறு வந்துவிட்டதே... என்று வருத்தப்படுபவர்களுக்கு, உழைக்க இரண்டு கைகள் கிடைத்திருப்பது ஏனோதெரிவதில்லை.பெரும்பாலான இடங்களில் ,வரதட்சிணையை எதிர்பார்ப்பது இன்னொரு பெண்தான்."எங்கிட்ட ஒருத்தி கேக்குறதை கொடுக்கணும்னா நான் இன்னொருத்திகிட்ட கேக்கத்தானே வேண்டியிருக்கு" என்பது இவர்கள் சொல்லும் நியாயம்.

சிறுவயதிலிருந்தே சகோதரன், சகோதரி ஒருவருக்கொருவர் அன்புடன், பாசத்துடன் வளர்வது நம்கையில்தான் இருக்கிறது.இருவரும் சமம் என்று சொல்லியே நடத்தப்படவேண்டும்.எங்கள் வீட்டிலும் என் குழந்தைகள் இருவரும் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வார்கள். சிலசமயங்களில் பையர் குக்கர் வைத்தால், குழம்பு வைப்பதை பெண் செய்வார்.டைனிங் டேபிளை இருவரும்தான் செட் செய்வார்கள். அதே போல் சாப்பிட்டு முடித்ததும்,ஒதுங்க வைப்பதும் அனேகமாக அவர்கள்தான். அவ்வப்போது இண்டியாவும், பாகிஸ்தானும் போல இருப்பார்கள். ஆனாலும் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுத்ததில்லை.

நம்மிடம் அன்பு செலுத்துவதில் குழந்தைகள் பாரபட்சம் காட்டுவதில்லை. பின் நாம் ஏன் அவர்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும்.பெண்குழந்தையை பெற்றுவிட்ட காரணத்துக்காக மனைவியை கொலை செய்த கணவனைப்பற்றிய செய்தி, தினசரியில்ஒரு மூலையில் இன்று வந்து போனது, ஏனோ,.. இப்ப ஞாபகம் வருது....

Friday, 5 March 2010

உடனிருந்தே கொல்லும் வியாதி..


உங்களுக்கு கோபம் வருவதுண்டா?...' இது என்ன கேள்வி!!...மனுஷனாப்பொறந்தவனுக்கு கோபம் வர்றது சகஜமானதுதானே'ங்கிறீங்களா!!!. உண்மைதான்..நம்ம ஆழ்மனசுல அடக்கி வைக்கப்பட்ட உணர்வு மற்றும் மன அழுத்தங்களே எல்லை மீறும் போது கோபமாக வெளிப்படுகின்றன. கோபப்படறது சகஜம்ன்னாலும் , அது எல்லை மீறி, நம்மை அழிச்சிடாம இருக்கிறவரைக்கும் அதுவும் ஓர் உணர்வுதான்.(வேறொன்னுமில்லை.. பதிவு கொஞ்சம் நீளமா போச்சு.. டைம் எடுத்து படிச்சிடுங்க. ப்ளீஸ்..ஹி..ஹி..)

நமக்கு அதிகமா கோபம் வருதுங்கிறதை நம்ம உடல்மொழிகளே(body language) காட்டிக்கொடுத்திடும். தாடை இறுகி, நறநறன்னு பல்லைக்கடிப்போம்,இதயத்துடிப்பு கூடுதலாகும், முகமெல்லாம் சிவந்து உடம்பெல்லாம் வேர்த்துக்கொட்டும்,பாதாதிகேசம் நடுங்கும்,பின் தலையில் பாரமா இருக்கிறது மாதிரி இருக்கும்,தலைசுத்தும்.

கொஞ்சம்கொஞ்சமா தலைக்கேறிடுச்சுன்னா, குரலை உயர்த்தி கத்த ஆரம்பிப்போம்,எதிரில் இருக்கிறவங்களை என்ன செஞ்சா தகும்ன்னு மனசுக்குள்ள இருந்து சாத்தான் குரல் கொடுப்பான்..அந்த இடத்தை விட்டே போயிடலாமான்னு தோணும்.எரிச்சலா வரும்.கையிலிருக்கிறதை விட்டெறியிற ஆட்களும் இருக்காங்க.

கோபம்ங்கிறது ஒரு உடனிருந்தே கொல்லும் வியாதி.கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்கலைன்னா நம்மையே அது அழிச்சிடும். நாம கொஞ்சம் கவனிச்சு பாத்தோம்ன்னா எந்தெந்த விஷயங்கள் நமக்கு கோபமூட்டுதுன்னு தெரிஞ்சிக்கலாம். ஒவ்வொருத்தரையும் கேட்டுப்பாத்தா, கீழ்க்கண்ட காரணங்கள் கண்டிப்பா இருக்கும்.

  1. நான் சொல்ற எதையும் காதுல போட்டுக்கறதே இல்லை.. என்மேலே அக்கறையே கிடையாது. இது தங்க்ஸ்களின் டெம்ப்ளேட் புலம்பல்.
  2. எங்கிட்ட ரொம்பத்தான் எதிர்பாக்கிறாங்க,என் கண் முன்னால சிரிச்சிப்பேசிட்டு முதுகுக்கு பின்னால எளக்காரமா பேசுறாங்க. என்னை ஒருத்தனும் மதிக்கிறதே இல்லை.
  3. அவங்களுக்கு சாதகமா உபயோகப்படுத்திக்கிட்டு பின்னாடி கழட்டி விட்டுர்றாங்க, சரியான சுய நலம் பிடிச்சவங்களா இருக்காங்கப்பா.இதெல்லாம் வேலைக்குப்போகும் தங்க்ஸ்+ரங்க்ஸ்களின் ஆபீஸைப்பற்றிய அங்கலாய்ப்புகள்.
  4. வரவர ஒரு வேலையும் செய்றதில்லை. தனியா கிடந்து அல்லாடுறேனே.கூடமாட ஒத்தாசை செஞ்சா என்னவாம்?எப்பப்பாரு என்னை அதிகாரம் செய்றதை தவிர வேற நெனப்பே கிடையாது.. இது யாருடைய புலம்பல்ங்கிறதை உங்க ஊகத்துக்கே விட்டுர்றேன் :-))).
  5. எவ்வளவுதான் பாத்துப்பாத்து நகை, புடவைன்னு வாங்கிக்கொடுத்தாலும்,பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு அம்மணிங்க வாங்கியிருக்கிறது மாதிரி லேட்டஸ்ட்டா இல்லைன்னு புலம்பறாங்களே..இது ரங்க்ஸின் புலம்பல்கள்.
  6. மும்முரமா ஒரு போஸ்டை படிச்சிக்கிட்டோ, இல்லை எழுதிக்கிட்டோ இருக்கும்போது நெட் கனெஷன் புடுங்கிக்கிச்சின்னா வருமே .. அதுக்குப்பேர் என்னப்பா :-))).
  7. குடும்பத்தோட உக்காந்து டி.வி. பாத்துக்கிட்டிருக்கும்போது, ஒலக மகா முக்கியமான சில கண்றாவிகளை பாக்க நேரிடும்போது..
  8. மேல படிக்கணும்ன்னு, பொண்ணுங்க ஆசைப்படும்போது,பெத்தவங்க ஒத்துக்கிட்டாலும்,"பொம்பளைப்புள்ளை படிச்சு கலெக்டர் வேலைக்கா போகப்போற.."ன்னு மத்தவங்ககிட்டேயிருந்து ஒரு நொட்டச்சொல்லு வந்து விழும்போது..
  9. பெண் என்பதற்காகவே திறமைகள் மதிக்கப்படாம போகும்போது...
  10. ஆணோ, பெண்ணோ.. அவர்களின் உணர்ச்சிகள் மதிக்கப்படாவிட்டால்...,
இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும் அபாயம் இருப்பதால் ஒரு கமா போட்டுக்கறேன்.உங்க கோபத்தை தூண்டும் விஷயங்கள் என்னென்னன்னு யோசிச்சு, குறிச்சு வெச்சிக்கங்க.

இப்ப, அந்த பேப்பரை எடுத்து வாசியுங்க.. மேலோட்டமா பாத்தா மத்தவங்க உங்ககிட்ட சரியா நடந்துக்காததால்தான் நீங்க கோபப்பட்டிருப்பீங்க,...சில சமயம் ஏதாவது ஒரு விஷயம் உங்களை அடிக்கடி கோபப்படுத்தியிருக்கலாம். உங்க கோபம் நியாயமானதுதான்னு தோணும்.. ஆனா,..யோசிச்சுப்பாத்தா,ஒரே விஷயத்தை இருவேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமா கையாண்டிருப்போம்.ஒரு சமயம் டேக் இட் ஈஸின்னு போயிருப்போம். அதுவே வேறொரு சந்தர்ப்பத்தில் பாய்ந்து பிறாண்டியிருப்போம்..இதிலேருந்து நீங்களே புரிஞ்சிட்டிருப்பீங்களே!!.. யெஸ்..நம்ம கோபத்தை எது தூண்டுதுன்னு உண்மையிலயே,.. நம்மாலயே புரிஞ்சிக்க முடியாது..

இப்படி, கொஞ்ச நாள் உங்களை நீங்களே கவனிச்சு வந்தாலே எது உங்க கோபத்தை தூண்டப்போகுதுன்னு நீங்களே கண்டுபிடிச்சிடலாம், நீங்க தன்னிலை மறந்து கத்த ஆரம்பிக்குமுன்னே உஷாராயிடலாம்.கோபத்தை தூண்டும் எண்ணங்கள் பெரும்பாலும் அந்த ஒரு நிமிட உணர்ச்சிகளாகவே இருக்கும்.அப்படின்னா எதுக்குமே கோபப்படாம இருக்க முடியுமான்னு தானே கேக்கறீங்க. நாம அந்த ஒரு நிமிடத்தை ஜெயிச்சிட்டோம்ன்னாலே, ஆத்திரம் கட்டுக்குள்ள வந்திடும்.

எப்பவும், நம்முடைய நிலையிலிருந்தே பாக்காம எப்பவாவது அடுத்தவங்க கோணத்திலிருந்தும் யோசிக்க பழகிக்கலாம்.ஏன்னா.. எதுக்கெடுத்தாலும் கோபப்படுவதால நம்ம மன,உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகுதில்லையா?.. அதை தவிர்க்கலாமே.பொதுவா, நம்ம சமூகத்தில ஆம்பிளைங்க அழப்பிடாது,.. பொண்ணுங்கன்னா ஆத்திரப்படப்பிடாது,எதுக்கெடுத்தாலும் பயந்தா எப்படி?ன்னு உணர்ச்சிகளை அடக்கியே வாழ பழக்கப்படுத்திடறாங்க.இப்படி மனசுக்குள்ளயே அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் என்னிக்காவது வெடிச்சி சிதறும்போது,அது சுனாமியை விட பேரழிவை குடும்பத்தில் உண்டாக்கும்.

ஆத்திரம் என்பது ஒரு நோய். உடனிருந்தே கொல்லும் ஒரு வியாதி.. இந்த வியாதி நம்மை அழிக்க விடலாமா?.. நாலஞ்சு வகையிலே இதுக்கான மருந்துகள் இருக்கே..
  1. ஆழ்ந்த சுவாசம்: ஒரு மனிதன் ஆத்திரப்படும்போது அவனு(ளு)டைய சுவாசம் தாறுமாறா எகிறும். மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கும்.இதை சமனப்படுத்துவதன் மூலம் ,வியாதி கட்டுக்குள் வரும். இதற்கு முதலில்,மூச்சை நன்கு இழுத்து விடவேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது நான்கு வரை மனசுக்குள் எண்ண வேண்டும். வெளிவிடும்போது எட்டு வரை எண்ண வேண்டும். இப்படி ஒரு பத்துப்பதினஞ்சு தடவை மூச்சுப்பயிற்சி செய்யலாம். இந்தப்பயிற்சியை யார்வேண்டுமானாலும் செய்யலாம். ஆஸ்துமா காரங்க இதை தவறாம செஞ்சா நல்லது.
  2. ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணலாம். எதிர்க்க இருக்கறவங்களைப்பொறுத்து இந்த எண்ணிக்கை வித்தியாசப்படும். தங்க்ஸ் முன்னாடி வாயைத்திறக்க பயப்படும் கைப்புள்ளைகளும் இதை செய்யலாம். யாராவது கேட்டா, சமாளிக்கலாமுல்ல :-))
  3. கோபத்தை மத்தவங்களுக்கு தொந்தரவில்லாம வெளிப்படுத்த சிபாரிசு செய்யப்படும் சில விஷயங்கள்--தலையணையை குத்துதல், சுவரில் தலையை முட்டிக்கொள்தல்(ஹி..ஹி.. ச்சும்மா... செஞ்சு பாக்காதீங்க).ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சுக்கு நூறாக கிழித்தல்,.. இதெல்லாம் வேணாமுங்க..கிழிச்ச பேப்பர் முக்கியமானதா இருந்தா ஆத்திரம் கூடுவிட்டு கூடு பாயும் அபாயம் உண்டு. தலையணையை குத்திக்கிழிச்சா புதிசு வாங்கிய செலவு இன்னொருத்தருக்கு, இல்லாத கோபத்தை வரவைக்கும்.
  4. உங்களுக்கு அமைதிதர்ற மாதிரி ஏதாவது படிக்கவோ,ஏதாவது உடலுழைப்போ இருந்தா செய்யுங்க.வாக்கிங், நீந்துதல்,தோட்ட வேலை இதெல்லாம் கூட physical outletsதான்.
  5. கண்ட கண்ட அழுவாச்சி சீரியல்களை பாக்காதீங்க. இலவச இணைப்பா வீடியோ கிளிப்பிங்க்ஸை பாக்க வேண்டியிருக்கும். :-)
  6. மறுபாதி கிட்ட, நீங்க எனக்கு உதவி செய்றதில்லைன்னு புகார் வாசிக்கிறதை விட்டுட்டு,உதவி செஞ்சா நல்லார்க்கும்ன்னு சொல்லலாம்.அவங்க உதவி செய்யும்போது குத்தம் கண்டுபிடிக்காம இருக்கலாம்(அது முடியாதே ..கொஞ்சம் கஷ்டமாச்சே :-)))) இதைவிட இன்னொரு வழி இருக்கு. கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம். எல்லோருக்கும் பொதுவா ,ஒரு பழமொழி சொல்வார்கள்.. "சொல்லிப்பார்...தல்லிப்பார்... தள்ளிக் களெ"...தப்பிருந்தா சொல்லித்திருத்தலாம், கேக்கலையா ரெண்டு தட்டு தட்டலாம்(தங்க்ஸ்+ரங்க்ஸை இல்லைங்க)அதுக்கும் அடங்கலையா விட்டுவிடலாம். அவங்களுக்கு தெரிஞ்சவரையில் செய்றாங்க.. அதுவே பெரிசில்லையா. உதவி செய்யணும்கிற மனசுதானே முக்கியம்.
  7. எல்லாத்தையும் விட முக்கியம், சம்பந்தப்பட்டவங்களை மன்னித்து, அந்த நிகழ்ச்சியை மறந்துடறதுதான். இதுக்கு ரொம்பப்பெரிய,பக்குவப்பட்ட மனசு வேணும் சாமி..
ஆத்திரம் என்பது ஒரு உணர்ச்சி மட்டுமல்ல. ஒரு பிரச்சினையும் கூட..அது நம்மை கட்டுப்படுத்துகிறதா?..நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா?என்பதுதான் அது.கட்டுப்படுத்த தவறினால் சீக்கிரமே அது நம்முடைய குணங்களில் ஒன்றாக மாறிவிடும். 'அட.. அது ஒரு முசுடுப்பா'ன்னு நம்ம கோபத்துக்கு பயந்து பணிஞ்சு போறாங்களே... அது உண்மையான அன்பினால் வந்த பணிவா?

கோபத்தை ஒட்டுவாரொட்டி (ஒட்டுவார் ஒட்டி)அப்படீன்னும் சொல்வாங்க. ஒருத்தர் தன்னோட கோவத்தை அடுத்தவர் மேல காமிக்க, அவங்க இன்னொருத்தர் மேல பாய, இது ஒரு தொடர்கதையாக்கூட சமயங்களில் ஆகிடும்.எதுக்கெடுத்தாலும் ஆத்திரப்படுறவங்க ஒரு எரிமலைக்கு சமம். அவங்க எங்கே போனாலும், அவங்களைச்சுத்தி அழிவைத்தான் உண்டாக்குவாங்க. மத்தவங்களை அடக்கியே பழக்கப்பட்டவங்க வேற எப்படி இருப்பாங்க?... விளைவு.. குடும்ப உறவுகளில் விரிசல், உடல் நலக்கேடு,வெளியுலகத்தொடர்பு அற்றுப்போதல் இதுதான் மிச்சம்.ஒரு கிருமியைக்கண்ட மாதிரி விலகிப்போவாங்க .. இதெல்லாம் தேவையா?...

LinkWithin

Related Posts with Thumbnails