Friday 29 March 2013

வகுத்தல் நிமித்தம்..


உண்மையைப்போலொரு பலமான அஸ்திவாரம் வேறொன்றுமில்லை.

தாய், தாரம், சகோதரி, நாத்தனார், அண்ணி, மகள், காதலி, பாட்டி என்று எத்தனை வேடங்களைப்புனைந்தாலும் அத்தனையையும் கலைத்த பின் மிஞ்சுவது மனுஷி என்ற ஒருவளே.

தவறு செய்து விடுவோமோ என்ற பயத்தில்தான் மேலும் அதிகத்தவறுகள் செய்கிறோம் எல்லாக்கணக்குகளிலும்..

சகிப்புத்தன்மைக்கான அளவுகோல் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவுகளைக்கொண்டிருக்கிறது.

விதிமுறைகள் வகுக்கப்படும்போதே விதிமீறல்களும் தங்களை உருவாக்கிக் கொண்டு விடுகின்றன.

விரும்பிய வண்ணம் அமைத்துக்கொள்ள இயலாதபடி வாழ்க்கையொன்றும் அத்தனை கடினமானதல்ல.

நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமானால் அதற்கு முன் அவற்றை விதைத்திருக்கவும் வேண்டும்.

சிறிதளவே செலுத்தினாலும் பல மடங்காய் நம்மிடம் திரும்பி வரும் எதிரொலி போன்றவையே நம் செயல்களும். நல்லனவோ!! அல்லனவோ!! நம்மிடம் வந்தே தீரும்.

இன்றுதான்,.. இப்பொழுதுதான் செய்ய ஆரம்பித்திருப்பது போல் உற்சாகத்துடன் இருப்பதே, நம்மைத் திரும்பத்திரும்பச் செய்யும் செயல்களில் அலுப்புற்று முடங்கி விடாமலிருக்கச் செய்யும் வழி.

இலக்குகள் தெளிவாக நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் அதை நோக்கிச் செல்லும் பாதைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. கண்டு கொள்வது மட்டுமே நாம் செய்ய வேண்டிய வேலை.

டிஸ்கி: முதல் இரண்டு துளிகளும் ஃபேஸ்புக்கில் குங்குமம் தோழியின் தினமொழிகளிலும் வெளியானவை :-)

Tuesday 26 March 2013

குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்..

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான்  எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து  சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

முகநூலில் "குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அதில் சாரல் துளிகளிலிருந்தும் சில துளிகளை வெளியிட்டிருக்கிறார்கள். பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. பகிர்ந்து கொண்டால் சந்தோஷம் இரட்டிப்பாகுமாம். ஆகவே பகிர்ந்து விட்டேன் நட்புகளிடம்... 

பிப்ரவரி 24 அன்று வெளியான இந்தத்துளி இங்கே தொகுப்பில் இருக்கிறது..

 பிப்ரவரி 28 அன்று வெளியான  இந்தத்துளி இங்கே தொகுப்பில் இருக்கிறது..


மார்ச் 25.. அதாவது, நேற்று ஒரே நாளில் இரண்டு துளிகளை வெளியிட்டு இனிய ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்கள்.


ஊக்குவித்து உற்சாகப்படுத்திய குங்குமம் தோழிக்கு மிக்க நன்றி..

Friday 22 March 2013

ஊக்கம் கொடுத்த தினகரன் வசந்தம்..

எந்தவொரு செயலையுமே ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்று சொல்வதுண்டு.சுமாராகவோ நன்றாகவோ.. எப்படிச்செய்தாலும் சரி,.. அதற்கு ஒரு சின்னப்புன்னகையாகவோ மெல்லிய தலையாட்டலாகவோ கிடைக்கும் அங்கீகாரம் தரும் போதை அதீதமானது. இன்னும் நன்றாகச் செய்ய வேண்டுமென்ற உற்சாகம் நிச்சயமாக ஊற்றெடுக்கும். அதுவே மேலும் முன்னேறவும் தூண்டும். 

என்னதான் எதையும் எதிர்பார்க்காமல்தான் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், "இன்னிக்கு சமையல் நல்லாருக்கு.." என்று ரங்க்ஸ்கள் வாய்தவறிச் சொல்லி விட்டால் நாம் மகிழ்ந்துதானே போகிறோம். தினமும் சொல்லத்தான் நம் புத்திர சிகாமணிகள் இருக்கிறார்களே :-) இந்த ஒரு வார்த்தைக்காகவே அடுத்த வேளைச் சமையலை இன்னும் ருசியாகச் செய்து போடுகிறோமா இல்லையா? :-))

வீட்டில் கிடைக்கும் சின்ன அங்கீகாரமே நம்மை இவ்வளவு உற்சாகப் படுத்தும்போது, ஊரளவில் கிடைக்கும் அங்கீகாரம் நம்மை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தாதா என்ன? அதுவும் பெரிய பத்திரிகைகள் நம்மையும் நம் எழுத்துகளையும் கவனிக்கிறார்கள், வாசிக்கிறார்கள், அங்கீகரிக்கிறார்கள் என்பதை அறிய வரும்போது நம் மதிப்பும் நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் உயர்கிறது. "பரவாயில்லை,.. ஏதோ உபயோகமாகச் செய்கிறாள்" என்று அவர்களும் நம்மை எழுத்தாளினி ரேஞ்சில் பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். 

இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றுதானே கேட்கிறீர்கள்? நிற்க.. இயலாதவர்கள் நாற்காலி போட்டு அமர்ந்து கொள்க. சென்ற ஞாயிறன்று வெளியான தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் தொகுப்பில் என் பெயரையும் இணைத்து இனிய அதிர்ச்சி கொடுத்து விட்டார்கள். ஃபேஸ்புக்கில் ஜலீலாக்கா பகிர்ந்திருந்ததைப் பார்த்து கை தவறுதலாக என் பெயரை டைப்பிட்டார்களோ என்று நினைத்து வசந்தத்தின் இணைய பக்கத்திற்குப் போய்ப்பார்த்தால் செய்தி நிஜம். வலைப்பூவையும் அறிமுகம் செய்திருக்கிரார்கள். பக்கத்தைப் பெரிதாக்கிப்பார்த்து சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொண்டேன். உடனேயே ஸ்க்ரீன் ஷாட்டும் எடுத்து விட்டேன். நாளப்பின்னே 'நீயெல்லாம் இலக்கிய வியாதி இல்லை' என்று பல்டியடித்து விட்டால் நம் நிலைமை என்ன? காலத்துக்கும் அழியாதபடி கல்வெட்டில் செதுக்கியாயிற்று :-)) 
இணையத்திலும் வசந்தத்தை வாசிக்கலாம்..

என்னுடன் அறிமுகப்படுத்தப்பட்ட நம் மதுமிதா, மனோம்மா,சுசீலாம்மா, அருணா, ருக்மணிம்மா, புவனேஸ்வரி ராமநாதன், கோமதிம்மா, ஜலீலாக்கா, ஸாதிகா, பத்மஜா, கீதா இளங்கோவன், மலிக்கா அப்புறம் லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் புதுகைத்தென்றல் எல்லோருக்கும் வாழ்த்துகள்.இதில் ஓரிருவரைத்தவிர எல்லோருமே நம் தோஸ்துகள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

ஃபேஸ்புக்கிலும் தனிமடல்களிலும் குழுமங்களிலும் வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

Thursday 14 March 2013

பத்திரம்.. பத்திரம்..


வெள்ளை யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் பொடிசுகளும், ஓரத்திலிருக்கும் நானா-நானி பார்க்கில் குட்டீஸை விளையாட விட்டுவிட்டு கட்டைச்சுவரில் உட்கார்ந்திருக்கும் பெரிசுகளும், அதே கட்டைச்சுவரில் மொபைலில் தலையை விட்டுக்கொண்டு ‘யாருக்கோ காத்திருக்கும் இளசுகளுமாக அந்தக் காலை நேரத்திலேயே அமர்க்களமாக இருந்தது மும்பை-தாதரின் ‘மீனா தாயி கார்டன் என்றும் அழைக்கப்படும் சிவாஜி பார்க். மீனா தாயி யார் என்பவர்களுக்காக, இவர் காலஞ்சென்ற திரு.பால்தாக்கரேயின் காலஞ்சென்ற மனைவி என்ற சிறு குறிப்பு வழங்கப்படுகிறது. கார்டனின் வாசலியேயே கையில் ஆரத்தித் தட்டுடன் நம்மை வரவேற்பதற்காக மார்பளவுச்சிலை வடிவில் காத்திருக்கும் அவரைக் கண்டு கொண்டபடியே டாக்சியில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். நேர்ப்பாதையில் பயணப்பட்ட டாக்சி தாதரிலிருக்கும் ஷிவ்சேனாவின் தலைமையகத்துக்கு அருகே வந்ததும் சட்டென ப்ரேக் போட்டு நின்றது. பயமெல்லாம் காரணமில்லை,.. அங்கே இருந்த சிக்னலில் சிகப்பு விழுந்து விட்டது அதனால்தான் :-)))))))))

தலைமையகத்தின் முகப்பில் கண்ணாடிச்சுவர்களுக்கப்பால் சாலையைப் பார்த்தாற்போல் அமைந்திருக்கும் சேனையின் சேனாதிபதி படத்துக்கு மாலையணிவிக்கும் புதுப்பழக்கம் வந்திருக்கிறது. ஆள்காட்டி விரலை நீட்டி எதிரில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை சேனாதிபதி பால்தாக்கரே அவர்கள் எச்சரிக்கை செய்த வண்ணம் இருப்பதால் அங்கே ட்ராபிக் ஜாம் ஏற்படுவதேயில்லை. அவரையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று சூழல் குளுகுளுவென்று மாறியது. ரோட்டின் இரு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த சூழல். ஜிலுஜிலுவென்று வந்த காற்றை அனுபவித்தபடியே “இந்த இடம் ரொம்பவே அழகாருக்கு என்றார் பையர். ஆமாம்,.. ஒரு கார்டன் இருந்தாலே அந்த இடம் ஜில்லுன்னு இருக்கும். இங்கே அஞ்சு கார்டன்கள் இருக்கே. கேக்கணுமா என்ன?. அதனால்தான் இந்த இடத்துக்கே ஃபைவ் கார்டன்ஸ் என்று பெயர். இது ‘வடாலா ஸ்டேஷனுக்கு ரொம்ப அருகில் இருப்பது இன்னொரு சிறப்பு. ஆனாலும் இது கிழக்கு மட்டுங்கா பகுதியில்தான் அடங்கும் என்று பையனுக்கு ஸ்தலபுராணத்தை விவரித்தேன்.

அங்கிருந்து இடப்புறம் திரும்பி வடாலா சர்ச்சையும், கெமிக்கல் இன்ஸ்டிட்யூட்டையும், டான்பாஸ்கோ ஸ்கூலையும் கடந்து போய்க்கொண்டிருந்தோம். அடுத்து வரப்போகும் நாற்சந்திப்பில் வலப்பக்கம் திரும்ப வேண்டும் நமக்கு. நாற்சந்தியில் ஒரு காவலர் நின்று போக்கு வரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். நமக்கு வலப்பக்க ரோட்டில் மிஞ்சிப்போனால் பத்து வயதிருக்கும் சிறுமி புத்தக மூட்டையோடு ரோட்டைக்கடப்பதற்காக வலது பக்கமும் இடதுபக்கமும் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். காவலர் நிறுத்துவதற்குள் கடந்து விட வேண்டுமென்று வெண்ணெய்யில் இறங்கிய சூடான கத்தியாய் டாக்ஸி சல்லென்று போய்க்கொண்டிருந்தது. நமது வண்டி வலப்பக்கம் திரும்பவும் அந்தச்சிறுமி சட்டென்று சாலையைக் கடப்பதற்காக ஒரு எட்டு முன்வைத்தாள். அவ்வளவுதான்.. சர்ர்ர்ர்ரென்று அவளது புத்தகப்பையை உரசிக்கொண்டு டாக்ஸி பறந்தது. நாங்களெல்லாம் அப்படியே ஆடிப்போய் விட்டோம். அந்தக்களேபரத்திலும் அந்தக்குழந்தை தப்பித்துக்கொண்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். நின்றோ அல்லது வந்த வழியே திரும்பிப்போயோ என்னவாயிற்று என்று பார்க்க இயலாத சூழல். வந்த ஆவேசத்தில் ட்ரைவரை ஒரு பிடி பிடித்தோம். “வண்டி வர்றதைப்பார்க்காம அவ ரோட்டைக் க்ராஸ் செஞ்சா. ஆகவே இது என் தப்பில்லை என்று கூசாமல் சொல்கிறார்.

சரி,.. அந்தப்பொண்ணுதான் ரோட்டைக் க்ராஸ் செய்யறதுக்காக அங்கே நிற்குதுன்னு தெரியுதில்லே. அட்லீஸ்ட் ஹார்ன் அடிச்சு எச்சரிக்கையாவது செய்திருக்க வேணாமா?” என்று கேட்டால் பதிலே இல்லை. “நீங்க சிரமப்பட வேணாம். நாங்க வேற வண்டியில் போய்க்கறோம் என்று ரங்க்ஸ் சொன்னதும்கூட காதிலேயே விழாத மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ‘சீ..’ என்றாகி விட்டது. மன்னிப்புக்கேட்கும் தொனியோ அல்லது தவறு செய்த உணர்வோ கூட அவரிடம் இல்லை. உடனேயே அருகில் தென்பட்ட டாக்சி ஸ்டாண்ட் அருகில் இறங்கிக்கொண்டு கணக்குத்தீர்த்து அனுப்பி விட்டோம். இவரை நம்பி வண்டியில் பயணம் செய்ய முடியுமா?.. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்ப்பாரோ... இல்லை, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பாரோ?.. யாருக்குத்தெரியும். உடல் நிலை சரியில்லாத பையரை ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். இந்தச்சூழலில் பார்ட்டியிடம் சண்டை போட யாரால் முடியும்?. பையரின் முன்னால் டென்ஷனைக் காண்பித்துக்கொள்ளவில்லையே தவிர இரண்டு மூன்று நாட்களாகவே "பாவம்,.. அந்தப்பெண்ணுக்கு ஒன்றும் ஆகாதிருக்க வேண்டும்" என்றுதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு கெட்டது நடக்கும்போது ஒரு நல்லதும் நினைவுக்கு வருமாம். இப்படித்தான் ஒரு சாயந்திரம் மும்பையிலிருந்து பையரும் நானும் டாக்சியில் வந்து கொண்டிருந்தோம். டாக்ஸியில் காஸ் தீரப்போகிறது. நிரப்புவதற்கு வேறொரு திசையில்தான் போக வேண்டுமென்று சொன்னார் ஓட்டுனர். “பையா,.. மொதல்லயே சொல்லியிருந்தா வேற டாக்சியில் ஏறியிருப்பேனே. இப்படி பாதி வழியில் சொன்னால் என்ன அர்த்தம்?” என்றேன். “பாபி,.. நானும் கவனிக்கலை என்கிறார். கடைசியில் எங்களை வண்டியில் உட்கார வைத்து விட்டு, அவரே ரோட்டில் நின்று ஒவ்வொரு டாக்சியாக வழிமறித்து கடைசியில் அவரது நண்பர் ஒருவரின் வண்டியை ஏற்பாடு செய்து பத்திரமாக ஏற்றி அனுப்பினார். அவர் நினைத்திருந்தால் நடு வழியிலேயே இறக்கி விட்டுவிட்டு தனக்குச் சேர வேண்டிய காசை வாங்கிக்கொண்டு போயிருக்கலாம். ஆனால், மனிதாபிமானம் மும்பையில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட வைரங்கள் இருக்குமிடத்தில்தான் சில கூழாங்கற்களும் கிடக்கின்றன. இந்த மாதிரி சாலையில் கவனமில்லாமல் வண்டியோட்டும் ஆட்களால்தான் விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.

மும்பையில் 2011-ல் மட்டும் 4.4 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றனவாம். அதிலும் எங்கள் நவிமும்பையின் பாம்பீச் ரோடு விபத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. சமீபத்தில் கூட இரண்டு மராட்டி நடிகர்களைக் காவு வாங்கியது. ஆகவே அனைவரையும் எச்சரிக்கும்பொருட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸார் பேலாப்பூரிலிருந்து ஆரம்பித்து வாஷி வரைக்கும் போகும் இந்த ரோட்டில் பத்தடிக்கொரு எச்சரிக்கை பேனர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த பேனர்களைப் பார்த்துக்கொண்டே வண்டியோட்டி யாரும் விபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.






சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பதிலும், பாதுகாப்பான சாலைப்போக்குவரத்திலும் இந்தியாவிலேயே மும்பைதான் முதலிடத்தைக் கடைப்பிடிக்கிறது என்று முன்பு எங்கோ வாசித்த ஞாபகம். அதெல்லாம் இப்போது பழங்கதையாய்ப்போய் விடும் போலிருக்கிறது. சடாரென்று கட் அடித்து குறுக்கே புகும் ஆட்டோக்கள் பெருகி விட்டன. ட்ரக் ஆட்களும் அப்படித்தான் நெருக்கி வருகிறார்கள், வண்டி போவதற்கு சில சமயம் இடமே கொடுப்பதில்லை என்று பசங்கள் சொல்லுவதுண்டு. எப்பொழுதுமே சின்ன வண்டியைக் கண்டால் பெரிய வண்டிக்காரர்களுக்கு இளக்காரம் என்று சொல்லுவார்கள். தப்பு ஸ்கூட்டர் மேலோ கார் மேலோ இருந்தாலும் பாவப்பட்ட சைக்கிள்தான் பழி சுமக்க வேண்டும். இதன் காரணமாகவே சுற்றுச்சூழல், உடற்பயிற்சி என்று பல்வேறு காரணங்களுக்காக சைக்கிளைப் பிடித்துக்கொண்டிருந்த என் பையர் அதைக் கைவிட்டு விட்டு பைக்குக்கு மாறி விட்டார்.

சாலைப்பாதுகாப்பு வாரம் என்று வருடத்தில் ஒரு நாள் கொண்டாடி, அந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட், சீட் பெல்ட் எல்லாம் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்களா என்று செக் செய்தால் ஆயிற்றா?.. மற்ற நாட்களிலும் சர்ப்ரைஸ் சோதனைகள் நடத்த வேண்டும். அதே போல் மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்து செல்வார்கள். போலீசார் சோதனையிடுவதைக்கண்டதும் 'டக்'கென்று தலையில் கவிழ்த்துக்கொள்வார்கள். என்னதான் அபராதம் விதித்து, விதிமுறைகளைக் கடுமையாக்கி என்று மக்களை வழிக்குக்கொண்டு வர முயன்றாலும் 'நான் செய்வதைத்தான் செய்வேன்' என்றிருப்பவர்களை என்ன சொல்ல!! இப்படிப்பட்டவர்கள் வீட்டிலிருப்பவர்களின் அறிவுரையையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. நம்முடைய நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்பதை இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தங்களை எதிர்பார்த்து ஒரு அன்புக்கூட்டமே காத்திருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். கிடைத்திருப்பது ஒரு ஆயுள்.. அதை நம் கவனக்குறைவால் தொலைத்து விடாதிருப்போமே.

டிஸ்கி: படங்கள் ரன்னிங்கில் எடுக்கப்பட்டவை. கொஞ்சம் அப்படியிப்படி ,.. ஃபோகஸ் இல்லாமல் இருந்தால் மன்னிச்சூ :-)))

Sunday 3 March 2013

யுத்தமொன்று வருகுது.. (அதீதம் இதழில் வெளியானது)


ஜனவரி மாத விடியலாய் மெதுவாக ஆற அமர நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்த நந்தினி தன் முறை வந்ததும், பணத்தையும், அப்ளிகேஷனைப் பெற்றுக்கொண்டதாக ஏற்கனவே கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த ரசீதையும் ஜன்னலுக்கு அந்தப்புறம் நீட்டினாள். வாங்கிச் சரி பார்த்து விட்டு, கம்ப்யூட்டரில் விவரங்களைப்பதிந்தபின், கையெழுத்திட்டுத் திருப்பிக்கொடுக்கப்பட்ட காகிதத்துண்டைப் பெற்றுக்கொண்டாள்.

“மொத நாள் காலேஜுக்கு வரப்ப இதைக் கட்டாயம் கொண்டு வாங்க. அப்புறம் காலேஜ் காம்பஸுக்குள்ள பார்க்கிங் வசதி இருக்கு. அதுக்கு ஐ.டி கார்டுக்காக ஒரு ஃபோட்டோவும் கொண்டாந்து ஆபீஸ்ல குடுத்துருங்க” எல்லோரிடமும் சொன்னதையே கிளிப்பிள்ளையாய் இவளிடமும் ஒப்பித்தார் ஆபீசர்.

“சரிங்க”.. அட்மிஷன் கிடைத்து விட்டதற்கான அத்தாட்சியை ஏதோ பட்டமே பெற்று விட்டாற்போல் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்தக் காகிதத்துண்டுக்காக கண்ணீர், உண்ணாவிரதம் என்று எத்தனை எத்தனை போராட்டங்கள்?.. குடும்பத்தினருக்கும் அவளுக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் கடைசியில் அவளது பிடிவாதமே வென்றது. இதோ.. கல்லூரியிலும் இடம் கிடைத்து விட்டது. நடுநிசி நேரத்துக் காற்று வீசினாற்போல் உள்ளமெல்லாம் குளுகுளுவென்றிருந்தது.

“நடு ரோட்டுல நின்னுக்கிட்டுக் கனவு காண வேணாம். வா… இப்படி ரோட்டைக் க்ராஸ் செஞ்சு ஹாஸ்டலுக்குப் போயி மிச்சக்கனவையும் காணலாம்” தன்னுடைய அட்மிஷன் அட்டையை வாங்கிக்கொண்டு வந்த தோழி கையைப்பற்றி இழுக்கவும் கலைந்தாள்.

“ஹாஸ்டலுக்கா?.. எதுக்கு நந்தி? அங்கே தெரிஞ்சவங்க யாருப்பா இருக்காங்க?” என்றாள் நந்தினி.

“என்னடி நீ?.. நந்தி.. தந்தின்னுக்கிட்டு. அழகா நந்திதான்னு கூப்பிடலாமில்லே..”

“போ……..டி. உன் கம்ப்ளெயிண்டை நான் டிலீட் செஞ்சுட்டேன். நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை”

“எங்க ஊர்க்கார கல்பனா அக்கா நமக்கு சீனியர். இங்கேதான் ஹாஸ்டல்ல தங்கிப்படிக்கிறாங்க. ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு வரலாம். அப்படியே எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஹாஸ்டலையும் நோட்டம் விட்டு வெச்சுக்கலாம்.” பேசியபடியே ரோட்டைக்கடந்து ஹாஸ்டலுக்கு வந்தனர்.

“நம்ம காலேஜ்தானா.. கோர்சைப்பத்திப் பேசிக்கணும்ங்கறீங்க. பரவாயில்லை. ரூமுக்கே கூட்டிட்டுப்போங்க. ஆனா சீக்கிரம் அனுப்பிச்சிரணும் ஓகேயா?” என்று வார்டனும் விசேஷமாய் அனுமதித்து, அனைவரும் ரூமில் ஐக்கியமாகிவிட அறிமுகப்படலம் கழிந்த ஐந்தாவது நிமிடம் சீனியர்களும் ஜூனியர்களும் நெருங்கிய தோழிகளாகி விட்டிருந்தனர்.

“ஹேய்.. அட்மிஷன் கிடைச்சுருச்சில்லே. வேர் ஈஸ் த பார்ட்டி யார்?” சீனியர்களில் ஒருத்தி நந்தினியின் கழுத்திலிருந்த துப்பட்டாவை துண்டாய்ப்பாவித்து, முறுக்கி அதட்டலாய்க்கேட்டாள்.

“ஏய்.. விடு அவளை. எப்பப்பாரு திங்கிறதுலேயே இரு. இப்போதைக்கு அவங்க சார்பா நான் பார்ட்டி தரேன். அதுவும் இந்த ரூமுக்குள்ளயே. ஏ இவளே, நம்ம அயிட்டங்களை வெளியில எடு. டீ அவளே,.. நீ ரூமை நல்லா இறுக்கிச்சாத்து” என்று கட்டளையிட்டபடி தனது பொருட்களை வைத்திருந்த கப்போர்டை நோக்கிப்போனாள். துணிகளுக்கிடையிலிருந்து சின்னதாக ஒரு எலெக்ட்ரிக் கெட்டிலையும், க்ரில்லரையும் எடுத்தாள் கல்பனா. மற்றொருத்தி, கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்த அட்டைப்பெட்டியை வெளியே எடுத்தாள். ப்ரெட், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு,சாஸ் வகைகள் என்று விளக்கிலிருந்து புறப்பட்ட பூதம்போல் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருந்தவற்றை வாயில் கொசு போவது கூட தெரியாமல் இரண்டு நந்திகளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னக்கா இதெல்லாம்..” ஆச்சரியம் விலகாமல் கேட்டனர் இருவரும்.

“அதுவா?.. நாளெல்லாம் படிச்சுட்டிருந்தா பசிக்குமில்லே. அதான் சிறுதீனி சப்ளை. அதுவும் ரகசியமா” என்று கண்ணடித்தாள் கல்பனா.

மாயாஜாலம்போல் வெஜிடபிள் சாண்ட்விச் உருவாகி க்ரில்லரில் வாட்டப்பட்டு தட்டுகளில் தயாராக வைக்கப்பட்டது. காபிப்பொடி, பால்பொடி எல்லாம் சேர்ந்து ரெடிமேடாகக் கிடைக்கும் அந்த பிரபலமான காபித்தூள் கொட்டப்பட்ட ப்ளாஸ்டிக் தம்ளர்களில் கெட்டிலில் கொதித்த தண்ணீர் கலந்த மறு நிமிடம் மயக்கும் காபி வாசனையில் அறை மிதந்தது.

திகட்டத்திகட்ட சந்தோஷமாய்ப் பொழுதைக்கழித்தபின் விடை பெற்று வெளியே வந்து சாலைக்கு வந்து ரயில் நிலையத்தை அடைந்தபின்னும் அந்தி நேரத்து வானில் மிச்சமிருக்கும் வெளிச்சமாய் அந்த உற்சாகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்தப்பக்கம் வெளியே செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றால் பஸ் நிலையம் இருக்கும் மெயின்ரோடு. அங்கே சென்றுதான் ஊருக்குப்போக பஸ் பிடிக்க வேண்டும். “ரயில் நிலையத்தோட இந்தப்பக்கம் ஜேஜேன்னு இருக்கு. முக்கிய நுழை வாசலான அந்தப்பக்கம் ஒத்தையடிப்பாதையா இருக்கு. என்ன விசித்திரமோ போ?” என்று வியந்தவாறு பேசிக்கொண்டே நடையை எட்டிப்போட்டனர்  இருவரும்.

சுவர்கள் சேரும் மூலைகளில் துப்பப்பட்ட வெற்றிலைக்கறைகள், கிழித்துப்போடப்பட்ட பான் பராக் உறைகள், பத்திரிகைக்கடையொன்று, சாப்பிட்ட பின் வீசப்பட்ட காற்றடைத்த ஸ்னாக்ஸ் பைகள், தூணுக்கருகில் படுத்திருந்த ஒருவன், அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெஞ்சுகளின் அடிப்பகுதியைப் பட்டா போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த நாய்கள். பெஞ்சின் மேல் குத்த வைத்துக்கொண்டு பல் குத்திக்கொண்டிருந்த வயதானவர், பைகளைக் கால்களுக்கு அருகே பத்திரமாக வைத்துக்கொண்டு நின்ற குடும்பஸ்தர்கள், என்று ஒரு சின்ன ரயில்வே நிலையத்துக்குரிய அத்தனை லட்சணங்களும் ஒருங்கே பொருந்திருந்தது அதற்கு.

நந்திதா ஒரு நிமிடம் நின்றாள். தொங்கிக்கொண்டிருந்த பத்திரிகையொன்றில் இருந்த செய்தியை, கழுத்தைக் காக்காய் போல் வளைத்துப் படிக்க முயன்றாள்.

“பேப்பரை வீட்டுல போயிப் படிச்சுக்கலாம். சட்டுன்னு வாடி. வீட்ல வேற அப்பா அம்மா ஊருக்குப்போயி ரெண்டு நாளாச்சு. நான் போயித்தான் தங்கச்சிக்கும் எனக்கும் சமையல் செய்யணும்” என்று அவளை இழுத்தாள் நந்தினி.

“வீட்ல யாரும் இல்லையா?.. நான் வேண்ணா வரவா துணைக்கு?” தூணுக்கருகில் இருந்து ஒரு கட்டைக்குரல் கேட்டது.

திரும்பிப்பார்க்க முயன்ற நந்தினியைத்தடுத்தாள் நந்திதா. “வேணாம்.. திரும்பாதே. ஏதோ ஒரு ஜென்மம். ஜஸ்ட் இக்னோர் ஹிம். டியேய்… இந்த ஸ்டூல்களையெல்லாம் காலுல கட்டிட்டு வராதேன்னு எத்தனை தடவைசொல்லியிருக்கேன். அதான் வேகமா நடக்க முடியல ஒன்னால“

“ச்சே.. அது பாயிண்டட் ஹை ஹீல்ஸ் டீ.. கேவலப்படுத்தாதே” என்றாள் நந்தினி.

“ரெண்டும் ஒண்ணுதான்..” 

இருவரும் பேசியபடியே பஸ் நிலையம் வந்தடைந்தனர். மணி ஆறுதான் ஆகியிருந்தது. இவர்கள் ஊருக்கான பஸ் வர இன்னும் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். 

“என்னம்மா கண்ணு. அப்பவே பிடிச்சுக் கேட்டுக்கிட்டே பின்னால வந்துட்டிருக்கேன். பதிலே சொல்லாம போறியே!!” ஹாஸ்டலையும் கல்பனா அக்காவையும் பற்றிப்பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்தக் கட்டைக்குரலுக்குத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

இளித்தபடி நின்றிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்திலேயே ஆள் சரியான போதையில் இருக்கிறான் என்று தெரிந்தது. ‘கடவுளே.. இத்தனை நேரம் பின்னாலேயே வந்திருக்கிறானா?..’ அதிர்ந்து அடங்கின இருவரின் நெஞ்சங்களும். இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நகர்ந்து நின்று கொண்டார்கள். அங்கேயும் வந்து தாறுமாறாக உளறத்தொடங்கினான்.

இன்னும் நகர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்ணின் அருகில் ஒண்டிக்கொண்டார்கள் இருவரும். உடலெல்லாம் கிடுகிடுவென நடுங்கியது நந்தினிக்கு. அந்தப் பெண்ணிடம் ஆதியோடந்தமாக அத்தனையையும் சொன்னார்கள். 

“டேய்.. இப்ப இங்கேருந்து போறியா?.. போலீசைக்கூப்பிடவா?” அதட்டினார் அந்தப்பெண்.

“ஆ.. வந்துட்டாங்க சமூக சேவகி… பெரிசா புத்திமதி சொல்றதுக்கு. போம்மா” என்று காற்றில் கையை வீசினான்.

அந்தப்பெண்மணி ஒன்றுமே சொல்லாமல் தன்னுடைய செல்போனில் எண்களை அவற்றுக்கு வலிக்காமல் ஒற்றினாள். யாருடனோ பேசினாள். 

“பயப்படாதீங்க.. தகவல் சொல்லியிருக்கேன். என் பையன் இதோ இப்ப வந்துருவான்” என்று அவள் சொன்னது அந்தப்பெண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

சற்றும் எதிர்பாராவண்ணம் அந்த முரடன் நந்தினியை நெருங்கி அவள் தோளிலிருந்த துப்பட்டாவை இழுக்க முயன்றான்.

அவ்வளவுதான். எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ,.. டக்கென்று விலகிக் குனிந்தவள் அதே வேகத்தில் அவன் கையில் பிடித்திருந்த துப்பட்டாவாலேயே அவன் கைகளை முதுகுக்குப்பின்னால் பிணைத்துக் கட்டி விட்டாள். நிலைகுலைந்து மல்லாந்து விழுந்தவனைச் செருப்பைக் கழற்றிப் பளார் பளாரென்று வெளுத்து வாங்கியவள் வாயில் சரமாரியாக வசவுகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. தன்னை விடுவித்துக்கொள்ள முயன்று போராடி போதையில் இன்னும் தள்ளாடி விழுந்து கொண்டிருந்தான் அவன்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்தவர்கள் அவர்களைச்சுற்றி கூடி விட்டார்கள்.

“இவனையெல்லாம் போலீஸ்ல ஒப்படைக்கணும்ப்பா” சொன்னபடி ஒருத்தர் போலீசைத்தேடி ஓடினார்.

ஆளாளுக்குக் கசகசவென்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“இவன் ஏன் கரெக்டா இந்தப்புள்ளைங்களை மட்டும் தொடர்ந்து வரணும். அதுங்க நடையும் உடையும்.. சேச்சே!!. கண்ணை உறுத்தற மாதிரி உடுத்த வேண்டியது,.. அப்புறம் குய்யோ முறையோன்னு பொலம்ப வேண்டியது. நெருப்பில்லாமப் பொகையுமா?” என்று கூட்டத்தில் கோவிந்தா போட்டது ஒரு குரல்.

சிலம்பைக் கையில் பிடித்தவாறு பாண்டியன் சபைக்குள் நுழைந்த கண்ணகியைப் போல் இருந்தது செருப்பைக் கையில் பிடித்திருந்த அவள் தோற்றம். அதே ஆவேசத்துடன் தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்தாள் நந்தினி.

"நிறுத்துங்க.. எதுக்கெடுத்தாலும் பொம்பளையைக் கொறை சொல்ற புத்தியை மொதல்ல  மாத்திக்கோங்க. நடத்தை சரியில்லை, உடை சரியில்லைன்னு ஆளாளுக்கு கருத்து கந்தசாமிகளா அவதாரம் எடுக்கறதை மொதல்ல விடுங்க. நான் போட்டிருக்கற சல்வார் கமீஸ் ஒண்ணும் வெளி நாட்டு உடை கிடையாது. அக்மார்க் இந்திய உடை. பஞ்சாபுல வயசானவங்க கூட உடுத்தறதுதான் இது. நாங்க பாட்டுக்கு எங்க வழியில வந்துட்டிருந்தோம். பின்னாடியே வந்து கலாட்டா செஞ்சவனை விட்டுட்டு பாதிக்கப்பட்டவளை மேலும் புண்படுத்தறீங்களே.” என்று குமுறினாள்.

அடி வாங்கியதில் போதை சற்றுத் தெளிந்திருக்க வேண்டும். மெதுவாக எழ முயன்றான். முடியவில்லை… கால்கள் மடங்கிச்சரிந்தன. உதடு ஒரு பக்கமாக கிழிந்திருந்தது. கன்னம் காதுகள் என்று எல்லா இடங்களிலும் காயங்கள். வேதனையில் முனகியவாறு தரையில் நெளிந்து கொண்டிருந்தவன், முழங்காலை ஊன்றியவாறு மண்டியிட்டு எழ முயன்றான். 

அதைக்கவனித்த நந்தினி ஆவேசத்துடன் “எங்கேடா ஓடப்பார்க்கிறே?” என்று அலறியவாறு ஹைஹீல்ஸைத்திருப்பிப்பிடித்து அதன் கூர்மையான பகுதியால் அவன் முழங்காலில் நச்சென்று போட்டாள். வலி தாளாமல் அலறினான் அவன்.

“ராஸ்கல்.. உன்னை மாதிரி ஆட்களாலதாண்டா எங்களால இன்னும் வீட்டுச்சிறையிலிருந்து வெளி வர முடியலை. படிக்கணும்ன்னு ஆசைப்பட்டு எவ்வளவோ கஷ்டப்பட்டு வெளியே வரோம்.. எங்களை மறுபடியும் அந்த இருட்டு மூலைக்கே துரத்துற உங்களையெல்லாம் என்ன செஞ்சாத்தகும்?”

“விடும்மா.. உசிரை விட்டுத் தொலைக்கப்போறான்., அப்புறம் விஷயம் வேற மாதிரி திசை திரும்பிரும். எம்பையன் கிட்ட கான்ஸ்டபிளைக் கையோட கூட்டியாரச் சொல்லியிருக்கேன்.போலீஸ் கிட்ட ஒப்படைப்போம். அவங்க பார்த்துப்பாங்க. சட்டம் தன் கடமையை நிச்சயமாச் செய்யும்” என்றாள் அந்தப்பெண்மணி.

“செய்யலைன்னா???..” கூட்டத்திலிருந்து ஒரு கேள்வி எழுந்தது.

“செய்ய வைப்போம்.. கடுமையான தண்டனை வாங்கித்தர்ற வரைக்கும் விட மாட்டோம். எந்தத்தண்டனையுமே இல்லாம ஈஸியா தப்பிச்சுப் போக விடறதுனாலதானே இன்னிக்கு நாலு வயசுப் பெண் குழந்தையைக் கூட சீரழிக்கிறாங்க. இவனுக்குக் கிடைக்கிறதைப்பார்த்தாவது ஈவ் டீஸிங் செய்யற மத்தவங்களுக்குப் பயம் வரணும்.” உறுதியாகச் சொன்னாள் நந்தினி. 

சிறிது நேரத்தில் கூட்டத்தினரை விலக்கிக்கொண்டு வந்து சேர்ந்தார் காவலர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர் "அது சரிம்மா!..புகார் கொடுக்கறதுன்னு வந்துட்டா அப்புறம் கோர்ட்டு, கேஸுன்னு அலையணும். விசாரணைங்கற பேர்ல அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும். பொம்பளைப்பிள்ளை எதுக்கு அங்கெல்லாம் அலையறே. வீணா உன் பேர்தான் கெட்டுப்போகும். இப்ப என்ன நடக்கக்கூடாததா நடந்துருச்சு. துப்பட்டாவைப் பிடிச்சுத்தானே இழுத்தான். இதோட விட்ரு" என்றார்.

அதிர்ச்சியான ஒருவர் "உதவி செய்ய வேண்டிய நீங்களே இப்படிப் பேசலாமா?.. நீங்க புகாரை ஏற்க மறுத்தா அப்றம் நாங்க மேலதிகாரி கிட்ட உங்களைப்பத்தியும் புகார் செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.

"எனக்கென்ன.. எனக்கும் பொம்பளைப்பிள்ளை இருக்குது. ஒரு தகப்பனா சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உங்க விருப்பம். நாளைக்கு சங்கடப்படக்கூடாது பார்த்துக்கோங்க." என்றார் காவலர்.

"இல்லைங்க.. எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது. தனக்கு நடந்ததைத் துணிச்சலா வெளியே சொல்லி நியாயம் கேக்குற பயணத்தை நான் ஆரம்பிச்சு வெச்சேன்ன்னு இருக்கட்டுமே." என்றாள் நந்தினி.

"ம்.. ஏறுடா வண்டியிலே" என்று உறுமியபடி அவனைக் கொத்தாக அள்ளி ஜீப்பில் போட்டார் காவலர். ஜீப் நகர ஆரம்பித்தது.

அவள் குரலிலிருந்த உறுதியும் மனதைரியமும் அந்தக் கூட்டத்திலிருந்தவர்களிடமும் பரவ ஆரம்பித்தது. காவல் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் அவர்கள். சாட்சி சொல்ல ஆட்கள் வேண்டியிருக்குமே.

ராஜபாட்டையை நோக்கிய அந்த ஒற்றையடிப்பாதைப் பயணம் அங்கே ஆரம்பித்தது.

டிஸ்கி: அதீதம் இதழில் வெளியானது..

LinkWithin

Related Posts with Thumbnails