Monday, 15 April 2013

வாங்க.... ரசிக்கலாம் (பண்புடன் இதழில் வெளியானது)


“ஹைய்யோ.. என்னமா ஜொலிக்குது இந்த நட்சத்திரங்களெல்லாம்”.. பயணத்தின்போது கார் ஜன்னல் வழியே வானத்தை எட்டிப்பார்த்த பையர் ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார். டிட்வாலா போய் சனிக்கிழமை சதுர்த்தியும் அதுவுமாக பிள்ளையாரைத் தரிசனம் செய்து விட்டு நல்ல இருட்டில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சட்டென அப்படியே பதினெட்டு வருடங்கள் பின்னால் சென்று விட்டாற்போன்ற குதூகலம் பையர் குரலில் தொனித்தது. “வீட்டுல பால்கனியில் நின்னாக்கூட நட்சத்திரம் பார்க்கலாம்ப்பா” என்று சொன்னேன். “ஆனா, இந்த அளவுக்குத் தெளிவாத்தெரியாதும்மா. நகரத்துல ஒளி மாசு அதிகமா இருக்குது, அதோட வீரியத்தால வானத்துல இருக்கற நட்சத்திரங்கள் தெளிவாத் தெரியறதில்லைன்னு எங்கியோ வாசிச்சேன். ஆனா, இது காட்டுப்பாதையா இருக்கறதால மினுக் மினுக்ன்னு மின்னுறது நல்லாவே தெரியுது” என்று ஆச்சரியம் அகலாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.உண்மைதான், கருகருவென்ற வெல்வெட்டில் வெண்முத்துகளையும் வைரங்களையும் சிதறி விட்டிருந்தாற்போல் சோகையாகவும் பளீரென்றும் டாலடித்துக் கொண்டிருந்தன விண்மீன்கள்.

“இந்த மாதிரி அழகான இருட்டுல நட்சத்திரங்களைப்பார்த்து எவ்ளோ காலமாச்சு!!..” தன்னை மறந்து லயித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ம்.. அதான் தெனமும் பார்க்கறோமே..” என்று கொக்கி போட்டேன்.

“இல்லைம்மா,.. ராத்திரியில் கரண்டு போகணும். அந்த இருட்டுல வானத்துல தெரியுற நட்சத்திரம் பார்க்கணும். எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா?.. ஒருக்கா,.. ஆச்சி வீட்டுக்குப் போயிருந்தப்ப ராத்திரி லைட்டு போயிருச்சு. அப்ப முத்தத்துல(முற்றத்தைத்தான் அப்படிச் சொல்கிறார் :-))) கட்டில் போட்டுப்படுத்துக்கிட்டு மேல வானத்துல தெரிஞ்ச நட்சத்திரத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தோம். எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நாட்களுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது.

“அப்படியா?.. எப்போ பார்த்தோம்” என்றேன்.

“அப்ப நான் நாலாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் இன்னிக்கு மாதிரி ரசிச்சுப் பார்த்ததேயில்லை. அதென்னவோ,.. தோணவேயில்லை” என்றார். நான் கடைசியாக எப்பொழுது நட்சத்திரங்களை அவற்றுக்காகவே பார்த்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

காலேஜ் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து படிக்கும்போது (நம்புங்கப்பா.. :-)) முற்றத்தை அடுத்திருக்கும் முன்னறையின் மேற்கூரை மட்டத்தில் விடிவெள்ளி இருக்கும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்தபடியே கிடந்து விட்டு மெதுவாக எழுந்திருப்பேன். அதைத்தவிரவும் எனக்கு மிகவும் பிரியமான நட்சத்திரக்கொத்து ஒன்றும் உண்டு. அதற்கு கரடித்தலை என்றே பெயர் சூட்டியிருந்தேன். (அதன் உண்மையான பெயர் orion the hunter) அறுபது அல்லது எழுபது டிகிரி கோணத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பூமியின் சுழற்சியைப் பொறுத்து பாகையளவு மாறும். அதன் இடப்பக்கம் இந்தப்பக்கம் ஒன்றும் அந்தப்பக்கம் ஒன்றுமாக இரண்டு நட்சத்திரங்கள், அதில் ஒன்று இந்தக் கரடித்தலையிலிருக்கும் கண் மாதிரியே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதை ரசித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஆனால் இந்த ரசிப்பும், பொழுதுபோக்கும் ஏதோவொரு புள்ளியில் என்னையறியாமலேயே நின்று போயிருந்திருக்கின்றன. பையருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதை உணர்ந்து ‘ஞே’வென விழிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான். நாம் பெரியவர்கள் ஆனாலென்ன?. அந்தக் குழந்தையும் அதன் பாட்டிற்கு ஒரு ஓரமாய் வந்து கொண்டிருக்கட்டுமே.

நாமெல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயது வரை, கேள்விக்குறி போல் வளைந்த நாயின் வால், பொன்வண்டின் முதுகில் மினுங்கும் வண்ணங்கள், மழையில் குளித்த ரோஜாக்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்திருப்போம். மழை பெய்யும்போது வேண்டுமென்றே தொப்பலாக நனைவதும், நீர் தேங்கியிருக்கும் சின்னப்பள்ளங்களில் தபாலென்று குதித்து மற்றவர்களை நனைப்பது அல்லது வழிந்து சொட்டும் மழை நீரை உள்ளங்கையில் நிறைத்து நண்பர்களின் முகத்தை நனைப்பதுமாக   இருந்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் “சனியன் பிடித்த மழை” என்று திட்டத்தொடங்குவது ஆரம்பித்து விடுகிறது.

காரணங்கள் சுலபமானவை.. சிறு குழந்தைகளாக இருந்தவரைக்கும் கவலைகள் இல்லை, பொறுப்புகள் இல்லை… இந்தக்காலத்திய குழந்தைகளானாலும் கூட. அதுவே,.. வளர வளர எதிர்காலம் பற்றிய பயம், காத்திருக்கும் பொறுப்புகள் போன்றவை நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. குருவிகளின் கீச்.. கீச் போன்ற ரசித்த விஷயங்கள் இப்போது எரிச்சலூட்டுகின்றன அல்லது அமைதியாகக்கடந்து செல்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சிடுமூஞ்சிகளாகவோ இயந்திரங்களாகவோ மாறி விடுகின்றோம். மனதை இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் இதைத்தவிர்க்கலாம். ‘அதற்காக எப்பொழுதுமே விளையாட்டுப்பிள்ளையாக இருக்க முடியுமா?’ என்ற கேள்வி எழலாம். எப்பொழுதும் இல்லாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களிலாவது நம் மனதை விளையாட்டுப்பிள்ளையாக இருக்க விடுதல் நல்லதே. இறுக்கங்கள் விலகி பழையபடி உற்சாகமாகி விடலாம்.

இந்த விஷயத்தில் பெண்களிடம் கவனித்த ஒரு சில விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் புடவை, பூ, லேசான மேக்கப், உடற்பயிற்சி என்று ரசனையுடன் பளிச்சென இருக்கும் நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பாகக் குழந்தைகள் பிறந்தபின் நம்மைக் கவனித்துக்கொள்வதில்லை? இனிமேல் என்ன வேண்டியிருக்கிறது என்று இழுத்துச் சொருகிய புடவை, அல்லது கசங்கிய நைட்டி, அள்ளி முடிந்த கூந்தல் என்று ஏனோதானோவென்று இருக்க ஆரம்பித்து விடுகிறோம். எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அலங்காரங்கள். சில இடங்களில் ஊர் வாய்க்குப் பயந்து கொண்டும் அப்படி இருப்பதுண்டு. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் பெரிய பெண்ணாக ஆனபின் தாய் பின்னலிட்டுக்கொள்வதில்லை. அப்படியே பின்னிக்கொண்டாலும் அதைச் சுருட்டிக் கொண்டையாக இட்டுக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். அதுவே மும்பையில் வயதானவர்கள் கூட காலையில் எழுந்ததுமே குளித்துப் ப்ரெஷ்ஷாகி சுத்தமான ஆடையணிந்து ஏதோ அந்த நிமிடம் வெளியே செல்லத் தயாராக இருப்பதைப்போல காட்சியளிப்பதையும் கண்டிருக்கிறேன்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கிறார்களோ என்று சில சமயம் தோன்றும்.

எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது. கவலைகள், துக்கங்கள் எல்லாம் வாழ்க்கையில் அது பாட்டிற்கு ஒரு ஓரத்தில் ஊறுகாய் மாதிரி இருந்து கொண்டிருக்கட்டுமே. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்ன?. ஊறுகாய் ருசியில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் பாயசத்தின் ருசியை அனுபவிப்பது எப்படி?. ‘அடடா!!.. உளுந்த வடையில் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் கூடுதலாக இன்னும் ஒரு விள்ளல் வடை கிடைத்திருக்குமே’ என்று கவலைப்படுவதை விட ‘அடடா!!. டோநட் தயாரிக்கிறதுக்கு நம்ம இந்தியர்கள்தான் ரோல் மாடல்களா இருந்திருக்காங்க” என்று பெருமையுடன் இன்னொரு ப்ளேட் வடை சாம்பாரை உள்ளே தள்ளுவது மேலல்லவா?..  ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன்  மின்னிதழுக்கு நன்றி.

Monday, 8 April 2013

வரலாற்றைப் பதிவு செய்தேன்..

ஒளிப்படத்துறையில் தங்களைச் சுற்றியுள்ள வாழ்வியலைப் பதிவு செய்யும் "ஸ்ட்ரீட் போட்டோக்ராபி" என்பது ரொம்பவே சுவாரஸ்யமானது. நாம் சாதாரணமாக எண்ணி எடுக்கும் சில படங்கள் வரலாற்றைப் பதிவு செய்யும் ஆவணமாகவும் அமைந்து விடும். முன்னொரு காலத்தில் இடங்களையும் மக்களையும் புகைப்படங்களில் பதிவு செய்தவற்றை இப்போது பார்க்கும்போது, 'அட!!' இந்த இடம்தானா அது?.. அந்தக்காலத்து மக்களின் ஆடை, அணிகள் இந்தக்காலத்திலிருந்து எவ்வளவு வேறுபட்டிருக்கின்றன!' என்றெல்லாம் ஆச்சரியப்படுகிறோம் இல்லையா?. இதெல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராபியின் கைங்கர்யம்தான். போரடிக்கும் பொழுதுகளில் காமிராவும் கையுமாக நகர் வலம் வந்துதான் பாருங்களேன். யார் கண்டது?.. நீங்கள் பதிவு செய்யும் ஏதாவதொரு ஒளிப்படம் வரலாற்று ஆவணமாகக்கூட  பிற்காலத்தில் விளங்கக்கூடும். வரலாற்றைப்பதிவு செய்வது முக்கியம் அமைச்சரே :-)

நான் நகர்வலம் போனபோது எடுத்த படங்களில் சிலவற்றை இதோ கண்காட்சியில் வைத்திருக்கிறேன். கண்டு களியுங்கள்.. கூடவே, சில படங்களின் exif info எனப்படும் ஷட்டர் ஸ்பீடு, அப்பர்ச்சர்,போன்ற விவரங்களையும் முடிந்த மட்டும் கூடவே கொடுத்திருக்கிறேன்.

ஷட்டர் ஸ்பீடு- 1/320, அபர்ச்சர் 4.8, 
iso - 1600 (இருட்ட ஆரம்பித்து விட்டதால் அதிக iso. இல்லையென்றால் 100தான் வைப்பேன்) 

1: படத்துக்குள் படம் :-)

2: நவி மும்பையில் பைப்லைன் மூலம் காஸ் சப்ளை செய்வதற்கான ஆரம்ப ஏற்பாடுகள்..

3: s.s. - 1/320 (இனிமேல் சுருக்கமாவே ஞாபகம் வைத்துக்கொள்ளலாமே)
f- 9, iso- 100 
இனிய தருணங்களைச் சிறைப்படுத்துதல் இனிது..
4: இந்தப்படம் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டது. பையனின் ஸ்கேட்டிங் ஸ்பீடு அந்தளவுக்கிருந்தது.  :-)))

5: s.s:  1/1250, f: 5, iso: 400
சுமந்தால்தான் சுமக்க முடியும் குடும்பச்சுமையை..
 

6: அதிகாலை வெளிச்சம் கொஞ்சம் குறைவாக இருந்ததால் f நம்பரை 5-ல் வைத்து அபர்ச்சர் மோடில் எடுத்தேன். மற்ற அளவுகளைக் காமிராவே தீர்மானித்துக்கொண்டது.

மும்பையின் இட்லிக்கடையொன்றில்.. 

 7: பாயிண்ட் அண்ட் ஷூட்டில் ஸ்போர்ட்ஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தி எடுத்தது. காமிராவே எல்லா அளவுகளையும் தீர்மானித்துக்கொண்டது.

ஹெல்மெட்டை எப்படி உபயோகிக்க வேண்டுமென்று யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை  போலிருக்கிறது :-)

8: இதுவும் அபர்ச்சர்  மோடில் 5.6 வைத்து எடுத்தது.

வெறும் காற்றடைத்த டயரடா..
9: s.s: 1/800, f: 5.6, iso: 100

10:  1/1600, 400, 6.3
சுகமான சுமைகள்..

11: 1/1250, 5.6, 400
ஊக்கமிருக்கிறது இன்னும் மனதில் ஆகவே ஓய்வெடுக்கவும் இன்னும் காலமிருக்கிறது
 12: சனீஸ்வரைக்கண்காணிக்க ஆஞ்சனேயரும் அங்கேயே குடியிருக்கும் கோயில்..
  13: பேத்திக்காகக் காத்திருக்கும் பாட்டி..
14: முடங்கி விடாத உற்சாக உலகம் :-))
 15: வாழ்க்கையும் வண்ணமயமாய் ஆகிவிடும் என்றாவது..

16: நம்பி விட்டுவிட்டுப்போயிருக்கிறார்கள்.. பத்திரமாகத்தான் இருக்கிறது.
(இந்தக் கடைசிப்படம் கல்கியின் போட்டோகேலரியிலும் அச்சாகியிருந்தது)

ஸ்ட்ரீட் போட்டோகிராபியின்போது,இயல்பான நிலையில் படம் எடுப்பதற்காக நாம் மெனக்கெட்டுக் கொண்டிருப்போம். இதைக்கண்டு விட்டால், சிலர் அங்கிருந்து நகர்ந்து விடுவார்கள், சிலர் சட்டென்று காமிராவை நோக்கி நின்று போஸ் கொடுப்பார்கள். ஆகவே அவர்கள் அறியாவண்ணம் சாமர்த்தியமாக எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் ஜூம் லென்சை உபயோகித்தும் எடுக்கலாம். சிலர் ஆட்சேபிக்கவும் கூடும். ஆட்சேபிப்பார்களானால் அவர்களைத் தொந்தரவு செய்வதைத் தவிர்த்தல் நலம். நமக்கு அறிமுகமானவர்களாக இருந்தால் தவிர இளம்பெண்களைப் படமெடுப்பதையும் தவிர்த்தல் நலம். 

