Wednesday, 22 February 2012

அசலும் நகலும் - ஜோதிர்லிங்கங்கள் - 2


இரண்டாம் பாகம் தொடர்கிறது...

இராமநாதர்- இராமேஸ்வரம்- தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் என்ற தீவில் இருக்கும் இந்தக் கோயிலுக்குப் பாம்பன் பாலம் வழியாகச் செல்லலாம். மொத்தம் 36 தீர்த்தங்கள் கொண்ட, திராவிடக் கட்டடக் கலை முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோயிலின் பிரகாரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
தலவரலாறு: இராவணனை அழித்தபின் அயோத்தி திரும்பிக் கொண்டிருந்தபோது பிரம்மஹத்தி பாவத்தைப் போக்கிக் கொள்வதற்காகச் சிவபூஜை செய்ய நினைச்சார் ராமர். சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் திரும்பி வரத் தாமதமாகவே சீதா பிராட்டி தன் கையாலயே மணலைப் பிசைந்து லிங்கம் உருவாக்கினார். ராமர் அந்த லிங்கத்துக்குப் பூஜை செஞ்சதால் இங்கேயுள்ள சிவன் ராமலிங்கர் என்று நாமகரணம் சூட்டப்பட்டார். பிற்பாடு அனுமர் கொண்டு வந்த லிங்கமும் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு காசிலிங்கம், அனுமன்லிங்கம் என்ற பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இங்கே கடலாடிப் பாவங்களைப் போக்கிக் கொள்ள உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் வருகிறார்கள். இந்தியாவைப் பொறுத்த மட்டில் காசி-ராமேஸ்வரம் இரண்டுமே முக்கியமானவை. காசியிலிருந்து ஆரம்பிக்கும் தலயாத்திரை ராமேஸ்வரம் வந்து ராமலிங்கத்தைத் தரிசித்துக் கங்கை நீரால் அபிஷேகம் செய்தால்தான் முழுமை பெறும். இங்கேயிருந்து ஆரம்பிக்கும் யாத்திரைக்கும் அப்படியே.

கேதார்நாத்-கேதார்-உத்தராகாண்ட்
ருத்ர இமயமலைப் பகுதியில், மந்தாகினி நதி தீரத்திலிருக்கும் கேதார் மலையுச்சியில் இந்தக் கோயில் இருக்கிறது. இங்கிருக்கும் பருவ நிலை காரணமாக ஏப்ரலிலிருந்து நவம்பர் வரை மட்டுமே இந்தக் கோயில் திறந்திருக்கும். மற்ற மாதங்களில் இந்தக் கோயிலின் பூசாரிகள் உகிமந்த் என்ற இடத்துக்குப் போய் அங்கிருந்து பூஜையைத் தொடருவார்கள். இந்தக் கோயிலுக்கு கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து மலையேறித்தான் போக வேண்டும். கேதார் நாத் யாத்திரை போகும் புனித யாத்திரீகர்கள் கங்கோத்ரியிலிரிந்து கங்கை நீரையும் யமுனோத்ரியிலிருந்து யமுனை தீர்த்தத்தையும் கொணர்ந்து கேதார நாதருக்கு அபிஷேகம் செய்வார்கள்.
தலவரலாறு: நர-நாராயணர்களின் தவத்தை மெச்சி அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி ஜோதிர்லிங்கமா இங்கே கோயில் கொண்டார். இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதா சொல்லப்படுகிறது, அர்ஜூனன் தவம் செய்து பாசுபதாஸ்திரம் பெற்றது, திரௌபதி கேட்ட கல்யாண சௌகந்திகம் என்ற பூவைக் கொண்டு வரக் கிளம்பிப்போன பீமன் முதன் முதலா அனுமனைச் சந்தித்தது, ஈசனின் இடப்பக்கம் கேட்டு பார்வதி தவம் செய்து அர்த்தநாரீஸ்வரர் ஆனது என்று இங்கே நடந்ததாகச் சொல்லப்படும் புராண விஷயங்கள் ஏராளம்.

காசிநாதர்- காசி- உத்தரப்பிரதேசம்
இந்துக்களோட வழிபாட்டுத் தலங்களில் காசி ரொம்ப ரொம்ப முக்கியமான இடம். இங்கே இறப்பவர்களில் காதுகளில் அந்த சிவனே தாரக மந்திரத்தை உச்சரித்து நேரடியாகச் சொர்க்கத்துக்கு அனுப்பி வைக்கிறதாக ஐதீகம்.
தலவரலாறு: தன்னுடைய முன்னோர்களுக்கு முக்தியளிக்கும் பொருட்டுத், தவம் செய்த பகீரதனுக்காக ஆகாயகங்கையைத் தன் முடிமேல் தாங்கிப் பூலோகத்துக்குக் கொண்டுவந்த இறைவன் இங்கே கோயில் கொண்டிருக்கிறார். அசலான கோயில் 1490-ல் முதன்முறையாகக் கட்டப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், தொடர்ந்த படையெடுப்புகள் மற்றும் கொள்ளையடிப்புகள் காரணமாகப் பலமுறை அழிக்கப்பட்டது. இந்தோரைச் சேர்ந்த ராணி அகல்யா பாய் ஹோல்க்கரின் கனவில் வந்து சிவன், தன்னுடைய கோயிலைச் செப்பனிடுமாறு கட்டளையிடவே 1777-ல் உண்மையான விசுவநாதர் ஆலயத்திலிருந்து சற்றுத் தொலைவில் தற்போதிருக்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

த்ரம்பகேஷ்வர்-த்ரிம்பாக்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் நகரிலிருந்து 28 கி.மீ தொலைவில் த்ரிம்பாக் என்ற நகரில் இக்கோயில் அமைந்திருக்கிறது. கோதாவரி ஆறு இங்கிருந்துதான் பாயத்தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறைவன் மும்மூர்த்திகளின் முகங்களுடன் அமைந்திருப்பது சிறப்பு. பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில் முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டிருப்பது சிற்பக்கலையின் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.
தலவரலாறு: ஒரு சமயம் கௌதம முனிவர் தன் மனைவி அகல்யாவுடன் இங்கே வசித்து வந்தார். வருணபகவானின் அருளால் அவருக்குக் கிடைத்த அட்சய பாத்திரத்தைக் கண்டு பொறாமையுற்ற மற்றவர்கள் தவ வலிமையால் ஒரு பசுவை உருவாக்கி அது கௌதம முனிவரின் தோட்டத்தில் மேயும்படிச் செய்தனர். கௌதம முனி ஒரு தர்ப்பைப்புல்லால் அதை விரட்டவே, அது அங்கேயே இறந்தது. பசுஹத்தி செய்த பாவத்தைப் போக்க கௌதம முனிவர் சிவபெருமானிடம் ஆகாய கங்கையை வேண்டவே கங்கை ஆசிரமத்துக்கு வந்து தன்னுடைய நீரால் பாவத்தைப் போக்கினாள். கங்கை மற்றும் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமானும் மற்ற கடவுளரும் அங்கேயே தங்குவதாக அருள் பாலித்தனர். பன்னிரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை இங்கே நடைபெறும் கும்பமேளா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பிரம்மாவும் விஷ்ணுவும் இறைவனின் அடிமுடி தேடியபோது அடிமுடியில்லா பிழம்பாய் ஐயன் நின்றதும் இங்கேதான் என்றும் ஒரு கதை உலவுகிறது.

நாகேஸ்வர்-த்வாரகா-குஜராத்
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்ட்ரா பகுதியில் அமைந்திருக்கும் இக்கோயிலின் இறைவனான நாகேஸ்வரரை வழிபட்டால் விஷப்பூச்சிகளின் விஷங்கள் அண்டாது என்று நம்பப்படுகிறது. கோமதி த்வாரகாவிலிருந்து வைத் த்வாரகா செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.
தலவரலாறு: தாருகாசுரன் என்பவன் சிவ பக்தையான சுப்ரியாவைச் சிறையெடுத்துப் பாம்புகளின் நகரமான தாருகாவனத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தினான். பாசுபதாஸ்திரத்தால் அவனை அழித்துத் தன் பக்தையைக் காத்த இறைவன் தாருகாசுரனின் வேண்டுகோளுக்கிணங்கி இங்கேயே கோயில் கொண்டார். தன்னுடைய பெயரால் இத்தலம் வழங்கப்பட வேண்டும் என்ற தாருகாசுரனின் விருப்பத்துக்கிணங்க இத்தலம் நாக்நாத் என்று வழங்கப்படுகிறது.

க்ரிஷ்னேஷ்வர்-ஔரங்காபாத்-மஹாராஷ்ட்ரா
மஹாராஷ்ட்ராவின் அஜந்தா-எல்லோராக் குகைகளுக்கு அருகே இருக்கும் ஔரங்காபாதின் சமீபத்திலிருக்கும் தௌலதாபாதிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் வேருல் என்ற சிற்றூரிலுள்ளது இக்கோயில். இந்தக்கோயிலுக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பாட்டனான மல்ரோஜி ராஜே போஸ்லேயும், இந்தோர் ராணியான அகல்யா பாய் ஹோல்க்கரும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
தலவரலாறு: தனக்குக் குழந்தையில்லாதால் தன் தங்கை குஷ்மாவைத் தன் கணவன் சுதார்முக்கு திருமணம் செய்து வைத்தாள் சுதேஹா. மூத்த சகோதரியின் அறிவுரைப்படி தினமும்101 சிவலிங்கங்களைப் பூஜை செய்து அருகிலிருந்த நதியில் விட்டு வந்தாள் குஷ்மா. சிவனின் திருவுள்ளத்தால் அவளுக்கு ஒரு மகனும் பிறந்தான். முதலில் அன்புடனிருந்த சுதேஹா நாளடைவில் பொறாமையுற்று தன் தங்கையின் மகனைக் கொன்று நதியில் வீசிவிட்டாள். இரத்தத்துளிகளைக் கண்டு சந்தேகமுற்ற குஷ்மாவின் மருமகள் அது தன் கணவனுடையதுதான் என்று தெளிந்து தன் மாமியாரான குஷ்மாவிடம் முறையிடவே,  அவள் முதலில் வருத்தமுற்றாலும் பின் இறைவன் கொடுத்ததை அவனே எடுத்துக்கொண்டான் என்று தெளிந்தாள்.

எப்போதும் போல் பூஜை செய்த 101 சிவலிங்கங்களை நதியில் கரைப்பதற்காக எடுத்துச் சென்றபோது தன்னுடைய மகன் உயிர்பெற்று நதியிலிருந்து எழுந்து வருவதைக் கண்டாள். அவளுக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சியளித்த இறைவன் அவளுடைய வேண்டுகோளுக்கிணங்கி சுதேஹாவை மன்னித்து அங்கேயே கோயில் கொண்டார். குஷ்மாவிற்கு அருளியதால் குஷ்மேஷ்வர் என்றும் நாமம் கொண்டார்.

டிஸ்கி: தனித்தனியாப் படிக்கறதை விட மொத்த ஜோதிர்லிங்கங்களையும் பத்தி ஒரே இடத்துல படிக்க முடிஞ்சா நல்லாருக்குமேன்னு நினைக்கிற நட்புகள்.. வல்லமையின் சுட்டியைச் சொடுக்குங்க.

28 comments:

ராமலக்ஷ்மி said...

மிகச் சிறப்பான பகிர்வு. நன்றி சாந்தி.

கணேஷ் said...

விரிவான தகவல்கள், செறிவான படங்கள். நிறைய விஷயங்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி சாரல் மேடம்!

Jaleela Kamal said...

அப்படியே ஒரு நிமிடம் என் பக்கம் வந்து விருதை பெற்று கொள்ளுஙக்ளேன்

http://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_17.html

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை சாந்தி.. இன்றும் அவசரமாகத்தான் படித்தேன். இன்னொரு நாள் நிதானமாக படிக்கணும். :)

Ramani said...

அருமையான முழுமையான தகவல்கள் அடங்கிய பதிவு
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான முழுமையான அசத்தலான அபூர்வமான பதிவு.

பாராட்டுக்கள்.

Lakshmi said...

படங்களும் பதிவும் நல்லா இருக்கு சாந்தி வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

ஜொலிக்கும் ஜோதிலிங்கப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு.... தொடருங்கள்...

வல்லிசிம்ஹன் said...

அருமையான படங்களும் தகவல்களும் பக்தியைத் தூண்டும் அளவு வெகு அழகாக வந்திருக்க்கிறது மிகமிக நன்றி சாரல்.

கோவை2தில்லி said...

அருமையான பகிர்வுங்க.

ஓம் நமச்சிவாய...

FOOD NELLAI said...

ரொம்ப விரிவா சொல்லியிருக்கீங்க. ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான தக்வல்கள். நன்றி.

நீச்சல்காரன் said...

நல்ல தொகுப்பு இராமேஸ்வரத்தில் கோவிலினுள் 22 மற்றும் வெளியில் 30 தீர்த்தங்கள் உள்ளன.

மாதேவி said...

ஜோதிலிங்கங்கள் விரிவான பகிர்வு. அருமை.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,
வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

ரொம்ப நன்றிங்க வருகைக்கும் வாசிச்சதுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஜலீலாக்கா,

விருதுக்கு ரொம்ப நன்றிங்க.. கூடிய சீக்கிரமே பதிகிறேன்
:-)

அமைதிச்சாரல் said...

வாங்க தேனக்கா,

அவசரமில்லை,.. நிதானமா வாங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

தொடர்ந்து கொடுத்துட்டு வர உற்சாகத்துக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கும் பாராட்டுகளுக்கும்.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா.

வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றிம்மா :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

மிக்க நன்றிப்பா..

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

தொடர்ந்து கொடுத்துட்டு வர்ற உற்சாகத்துக்கு நன்றி :-)

அமைதிச்சாரல் said...

வாங்க நீச்சல்காரன்,

நம்மூர்க்கோயில்கள் கலை மற்றும் ஆன்மீகக் களஞ்சியங்களாச்சே.. தகவலுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

மிக்க நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails