Monday 31 October 2011

எது சரி?.. (வல்லமையில் வெளியானது)

படம் கொடுத்த கூகிளாத்தாவுக்கு நன்றி
சிவகாமிக்குக் கோபம் கோபமாக வந்தது.. “என்ன மனுஷர் இவர்?.. ஊர்ல உலகத்துல இல்லாததையா நான் கேட்டுப்பிட்டேன். வாங்கித் தரத் துப்பில்லைன்னாலும்  ஆ..ஊ..ன்னா ஒண்ணொண்ணுக்கும் லெக்சர் கொடுக்கறதுல ஒண்ணும் குறைச்சலில்லை. போயும் போயும் இப்படி ஒரு கசத்துல தள்ளினாளே எங்கப்பாம்மா.. அவங்களைச் சொல்லணும்…”. இப்ப புரிந்திருக்குமே யார் மேல் கோபமென்று. கொஞ்சம் சத்தமாகவே முணுமுணுத்துவிட்டாள் போலிருக்கிறது. கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்த சியாமளி வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தது.

“அம்மா.. குளிச்சி சாமி கும்பிட்டாச்சு. டிபன் ரெடியா?.. ஸ்கூலுக்கு நேரமாகுது..” என்றபடி வந்த பாபுவின் கண்களில் சியாமளி மாட்டினாள்.

“நீ ஏண்டி காலங்காத்தால லூசு மாதிரி சிரிச்சுட்டிருக்கே..”

“ஐயோ.. அண்ணா, கத்தாதே. அப்பாவுக்கு அர்ச்சனை நடந்துட்டிருக்கு. நீ அம்மாட்ட மாட்டினா உனக்கும் நடக்கும்.. உஷ்..” உதடுகளை ஆட்காட்டி விரலால் சிறை வைத்து, குறும்பாய் எச்சரித்தாள்.

“அர்ச்சனை எதுக்காம்?..”

“இன்னிக்கு அட்சய திருதியையாமில்ல.. அதுக்குத்தான் அப்பாக்கு சாவி கொடுத்தாறது”

“இந்த அம்மாவுக்கும்… “ என்று என்னவோ சொல்ல வந்தவன் நிறுத்திக் கொண்டான். அம்மா மேல் பயமெல்லாம் ஒன்றுமில்லை. குளிக்கப் போன அப்பா திரும்பி வந்து செருப்பை வாசல் நடையில் கழட்டி விடும் சத்தம் கேட்டதுதான் காரணம்.

வீட்டில் சகல வசதிகள் இருந்தபோதிலும் பெருமாளுக்கு ஆற்றில் போய்க் குளிப்பதுதான் பிடிக்கும். காலையில் எழுந்ததும், கரகரவென்று தலையில் ஒரு கை, உடம்பில் ஒரு கை எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு, பல் துலக்கும் ப்ரஷ், பற்பசை, உடம்புக்கும் துணிக்கும் தனித்தனி சோப்புகள், நாகர்கோவிலுக்குப் போயிருந்தபோது தலை துவட்டவென்று  வாங்கி வந்த ஈரிழைத் துண்டு என்று சகலமும் அடக்கிய ஒரு சின்ன பிளாஸ்டிக் வாளி சகிதம் சைக்கிளில் ஆற்றுக்குக் கிளம்பி விடுவார்.

அவரைப் பொறுத்தவரை அந்தப் பயணம் குளிக்கப் போவதற்கு மட்டுமானதல்ல. வழியெங்கும் எதிர்ப்படும் அறிமுகமான மனிதர்களிடம் ரெண்டொரு வார்த்தைகள் பேசியபடி, ஆற்றுக்குப் போய் ஏற்கனவே வந்திருக்கும் நண்பர்களுடன் நாட்டு நடப்புகளையும் அணிந்திருக்கும் துணிகளையும் துவைத்து அலசிப் போட்டு விட்டு, கரையிலிருக்கும் ஆலயத்துக்குப் போவார். அமைதியான, கல் பாவிய, சில்லென்ற பிரகாரத்தில் கால் வைக்கும் போதே சொல்லத் தெரியாத ஏதோவொரு உணர்வு அவரைச் சூழ்ந்து கொள்ளும். பழகி விட்டால் சிலருக்குப் பக்தியும் போதையூட்டத்தான் செய்கிறது.

கால் மணி போல் அந்தச் சூழ் நிலையில் லயித்து விட்டு, நெற்றிக்கு இட்டுக் கொண்டு, பூவையோ துளசியையோ வலது காதில் செருகிக் கொண்டு விட்டு வீடு திரும்புவார். இது நல்லபடியாக நடந்து விட்டால் அன்றைய நாளுக்கான எனர்ஜி அவருக்கு உத்தரவாதம்.

வீட்டுக்கு வந்து ஈரத்துணிகளைக் கொடியில் காயப் போட்டு விட்டு, ‘அப்பாடா’ என்று பேப்பரும் கையுமாக வந்தமர்ந்தார். ‘ணங்’கென்று தம்ளர் வைக்கப்பட்ட விதத்திலேயே வைத்தவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்து போனது. தம்ளர் வைக்கப்பட்ட வேகம் தாங்காமல் அப்படியும் இப்படியும் ஆடி, காப்பி அலையடித்துக் கொண்டிருந்தது.

“அலை வர்ற வேகத்தைப் பார்த்தா அடுத்தது சுனாமி வரும் போலிருக்கே” காப்பியைக் கையிலெடுத்துக் கொண்டவர் செய்த கேலி அவளது கோபத்தை விசிறி விட்டது.

“சுனாமி அழிக்கிறதுக்கு மட்டுமில்லை.. சிலசமயம் ஆக்கறதுக்கும் புறப்படறதுண்டு.. உங்களுக்குத் தெரியாததா என்ன”

“ஏம்மா.. நான் நேரிடையாவே கேக்கறேன். இன்னிக்குத் தங்கம் வாங்கியே ஆகணும்ன்னு அடம் பிடிச்சு ரெண்டு நாளா கண்ணைக் கசக்கறது எதை ஆக்கறதுக்காம்”.. காப்பியை ஒரு வாய் உறிஞ்சிக் விட்டு கேட்டார்.

“ஏங்க,.. நான் என்ன எனக்காகவா நகை நட்டு சேர்க்கிறேன். நமக்கு ஒரு பெண் குழந்தை இருக்குங்கறதையே நீங்க அடிக்கடி மறந்துடுறீங்க. இப்படியாப்பட்ட சந்தர்ப்பங்கள்ல கொஞ்சம் கொஞ்சமா சேமிச்சாத்தானே அவ வளர்ந்து நின்னு நாளைக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு வரும் போது நாமளும் கௌரவமா செய்ய முடியும்.”

“சிவகாமி,.. அவளை அவளுக்காகவே கொத்திக்கிட்டுப் போக எந்த ராஜகுமாரனாவது வராமலா போயிடுவான்..?”

“நீங்க இப்படியே விதண்டாவாதம் செஞ்சுக்கிட்டே இருங்க.”

“அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கினா நல்லதுன்னுதான் இது நாள் வரைக்கும் சொல்லிட்டிருந்தே. இப்ப திடீர்ன்னு ப்ளாட்டினத்துல வாங்கினாத்தான் ஆச்சுன்னா எப்டிம்மா?...”

“இன்னிக்கு வெண்மையான கலர்ல வாங்கினா இன்னும் விசேஷமாம். சொல்லிக்கிட்டாங்க. கோடி வீட்டு பூர்ணாவுலேர்ந்து பக்கத்து வீட்டுக் கீதா வரைக்கும் முன்னாடியே போய் நகைக்கடையில டிசைன் செலக்ட் செஞ்சு ஆர்டரும் கொடுத்துட்டாங்க. இன்னிக்குப் போய் வாங்கியாரப் போறாங்க. நான் ஒரு சின்ன மோதிரமாச்சும் வாங்கலைன்னா, அப்றம் உங்களுக்கு என்ன பெருமை?.. பாங்க் மானேஜர் பொண்டாட்டின்னு சொல்லிக்கிறதுல எனக்குத்தான் என்ன கௌரவம் இருக்கும்?.. நான் என்ன எனக்காகவா கேக்கறேன்?..”

“இப்ப என்னதான் செய்யணும்ங்கறே?..”

“எங்கூட கடைக்கு வாங்க.. அது போதும்…” என்றபடி காலி டம்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

“இட்லிக்கு என்ன தொட்டுக்கறீங்க?.. தக்காளிச்சட்னியா?.. முட்டைக்கோஸ் சட்னியா?..” என்று கேட்டபடி மறுபடியும் வெளியே வந்தவள், கூடத்தில் அவரைக் காணாமல் திகைத்தாள்.

“எங்கேடா உங்கப்பா?...”

“இப்பத்தான் சட்டையைப் போட்டுக்கிட்டு வெளியே கிளம்பினார்”

‘சாப்பிடக் கூட செய்யாம எங்க போயிட்டார்?.. ‘ என்று புருபுருத்தபடியே அடுக்களை வேலைகளில் மூழ்கிப் போனாள். டிபன் தயார் செய்து பிள்ளைகளைச் சாப்பிட வைத்து விட்டு, அடுப்பிலிருந்த பொரியலைக் கிளறி விட்டாள்.

“செவாமி.. இந்தா… இந்தப் பைகளைக் கொஞ்சம் பிடி..” என்ற கணவரின் குரல் கேட்டு வாசலுக்கு விரைந்த சிவகாமி அந்தப் பொருட்களைப் பார்த்ததும் திகைத்து நின்றாள்.

“ஏங்க,.. இதெல்லாம் எதுக்கு. அதான் வீட்ல ஏற்கனவே இருக்கே. வேலை மெனக்கெட்டு இத வாங்கறதுக்காகவா காலைல வெளிய கெளம்புனீங்க..”

“செவாமி,.. அட்சய திருதியைக்கு வெண்மையான பொருட்களை வாங்கணும்ன்னு நீதானே சொன்னே..”

“ஆமா சொன்னேன்..”

“அப்படி வாங்கினா வீட்ல வாழ் நாள் முழுக்க அந்தப் பொருட்களுக்கான பஞ்சம் ஏற்படாதுன்னும் சொன்னே.. இல்லியா?..”

“அதுக்கென்ன இப்ப..?”

“அதுக்காகத்தான் இதுகளை வாங்கியாந்தேன். இதுகளும் நல்ல வெள்ளை நிறத்துலதானே இருக்கு. எதுக்குத் தட்டுப்பாடு வந்தாலும் இந்த ரெண்டுக்கும் தட்டுப்பாடு வராம இருந்தாலே நமக்கு ஆண்டவன் அருள் பரிபூரணமா இருக்குன்னு அர்த்தம். அந்தக் காலத்துல அட்சய திருதியை கொண்டாடுன நோக்கமே வேற செவாமி. பக்தி, அன்னதானம்ன்னு இருந்தது இப்ப வியாபார நோக்கத்தால திசை திரும்பி தடுமாறிக்கிட்டு இருக்கு. மத்தவங்கல்லாம் செய்யறாங்கன்னு சொல்லிச் சொல்லியே ஒவ்வொண்ணிலயும் உண்மையான நோக்கத்தை  நாம நம்ம வசதிக்காக மறந்துடறோம். இருக்கப்பட்டவன் நிலை பரவாயில்லை. ஆனா, வசதி குறைஞ்சவங்களும் கந்து வட்டி அது இதுன்னு கடன் பட்டாவது இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு அடிமையாகறதைப் பார்க்கறச்சே கஷ்டமாருக்கு செவாமி..”

“கடன் பட்டாலும் அதைக் கொண்டு தங்கம் தானே வாங்குறாங்க?.. இல்லைன்னா, ஏழைகள் கண்ணுல தங்கத்தைப் பார்க்க முடியுமா..?”

“வாங்குறதை மட்டும்தான் நீ பார்க்கறே.. அப்டி வாங்கினப்புறம் கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாம மறுபடி அதே தங்கத்தை அடகு வெச்சு கடனைக் கட்டறாங்க. இதுல எத்தனை பேரோட பொருட்கள் மூழ்கிப் போயிடுதுன்னு உனக்குத் தெரியுமா?.. அவங்க இன்னும் கடனாளியா ஆகறதுதான் மிச்சம். பாங்க்ல தினம்தினம் எத்தனை பாக்கறேன். சரி.. சரி,.. இந்த உப்பைக் கொண்டு போய் சமையலறையில் வை. இந்தப் பாலைக் காய்ச்சிப் பால் பாயசம் பண்ணி சுவாமிக்கு நைவேத்தியம் செய். என்ன பார்க்கறே?..இதுகளும் வெண்மை நிறத்துலதானே இருக்குது. நீ சொன்னபடி அட்சய திருதியைக்கு வெண்மை நிறப் பொருட்களை வாங்கியாச்சு.”

கையில் பாக்கெட்டுகளை வைத்துக் கொண்டு தலை சுற்றி வாசற்படியிலேயே அமர்ந்திருந்தாள் சிவகாமி. 


டிஸ்கி: வல்லமையில் எழுதிய இந்தச் சிறுகதையை இங்கியும் பகிர்ந்துக்கறேன் :-)



Thursday 20 October 2011

மீண்டும் துளிர்த்தது..


படம் கொடுத்த இணையவள்ளலுக்கு நன்றி.
சூட்கேஸையும் கைப்பையையும் எடுத்துக்கொண்டு ரயிலிலிருந்து இறங்கிய கீதா, மக்கள் வெள்ளத்தினூடே நீந்தி வேகமாக வந்து கொண்டிருந்த ரமேஷைக் கண்டதும் தேர்தல் நேரத்து இலவச அறிவிப்புகளைக் கேட்ட வாக்காளர் போல் மலர்ந்தாள்.

“ஹாய்… பிரயாணம் நல்லாயிருந்ததா?..” சூட்கேஸை அவன் எடுத்துக் கொண்டான்.

“ஓயெஸ்.. ரொம்ப நல்லாருந்தது. ஃப்ளைட் ரத்தானாலும் ட்ரெயின்ல இடம் கிடைச்சது நல்லதாப் போச்சு. நேத்திக்கு செம மழை இல்லே?. ப்பா!!..  ஆமா, நீரஜ் எங்கே?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன். நீங்க போயி அம்மாவைக் கூட்டிட்டு வாங்கன்னு சொல்லிட்டு சார் காலையிலயே கிளம்பிப் போயிட்டார்..”

“ம்..” என்று யோசனையுடன் தலையாட்டிக் கொண்டாள், டிடிஆரிடம் தன்னுடைய டிக்கெட்டை நீட்டியபடியே.

“வேலை ரொம்ப அதிகமோ.. ஒரு வாரத்துல இன்னும் ஸ்லிம்மாகி கல்யாணத்தப்ப இருந்த மாதிரியே தெரியுறியே..” குறும்புடன் கேட்டபடியே கையிலிருந்த சூட்கேஸை காரின் டிக்கியில் போட்டான். வேண்டுமென்றே போலியான மரியாதையுடன் அவள் ஏறுவதற்காக காரின் முன் கதவைத் திறந்து விட்டு, தன் வயிற்றில் கையை மடித்துப் படிய விட்டுக் கொண்டு லேசாக தலை வணங்கினான்.

சற்றுப் பூசினாற்ப் போல் ஆகி விட்டிருந்ததைத்தான் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டவள், இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அவனை குறுகுறுவென்று ஏற இறங்கப் பார்த்தாள்.

“நீங்க மட்டும் என்னவாம்?.. என்னைப் பிரிஞ்ச சோகத்துல இன்னும்தான் இளைச்சுப் போயிருக்கீங்க..” என்றபடி அவன் தொப்பையைச் சுட்டிக் காட்டியவள், “ஒரு வாரமா நான் இல்லைன்னதும் அப்பாவும் புள்ளையும் ஹோட்டல், சினிமான்னு ஜாலியா இருந்திருப்பீங்களே..” என்றபடி கதவைச் சாத்திக் கொண்டாள்.

ஜன நெரிசலில் திருவாரூர்த் தேர் போல் மிக மெதுவாக ஊர்ந்து, ரயில் நிலையத்தின் பார்க்கிங் ஏரியாவிலிருந்து வெளி வந்த கார், சாலையை அடைந்ததும் வெண்ணையாய் வழுக்கிக் கொண்டு பறந்தது.

அது வரையில் போக்குவரத்தில் கவனமாக இருந்தவன், அப்போதுதான் அவள் கேட்டதே காதில் விழுந்தாற் போல், “ம்… என்னவோ கேட்டியே?.. என்னது?..” என்றான்.

“தெரியுமே.. முக்கியமானதெல்லாம் காதுல விழாதே”

“சரி.. சரி.. நம்ம சண்டையை அப்புறம் வெச்சுக்கலாம்.. கான்ஃபரன்ஸ் நல்லபடியா நடந்துதா?..”

“ம்.. சூபர்ப். எங்க கிளையைப் பத்தி நான் கொடுத்த ப்ரசண்டேஷன் ஹெட் ஆபீஸ்ல இருக்கறவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. எங்க வேலை மேல ரொம்ப திருப்தி அவங்களுக்கு.. அனேகமா இந்த வருஷத்திய சிறந்த கிளைக்கான ட்ராபி எங்களுக்குத்தான் கிடைக்கும்..”

“உனக்கும் சீக்கிரமே ப்ரமோஷனும் கிடைக்கும்ன்னு சொல்லு..”

முதல் நாள் சூறைக் காற்றுடன் பெய்திருந்த மழை வழியெங்கும் நிகழ்த்தியிருந்த திருவிளையாடல்களால் சிற்சில இடங்களில் மெதுவாக ஊர்ந்தும், சில இடங்களில் விழுந்திருந்த மரங்களை நகராட்சியினர் அப்புறப் படுத்திக் கொண்டிருந்ததால் பாதையை மாற்றிக் கொண்டும் செல்ல வேண்டியிருந்தது.

வீட்டுக்குப் போய் ‘அக்கடா’ என்று படுக்கையில் விழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. மழையின் காரணமாக அவர்கள் திரும்பி வருவதாயிருந்த விமானம் ரத்தாகி விட, அலுவலகத்தார் எங்கெங்கோ அலைந்து யார் யாரையோ பிடித்து ரயிலில் டிக்கெட் ஏற்பாடு செய்து தந்திருந்தார்கள். அதுவுமே ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்ததில் அவள் மிகவும் களைத்திருந்தாள்.

வீட்டினுள் நுழைந்ததுமே, ஒரு வாரமாக அவள் இல்லாத வீட்டின் அலங்கோலங்கள் அவளுக்கு மலைப்பைக் கொடுத்தன. டீபாயெங்கும் சிந்தியிருந்த உணவுத் துணுக்குகளும், படிந்திருந்த வட்ட வட்டமான காபிக்கோப்பை அடையாளங்களும், இறைந்திருந்த பத்திரிகைகளும் அவளை வரவேற்றன. அறை முழுதும் ஓட்டிய ஒரு பார்வையிலேயே வீடு முழுசும் எப்படியிருக்குமென்று புரிந்து போயிற்று. டிவியின் மேல் படிந்திருந்த தூசியை விரலால் வழித்தெடுத்தவள், ஒரு பெருமூச்சையும் அதனுடன் சேர்த்து எறிந்தாள்.

குளித்து ஃப்ரெஷ்ஷாகி ஹாலில் வந்து அமர்ந்தவளின் பார்வை கடிகாரத்தைத் தொட்டுத் தடவியது. இரவு ஒன்பது மணியாகியிருந்தது. கவலையுடன் வாசலைப் பார்த்தாள்.

“ஏங்க.. இந்தப் பிள்ளை, யார் வீட்டுக்குப் போனான்.. உங்க கிட்ட ஏதாச்சும் சொன்னானா?..”

“ஃப்ரெண்டு வீட்டுக்குப் போறேன்னான். யார் என்னன்னு கேட்டுக்கலை..”

“நானில்லாத இந்த ஒரு வாரத்துலயாவது பொறுப்பு வந்து, அவன் கிட்ட மாற்றம் இருக்கும்ன்னு நினைச்சா அப்படியேதான் இருக்கான். ஏங்க!!.. நீங்க அவன் கிட்ட பேசிப் பார்க்கக் கூடாதா?..”

“நீயாச்சு.. உன் பிள்ளையாச்சு.. பஞ்சாயத்துக்கு நான் வரலைப்பா.. ஆளை விடு..” என்றபடி கார்கள் விர்ர்ரிக் கொண்டிருந்த ஏதோவொரு சானலில் மூழ்கி விட்டான்.

“ம்க்கூம்.. என் பிள்ளையா?.. ஸ்போர்ட்ஸ்ல ஜெயிச்சு கப்போட வரச்சே.. உங்க பிள்ளைன்னு மார் தட்டிக்குவீங்கல்ல.. இனிமே அப்படிச் சொல்லுங்க.. அப்ப பேசிக்கறேன் உங்களை..”

பத்து மணிக்கப்புறம் வந்த நீரஜ், “ஹாய் மா. எப்போ வந்தீங்க?. சச்சின் வீட்ல சாப்பிட்டுட்டேன். எனக்காகக் காத்திருக்காம தூங்குங்க..” என்றபடி அவனது அறையை நோக்கி நகர்ந்தான்.

“இருடா பெரிய மனுஷா… கொஞ்சம் பாலையாவது சாப்ட்டுட்டுப் படு..” என்றபடி அடுக்களைக்குள் சென்று, பதமாகக் காய்ச்சிய பாலை, பிள்ளையின் கையில் நீட்டும்போது, சிகரெட்டின் நிகோடின் வாசனையும், சூயிங்கம் வாசனையும் கலந்து வீசும் மணம் எங்கிருந்தோ வருவதை உணர்ந்தாள். அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

‘சே.. சே.. இருக்காது..’ என்று செய்து கொண்ட சமாதானத்தில் ஒரு கூடை மண்ணை அள்ளிக் கொட்டி விட்டுச் சென்றது, “குட் நைட் .. மா” என்றபோது அவன் வாயிலிருந்து வந்த அதே வாசனை.

என்ன செய்வதென்று புரியவில்லை அவளுக்கு. பயணக் களைப்பால் உடல் ஓய்வுக்குக் கெஞ்சிய போதிலும் இரவு முழுவதும் பொட்டு உறக்கமில்லாமல் புரண்டு கொண்டிருந்தாள். ‘என் பிள்ளையா இப்படி?..’ என்ற ஒற்றைக் கேள்வி அவளைத் தூங்க விடாமல் செய்திருந்தது. அதிகாலையில் லேசாகக் கண்ணயர்ந்தவள், வழக்கமான நேரத்தில் விழிப்புத் தட்டவும், அதற்கு மேல் படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து பால்கனிக்கு வந்தாள்.

‘இன்னிக்குக் காப்பிய தோட்டத்துல உக்காந்து குடிச்சா என்ன?..’ என்று தோன்றவும், கையில் காபியுடன் தோட்டத்திலிருந்த நாற்காலிகளை விடுத்து, ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள். அது அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம். வழக்கமான இரும்பு, மரம் போன்ற சமாச்சாரங்களை விடுத்து, ஃபைபரால் செய்யப்பட்ட ஊஞ்சல் அவள் சொல்லியிருந்தபடி மாமரக் கிளையில் தொங்க விடப் பட்டிருந்தது. காபியையும் செய்தித்தாளையும் முடித்து விட்டு, தோட்டத்தைச் சுற்றி வாக்கிங் புறப்பட்டாள்.

மரத்தையே பெயர்த்தெடுத்து வீசிய சூறைக்காற்று, இலவம் பஞ்சை விட்டு வைக்குமா என்ன?.. வானரர்கள் புகுந்த கிஷ்கிந்தையாய்ச் சிதறிக் கிடந்தது அவளது தோட்டம். ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்து கிடந்ததில், அது தக்காளியா கத்தரியா என்று பகுத்தறிய முடியாதபடி பின்னிக் கிடந்தன வாடி வதங்கிய இலைகளுடன் இருந்த செடிகள். செவ்வரளியின் கிளைகள் முறிந்து தொங்கின. வாசற்பக்கமிருந்த முல்லைக் கொடியை பெயர்த்தெடுத்து வீசிய காற்று அதை கரும்பின் மேல் படர விட்டிருந்தது. புறக்கடையில் அவள் ஆசையாக கேரளாவிலிருந்து கொண்டு வந்து நட்டு வளர்த்து வந்த செவ்வாழை மரம், அவள் ஊருக்குக் கிளம்பும்போது, இப்பவோ அப்பவோ என்று குலை தள்ளத் தயாராக இருந்தது. இப்போது இரண்டு சீப்பு பிஞ்சுகளும் தரையில் புரள, எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் போல் குனிந்து கிடந்தது.

சிறு பெருமூச்சுடன் தோட்டத்தைச் சுற்றி வந்தவளின் கண்கள், தோட்டம் பராமரிப்பில்லாமல் காய்ந்த சருகுகள் கூட்டப்படாமல் கிடந்ததை கவனிக்கத் தவறவில்லை. முதல் நாள் பெய்த மழையைத் தவிர்த்து, அவை தண்ணீர் கண்டு குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது ஆகியிருக்கும் என்பதை லேசாக காயத் தொடங்கியிருந்த இலைகள் காட்டிக் கொடுத்தன.

“வாடிம்மா.. ஊர்லேருந்து வந்தாச்சா?..” என்றபடி கையில் ஒரு சிறு ப்ளாஸ்டிக் கூடையுடன் நுழைந்தாள் பக்கத்து வீட்டு ஜமுனா மாமி. கீதா வீட்டுப் பூக்களின் ஒரு பகுதி, மாமியின் வீட்டுப் பூஜையறையை அலங்கரிப்பது வழக்கம். வரும் போதெல்லாம் முதல் நாளே பறித்துச் சென்று அழகாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரத்தை, கீதாவுக்கு கொண்டு வந்து கொடுப்பாள். பிரதியுபகாரமாக இல்லை.. ‘இவளும் என் பொண்ணாட்டம்தானே..’ என்ற நினைப்பால்.

“நீ ஆத்துல இல்லைன்னா நேக்கு என்னவோ வெறிச்சோட்ன மாதிரி இருக்குடி. ஆமா, காப்பி குடிச்சயா?.. புள்ளாண்டான் ஏந்துக்கலையா இன்னும்?.. நீ இல்லைன்னா, ரெண்டு பேருக்குமே துளிர் விட்டுடுது. அதென்ன!!.. ஒரு நாளைப்போல தெனமும் கொட்டமடிக்கறது? நன்னால்லை பார்த்துக்கோ.” பதிலை எதிர்பாராமல் மாமியின் கையும் வாயும் வேகமாகத் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தன. கூடை நிரம்பியதும், “வரேண்டிம்மா.. மாமா ஏந்து குளிக்கப் போயிட்டார். அடுப்பில் பாலை வெச்சுட்டு வந்த்ருக்கேன்” என்றபடி போய் விட்டாள். அவள் அப்படித்தான்.

அன்றும் மறு நாளும் அலுவலகத்துக்கு விடுமுறையாக இருந்தது அவளுக்கு வசதியாய்ப் போய் விட்டது. பக்கத்திலிருந்த நர்சரியில் சொல்லி தோட்டத்தை சீரமைக்க ஆள் கிடைக்குமா என்று விசாரித்து வந்தாள். வந்தவனின் உதவியுடன் முறிந்து கிடந்த கிளைகளைக் கழித்து, காய்ந்த செடிகளை அப்புறப் படுத்தி, குப்பை கூளங்களையெல்லாம் சுத்தப் படுத்தி நிமிர்ந்த பின் தான் ஆசுவாசமாக இருந்தது.

மண்ணைக் கொத்திச் சீரமைத்து சமப் படுத்தி விட்டு, “நாளைக்கு உரம் கொண்டாந்து போடறேன்” என்று சொல்லிப் போனவன், கொண்டு வந்து கொட்டிய இயற்கையுரத்தை அவனது உதவியுடனேயே தோட்டத்திற்குப் போட்டாள்.

அதன் பின்னான வார நாட்கள் வழக்கம் போல் அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாய் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. நீரஜ் இப்போதெல்லாம் விட்டேத்தியாய் இருப்பதாய்ப் பட்டது. படிப்பிலும் முன் போல் அக்கறை காட்டுவதாய்த் தெரியவில்லை. ‘சரி,.. இளம் பருவம். அப்படித்தான் இருக்கும். அவன் போக்குல விட்டுத்தான் பிடிக்கணும்’ என்று எண்ணினாலும், ‘தும்பை அறுத்துக்கிட்டு காளை ஓடிருமோ?’ என்று கவலையாகவும் இருந்தது.

வழக்கம் போல் காலை நடைக்கு தோட்டத்தைச் சுற்றி வந்த அவளது கால்கள், அவளுக்குப் பிரியமான மருதாணிச் செடியின் அருகே வந்து நின்றன. ஒரு வாரமான இடை விடாத உழைப்பும், காட்டிய கவனமும், கொட்டியிருந்த உரமும் அவளது தோட்டத்தை பழைய பொலிவான நிலைக்கு மெதுவாகத் திரும்பக் கொண்டு வந்து கொண்டிருந்தன. மருதாணியின் இலைகளை மெல்ல வருடிக் கொண்டிருந்தபோது, மகனைப்பற்றிய தனது கவலையை நினைத்து அவளுக்கே சிரிப்பு வந்தது. ‘அலுவலகத்தில் அத்தனை பேரை சமாளிக்கிறேன். ஒரு சின்னப் பையனை எப்படிச் சமாளிப்பதுன்னு கவலைப் படுறேனே!!.. இதெல்லாம் ஆரம்பத்துலயே கவனிச்சுட்டா சரி செஞ்சுக்க முடியாதா என்ன?. ஒரு வாரமா நல்லாக் கவனிச்சதும், இனி பிழைக்காதுன்னு நினைச்ச ஓரறிவுள்ள செடிகளே மறுபடியும் பிழைச்சு, பச்சைப் பசேர்ன்னு எப்படி அழகா துளிர் விட்டு நிக்குது. ஆறறிவுள்ள மனுஷனைத் துளிர்க்க வைக்க முடியாதா!!..”

இப்படியொரு தீர்வு மனதில் பிறந்ததும், மனசு லேசாகி உலகமே அழகாக மாறி விட்டது போலிருந்தது, அவளுக்கு. பன்னீர் ரோஜாவை முகர்ந்து கொண்டே ஏதோவொரு பிடித்தமான பாடலை அவள் முணுமுணுக்க, அவளுக்குப் போட்டியாக இனிமையாக குரலெழுப்பியது கொன்றைப் பூக்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஒரு தேன்சிட்டு.


டிஸ்கி: வல்லமையில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதையை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன்.



Monday 17 October 2011

பூந்தோட்டம்.. (17-10-11 அன்று பூத்தவை)

தாமரை:
ஆயிரம்தான் சொல்லுங்க.. இயற்கைக்கு அடுத்தபடியா  அமைதியையும் நிம்மதியையும் மனுஷனோட வாழ்க்கையில் ரெண்டறக் கலந்த பாடல்கள்தான் கொடுக்குது. அது நம்மூரு நாட்டுப்பாடல்களானாலும் சரி, உலகப் புகழ் பெற்ற கஜல் பாடல்களானாலும் சரி. பெரும்பாலும் உருதுக் கவிதைகளே கஜல்ல பாடப்படுது. கஜல் பாடல்களோட முடிசூடா மன்னர் ஜக்ஜீத் சிங். பங்கஜ் உதாஸ் உட்பட நிறையப் பேர் கஜல் பாடல்களுக்காக பெயர் வாங்கியிருந்தாலும், இவரோடது ஒப்புமை சொல்ல முடியாதது. 1941-ல் ராஜஸ்தான்ல பிறந்த இவருக்கு, 'பண்டிட் ச்சகன் லால் ஷர்மா, உஸ்தாத் ஜாம்லால் கான்' ரெண்டு பேரும் குருக்களா இருந்திருக்காங்க. மும்பைக்கு வந்து பாடத் தொடங்கியவரை, "Unforgettables"ங்கற இவரோட கஜல் ஆல்பம்தான் முதன் முதல்ல புகழேணியில் ஏத்தி வெச்சதுன்னு சொல்லப் படுது. அதுக்கப்புறம் இவருக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

இவரோட மனைவி பேரும் சித்ராதான். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை அளிச்சிருக்காங்க. இசையுலகத்துல இவங்கதான் முதன்முதல்ல (நிஜ)ஜோடியா பாடினவங்கன்னும் சொல்றாங்க. 1987-ல் வெளியான இவங்களோட "Beyond time"ங்கற ஆல்பம்தான் முதன் முதல்ல டிஜிட்டல்ல பதிவு செய்யப்பட்டதாம். ஜக்ஜீத் சிங்கிற்கு சமூக சேவையிலயும் ஆர்வம் உண்டு. அடிக்கடி அதுக்காகவே நிகழ்ச்சிகள் நடத்தி, வர்ற பணத்தையெல்லாம் சமூக அமைப்புகளுக்குக் கொடுத்துடுவாராம். இப்படிப்பட்ட பெருமையுடைய அவருக்கு நம்ம இந்திய அரசாங்கம் 2003-ல் பத்மபூஷண் விருது கொடுத்து கௌரவிச்சிருக்கு.

இன்னிக்கெல்லாம் அவரோட பாடல்களைக் கேட்டுக் கிட்டேயிருக்கலாம். கடவுளுக்கும் அவரோட பாடல்களைக் கேக்க ஆசை வந்துடுச்சோ என்னவோ.. மூளையில் ரத்தக் கசிவுக்காக மும்பையின் லீலாவதி ஆஸ்பத்திரியில சிகிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவரை அலுங்காம நலுங்காம கூட்டிட்டுப் போயிட்டார். இவரோட இழப்பு நிச்சயமா உருதுக் கவிதைகளுக்கும்(உருதுக் கவிதைகளை நக்மான்னும் சொல்லுவாங்க) நமக்கும் பெரிய இழப்புத்தான். அவரோட குரல் இருக்குதே... காதுல நுழைஞ்சு இதயம் வரைக்கும் இனிக்கக் கூடியது. இந்த ரெண்டு பாடல்களைக் கேட்டுப் பாருங்க.. அப்றம் நீங்களும் சொல்லுவீங்க.. முதல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிச்சது. கேக்கும்போதே மனசை என்னவோ செய்யுது பாருங்க.. அதான் கஜல் மற்றும் ஜக்ஜீத்தின் குரலின் மந்திர சக்தி..



நந்தியா வட்டம்:
நடைபாதை எதுக்குங்க இருக்கு?...
நடைபாதைக் கடைகள் போடறதுக்குன்னு சர்ரியாச் சொன்னவங்க அவங்களுக்கு அவங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கலாம். சரி!!.. அப்ப எங்கே நடக்கறது?.. இதென்ன கேள்வி!!. ரோட்டுலதான். இவ்ளோ பெரிய ட்ரக்கு, பஸ்ஸு, ஆட்டோ, அப்றம் நாலுகால், ரெண்டுகால் வாகனங்கள்ன்னு இவ்ளோ வாகனங்கள் போகறச்சே நமக்கும் ஒரு ஓரமா இடம் கிடைக்காமயா போயிரும். தரைக்கும் உசரமான இடத்துக்கும் தாவித் தாவிச் சின்ன வயசுல விளையாடிப் பழகுன 'கல்லா.. மண்ணா' விளையாட்டை இப்ப நீங்க ரோட்டுல வெளையாடிட்டே போனாக் கூட யாரும் வித்தியாசமா நினைக்க மாட்டாங்க. அதெல்லாம் அவங்களும்தானே விளையாடிட்டு வருவாங்க. புதுசா பார்க்கறவங்களுக்குத்தான், ரோட்ல வண்டி வரப்ப நீங்க என்னவோ நடைபாதையில் ஏறிக்கற மாதிரியும், இல்லாதப்ப ரோட்ல நடக்கற மாதிரியும் தெரியும். அதுக்கென்னங்க பண்றது.

எங்கூர்ல ரயில் நிலையத்துக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் குறிப்பிட்ட தூரத்துக்கு நடைபாதைக் கடைகள் இருக்கக் கூடாதுன்னு உத்தரவே இருக்குது. ஆனா, மீறினாத்தானே ஜன நாயகம்.. இல்லையோ?? இங்கே நம்மாளுங்க இடம் பிடிக்கற விதமே தனி. மொதல்ல ச்சும்மா தரையில சாக்கு விரிச்சு வியாபாரம் ஆரம்பிக்கும். அப்றம் மெதுவா சாக்கு விரிப்பு கை வண்டிக்கு ஏறும். கை வண்டி எப்போ சுத்து முத்தும் கல் நார்க் கூரையோட நிரந்தரமான கடையாகுதுன்னு யாரும் கவனிக்கிறதில்லை. கல் நார் கடைசியில கல்லுக் கட்டிடமாகி ஆயுசுக்கும் அங்கியே உக்காந்துக்கும். மக்களும் ஒண்ணும் கண்டுக்கறதில்லை. ஆப்பீஸ் விட்டு வீடு போறச்சே ரயிலை விட்டு இறங்கியதும் ஷாப்பிங்கையும் முடிச்சுக்கலாம்ன்னா யாருக்குத்தான் கசக்கும்.

சிலசமயம் நடைபாதையைத் தாண்டி ரோட்டுலயும் கடைகளைப் பரப்பி வெச்சுடுவாங்க. கடைகளை அப்புறப்படுத்துறதுக்காக அடிக்கடி வண்டியை எடுத்துக்கிட்டு நகராட்சிக்காரங்களும் கிளம்புவாங்க.. வண்டி வருதுன்னு சொல்றதுக்கும் அங்கே ஒருத்தர் இருப்பாரு. வண்டியைக் கண்ணுல கண்டதும் அவர் சிக்னல் கொடுத்துடுவார். உடனேயே அத்தனை பேரும் தபதபன்னு கூடையைத் தூக்கிட்டு அப்பாவி மாதிரி நடைபாதைக்கு ஏறிக்குவாங்க. ஆப்ட்ட கூடைகளை அள்ளிட்டு வண்டி போயிடும்.  எங்கூரு நகராட்சியும் இன்னும் இன்னதுதான் வியாபாரப் பகுதின்னு நியமிக்காம இருக்காமே.. மொதல்ல அதை நியமிக்கட்டும்.. அப்றம் பார்த்துக்கலாம். அதுவரைக்கும்??... கல்லா மண்ணாதான் :-)

நித்ய கல்யாணி:
கொஞ்ச நாளா இந்த மின்சாரத்தோட கண்ணாமூச்சி ஆட்டம் கூடுதலாப் போச்சு. தெனத்துக்கும் குறைஞ்சது எட்டு மணி நேரமாவது கரண்ட் கட் ஆகுது. விஷயம் என்னான்னா, எங்கூரு மின்சாரத் துறைக்கும் WCLன்னு சொல்லப்படற western coalfields Limitedக்குமிடையே வாய்க்கா வரப்புத் தகராறு நடக்குது. ஈரமான நிலக்கரியைக் கொடுத்துட்டாங்க, தேவையான அளவு நிலக்கரியை சப்ளை செய்யலைன்னு wcl மேல குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டிருக்கு. நகரங்கள்லயாவது பரவாயில்லைன்னு தோணும்படியா கிராமப்புறங்கள்ல பதினஞ்சு மணி நேரமாவது மின்வெட்டு அவங்களைச் சிரமப்படுத்துது. பாவம் விவசாயிகளும் சிறுதொழில் அதிபர்களும்..

சாமந்தி:
மும்பைல லோக்கல் ரயில்கள்ல பெண்கள் நிம்மதியா பயணம் செய்யணும்ன்னுதான் பெண்கள் பெட்டி இருக்குதுன்னு நாங்க நினைச்சுட்டிருந்தோம். ஆனா, இப்ப கொஞ்சம் கூட பாதுகாப்பில்லாத நிலையில் அவங்க பயணம் நடக்குது. வழிப்பறியெல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமாப் போச்சு. ரயில்வே போலீஸ் எதுக்கு இருக்குதுன்னு கேக்கறீங்களா?.. எரியுற தீயில் எண்ணெய்யை ஊத்தறதுக்குத்தான். சீண்டல்களால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இன்னொரு ரயில்வே ஸ்டேஷனின் காவலர் கிட்ட புகார் செஞ்சப்ப, "இப்ப என்ன நடக்கக் கூடாததா நடந்துடுச்சு?"ன்னு அவங்க அலட்சியமா கேட்டதால கொந்தளிச்சுட்டாங்க.  எங்க சொல்லணுமோ அங்க சொன்னதுனால, அலட்சியம் செஞ்ச ரெண்டு போலீசையும் இப்ப சஸ்பெண்ட் செஞ்சு வெச்சிருக்காங்க.

ராத்திரி பதினொரு மணிக்கப்றம் மூணு லேடீஸ் பொட்டிகள்ல ஒண்ணை, பொதுப் பொட்டியாக்குறதுக்கும் ஆட்சேபம் எழுந்துருக்கு. அது வரைக்கும் கூட காத்திருக்காம, அதுக்கு முன்னாடியே ஆண்கள் அந்தப் பெட்டியை ஆக்கிரமிச்சுக்கிடறாங்க. போதுமான அளவுக்கு ஆட்கள் இல்லாததால பெண்கள் பெட்டிக்கு காவலர்கள் வர்றதும் குறைச்சலான நேரம்தான். ரவுடிகள், வழிப்பறிக்காரர்கள்ன்னு பல இடர்களுக்கு மத்தியில் உசிரைக் கையில் பிடிச்சுக் கிட்டே பெண்கள் பயணம் செய்ய வேண்டியிருக்கு.

தங்க அரளி:
 நவராத்திரி சமயத்துல எங்கூர்ல தங்கம் ரொம்ப மலிவா இருக்கும். மக்களெல்லாம் வாங்கிட்டுப்போயி ஆயுத பூஜையன்னிக்கு வீடு வீடாப் போயி பெரியவங்க கையில் தங்கத்தைக் கொடுத்துட்டு, அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்குவாங்க. அன்னிக்கு தங்கம் கொடுத்தா, அந்த வருஷம் செல்வச் செழிப்புக்குக் குறைவிருக்காதுங்கறது அவங்க நம்பிக்கை. எப்பவும் மாதிரி இந்தத் தடவையும் அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கிட்டேன். அதுவே கடைசியில சீப்பட்டுக் கிடந்தது.

இது எனக்கு அறிமுகமானது நான் ஒரு நவராத்திரி சமயத்துல முதன்முதலா மும்பையில் அடியெடுத்து வெச்சப்பத்தான். "ஆன்ட்டி.. இந்தாங்க"ன்னு சொல்லி கையில் திணிச்சுட்டுப் போச்சுங்க குழந்தைங்கல்லாம். அப்புறம், அப்டி வர்ற குழந்தைங்களுக்காகவே சாக்லெட்டெல்லாம் வாங்கி வெச்சிட்டு காத்திருப்போம். தங்கம்ன்னு சொல்லிட்டு கண்ணுல காட்டவேயில்லைல்ல.. இதாங்க தங்கம். நவராத்திரி முடிஞ்சு போனா என்ன?.. இந்தக் கொலு நிரந்தரமா இங்கியேதானே இருக்கப் போவுது. கொலுவைப் பார்த்துட்டு, நிறைய தங்கம் எடுத்துக்கோங்க :-)
எங்க வீட்டுக் கொலுவின் சில காட்சிகள்


இந்த இலைகள்தான் தங்கம்ன்னு சொல்லப்படற அப்டா இலைகள்.. வேண மட்டும் எடுத்துக்கோங்க. எனக்கு கூகிளார் கொடுத்தார் :-)


இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கணுமே.. இருக்குதே! :-). முன்னொரு காலத்துல அயோத்தியில் கட்ஸா என்ற இளைஞர் அந்தக் கால குருகுல வழக்கப்படி குரு வரதந்து கிட்ட ஆய கலைகள் அறுபத்தி நாலையும் கத்துக்கிட்டார். இப்ப மாதிரி மந்த்லி ஃபீஸெல்லாம் கிடையாது, அந்தக் காலத்துல படிச்சு முடிச்சுட்டு வெளியே போறப்ப குரு தட்சணையா ஒன் டைம் பேமெண்ட்தான். அந்தக் குரு ரொம்ப நல்லவர்.. ஃபீஸெல்லாம் வேணாம்ன்னுட்டார்.(பொழைக்கத் தெரியலையோ :-)) ஆனா இளைஞர் விடலை. "குரு தட்சணை கொடுத்தாத்தான் கத்துக்கிட்ட வித்தை பலிக்குமாமே, அதனால கொடுத்துத்தான் தீருவேன்"ன்னு நிக்கிறார்.

குருவும் "சரி, உன்னிஷ்டம். கத்துக்கிட்ட ஒவ்வொரு வித்தைக்கும் ஒரு கோடி தங்க நாணயங்கள்ங்கற கணக்குல பதினாலு கலைகளுக்கும் குரு தட்சணை கொடு"ங்கறார். அப்டியாவது சீடரோட நச்சரிப்பு குறையாதாங்கற நம்பிக்கையில. சீடர் நேரா ஸ்ரீராம் கிட்ட போனார். விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டார். ஸ்ரீராமும் "உங்கூர்ல இருக்கற அப்டா மரத்துக்கிட்ட வெயிட் பண்ணு, நான் வரேன்"ன்னார். நம்மாளு மூணு நாளா காத்திருந்தார்.

ராமச்சந்திரப் பிரபுவும் கடைசியில் குபேரரை அங்க கூட்டிக்கிட்டு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து அப்டா மரத்தோட இலைகளெல்லாம் தங்க நாணயமா மாறும்படி செஞ்சாங்க. இதை ஸ்ரீராம் மட்டுமே செஞ்சுருக்கலாமே.. குபேரர் எதுக்காம்?.. ஒரு வேளை மரத்துல இலைகள் தட்டுப்பாடு ஆச்சுன்னா, அவசரத்துக்கு குபேரர் கிட்ட வாங்கிக்கலாம்ன்னு ஐடியாவோ என்னவோ?.. :-)

சீடரும் நாணயங்களையெல்லாம் கொண்டுக்கிட்டுப் போயி குரு கிட்ட கொடுத்துட்டு, மிச்சப்பட்ட நாணயங்களை ஊர் மக்களுக்கெல்லாம் கொடுத்தாராம். அந்தச் சம்பவம் நடந்தது தசரா அன்னிக்குத்தான்னு இதுக்குள்ள கரெக்டா கண்டு பிடிச்சிருப்பீங்களே :-)). அந்த ஞாபகமாத்தான் இன்னிக்கும் மக்கள் இலைகளைக் கொடுத்து ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்திக்கறாங்க.

Wednesday 12 October 2011

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது? அவ்வ்வ்வ்வ்வ்..

இப்பத்திய குழந்தைகள் இருக்காங்களே.. யப்பா!!.. ரொம்ப வெவரமாத்தான் இருக்காங்க. நாம ஏதோ அவங்கல்லாம் சின்னப்புள்ளைங்க.. அதுங்களுக்கு என்னாத்தைத் தெரியும்ன்னு நெனைச்சாக்க ஒவ்வொண்ணும் சுவாமிநாதனாவும் தாயுமானவர் மாதிரி தாயுமானவளாவும் அவதாரம் எடுக்குதுங்க..

சிலசமயம் இதுங்களுக்கு என்னத்தை தெரியும்ன்னு நினைக்காம, ஏதாவது சின்னப் பிரச்சினைகளைச் சொல்லி தீர்வு கேட்டுப் பாருங்க. நமக்குத் தோணாத, ஆனா சரியான தீர்வுகளைச் சொல்றதுல இந்தக் காலத்துப் பசங்க கெட்டி.

புகைப்படம் எடுக்கறதுல எனக்கு ஆனா ஆவன்னா கூடத் தெரியாது. சும்மா ஆட்டோ ஃபோகஸில் வெச்சுக்கிட்டு குத்து மதிப்பா எடுப்பேன். குத்துக்கு ஏது மதிப்புன்னெல்லாம் எகனை மொகனையா கேக்கப்டாது. சொல்லிட்டேன் :-). காம்போஸிங் மட்டும் அருமையா செய்வேன். மத்தபடி படம் ஓரளவு சுமாரா வந்துடும். பிலிம் காலம் போயி டிஜிட்டல் வந்ததும் கண்ணுல படறதையெல்லாம் சுடறதுதான். ரிசல்ட்டும் உடனே தெரிஞ்சுடுதே. கூடுதல் குறைவையும் உடனே தெரிஞ்சுக்கவும் முடியுதுங்கறது ஒரு வரப்பிரசாதமாச்சே.

இப்படி இருக்கச்சே வலையுலகில் நுழைஞ்சதும் புகைப்படக் கலையை நம்ம பிட் கத்துக் கொடுக்குதுன்னு தெரிஞ்சப்றம் ஆஹா!!.. இந்தியாவுல ஒரு லேடி ஸ்ரீராம் உருவாகறதை யாராலும் தடுக்க முடியாதுன்னுட்டு காமிராவும் கையுமா குதிச்சிட்டேன். அந்தத் தளத்துல போயி பாடம் படிச்சுட்டு ஹோம்வொர்க் செஞ்சு பார்த்து, ரிசல்ட் நல்லா வந்தா ஜூப்பரேய்ன்னு கத்தறதும், இல்லைன்னா 'சண்டையில கிழியாத சட்டை எங்கயிருக்கு'ன்னு தூசியை தட்டி விட்டுட்டு அடுத்த படமெடுக்க கிளம்பறதும்ன்னு ஒர்ரே பிஸி..
சட்டுன்னு சுட்டுட்டு வந்துடும் என்னோட பீரங்கி..
என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, ரங்க்ஸ் canon 1000 D-ஐ வாங்கிக் கொடுத்து, உற்சாகம் கொடுத்தார். கண்ணில் பட்டதையெல்லாம் க்ளிக்கி கேமராவை ஒரு வழி செஞ்சேன். சும்மா நானே பார்த்து திருஷ்டி வெச்சா போதுமான்னு நம்ம ஃப்ளிக்கர்ல ஒரு கணக்கைத் தொடங்கி, அங்க பார்வைக்கு வெச்சேன். மக்களும் ஓரளவு நல்லாத்தான் இருக்குன்னு ஒத்துக்கிட்டாங்க.. அங்கதாங்க காத்திருந்தது ஆப்பு..

முதல்ல தொடங்குன அக்கவுண்டு என்ன காரணத்துனாலயோ முடங்கிப் போச்சு.. திறக்க முடியாமப் போனதுனால, சரீன்னுட்டு இன்னொரு அக்கவுண்டு தொடங்கினேன். சிலபல படங்களை வலையேத்தி பெயர் சொல்ற அளவுக்கு நல்ல படங்களையும் எடுத்துப் பகிர்ந்தேன். போன மார்ச் மாத வாக்கில் அதுவும் முடங்கி தெறக்க முடியலை. ஐடி ஞாபகமில்லை, ஆனா பாஸ்வேர்டு ஞாபகமிருக்கு.  "ஐடி மறந்து போச்சே.. யாரிடம் சொல்வேனடி தோழி??.."ன்னு சோகத்துல பாடாத குறைதான். வீட்லயும் ஒரே புலப்பம். தோழின்னதும் ஒருத்தங்க ஞாபகம் வந்தாங்க. அவங்களுக்கொரு மெயிலைத் தட்டி விட்டு, எல்ப் கேட்டேன். அவங்களும் ஆன மட்டும் முயற்சி செஞ்சாங்க.. பிரயோசனமில்லை.

"அந்தக் கடை போனா சந்தைக் கடை"ன்னுட்டு மூணாவதா இன்னொரு அக்கவுண்டு ஆரம்பிச்சேன். ஆயிரம் அக்கவுண்டை முடக்கினாலும் அமைதிச்சாரல் முடங்குவதில்லை ஆம்மா!!!.. இதுல தினமும் படங்களை வலையேத்தறது வழக்கம். 

ரெண்டு நாள் முன்னாடி, வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு ஃப்ளிக்கரை திறந்தா ஹைய்யோ!!... மறுபடி அதே பிரச்சினை. 'உள்ளே வராதே'ன்னு விரட்டுது. மூணு தடவைக்கு மேல கணக்கைத் திறக்க முடியலைன்னா பூட்டிக்குமாமே.  நல்ல திண்டுக்கல் பூட்டா போட்டுப் பூட்டிக்கிச்சு..என்னடாயிது இந்த அமைதிச்சாரலுக்கு வந்த சோதனைன்னுட்டு வழக்கம் போல புலப்பம் ஆரம்பிச்சாச்சு. 

பொண்ணு கொஞ்ச நேரம் கேட்டுக்கிட்டேயிருந்தா.. என்னாச்சுன்னு கேட்டா. சொன்னேன்.

"இவ்ளோதானா?.. இது ஈஸி மேட்டராச்சே"ன்னா. "யம்மாடி.. எல்ப் பண்ண முடிஞ்சா சொல்லு"ன்னேன். "லாக் ஆகிட்டதுனால நம்ம சிஸ்டத்துலேர்ந்து இப்ப லாகின் செய்யாதீங்க.  cyber cafe போய் அங்கிருந்து திறக்க முயற்சி செய்யுங்க.. கண்டிப்பா திறக்கும். உடனேயே கடவுச்சொல்லை கடினமா வெச்சுடுங்க. அப்றம் வீட்டுக்கு வந்து உங்க கணக்கைத் திறக்கலாம். ஈஸியா வரும்"ன்னா. 

சரீன்னுட்டு தனயள் சொல்லைத் தட்டாத தாயா அங்க போனேன். பயந்துக்கிட்டே கணக்கைத் திறந்தேன். ஐடி குடுத்தாச்சு.. பாஸ்வேர்ட் குடுத்தாச்சு.. எண்டர் தட்டியாச்சு. என்னாகப் போவுதோன்னு பயந்துட்டே நகம் கடிக்க ஆரம்பிச்சுட்டேன். பின்னே என்னங்க??.. மாசாமாசம் மளிகை வாங்கலாம். கணக்கு ஆரம்பிக்க முடியுமா? ஒவ்வொரு தடவையும் படங்கள் ஏத்தி எல்லா க்ரூப்புலயும் இணைக்கறதுன்னா  ஏகப்பட்ட நேரமும் பொறுமையும் வேணும். அதுக்கப்றம் அந்தப் படங்களைப் பார்க்கறவங்களுக்குத்தான் பொறுமை தேவைப்படும் :-)

ஆஹா!!... கணக்கு சரியாகிடுச்சு. முதல் வேலையா பாஸ்வேர்டை கடினமா மாத்தினேன். அப்பாடான்னு வெற்றியோட வீர நடை போட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்ல உள்ள சிஸ்டத்துலயும் கணக்கைத் திறக்க முடியுது. 

இது என்ன மேஜிக்ன்னேன்.. "அது அப்படித்தான்,. என்னோட ஃப்ரெண்டுக்கும் ஜிமெயில்ல இப்படியாச்சு. கடைசியில வெளியில போய் சரி செஞ்சப்றம் வீட்லயும் சரியாச்சு. இதெல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியுமே"ன்னா. ரைட்டு.. "ஒளிமயமான எதிர்காலம்... வாங்கிய பல்பில் தெரிகிறது"

மறுபடி புலப்பம் ஆரம்பம். "ச்சே.. இந்த ஐடியாவை நீ முன்னாடியே கொடுத்திருந்தா இதுக்கு முன்னாடி தொலைச்ச கணக்கும் மறுபடி கிடைச்சிருக்குமே.. இந்த ஒரு மாச உழைப்பை அதுல கொடுத்திருந்தா கிட்டத்தட்ட ஐம்பது படங்களை என்னோட கணக்குல ஏத்தியிருப்பேன்"ன்னு புலம்ப,

"கணக்கைத் தொலைச்சிட்டேன்னு நீங்க சொல்லவேயில்லையே"ன்னாங்க மேடம்..

" நீ கேக்கவேயில்லையே"ன்னேன் நான்.

"சொல்லாம எப்படித் தெரியும்"ன்னு கேட்டா அருமைப் புத்திரி.

அதானே!!.. எப்படித் தெரியும். அதுவுமில்லாம இப்படி எனக்கு மட்டுந்தான் நடக்குதா, இல்லை வலைத் தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கறவங்களுக்கு வழக்கமா நடக்கறதுதானான்னு தெரியலியே. சரி, இப்ப உங்க கிட்ட சொல்லிட்டேன். இது ஒண்ணும் பெரிய கம்ப சூத்திரமில்லை. இது, வலைத்தளங்கள்ல கணக்கு வெச்சிருக்கற எல்லோருக்கும் தெரிஞ்சதாக் கூட இருக்கலாம். இருந்தாலும் இந்த அனுபவம் யாருக்காவது பயன்பட்டா சந்தோஷமே..


Tuesday 4 October 2011

நிறங்களும் குணங்களும்



பாலின் நிறம் மட்டுமா?... குழந்தை மனசும் வெள்ளைதான். இந்தப் பூப்போல :-)
வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம், பொறுமை, உருவாக்கும் தன்மை,சமாதானம் இதெல்லாத்தையும் குறிக்கிறது. மேலும் இதற்கு குணமாக்கும் தன்மையும் உண்டாம். எதிர்மறை எண்ணங்களை விரட்டி மனசை அமைதிப்படுத்தும் குணமும் இதற்கு உண்டாம். இத்தனை நல்ல குணங்கள் இருக்கறதுனாலதான் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் உடைகளில் இது இடம் பிடிச்சிருக்கோ என்னவோ! இத்தனையையும் செய்யும் வெண்மைங்கறது உண்மையில் ஒரு தனிப்பட்ட நிறம் கிடையாது என்பது ஆச்சரியமூட்டும் விஞ்ஞான உண்மை.
வெக்கப்படும் பிங்க்கி
பிங்க் நிறத்துக்கு கோபத்தைக் குறைக்கும் சக்தி உண்டாம். கோபப்படும் போது இந்த நிறம் நம்ம ஆற்றலை கிரகிச்சுக் கொள்கிறது. அதனால நம்ம இதயத்தோட தசைகள் வேகமாக செயல்படுவது குறையுது. இதனால கோபமும் கட்டுக்குள்ள வருதுரொம்பவும் முரட்டுத்தனம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தணும்ன்னா, அவர்கள் தங்கி இருக்கும் அறையின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றினாலே போதும் என்கிறார், அமெரிக்க பயோசோஷியல் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஸ்காஷ். அடிக்கடி மே(லி)டத்திடம் 'பாட்டுக் கேக்கும்' நிலையில் இருப்பவர்கள் இதை முயற்சி செஞ்சு பார்த்து முடிவைச் சொல்லலாம் :-)மே(லி)டத்தின் அறையை பிங்க் மயமாக்குற முயற்சியில் இன்னும் பாட்டு விழுந்தா கம்பேனி பொறுப்பேற்காது :-)
புல்லின் மேல் தூங்கும் பனித்துளியில் தலைகீழாய்த் தொங்கும் கட்டிடம்
ஒரு நாட்டுல எங்க பார்த்தாலும் பச்சைப்பசேல்ன்னு இருக்கறதுன்னா என்ன அர்த்தம்?. அந்த நாடு செழிப்பா இருக்கறதுன்னுதானே!.இந்த ஒரு நிறத்தைப் பார்த்தால் மட்டுமல்ல, நினைச்சாலே மனசு குதூகலமடைகிறது. செழிப்பைக் குறிக்கும் இந்த நிறம் வளர்ச்சி, இயற்கை, மற்றும் ஒரு இடத்தின் உயிர்த்தன்மையையும் குறிக்கிறது. ஒரு இடத்துல புல் பூண்டாச்சும் வளர்ந்தாத்தானே அந்த மண்ணில் உயிர்ச்சத்து இருக்குதுன்னு சொல்றோம். இதனால்தானோ என்னவோ உலகின் சில இடங்களில் மணப்பெண்கள் திருமணத்தின்போது பச்சை நிறத்தில் உடையணிகிறார்களாம்.


வெண்மை மட்டுமல்ல பசுமையும் கூட சமாதானத்துக்கான நிறமாய் விளங்குகிறது. இருந்தும் பொறாமையையும் இந்த நிறமே குறிப்பது சுவாரஸ்யமான எதிர்மறைதான்.(ஓனிடா டிவியின் சாத்தானை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை)பச்சை நிறத்துக்கு மன அழுத்தம், மனச்சோர்வு, இன்னபிற உடல் அசௌகரியங்களை குணப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. மருத்துவர்கள் கையில் கண்ணாடியை கழட்டி வெச்சுக்கிட்டு, ஒவ்வொரு திரைப்படங்கள்லயும் "ஏதாவதொரு மலை வாசஸ்தலத்துக்கு கூட்டிட்டுப்போனா வியாதி குணமாக வாய்ப்பு இருக்கு"ன்னு வசனம் பேசிக் கேட்டிருப்பீங்கதானே.
யார் அது தூங்கறப்ப தண்ணி தெளிச்சு எழுப்புனது????
மங்களகரமான மஞ்சள் நிறம் ஆற்றல், விழிப்புணர்வு, சந்தோஷம் போன்ற நேர்மறை எண்ணங்களை வளர்க்கிறது. காலையில் உதிக்கும் மஞ்சள் நிறச் சூரியனை பார்க்கிறப்பவும், அந்த ஒளியில் நனையுறப்பவும் நமக்கு ஏற்படும் புத்துணர்ச்சியும் உற்சாகமுமே இதுக்கு சான்று. இந்த நிறத்தால், அது சுவருக்கு பூசப்பட்ட வண்ணமா இருந்தாலும் சரி, பூக்களா இருந்தாலும் சரி, நாம் சூழப்பட்டிருந்தால் நம்முடைய நரம்பு மண்டலம் ஒழுங்கா இயங்குதாம், அதே போல் நம்ம உடம்பின் வளர்சிதை மாற்றங்களும் சரியா நடக்குமாறு தூண்டப்படுதாம். நிறங்களிலேயே ஆளுமை மிக்க நிறமாவும் இது கருதப் படுகிறது.
கருப்பு மிளகாய் செம காஆஆஆரம்..
ருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு',.. 'கருப்பே அழகு காந்தலே ருசி'.. இன்னும் எத்தனையெத்தனை விதமா எப்படியெப்படிச் சொன்னா என்ன?? ஒரு பலனும் இல்லைங்கறது நாட்டுல விக்கிற சிகப்பழகு க்ரீம்களோட விற்பனை நாளுக்கு நாள் எகிறுவதை வெச்சே புரியுமே. அதெப்படி ஏழே நாள்ல செக்கச்செவேர்ன்னு ஆக முடியும்ன்னு ஒருத்தரும் யோசிக்கறதேயில்லைஇவ்வளவு சொல்றவங்க விளம்பரத்துல ஒரு காகத்தை வெள்ளையாக்கி நிரூபிக்கட்டுமே. கருப்பு நிறத்தை நாம்தான் தாழ்வா நினைக்கிறோம். ஆனால், உண்மையில் சக்தி, உறுதி, பலம், புத்திக்கூர்மை போன்ற நேர்மறைக் குணங்களை கருப்பு நிறம் குறிக்கிறது. கொஞ்சம் குண்டாக இருப்பவர்கள் கருப்பு நிற உடைகளை அணிந்து கொண்டால், ஒல்லியாத் தெரிவார்களாம்


ளுமைத்தன்மையையும் இது குறிக்கிறது, பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புல இருக்கறவங்க அதிகமா இந்த நிறத்தில் உடையணிவது வழக்கம்கருப்பு என்பது நிறங்களின் இல்லாமை ஆகும். ஒரு பொருளானது, தன் மீது விழும் ஒளியை பிரதிபலிப்பதன் மூலம், குறிப்பிட்ட நிறத்தை உண்டாக்குகிறது. அப்படி, தன் மீது விழும் ஒளியில் அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக் கொண்டு எந்த நிறத்தையும் பிரதிபலிக்கலைன்னா, அங்கு கருப்பு நிறம் உண்டாகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருப்பு நிறம் மர்மம், திகில், போன்றவற்றுக்கான நிறமாவும் விளங்குது.

இதயத்தோடு தொடர்புடைய நிறமும் பூவும் :-)
உணர்ச்சிகளைத் தூண்டும் ஒரு நிறமே சிவப்பு. இது இதயத்தோட தொடர்புள்ளதாவும் அன்பு, பாசம், காதல், ஆசை போன்றவற்றின் நிறமாவும் குறிக்கப் படுகிறது. ஆர்வம் மற்றும் ஆற்றலுடனும் தொடர்பு இருப்பதால் தன்னம்பிக்கையையும் கூட்டுவதாக சொல்லப்படுது. இதுக்கு தூண்டும் சக்தி அதிகமிருப்பதால் பிறரின் கவனத்தையும் எளிதாக கவர்கிறது. இந்த நிறத்துக்குக் கோபத்தையும், உணர்ச்சிகளையும் தூண்டும் சக்தி இருப்பதாவும் சொல்லப்படுது. இவ்வளவும் இருந்தா அது கண்டிப்பா ஆபத்தையும் கொண்டு வரத்தானே செய்யும். அதனாலத்தான், சாலைகள்ல முக்கியமா நிறுத்தங்களுக்கான போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு சிவப்பு நிறம் உபயோகிக்கப் படுகிறது.


டிஸ்கி: வல்லமைக்காக எழுதினதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.




LinkWithin

Related Posts with Thumbnails