டிஸ்கி: ஷட்டர் ஸ்பீடு, அபர்ச்சர் என்பவையெல்லாம் என்னவென்று பிட்டில் விளக்கியிருக்கிறார்கள். இடுகையும் பின்னூட்டங்களும் அளிக்கும் விவரங்கள் எக்கச்சக்கமானவை. வாசித்துப் பயனடைவீர் :-))

Friday, 5 April 2013

நெல்லை ஹலோ எஃப்.எம்மில் எனது பேட்டி.. (கடைசிப்பகுதி)


முதல்லயே பேட்டியில் என்னென்னல்லாம் கேப்பாங்கன்னு கேட்டு வெச்சுக்கலாமான்னு ஒரு யோசனை இருந்துச்சு. அப்றம், 'கேட்டு வெச்சுட்டுப் பதில் சொன்னா அதெல்லாம் தயார் செய்யப்பட்ட பதில்களாப் போயிருமே. அது இயற்கையா வர்ற பதிலா இருக்காதே, அதனால் கேக்க வேண்டாம்'ன்னு நினைச்சுக் கேக்காமலேயே விட்டுட்டேன். 

ஜெயா பேட்டியை ஆரம்பிக்கிற வரைக்கும் பரீட்சை ஹாலில் கேள்வித்தாளுக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவியின் மனநிலைதான் எனக்கும் இருந்துது. ஆனா, அவங்க கூட பேச ஆரம்பிச்ச அடுத்த நிமிஷமே எல்லாத்தையும் உதறிட்டு இயல்பாகிட்டேன். பேட்டிங்கற மாதிரியே இல்லாம இயல்பா ஒரு ஃப்ரெண்டோட பேசற மாதிரியே தோண வெச்சது அவங்களோட திறமைன்னே சொல்லலாம். ஆனாலும் பாவம் அவங்க,.. ப்ரேக் பிடிக்காத வண்டி மாதிரி நான் பாட்டுக்குப் பேசிட்டே இருந்தேன். அவங்களைப் பேசவே விடலையோன்னு அப்றமாத் தோணிச்சு.  பேட்டியெல்லாம் முடிஞ்ச அப்புறமாத்தான் என்னோட ட்யூப்லைட் மூளைக்கு இன்னொண்ணும் உறைச்சது. வழக்கமா என்னோட ப்ளாகின் பேரான “அமைதிச்சாரலை”எல்லா இடத்துலயும் சொல்லி அறிமுகப்படுத்திக்கறதுண்டு. இங்கே ஒரு தடவை கூட ‘அமைதிச்சாரல்’ன்னு ஒரு தடவை கூட உச்சரிக்காம “என் ப்ளாக், என் ப்ளாக்”ன்னே சொல்லிட்டிருந்துருக்கேன் அவ்வ்வ்வ்வ்..

அதே மாதிரி, சந்தர்ப்பம் கிடைச்சா, என்னோட ஒரு கவிதையையும் வாசிக்கணும்ன்னு தீர்மானம் வெச்சிருந்தேன். கடைசியில அதையும் வாசிக்கலை. (நெல்லை, குமரி மாவட்ட மக்கள் தப்பிச்சாங்க) உங்களுக்கு வேற என்னல்லாம் விருப்பங்கள் உண்டுன்னு ஒரு பந்தைப்போட்டுத் தந்தப்ப கூட, “நான் ஒரு கவிதாயினி, எளுத்தாளர்”ன்னெல்லாம் சொல்லி அதை சிக்ஸர் அடிக்காம கோட்டை விட்டிருக்கேன். சரி போகட்டும்,.. இப்ப எடுத்திருக்கறது போட்டோகிராபர் அவதாரம். அதுக்குண்டான கடமையை சரி வரச் செய்யணும். அதான் முக்கியம். எழுத்தாளினி அவதாரத்தில் இன்னொரு தடவை கூப்பிட்டா அப்பப் பார்த்துக்கலாம். (ஜெயா.. கவனியுங்க :-)))

