Tuesday, 19 November 2019

புட்டமது மகாத்மியம்.

புட்டமது, புட்டமுது, புட்டாமிர்தம் என குமரி மண்ணில் அழைக்கப்படும் இந்த இனிப்பை தமிழகத்தின் பிற பகுதிகளில், வெல்லப்புட்டு என்று அழைப்பர்.

ஒரு காலத்தில் குமரி மண்ணின் கோவில்களில், குறிப்பாக அம்மன் கோவில்களில் புட்டமதுதான் முக்கியமான பிரசாதமாக விளம்பப்படும். இன்றும் குமரி மண்ணில், வீடுகளில் யாருக்காவது அம்மை கண்டு குணமாகி தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றியபின் முதன் முதலாகக் கோவிலுக்கு அழைத்துச்சென்று அம்மனைத் தரிசித்து புட்டமது விளம்பி விட்டு வந்தபின்தான், மறு வேலை.

சாயந்திரம் கோவிலுக்குப் போவதென்றால் காலையிலேயே புட்டமது தயார் செய்யும் வேலை ஆரம்பித்து விடும். பச்சரிசியைக் களைந்து, அரை மணி நேரம் கொவரப்போட்டு, நீரை வடித்தெடுத்தபின் ஈரம் போக நிழலில் உலர்த்தியெடுத்து, கை வலு உள்ள பெண் ஒருத்தி அரிசியை உரலிலிட்டு இடியாப்ப மாவு பக்குவத்தில் இடித்துக் கொடுத்து விடுவாள்.

அதன் பின் அந்த மாவை துணியில் பொட்டலம் போல் கட்டி, ஆவியில் வேக வைத்தெடுத்து ஆறியபின் உதிர்த்து கட்டிகளில்லாமல் ஆக்கிக்கொண்டபின் வெல்லப்பாகும் ஏலஞ்சுக்கும் தேங்காய்ப்பூவும் இட்டு விரவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினால், "ஏ... புட்டமது வெளம்பப்போறாங்க" எனக்கூவிக்கொண்டு நண்டு சிண்டு படை பட்டாளம் எல்லாம் திரண்டு வந்து விடும். அப்புறம் வீட்டுக்கு வெறுஞ்சட்டிதான் வந்து சேரும்.
பச்சரிசி புட்டமது
நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு புட்டமது செய்தேன். மகனார் "இதை சிறுதானிய மாவில் செய்ய முடியுமா?" என வழக்கம்போல கோரிக்கை வைத்தார். சிறுதானியங்களின் மகிமை மிகுந்து வரும் இந்நாட்களில், அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை உபயோகித்து அதே உணவு வகைகளைப் பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்து விடும் மனப்பாங்கு வந்து விட்டது. அதுவும் வீட்டில் சோதனை எலி இருந்தால் தைரியமாக விஷப்பரீட்சையில் இறங்கலாம். அந்தப்படியே முதலில் கேழ்வரகில் புட்டமது செய்து பார்த்தேன். நன்றாகவே அமைந்தது.
ஒரு கப் மாவை விரவி
 
 ஆவியில் வேக விட்டு
  நன்கு ஆற விட்டு
 வெல்லப்பாகு தயார் செய்து

 ஏலஞ்சுக்கும் தேங்காயும் சேர்த்தால்
கேழ்வரகு புட்டமது தயார்
அரிசி மாவைப்போல் கேழ்வரகு மாவு அதிகத்தண்ணீரை இழுத்துக்கொள்ளாது. ஆகவே, ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, பின் உதிர்த்துக்கொண்ட கேழ்வரகு மாவில் கொஞ்சங்கொஞ்சமாக வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளற வேண்டும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் வந்ததும் நிறுத்தி விட வேண்டும். நேரம் ஆக ஆக பொலபொலவென உதிர்ந்து வந்து விடும். ஆகவே தேவைப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே புட்டமுதைத் தயாரித்துக் கொள்க.

தவிரவும், தமிழ்க்கடவுளாம் முருகவேள் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இது முக்கியமான பிரசாதமாமே. ஆகவே உண்மையான தமிழனாக இருந்தால் கேழ்வரகு புட்டமது செய்யவும்.

Saturday, 9 November 2019

மெழுகுப்பாகற்காய் துவரன்

பாகற்காயின் தூரத்துச் சொந்தமான மெழுகுப்பாகல், Kantola என இந்தியிலும் Kartoli என மராட்டியிலும், spine gourd என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகமும் சந்தையில் காணக்கிடைக்கும் இக்காய் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்யக்கூடியது, குறிப்பாகக் கண்ணுக்கும் மூளைக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் கொண்டவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.
கடினமான முட்கள் படர்ந்திருப்பது போல் தோற்றமளித்தாலும், கைகளை உறுத்தாமல் மென்மையாகவே இருக்கின்றன. குட்டிக்குட்டியாக நெல்லிக்காய் அளவில் இருக்கும் இவற்றை நீள வாக்கில் நாலாக நறுக்கிப்பிளந்து, கல் போன்ற கடினமான விதைகளை நீக்கி, அதன் பின் பொடியாக நறுக்கி.. என அரை கிலோ காய் எக்கச்சக்கமாக வேலை வாங்கி விட்டது. கொஞ்சம் பிஞ்சாக இருந்தால் விதைகளை நீக்க வேண்டாம். அப்படியே நறுக்கி விடலாம். ஒன்றிரண்டு காய்களிலிருந்து கிடைத்த முற்றிய விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். இது வளர வெப்பம் அதிகம் தேவையாம். கோடை ஆரம்பத்தில் நட்டுப்பார்த்தால் ஆயிற்று.
விதையில்லாப்பிஞ்சு

முற்றிய விதை கொண்டவை
பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்ததானாலும் கொஞ்சங்கூட கசக்காது எனக்கேள்வி. 

மெழுகுப்பாகற்காயின் பயன்கள் அனேகம். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை சில.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விடச்சிறந்த பலன் உண்டா என்ன? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக்குறைக்கிறது. இளமையைத்தக்க வைக்கிறது. பார்வைக்கூர்மையை மேம்படுத்துகிறது, ஆகவே கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்துக்கொட்டி தெப்பமாய் நனைந்து விடுவார்கள். இந்த அதிகப்படியான வியர்வைப்பிரச்சினையைச் சரி செய்கிறது நார்ச்சத்தும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸும் நிறைந்திருப்பதால் செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிறுநீரகக்கற்களைக் கரைக்கிறது, மூல நோயைக் குணப்படுத்துகிறது. சுவாசப்பிரச்சினைகள் மற்றும் இருமலைக் குறைக்கிறது. 

கொடி வகையைச்சேர்ந்த இத்தாவரம் நன்கு செழித்து வளர வெப்பம் தேவை. ஆகவே, கோடை காலத்திலும், மழைக்காலத்துக்குப் பின் வரும் வெப்பக்காலத்திலும் பயிரிடப்படுகிறது. கோடை காலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து மழைக்காலத்தில் சந்தைக்கு வருகிறது. சந்தையில் சிறு வியாபாரிகளும் வயதான பெண்மணிகளும் தத்தம் தோட்டத்தில் விளைந்தவற்றை தலைச்சுமையாகக் கூடைகளில் கொண்டு வந்து விற்பனைக்காகப் பரப்பியிருப்பர். முன்பெல்லாம் அதிகம் காணக்கிடைத்தாலும், கசப்பாக இருக்குமோ என்றெண்ணி இதை வாங்கியதேயில்லை. கிலோ கணக்கில் வாங்கிச் சமைத்து விட்டு, யாரும் சீந்தாமல் போய் விட்டால் என்ன செய்வது? வாரக்கணக்கில் வைத்து தனியாளாகத் தின்ன முடியுமா என்ன? ஆனால், ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே என்று கொஞ்சமாக அரை கிலோ வாங்கி வந்தேன். முதலில் துவரன் செய்து , வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடித்துப்போய் விட்டால் மற்ற அயிட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்யலாமென எண்ணம். துவரன் எப்படிச்செய்தாலும் ருசியாக அமைந்து விடும். அதுவே புளிக்குழம்பு, அரைத்து விட்ட குழம்பு, ரோஸ்ட் என ஏதாவது செய்து, ருசி பிடிக்கவில்லை எனில் ஜென்மத்துக்கும் மெழுகுப்பாகலை வீட்டுக்குள் சேர்க்க இயலாது.

பாகற்காய் துவரன் செய்வது போல்தான் இதையும் சமைக்க வேண்டும். கழுவி தண்ணீர் வடிய விட்டு, துடைத்தெடுத்து நாலாக வகுந்து, பின் கடினமான விதைகளை வழித்து நீக்கிய பின், பொடியாக நறுக்கிக்கொண்டாயிற்று. கொஞ்சம் இளசான காய்களில் விதை இருப்பதில்லை. அவற்றை அப்படியே பொடியான நறுக்கிப்போடலாம். சிலர் வட்ட வட்டமாக அரிந்து போடுவதுண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொண்டால் தாளிக்கும்போது போடலாம். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன்  கால் ஸ்பூன் சீரகம், ஒரு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய்கள், கால் ஸ்பூன் மஞ்சட்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொண்டால் துவரன் மசாலாவும் தயார். பச்சை மிளகாய்க்குப்பதில் மிளகாய்த்தூள் சேர்த்தாலும் பாதகமில்லை.
இப்போது அடுப்பில் சீனிச்சட்டியை ஏற்றி அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச்சூடாக்கி, கடுகை இட்டு அது வெடித்ததும், உளுத்தம்பருப்பைப்போட்டு அது சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு வதக்கிக்கொண்டு, வெங்காயம் சிவந்ததும் காய்த்துண்டுகளைப்போடவும். அரை ஸ்பூன் உப்பிட்டு லேசாகப்பிரட்டி, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடியிட்டு வேக விடவும். முக்கால் வேக்காடு வரை வேகட்டும். இடையிடையே காயை நன்கு பிரட்டிக்கொடுக்கவும். இல்லையெனில் ஒன்று போல் வேகாது. சரியான பதம் வந்ததும், துவரன் மசாலாவைப்போட்டு சிட்டிகை உப்பிட்டு, கிளறி ஒரு நிமிடம் வரை, குறைந்த தணலில் மூடியிட்டு வேக விடவும். 
துவரன் தயார்
வெந்ததை அதன் மணமே அறிவித்து விடும். இப்போது மூடியைத்திறந்து துவரனை ஈரப்பசை ஏதுமின்றி பொலபொலவென ஆகும் வரை கிளறி இறக்கலாம். கொஞ்சங்கூட கசப்பேயில்லை. லேசாக பாகற்காய் வாசனையுடன் கோவைக்காய்த் துவரனின் ருசியுடன் இருந்தது மெழுகுப்பாகற்காய் துவரன். சாம்பார், பருப்புக்குழம்புகளுக்கு நன்கு பொருத்தமாக இருக்குமெனத்தோன்றுகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails