Sunday 2 July 2023

கூட்டாஞ்சோறு

வீட்டுக்குப் பக்கத்தில் எங்கேயாவது ஒரு நாள் பயணமாக சுற்றுலாவோ, பக்தி உலாவோ சென்று வர வேண்டுமா? ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டும் கூடிக்களிக்கும் தினங்களா? எங்கேயாவது தோட்டம், அருவிக்கரை போன்ற இடங்களுக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் கொண்டு சென்று அங்கேயே சூடாகச் சமைத்துச் சாப்பிட்டு பொழுதைக்கழித்து வர விரும்புபவர்களா? புது மணமக்களுக்கான விருந்தா?... முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மக்களின் ஒரே விருப்பமாக கூட்டாஞ்சோறும் இருந்து வந்துள்ளது. 

சில சமயங்களில் கிளம்புவதற்கு முதல்நாள் இரவில் வீட்டுப்பெண்கள் கண் விழித்து ஆளுக்கொரு வேலையாகச்செய்து கூட்டாஞ்சோற்றைக் கிளறி தூக்குவாளிகளில் அடைத்து மேலாக வாழையிலை போட்டு மூடியால் இறுக மூடி விடுவர். தொட்டுக்கொள்ள கூழ்வற்றல், வெங்காய வடகம், பப்படம், ஊறுகாய், துவையல்கள் என பக்கவாத்தியங்களும், எல்லோருக்குமாக அளவாக நறுக்கப்பட்ட வாழையிலைத்துண்டுகளும் கூடவே பயணிக்கும். பயணம் போன இடத்தில் கொஞ்சம் சடவாறிவிட்டு, பக்கவாத்தியங்களுடன் மெயின் அயிட்டமான கூட்டாஞ்சோற்றையும்  வெளுத்துக்கட்டுவர். பேச்சும் சிரிப்புமாகக் கலகலவென உணவுநேரம் அமையும்போது கணக்கேயில்லாமல் கவளங்கவளமாக உணவு உள்ளே போகும். 

காலப்போக்கில், "எங்க போனாலும் இந்த அடுப்பங்கரையையே கெட்டிக்கிட்டு அளணுமா?" என பெண்கள் முணுமுணுக்கத் தொடங்க, 'போற எடத்துல என்னமும் கௌப்புக்கடையில சாப்புட்டுக்கலாம்' என மக்களின் மனநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறத்தொடங்கி விட்டது. ஆனாலும் எப்போதாவது நினைவின் ருசி மேலோங்கும்போது 'சாப்புடணும் போல இருந்திச்சின்னு அவ்வோ கேட்டா' எனவோ 'பிள்ளேளுக்கு ஒரு நல்ல சோறுகறி வச்சிக்குடுக்காண்டாமா?' எனவோ சொல்லிக்கொண்டு சமைத்துப் பரிமாறப்படுகிறது. 

நல்ல புழுங்கலரிசியில் சமைக்கப்பட்ட கூட்டாஞ்சோறு இன்னும் ருசி மிகுந்தது. ஆனால், எங்கள் வீட்டில் புழுங்கலரிசியில் சமைத்தால் அதை நான் மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே பச்சரிசியில் செய்தேன். 

எந்த அரிசியானாலும் அதோடு நாலுக்கு ஒரு பங்கு துவரம் பருப்பைக் கலந்து வையுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றிவிட வேண்டாம்.

1 முருங்கை, 2 கத்தரி, கைப்பிடி சீனியவரை, 2 பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 4 பச்சை மிளகாய்கள், பாதி மாங்காய், 2 உருளைக்கிழங்குகள், பாதி வாழைக்காய், 1 கேரட் என இவையெல்லாவற்றையும் பெரிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து நன்கு கசக்கிப்பிழிந்து ஒரு தம்ளர் அளவில் புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லித்தழையை நறுக்கியும், கறிவேப்பிலை இணுக்கை உருவியும், கைப்பிடி முருங்கைக்கீரையை ஆய்ந்தும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்கீரை கிடைக்காத சமயங்களில் நான் வெந்தயக்கீரையை நறுக்கிச் சேர்ப்பதுண்டு.

ஒரு தம்ளர் அரிசிக்கு அரை தம்ளர் அளவு தேங்காய்த்துருவல் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கூடுதலானாலும் பாதகமில்லை. அத்தோடு ஒரு பல் பூண்டு(விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்) ஒரு ஸ்பூன் சீரகம், காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 

முன்னேற்பாடுகள் தயாரெனில் இனி களம் புகலாம்..

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி சூடானதும் அரிசிபருப்பை இரண்டே இரண்டு முறை களைந்து போடவும்.

சோறு அரைவேக்காடானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை மொத்தமாக அதனுடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நடுத்தரமான தீயில் வேக விடவும். பெரிய துண்டங்களாகச் சேர்ப்பதால் எல்லாம் ஒரே சமயத்தில் வெந்து விடுகிறது.

காய்கள் முக்கால் வேக்காட்டை நெருங்கும்போது புளித்தண்ணீரைச் சேர்த்து அடிமேலாகக் கிளறி விடவும். பச்சைவாடை போய் சாதமும் வெந்திருக்கும் பொழுதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் முருங்கைக்கீரையையும், கொஞ்சம் காயப்பொடியையும் சேர்த்து காய்கள் உடையாமல் ஒருசேர கிளறி விட்டு மூடி சிறு தீயில் வேக விடவும். முருங்கைக்கீரை இளசாக இல்லையெனில் புளித்தண்ணீர் ஊற்றும்போதே அதையும் சேர்த்து விடவும். கீரை வேகாமல் இருந்தால் ஜீரணமாகாது. 

எல்லாம் ஒன்று சேர வெந்ததும் லேசாகத் தளர்வாக இருக்கும்போதே இறக்கி வைத்து நறுக்கிய கொத்துமல்லி இலையையும் கொஞ்சம் தாராளமாக நெய்யையும் ஊற்றவும். கடைசியாக கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி லேசாகக் கிளறி, கூட்டாஞ்சோற்றின் ஒவ்வொரு அணுவிலும் தாளிதத்தின் ருசி பரவச்செய்யவும். நேரமாக ஆக சோறு இறுகிக்கொள்ளும். பருப்பு வெந்து ரொம்பவும் குழைந்து விடாமல் லேசாக முழித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் எனக்குப் பிடிக்கும்.

இதைச் சூட்டோடு சாப்பிடுவது ஒரு ருசியெனில், வெச்சு சாப்பிடுவது தனி ருசி. ஒரு நாளைக்கு மேல் தாங்காது ஆகவே சீக்கிரம் தீர்த்துக்கட்டி விடவும்.

ஊரிலிருந்து போன வருஷம் கொண்டு வந்த நார்த்தங்காய்களை நானே ஊறுகாய் போட்டேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நார்த்தங்காய் ஊறுகாயெல்லாம் கடைசியாக அம்மை கையால் 1989க்கு முன்னால் சாப்பிட்டது.



Saturday 1 July 2023

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31- அருணா சீனிவாசன்(புத்தக மதிப்புரை)

வீடோ நாடோ.. அங்கே நிர்வாகம் நன்றாக இருக்கிறதென்றால் அது தானும் முன்னேறி பிறரையும் முன்னேற்றும். சிதிலமடைந்த நொடிந்த நிறுவனங்களை வாங்கி நல்ல முறையில் நிர்வகித்து லாபம் கொழிக்கச்செய்வதையெல்லாம் நாமும் கண்கூடாகக் காண்கிறோம். ஒரு நல்ல நிர்வாகி எப்படியிருக்க வேண்டும்? என்னென்ன உத்திகளைக் கடைப்பிடித்தால் வெற்றி காணலாம் என்பதற்கான பல வழிகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. நம் செயல்களுக்கு முதலில் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். நிர்வாகத்தின் பாலபாடம் என்றே இதைச்சொல்லலாம். ஒரு காலத்தில் பள்ளிகளில் இதிகாசங்கள், நீதிக்கதைகள் போன்றவை வாழ்க்கை நெறிகளின் முக்கியத்துவத்தைப் பயிற்றுவிக்கும் முகமாகக் கற்பிக்கப்பட்டன. அவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகள் இன்றும் நமது நிர்வாகவியலில் பிரதிபலித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி ராமாயணம், மஹாபாரதம், நீதிக்கதைகள் போன்றவற்றில் சொல்லப்பட்ட பல கருத்துகளை ஆசிரியர் அருணா சீனிவாசன் விவரித்துள்ளார். 

வேறு வேறு யுக்திகளைக்கையாள்வதோடு காரண காரியங்களை ஆராய்ந்து இடம் பொருள் மற்றும் ஏவல் அறிந்து செயல்படுவது நிர்வாக இயலில் முக்கிய பாடம். ஒரு காரியம் ஒருவனால் சாதிக்கப்பட வேண்டுமெனில் அந்தக்குறிக்கோள் அவன் மனதில் துளிர் விட வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவக்கூடிய இது போன்ற பல வழிமுறைகளைப்பற்றிப்பேசுகிறது அருணாவின் இந்தப்புத்தகம். இதிகாசங்களிலிருந்தும், நீதிக்கதைகளிலிருந்தும், நீதி நூல்களிலிருந்தும், சொந்த அனுபவங்களிலிருந்தும் மட்டுமல்ல.. ஸ்டீபன் ஆர். கோவே, ஸ்பென்சர் ஜான்ஸன், சி.கே. ப்ரஹலாத், கேரி ஹேமல், டேவிட் ஃப்ரீட்மேன், கர்ட் காஃப்மேன், பீட்டர் ட்ரக்கர், பில் கேட்ஸ் போன்ற பல மேனாட்டு நவீன நிபுணர்களின் கருத்துகளிலிருந்தும் நமக்குப் பாடம் கிடைக்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் பல வழிமுறைகளும் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, ஒருவரது சுயமுன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளது சுவாரஸ்யமான ஒன்று.

ஆன்மீகமும் வணிகமும் ஒன்றோடொன்று பிணைந்தவையே என்பதை விரிவாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் என்பார்கள். இச்சிந்தனையும் குறைந்த வளங்களில் உற்பத்தி அதிகரிக்கும் திறனும் மனித வள மேம்பாட்டுப் பயிற்சி முகாம்களில் வலியுறுத்தப்படுகின்றன. ஆலன் ஹால்க்ரோ முன்வைக்கும் வடிகால் கருத்து பல நிறுவனங்களில் பின்பற்றப்படுகிறது. எந்த வேலை செய்பவராக இருந்தாலும் அவரை ஒரு மனிதராகப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம் வெகு விரிவாகவும் அற்புதமாகவும் திருக்குறளின் உதாரணத்தோடு அலசப்பட்டுள்ளது. ஒரு செயலில் இறங்கும்போது தன்னை முழுக்க முழுக்கத்தயார் படுத்திக்கொண்டுதான் இறங்க வேண்டுமென்பதில்லை, 70% தயாராக இருந்தாலே போதுமானது எனச்சொல்லப்பட்டுள்ளது. உண்மைதானே?.. அலை ஓய்ந்தபின்தான் கடலில் இறங்குவேன் என்றிருப்பது நடக்கிற காரியமா?

அறிவு ரீதியான மூளை வளர்ச்சி, மனரீதியான வளர்ச்சி, ஆன்மீக ரீதியான எண்ண வளர்ச்சி(INTELLIGENT, EMOTIONAL, SPIRITUAL QUOTIENTS). வேலை செய்யுமிடத்தில் இக்குணங்கள் அல்லது இவற்றில் சில வெளிப்படும்போது எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பது சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஆங்கில வார்த்தைகளோடு அவற்றின் தமிழ்ப்பதமும் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

பஞ்சதந்திரக்கதைகள், பாட்டி சொன்ன கதைகளில் பொதிந்திருக்கும் வாழ்முறை நெறிகளை சிற்சில மாற்றங்களுடன் இன்றும் நிர்வாகவியல் பாடங்களாகக் கடைப்பிடிக்கலாம். இன்றைய வர்த்தக உலகில் அடிப்படையாகச் சமாளித்துப் பிழைக்க வேண்டுமென்றால் மாற்றங்கள், சிரமம், குழப்பம், பிரளயம் என எல்லாவற்றையும் எதிர்கொள்வது மட்டுமன்றி அவற்றை நேசிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும் என நிர்வாகவியல் நிபுணர் டாம் பீட்டர்ஸ் சொல்லியிருப்பதை சிற்சில உதாரணக்கதைகளுடன் நிறுவியிருப்பது அழகு.

நேரத்தை நிர்வாகம் செய்வது குறித்து ஆசிரியர் எழுதியிருப்பதை வாசிக்கும்போது உண்மையிலேயே நமக்குள் ஓர் உந்து சக்தி பிறக்கிறது. ஒரு நிர்வாகிக்கு மாறுபட்ட கோணங்களிலிருந்து காணப்பழகுவதன் அவசியமும், ஊழியர்களின் சுய மதிப்பீடு உயரும்போது செயல்திறன் எவ்வாறு அதிகரிக்கும் என்ற உத்தியும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ‘பேட்டி லெவிட்டான்’ என்ற பெண் எப்படி நேர்மறை எண்ணங்களை தன்னுள் ஊன்றியே கான்ஸரிலிருந்து குணமடைந்தார் என வாசிக்கும்போது எண்ணம் போல் வாழ்வு என்ற கூற்று ஞாபகத்துக்கு வருகிறது.

முழுமையான தரக்கட்டுப்பாட்டை நிறைவேற்ற தரப்பகுதிகள்(QUALITY CIRCLES) என்ற உத்தி ஏன் எப்படி அமைக்கப்பட்டுப் பயன்படுகிறது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். இது ஜப்பானியர்கள் அவர்களின் பாரம்பரியச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவாக்கி உபயோகிக்கும் அனேக நிர்வாக உத்திகளில் ஒன்று. பள்ளிகளில் தொழில்முறை நிர்வாகம் ஏன் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதை வாசித்தபின்பு அனைவரும் யோசிக்க ஆரம்பிப்பது கட்டாயம். 

பழமொழிகள், திருக்குறள்கள், பஞ்ச தந்திரக்கதைகள், சொந்த அனுபவங்கள் என பலவும் எடுத்தாளப்பட்டுள்ளன. நூலில் சொல்லப்பட்டுள்ள ‘ஐந்து மருமகள் கதை’யை வாசித்தீர்களானால் கூட்டாக வேலை செய்ய வேண்டியதன் அருமை விளங்கும். அன்றைய தமிழக அரசர்கள்.. குறிப்பாக ராஜராஜச்சோழனின் நிர்வாகத்திற்கும் இன்றைய நவீன நிர்வாகவியலுக்கும் இருக்கும் ஒற்றுமைகள் வியக்க வைக்கின்றன. மேலும் கற்றுக்கொள்ளப்பட வேண்டியவைகளும் ஏராளம் உண்டு எனும்போது பெருமிதம் ஏற்படுகிறது. சிறிய வணிக நிறுவனங்களின் தனிச்சிறப்பு என்ன? அவை வளர்ந்தபின்னும் ஏன் அதே உத்திகளையே பயன்படுத்துகிறார்கள்? நான் என்ற உணர்வு ஏற்படுத்தும் அறிகுறிகளின் FLOW THEORY BY MIHALY CSIKSZENTMIHALYI பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? சின்ன நல்ல காரியமும் நேர்மறை அலைகளை எழுப்பி ‘தான்’ என்ற நிலையிலிருந்து எப்படி பொது நலம் நோக்கி நகர்த்துகிறது? நூலை வாசித்தால் தெரிந்து கொள்ளலாம்.

நிர்வாகவியலோடு சுயமுன்னேற்றத்திற்கான பல கருத்துகளும் அக்காலத்திற்கு மட்டுமல்ல இக்காலத்திற்கும் பொருந்திப் பிரதிபலிப்பதை இந்நூலில் காணலாம். அவ்வகையில் இப்புத்தகம் மேலாண்மைக்கல்வி கற்பவர்கள், சிறு நிறுவனத்தார் மற்றும் வணிகர்களுக்கு மட்டுமல்ல தனி மனிதர்களுக்கும் பயன்படக்கூடியதே. 

LinkWithin

Related Posts with Thumbnails