Tuesday 9 April 2024

"நல்லாச்சி" முன்னுரை – எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்

"நல்லாச்சி" நூலுக்கு தோழியும் எழுத்தாளருமான வித்யா சுப்ரமணியம் எழுதிய முன்னுரை. நன்றி வித்யாஜி. புத்தகம் கோதை பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்பு எண் 9080870936.


***************************************************************
அன்பார்ந்த சாரல். 

மண்வாசத்தை எழுப்பும் திறன் மழைக்கு மட்டுல்ல, சிலரது எழுத்துகளுக்கும் உண்டு. அப்படிப்பட்ட மண்வாச எழுத்துதான் சாரல் என்று நான் அன்போடு விளிக்கும் உன்னுடைய எழுத்து. அதுவும்  நாரோயில் வட்டார சாரல் துளிகளாய் விழுந்து மண்வாசத்தை நுகர வைக்கும். 

அன்றாடம் நடக்கும் அல்லது கண்ணில்படும் சின்னச்சின்ன சம்பவங்களைக் கவிதை நயத்துடன் எழுதுவதற்கு பிரத்யேகத் திறனும் அதீத ரசனையும் வேண்டும். எந்தவொரு அழகான கோலமும் அதன் முதல் புள்ளிக்குள்தான் ஒளிந்திருக்கும். புள்ளிகள் அதிகரிக்க, அவற்றின் கோர்ப்பில் கோலம் வளர்ந்து பொலிவுறும். சிலரது கரங்கள் அனாயாசமாய் கோலம் போடும். சிலர் தயங்கித் தயங்கி ஆரம்பித்து தவறாக இணைத்து பின் கலைத்து, மீண்டும் சேர்த்து, என கோலத்தை ஒருவழியாக ஒப்பேற்றுவார்கள். ஆனால் உன்னுடைய நல்லாச்சி வெகு அனாயாசமாய் உனது எண்ணங்களால் வரையப்பட்ட மிக அழகான கவிதைக் கோலம் என்பேன். 

முகநூலில் இதன் முதல் புள்ளியை நீ வைத்தபோதே ஆஹா என நாங்கள் பலரும் நல்லாச்சியை வியந்து ரசிக்கத் துவங்கிவிட்டோம்.  பிறகு நல்லாச்சி உன் மூலம் வெளிப்படும்போதெல்லாம் அவள் எங்களுக்கும் நெருங்கிய சொந்தம் போலாகிவிட்டாள் என்பதுதான் உண்மை. இரண்டு பக்கத்து பாட்டியின் அன்பையும் அறியாது வளர்ந்த நான் இந்த அறுபத்தி ஐந்து வயதில் ஒரு பேத்தியின் மனநிலையுடன் நல்லாச்சியின் அன்பை ரசித்து ருசிப்பதற்கு நீ ஒரு காரணமென்ற வகையில் உனக்கு என் நன்றிகள்.   

தலைமுறை இடைவெளிகளையும் மீறிய பாசத்தை நல்லாச்சியும் அவளது பேத்தியும் வெளிப்படுத்துவதைக் கீழ்க்கண்ட கவிதை மூலம் நீ எத்தனை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறாய்!. 

மெஹந்தி இடத்தெரியாத நல்லாச்சியை 
உள்ளங்கையில் சிவந்திருந்த 
நூடுல்ஸ் வரிகளும் அன்னமும் 
சற்றே மிரளச்செய்திருந்தன 
தொப்பியணிந்த வீரல்களும் 
இட்லி தோசையிட்ட 
உள்ளங்கைகளுமாய் வாழ்ந்த 
அந்த கிராமத்து மனுஷி 
சற்று அந்நியப்பட்டே நின்றிருந்தாள் அச்சூழலில் 

இது பாட்டியின் மனநிலை. இப்படிப்பட்டவளிடம் வந்து,. 

இட்லி தோசை வரைந்து, கூடுதலாய்த் தொப்பிகளும் வைத்துவிடுமாறு வேண்டினாளாம் பேத்தி. இதைக்கேட்டதும் நல்லாச்சிக்கு மட்டுமல்ல எனக்கும் ஆசுவாசம் ஏற்பட்டது.

உடனே நல்லாசச்சி,
“மருதாணிப் பூங்கரங்களில் முத்தமிட்ட ஆச்சியின் 
அன்பு சிவந்திருந்தது 
பேத்தியின் கைகளில் 
மருதாணி வாசத்துடன். 

என்று நீ கவிதையை முடித்திருந்த அழகில் என் மனம் நிறைந்தது.  

இதொரு சின்ன சாம்பிள்தான். இந்தப் புத்தகம் முழுக்க இப்படியான நெகிழ்ச்சிகளைக் குற்றாலச் சாரலாய்த் தெளித்திருக்கிறாய் நீ. 

சாரல் மழையினூடே சுருக்கென்ற உணர்வையும் ஒரு கவிதை மூலம் ஏற்படுத்தியதையும் அதனை நீ சொல்லியிருந்த விதத்திலும் நான் வியக்கிறேன். ஊர் உலகத்தில் நடக்காத விஷயமில்லை அது. ஆனாலும் பேத்தியின் அந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியாத அவளது வேதனையை நான்கே வரியில் நீ கூறியிருந்த விதம் என்னை அசத்திற்று.

இதென்ன? அதென்ன? வீதிகளை அளந்தபடி
பேத்தி வீசும் கேள்விகளுக்கெல்லாம் 
பதிலளித்த நல்லாசச்சி,
இது யார்? என்ற கேள்விக்கு 
எப்படி பதிலளிப்பாள்,
தாத்தா கொணர்ந்த இன்னொரு ஆச்சியென்று! 
 
இது மட்டுமா? நல்லாச்சிக்கு அருவி அதிசயமென்றால், பேத்திக்கு பம்ப்செட் அதிசயம். பேத்திக்கு புலி பெரிய பூனையென்றால்,  நல்லாச்சிக்கு பூனை சிறிய புலி. அமாவாசையன்று நல்லாச்சி ஆசுத்திரிக்கு அனுப்பிவிட்ட நிலவுக்காகக் காத்திருக்கும் பேத்தி. எறும்புக்காக அரிசி மாக்கோலமிடும் ஆச்சி, எறும்புகளுக்கு விக்காதிருக்க வேண்டுமேயென கோலத்தின் மீது நீர் தெளிக்கும் பேத்தி, உப்புமாவிலிருந்து தப்பிக்க தாத்தாவும் பேத்தியும் செய்யும் குறும்புகளென ஒரு கிராமத்து மனிதர்களின் இயல்புகளையும் சம்பாஷணைகளையும் போகிறபோக்கில் ரசனையுடன் கவிதையாய் நீ வடித்ததோடன்றி எங்களையும் ஒரு நல்ல திரைப்படம் காண்பது போலக் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறாய். இன்னும் சொல்லிக் கொண்டே போனால் கவிதைகளை விட நீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். 

கடைசியாக உன்னிடம் என் ஆசையொன்றைச் சொல்கிறேன் மறுக்காமல் நிறைவேற்றுவாயா? நல்லாச்சியையும் அவள் பேத்தியையும் எனக்கு நேரில் காணவேண்டுமே.. அவர்களுடன் ஒருநாள் இருந்துவிட்டு வரவேண்டுமே. அழைத்துச் செல்வாயா சாரல்?     

என்றென்றும் அன்புடன் உன், 
வித்யா சுப்ரமணியம் 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails