Sunday 3 March 2013

யுத்தமொன்று வருகுது.. (அதீதம் இதழில் வெளியானது)


ஜனவரி மாத விடியலாய் மெதுவாக ஆற அமர நகர்ந்து கொண்டிருந்த வரிசையில் நின்றுகொண்டிருந்த நந்தினி தன் முறை வந்ததும், பணத்தையும், அப்ளிகேஷனைப் பெற்றுக்கொண்டதாக ஏற்கனவே கல்லூரியில் கொடுக்கப்பட்டிருந்த ரசீதையும் ஜன்னலுக்கு அந்தப்புறம் நீட்டினாள். வாங்கிச் சரி பார்த்து விட்டு, கம்ப்யூட்டரில் விவரங்களைப்பதிந்தபின், கையெழுத்திட்டுத் திருப்பிக்கொடுக்கப்பட்ட காகிதத்துண்டைப் பெற்றுக்கொண்டாள்.

“மொத நாள் காலேஜுக்கு வரப்ப இதைக் கட்டாயம் கொண்டு வாங்க. அப்புறம் காலேஜ் காம்பஸுக்குள்ள பார்க்கிங் வசதி இருக்கு. அதுக்கு ஐ.டி கார்டுக்காக ஒரு ஃபோட்டோவும் கொண்டாந்து ஆபீஸ்ல குடுத்துருங்க” எல்லோரிடமும் சொன்னதையே கிளிப்பிள்ளையாய் இவளிடமும் ஒப்பித்தார் ஆபீசர்.

“சரிங்க”.. அட்மிஷன் கிடைத்து விட்டதற்கான அத்தாட்சியை ஏதோ பட்டமே பெற்று விட்டாற்போல் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்தக் காகிதத்துண்டுக்காக கண்ணீர், உண்ணாவிரதம் என்று எத்தனை எத்தனை போராட்டங்கள்?.. குடும்பத்தினருக்கும் அவளுக்கும் இடையில் நடந்த போராட்டத்தில் கடைசியில் அவளது பிடிவாதமே வென்றது. இதோ.. கல்லூரியிலும் இடம் கிடைத்து விட்டது. நடுநிசி நேரத்துக் காற்று வீசினாற்போல் உள்ளமெல்லாம் குளுகுளுவென்றிருந்தது.

“நடு ரோட்டுல நின்னுக்கிட்டுக் கனவு காண வேணாம். வா… இப்படி ரோட்டைக் க்ராஸ் செஞ்சு ஹாஸ்டலுக்குப் போயி மிச்சக்கனவையும் காணலாம்” தன்னுடைய அட்மிஷன் அட்டையை வாங்கிக்கொண்டு வந்த தோழி கையைப்பற்றி இழுக்கவும் கலைந்தாள்.

“ஹாஸ்டலுக்கா?.. எதுக்கு நந்தி? அங்கே தெரிஞ்சவங்க யாருப்பா இருக்காங்க?” என்றாள் நந்தினி.

“என்னடி நீ?.. நந்தி.. தந்தின்னுக்கிட்டு. அழகா நந்திதான்னு கூப்பிடலாமில்லே..”

“போ……..டி. உன் கம்ப்ளெயிண்டை நான் டிலீட் செஞ்சுட்டேன். நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லலை”

“எங்க ஊர்க்கார கல்பனா அக்கா நமக்கு சீனியர். இங்கேதான் ஹாஸ்டல்ல தங்கிப்படிக்கிறாங்க. ஒரு எட்டுப்போய் பார்த்துட்டு வரலாம். அப்படியே எதுக்கும் இருக்கட்டும்ன்னு ஹாஸ்டலையும் நோட்டம் விட்டு வெச்சுக்கலாம்.” பேசியபடியே ரோட்டைக்கடந்து ஹாஸ்டலுக்கு வந்தனர்.

“நம்ம காலேஜ்தானா.. கோர்சைப்பத்திப் பேசிக்கணும்ங்கறீங்க. பரவாயில்லை. ரூமுக்கே கூட்டிட்டுப்போங்க. ஆனா சீக்கிரம் அனுப்பிச்சிரணும் ஓகேயா?” என்று வார்டனும் விசேஷமாய் அனுமதித்து, அனைவரும் ரூமில் ஐக்கியமாகிவிட அறிமுகப்படலம் கழிந்த ஐந்தாவது நிமிடம் சீனியர்களும் ஜூனியர்களும் நெருங்கிய தோழிகளாகி விட்டிருந்தனர்.

“ஹேய்.. அட்மிஷன் கிடைச்சுருச்சில்லே. வேர் ஈஸ் த பார்ட்டி யார்?” சீனியர்களில் ஒருத்தி நந்தினியின் கழுத்திலிருந்த துப்பட்டாவை துண்டாய்ப்பாவித்து, முறுக்கி அதட்டலாய்க்கேட்டாள்.

“ஏய்.. விடு அவளை. எப்பப்பாரு திங்கிறதுலேயே இரு. இப்போதைக்கு அவங்க சார்பா நான் பார்ட்டி தரேன். அதுவும் இந்த ரூமுக்குள்ளயே. ஏ இவளே, நம்ம அயிட்டங்களை வெளியில எடு. டீ அவளே,.. நீ ரூமை நல்லா இறுக்கிச்சாத்து” என்று கட்டளையிட்டபடி தனது பொருட்களை வைத்திருந்த கப்போர்டை நோக்கிப்போனாள். துணிகளுக்கிடையிலிருந்து சின்னதாக ஒரு எலெக்ட்ரிக் கெட்டிலையும், க்ரில்லரையும் எடுத்தாள் கல்பனா. மற்றொருத்தி, கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்த அட்டைப்பெட்டியை வெளியே எடுத்தாள். ப்ரெட், தக்காளி, வெங்காயம், வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு,சாஸ் வகைகள் என்று விளக்கிலிருந்து புறப்பட்ட பூதம்போல் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருந்தவற்றை வாயில் கொசு போவது கூட தெரியாமல் இரண்டு நந்திகளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“என்னக்கா இதெல்லாம்..” ஆச்சரியம் விலகாமல் கேட்டனர் இருவரும்.

“அதுவா?.. நாளெல்லாம் படிச்சுட்டிருந்தா பசிக்குமில்லே. அதான் சிறுதீனி சப்ளை. அதுவும் ரகசியமா” என்று கண்ணடித்தாள் கல்பனா.

மாயாஜாலம்போல் வெஜிடபிள் சாண்ட்விச் உருவாகி க்ரில்லரில் வாட்டப்பட்டு தட்டுகளில் தயாராக வைக்கப்பட்டது. காபிப்பொடி, பால்பொடி எல்லாம் சேர்ந்து ரெடிமேடாகக் கிடைக்கும் அந்த பிரபலமான காபித்தூள் கொட்டப்பட்ட ப்ளாஸ்டிக் தம்ளர்களில் கெட்டிலில் கொதித்த தண்ணீர் கலந்த மறு நிமிடம் மயக்கும் காபி வாசனையில் அறை மிதந்தது.

திகட்டத்திகட்ட சந்தோஷமாய்ப் பொழுதைக்கழித்தபின் விடை பெற்று வெளியே வந்து சாலைக்கு வந்து ரயில் நிலையத்தை அடைந்தபின்னும் அந்தி நேரத்து வானில் மிச்சமிருக்கும் வெளிச்சமாய் அந்த உற்சாகம் மனதில் இன்னும் மிச்சமிருந்தது. ரயில் நிலையத்திலிருந்து அந்தப்பக்கம் வெளியே செல்லும் ஒற்றையடிப்பாதை வழியாகச் சென்றால் பஸ் நிலையம் இருக்கும் மெயின்ரோடு. அங்கே சென்றுதான் ஊருக்குப்போக பஸ் பிடிக்க வேண்டும். “ரயில் நிலையத்தோட இந்தப்பக்கம் ஜேஜேன்னு இருக்கு. முக்கிய நுழை வாசலான அந்தப்பக்கம் ஒத்தையடிப்பாதையா இருக்கு. என்ன விசித்திரமோ போ?” என்று வியந்தவாறு பேசிக்கொண்டே நடையை எட்டிப்போட்டனர்  இருவரும்.

சுவர்கள் சேரும் மூலைகளில் துப்பப்பட்ட வெற்றிலைக்கறைகள், கிழித்துப்போடப்பட்ட பான் பராக் உறைகள், பத்திரிகைக்கடையொன்று, சாப்பிட்ட பின் வீசப்பட்ட காற்றடைத்த ஸ்னாக்ஸ் பைகள், தூணுக்கருகில் படுத்திருந்த ஒருவன், அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெஞ்சுகளின் அடிப்பகுதியைப் பட்டா போட்டுக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த நாய்கள். பெஞ்சின் மேல் குத்த வைத்துக்கொண்டு பல் குத்திக்கொண்டிருந்த வயதானவர், பைகளைக் கால்களுக்கு அருகே பத்திரமாக வைத்துக்கொண்டு நின்ற குடும்பஸ்தர்கள், என்று ஒரு சின்ன ரயில்வே நிலையத்துக்குரிய அத்தனை லட்சணங்களும் ஒருங்கே பொருந்திருந்தது அதற்கு.

நந்திதா ஒரு நிமிடம் நின்றாள். தொங்கிக்கொண்டிருந்த பத்திரிகையொன்றில் இருந்த செய்தியை, கழுத்தைக் காக்காய் போல் வளைத்துப் படிக்க முயன்றாள்.

“பேப்பரை வீட்டுல போயிப் படிச்சுக்கலாம். சட்டுன்னு வாடி. வீட்ல வேற அப்பா அம்மா ஊருக்குப்போயி ரெண்டு நாளாச்சு. நான் போயித்தான் தங்கச்சிக்கும் எனக்கும் சமையல் செய்யணும்” என்று அவளை இழுத்தாள் நந்தினி.

“வீட்ல யாரும் இல்லையா?.. நான் வேண்ணா வரவா துணைக்கு?” தூணுக்கருகில் இருந்து ஒரு கட்டைக்குரல் கேட்டது.

திரும்பிப்பார்க்க முயன்ற நந்தினியைத்தடுத்தாள் நந்திதா. “வேணாம்.. திரும்பாதே. ஏதோ ஒரு ஜென்மம். ஜஸ்ட் இக்னோர் ஹிம். டியேய்… இந்த ஸ்டூல்களையெல்லாம் காலுல கட்டிட்டு வராதேன்னு எத்தனை தடவைசொல்லியிருக்கேன். அதான் வேகமா நடக்க முடியல ஒன்னால“

“ச்சே.. அது பாயிண்டட் ஹை ஹீல்ஸ் டீ.. கேவலப்படுத்தாதே” என்றாள் நந்தினி.

“ரெண்டும் ஒண்ணுதான்..” 

இருவரும் பேசியபடியே பஸ் நிலையம் வந்தடைந்தனர். மணி ஆறுதான் ஆகியிருந்தது. இவர்கள் ஊருக்கான பஸ் வர இன்னும் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். 

“என்னம்மா கண்ணு. அப்பவே பிடிச்சுக் கேட்டுக்கிட்டே பின்னால வந்துட்டிருக்கேன். பதிலே சொல்லாம போறியே!!” ஹாஸ்டலையும் கல்பனா அக்காவையும் பற்றிப்பேசிக்கொண்டிருந்தவர்கள் அந்தக் கட்டைக்குரலுக்குத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

இளித்தபடி நின்றிருந்தான் அவன். பார்த்த மாத்திரத்திலேயே ஆள் சரியான போதையில் இருக்கிறான் என்று தெரிந்தது. ‘கடவுளே.. இத்தனை நேரம் பின்னாலேயே வந்திருக்கிறானா?..’ அதிர்ந்து அடங்கின இருவரின் நெஞ்சங்களும். இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் நகர்ந்து நின்று கொண்டார்கள். அங்கேயும் வந்து தாறுமாறாக உளறத்தொடங்கினான்.

இன்னும் நகர்ந்து அங்கு நின்றுகொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்ணின் அருகில் ஒண்டிக்கொண்டார்கள் இருவரும். உடலெல்லாம் கிடுகிடுவென நடுங்கியது நந்தினிக்கு. அந்தப் பெண்ணிடம் ஆதியோடந்தமாக அத்தனையையும் சொன்னார்கள். 

“டேய்.. இப்ப இங்கேருந்து போறியா?.. போலீசைக்கூப்பிடவா?” அதட்டினார் அந்தப்பெண்.

“ஆ.. வந்துட்டாங்க சமூக சேவகி… பெரிசா புத்திமதி சொல்றதுக்கு. போம்மா” என்று காற்றில் கையை வீசினான்.

அந்தப்பெண்மணி ஒன்றுமே சொல்லாமல் தன்னுடைய செல்போனில் எண்களை அவற்றுக்கு வலிக்காமல் ஒற்றினாள். யாருடனோ பேசினாள். 

“பயப்படாதீங்க.. தகவல் சொல்லியிருக்கேன். என் பையன் இதோ இப்ப வந்துருவான்” என்று அவள் சொன்னது அந்தப்பெண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

சற்றும் எதிர்பாராவண்ணம் அந்த முரடன் நந்தினியை நெருங்கி அவள் தோளிலிருந்த துப்பட்டாவை இழுக்க முயன்றான்.

அவ்வளவுதான். எங்கிருந்துதான் அவ்வளவு வேகம் வந்ததோ,.. டக்கென்று விலகிக் குனிந்தவள் அதே வேகத்தில் அவன் கையில் பிடித்திருந்த துப்பட்டாவாலேயே அவன் கைகளை முதுகுக்குப்பின்னால் பிணைத்துக் கட்டி விட்டாள். நிலைகுலைந்து மல்லாந்து விழுந்தவனைச் செருப்பைக் கழற்றிப் பளார் பளாரென்று வெளுத்து வாங்கியவள் வாயில் சரமாரியாக வசவுகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. தன்னை விடுவித்துக்கொள்ள முயன்று போராடி போதையில் இன்னும் தள்ளாடி விழுந்து கொண்டிருந்தான் அவன்.

இவ்வளவும் நடந்து கொண்டிருந்தபோதே அங்கிருந்தவர்கள் அவர்களைச்சுற்றி கூடி விட்டார்கள்.

“இவனையெல்லாம் போலீஸ்ல ஒப்படைக்கணும்ப்பா” சொன்னபடி ஒருத்தர் போலீசைத்தேடி ஓடினார்.

ஆளாளுக்குக் கசகசவென்று ஒவ்வொன்றையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

“இவன் ஏன் கரெக்டா இந்தப்புள்ளைங்களை மட்டும் தொடர்ந்து வரணும். அதுங்க நடையும் உடையும்.. சேச்சே!!. கண்ணை உறுத்தற மாதிரி உடுத்த வேண்டியது,.. அப்புறம் குய்யோ முறையோன்னு பொலம்ப வேண்டியது. நெருப்பில்லாமப் பொகையுமா?” என்று கூட்டத்தில் கோவிந்தா போட்டது ஒரு குரல்.

சிலம்பைக் கையில் பிடித்தவாறு பாண்டியன் சபைக்குள் நுழைந்த கண்ணகியைப் போல் இருந்தது செருப்பைக் கையில் பிடித்திருந்த அவள் தோற்றம். அதே ஆவேசத்துடன் தலையைச் சிலுப்பிக்கொண்டு நிமிர்ந்தாள் நந்தினி.

"நிறுத்துங்க.. எதுக்கெடுத்தாலும் பொம்பளையைக் கொறை சொல்ற புத்தியை மொதல்ல  மாத்திக்கோங்க. நடத்தை சரியில்லை, உடை சரியில்லைன்னு ஆளாளுக்கு கருத்து கந்தசாமிகளா அவதாரம் எடுக்கறதை மொதல்ல விடுங்க. நான் போட்டிருக்கற சல்வார் கமீஸ் ஒண்ணும் வெளி நாட்டு உடை கிடையாது. அக்மார்க் இந்திய உடை. பஞ்சாபுல வயசானவங்க கூட உடுத்தறதுதான் இது. நாங்க பாட்டுக்கு எங்க வழியில வந்துட்டிருந்தோம். பின்னாடியே வந்து கலாட்டா செஞ்சவனை விட்டுட்டு பாதிக்கப்பட்டவளை மேலும் புண்படுத்தறீங்களே.” என்று குமுறினாள்.

அடி வாங்கியதில் போதை சற்றுத் தெளிந்திருக்க வேண்டும். மெதுவாக எழ முயன்றான். முடியவில்லை… கால்கள் மடங்கிச்சரிந்தன. உதடு ஒரு பக்கமாக கிழிந்திருந்தது. கன்னம் காதுகள் என்று எல்லா இடங்களிலும் காயங்கள். வேதனையில் முனகியவாறு தரையில் நெளிந்து கொண்டிருந்தவன், முழங்காலை ஊன்றியவாறு மண்டியிட்டு எழ முயன்றான். 

அதைக்கவனித்த நந்தினி ஆவேசத்துடன் “எங்கேடா ஓடப்பார்க்கிறே?” என்று அலறியவாறு ஹைஹீல்ஸைத்திருப்பிப்பிடித்து அதன் கூர்மையான பகுதியால் அவன் முழங்காலில் நச்சென்று போட்டாள். வலி தாளாமல் அலறினான் அவன்.

“ராஸ்கல்.. உன்னை மாதிரி ஆட்களாலதாண்டா எங்களால இன்னும் வீட்டுச்சிறையிலிருந்து வெளி வர முடியலை. படிக்கணும்ன்னு ஆசைப்பட்டு எவ்வளவோ கஷ்டப்பட்டு வெளியே வரோம்.. எங்களை மறுபடியும் அந்த இருட்டு மூலைக்கே துரத்துற உங்களையெல்லாம் என்ன செஞ்சாத்தகும்?”

“விடும்மா.. உசிரை விட்டுத் தொலைக்கப்போறான்., அப்புறம் விஷயம் வேற மாதிரி திசை திரும்பிரும். எம்பையன் கிட்ட கான்ஸ்டபிளைக் கையோட கூட்டியாரச் சொல்லியிருக்கேன்.போலீஸ் கிட்ட ஒப்படைப்போம். அவங்க பார்த்துப்பாங்க. சட்டம் தன் கடமையை நிச்சயமாச் செய்யும்” என்றாள் அந்தப்பெண்மணி.

“செய்யலைன்னா???..” கூட்டத்திலிருந்து ஒரு கேள்வி எழுந்தது.

“செய்ய வைப்போம்.. கடுமையான தண்டனை வாங்கித்தர்ற வரைக்கும் விட மாட்டோம். எந்தத்தண்டனையுமே இல்லாம ஈஸியா தப்பிச்சுப் போக விடறதுனாலதானே இன்னிக்கு நாலு வயசுப் பெண் குழந்தையைக் கூட சீரழிக்கிறாங்க. இவனுக்குக் கிடைக்கிறதைப்பார்த்தாவது ஈவ் டீஸிங் செய்யற மத்தவங்களுக்குப் பயம் வரணும்.” உறுதியாகச் சொன்னாள் நந்தினி. 

சிறிது நேரத்தில் கூட்டத்தினரை விலக்கிக்கொண்டு வந்து சேர்ந்தார் காவலர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டவர் "அது சரிம்மா!..புகார் கொடுக்கறதுன்னு வந்துட்டா அப்புறம் கோர்ட்டு, கேஸுன்னு அலையணும். விசாரணைங்கற பேர்ல அவங்க கேக்கற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லணும். பொம்பளைப்பிள்ளை எதுக்கு அங்கெல்லாம் அலையறே. வீணா உன் பேர்தான் கெட்டுப்போகும். இப்ப என்ன நடக்கக்கூடாததா நடந்துருச்சு. துப்பட்டாவைப் பிடிச்சுத்தானே இழுத்தான். இதோட விட்ரு" என்றார்.

அதிர்ச்சியான ஒருவர் "உதவி செய்ய வேண்டிய நீங்களே இப்படிப் பேசலாமா?.. நீங்க புகாரை ஏற்க மறுத்தா அப்றம் நாங்க மேலதிகாரி கிட்ட உங்களைப்பத்தியும் புகார் செய்ய வேண்டியிருக்கும்" என்றார்.

"எனக்கென்ன.. எனக்கும் பொம்பளைப்பிள்ளை இருக்குது. ஒரு தகப்பனா சொல்ல வேண்டியது என் கடமை. அப்புறம் உங்க விருப்பம். நாளைக்கு சங்கடப்படக்கூடாது பார்த்துக்கோங்க." என்றார் காவலர்.

"இல்லைங்க.. எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது. தனக்கு நடந்ததைத் துணிச்சலா வெளியே சொல்லி நியாயம் கேக்குற பயணத்தை நான் ஆரம்பிச்சு வெச்சேன்ன்னு இருக்கட்டுமே." என்றாள் நந்தினி.

"ம்.. ஏறுடா வண்டியிலே" என்று உறுமியபடி அவனைக் கொத்தாக அள்ளி ஜீப்பில் போட்டார் காவலர். ஜீப் நகர ஆரம்பித்தது.

அவள் குரலிலிருந்த உறுதியும் மனதைரியமும் அந்தக் கூட்டத்திலிருந்தவர்களிடமும் பரவ ஆரம்பித்தது. காவல் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் அவர்கள். சாட்சி சொல்ல ஆட்கள் வேண்டியிருக்குமே.

ராஜபாட்டையை நோக்கிய அந்த ஒற்றையடிப்பாதைப் பயணம் அங்கே ஆரம்பித்தது.

டிஸ்கி: அதீதம் இதழில் வெளியானது..

17 comments:

ராமலக்ஷ்மி said...

/ எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது./

உண்மைதான் சாந்தி. யுத்தமொன்று வந்தால்தான் விடியல் பிறக்கும்.

அருமையான நடை. நல்ல கதை. வாழ்த்துகள்!

ஹுஸைனம்மா said...

இந்தக் கதைக்கு எனது நூறு லைக்குகள்!!

இராஜராஜேஸ்வரி said...

ராஜபாட்டையை நோக்கிய அந்த ஒற்றையடிப்பாதைப் பயணம் தைரியமானது ..

யுத்தமொன்று வருகுது
சத்தமின்றி வருகுது ...!!

வாழ்த்துகள்...

RAMA RAVI (RAMVI) said...

// எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது. தனக்கு நடந்ததைத் துணிச்சலா வெளியே சொல்லி நியாயம் கேக்குற பயணத்தை நான் ஆரம்பிச்சு வெச்சேன்ன்னு இருக்கட்டுமே." //

உண்மை. எல்லோருக்கும் நந்தினியின் தைரியம் வர வேண்டும்.

மிக சிறப்பான பகிர்வு.

வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

இந்த ‘நந்தி’யின் தைரியம்தான் இன்றையப் பெண்களுக்கு அவசியம் தேவையானது. காமத்தை தன் மனதில் வைத்துக் கொண்டு பெண்களை மட்டும் கூட்ட தைரியத்தில் குறை சொல்பவன் வெகு யதார்த்தம். நல்லாவே சாட்டை வீசியிருக்கீங்க. சூப்பர்!

கோமதி அரசு said...

"இல்லைங்க.. எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது. தனக்கு நடந்ததைத் துணிச்சலா வெளியே சொல்லி நியாயம் கேக்குற பயணத்தை நான் ஆரம்பிச்சு வெச்சேன்ன்னு இருக்கட்டுமே." என்றாள் நந்தினி.//
நந்தினியின் பயணம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.


ராஜபாட்டையை நோக்கிய அந்த ஒற்றையடிப்பாதைப் பயணம் அங்கே ஆரம்பித்தது.//
நல்ல ஆரம்பம் விடியலை நோக்கி.

கதை அருமை சாந்தி.


Muruganandan M.K. said...

"எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது."
முதல் அடி எடுத்து வைக்கும் தைரியம். அருமையாக இருந்தது கதையும் நடையும்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவள் குரலிலிருந்த உறுதியும் மனதைரியமும் அந்தக் கூட்டத்திலிருந்தவர்களிடமும் பரவ ஆரம்பித்தது. காவல் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர் அவர்கள். சாட்சி சொல்ல ஆட்கள் வேண்டியிருக்குமே.

ராஜபாட்டையை நோக்கிய அந்த ஒற்றையடிப்பாதைப் பயணம் அங்கே ஆரம்பித்தது.//

நல்லதொரு ஆரம்பம்.

வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

//டிஸ்கி: அதீதம் இதழில் வெளியானது..//

பாராட்டுக்கள்.

ADHI VENKAT said...

அருமையான கதை. இப்படித் தான் இருக்கணும்.

பூ விழி said...

//இல்லைங்க.. எந்த ஒரு பாதையுமே எடுத்து வைக்கிற முதல் அடியிலிருந்துதான் ஆரம்பிக்குது. தனக்கு நடந்ததைத் துணிச்சலா வெளியே சொல்லி நியாயம் கேக்குற பயணத்தை நான் ஆரம்பிச்சு வெச்சேன்ன்னு இருக்கட்டுமே//.


இப்படி பட்ட தைரியம் பிறக்கட்டும் நல்ல கரு

தி.தமிழ் இளங்கோ said...

சகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

அமைதியாகத் தொடங்கி ஆக்ரோஷ வேகம் பிடித்து தன்னம்பிக்கையை வளர்த்து நம்பிக்கைக் காட்டும் கதை. அருமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாந்தி, மெய் சிலிர்க்கிறது.இன்னோரு சோகமா என்று விக்கித்துப் போனேன். ஆனால் அமைதிச்ச்சாரல் புயலாகக் கதை எழுதிவிட்டதே.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. மனம் நிறைந்த வாழ்த்துகள். படித்த எனக்கே இந்த வேகம் வருதே, இந்தக் காற்று எல்லா இளம்பெண்களையும் சென்றடையட்டும்.

Asiya Omar said...

கதை நல்லாயிருக்கு சாரல்..நான் எவ்வளவு பயந்தாங்கொள்ளின்னு இந்த கதையை வாசித்த பொழுது தெரிந்தது...இப்ப தான் உங்க பக்கம் வருகிறேன்
அய்யோடா! மொத்தமாக பார்க்காத பகிர்வை எல்லாம் இன்று பார்த்து விடுகிறேன்..

Asiya Omar said...

சாந்தி உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
http://www.asiya-omar.blogspot.ae/2013/03/blog-post_11.html

'பரிவை' சே.குமார் said...

அருமையான கதை அக்கா....
வாழ்த்துக்கள் அதீதத்தில் வெளிவந்தமைக்கு...

இன்னும் நிறைய எழுதுங்க...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_18.html

LinkWithin

Related Posts with Thumbnails