Wednesday, 17 November 2010

விழாக்காலம்..

எங்கும் ஒளிவெள்ளம்.. தீபாவளியிலிருந்து திருக்கார்த்திகை வரையிலுமான காலகட்டத்தில். வீடுகளும் கோவில்களும் ஒளிக்கோலம் பூண்டு நிற்கின்றன. சபரிமலை ஐயப்பனும் சோதிதரிசனம் கொடுக்க தயாராகிவிட்டான். நம்ம வலைத்தளம் மட்டும் இருளடைந்து கிடப்பதா?? இதோ!! இந்த மாத பிட் போட்டிக்கான தலைப்பு "ஒளி". படங்கள் இங்கே காணக்கிடைக்கின்றன.

ஒளியென்று ஒன்று இல்லாவிட்டால், உலகத்தில் ஏதுமில்லை. பகலை சூரியன் ஒளியுறச்செய்தால், இரவில் நிலவும், நட்சத்திரங்களும் அழகு செய்கின்றன. நட்சத்திர ஆற்றில், வெள்ளி நிலா ஓடமென பவனிவரும் அழகை யார்தான் ரசிக்க மாட்டார்கள்!!!

திருக்கார்த்திகை மாதத்தில் முதல் தேதி தொடங்கி மாதம் முழுவதும், வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் விளக்குகளும், தெருவெங்கும் ஒளி நிறைந்திருக்கும் கார்த்திகை தீபங்களும் , அன்றைக்கென்று நைவேத்தியமாக படைக்கப்படும் கொழுக்கட்டை, அப்பம், பொரி இவைகளின் ஞாபகத்தைத்தான் கொண்டு வருகிறது :-)))))

மேலிருக்கும் படம் பிட்டுக்கான, என்னுடைய இம்மாத பங்களிப்பாக அனுப்பப்பட்டு விட்டது . இந்த விளக்குகளை சுதியே ஸ்பெஷலா வீட்டில் செய்தாங்க.. இதுக்கான பொருட்களும் கடைகளிலேயே கிடைக்கிறது... என்ன ஸ்பெஷல்ன்னு சொல்லலை இல்லியா!!.. நேத்து லயத்தோட பிறந்தநாள் :-)))))
Monday, 15 November 2010

பவர்பாயிண்டில் ஃபிலிம் காட்டுவது எப்படி??

இன்றைய யுகத்தில் 'யூ ட்யூப்' ஒரு தகவல் சுரங்கமாக விளங்குது.. பிடித்தமான பாடல்கள், திரைப்படங்கள், அறிவியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகள்ன்னு எதையும் அதில் அப்லோட் செஞ்சு எல்லோரோடவும் பகிர்ந்துக்கமுடியுது. சமையல் கத்துக்கவும், இசைக்கருவிகளை இயக்க கத்துக்கவும்கூட இங்கே முடியும்.

யூ ட்யூபில் உள்ள வீடியோ க்ளிப்பிங்க்ஸை இனிமே இணையத்தில்தான் பார்க்கமுடியும்ன்னு இல்லை. நம்மிடமிருக்கும் Ms Office- Powerpoint-லும் இணைத்துக்கொள்ளலாம். வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், இதை பயனுள்ளதாக உபயோகப்படுத்திக்கொள்பவரும் உண்டு. இடுகைகளில் எப்படி தேவைப்படும் இடங்களில் யூ- ட்யூபை இணைக்கிறோமோ.. அதே மாதிரி பவர்பாயிண்டிலும் இணைக்கலாம். இனிமே, படங்களை மட்டும் வெச்சுதான் ஸ்லைட் ஷோ பண்ணனும்ன்னு இல்லை. வீடியோ க்ளிப்பிங்க்ஸையும் உபயோகப்படுத்தி ஸ்லைட் ஷோ செய்யலாம். அப்லோட் செய்யப்பட்ட க்ளிப்பிங்க்ஸை, பவர் பாயிண்டில் எப்படி இணைப்பது??!!!!

1. முதலில் விரும்பிய வீடியோ க்ளிப்பிங்கை யூடியூபில் திறந்துகொள்ளுங்கள்.

2. இப்போ, பவர்பாயிண்டை திறந்து, Layout-ல் புதிய ஸ்லைடை திறந்துகொள்ளுங்கள். அது blank slide ஆக இருப்பது முக்கியம்.

3. Menu bar-ல் டெவலப்பர் செக்ஷன் இருக்குதான்னு பாருங்க.. அது இல்லைன்னா, office butten-ஐ க்ளிக் செஞ்சு,.. Powerpoint Options-ஐ க்ளிக் செய்யுங்க.

4. இப்போ, ஒரு ஜன்னல் திறக்கும். அதுல.. show Developer tab in the ribbon அப்டீன்னு ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செஞ்சு ஓ.கே சொல்லுங்க.

5.இப்போ மெனுபாரில் Developer button  வந்துருக்கும். அதை க்ளிக் செஞ்சு, controls button-ஐ க்ளிக்குங்க, ஆணியும் சுத்தியலுமா ஒரு பட்டன் இருக்கே.. அதேதான்.

6. இதுல எக்கச்சக்க controls இருக்கும். நமக்கு வேண்டியது Shockwave Flash Object தான். அதனால அதை செலக்ட் செஞ்சு ஓ.கே சொல்லுங்க.. மறுபடியும் blank slide பக்கத்துக்கு தானாகவே வந்துடுவோம்.

7. கர்சர் இப்போ, ஒரு கூட்டல்குறி மாதிரி இருக்கும். அதை வெற்றிடத்தில் வைத்து,  நமக்கு வீடியோ எந்த அளவில் வேண்டுமோ.. அந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளவும்.

8. இப்போ, நாலு சமோசாவை ஒண்ணா சேர்த்து வெச்சமாதிரி துண்டாடப்பட்ட ஒரு வடிவம் கிடைக்கும். அதில் அம்புக்குறியை வைத்து, மவுசின் வலது பொத்தானை அழுத்தி, Properties ஜன்னலை திறக்கவும்.

9. இப்போ, வீடியோ க்ளிப்பிங்க்சின் உரலை காப்பியடிச்சுக்கிட்டு, மறுபடியும் பவர்பாயிண்டுக்கு வாங்க. அந்த உரலை Movies என்று கேட்கப்பட்டிருக்கும் இடத்துக்கு நேரா ஒட்டுங்க.

10. உரலியில் v-க்கு முன்னாடியும், பின்னாடியும் 'watch?' மற்றும் ' = ' இவற்றை அழித்துவிடவும். அழிப்பதற்கு முன் = இந்த அடையாளத்துக்கு முன்னாடி back slash அடையாளத்தை டைப்பவும். அதாவது,..

இப்படி இருக்கவேண்டிய உரலி......http://www.youtube.com/watch?v=HnbMYzdjuBs

இப்படியாயிடுச்சு.. http://www.youtube.com/v/HnbMYzdjuBs

அவ்வளவேதான்.. இப்போ 'Slide show ' என்ற பட்டனை அழுத்தி, நீங்க உருவாக்கின ஸ்லைடில்,.. நீங்க இணைச்ச வீடியோவை கண்டுகளியுங்கள்.

டிஸ்கி: ரொம்ப வேகமா தரவிறக்கம் ஆகுது. ஆனா, இணையத்தொடர்பு இல்லைன்னா இது வேலை செய்யாது.. பொட்டிதட்டுற ஆட்களுக்கெல்லாம் இது அனேகமா,.. தெரிஞ்ச ஜூஜூபி சமாச்சாரமா இருக்கலாம். பட்.. ஆனா,, ஆர்வக்கோளாறு ஒரு காட்டாறாச்சே :-)))). அதான் பகிர்ந்துட்டேன். ஒவ்வொரு Presentation-லும் நிறைய ஸ்லைடுகள் இணைக்கமுடியும், வீடியோவும், படங்களுமா.. கலந்துகட்டலாம். இனிமே, வீடியோவுடன் பவர்பாயிண்ட் Presentation தயார் செஞ்சு தூள் கிளப்புங்க.....


Friday, 12 November 2010

சுதியும் லயமும்..

ரெண்டும் ஒருமிச்சு இருந்தா, அந்த சங்கீதம் இனிக்கும்... ஒண்ணுக்கொண்ணு தெற்கும் வடக்குமா முறைச்சுக்கிட்டு நிக்குதா.. நம்ம காதுக்கு இனிஷியல் போட்டுக்க வேண்டியதுதான். அதுவும் அரசாங்க கெஜட்ல போயி K.காது அப்படீன்னு பேரை மாத்திட்டு வந்துடும் :-))). ஆனா, எங்க வீட்டைப்பொறுத்தவரை ரெண்டும் முட்டிக்கிட்டாலும் சரி,.. ஒத்துமையா இருந்தாலும் சரி.. பல்புகள் வாங்குறதென்னவோ நாங்கதான்.

ஒத்துமையா இருந்தா, ரெண்டும் சேர்ந்துக்கிட்டு எங்களை சுத்தல்ல விட்டுடும். முட்டிக்கிட்டு இருந்தா,.. இவங்களுக்கிடையே பஞ்சாயத்து பண்ணியே நெளிஞ்சுபோன சொம்புகள் ஏராளம்.. ஏராளம். ஆமா,, ஆமா,..ன்னு தலையை பலமா ஆட்டி ஆமோதிக்கும் பெற்றோரா நீங்கள்.. அப்படீனா இடுகை எதைப்பத்தின்னு கரெக்டா யூகிச்சிருப்பீங்க. நான் பெற்ற செல்வங்களின் திருவிளையாடல்களை பதிவு செஞ்சு வெச்சு, என்னோட அடுத்த தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச்சொல்லும் தலையாய கடமை என்னை அழைக்கிறது..

சுதி: "டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"

லயம்: "அம்மா.. இவ என்னை டேய் போட்டு கூப்பிடறா"

சுதி:"டேய்.. டிவியை ஆஃப் பண்ணு"அப்படீன்னு.. அம்மா சொல்லுவாங்கன்னு சொல்லவந்தேன்.. அதுக்குள்ள கம்ப்ளைண்ட் பண்ணக்கூடாதுப்பா.."

**********************
லயம்: எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது!!அவ்வ்வ்வ்வ்.... என் பேரை மொதல்ல மாத்துங்க...

நான்: ஏன்ப்பா... உன் பேரு நல்லாத்தானே இருக்குது. ஒரு பெரிய அறிவியல் அறிஞரோட பேரைத்தான் உனக்கு வெச்சிருக்கேன்.. தெரியுமா!!

லயம்: அது சரி.. ஆனா, சில சினிமாக்கள்ல என் பேரை கிச்சடி ஆக்குறாங்க தெரியுமா!!! என் பேரை வெச்ச ஹூரோக்களை உருப்படியாவே காமிக்க மாட்டேங்குறாங்க :-)))

"பாஸ்... என்ற பாஸ்கரன்" படத்தைப்பார்த்துட்டுதான் சார் இப்படி வெக்ஸ் ஆகிட்டார். ஏன்னா, லயத்தோட பேரு... "பாஸ்கர்" :-))))))))

சுதி தூவிய மொளகாப்பொடி: அட்லீஸ்ட் ஹீரோவுக்காவது உன் பெயரை வெச்சாங்களே.. அதை நினைச்சு சந்தோஷப்படு. ஹா..ஹா..ஹா...

**************************


பண்டிகைகள் வந்தா கலாய்த்தலும் ஆரம்பிச்சுடும். ரக்ஷாபந்தன் சமயம் ஆரத்தி எடுத்த தங்கைக்கு பணம் கொடுக்கணும்ன்னு சொன்னதும், எவ்வளவு கொடுக்கட்டும்ன்னு கேட்டார். 'பதினொரு ரூபாய் கொடு போதும்'ன்னு தங்கை பெரிய மனசு செஞ்சு சொல்லிட்டாங்க.. அடுத்தது அண்ணன் செஞ்சதுதான் ஹைலைட். '1&1=11..இந்தா என்னோட அன்பளிப்பு' ன்னு சொல்லி நீட்டுனது ரெண்டு ஒரு ரூபாய் நாணயங்களை...

************************** 


'சின்னவயசுல எவ்ளோ ஒத்துமையா இருந்தீங்க.. இப்போ ஏன் இப்படி எலியும் பூனையுமா இருக்கீங்க??'ன்னு ஒரு நாள் கேட்டேன்..  மேடம் அப்டியே சீலிங்ஃபேனை பார்த்தாங்க.. கொசுவத்தி சுத்தறாங்களாமாம்..

"ஒரு நாள், என்னாச்சு தெரியுமா?.. வாஷிங்மெஷினோட ட்ரெயினேஜ் பைப் இருக்குதில்லியா!!! அதுல ஒத்தைக்கண்ணை வெச்சு அண்ணா ரொம்ப நேரமா உள்ளே பாத்துக்கிட்டிருந்தார். என்ன பார்க்குறேன்னு கேட்டப்ப,.. இதுல இருந்து 'சூப்பர் ஹ்யூமன் சாமுராய்' வரப்போறார்.. அதான் காத்துக்கிட்டிருக்கேன்னு சொன்னார். அதை உண்மைன்னு நம்பி, நானும் பார்க்கணும்ன்னு சண்டை போட்டு..   ரெண்டு மணி நேரமா, ஒக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன். தெரியுமா??...  அதான், இப்பல்லாம் அவரு என்ன சொன்னாலும் நான் நம்புறதில்லை "

"ஆமா.. இது எப்போ நடந்தது?"

"நா அப்போ யூ.கேஜில இருந்தேன்னு நினைக்கேன்"

சிரிப்பை அடக்கிக்கொண்டே கேட்டேன், "சரி!! சாமுராய் வந்தாரா இல்லியா"

"ம்ம்... வந்தாரு. அந்தச்சமயம் அண்ணா பார்த்துக்கிட்டிருந்த கார்ட்டூன்ல...."

டிவியை கைப்பற்ற இப்படியும் வித்தியாசமா யோசிக்கலாமோ :-))))))))))

*************************

இந்தியில் சகோதரனை,"பையா"(Baiya)ன்னு கூப்பிடுவாங்க.. [யாருக்காவது தமன்னா ஞாபகத்துக்கு வந்தா நான் பொறுப்ஸ் இல்லை :-))]. தமிழில் சின்னப்பையன்களை 'பையா'ன்னு கூப்பிடுவாங்க(paiya). லயம் கவனிக்காதபோது, paiya ன்னு கூப்பிடறதும், அவரோ இல்லை நானோ கவனிச்சு 'எப்படி கூப்பிட்டே'ன்னு கையும் களவுமா பிடிச்சா 'baiya'-ன்னு சொன்னேன்'ன்னு சமாளிச்சு கலாய்ப்பதும் சுதியின் பொழுதுபோக்கு.

சின்ன வயசில் அண்ணனை, 'நீங்க.. வாங்க.. போங்க'ன்னு ரொம்ப மரியாதையாத்தான் கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. கொஞ்சம் வளந்தப்புறம் அப்படி கூப்பிட்டா வேத்தாள் மாதிரி தோணுது, இனிமே ஒருமையிலேயே கூப்பிட்டுக்கிறேனேன்னு அண்ணாகிட்ட அனுமதி வாங்கினப்புறம்தான் அட்டகாசம்.

*************************
'நாஸ்ட்ரடாமஸ்'.. இவரைப்பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா??. இரட்டைக்கோபுரங்களை விமானம் வைத்து தகர்த்தது , மற்றும் இவர் முன் கூட்டியே கணிச்சு சொல்லிவெச்ச நிறைய விஷயங்கள் பலிச்சிருக்காம்,... அவரோட மரணம் உட்பட. இதைப்பத்தி ஒரு நாள் நானும் சுதியும் பேசிக்கிட்டிருந்தப்ப, லயம் அங்கே வந்தார்.

லயம்:  நிஜமாவே,.. அவர் கணிச்ச எல்லாமே பலிச்சிருக்கா??

சுதி: ஆமாம்.

லயம்: வருங்காலத்தில் நடக்கப்போவது எல்ல்ல்லாத்தையுமே அவர் கணிச்சிருக்காரா??

சுதி: நிறைய விஷயங்களை கணிச்சிருக்காரு.. கொஞ்சம் இப்போதான் தெரியவந்திருக்கு. மத்தபடி போகப்போகத்தான் தெரியும்.

லயம்: எனக்கும் ஒரு விபரம் வேணுமே..

சுதி:சொல்லு.

லயம்: 'Dhoom-3' எப்போ ரிலீஸ் ஆவும்ன்னு கணிச்சிருக்காரான்னு, கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்..

அதுக்கப்புறம் சுதி நடத்திய ஒரு இனிமையான தாளக்கச்சேரி நடந்ததுன்னு சொல்லணுமா என்ன :-))). கச்சேரி நடந்த இடம் லயத்தின் முதுகு.....

*************************
Tuesday, 9 November 2010

படங்களுடன் பின்னூட்டலாம்...

இடுகைகளில் படங்களை இணைப்பதுபோல் கமெண்டுகளிலும் இணைக்கமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்ன்னு நினைச்சதுண்டு. அதுக்கு என்னவழின்னு வலைமேஞ்சுக்கிட்டிருந்தப்பதான்,.. அனிமேஷன் படங்களையும் கண்டுகொண்டேன். ஜாக்பாட் அடிச்ச மகிழ்ச்சியில்,.. அதை இடுகைகளில் எப்படி இணைப்பது என்பதை தோண்டித்துருவி கண்டுபிடிச்சு, அதை இடுகைகளிலும் வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தபின்,.. உங்களிடமும் பகிர்ந்துக்கிட்டேன்.. நமக்குத்தெரிஞ்சதை, நம்ம நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிற மகிழ்ச்சியே தனிதான்.. அவங்களுக்கும் பிரயோசனப்படுமில்லையா..

அப்புறம், 'கமெண்டுகளில் படங்களை இணைப்பது எப்படி?' என்ற ப்ரொஜக்டை மறுபடியும் ஆரம்பிச்சு, வெற்றிகரமாக தோல்வியடைஞ்சபின்னாடி, சீச்சி..!!! இந்தப்பழம் புளிக்கும்ன்னு ஒதுங்கி வந்துட்டேன். பின்னே என்னங்க... கமெண்டுகளில் படங்களை இணைக்க ஆலோசனை கேட்டா.. ப்ளாக்கரும், கூகிளண்ணனும் சேர்ந்து கூட்டுச்சதி செஞ்சு, இடுகைகளில் எப்படி இணைப்பது ன்னு ஆலோசனை தர்றாங்க. எல்ல்ல்லாம்!!!!...... நாம ரொம்ப வெவரமாகிடுவோம்ன்னு ஒரு மூணெழுத்து ஆமை அவங்களை ஆட்டிப்படைக்குது :-))). ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!.. என்னோட அடுத்த ப்ரொஜக்டையும் இப்படித்தான் கெழக்கே, மேக்கேன்னு சுத்தி வடக்கால கொண்டு போயி விட்டுக்கிட்டிருக்காங்க... இருக்கட்டும், இருக்கட்டும்...

தீவாளி சமயம், கிடைச்ச சொற்ப இடைவேளையில் தமிழ்மணத்தை நுகர்ந்துக்கிட்டிருந்தப்ப சகோதரர் நீச்சல்காரனின் இந்த இடுகையை தலைப்பை பார்த்துட்டு,  நிதானமா வந்து பார்க்கலாம்ன்னு நினைச்சதை கடைசியில் மறந்தே போயிட்டேன்..   நம்ம வசந்தின் இந்த இடுகையை பார்த்ததும்,..கை நழுவிப்போன புதையல் மறுபடியும் கிடைச்சமாதிரி இருந்தது. உங்க இடுகைகளிலும் இதை ரொம்ப சுலபமா வரச்செய்யலாம்..

அதுக்கு மொதல்ல டேஷ்போர்டுல இருக்கிற designs பகுதிக்குப்போய், அப்புறம் edit html-ஐ திறந்துகொள்ளுங்கள். அங்கே, ctrl+f கொடுத்து வரும் தேடுதல் பெட்டியில் body ன்னு டைப் செஞ்சு அதைக்கண்டுபிடியுங்க. அதுக்கு மேலே, கொடுக்கப்பட்டிருக்கும் ஜாவா ஸ்கிரிப்டை காப்பியடிச்சு ஒட்டுங்க. அப்புறம், உங்க டெம்ப்ளேட்டை சேமியுங்க.. அவ்வளவுதான். இப்போ, யாராவது உங்களுக்கு படங்களுடன் கூடிய கமெண்ட் போட்டா, பின்னூட்டப்பகுதியில் தெரியும். உங்க வலைப்பூவிலும் இந்த வசதியை கொண்டுவரணும்ன்னா, நீச்சல்காரனின் அந்தப்பதிவை ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.


 பின்னூட்டத்தில் எப்படி படங்களை இணைப்பது???

1.[im]படத்தின் உரல்[/im]


உங்க நண்பர்களுக்கு இப்படி பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்..

[im]http://c1.ac-images.myspacecdn.com/images02/106/l_56a4ba598b8b496f95c1cdf3d85a796c.jpg[/im]

2. உங்க நண்பர்களுக்கு நன்றி சொல்லலாம்..இன்னும், நீங்க கொடுக்கும் பின்னூட்டங்கள் ஓடும் எழுத்துக்களில் வர விரும்பினால்,

[ma]write the text[/ma].

இதில் write the text என்று கொடுக்கப்பட்ட இடத்தில், நீங்க எழுத விரும்புறதை எழுதலாம்.. இதில் படங்களை ஓடவைக்கணும்ன்னா,.. [ma]படங்களுக்கான உரல்[/ma].

அதேமாதிரி, எழுத்தின் அளவு, மற்றும் நிறத்தையும் விரும்பியமாதிரி மாத்திக்கவும் தனித்தனி tags இருக்கு.

எழுத்தின் அளவை மாத்தணும்ன்னா, [si="2"]...[/si] இந்த tag-ல் கொடுக்கப்பட்ட எண்ணை மாத்திக்கலாம்.

எழுத்தின் நிறத்தை மாத்தணும்ன்னா[co="red"]...[/co] இந்த tag-ல் red-க்கு பதிலா, நீங்க விரும்பிய நிறத்தை டைப் செஞ்சுக்கலாம்.

கொடுக்கப்பட்ட tagsஉடன் விரும்பிய tagsஐ கலந்தும் விரும்பிய விளைவுகளை கொண்டுவரலாம். உதாரணமா, [si="3"][co="green"]வெள்ளோட்டம்[/co][/si]

இனிமே, நீங்க யாருக்காவது அவார்ட் கொடுக்கிறதாயிருந்தா, பின்னூட்டத்துலயே போயி கொடுக்கலாம். நீங்க கொடுக்கும் அவார்டின் உரலியை மட்டும் வெட்டி ஒட்டினாப்போதும். வலைப்பூவின் உரலை வெட்டி ஒட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. ஜாவா தடை செய்யப்படாத எல்லா ப்ரௌசர்களிலும் இது வேலை செய்யும்ன்னு நீச்சல்காரர் சொல்லியிருக்கார். மேலதிக விவரங்களுக்கு அவங்களோட வலைப்பூவிலும்  போயி பார்த்துக்கலாம்.


இந்த தகவல்களை பகிர்ந்துக்கிட அனுமதியளிச்ச சகோதரர் நீச்சல்காரருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. 

டிஸ்கி:  உங்க வலைப்பூவிலும் இந்த வசதி செஞ்சுட்டீங்கன்னா,.. வாசகர்களுக்கு ஒரு வார்த்தை போஸ்ட் போட்டு சொல்லிடுங்க.. இல்லைன்னா, பின்னூட்டப்பொட்டிக்கு மேல்பக்கம் குறிப்பு எழுதியாவது தெரியப்படுத்திடுங்க. பின்னூட்டம் போட வசதியா இருக்குமில்ல :-)
Friday, 5 November 2010

தீபாவளின்னா ரெண்டு...மொதல்ல கேள்விப்படறப்ப கொஞ்சம் குழம்பிட்டேன்.. அதென்ன, ச்சோட்டி, படீ??? ஏன்னா,.. நமக்கு ஒரே ஒரு தீபாவளியைத்தானே தெரியும். அப்றமா விளக்கம் கிடைச்சது. அதாவது, நாம தீபாவளி கொண்டாடும் நரகசதுர்த்தசியை, இவங்க 'ச்சோட்டி தீபாவளி'ன்னும், அதற்கடுத்து செய்யப்படும் லட்சுமி பூஜை தினத்தை 'படீ தீபாவளி'ன்னும் சொல்றாங்க. லட்சுமி பூஜையை ரொம்ப தாம்தூம்ன்னும், நரகசதுர்த்தசியை கொஞ்சம் குறைவான ஆர்ப்பாட்டத்துடனும் கொண்டாடுவதால் இந்தப்பேர் வந்திருக்கலாம்.


இங்கியும் நம்மூரைப்போலவே எண்ணெய்க்குளியல் உண்டு. அதை இங்குள்ளவங்க 'அப்யங்க ஸ்நான்'ன்னு சொல்லுவாங்க. காலங்கார்த்தால எழுந்து எண்ணெய் தேய்ச்சு, குளிச்சு முடிச்சுட்டு பட்டாசு வெடிப்பாங்க. இங்கே, மஹாராஷ்ட்ராவில் சின்னப்பசங்களெல்லாம் சேர்ந்து,ஒரு வாரத்துக்கு முன்னாடியே, மண்ணால் ஒரு மலைக்கோட்டை கட்டி, அதுல சிவாஜி மஹராஜ் கொலுவிருப்பதைப்போல செட் போடுவாங்க. அப்சல்கானை சிறையில் அடைச்சு வெச்சிருக்கும் காட்சிகளையெல்லாம் தத்ரூபமா செஞ்சு வெச்சிருப்பாங்க. இதுக்காகவே சின்னதா, ரெண்டுமூணு இஞ்ச் உசரத்துல கொலுபொம்மைகள் கிடைக்கும். லட்சுமி பூஜை அன்னிக்கு காலையில, முதல்ல அந்தக்கோட்டையைத்தான் வெடிவெச்சு தகர்ப்பாங்க. (இந்தவருஷம் புது அயிட்டமா, மலைக்கோட்டை ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் வந்திருக்கு)அப்புறம் குடும்பத்தலைவர் 'காரிட்டே' என்னும் ஒரு கசக்கும் பழத்தை, வீட்டு வாசல்ல வெச்சு, நச்சக்..ன்னு நசுக்கி பிச்சுப்போட்டுடுவார். இது நரகாசுரனை அழிப்பதற்கான ஐதீகமாம். அப்றம், அதுல கொஞ்சூண்டு குங்குமத்தை போட்டு, கொழகொழன்னு குழப்பி..வெற்றித்திலகம் இட்டுக்குவாங்க. இப்போ,  யாரும் புதுத்துணியும் போடுறதில்லை. சுமாரான அளவுல ரங்கோலி போட்டு வீட்டின் எல்லா அறைகளிலும், வாசல் பக்கத்திலும் கொஞ்சம் அகல் விளக்குகளை ஏத்தி வைப்பாங்க. தீபாவளிக்கு உண்மையான அர்த்தமே தீபங்களின் வரிசை என்பதுதானே..


சாயந்திரம், லட்சுமி பூஜை சமயத்தில்தான், அதகளமெல்லாம் :-)). இங்கே குஜராத்தியர்கள் மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு அன்னிக்குத்தான் புதுவருசம் பிறக்குது. அன்னிக்குத்தான் கடைகளிலும் புதுக்கணக்கு தொடங்குவாங்க. சுத்தமான இடங்களிலும், மனங்களிலும்தான் லட்சுமி வாசம் செய்வதாக சொல்லப்படறதால், தீபாவளிக்கு முன்னாடியே, நாம பொங்கலுக்கு வீட்டை வர்ணமடிச்சு அழகுபடுத்தறமாதிரி இங்குள்ளவங்களும் செய்வதுண்டு. வீட்டை சுத்தப்படுத்துவதில் துடைப்பம் முதலிடம் வகிப்பதால், ராஜஸ்தானியர்கள், புதுசா துடைப்பம் வாங்கி, மஞ்சள் குங்குமம் வெச்சு.. அதையும் பூஜையில் வைக்கிறதுண்டு. ரெண்டு தீபாவளிகளும் சிலசமயம் ஒரே நாளில் வரும், சிலசமயம், அடுத்தடுத்த நாட்களில் வரும்.


சாதாரணதினங்களில்கூட சில குடும்பங்களில், தப்பித்தவறிக்கூட துடைப்பம் காலில் படாம பார்த்துக்குவாங்க. இது என் ராஜஸ்தானிய தோழி சொன்னது. ஏன்னு கேக்கும்போதுதான் பூஜைசமாச்சாரத்தை சொன்னாங்க. லட்சுமி பூஜை அன்னிக்கு, வாசல்ல ஸ்பெஷலா பெரிய அளவுல ரங்கோலி போட்டு வைப்பாங்க.வீட்டின் உள்ளே, வெளியே.. பூஜை அறை, சமையல் கட்டுன்னு எல்லா அறைகளிலும் அகல் விளக்குகளை ஏத்தி வைப்பாங்க.க்ருஷ்ணர் ஜெயந்திக்கு செய்றமாதிரி சின்னச்சின்ன பாதங்கள், வீட்டுக்குள்ள போறமாதிரி வரையறதுண்டு.லட்சுமியே வீட்டுக்குள்ள வர்றதா ஐதீகமாம். சாயந்திரமானதும் புதுத்துணிகள், இனிப்புகள், பலகாரங்கள், நகை,பணம்,புதுக்கணக்கு நோட்டுன்னு எல்லாத்தையும் வெச்சு குபேரலஷ்மி பூஜை செய்வாங்க.


அப்றம், பெரியவங்க கையால புத்தாடைகளை எல்லோரும் வாங்கி, அவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கியாச்சுன்னா.. அடுத்த செகண்ட் எல்லோரும் வாசலுக்கு ஓடிடுவாங்க..எதுக்கா!! பட்டாசு வெடிக்கத்தான். அதிலும், குஜராத்தியர்கள் பட்டாசு வெடிக்கிறதை பார்த்தா, மத்த சமயங்களில் அவங்க கடைப்பிடிக்கிற சிக்கனம் ஒரு செகண்டுக்கு நம்ம நினைப்பில் வந்து, அவங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னுட்டு ஓடிடும் :-). இரவுவிருந்துக்கு அப்புறம் சில குடும்பங்களில் சிலபல சமாச்சாரங்கள் நடக்கும்.. வேறொண்ணுமில்லை..குடும்பத்திலுள்ளவங்க எல்லோரும் ஒண்ணுகூடி சீட்டாடுவாங்க. ராத்திரி முழுக்க சீட்டாடணுமாம். அப்பத்தான் லட்சுமிகடாட்சம் வீட்டுல தங்குமாம். ஜெயிச்சவங்களுக்கு சரி!!.. தோத்தவங்க நிலைமை???. அதுவுமில்லாம, சீட்டாடமாட்டேனு சொல்றவங்க அடுத்த ஜென்மத்துல கழுதையாத்தான் பிறப்பாங்களாம்.. இப்படி ஒரு நம்பிக்கை.


நாலாவது நாள், பாட்வா எனப்படும் பண்டிகை. வடக்கே மதுராவில் இந்தப்பண்டிகையை கோவர்த்தனபூஜையாவும் கொண்டாடுறாங்க. அன்னிக்கு கிருஷ்ணருக்கு மஹாபோக் எனப்படும் நைவேத்தியமா, 108 வகையான சாப்பாட்டு அயிட்டங்களை செஞ்சு, மலைமாதிரி குவிச்சு வெச்சு படையல் நடக்குமாம். பூஜைக்கப்புறம் இதெல்லாம் மக்களுக்கு பிரசாதமா வழங்கப்படுமாம்.


அஞ்சாம் நாளான தீபாவளியின் கடைசி நாள் ' பாயி தூஜ்'ன்னு இந்தியிலும், 'பாவுபீஜ்'ன்னு மராட்டியிலும் அழைக்கப்படும் பண்டிகை. இது முற்றிலும் உடன்பிறப்புக்களுக்கான பண்டிகை.அன்னிக்கு, சகோதரர்கள் தன்னோட சகோதரிகளின் வீட்டுக்கு விருந்துக்கு போவாங்க. சகோதரி வீட்டுக்கு வெறும்கையோட போனா நல்லாருக்குமா?? அதனால, கை நிறைய ஏதாவது பரிசுப்பொருளை வாங்கிட்டுப்போவாங்க. அதான் மார்க்கெட்டுல எக்கச்சக்க பாத்திரம்,பண்டம்,புடவை, நகைன்னு எக்கச்சக்க கிஃப்ட் அயிட்டங்கள் குவிஞ்சு கிடக்குதே :-). (தந்தேரஸ் அன்னிக்கு இதுகளை வாங்கிக்கிட்டா,.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா :-))அவங்களும் சகோதரனை வரவேற்று, மணைப்பலகையில உக்காரவெச்சு, நெத்தியில் திலகமிடுவாங்க.. அந்த திலகத்தில் நாலஞ்சு அரிசியையும் ஒட்டவைக்கிறதுண்டு. இது ஏன்னு தெரியலை. சரியான ஆள் கிடைச்சா விளக்கம் கேக்கணும். அப்புறம், நல்லா விருந்துச்சாப்பாட்டை ஒரு பிடி பிடிச்சுட்டு, மலரும் நினைவுகளை பேசி பொழுதை சந்தோஷமா கழிக்கிறதுண்டு. இது ஒரு வகையில் நம்மூர் 'கனுப்பிடி', மற்றும் காணும்பொங்கல் மாதிரியே இருக்குது .


இதுக்கும் ஒரு கதை இருக்குதாம். யமன் தன்னோட சகோதரியான யமியின் அழைப்பை ஏத்துக்கிட்டு, அவங்க வீட்டுக்குப்போயி விருந்தாடிட்டு, "ம்ம்.. யமி,... சாப்பாடு யம்மி.. யம்மி,"ன்னு சந்தோஷமா திரும்பி வந்தாராம். அப்ப,.. 'இதுமாதிரி இதுமாதிரி சகோதர சகோதரிகள் ஒருத்தருக்கொருத்தர் பாசமா இருந்தா, ..ஒத்துமையா இருந்தா,.. இதுமாதிரி இதுமாதிரி அவங்க நல்லாருப்பாங்க'ன்னு அவங்களுக்கு வரம் கொடுத்தாராம். உண்மையில் இந்தப்பண்டிகை பாசத்தையும், ஒத்துமையையும் நிச்சயமா பலப்படுத்துது. பாக்கெட்டோட கனத்தைப்பார்க்காம, பாக்கெட்டுக்கு பின்னால இருக்கிற மனசிலுள்ள, அன்பின் கனத்தை மட்டுமே பார்க்கிறபுத்தி கொஞ்சூண்டாவது வருது.


தீபாவளியன்று நல்லெண்ணையில் லஷ்மியும், தண்ணீரில் கங்கையும் வாசம் செய்வதாக ஐதீகம். அதேபோல் பட்டாசில் அக்னிபகவான் வாசம் செய்வதால், பாதுகாப்பாக பட்டாசு வெடிச்சு, அளவோடு பலகாரங்கள் சாப்பிட்டு இனிமையாக தீபாவளியை கொண்டாடணும்ன்னு வாழ்த்திக்கிறேன்.
இனிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்..


டிஸ்கி:  எங்கூர்ல இன்னும் தீவாளி முடியலை :-))))
Wednesday, 3 November 2010

தினம் தினம் தீபாவளி...

"தீபாவளிக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு.. இன்னும் அஞ்சே நாள்தான்.. அய்ய்ய்!!! நாளைக்கு தீவாளி". இப்படி நாட்களை எண்ணி, எண்ணி காத்திருக்கும் அந்த சின்ன வயசு தீபாவளி தந்த ஆனந்தமே அலாதி. கடைக்கு படையெடுத்துப்போயி, துணியெடுத்து, தைக்கக்கொடுத்து.. தச்சு வர்றவரைக்குகூட பொறுமையில்லாம, அந்த வழியா போகும்போதும், வரும்போதும்,..டெய்லர் கிட்ட 'என் துணி தச்சு முடிச்சாச்சா'ன்னு நச்சரிச்சு, துணி கைக்கு வந்ததும் ஒடனே அதை போட்டுப்பார்த்தாத்தான் திருப்தி. அப்புறமும், தீபாவளிவரை தெனமும் அதை கையில் எடுத்து தொட்டுப்பார்த்து, அந்த புதுத்துணி வாசனையை மோப்பம் பிடிச்சாத்தான் ஒறக்கம் வரும். ரெடிமேட் துணிகள் மார்க்கெட்டுக்கு வந்ததும், இதெல்லாம் நம்மைவிட்டு எங்கியோ தூரப்போயிட்டமாதிரியான உணர்வு. அதுவுமில்லாம, இப்பல்லாம் நினைச்சப்ப புதுத்துணி எடுத்துக்கிற வழக்கம் வந்ததும், தீபாவளியோட ஒரு அடையாளத்தை, கொஞ்சம் கொஞ்சமா இழந்துட்டு வர்றமாதிரி இருக்கு.


சின்ன வயசுல பட்டாசு வெடிக்கிறதுன்னா.. அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அவரவருக்கு வேணும்கறதை சொல்லச்சொல்ல, மொத்தமா லிஸ்ட்போட்டு வாங்கிட்டு வந்து பங்கிட்டதும்,.. தீபாவளிவரை அதை உடன்பிறப்புகள் கிட்டயிருந்து பத்திரமா பாதுகாப்பதே ஒரு கலை :-)). (எவ்ளோதான் ஒளிச்சு வெச்சாலும், ரெண்டுமூணு பாக்கெட்டாவது திருட்டுப்போயிடும்). சிலர் பட்டாசு நமத்துப்போகாம இருக்கிறதுக்காக வெயில்ல, மொளகா காயவைக்கிறமாதிரி காய வைப்பாங்க. ஆனா, இப்பத்திய குழந்தைகளிடம் பட்டாசு மோகமும் குறைஞ்சுட்டு வரமாதிரி இருக்கு.


பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் ஒலிமாசு, குறிப்பிட்ட அளவை விட கூடுதலா இருப்பதாலும் , அது ஏற்படுத்தும் புகை சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் என்பதாலும், இப்பல்லாம் பசங்களே வேண்டாம்ன்னு சொல்லிடறாங்க. என் பொண்ணும் எனக்கு இந்தவருஷம் பட்டாசு வேணாம்ன்னு சொல்லிட்டா. பையரும் இப்பல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுறதில்லை. எனவே, அளவா பர்ச்சேஸை நிறுத்திக்கிட்டார் :-))


நம்மூர்ல, பிரம்ம முஹூர்த்தத்துல எண்ணெய் தேய்ச்சுக்குளிச்சு, பட்டாசு வெடிச்சு, டிபன் சாப்டும்போதே விடிஞ்சுடும்... கிட்டத்தட்ட தீபாவளி முடிஞ்சுட்டமாதிரிதான். அப்றம் , சினிமாவோ, அல்லது இடியட்பாக்ஸ்ன்னு சொல்லப்படற டிவிபொட்டியோதான் கதி.. மிச்ச நாளுக்கு. இப்படியெல்லாம் இருந்துட்டு,.. மும்பை, ஒருகாலத்துல பாம்பேயா இருந்தப்ப நான் இங்கே கொண்டாடுன மொத தீபாவளி ரொம்பவே வித்தியாசமா பட்டுது. அதுவும்,.. அது எனக்கு தலைதீபாவளி :-))). வீட்டுக்கு வீடு தொங்கவிட்டிருந்த மின் அலங்காரவிளக்குகளும், சாயந்திரமானா , வீட்டுக்கு வெளியே வரிசையா ஏத்தி வைச்சிருந்த தீபங்களும் ரொம்பவே அழகாபட்டுது. கிறிஸ்துமஸ்ஸையும், திருக்கார்த்திகையையும், கலந்து கட்டி கொண்டாடுனது மாதிரி ஒரு ஃபீலிங் :-)). அப்புறம், நாங்களும் கொஞ்சம் கொஞ்சமா ஜோதியில் கலந்து பாதி மும்பைக்கர் ஆகிட்டோம்.


வடக்கே, தீபாவளி என்பது அஞ்சு நாள் பண்டிகை.  ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசியில் இருந்துதான், 'கந்தில்'(kandil)ன்னு சொல்லப்படற மின்னலங்கார விளக்குகளை வீடுகளில் ஏத்துவாங்க. அதுவும் குடும்பத்தலைவர்தான் ஏத்தணும்ன்னு ஐதீகமாம்(தலைவி ஏத்துனாலும் எரியத்தான் செய்யுது. அப்றம் எதுக்கு இந்த ஐதீகம்ன்னு தெரியலை). இன்னிக்கு கண்டிப்பா வாசல்ல ரங்கோலி போட்டு, ரெண்டு அகல் விளக்குகளையும் ஏத்தி வைக்கணும். 


தீபாவளியின் முதல் நாளை 'தந்தேரஸ்'ன்னு கொண்டாடுவாங்க. தன்வந்திரி திரயோதசின்னும் சொல்லலாம். பண்டிகைன்னா கதைன்னு ஒண்ணு இல்லாம இருக்குமா??. (இல்லாட்டா கட்டிவிட்டுற மாட்டோம்) ஒரு சமயம் 'ஹிமா'ன்னு ஒரு ராஜா இருந்தார். அவரோட பையன் ஜாதகத்தை எதேச்சையா பார்த்த ஒருவர்,.. 'அவனோட கல்யாணத்துக்கப்புறம் கரெக்டா நாலாவது நாள் பாம்பு கடிச்சு இறந்துபோவான்'னு அவனோட ஜாதகம் சொல்லுதுன்னுட்டார். 


ராஜாவுக்கு திக்குன்னு ஆகிப்போச்சுன்னாலும் விதிவிட்ட வழின்னு தைரியமா இருந்தார். கல்யாணவயசு வந்ததும், அவனுக்கு கல்யாணமும் செஞ்சுவெச்சார். இந்தவிவரத்தையெல்லாம் மருமகளுக்கும் சொல்லிவெச்சார். புத்திசாலியான அந்தப்பொண்ணு, கரெக்டா நாலாம் நாள் ராத்திரி.. அறைவாசல்ல, தங்க நகைகள், நாணயங்கள், இன்னும் விலைமதிக்க முடியாத பொருட்களையெல்லாம் ஒரு சுவர்போல கொட்டி வெச்சு வழியை மறைச்சு வெச்சுட்டாங்க. அதுவுமில்லாம, நிறைய அகல்விளக்குகளையும் ஏத்திவெச்சு, அந்தப்பகுதியையே ஜெகஜ்ஜோதியா மாத்திட்டாங்க. பாம்பு வந்தாலும் விளக்கு வெளிச்சமிருந்தா கண்டுபிடிச்சிடலாம் பாருங்க.. அதுவுமில்லாம, இறைவனைப்பத்திய பக்திப்பாடல்களையும் ராத்திரிமுழுக்க பாடி, புருஷனை தூங்கவிடாம பாத்துக்கிட்டாங்க.(அவங்க குரல் இனிமையைப்பத்தி ஆருக்கும் சந்தேகம் வரக்கூடாது ஆம்மா :-))


எமனும், தன் கடமையை ஆத்தணும்ன்னு, வேகவேகமா டீயை ஆத்திக்குடிச்சுட்டு வந்து சேர்ந்தார். ஜொலிக்கிற வெளிச்சத்துல அவருக்கு கண்ணெல்லாம் கூசுது. டார்கெட்டை கண்டுபிடிக்க முடியலை. டக்குன்னு பாம்பா மாறி, தங்கக்குவியல் மேலே ஊர்ந்து அறைக்குள்ளே போக முயற்சி செஞ்சார். அறைக்குள்ளே இருந்து வந்த அந்த தேன் குரல் அவரை கட்டிப்போட்டது. இறைவனின் அருமைபெருமைகளை, இனிய பாடல்களாக மெய்மறந்து கேட்டுக்கிட்டே இருந்ததில், பொழுது விடிஞ்சதுகூட தெரியலை. 'ஆஹா!!!.. வட போச்சே'ன்னு வருத்தத்தோட எமன் கிளம்பிப்போயிட்டார்.ஏன்னா.. கடமையில அவங்கல்லாம் ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு.. ஸ்ட்ரிக்ட்டு. அன்றைய கடமையை அன்னிக்கே முடிச்சாகணும்,..இன்றுபோய் நாளை வா அப்படீங்கறதெல்லாம் அவங்களுக்கு கிடையாது.  இப்படியாக அந்தப்பெண், தன் வீட்டுக்காரரோட உசிரை காப்பாத்தினாங்க.  அன்னியிலிருந்து, தந்தேரஸ் அன்னிக்கு ராத்திரி முழுக்க விளக்கு ஏத்திவெச்சா, எமபயம் இல்லைன்னு ஒரு நம்பிக்கை. அந்த விளக்கையும் 'எமதீபம்'ன்னே சொல்லுவாங்க. (விளக்குத்திரியை காலையிலேயே எண்ணையில் ஊறப்போட்டு அந்த திரியை விளக்கேத்த உபயோகப்படுத்தினா ரொம்ப நேரம் எரியும்ன்னு டிப் சொல்லிக்கிறேன்)


இந்த தந்தேரஸ் அன்னிக்குத்தான் பாற்கடலிலிருந்து தன்வந்திரி பிறந்தார்ன்னும் ஒரு கதை இருக்கு. 'தன்வந்திரி' என்பவர் மேலோகவாசிகளுக்கான டாக்டர். இவரை பூஜித்தால் நோய்,நொடிகளிலிருந்து காப்பாத்துவார் என்பது ஒரு நம்பிக்கை. அதையும் இன்னிக்குத்தான் செய்வாங்க.  அதுவுமில்லாம, இன்னிக்கு ஏதாவது பொருளோ, நகையோ வாங்கினா ஐஸ்வரியம் பெருகும்ன்னு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கையை குறிவெச்சு, ஒவ்வொரு கடைக்காரர்களும், எக்கச்சக்க ஆஃபர்களை அள்ளிவுடுவாங்க. டிஸ்கவுண்ட், ஒரு சவரன் நாணயம் பரிசு, பரிசுப்பொருட்கள் இலவசம், ஒண்ணு வாங்கினா இன்னொண்ணு ஃப்ரீ...... இப்படி எக்கச்சக்கம் இருக்கு,.. ஒவ்வொருத்தரும், அவரவர் பர்ஸுக்கேத்தமாதிரி, எவர்சில்வர் ஸ்பூன்ல இருந்து, ப்ளாட்டினம் நகைகள் வரைக்கும் வாங்கிப்பாங்க. சுருக்கமா சொன்னா,.. இது இந்த ஊர் அட்சய திருதியை.


தந்தேரஸ்க்கு அப்புறம் என்ன?!!.. நாளைக்கு சொல்றேன். அதுவரை சன்ஸ்கார்பாரதி முறையில் போடப்பட்ட இந்த ரங்கோலியை ரசியுங்கள். ரங்கோலி நான் போடலை :-))
LinkWithin

Related Posts with Thumbnails