Thursday, 14 March 2013

பத்திரம்.. பத்திரம்..


வெள்ளை யூனிஃபார்ம் போட்டுக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் பொடிசுகளும், ஓரத்திலிருக்கும் நானா-நானி பார்க்கில் குட்டீஸை விளையாட விட்டுவிட்டு கட்டைச்சுவரில் உட்கார்ந்திருக்கும் பெரிசுகளும், அதே கட்டைச்சுவரில் மொபைலில் தலையை விட்டுக்கொண்டு ‘யாருக்கோ காத்திருக்கும் இளசுகளுமாக அந்தக் காலை நேரத்திலேயே அமர்க்களமாக இருந்தது மும்பை-தாதரின் ‘மீனா தாயி கார்டன் என்றும் அழைக்கப்படும் சிவாஜி பார்க். மீனா தாயி யார் என்பவர்களுக்காக, இவர் காலஞ்சென்ற திரு.பால்தாக்கரேயின் காலஞ்சென்ற மனைவி என்ற சிறு குறிப்பு வழங்கப்படுகிறது. கார்டனின் வாசலியேயே கையில் ஆரத்தித் தட்டுடன் நம்மை வரவேற்பதற்காக மார்பளவுச்சிலை வடிவில் காத்திருக்கும் அவரைக் கண்டு கொண்டபடியே டாக்சியில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தோம். நேர்ப்பாதையில் பயணப்பட்ட டாக்சி தாதரிலிருக்கும் ஷிவ்சேனாவின் தலைமையகத்துக்கு அருகே வந்ததும் சட்டென ப்ரேக் போட்டு நின்றது. பயமெல்லாம் காரணமில்லை,.. அங்கே இருந்த சிக்னலில் சிகப்பு விழுந்து விட்டது அதனால்தான் :-)))))))))

தலைமையகத்தின் முகப்பில் கண்ணாடிச்சுவர்களுக்கப்பால் சாலையைப் பார்த்தாற்போல் அமைந்திருக்கும் சேனையின் சேனாதிபதி படத்துக்கு மாலையணிவிக்கும் புதுப்பழக்கம் வந்திருக்கிறது. ஆள்காட்டி விரலை நீட்டி எதிரில் நின்று கொண்டிருக்கும் வாகனங்களை சேனாதிபதி பால்தாக்கரே அவர்கள் எச்சரிக்கை செய்த வண்ணம் இருப்பதால் அங்கே ட்ராபிக் ஜாம் ஏற்படுவதேயில்லை. அவரையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். திடீரென்று சூழல் குளுகுளுவென்று மாறியது. ரோட்டின் இரு பக்கங்களும் மரங்கள் அடர்ந்த சூழல். ஜிலுஜிலுவென்று வந்த காற்றை அனுபவித்தபடியே “இந்த இடம் ரொம்பவே அழகாருக்கு என்றார் பையர். ஆமாம்,.. ஒரு கார்டன் இருந்தாலே அந்த இடம் ஜில்லுன்னு இருக்கும். இங்கே அஞ்சு கார்டன்கள் இருக்கே. கேக்கணுமா என்ன?. அதனால்தான் இந்த இடத்துக்கே ஃபைவ் கார்டன்ஸ் என்று பெயர். இது ‘வடாலா ஸ்டேஷனுக்கு ரொம்ப அருகில் இருப்பது இன்னொரு சிறப்பு. ஆனாலும் இது கிழக்கு மட்டுங்கா பகுதியில்தான் அடங்கும் என்று பையனுக்கு ஸ்தலபுராணத்தை விவரித்தேன்.

அங்கிருந்து இடப்புறம் திரும்பி வடாலா சர்ச்சையும், கெமிக்கல் இன்ஸ்டிட்யூட்டையும், டான்பாஸ்கோ ஸ்கூலையும் கடந்து போய்க்கொண்டிருந்தோம். அடுத்து வரப்போகும் நாற்சந்திப்பில் வலப்பக்கம் திரும்ப வேண்டும் நமக்கு. நாற்சந்தியில் ஒரு காவலர் நின்று போக்கு வரத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். நமக்கு வலப்பக்க ரோட்டில் மிஞ்சிப்போனால் பத்து வயதிருக்கும் சிறுமி புத்தக மூட்டையோடு ரோட்டைக்கடப்பதற்காக வலது பக்கமும் இடதுபக்கமும் பார்த்துக்கொண்டே நின்றுகொண்டிருந்தாள். காவலர் நிறுத்துவதற்குள் கடந்து விட வேண்டுமென்று வெண்ணெய்யில் இறங்கிய சூடான கத்தியாய் டாக்ஸி சல்லென்று போய்க்கொண்டிருந்தது. நமது வண்டி வலப்பக்கம் திரும்பவும் அந்தச்சிறுமி சட்டென்று சாலையைக் கடப்பதற்காக ஒரு எட்டு முன்வைத்தாள். அவ்வளவுதான்.. சர்ர்ர்ர்ரென்று அவளது புத்தகப்பையை உரசிக்கொண்டு டாக்ஸி பறந்தது. நாங்களெல்லாம் அப்படியே ஆடிப்போய் விட்டோம். அந்தக்களேபரத்திலும் அந்தக்குழந்தை தப்பித்துக்கொண்டாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். நின்றோ அல்லது வந்த வழியே திரும்பிப்போயோ என்னவாயிற்று என்று பார்க்க இயலாத சூழல். வந்த ஆவேசத்தில் ட்ரைவரை ஒரு பிடி பிடித்தோம். “வண்டி வர்றதைப்பார்க்காம அவ ரோட்டைக் க்ராஸ் செஞ்சா. ஆகவே இது என் தப்பில்லை என்று கூசாமல் சொல்கிறார்.

சரி,.. அந்தப்பொண்ணுதான் ரோட்டைக் க்ராஸ் செய்யறதுக்காக அங்கே நிற்குதுன்னு தெரியுதில்லே. அட்லீஸ்ட் ஹார்ன் அடிச்சு எச்சரிக்கையாவது செய்திருக்க வேணாமா?” என்று கேட்டால் பதிலே இல்லை. “நீங்க சிரமப்பட வேணாம். நாங்க வேற வண்டியில் போய்க்கறோம் என்று ரங்க்ஸ் சொன்னதும்கூட காதிலேயே விழாத மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். ‘சீ..’ என்றாகி விட்டது. மன்னிப்புக்கேட்கும் தொனியோ அல்லது தவறு செய்த உணர்வோ கூட அவரிடம் இல்லை. உடனேயே அருகில் தென்பட்ட டாக்சி ஸ்டாண்ட் அருகில் இறங்கிக்கொண்டு கணக்குத்தீர்த்து அனுப்பி விட்டோம். இவரை நம்பி வண்டியில் பயணம் செய்ய முடியுமா?.. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சேர்ப்பாரோ... இல்லை, போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பாரோ?.. யாருக்குத்தெரியும். உடல் நிலை சரியில்லாத பையரை ஆஸ்பத்திரியில் காண்பித்து விட்டு திரும்பிக்கொண்டிருக்கிறோம். இந்தச்சூழலில் பார்ட்டியிடம் சண்டை போட யாரால் முடியும்?. பையரின் முன்னால் டென்ஷனைக் காண்பித்துக்கொள்ளவில்லையே தவிர இரண்டு மூன்று நாட்களாகவே "பாவம்,.. அந்தப்பெண்ணுக்கு ஒன்றும் ஆகாதிருக்க வேண்டும்" என்றுதான் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒரு கெட்டது நடக்கும்போது ஒரு நல்லதும் நினைவுக்கு வருமாம். இப்படித்தான் ஒரு சாயந்திரம் மும்பையிலிருந்து பையரும் நானும் டாக்சியில் வந்து கொண்டிருந்தோம். டாக்ஸியில் காஸ் தீரப்போகிறது. நிரப்புவதற்கு வேறொரு திசையில்தான் போக வேண்டுமென்று சொன்னார் ஓட்டுனர். “பையா,.. மொதல்லயே சொல்லியிருந்தா வேற டாக்சியில் ஏறியிருப்பேனே. இப்படி பாதி வழியில் சொன்னால் என்ன அர்த்தம்?” என்றேன். “பாபி,.. நானும் கவனிக்கலை என்கிறார். கடைசியில் எங்களை வண்டியில் உட்கார வைத்து விட்டு, அவரே ரோட்டில் நின்று ஒவ்வொரு டாக்சியாக வழிமறித்து கடைசியில் அவரது நண்பர் ஒருவரின் வண்டியை ஏற்பாடு செய்து பத்திரமாக ஏற்றி அனுப்பினார். அவர் நினைத்திருந்தால் நடு வழியிலேயே இறக்கி விட்டுவிட்டு தனக்குச் சேர வேண்டிய காசை வாங்கிக்கொண்டு போயிருக்கலாம். ஆனால், மனிதாபிமானம் மும்பையில் இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டுச் சென்றார். இப்படிப்பட்ட வைரங்கள் இருக்குமிடத்தில்தான் சில கூழாங்கற்களும் கிடக்கின்றன. இந்த மாதிரி சாலையில் கவனமில்லாமல் வண்டியோட்டும் ஆட்களால்தான் விபத்துகளும் அதிகம் ஏற்படுகின்றன.

மும்பையில் 2011-ல் மட்டும் 4.4 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றனவாம். அதிலும் எங்கள் நவிமும்பையின் பாம்பீச் ரோடு விபத்துகளுக்கு மிகவும் பெயர் பெற்றது. சமீபத்தில் கூட இரண்டு மராட்டி நடிகர்களைக் காவு வாங்கியது. ஆகவே அனைவரையும் எச்சரிக்கும்பொருட்டு ஹிந்துஸ்தான் டைம்ஸார் பேலாப்பூரிலிருந்து ஆரம்பித்து வாஷி வரைக்கும் போகும் இந்த ரோட்டில் பத்தடிக்கொரு எச்சரிக்கை பேனர்கள் வைத்திருக்கிறார்கள். இந்த பேனர்களைப் பார்த்துக்கொண்டே வண்டியோட்டி யாரும் விபத்து ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.


சாலைப் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிப்பதிலும், பாதுகாப்பான சாலைப்போக்குவரத்திலும் இந்தியாவிலேயே மும்பைதான் முதலிடத்தைக் கடைப்பிடிக்கிறது என்று முன்பு எங்கோ வாசித்த ஞாபகம். அதெல்லாம் இப்போது பழங்கதையாய்ப்போய் விடும் போலிருக்கிறது. சடாரென்று கட் அடித்து குறுக்கே புகும் ஆட்டோக்கள் பெருகி விட்டன. ட்ரக் ஆட்களும் அப்படித்தான் நெருக்கி வருகிறார்கள், வண்டி போவதற்கு சில சமயம் இடமே கொடுப்பதில்லை என்று பசங்கள் சொல்லுவதுண்டு. எப்பொழுதுமே சின்ன வண்டியைக் கண்டால் பெரிய வண்டிக்காரர்களுக்கு இளக்காரம் என்று சொல்லுவார்கள். தப்பு ஸ்கூட்டர் மேலோ கார் மேலோ இருந்தாலும் பாவப்பட்ட சைக்கிள்தான் பழி சுமக்க வேண்டும். இதன் காரணமாகவே சுற்றுச்சூழல், உடற்பயிற்சி என்று பல்வேறு காரணங்களுக்காக சைக்கிளைப் பிடித்துக்கொண்டிருந்த என் பையர் அதைக் கைவிட்டு விட்டு பைக்குக்கு மாறி விட்டார்.

சாலைப்பாதுகாப்பு வாரம் என்று வருடத்தில் ஒரு நாள் கொண்டாடி, அந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹெல்மெட், சீட் பெல்ட் எல்லாம் சரியாகப் போட்டுக்கொண்டிருக்கிறார்களா என்று செக் செய்தால் ஆயிற்றா?.. மற்ற நாட்களிலும் சர்ப்ரைஸ் சோதனைகள் நடத்த வேண்டும். அதே போல் மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்து செல்வார்கள். போலீசார் சோதனையிடுவதைக்கண்டதும் 'டக்'கென்று தலையில் கவிழ்த்துக்கொள்வார்கள். என்னதான் அபராதம் விதித்து, விதிமுறைகளைக் கடுமையாக்கி என்று மக்களை வழிக்குக்கொண்டு வர முயன்றாலும் 'நான் செய்வதைத்தான் செய்வேன்' என்றிருப்பவர்களை என்ன சொல்ல!! இப்படிப்பட்டவர்கள் வீட்டிலிருப்பவர்களின் அறிவுரையையும் காதில் போட்டுக்கொள்வதில்லை. நம்முடைய நன்மைக்குத்தான் சொல்கிறார்கள் என்பதை இவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் தங்களை எதிர்பார்த்து ஒரு அன்புக்கூட்டமே காத்திருக்கிறது என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். கிடைத்திருப்பது ஒரு ஆயுள்.. அதை நம் கவனக்குறைவால் தொலைத்து விடாதிருப்போமே.

டிஸ்கி: படங்கள் ரன்னிங்கில் எடுக்கப்பட்டவை. கொஞ்சம் அப்படியிப்படி ,.. ஃபோகஸ் இல்லாமல் இருந்தால் மன்னிச்சூ :-)))

25 comments:

Asiya Omar said...


//சிலர் ஹெல்மெட்டை அணிந்து கொள்ளாமல் கையில் சுமந்து செல்வார்கள். போலீசார் சோதனையிடுவதைக்கண்டதும் 'டக்'கென்று தலையில் கவிழ்த்துக்கொள்வார்கள். //
நல்லாச் சொன்னீங்க சாந்தி.

வல்லிசிம்ஹன் said...

நான்கு நாட்கள் முன்னல் தான் என் தோழியின் வீட்டு ஓட்டுனர், சாலையைக் கடக்க கால் வைக்கும்போது வேகமாய்வந்த மோட்டர் பைக்கினால் தூக்கி எறியப் பட்டு ,இறந்தும் போனார். வயது 33.

15 வயதிலிருந்து அவர்கள் வீட்டிலிருக்கும் அந்தப் பிள்ளைக்குத் திருமணம் செய்துவைத்துக் குழந்தையும் இருக்கிறது.
தோழியைச் சமாதானப் படுத்தவே முடியவில்லை.
பைக்கை ஓட்டியவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அவர் மனைவியயும் குழந்தையையும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கவனித்துக் கொள்வாள் தோழி,. ஆனால் இந்தக் கொலைவெறி வேகத்துக்கு யார் தண்டனை கொடுப்பது.

sury Siva said...

//. ஆனால் இந்தக் கொலைவெறி வேகத்துக்கு யார் தண்டனை கொடுப்பது./

அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.
இப்பொழுதெல்லாம் தெய்வம் அடுத்த ஜன்மம் வரை அவனவன் செய்த பாவத்துக்கு தண்டனை கொடுக்க காலம் தாழ்த்துவதில்லை.
குற்றம் செய்தவனுக்கே ஒரு
குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி
இன்னொரு கொலையையும் செய்யத்தூண்டுகிறான்.
ஆம். ஆனால் இந்த தடவை அது தற்கொலை என்னும் பெயர் பெறுகிறது.

சுப்பு ரத்தினம்.
www.subbuthatha.blogspot.in

திண்டுக்கல் தனபாலன் said...

சில பெற்றோர்களே சாகசங்களை விரும்புவது கொடுமை....

படங்கள் ரன்னிங்கில் எடுக்கப்பட்டவை...!!! நல்ல கேமரா... வாழ்த்துக்கள்...

RAMVI said...

மிகவும் அருமையான பதிவு. சாலை விதிகளைப்பற்றி இன்னும் விழிப்புணர்வு தேவை.
படங்கள் நன்றாக இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

ஒவ்வொரு நாளும் வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று வரும்வரை டென்ஷனாத்தான் இருக்கு. இங்கே சாலைவிதிகள் பின்பற்றபடவேண்டி கடுமையான விதிகள், அபராதங்கள் இருந்துமே எத்தனையெத்தனை விதமான விபத்துகள்! நெஞ்ச்ம நடுங்கத்தான் செய்யுது. சரியானபடி ஓட்டும் பெரும்பான்மையினரும், இந்த டாக்ஸி டிரைவர் போன்ற ஒரு சில அஜாக்கிரதைக்காரர்களால் பாதிக்கப்படுகின்றனர். எல்லாரையும் இறைவன் காக்கவேண்டும்.

கோமதி அரசு said...

மக்களும் தங்களுக்குரிய பொறுப்பையுணர்ந்து பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். //
ஆம், உண்மை.
மக்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொண்டால் விபத்துக்களை தடுக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

ட்ராபிக், கன்னாபின்னா வண்டி ஓட்டுதல் எல்லா ஊர்லயும் இருக்கு. நீங்க விளம்பர ஹோல்டிங்க்ஸ் படம் போட்டிருந்தீங்க. 5 மாசத்துக்கு முன்னால ஹைதையில் ஒரு ஹோர்டிங் பாத்தேன். டிஃபரண்டா திங்க் பண்ணியிருந்தாங்க. (போட்டோ எடுக்கலை)

மேட்டர் இதுதான்:

பிள்ளையார் படம் போட்டு, கீழே மெசெஜ். “எல்லோருக்கும் தலைக்கு ரீப்ளேஷ்மெண்ட் கிடைப்பதில்லை!!! அதனால தலைக்கவசம் அணிந்து வண்டி ஓட்டுங்கள்னு””

ராமலக்ஷ்மி said...

உண்மைதான். எல்லாத் தொழிலிலுமே நல்லவர்களும் உள்ளனர். அலட்சியமாய் நடப்பவரும் உள்ளனர்.

படங்களும் பகிர்வும் அவசியமான ஒன்று.

மகன் உடல்நலம் தேறியிருக்குமென நம்புகிறேன்.

-----

@ வல்லிம்மா,

வருத்தமான நிகழ்வு:(!

கோவை2தில்லி said...

விழிப்புணர்வு பகிர்வு.

எவ்வளவோ விதிமுறைகள் இருந்தாலும் மக்கள் அதை கண்டுக்கறதேயில்லை...:((

புதுகைத்தென்றல் சொல்லியிருக்கும் பிள்ளையார் மேட்டர் நல்லா இருக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புடையீர்,

வணக்கம்.

நேற்று 17.03.2013 ஞாயிறு 'தினகரன்' செய்தித்தாளின் இணைப்பான 'வசந்தம்' இதழின் ஆறாம் பக்கத்தை பார்க்க நேர்ந்தது.

அதில் “இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள்” என்ற தலைப்பில் தங்களின் வலைத்தளம் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

படித்ததும் பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் அன்பான இனிய நல்வாழ்த்துகளும்.

அன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.in

இராஜராஜேஸ்வரி said...

சிந்திக்கவைக்கும் விழிப்புணர்வுப் பகிர்வுகள்...

சே. குமார் said...

விழிப்புணர்வு பகிர்வு அக்கா...
படங்கள் அருமை.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

கெடுபிடி நடக்குதுன்னாதான் ஒழுங்கா இருப்போம்ங்கற நடைமுறை எப்பத்தான் மாறுமோ..

வாசித்தமைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

ரொம்பக்கொடுமையான சம்பவம்.. நீங்க சொல்லியிருப்பது. சுப்பு ஐயா சொன்னதும் யோசிக்க வைக்குது.

எங்க குடியிருப்பிலும் ரெண்டு மூணு மாசத்துக்கு முன் ஒரு பெண் விபத்தில் அதுவும் வீட்டருகே நடந்ததில் இறந்துட்டாங்க. வீட்லேருந்து புறப்பட்டு ஐந்து நிமிஷத்திற்குள் விபத்தில் போயிட்டாங்கன்னு தகவல் வந்தா வீட்ல இருக்கறவங்களுக்கு எப்படியிருந்திருக்கும்.

ஆணும் பெண்ணுமா நாலு வயசில் ரெட்டைக்குழந்தைங்க. அம்மாவுக்கு என்னாச்சுன்னு கூடப்புரியாத வயசு. பாவம்..

வரவுக்கு நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க சுப்பு ஐயா,

நீங்க சொன்னது நிறைய யோசிக்க வைக்குது.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

பயமில்லாமல் வாகனங்களைக் கையாளணுமேன்னு நினைப்பாங்களே தவிர பெற்றோர்களும் சாகசங்களை விரும்புவாங்க என்பது புதுத்தகவல். சாலைச்சாகசங்களின் பின் விளைவு ஆ(வி)பத்துங்கறதை அவங்க உணராமலா இருப்பாங்க!!

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

தடுக்க முடியாமலோ அல்லது தன்னையறியமலோ தவறிழைச்சா அதை விபத்துன்னு சொல்லலாம். தெரிஞ்சும் வேணும்ன்னே அலட்சியமா இருக்கறதை என்னன்னு சொல்ல?..

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

விதிகள்ங்கறதே மீறுவதற்காகத்தான்னு புரிஞ்சு வெச்சுருக்காங்களோ என்னவோ..

வரவுக்கு நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ஜூப்பர் ஐடியாதான் :-)

அப்படி ரீப்ளேஸ்மெண்ட் மட்டும் கிடைக்க ஆரம்பிச்சுட்டா இன்னும் அதிக அலட்சியம்தான் வரும் :-)

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

பையர் உடல் நிலை தேவலாங்க.. நன்றி.

வரவுக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

தகவலுக்கும் வாழ்த்தியமைக்கும் பக்கத்தை ஸ்கேன் எடுத்து அனுப்பியமைக்கும் மிக்க நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

மிக்க நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

மிக்க நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails