Showing posts with label தெரியலியே. Show all posts
Showing posts with label தெரியலியே. Show all posts

Tuesday, 7 September 2010

மழைத்துளிகள்...

ஒவ்வொரு வருஷமும், ' ஸ்.. அப்பாடா!!! என்ன வெயில்.. என்ன வெயில்!!. போன வருஷத்தைவிட இந்த வருஷம், வெயில் ஜாஸ்தியாத்தான் இருக்குது இல்லே!!!. ஒரு மழை வந்தா எவ்ளோ நல்லாருக்கும்'ன்னு ஏங்க வைக்கத்தான் செய்கிறது இந்த மழை. லேசாக மாறும் தட்பவெப்பமும், காற்றின் போக்கும், திடீர் புழுக்கமும் சொல்லிவிடும்.. மழை வரப்போவதை..




லேசான காற்றுடன், 'சொட்'டென விழுந்ததும், அப்படியே கம்ம்ன்னு எழுமே மண்மணம். ஆஹாஹா!!!. இதுக்காகவே எப்போடா மழை வரும்ன்னு இருக்கும் :-). முதல் மழையில் நனைஞ்சா, நல்லதாம். வெய்யிலினால் வந்த வேர்க்குரு, இன்னபிற சரும பிரச்சினைகளெல்லாம் ஓடிப்போயிடுமாம். இந்த ஊர்ல சொல்லிக்குவாங்க. அதனால மழைத்துளி விழுந்ததுமே,'ஹே...'ன்னு கூப்பாடோட, பசங்களெல்லாம் ஓடிப்போயி.. மழையில ஆட ஆரம்பிச்சுடுவாங்க. ஆட்டம் மட்டுமல்ல.. பாட்டும் உண்டு :-))


"யே..ரே, யே..ரே பாவுஸா,
துலா தேத்தோ பைஸா;
பைஸா ஜா(zha)லா கோட்டா,
பாவுஸ் ஆலா மோட்டா".


இது குழந்தைகளுக்கான ஒரு மராட்டிப்பாடல். இதுகளை பார்க்கும்போது, நமக்கே உற்சாகமாக இருக்கும். நாமளும் சின்னப்புள்ளையா இருக்கச்சே இப்படித்தானே மழையில் நனைஞ்சு விளையாடியிருப்போம். அதுவும் பள்ளிக்கூடத்துக்கு புறப்படும்போதுதான், கரெக்டா மழை வரும். வகுப்புக்கு லேட்டா போறதுக்கு ஒரு சாக்கு சொல்லலாம் :-)). பள்ளி விட்டு வரும்போது மழை வந்தா, இன்னும் ஜாலி. வீட்டுக்கு நனைஞ்சுக்கிட்டே வந்து, திட்டெல்லாம் வாங்குறதும் ஒரு இனிய அனுபவம்தானே. நமக்கு ஜூரம் வருதோ இல்லியோ, அம்மாக்களுக்கு டென்ஷன் ஜூரம் விறுவிறுன்னு ஏறும். ஆனா..அவங்க கொடுக்கிற சுக்குக்காப்பிக்காகவே அடிக்கடி மழையில் நனையலாம் :-))


எப்போடா வரும்ன்னு ஏங்க வைக்கிற மழைதான், சிலசமயம்.. ஏன்தான் இப்படி பழிவாங்குதோன்னு தோணவைக்கும். தேவையான அளவு பெஞ்சாத்தானே நல்ல முறையில விவசாயம் செய்ய முடியும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. மழைக்கப்புறம், பச்சைப்பசேல்ன்னு சுத்துவட்டாரமும், பூத்துக்குலுங்கும் பெயர்தெரியா காட்டுச்செடிகளுமா, ஒரே அமர்க்களமாத்தான் இருக்கு. காத்துல மிதந்து வர்ற சுட்ட மக்காச்சோள வாசனை , மும்பையின் மழைக்காலத்துக்கே இன்னும் அழகைக்கூட்டும்...


இந்த வருஷம், மும்பையில் ஓரளவு மழை பெஞ்சிருக்கு. ரொம்பவும் அடிச்சிப்பெஞ்ச மாதிரியே எனக்குத்தெரியலை. இந்தத்தடவை , மழையில் வெளியில் சுத்த அதிகம் வாய்ப்பு கிடைக்காததும் ,  அப்படி நினைக்கிறதுக்கு ஒரு காரணமா இருக்கலாம் :-))). "ரெண்டு மூணு நாள் விடாம பெஞ்சாத்தான், மழைக்கு அழகு :-)))). இந்தத்தடவை அப்படி ஒண்ணும் பெஞ்ச மாதிரியும் தெரியலை"..   இப்படி சலிச்சுக்கிட்டது அந்த மழைக்கே கேட்டிருச்சோ என்னவோ,.. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தின நாள் காற்றும், மழையுமா கொட்டோ கொட்டுன்னு கொட்டித்தீர்த்துட்டது.. கண்ணன் பிறந்தப்ப, இதேமாதிரிதான் புயலும் மழையுமா இருந்திச்சாம். அதனால, கிருஷ்ண ஜெயந்தி சமயம், மழை இப்படித்தான் பெய்யும்ன்னு இங்கே வந்தப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன் :-))


ஜூனில், மழை ஆரம்பிக்கும்போதே மழைக்காலத்துக்கான ஷாப்பிங்கும் ஆரம்பிக்கும். பள்ளிகளில் கறுப்பு நிற ரெயின் சேண்டல்கள்தான் கட்டாயம் போடணும். யூனிபார்ம் ஷூ போட்டுக்கிட்டுப்போனா, அபராதம் கட்டச்சொல்லும் பள்ளிகளும் உண்டு. மழையில் ஷூக்களின் உள்ளே, ஊறிப்போன கால்களுடன், கஷ்டப்பட்டுக்கொண்டு குழந்தைகள் இருப்பது இதனால் தவிர்க்கப்படுது. 


எங்கூர்ல 'நாரியல் பூர்ணிமா' வந்தாச்சுன்னா மழைக்காலம் முடியப்போவுதுன்னு அர்த்தம். மழைக்காலத்தில் கடலின் சீற்றம் அதிகமா இருப்பதால், மீன்பிடித்தொழிலுக்கு போகமுடியாம இருக்கிற மீனவ சகோதரர்கள், மறுபடியும் தொழிலுக்கு போகும்முன் கொண்டாடும் பண்டிகை இது. அனேகமா, ரக்ஷா பந்தனும், நாரியல் பூர்ணிமாவும் ஒரே தினத்தில்தான் வரும். அன்னிக்கி மேளதாளத்தோட, சொந்தபந்தம் சூழ கடற்கரைக்கு போவாங்க. அங்கே மழையின் அதிபதியான வருணதேவனுக்கு பூஜை செஞ்சுட்டு, கடலில் ஒரு தேங்காயை காணிக்கையா விட்டுட்டு வருவாங்க.  அதுக்கப்புறம் அவங்க தொழிலுக்கு போக ஆரம்பிச்சுடுவாங்க.


வினாயகர் சதுர்த்தியின் கடைசி நாளை, ஆனந்த சதுர்த்தின்னு சொல்லுவாங்க. அன்னிக்குத்தான் மிச்சம் மீதியிருக்கிற புள்ளையார்களையும் கரைப்பாங்க. அத்துடன் மழையும் முடிஞ்சுடும்ன்னு ஐதீகம். இந்த வருஷம் இப்பவே மழை முடியறதுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிச்சாச்சு. போன வாரம் ரெண்டு நாளா காலையில ஒரே பனிமூட்டம். பனி வர ஆரம்பிச்சாச்சுன்னா, மழை பொட்டியை கட்ட ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அணையப்போற விளக்கு கட்டக்கடைசியா சுடர்விட்டு எரியுற மாதிரி, ஜன்னலுக்கு வெளியே இடியும் மின்னலுமா வெளுத்துக்கட்டிக்கிட்டு இருக்கு. பெய்யும்போது அலுத்துக்கிட்டாலும், இனி இந்த மழையை ரசிக்க, சுட்ட சோளம் சாப்பிட.. அடுத்த வருஷம் வரை காத்திருக்கணுமேன்னு ஏக்கமா இருக்கு. சேர்ந்து விளையாடி, மகிழ்ந்து இருந்த தோழி திடீர்ன்னு ஊருக்கு கிளம்பின மாதிரிதான் இருக்கு :-)). அடுத்த வருஷமும் வரணும்ன்னு சந்தோஷமா சொல்லிக்கிறோம்...




Saturday, 7 August 2010

சும்மா இருப்பது எப்படி??...

பிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி??'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்காது. இதை ஏன் பரிசோதிச்சு பார்க்கக்கூடாது?..ன்னு ஒரு தோணல். சும்மா.. கொஞ்ச நாளைக்கு ப்ளாக்குக்கு லீவு வுட்டுட்டா என்ன?..

லீவ் விட்டுட்டு சும்மா இருந்தா, அடுத்து என்ன பதிவு போடலாம்.. எப்படி மேட்டர் தேத்தலாம்ன்னு துறுதுறுன்னு இருக்கிற மூளை துருப்பிடிச்சுடுமே :-). சும்மா இருக்கிற மனிதனின் மனசு, சாத்தானின் இருப்பிடம்ன்னு சும்மாவா சொன்னாங்க. சும்மாவே டென்ஷனான லைஃப்.. இதுல சாத்தானும் கூட்டணி வெச்சுக்கிட்டா கேக்கவா வேணும்.

மனுஷனுக்கு பிறக்கிறதிலிருந்து கடைசிவரை டென்ஷன்தான். பிறக்கும்போது, நல்லபடியா பிறக்கணுமேன்னு டென்ஷன்.. அப்புறம் வளர்ச்சிகள் சரியா இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்ல ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்லாப்படிச்சு நல்ல மார்க் வாங்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வேலை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் வாழ்க்கைல பிரச்சினை இல்லாம இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் காலாகாலத்துல குழந்தை பிறக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் அதை நல்லபடியா வளர்க்கணுமேன்னு டென்ஷன். அப்புறம்........O. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை மறைமுகமா குறிப்பிட்டிருக்கேனாக்கும். இதில் பதிவு போடும் டென்ஷனை சேர்க்கலை. :-)). (அதையும் சேர்த்தா தலையை பிச்சிக்க வேண்டியிருக்கும்)

டென்ஷனை குறைக்க நிறைய வழிகள் இருக்கு. நெறைய பேர் பாட்டு கேக்கச்சொல்லி சிபாரிசு பண்ணுவாங்க. அதுக்காக வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு எந்த நேரமும் பாட்டுக்கேட்டுக்கிட்டே இருந்தா.. அப்புறம், வீட்லயோ, இல்லை.. ஆப்பீசிலோ , பாட்டுக்கேக்க வேண்டியிருக்கும். விருப்பமான பாடல்களை கேட்டுக்கிட்டே வேலைசெஞ்சா, அலுப்பே தெரியாது. ஆடிப்பாடி வேலைசெஞ்சா அலுப்பிருக்காதுன்னு சும்மாவா சொல்லிவெச்சாங்க..


எங்கூர்ல சும்மாவே ஆடுவாங்க.. இப்போ பண்டிகை சீசன் வேற தொடங்கியாச்சு. இனி நவராத்திரி முடியறவரை, அங்கங்க கர்பா டான்ஸ் வகுப்புகள் நடக்கும். கர்பான்னா வேற ஒண்ணுமில்லை.. நம்மூர் கும்மிதான். வலையில் அடிக்கிற கும்மியில்லை... நிஜமான கும்மி :-)). டென்ஷனா இருக்கும்போதோ, இல்லை ஜாலிமூட்ல இருக்கும்போதோ, பிடிச்ச பாட்டை ஒலிக்க விட்டுட்டு, வேர்க்கவிறுவிறுக்க ஒரு ஆட்டம் ஆடிப்பாருங்க. மனசும் உடம்பும் அப்படியே லேசாகி காத்துல பறக்கிறமாதிரி இருக்கும்.

பக்கத்துல பூங்கா இருந்தா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம். குழந்தைகள் விளையாடுறதைப்பாத்துக்கிட்டே இருந்தா எல்லா டென்ஷனையும் மறந்துடுவீங்க. யாரும் இல்லைன்னா அந்த ஊஞ்சலில் உக்காந்து, கொஞ்ச நேரம் ஆடிப்பாருங்க. என்ன தப்பு??. (தோட்டக்காரர் பார்த்தா ஆபத்து). அப்பப்போ, நமக்குள்ள இருக்கிற சின்னக்குழந்தையை, கொஞ்சம் வெளியே வரவிடுங்க. ஒருமுறைதான் பிறக்கிறோம்.. ஒருமுறைதான் இறக்கிறோம். இடைப்பட்ட காலத்தை சந்தோஷமாக, பிறருக்கு உபயோகமாக கழிப்பதை விட்டுட்டு என்ன சாதிக்கப்போறோம்??.

டீயில ஈ விழுந்துடுச்சேன்னு கவலைப்படறவனைவிட, 'என்ன்ன்ன பெருசா.. ரெண்டு சொட்டு டீயை வேண்ணா குடிச்சிருக்கும்' ன்னு சமாதானப்படுத்திக்கிட்டு, அதை தூக்கிப்போட்டுட்டு.. டீயை குடிக்கிறவந்தான் வாழ்க்கையில் சந்தோஷமா இருப்பான் :-)))

தலைப்புக்கும் இடுகைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?.. ஹி..ஹி.. இந்த வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிக்கணும்ன்னா, அவ்வப்போது சும்மா இருந்தாத்தான் முடியும், அவ்வளவுதான்.... வேணும்ன்னா, இதெல்லாம் நம்மை ரீசார்ஜ் செய்யுதுன்னு நினைச்சுக்கோங்களேன் :-))).



LinkWithin

Related Posts with Thumbnails