ஆர்.ஜேயை விட நீங்க வேகமாப் பேசறீங்க. ஆன்ட்டிக்கு செம போட்டிதான்னு மகளும் கலாய்ச்சா. எனக்கென்னவோ எப்பவும் போல பேசற மாதிரிதான் தோணுது. கேள்விகளென்னவோ வழக்கம்போல்தான். ஆர்வம் எப்படி வந்தது? எப்படி திறமையை வளர்த்துக்கிட்டீங்கன்னெல்லாம் கேட்டாங்க. அதான் ரெண்டு மார்க் கேள்விக்கு அம்பது மார்க் அளவுல பதில்களை குங்குமம் தோழியிலும் சொல்லியிருக்கேனே. அதனால புதுசா சொல்றதுக்கு ஏதுமில்லாத மாதிரி ஒரு தோணல். இன்னும் கத்துக்கவும் திறமைகளை வளர்த்துக்கவும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிற இந்தத் துறையில் உங்க லட்சியம் என்னன்னு கேட்டப்ப மட்டும் உள்மனசுல இருக்கற ஆசை வெளியில வந்திருச்சு போல. என்னன்னு பேட்டியில் கேளுங்க :-))))

என்னதான் எம்பி எம்பிக்குதிச்சுப் பார்த்தும் Mp3-க்கு இங்கே இணைப்புக்கொடுக்க எனக்குத் தெரியலை. கடைசியில் சவுண்டுக்ளவுடில் சேமிச்சேன். அங்கிருந்து ஃபேஸ்புக், டம்லர், மெயில், வேர்டுப்ரெஸ் எல்லாத்துலயும் பகிர்ந்துக்க முடியுது. ஆனா, ப்ளாகில் மட்டும் பகிர முடியாதுன்னு சொல்லிருச்சு. ஆகவே சேமிச்சு வெச்சுருக்கும் இடத்துக்கு வழி காமிச்சுக் கொடுத்திருக்கேன். கேட்டுட்டு வந்து சொல்லுங்க. அப்டியே ப்ளாகில் எப்படி எம்பி த்ரீயை எம்பாமலேயே இணைக்கலாம்ன்னு தொழில் நுட்பம் அறிஞ்சவங்களும் சொல்லுங்க :-)

                                                             

எம்பி த்ரீயை எப்படி ப்ளாகில் இணைக்கறதுன்னு குழுமத்தில் வழிகாட்டிய பாலராஜன் கீதாவுக்கு மிக்க நன்றி..

க்ளவுட்ஸில் கேட்க லிங்கைக் க்ளிக்கவும்.

https://soundcloud.com/santhymariappan-1/interview-in-nellai-hello-f-m

நெல்லை ஹலோ எஃப்.எம்மில் எனது பேட்டி.. (பகுதி-1)

எப்பவும்போல் அன்னிக்கு மெயில் பெட்டியைத் திறந்தேன். ஒவ்வொண்ணா வாசிச்சு, பதிலளிக்க வேண்டியதுக்கெல்லாம் பதிலளிச்சு, ப்ளாகுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செஞ்சுன்னு நான் ஒர்ரே பிஸியாயிருந்தேன். அப்பத்தான் ஒரு புது மெயில் கண்ணுல பட்டது. அனுப்புனவங்க பேரு வேற இது வரைக்கும் கேள்விப்பட்டதில்லை.  யாரு? என்னன்னு மெயிலைத் திறந்து பார்த்தேன்.. ஹைய்யோ!!!!

நெல்லை ஹலோ எஃப்.எம்மிலிருந்து ஜெயகல்யாணியின் மெயில். குங்குமம் தோழியில் வந்திருந்த என்னுடைய பேட்டியை வாசிச்சுட்டு, 'நெல்லை ஹலோ எஃப்.எம்மின் "சாதனைப்பெண்கள்" மகளிர் நிகழ்ச்சிக்காக ஒரு பேட்டியெடுக்கணும். சம்மதம்ன்னா உங்க தொடர்பு எண்ணை மெயிலுங்க'ன்னு கேட்டிருந்தாங்க. ஆஹான்னு யோசிச்சுட்டு என் மொபைல் நம்பரை அனுப்புனேன். அப்படியே பேட்டி எப்ப எடுப்பீங்க?.. நேரடி ஒலிபரப்பா.. அல்லது பதிவு செய்யப்பட்டதான்னு துணைக்கேள்விகளும் அனுப்பினேன். ஏன்னா நிகழ்ச்சிக்கேத்தபடி தயாரா இருக்கணுமில்லையா!. மறுநாள் மதியம் 12 மணிக்கப்புறம் தொடர்பு கொள்வாங்கன்னும், பேட்டியைப்பதிவு செஞ்சு அன்னிக்கு மதியமே ஒரு மணியிலிருந்து ஒண்ணேகால் வரையிலான நேரத்துல ஒலிபரப்பும் ஆகிரும்ன்னு பதில் மெயில் வந்தது.

நம்ம ஜெயகல்யாணி ஜெயபாலனின் பெயரை விட அவங்க வாங்கியிருக்கும் பட்டங்களின் லிஸ்ட் நீளமானது. M.Com., M.C.A., B.Ed., P.G.D.C.A., இதோடு கூட ஆஸ்திரேலியாவில் படிச்சு வாங்கிய CPA-யும் சேர்ந்துக்கிட்டிருக்கு. இந்த CPA நம்மூர் CAக்கு சமம். படிப்பின் மேல் இவங்க வெச்சுருக்கும் ஆர்வம் இதுலயே தெரியுதில்லே. பையனை ஸ்கூலில் சேர்த்துட்டு, பையன் ஏழாம் வகுப்பு வரும்வரைக்கும் அதே ஸ்கூலில் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு எடுத்துட்டிருந்திருக்காங்க. அதே சமயத்தில் தூத்துக்குடி ஆல் இந்தியா ரேடியோவிலும் அறிவிப்பாளராவும் பணி புரிஞ்சிருக்காங்க. குழந்தை, குடும்பம்,ஒரே நேரத்துல இரண்டு வேலைகள்ன்னு எல்லாத்தையும் சமாளிச்சுக்கிட்டு.. அம்மாடியோவ்!!.. அசுர சாதனைதான் இல்லையா?. இப்ப ஹலோ எஃப்.எம்மில் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராவும் இருக்காங்க. தன்னைப்பத்திச் சொல்லிக்கிட பெருசா ஒண்ணுமில்லைன்னு சொல்லிக்கிட்டாலும் இவங்களும் சாதனைப்பெண்தான். கண்டிப்பா இவங்களைப்பத்தி இன்னொரு நாள் விரிவா எழுதணும்.

வீட்ல பசங்க கிட்டயும் ரங்க்ஸ் கிட்டயும் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கிட்டேன்.அப்பத்தான் மறுநாள் ஒரு முக்கியமான வீட்டுவேலையை முடிக்கிறதுக்காக ரங்க்ஸ் லீவு போட்டிருந்தது ஞாபகம் வந்தது. மறுநாள் காலை பத்து மணி வாக்கில் ரெண்டு பேரும் அங்கே போகலாம்ன்னு ஏற்கனவே  ப்ளானும் போட்டிருந்தோம். அடடா!! இப்ப என்ன செய்யறது?. “சரி.. மொபைல்லதானே பேட்டியெடுப்பாங்க. கையோட கொண்டு வந்தா அங்கே வெச்சு பேசலாமே”ன்னார். “ஆங்.. அதெல்லாம் முடியாது. அங்கே ஒரே மெஷின் சத்தமா இருக்கும். சத்தம் காரணமா சரியா பேச முடியலைன்னா அப்றம் ப்ரோக்ராம் ஹோகயா”ன்னுட்டேன். அப்றம் உக்காந்து யோசிச்சுட்டு “ஒண்ணு செய்யலாம்,.. பத்து மணிக்கு நீங்க முன்னாலே போங்க. ப்ரோக்ராமை முடிச்சுட்டு நான் பின்னாடி வரேன்”னு இறுதி முடிவெடுத்துட்டேன்.

மறுநாள், குளிச்சு முடிச்சு சாமி கும்பிட்டு, ரங்க்ஸைக் கிளப்பி அனுப்பிட்டு, அன்றாட வேலைகளைக் கவனிக்க ஆரம்பிச்சேன். ‘ஆச்..’ முதல் தும்மல். ரெண்டு நிமிஷ இடைவெளியில் அடுக்கடுக்கா தும்மல், லேசா தொண்டையும் கரகரங்குது. ஜலதோஷத்துக்கான அறிகுறிகள் லேசா தென்படுது. பகவானே!!.. இதென்ன? இருந்திருந்து இன்னிக்கா இப்படி ஆகணும். சரி,.. நீயே கவனிச்சுக்கோன்னுட்டு அடுக்களைக்கு வந்து கொஞ்சம் வெந்நீரை பொறுக்கும் சூட்டில் குடிச்சுட்டு, ஒரு பாட்டிலிலும் நிறைச்சுப் பக்கத்துல வெச்சுக்கிட்டேன். இண்டர்வியூ கொடுக்கறச்ச தொண்டை வறண்டாலோ, திடீர்ன்னு தொண்டைக்கரகரப்பு வந்துட்டாலோ என்னாகிறது? எதையும் ப்ளான் பண்ணிப் பண்ணணுமில்லையா :-)) அப்படியே “ஹல்திகஃப்”ஃபையும் ரெண்டு டோஸ் முழுங்குனேன். இப்ப கொஞ்சம் கொள்ளாம். இன்னும் டைம் இருக்கேன்னு இணையத்துல உலாவ ஆரம்பிச்சேன்.

சுமார் பன்னிரண்டரை மணியிருக்கும்… மொபைல் கூப்பிட்டது. ஜெயாதான். இணைப்பு சரியாயிருக்கான்னு செக் செஞ்சுட்டு, “நான் அறைக்குள்ளே போய்க்கிறேன். லைன்ல இருங்க”ன்னாங்க. பின்னணியில் லேசான ஒலியில் ஒரு பாட்டு ஒலிக்குது. என்ன பாட்டு? அடிக்கடி கேட்டதுதான். ஆங்.. இப்ப தெளிவாக் கேக்குது. “தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது” இது கோபுரவாசலிலே படத்துலேர்ந்து இல்லே. கேட்டு எவ்ளோ நாளாச்சு. ஜெயா பேட்டியை ஆரம்பிக்கிற வரைக்கும் நான் கேட்டுக்கிட்டிருந்தேன். நீங்களும் கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டேயிருங்க, இதோ வரேன் :-)

Tuesday, 2 April 2013

குங்குமம் தோழியின் கண்கள் பகுதியில் எனது பேட்டி..

குங்குமம் தோழியில் "கண்கள்" என்றொரு பகுதி தொடர்ந்து வருவதை, அந்த இதழைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஊனக்கண்ணால் பார்த்து மகிழ்ந்த காட்சிகளை மூன்றாவது கண்ணான காமிராக்கண்ணால் படம் பிடித்துப் பத்திரப்படுத்தும் மகளிரை இந்தப் பகுதியில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த மாதம் குங்குமம் தோழி இதழில் நான் எடுத்த படங்களில் சிலவற்றுடன் என்னுடைய பேட்டியும் வந்திருக்கிறது. உங்கள் அனைவருடனும் இந்த சந்தோஷமான நிகழ்வைப் பகிர்ந்து கொள்வதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி :-)). பேட்டியை வாசிக்கத் தோதாக ஒவ்வொரு பக்கத்தையும் தனித்தனியாகவும் பகிர்ந்திருக்கிறேன்.இந்த சந்தோஷமான நிகழ்வை குங்குமம் தோழி ஃபேஸ்புக்கிலும் அவர்களின் பக்கத்தில் பிரத்தியேகமான செய்தியாக வெளியிட்டது.
ஊக்குவித்து உற்சாகமளித்த குங்குமம் தோழிக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails