Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, 27 September 2026

ஒரு மடக்கு தேநீர்.. (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


சூரியன் தனது எட்டுமணி மென்மையைக் கைவிட்டு, பதினோரு மணி வெம்மைக்குள் நுழையத்தொடங்கியிருந்த ‘சுள்’ பொழுது. “ச்சாய்.. ச்சாய்.. இஞ்சி ச்சாய்” என எங்கிருந்தோ ஒரு குயில் கூவிற்று. கூவிய குயில்குரல் மெதுவாக மிதந்து வர வர சிவராமனுக்கு தேநீர் பசியெடுத்தது. பல வருட அலுவலகப்பழக்கம் அது. ரிடையர் ஆகிவிட்டாரென்பதற்காக மாற்றிக்கொண்டுவிட்டால் அது தனது தேநீர் நண்பர்களுக்குச் செய்யும் துரோகம் என இன்னும் அதைக் கைவிடாதிருப்பவர். குயில் காண்டீன் சிப்பந்தியின் சீருடையணிந்து, ஒரு கையில் கேனும் இன்னொரு கையில் பேப்பர் கப்புகளுமாக இரண்டு கால்களில் நடந்து வந்து நின்றது.. நின்றான். 

“ச்சாய் எவ்ளோப்பா?”

“பத்து ரூப்யா” என தமிழும் ஹிந்தியும் கலந்து ஹிமிழில் சொல்லிவிட்டு “கித்னா தரட்டும்?” என்றான். சிவராமன் மனைவியை நோக்கினார், அவளும் நோக்கினாள். கண் பேசிய வார்த்தைகளைக் கப்பெனப் புரிந்து கொண்டவர், “ஒண்ணு போதும்ப்பா” என்றார். “திரும்பி வரப்ப காசு வாங்கிக்கறேன் சார்” என்றபடி டீக்காரர் நீட்டிய கப்பை வாங்கிக்கொண்டு ஒரு மிடறு உறிஞ்சியவரது கண்கள் செருகின. காரமான அளவான இனிப்புடன் கொதிக்கக்கொதிக்க தேவாமிர்தம் போல் இருந்தது தேநீர். செகண்ட் ஏசி பெட்டியின் குளிருக்கு இதமாகவும் இருந்தது. ரயிலின் இரும்புச் சக்கரங்கள் தட்டச்சுப் பொறியின் ஒலியைப் போல 'டக டக டக...' எனத் தண்டவாளங்களின் மேல் எழுத்துக்களை அச்சிட்டுக் கொண்டு குதியாட்டம் போட்டு ஓடிக்கொண்டிருந்தது.

ஜன்னலோரச் சீட்டில் அமர்ந்திருந்த சிவராமன் தன் கையில் இருந்த காகிதக் கப்பை உதட்டுக்குக் கொண்டு சென்றார். டீயின் மேல் படர ஆரம்பித்திருந்த மெல்லிய ஆடையை ப்பூ.. என ஊதினார். அதிலிருந்து ஒரு மெல்லிய நீல நிற மேகம் வெளிப்பட்டு, ரயிலின் கூரையில் சிறிய மழை மேகமாக உருவெடுத்துக் கொண்டிருந்தது.

"பத்து ரூபாய் குடுங்க சாப்" என்றார் திரும்பி வந்திருந்த டீக்காரர். அவர் அணிந்திருந்த சீருடையின் பொத்தான்கள் ஒவ்வொன்றும் சிறிய ரயிலின் சக்கரங்களைப் போலத் சுழன்று கொண்டிருந்தன.

"ஜிபே பண்றேன்.. உன் நம்பர் சொல்லு" என்றார் சிவராமன்.

"ஜிபேயா? அதெல்லாம் கிடையாது சார். எனக்குப் பச்சை நோட்டுதான் வேணும். இல்லன்னா குடிச்ச டீயைத் திருப்பிக் குடுத்துடுங்க," என்றார் டீக்காரர் கறாராக.

சிவராமன் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மனைவி மீனாட்சியை நோக்கினார்.. அவளும் நோக்கினாள். “ப்ச்..” என்ற சின்ன சலிப்போடு தன் கையிலிருந்த “சித்தப்பா” சீரியல் ஓடிக்கொண்டிருந்த கண்ணாடியைக் கீழே வைத்துவிட்டு, தன் கைப்பையைத் திறந்து துழாவினார். பையின் ஆழத்தில் இருந்து ஒரு பெரிய கடிகாரத்தின் முட்கள், உறங்கிக்கொண்டிருந்த பூனைக்குட்டி, அப்புறம் ஒரு காய்ந்த எலுமிச்சம்பழம் ஆகியவை வெளியே விழுந்தனவே தவிர, நாணயம் எதுவும் வரவில்லை.

"என்கிட்ட பணமில்லீங்க... நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே சொன்னேன்ல, சில்லறை எடுத்து வெச்சுக்கோங்கன்னு.. கேட்டாத்தானே?” என்றபடி சீரியலைத்தொடந்தார் மீனாட்சி.

டீக்காரர் பொறுமையிழப்பது தெரிந்தது. “சாப்.. காசு கொடுத்துட்டீங்கன்னா நான் போய்டுவேன், நாலு பெட்டில யாவாரம் பார்க்கறவன்..”

வியர்வை துளிர்க்க ஆரம்பித்த நெற்றியைத் துடைத்துக் கொண்டார். “நல்லாப் பாரு மீனாட்சி, இண்டு இடுக்கு எங்கியாவது பணம் வெச்சிருப்பே” என்றார்.

மீனாட்சி சூடானாள். “ஏங்க.. வெளில வாசல்ல போறச்சே என் கையிலயும் கொஞ்சம் காசு கொடுத்து வைங்கன்னா என்னிக்காவது கேக்கறீங்களா? அதான் போன் பே இருக்கே ஜிபே இருக்கேன்னு நீங்களும் பணம் வெச்சுக்காம உசுரை வாங்கறீங்க” எனக்கொதித்தாள். சிவராமன் டீக்காரர் பக்கம் திரும்பி, "தம்பி! ஒரு யோசனை. உன்னோட வேலை செய்யற ஆளு யாராவது இருப்பாங்கள்ல? அவனைக் கூட்டிட்டு வா. நான் அவனோட ஜிபேக்குப் பணத்தை அனுப்புறேன். அவன் உனக்குக் ரொக்கமா குடுத்துடட்டும். என்ன சொல்ற?" என்றார்.

டீக்காரர் தனது இரண்டு கண்களையும் வெவ்வேறு திசையில் சுழற்றி யோசித்தார். "சரி... நகராம இங்கயே இருங்க," என்று சொல்லிவிட்டு, போகியின் கதவைத் திறந்து சென்று, அடுத்த விநாடியே மறுபடியும் அதே கதவு வழியாக உள்ளே வந்தார். அவருடன் மற்றொருவன் வந்தான்.

வந்தவன் தலையில் ஒரு பெரிய பாக்கெட் டைரி முளைத்திருந்தது. ஏதேதோ கணக்கு வழக்குகள் தன்னைத்தானே எழுதிக்கொண்டிருந்தன. காதில் மாட்டியிருந்த புளூடூத் ஹெட்போனில் இருந்து சிறிய பறவைகள் வெளியே இசைக்கேற்ப நடனத்துடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தன.

"சார், இவன் என் நண்பன்.. இவன்கிட்ட ஜிபே இருக்கு," என்றார் டீக்காரர்.

சிவராமனுக்கு வயிற்றில் ஏலக்காய் தேநீர் வார்த்தது போல் இருந்தது. "அப்பாடா! உன் ஜிபே நம்பரைச் சொல்லுப்பா. அப்படியே பத்து ரூபாயை அனுப்புறேன். நீ இவன்கிட்ட பணமாக் குடுத்துடு"

நண்பன் தன் தலையில் இருந்த டைரியைத் திறந்து, விரல்களால் பக்கங்களைத் திருப்பினான். "சார்... ஒரு சின்ன சிக்கல். என் போன்ல கூகுள் பே இல்ல. ஆனா 'கால பே' இருக்கு."

"என்னது? கால பேயா? அப்படின்னா?"

"அதுல பணத்துக்கு பதிலா நேரத்தை அனுப்பலாம் சார். நீங்க எனக்கு ஒரு பத்து நிமிஷத்தை அனுப்புங்க, நான் இவனுக்கு பத்து ரூபாய் தர்றேன்," என்றான் மிகச் சாதாரணமாக.

"யோவ்! என்னய்யா லூசுத்தனமா பேசுற? ஒழுங்கா உன் போன்பேயோ ஜிபேயோ.. அந்த நம்பரைச் சொல்!" என்று சிவராமன் படபடத்தார்.

"சரி சரி, கோபப்படாதீங்க... என் போன்பே நம்பர் சொல்றேன். ஆனா என் போன்பேல பேங்க் அக்கவுண்ட் லிங்க் ஆகல. ஏன்னா என் பேங்க் கிளை இப்போ கடலுக்கு அடியில இருக்கு," என்றான் நண்பன்.

சிவராமனுக்குத் தலை சுற்றியது. சுற்றியிருந்த பயணிகள் அனைவரும் தங்களின் தலைகளைத் திருப்பிப் பார்த்தார்கள். மேலடுக்கில் படுத்திருந்த ஒரு பெரியவர், காற்றில் மிதந்தபடி இறங்கி வந்து, "என்னப்பா பிரச்சனை? பத்து ரூபாய்க்கு எதுக்கு இவ்வளவு சத்தம்? நான் வேணும்னா என் கனவுல இருக்குற கடையில் இருந்து காசு எடுத்து தரட்டுமா?" என்றார்.

"ஐயா! நீங்க மேலேயே இருங்க, எங்க நடுவுல வராதீங்க! இதை நாங்களே தீத்துக்குவோம்" என்று கடுப்பானார் சிவராமன்.

டீக்காரரின் நண்பர், "ரமேசு! இவரு சொல்ற ஜிபே கணக்கு எனக்குப் புரியல. என் தம்பி நிலாவுல இருக்கான்... அவனோட விண்வெளி கணக்குக்கு மூன்பே பண்ணச் சொல்லு. ஆனா அதுக்கு எனக்கு ஒரு டீயும், அஞ்சு சமோசாவும், கூடவே இந்த ஐயாவோட தொப்பியையும் ப்ளாட்பாரம் ஃபீஸாக் குடுக்கணும்," என்று புது பேரம் பேசினான்.

"என்னது! என் தொப்பியா?" சிவராமன் தன் தலையைத் தொட்டுப் பார்த்தார். அங்கே தொப்பியே இல்லை, ஆனால் ஒரு சிறிய கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது.

டீக்காரர் குறுக்கிட்டு, "சார்! இவன் சொல்றதும் சரிதான். இவன் தம்பிக்கு அனுப்புங்க” என்றார்.

“பத்து ரூபாய்க்கு இவ்ளோ அக்கப்போரா!” என்று அலுத்துக்கொண்டவரை “இல்ல. உடனே காசு தராததுக்கான அபராதம், அப்றம் அந்த ப்ளாட்பார்ம் ஃபீஸ் எல்லாம் சேர்த்து நூறு ரூபா ஆச்சு” எனக்கூறி அதிரவைத்தார்.

"சரி தொலையுது! அந்தத் தம்பியோட ஜிபே நம்பரைச் சொல்! நூறு ரூபாயை அனுப்புறேன்!" என்று சிவராமன் தனது கூகுள் பே செயலியைத் திறந்தார்.

டீக்காரரின் நண்பன் எண்களைச் சொன்னான். ஒவ்வோர் எண்ணைச் சொல்லும்போதும் போகியின் விளக்குகள் ஒருமுறை அணைந்து மின்னின. “ஏம்ப்பா.. உங்க தம்பியின் பெயர் முருகனா?” எனக்கேட்டு உறுதி செய்து கொண்டவர் 'Pay' என்பதைத் தட்டினார். போன் திரை வளையம் வளையமாகச் சுழன்றது... சுழன்றது...

திடீரென திரையில் “நெட்வொர்க் இல்லை” என செய்தி வந்தது.

ரயில் அப்போதுதான் ஒரு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட முடிவுறாத நீண்ட சுரங்கப் பாதைக்குள் நுழைந்து கொண்டிருந்தது. வெளிச்சம் முற்றிலுமாக மறைந்தது. ஆனால், இருட்டிலும் சிவராமனின் ஸ்மார்ட்போன் திரை மட்டும் பிரகாசமாக மின்னியது.

"அடடா! டவர் போச்சே!" என்று கூச்சலிட்டார் அவர்.

இருட்டுக்குள் டீக்காரரின் குரல் ரயிலின் சக்கரங்கள் பேசுவது போல ஒலித்தது. "யோவ் பெரியவரே! என்னய்யா டவர் போச்சு, கிவர் போச்சுன்னு கதை விடுற? டீயைக் குடிச்சுட்டு எங்களை ஏமாத்தப் பாக்குறீங்களா?" சுரங்கப் பாதைக்குள் சத்தம் எதிரொலித்தது. போகியில் இருந்த மற்ற பயணிகளின் நிழல்கள் சீட்டுகளில் இருந்து எழுந்து நின்று நடனமாடத் தொடங்கின.

"தம்பி! யாராவது ஒரு நூறு ரூபாய்க்குச் சில்லறை தருவீங்களா? நான் உங்க கணக்குல ஜிபே பண்ணிடுறேன்... நெட்வொர்க் வந்ததும்!" என்று சிவராமன் இருட்டுக்குள் கையேந்தினார். ஆனால் பயணிகள் அனைவரும் கைகடிகாரங்களாக மாறி, 'டிக்... டிக்...' என்று சத்தம் மட்டுமே எழுப்பினார்கள்.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு, ரயில் சுரங்கப் பாதையை விட்டு வெளியே வந்தது. வெளியே பகலும் இரவும் கலந்த ஒரு விசித்திரமான செவ்வானம் இருந்தது. போனில் மீண்டும் '10G' சிம்பல் மின்னியது.

"வந்திடுச்சு! நெட்வொர்க் வந்திடுச்சு!" என்று கத்தியவர் உடனே முருகனின் எண்ணிற்கு ரூபாயை ஜிபே செய்தார். பணப் பரிவர்த்தனை வெற்றியடைந்தது என செய்தி ஒலித்ததும் "அப்பாடா!.. அனுப்பிட்டேன் பாரு தம்பி" என்றார்.

அவன் தன் காதில் இருந்த புளூடூத் பறவையிடம் பேசினான். "டேய்! போனுக்கு ரூபாய் வந்துச்சாடா... என்னது? இன்னும் வரலையா?" போகியில் இருந்த பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்களின் தலைகளைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு சிரிப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டது. சிவராமன் தலையிலேயே கை வைத்துவிட்டார். "கடவுளே! நான் எந்த உலகத்துல இருக்கேன்?"

அமைதியிழக்க ஆரம்பித்திருந்த டீக்காரர் முதுகில் இன்னும் இரண்டு கைகள் முளைத்து இப்போது நான்கு கைகளுடன் நின்றிருந்தார். அவற்றில் ஒரு கையில் மொபைல் வீடியோ எடுக்கத்தயாராக உயிர்ப்பிக்கப்பட்டிருந்தது. "ஹேய் கைய்ஸ்.. இங்க ஒருத்தர் என்ன செஞ்சார் தெரியுமா?" என்றவர் சிவராமனை நோக்கி மொபைலைத்திருப்பி, "சார், எனக்கு இதெல்லாம் தெரியாது. காசு வந்தாதான் நான் நகருவேன்" என இணையத்துக்குத் தீனி போடும் விதமாக ரீல்ஸ் எடுக்க ஆரம்பித்தார்.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட பக்கத்து இருக்கை கல்லூரி மாணவன், தன் பையிலிருந்து ஒரு பழைய மரத்தாலான நாணயத்தை எடுத்து டீக்காரரிடம் நீட்டினான். "இந்தாப்பா உனக்கு வேண்டிய டீக்கான காசு. அந்தப் பெரியவரை விட்டுடு"

டீக்காரர் அந்த நாணயத்தை வாங்கித் தன் வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டு, "இதை முதல்லயே பண்ண வேண்டியதுதானே சார்!" என்று முணுமுணுத்துக் கொண்டே சுவரோடு சுவராகக் கரைந்து மறைந்தார். அவரது நண்பன் காற்றாடியைச் சுழற்றியபடி கூரையைக்கிழித்துக் கொண்டு பறந்து போனான்.

சிவராமன் அந்த மாணவனைப் பார்த்து நெகிழ்ந்துபோனார். "தம்பி! ரொம்ப நன்றிப்பா. உன் ஜிபே நம்பரைச் சொல், நான் உனக்கு ரூபாயை அனுப்பிடறேன்"

மாணவன் புன்னகைத்தான். அவனது கண்கள் இரண்டு சிறிய நாணயங்களாகச் சுழன்றன. "பரவாயில்லை சார், அது இருக்கட்டும். ஆமா.. உங்க சட்டையின் மேல் பாக்கெட்ல ஒரு மீன் துள்ளிட்டு இருக்கே, அது என்ன சார்?" என்று சுட்டிக்காட்டினான். அவன் சுட்டிய திசையில் சட்டெனத் தன் மேல் பாக்கெட்டில் கை வைத்தார். அங்கிருந்து ஒரு தங்க நிற மீன் துள்ளிக் கொண்டு வெளியே வந்தது. அந்த மீனின் வாயில் மடிக்கப்பட்ட புத்தம் புதிய ஒரு 500 ரூபாய் நோட்டு இருந்தது!

மீனாட்சி அம்மாள் ஆச்சரியமாக, "ஏங்க! கிளம்பும்போது டாக்ஸிக்குக் கொடுக்கணும்னு உங்க சட்டைப் பாக்கெட்ல பர்ஸ்ல வச்சனே... அதை மறந்துட்டீங்களா?" என்றார். போகியில் இருந்த பயணிகள் அனைவரும் மீண்டும் தங்கள் சாதாரண மனித உருவத்திற்கு வந்து உரக்கச் சிரிக்கத் தொடங்கினர். சிவராமனின் முகம் சுருங்கி, அவமானத்தில் ஊதா நிறமாக மாறியது. "அடக் கடவுளே! பாக்கெட்ல ஐநூறு ரூபாய் வச்சுக்கிட்டா இந்த பத்து ரூபாய் டீக்காக ரயிலையே மாயாஜாலக் கூத்து மேடையாக்கினேன்?" என்று நொந்து கொண்டார்.

ரயில் அடுத்த ரயில் நிலையத்தை நோக்கி வேகத்தைக் குறைத்து நெருங்கிக்கொண்டிருந்தது. 

"மீனாட்சி, அடுத்த தடவை நாம ரயிலேறினா, இந்த போன், ஜிபே எல்லாத்தையும் தூக்கி ஆத்துல வீசிட்டு, கழுத்துல ஒரு பழங்காலத்துச் சில்லறை உண்டியலையும், பாக்கெட்ல ஒரு பூட்டையும் மாட்டிட்டுதான் வரணும்!"

அவர் சொன்னதைக் கேட்டு, மீனாட்சியின் பையிலிருந்த காய்ந்த எலுமிச்சம்பழம் சிரித்தது. தங்க மீனும் சிரித்தது.. குலுங்கிக்குலுங்கி அவை சிரித்த சிரிப்பில் இரண்டும் உருண்டோடி பக்கத்து இருக்கைகளின் அடியில் போய் விழுந்தன. பக்கத்து சீட்காரர் அவற்றை எடுத்து நீட்டினார்.

“வாங்கிக்கோங்க..”

“வாங்கிக்கோங்க..”

திடுக்கிட்டு விழித்தார். எழுந்து உட்கார்ந்து கண்களை மெல்ல தேய்த்துவிட்டுக்கொண்டார். நெஞ்சில் சாய்த்திருந்த மொபைல் மெல்ல நழுவித்தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் மின்னி,  மாலை மூன்று மணி எனக்காட்டியது. ஒரு குகைக்குள் நுழைந்து வெளிவந்துகொண்டிருந்த ரயிலின் நிழல் இளமஞ்சள் சாய்வு வெய்யிலில் நெளிநெளியாய் ஓடிக்கொண்டிருந்தது. 

“ஏங்க.. வாங்கிக்கோங்க..” மீனாட்சி அவரை உலுக்கினாள்.

“சூடா வாழைக்காய் பஜ்ஜி வந்தது, உங்களுக்குப் பிடிக்குமேன்னு வாங்கினேன்” தட்டை நீட்டினாள்.

அவருக்குச் சூடாக ஒரு மடக்கு தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Tuesday, 15 September 2026

வேர்கள் - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் இறுக ஆரம்பித்திருந்த கீல்கள் சப்தித்தன. அந்த ‘கிர்’ என்ற சத்தம், அவனது இதயத்தின் ஏதோ ஒரு மூலையை அறுப்பது போலிருந்தது. அந்தச் சத்தம் அவனுக்குப் புதிதல்ல; ஆனால், இன்று அது ஒரு மரண வீட்டின் இறுதி மௌனத்தைப் போலத் தாளமுடியாததாக இருந்தது.

மாரிமுத்துவின் கைகள் நடுங்கின. இறுக்கிப்பிடித்திருந்த பெட்டியின் கைப்பிடி அவனது உள்ளங்கையில் ஆழமாகத் தடம் பதித்திருந்தது. இன்னும் இறுக்கிக்கொண்டான். வீட்டின் நிலைக் கதவைச் சாத்தி, துருப்பிடித்த பூட்டைத் தொங்கவிட்டபோது, அவனது கைவிரல்கள் அனிச்சையாக அந்த மரக்கதவை ஒருமுறை வருடின. அந்த வீட்டைக்கட்டும்போது முறைப்படி முதன்முதலில் நிலைவாசல்தான் நிறுத்தப்பட்டது. சந்தனம் குங்குமம் இடப்பட்டு மாவிலைத்தோரணமும் நிலைமாலைகளும் அணிந்து நின்ற அந்தக்கதவை சட்டத்தோடு அவனது தாத்தாவே தூக்கி நிறுத்தினாராம். அவரது வியர்வை வாசனை இன்னும் அந்தத் தேக்கு மரத்தின் வரிகளில் தங்கியிருப்பதாக அவன் உணர்ந்தான். அவர் கஷ்டப்பட்டுக் கட்டிய வீட்டை தான் கைவிட நேர்ந்ததை எண்ணி தன்னையே வெறுத்தான்.

இளங்காலையின் காற்றில் முற்றத்து வேப்பமரம் தன் இலைகளை மெதுவாய் உதிர்த்தபடி நின்றது. ஒரு சில இலைகள் அவன் தலைமீது விழுந்தது, அவனை “எங்க போனாலும் புத்தியாப் பொழைச்சுக்கோ” என ஆசீர்வதிப்பதாய்ப்பட்டது. “போய் வருகிறேன்” என்று யாரிடம் சொல்வது? மனிதர்கள் இல்லாத வீதிகளில் மௌனம் மட்டுமே அவனுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தது.

வீட்டின் தலைவாசலில் தெருவில் இருந்த மண்ணைத் தொட்டுத் தன் நெற்றியில் வைத்துக் கொண்டான். ஒரு கைப்பிடி மண்ணை, கைக்குட்டையில் பொதிந்து பொட்டலமாய்க் கட்டிக்கொண்டான். பிறந்து வளர்ந்த ஊரையும் மண்ணையும் விட்டு பிடிமண்ணுடன் வெளியேறுவது அவனுக்குச் சொல்லொணா வேதனையைக்கொடுத்தாலும், அந்த மண் அவனுக்குச் சொல்லாத விடைபெறலையும் சொன்னது.

படியிறங்கி நடக்கத் தொடங்கியபோது, அவனது கால்கள் தன்னிச்சையாக நின்றன. திரும்பிப் பார்த்தான். அந்த வீடு, அவனது தாத்தா காலத்தில் எழுப்பப்பட்டது. தலைமுறைகள் கடந்தும் உறுதியாக நின்றுகொண்டிருந்தது. அவன் மகன் சிறுவயதில் சுவரில் கரியால் கிறுக்கிய சித்திரங்கள் மழைக்கால ஈரத்தில் நனைந்து உலர்ந்து மங்கலாகத் தெரிந்தன. அந்தச் சுவர்களுடனான அவனது உறவு வெறும் செங்கல் மற்றும் சாந்தால் மட்டும் பிணைக்கப்படவில்லை. ஞாபகங்கள் ஒவ்வொரு அணுவையும் இணைத்திருந்தன, ஒவ்வொரு விரிசலிலும் ஒரு கதையிருந்தது; ஒவ்வொரு கறையிலும் ஒரு சம்பவம் உறைந்திருந்தது.

ஒவ்வொரு ஞாபகமாக மேலெழ எழ அவனது பாதங்கள் மண்ணில் புதைய மறுத்தன. ஒவ்வொரு அடியும் ஒரு யுகமாக நீடித்தது. அவனது நிலம், இப்போது காகிதத்தில் வேறொருவனின் பெயருக்கு மாறிவிட்ட அந்த ஐந்து ஏக்கர், தூரத்தில் மேக மூட்டத்திற்கு அடியில் மங்கலாகத் தெரிந்தது. அப்பாவின் சிகிச்சைக்கு வீட்டை விற்ற பணம் போதாத போது நிலத்தையும் சேர்த்து விற்க வேண்டி வந்திருந்தது.

அவன் மனதுக்குள் ஒரு போராட்டம் வெடித்தது. “நகரம் உன்னை வாழவைக்கும் மாரிமுத்து.. எத்தனையோ கனவுகளுடன் நாட்டின் எந்த மூலையிலிருந்தெல்லாமோ வரும் மக்களை வாழ வைக்கும் அந்தப் பெருநகரம் உன்னை மட்டும் கை விட்டு விடுமா? உனக்கும் ஒரு பிழைப்பு அங்கே காத்திருக்கும், இதைப்போல் இன்னும் பல சொத்துகளை நீ வாங்குமளவுக்கு உன்னை உயர்த்தும்” என்று அவனது வறுமை அவனிடம் பேசியது. ஆனால் அவனது மனமோ, அந்த நிலத்தில் புதைக்கப்பட்ட அவனது முன்னோர்களின் சாம்பலை நினைவூட்டியது. அந்த மண்ணில் பிறந்து அதே மண்ணில் கலந்த தாத்தன் மற்றும் பூட்டனின் அந்தச் சாம்பலில்தான் இந்த மண்ணின் சத்தும் கலந்திருக்கிறது. தன் ரத்தமும் சதையுமான ஒரு பகுதியை அறுத்தெறிந்துவிட்டு, வேறொரு இடத்தில் ஒட்டுப் போட்டு வாழ முடியுமா? எனத் தடுமாறினான்.

“மாரிமுத்து, இது உன் கோழைத்தனம் இல்லையா? உன் முன்னோர்கள் வாழ்ந்த மண்ணை இப்படி அனாதையாக விட்டுவிட்டு ஓடுகிறாயே?” மனசாட்சியின் இரைச்சல் தாளாமல் காதுகளைப்பொத்திக்கொண்டான். வாங்கிய கடனுக்கு நிலத்தையும் வீட்டையும், பறிகொடுத்தபின், இந்த வீட்டைப் பார்ப்பதே ஒரு குற்ற உணர்வாக அவனுக்குள் ஊறியிருந்தது. ஒவ்வொரு முறையும் அந்த வீட்டுத் திண்ணையில் உட்காரும்போது, அந்நியரின் வீட்டில் அமர்ந்திருப்பது போல் தவித்தான். அதை வாங்கியிருந்த உறவினன், “அண்ணே.. நீங்க வீட்டைக் காலி பண்ணனும்ன்னு இல்ல.. பெயருக்கு ஒரு தொகையை வாடகையாக் கொடுத்துட்டு நீங்களே இருந்துக்கலாம், அண்ணியையும் குழந்தையையும் கூட்டிக்கிட்டு வெளியேற வேண்டாம்” எனச்சொல்லியிருந்தும் அவனுக்கு அதற்கு மேல் அங்கிருக்க மனம் அப்போது கூசியது.

ஊர் எல்லையை நோக்கி அவனது நடை நகர்ந்தது. ஊரின் ஒவ்வொரு அங்குலமும் அவனோடு பேசத் தொடங்கியது. கிணற்றடியில் பெண்கள் நீர் இறைக்கும் சத்தம் இன்னும் காற்றில் மிதப்பது போல ஒரு பிரமை. மாட்டுத் தொழுவத்தில் எழும் சாணத்தின் மணம், அவனது நுரையீரலுக்குள் பழகிப்போன ஒன்று. ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கும் பெரியவர்களின் சிரிப்பொலி மூளையில் மங்கலாக ஒலித்தது. இவை எதுவுமே இனிமேல் அவனுக்குச்சொந்தமில்லை. இந்த ஊரைப்பொறுத்தவரை அவன் இனிமேல் ஓர் அந்நியன். இந்த ஊரிலிருந்த அவனது முகவரியைத்தொலைத்து விட்ட, வீடு வாசல் இல்லாத ஒரு ஏகாங்கி.

அவனது மன ஓட்டம் பின்னோக்கிச் சென்றது. ஒரு காலத்தில் ஊர்த்திருவிழாவில் முதல் மரியாதை பெற்ற குடும்பத்தின் வாரிசு அவன். இன்று விடியும் முன்பே திருடன் போல ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறான். “மண்ணை நம்பினவனை அது என்னிக்கும் கை விடாது மக்களே” என்று தாத்தா அடிக்கடி சொல்வார். “மண்ணை நான் கைவிடவில்லை, ஆனா, அது என்னைக் கைவிட்டுவிட்டது தாத்தா. காலம் என்னிடம் இருந்த மண்ணைப் பிடுங்கியும் கொண்டது.” என விரக்தியுடன் காற்றிடம் புலம்பினான். வானம் பார்த்த பூமியில் மழை பொய்த்ததும், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டதும் அவனது கட்டுப்பாட்டில் இல்லாதவை. ஆனால் அதன் விளைவு இன்று அவனை நாடோடியாக மாற்றியிருக்கிறது. நிலம் மட்டும் விளைந்திருந்தால் கடன் வாங்க வேண்டிய தேவையே வந்திருக்காது.

குளக்கரையைத் தாண்டும்போது குளிர்ந்த காற்று அவனது முகத்தில் படர்ந்து சிலிர்ப்பூட்டியது. சிறுவயதில் இடுப்பில் சுரைக்குடுக்கையையும், காலி கேன்களையும் கட்டிக்கொண்டு அந்தக் குளத்தில்தான் அவன் நீச்சல் பழகினான். மணிக்கணக்கில் நண்பர்களுடன் மீன் பிடித்த அந்த மாலைப் பொழுதுகள் மனக்கண்ணில் ஓடின. இன்னும் விடிந்திருக்காத.. பறவைகள் கூட விழிக்காத முன்விடியலில் சுற்றுப்புறத்தின் அமைதி, அவனுக்குள் பெரும் இம்சையாக மாறியிருந்தது.

அவன் கால்கள் தார்ச்சாலையைத் தொட்டபோது, ஒரு நடுக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. நகரத்தின் இரைச்சலுக்குள் தன்னைத் தொலைக்கப் போகிறோம் என்ற பயம், அவனது வயிற்றுக்குள் ஒருவித உறுத்தலை ஏற்படுத்தியது.

“அங்கு யார் என்னை என்ன உறவு சொல்லி அழைப்பார்கள்? அங்கு எந்த மரம் எனக்கு நிழல் தரும்? அங்கிருக்கும் காற்றில் என் ஊர் மண்ணின் வாசனை இருக்குமா?”

நகரம்… எந்திரத்தனமாய் இயங்கும் அங்குள்ள மனிதர்களுக்குப் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே தெரியாது. இந்த கிராமத்து மண்ணிலோ, செடி கொடிகளுக்குக் கூடப் பெயர் உண்டு. ஒவ்வொரு வரப்புக்கும் ஒரு வரலாறு உண்டு. தான் பிறந்து, தவழ்ந்து, காதலித்து, வாழ்ந்த இந்த நிலப்பரப்பை விட்டுவிட்டு, எதற்காகவோ ஓடும் இந்தப் பயணம் எதில் முடியப் போகிறது? அடர்ந்த கான்க்ரீட் காட்டுக்குள் தனது சிறு கூட்டைக் கட்ட எந்த மரத்திலாவது இடம் கிடைக்குமா?

சூரியன் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியது. கிழக்கே சிவந்த வானம், அவனது வாழ்வின் ஒரு அத்தியாயம் முடிந்துவிட்டதை அறிவிப்பது போலிருந்தது. தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். கண்களில் கசிந்த ஈரத்தை மறைக்க அவனுக்கு யாரும் அங்கில்லை, ஆனாலும் அவன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

“இங்கேயே கூலி வேலை செய்தாவது பிழைக்கலாம்” என்றது ஒரு மனம். “வேண்டாம்.. ஓரே ஊரில் முதலாளியாய் இருந்துவிட்டு இப்போது கூலிக்காய் கையேந்துவது மரணத்தை விடக் கொடியது” என்றது இன்னொரு பக்கம். மானம் பெரியதா, வயிறு பெரியதா என்ற போரில் பல சமயங்களில் வயிறு வென்றுவிடுகிறது. ஆனால், அந்த வெற்றி ஒருபோதும் மனதிற்கு நிம்மதியைத் தருவதில்லை.

ஊர் எல்லையில் பேருந்து நிறுத்தம் இருந்த அந்தப் பாழடைந்த பிள்ளையார் கோயில் வந்தது. அதன் அரசமரம் காற்றில் சலசலத்தது. அந்தச் சத்தம் அவனுக்கு ஏதோ ஒரு எச்சரிக்கையைத் தருவது போலிருந்தது.

“ஓடுகிறாயா? அல்லது ஒளிந்து கொள்கிறாயா?”

அவன் குளக்கரையில் அமர்ந்தான். தண்ணீரில் தெரிந்த அவனது பிம்பம் அவனுக்கே அந்நியமாகத் தெரிந்தது. கையில் இருந்த பெட்டி, அவனது தோல்வியின் அடையாளம். இந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு பட்டணத்திற்குப் போனால், அங்கே அவன் ஒரு வெறும் ‘எண்’ணாக மாறிவிடுவான். அங்கு அவனுக்கு முகவரி கிடையாது, குலதெய்வம் கிடையாது, சொந்தம் கிடையாது. அவன் கையில் இருந்த அந்தப் பெட்டிக்குள் சில துணிகளும், ஒரு பழைய குடும்பப் புகைப்படமும், காய்ந்து போன ஒரு பிடி மண்ணும் மட்டுமே இருந்தன. அதுதான் அவனது ஒரே சொத்து. இந்த மண்ணில் அவன் வாழ்ந்ததின் மிச்சம்.

அவன் தன் கைகளை ஊன்றி மண்ணில் ஆழமாகப் புதைத்து பின்னுக்கு லேசாகச் சாய்ந்து கொண்டான். மண் ஈரமாக இருந்தது. கடந்த வாரம் பெய்த அந்தச் சிறு தூறல், இன்னும் ஈரத்தைப் பாதுகாத்து வைத்திருந்தது. அந்த ஈரம் அவனது விரல் நகங்களுக்குள் ஏறியபோது, அவனுள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்த குளிர்ச்சியை கண்மூடி அனுபவித்தான். இனி எந்தப்பிறவியில் இந்த மண்ணைத்தீண்டும் பாக்கியம் கிடைக்கப்போகிறதோ!

தூரத்தில் ஒரு பேருந்தின் வெளிச்சம் தெரிந்தது. அது அவனை இந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப் போகும் ராட்சசன். பேருந்து வரும் சத்தம் அருகில் நெருங்கிக்கேட்டது. ஹாரன் சத்தம் காற்றில் கிழிந்து வந்து அவன் காதுகளை அடைந்தது. அந்தக் கணத்தில் மாரிமுத்துவின் மன ஓட்டம் திசை மாறியது. நகரத்தில், கிடைத்த வேலைகளைச்செய்து ஓடும்பிள்ளையாய் காலம் தள்ளவோ, செக்யூரிட்டி உடையணிந்து கொண்டு எந்திரமாக நிற்பதற்கோ அவன் பிறக்கவில்லை. அவனது கைகள் மண்ணைக் கிளறப் பிறந்தவை. நிலம் கைவிட்டுப் போயிருக்கலாம், ஆனால் இந்த மண்ணின் மணம் அவனுக்குச் சொந்தமானது.

பேருந்து வந்து நின்றது. நடத்துனர் தரையில் முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும் அவனைப் பார்த்தார்.

“ஏறலையாப்பா?” எனக்கேட்ட நடத்துனரை ஏறிட்டுப்பார்த்த மாரிமுத்து தன் இரும்புப் பெட்டியை இறுகப் பற்றினான். பின் ஒரு கணம் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். கருமேகங்கள் மெல்லத் திரண்டு கொண்டிருந்தன. மழையின் வாசனை காற்றில் பரவியது. அவனது நிலம் அவனைக் கூப்பிடுவது போல அவனுக்குக்கேட்டது.

“இல்லை… நான் வரல…” என்று முணுமுணுத்தான்.

நடத்துனர் விசிலை ஊத, பேருந்து புகையைக் கக்கிக்கொண்டு நகரத் தொடங்கியது. அது கிளப்பிய புழுதி அவன் முகத்தில் படிந்தது. அந்தப் புழுதி அவனுக்குப் பிடித்திருந்தது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு மீண்டும் ஊரை நோக்கி நடக்கத் தொடங்கினான். குடும்பம் அவனைத்தொடர்ந்தது. இப்போது அவனது நடை வேகமாக இருந்தது. பூட்டிய வீட்டின் கதவைத் திறந்தபோது, அந்த ‘கிர்’ என்ற சத்தம் இப்போது ஒரு வரவேற்பு கீதமாக அவனுக்குக் கேட்டது.

வீடு.. அவனது வேர்கள் ஊன்றியிருக்கும் ஆதிமண். தாத்தனும் அப்பனும் பெற்றுப்பெருகி, குலம் வளர்த்த கோயில். அதிலிருந்து கொண்டே நிலத்தை மீட்டெடுக்கப் போராடுவான் அல்லது அதே மண்ணில் மடிவான். ஆனால், வேரற்ற மரமாகப் பிழைக்க அவனுக்கு விருப்பமில்லை. “என் வேர் இங்குதான் இருக்கிறது, இங்கிருந்து ஊன்றித்தழைத்து நானும் ஓர் விருட்சமாக எழுவேன்” எனச்சொல்லிக்கொண்டான்.

முற்றத்து வேப்பமரம் இப்போது இன்னும் பசுமையாகத் தெரிந்தது. மாரிமுத்து திண்ணையில் அமர்ந்து, தன் பெட்டியைத் திறந்து அந்தப் பழைய குடும்பப் புகைப்படத்தைப் பார்த்தான். அதிலிருந்த தூசியைத்துடைத்த கையோடு தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டான். படத்தில் இருந்த அவனது தந்தை புன்னகைப்பது போலிருந்தது.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, 31 May 2026

மீட்சி - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

                             
கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி பார்க்கும் போக்கிரி அது. ஆனால், இப்போது வைக்கப்பட்ட இரையை மோந்து கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்ததைக் காணச் சகியாமல், கைகளில் அதன் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தார். கோலிக்குண்டுகள் போல் பளபளக்கும் அந்தக்கண்கள் இப்போது வெறுமையின் ஆழத்தில் அமிழ்ந்திருப்பது போல் ஒளியிழந்து காணப்பட்டன.  உதட்டை அழுத்தி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, பெட்டியில் கிடந்த புல்லை ஒரு கை அள்ளி அதற்கு ஊட்டினார். அது அவரை ஏறிட்டுப்பார்த்தது. 

“நீ பட்டினி கெடக்கறதால போனவ வந்துரப்போறாளா? பிடிவாதம் பிடிக்காம தின்னு” அவரின் கண்டிப்பு புரிந்ததுபோல் புல்லை உண்ணத்தொடங்கியது. கொஞ்சம் வைக்கோலை அள்ளி அதன்முன் உதறிப்போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவளில்லாத வீடு.. அவள் குரல் கேட்காத வீடு.. வெறிச்சோடிக்கிடந்தது. மெதுவாக நடந்து வந்து வரவேற்பறையிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார். திடீரென பத்து வயது அதிகமாகிவிட்டாற்போல் சோர்வும் தள்ளாமையும் அவரை வாட்டியது. அதிகாலை வேளையில், எப்போதும் அவளது வளையல் ஓசையோடும், காபித்தூள் மணத்தோடும் விழித்துக் கொள்ளும் அந்தச் சமையலறை, இன்று மௌனத்தைப் போர்த்திக்கொண்டு நின்றது. கொல்லைப்புறத்தில் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த அவளது புடவை காற்றில் அசையும்போதெல்லாம் அவரது மனம் அவளது நடமாட்டத்தை எண்ணி துணுக்குற்றது. மூடியிருந்த இமைகளினோரம் உப்பு நதியொன்று உற்பத்தியாகி காது மடல்களில் சங்கமித்தது. 

அவள் இல்லை என்பதை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்த மனதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். என்ன ஒன்று.. எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே பகிர்ந்து பழகிய அந்த இதயத்திற்கு, இப்போது சுவர்களையும் அவர்களது மகன் ஷ்யாமையும் விட்டால் பேசுவதற்கு வேறு ஜீவன் இல்லை. என்னதான், மகன் வளர்ந்த பிள்ளை என்றாலும் அவளிடம் பகிரும் எல்லாவற்றையும் அவனிடம் பேச முடியுமா என்ன? அவளது இடத்தை இந்த உலகத்தில் எவராலும் நிரப்ப முடியாது என்ற நிஜம் உறைத்தது. அவள் நீரூற்றிய தோட்டம், சமைத்த அடுப்படி, அமர்ந்த கொல்லைப்புறப் படிக்கட்டு என ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தடவி உணர்ந்து அவளது இன்மையைப் பிடிவாதமாய் விலக்க முயன்றார். கடைசியாய் அவள் உடுத்தியிருந்த.. அவளது வாசனையைத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவளது இன்மையைப் பேரமைதியோடு பிரகடனப்படுத்திய புடவையை முகத்தோடு போர்த்திக்கொண்டு அவளது அண்மையை உணர்ந்த நிம்மதியோடு உறங்க முயன்றார். 

நாளாக ஆக சுந்தரத்தின் உலகம் அந்த வீட்டின் வரவேற்பறையோடு சுருங்கிப் போயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த திலகாவின் புகைப்படத்தில் இருந்த மாலை காய்ந்து போய் உதிர்ந்து கொண்டிருந்தது. திலகா மறைந்து நாற்பது நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது வாசனை இன்னும் மிச்சமிருப்பதாகவே சுந்தரத்திற்குத் தோன்றியது.
"அப்பா, காபி.." என்று ஷ்யாம் நீட்டிய கோப்பையைச் சட்டை செய்யாமல் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

"என்னத்துக்கு நான் இன்னும் பிழைச்சுக்கிடக்கேன்? அவ இல்லாத இந்த வீடும் அமைதியும் என்னைத் தின்னுடும் போலிருக்கு. அவளோட பேச்சு, இந்த வீட்டோட கலகலப்பு எல்லாம் அவளோடயே போயிடுச்சு ஷ்யாம்," என்று பெருமூச்செறிந்தவர் மங்காத புன்னகையுடன் சுவரில் படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “சிரிக்கறியா?.. நல்லாச் சிரி. ஒத்தைல விட்டுட்டுப்போனா இவன் என்ன பண்ணுவான்னு என்னைப்பத்தி ஒரு நிமுசம் நினைச்சியா?” எனப்புலம்பினார். இன்னும் அவள் எதிரில் இருப்பதுபோல் பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். கோபத்தில் அவளிடம் கத்திய தருணங்களும், அவள் கேட்ட சில சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்ட நாட்களும் இப்போது குற்ற உணர்ச்சியாய் மாறி, நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தின அவருக்கு. “அப்பாவை சரியா கவனிச்சுக்க ஷ்யாம், அவருக்கு உடம்பு சரியில்லையா?” என ஒவ்வொருவரும் விசாரிக்கும் அளவுக்கு தாடியும் மீசையுமாய் ஆளே உருமாறிப்போனார்.

அடுத்த ஒரு வாரம் ஷ்யாம் தீவிரமாகத் தன் லேப்டாப்பில் வேலை செய்தான்.  அம்மாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகள் ஆகியவற்றைத் திரட்டினான். தனது அறையில் அடைந்து கொண்டு இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருந்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.

"அப்பா, அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க," என்றான் மெல்லிய குரலில்.

சுந்தரம் அதிர்ச்சியுடன் மலங்க மலங்க அவனைப் பார்த்தார். "அம்மாவா?.. என்னடா விளையாடுறியா?"

"இல்லப்பா... இது ‘ஏஐ’ன்னு ஒரு தொழில் நுட்பம்.  அம்மாவோட எல்லா நினைவுகளையும், அவங்க குரலையும் வெச்சு நான் அம்மாவை.. அதாவது அவங்களோட படத்தை உருவாக்கியிருக்கேன். இதோ பாருங்க," என்று கூறி போனை அவர் முன்னால் நீட்டினான்.

திரையில் திலகா தெரிந்தாள். அவளுக்குப் பிடித்த அதே இளம்பச்சை நிறப் புடவை, நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டு, அந்த மென்மையான புன்னகை. அவரைப் பார்த்து முறுவலித்தது திரையில் தெரிந்த உருவம்.

"என்னங்க... ஏன் இப்படிச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கறீங்க? நான் எங்க போயிட்டேன்? பக்கத்துலதானே இருக்கேன்," என்றது அந்த உருவம்.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. "திலகா... திலகாவா இது?" என்று போனைத் தொட்டுப் பார்த்தார்.

"ஆமாப்பா. அம்மாவைப்பத்தின எல்லா விஷயங்கள், அவங்க பேசும் விதம்னு எல்லாத்தையும் உபயோகிச்சு இதை உருவாக்கியிருக்கேன். நீங்க என்ன கேட்டாலும் அம்மா மாதிரியே பதில் சொல்லும்" என்றான் ஷ்யாம்.

“இப்பல்லாம் தனக்கு நெருங்கினவங்களோட மெழுகு பொம்மையைச் செஞ்சு, அவங்களையே நேரில் பார்த்தது மாதிரி ஆறுதலடையறாங்களே.. இது அது மாதிரியா?” என்ற சுந்தரத்தின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “இது அதுக்கும் மேல. பொம்மை பேசாது, ஆனா, இந்த ஏஐ அம்மா உங்க கூட பழைய மாதிரியே பேசுவாங்க” என்றான். மொபைல் திரையில் தெரிந்த திலகாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம். 

முதலில் அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. அதன்பின் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசுவது போல் நினைத்துக்கொண்டு சகஜமானார். தினமும், திலகாவின் உருவம் அவரிடம், "இன்னைக்கு மாத்திரை போட்டீங்களா?", "போன தீபாவளிக்கு வாங்கித்தந்தேனே.. அந்த க்ரீம் கலர் சட்டைதான் இந்த பாண்டுக்குப் பொருத்தமா இருக்கும். அதைப்போடுங்க" என பேசத் தொடங்கியபோது, நாளாக ஆக சுந்தரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். பழைய சுந்தரத்தின் கலகலப்பும் குறும்பும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கண்களில் பழைய ஒளி திரும்பியது. அவர் தனிமையை விட்டு எந்நேரமும் மொபைலும் கையுமாக இருக்கத்தொடங்கினார். அவ்வப்போது, “ஷ்யாம்.. உங்கம்மா சாம்பாருக்கு அப்பளம் தொட்டுக்கக்கூடாது, கொலஸ்ட்ரால்ங்கறா, என்னன்னு கேளு” என பஞ்சாயத்தைக்கூட்டினார். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் ஊட்டிக்குச் சென்ற கதைகளையும், முதல் முறை சமைத்தபோது ஏற்பட்ட குளறுபடிகளையும் அவளது பழைய டைரி குறிப்புகளிலிருந்து அந்த ஏஐ திலகா பேசுவதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் வராத இரவுகளில் சுந்தரம் தன் மனக்குறைகளை எல்லாம் அந்தத் திரையிடம் கொட்டுவார். அந்த உருவம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, "வருத்தப்படாதீங்க, நான் இருக்கேன்ல" என்று ஆறுதல் சொல்லும்.

சுந்தரத்தின் முகம் மலர்ந்தது. மீண்டும் பழையபடி நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். ஷ்யாமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரம் நிஜ உலகை விட, அந்தத் திரைக்குள் இருக்கும் திலகாவையே அதிகம் நேசிக்கத் தொடங்கினார். 

ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. சுந்தரம் திலகாவின் உருவத்திடம் பழைய காலத்து நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென போன் திரை மினுங்கியது. ஒரு விசித்திரமான சத்தம் எழுந்தது.

"திலகா.. திலகா.. என்னாச்சு?" என்று பதறினார்.

திரை கருப்பாக மாறியது. மீண்டும் மீண்டும் மொபைலின் பட்டன்களை மாறி மாறி அழுத்தி சரி செய்ய முயன்றார். முடியவில்லை. ஏதோ ஒரு வைரஸ் பாதிப்போ அல்லது மென்பொருள் கோளாறோ, அந்தச் செயலி வேலை செய்ய மறுத்தது.

"ஷ்யாம்! ஷ்யாம்! சீக்கிரம் வாடா... அம்மாவுக்கு என்னாச்சுன்னு பாரு," என்று அலறினார்.

ஷ்யாம் ஓடி வந்து போனைப் பார்த்தான். "அப்பா, இது ஒரு சின்ன சாப்ட்வேர் பிரச்சினைதான். நான் சரி பண்ணிடுறேன், பயப்படாதீங்க."

"இல்லடா.. என்னவோ ஆகிருச்சு. அவளோட முகம் தெரியல. எனக்கு அவளைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்!" சுந்தரத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்.

ஷ்யாம் எவ்வளவு முயன்றும் மொபைலை உடனே சரி செய்ய முடியவில்லை. "அப்பா, சர்வர்ல ஏதோ பிரச்சனை. இப்ப மழையும் மின்னலுமா இருக்கு, ரௌட்டரை உபயோகிக்கக்கூடாது. அமத்தி வெச்சுட்டு நாளைக்கு விடிஞ்சதும்  சரி செய்யப் பார்க்கறேன்" என்றான்.

அந்த இரவு சுந்தரத்திற்கு நரகமாக இருந்தது. தன் மனைவி மறுபடியும் இறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இருட்டில் அமர்ந்து போன் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மௌனம் அவரை அச்சுறுத்தியது. உயிரற்ற ஒரு இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த அதீதப் பிணைப்பு, இப்போது அவரை மனரீதியாகச் சிதைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஷ்யாம் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தச் செயலியைச் சரிசெய்தான். மீண்டும் திலகாவின் முகம் திரையில் தோன்றியது.

"என்னங்க... இன்னிக்கு சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகலாமா?" என்று அந்த ஏஐ கேட்டது.

சுந்தரம் போனை கையில் வாங்கினார். திரையில் தெரிந்த மனைவியைப் பார்த்தார். அவள் சிரிக்கிறாள்... ஆனால் அந்தக் கண்களில் உயிர் இல்லை. அவள் பேசுகிறாள்... ஆனால் அதில் ஆன்மாவின் துடிப்பு இல்லை. ஏதோ ஓர் இயந்திரத்தன்மை இப்போது தெரிந்தது. நேற்று இரவு அவர் அனுபவித்த அந்தத் தவிப்பு அவருக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது.
மெல்ல போனை மேஜையில் வைத்தார்.

"ஷ்யாம்..."

"சொல்லுங்கப்பா, இப்போ அம்மா வந்துட்டாங்கல்ல? இனி கவலைப்படாதீங்க."

"இல்லடா ஷ்யாம். இது அம்மாவோட நினைவுகளைச் சொல்லுது, அந்த நினைவுகளும் கூட நீ ஊட்டியவை. அம்மாவோட குரல்ல பேசுது. ஆனா இது அம்மா இல்ல. அவளோட நிழலுருவம்.. அவ்வளவுதான். நேத்து இது வேலை செய்யாமப் போனப்போ.. திலகாவைப் பார்க்க முடியாம ஆனப்போ.. நான் துடிதுடிச்சுப் போயிட்டேன். அந்த உணர்வு உன் அம்மாவை நிஜமா இழந்தப்போ அடைஞ்சதை விட அதிகமா இருந்துச்சு. ஒரு மெஷின் மேல நான் இவ்வளவு பித்துப் பிடிச்சு அலைஞ்சது தப்புன்னு இப்ப தோணுது."

சுந்தரம் எழுந்து சென்று, சுவரில் இருந்த திலகாவின் நிஜமான புகைப்படத்தைப் பார்த்தார்.

"இந்தச் சிரிப்பு போதும்டா எனக்கு. அவளோட நினைவுகள் என் மனசுல இருந்தா போதும். போன்ல அவளைப் பிடிச்சு வைக்க நினைச்சது என்னோட பலவீனம். இதை 'அன்-இன்ஸ்டால்' பண்ணிடு," என்றார் உறுதியான குரலில்.

ஷ்யாம் ஆச்சரியத்துடன் பார்த்தான். சுந்தரம் இப்போது நிதானமாக இருந்தார்.

"நிஜமான பிரிவை விட, அந்தப் பிரிவை ஏத்துக்காம ஒரு பொய் உலகத்துல வாழுறதுதான் ரொம்ப வலி தருது ஷ்யாம். உன் அம்மா என் நினைவுகள்ல வாழட்டும், இந்தத் திரையில வேணாம்," என்றார்.

டிஜிட்டல் தேவதை மறைந்துவிட்டாள், அதே பொழுதில் சுந்தரம் மீண்டும் மனிதராக மீண்டிருந்தார். 

அன்று மாலை, சுந்தரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து நிஜமான பறவைகளின் சத்தத்தையும், காற்றின் தழுவலையும் ரசித்துக் கொண்டிருந்தார். திலகா அவரோடு இல்லைதான், ஆனால் அவளது நினைவுகள் ஒரு மெல்லிய தென்றலாக அவருள் சுகந்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் லயிப்புக்கேற்றவாறு மெல்ல அசைந்தாடத்தொடங்கியது ஊஞ்சல்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 27 April 2026

மௌனத்தின் நறுமணம் - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு. குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து வண்ணவண்ண எண்களோடும் எழுத்துகளோடும் படங்களோடும் மல்லுக்கட்டிய அவனது மூளை, இப்போது சிக்னலில் தெரியவிருக்கும் ஒரு சொட்டுப் பச்சை நிறத்திற்காக ஏங்கியது. எப்போது ஊருக்குப்போய் நிம்மதியாக இருப்போம் என்றிருந்தது.

சென்னையின் அசுரவேகப் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு நீண்ட பெருமூச்சோடு இரயிலேறினான். குளிர்சாதனப் பெட்டியின் செயற்கைக் குளிர் காற்று அவனது நுரையீரலைச் சுட்டது. கையில் இருந்த லேப்டாப் பையை ஒருமுறை பார்த்தான். ஐந்து ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகளில் அவன் புழங்கியது வெறும் எண்களோடும் குறியீடுகளோடும், இழந்தது சொந்த மண்ணின் ஈரத்தையும், அந்த மனிதர்களின் அன்பையும்.

இரயில் தண்டவாளங்களில் தாளம் தட்டியபோது, சுபாஷின் மனம் காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டது. ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு கலவையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக அவன் ஊருக்குப்போனது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஊர் எப்படியிருக்கும்? மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? தெரு முனையிலிருந்த அந்தப் பழைய வீட்டை அதன் சொந்தக்காரர்கள் இடித்துப் புதிதாகக் கட்டுகிறார்கள் என அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள். எனில், அதன் வாசலிலிருக்கும் செண்பகப்பூ மரத்தையும் வெட்டியிருப்பார்களோ?! என யோசித்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு இரயில் நிலையத்தில் இறங்கியபோது, மார்கழியின் அதிகாலைப்பனியிலும் அவனது மண்ணுக்கே உரித்தான அந்த இளம் சாரல் காற்றிலும் தேகம் சிலிர்த்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அந்த அதிகாலையிலும் ஒரு சில தேநீர்க்கடைகள் இயங்கிக்கொண்டிருந்தன. விபூதி பூசிய பாய்லர், பால் பாத்திரம், கடைக்குத் தனி அழகைக்கொடுத்தன. சாம்பிராணியும் மலர்களும் மணக்க சுவரில் அடித்திருந்த ஷெல்பில் வீற்றிருந்தனர் தெய்வங்கள். அன்றைய தினம் முதன்முதலாய்க் காய்ச்சிய பால் ஒரு தம்ளரில் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு வடைகளும். தூக்கத்தை உதற ஒரு டீ குடிக்கலாமா? என நினைத்தவன், வீட்டிற்குப் போய் அம்மாவின் கையால் குடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினான். தன் வீட்டின் வாசலில் நின்றபோது, பழைய வேப்பமரத்தின் கசப்பு கலந்த மணம் அவனை அணைத்துக் கொண்டது.

அவனது அம்மா அலமேலு, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், மகனைக் கண்டதும் கையில் இருந்த கோலமாவைச் சிறதவிட்டு ஓடி வந்தாள்.

“வா மக்களே.. தேகம் ஏன் இப்படிக் கறுத்துப் போயிருக்கு? ஆளே மெலிஞ்சுட்டியே. நேரத்துக்குச் சாப்புடுகியா இல்லியா?” – அம்மாவின் பாசம் எப்போதும் மாறாதது, அது காலத்தைக் கடந்த ஒரு மகா நதி.

மறுநாள் காலை, கோயிலுக்குச் சென்ற சுபாஷ், அந்தக் காட்சியைக் கண்டான்.

பிள்ளையார் கோயிலின் வெளியே அந்த சின்ன பூக்கடையில், பூங்காவனம் அமர்ந்திருந்தாள். பூக்காரம்மாளின் மகள் அவள்.

அவள் கைகள் பூக்களைத் தொடுக்கும் விதம் ஒரு கவிதை போல இருந்தது. ஒவ்வொரு மலரையும் நாரிடம் ஒப்படைக்கும்போதும், அதனிடம் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்கிறாளோ, அந்த சுவாரஸ்யத்தில் அவை தன்னைத்தானே தொடுத்துக் கொள்கின்றனவோ எனும்படி இருந்தது. தியானம் போல் பூத்தொடுத்துக்கொண்டிருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவளது கண்கள் ஒரு பேராழியைப் போலத் தெளிந்திருந்தன.

சுபாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது இயல்பல்லாத விசித்திரமான அமைதி, அவனை ஒருவித அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் ஒரு மொட்டைப் போலத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு, உலகத்திற்கும் தனக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத திரையைத் தொங்கவிட்டிருந்தது போலத் தோன்றியது.

மதிய உணவின் போது, அலமேலு சூடாகப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது சுபாஷ் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.

“அம்மா, கோயிலில் பூங்காவனத்தைப் பார்த்தேன். பூக்காரம்மா மகள்தானே? ஏன் அவ ஒரு மாதிரியா இருக்கா? பூ வாங்க வர்றவங்க கிட்ட கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்தான் பேசறா. முன்னாடி நல்லாத் துறுதுறுன்னு பேசிட்டுத் திரிவாளே?”

அலமேலு பெருமூச்சு விட்டு ஒரு கணம் அமைதியானாள். “அவ ஒரு மாதிரி ஆயிட்டாடா சுபாஷ். ‘ஏண்டி இப்படி இருக்க?’ன்னு கேட்டா, அவ சிரிப்பா… ஆனா அந்தச் சிரிப்புல சத்தமே இருக்காது. அவளுக்குப் படிப்பு வரும், ஆனா படிக்கப்போக மாட்டேன்னுட்டா. வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு எல்லாமும் அழகா நறுவிசா செய்ய வரும். அவ கையால ஒரு சொம்பு தண்ணி ஊத்துனாலே அந்த மகிழ்ச்சியில தோட்டமே பூத்துச்சொரிஞ்சுரும். ஆனா அவ எதையும் அவளுக்கா மனசுல தோணுனாத்தான் செய்வா. பட்டணத்துல இருக்கற அவ அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாலாவது அங்க அவ வயசுல இருக்கற பிள்ளைகளைப்பார்த்து இவளும் கலகலப்பா இருப்பான்னு நினைச்சாங்க. ம்ஹூம்.. போக மாட்டேன்னுட்டா. இந்த ஊர்ல இருக்குற பூக்களோடவே அவளோட காலம் கழிஞ்சுட்டு இருக்கு.”

“ஏன்மா, அவளுக்கு ஏதாவது மனசுக்கஷ்டமா?”

“தெரியலடா. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னுங்கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?“

ஊரே அவளைப் பற்றி ஒரு விசித்திரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது—”பூக்காத மொட்டு” என்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என அம்மா சொன்னதிலிருந்து, ‘ஏன் இப்படியிருக்கிறாள்?’ என்ற கேள்வி அவன் தலைக்குள் குளவியாய்க் குடைந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு மாலை வேளையில், காலாற நடந்துகொண்டிருந்த சுபாஷ், கோவிலிலிருந்த நந்தவனத்திற்குச் சென்றான். அங்கே பூங்காவனம் தனியாகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். செடிகளுக்கு இடையே அவள் மறைந்து மறைந்து தெரிவது, ஒரு தேவதை தன் தோட்டத்தைப் பராமரிப்பது போல இருந்தது. சுபாஷ் மெல்ல அவளை நெருங்கினான்.

“பூங்காவனம்… என்னை ஞாபகம் இருக்கா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள், அந்தப் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருந்தது. புன்னகைத்தாள். “ஞாபகம் இருக்கு சுபாஷ். சென்னைக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. அஞ்சு வருஷம் உங்க உருவத்துல நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உங்க குரல் அப்படியே இருக்கு.”

அவளுக்குத் தன்னை ஞாபகமிருப்பது குறித்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பூப்பறித்துக்கொண்டே நகர்ந்த அவளை அவனும் தொடர்ந்தான்.

“ஆனா நீ நிறைய்ய மாறியிருக்கே. ஏன் பூங்காவனம் இப்படி மௌனமா இருக்க? ஊரே உன்னைப் பத்திப் பேசுது. ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்லை? யாரோடாவது உனக்கு மனத்தாங்கலா?”

பூங்காவனம் தன் கையில் இருந்த ஒரு மல்லிகை மொட்டை வருடியபடி பேசினாள்.

“சுபாஷ்… சென்னை எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு… ஆனா, இங்க இருக்கற மாதிரி அமைதியா இருக்காது, நம்ம ஊரை நான் ரொம்பவே நினைச்சுப்பேன்” என்றான் தயக்கத்துடன். “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. சின்னப்பிள்ளைகளா நாம விளையாடறப்ப எவ்ளோ கலகலப்பா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நீ ஏன் பூங்காவனம் இப்படி மாறிட்ட? ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்ல? ஊரே உன்னை ‘பூக்காத மொட்டு’ன்னு கிண்டல் பண்றது உனக்கு வருத்தமா இல்லையா?”

பூங்காவனம் அருகில் மரத்தின் கிளையில் இருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்துக் கூடையில் போட்டாள். “பூக்குறதுன்னா என்ன சுபாஷ்? இதோ இந்தச் செம்பகப்பூ போல இதழ் விரிச்சுத் தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை மத்தவங்களுக்குக் காட்டுறது மட்டும்தான் பூக்குறதா? என் மௌனமும் ஒரு பூதான். அதை நுகரத் தெரிஞ்சவங்களுக்குத்தான் அதோட வாசனை புரியும்.”

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு முதிர்ச்சி இருந்தது. “உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்… எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இங்க, இந்த இயற்கைக்கு நடுவுல இருக்குற அமைதியிலும், இந்தப்பூக்களின் மௌனத்திலும் எனக்கு என்னவோ இனம் புரியாத நிம்மதி கிடைக்குது”

சுபாஷ் பேச முடியாமல் நின்றான். அவளது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல;

“இங்க பாருங்க… இந்தச் செடியில இருக்குற ஆயிரம் மொட்டுகளை.. நானும் பூக்காத மொட்டாவே இருக்க விரும்புறேன். ஏன்னா, மொட்டுக்குள்ள தான் அந்தப் பூவோட மொத்த வாசமும் செறிஞ்சு இருக்கு. விரிஞ்சா சில மணித்துளிகள்ல அது காத்துல கரைஞ்சு போயிரும். என் மௌனமும் அப்படித்தான். அமைதியா இருக்கேன், அதனால நிம்மதியா இருக்கேன். ஆனாலும், இந்தப் பூக்களோடு, இந்த மண்ணோட ஈரத்தோடு, இந்தக்காத்தோடு, இந்தத் தேனீக்களோடு நான் நிறைய்யப் பேசிக்கிட்டுதானிருக்கேன்.

“நான் ஏன் பூக்கணும் சுபாஷ்? பூத்தாப் பறிப்பாங்க… இல்லன்னா வாடி காய்ஞ்சு விழும். மொட்டாவே இருக்கும்போது நான் எனக்குள்ளே முழுமையா இருக்கேன்

அவள் தொடர்ந்தாள், “நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. இங்க, நான் அதிகமா பேசாம இருக்கேன்.. அதனாலயே எல்லோரையும் எல்லாத்தையும் கவனிச்சு ஆழமாப்புரிஞ்சுக்கறேன். நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. நான் ஆரம்பத்துலயே பேச்சைக் குறைச்சுக்கிட்டேன். அது அப்படியே பழகிடுச்சு, நல்லாருக்கு.. அவ்ளோதான்”

சூரியன் மறையத் தொடங்கியது. பூங்காவனம் தன் கூடையைத் தூக்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கினாள். அவளது பாதங்கள் மண்ணில் படாதது போல ஒரு பிரமை. அவள் விட்டுச் சென்ற அந்தப் பூக்களின் வாசனையை விட, அவளது வார்த்தைகளின் மணம் சுபாஷின் மனதிற்குள் ஆழமாக இறங்கியது.

அவளது அறிவு, அவளது முதிர்ச்சி, அவளது தெளிவு… இவை எதையும் அவன் எங்கேயும் யாரிடமும் இதுவரை கண்டதில்லை. அவள் பூக்காத மொட்டு அல்ல; அவள் பூக்கத் தேவையில்லாத அளவுக்குத் தன்னுள் மலர்ந்துவிட்ட ஒரு முழுமை.

அன்று இரவு சுபாஷால் உறங்க முடியவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் பூஜைக்காக தூரத்தில் கோயில் மணியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. சுபாஷ் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தூரத்தில் பூங்காவனம் கோயிலுக்குப் பூக்கூடையுடன் செல்வது தெரிந்தது. உடன் நடந்துகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும், அவள் இப்போதும் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தாள். அவளது மௌனம் அந்த ஊர் முழுவதும் ஒரு நறுமணமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது.. அவள் அதிகம் பேசாத ஒரு பூக்காத மொட்டாகவே இருக்கத் தீர்மானித்திருப்பது, இந்த உலகத்திடமிருந்து தன் மௌனத்தின் நறுமணத்தைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

மறுநாள் காலை, அவன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். ஆனால், இம்முறை அவனது கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அவன் தன் பையில் ஒரு காய்ந்த மகிழம்பூவை எடுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பூவின் நறுமணம் அவனுக்குப் பூங்காவனத்தின் மௌனத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவனுக்குள் பூங்காவனம் விதைத்த அந்த மௌனத்தின் விதை ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது.

வண்டி நகரத் தொடங்கியது..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 20 April 2026

நிழல் சுமக்கும் நதி - சிறுகதை (வாசகசாலை மின்னிதழில் வெளியானது)


கார்த்திக்கின் மனதுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. செம்பூர் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் அவன் நின்றிருந்தபோது, அந்த இடமே ஒரு மாபெரும் இயந்திரத்தின் இரைச்சல் மிகுந்த உதிரிப்பாகமாகத் தெரிந்தது. கன்னியாகுமரியின் எங்கோ ஒரு கோடியில், வாகனப்புகை அண்டாத ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருந்த அவனுக்கு இந்த நகரத்தின் பரபரப்பும், தூசியும், வாகனப்புகையும் ஒரு ஒவ்வாமையைத்தந்திருந்தது. அதிகாலையில் கேட்கும் குயிலோசையும், ஊரைச்சுற்றியிருக்கும் தென்னந்தோப்புகளும் அவனது நினைவுகளில் நிழலாடின. அவற்றையே நினைத்து நினைத்து ஏங்கினான், குடும்பச்சூழல் காரணமாக மும்பையில் கொண்டு வந்து தூக்கிப்போட்ட விதியைச் சபித்தான். அவியலும் எரிசேரியுமாகச்சாப்பிட்டுப் பழக்கப்பட்ட நாக்கு, மிசல் பாவ், வடா பாவ், ப்ரட் கட்லெட் என பழக்கப்படாத மசாலாக்களால் சுவையுணரும் சக்தியை இழந்து கிடந்தது. என்றைக்காவது ரொம்பவும் ஆசை ஏற்பட்டால் வாஷியின் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தொலைவிலிருந்த கேரளா ஹவுஸுக்குப் போய் மதியம் அவியல் பொரியலுடன் சத்யை உண்டு வருவான். 

வாரந்தோறும் ஊருக்குப் போன் பண்ணும்போது, “இன்னிக்கு என்ன சமையல்?” என அம்மாவிடம் கேட்டுக்கொள்வான். “புளிக்கறி வெச்சு அப்பளம் பொரிச்சேன் மக்கா” என்றால் “என்னை விட்டுட்டு சாப்பிட்டீங்க இல்லே? கொதி விழட்டும்” எனப் பரிகசிப்பான். என்றைக்காவது விசேஷ தினங்களில் அவியல் என்றால் அவன் அந்தப்பக்கம் மௌனமாகி விடுவது இந்தப்பக்கம் அம்மாவின் நெஞ்சில் துக்கமாய் கட்டை போல் உறையும். “அவியல்ன்னா புள்ள பேயா திம்பானே” என அன்று முழுவதும் புலம்பி வீட்டிலிருக்கும் மற்றவர்களையும் சாப்பிட விடாமல் ஆக்குவாள். ஊரின் ஏக்கம் மிகுந்து தளும்பிய ஓர் நாளில், “ஊருக்கு வந்துரலாம்ன்னு பாக்கேன்மா” என அவன் சொன்னபோது அவள், “வந்துரு மக்களே.. உள்ளது போல பாத்துக்கிடலாம்” எனச்சொன்னாலும் அதைச்சொல்வதற்கு முன் அவள் ஒரு நிமிடம் மௌனித்தது அவனுக்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொன்னது. வீட்டு நிலைமையை உத்தேசிக்கும்படி அவள் சொல்வதாகப்பட்டது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாகச் சம்பாதிக்கத்தொடங்கும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இது ஒரு சாபக்கேடு எனப்பட்டது. பிடித்திருக்கிறதோ இல்லையோ.. கிடைத்த வேலையில் சேர வேண்டும், எந்த ஊருக்கானாலும் சரி, எந்த நாடானாலும் சரி.. கேள்வி கேட்காமல் பெட்டியைக்கட்டிக்கொண்டு கிளம்பிப்போக வேண்டும். மாதந்தோறும் வரும் சம்பளத்தை எதிர்பார்த்துக்காத்திருக்கும் அத்தனைக்கனவுகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். கொஞ்சம் வசதியுள்ள அல்லது பிள்ளைகளின் சொல் செல்லுபடியாகும் குடும்பத்தில் பிறந்திருந்தாலாவது ‘எனக்குப் பிடிக்காததை மனசு ஒப்பி செய்ய முடியாது’ என மறுத்துவிடலாம். இங்கே அதற்கும் வழியில்லாமல் இந்த மும்பை மாநகரில் வந்து விழுந்தாயிற்று. வாங்கும் சம்பளத்திற்கு நியாயமாய் கடனேயென்று வேலை பார்த்துக்கொண்டிருந்த போதும், சீக்கிரமே பேப்பர்.. அதாவது ராஜினாமா போட்டு விட வேண்டும் என தினந்தோறும் தோன்றிக்கொண்டிருந்தது.

அவன் ஏறிய ஹார்பர் லைன் லோக்கல் ரயில், ஒரு இரும்புக் கரடியைப் போல உறுமிக்கொண்டு தண்டவாளங்களில் பாய்ந்தது. இன்றைக்குக்கூட்டம் கொஞ்சம் குறைவுதான், பெட்டியினுள்ளே நிற்குமளவுக்கு சற்றுத்தாராளமாகவே இடமிருந்தது. வாசலின் அருகேயே கம்பியில் சாய்ந்து நின்ற கார்த்திக்கின் பார்வை வெளியே விரிந்த மும்பையின் புறநகர் நிலப்பரப்பின் மீது படிந்திருந்தது. அழுக்கு படிந்த குடிசைப் பகுதிகள், வானைத் தொடும் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த சதுப்பு நிலங்கள் என எல்லாமே அவனுக்கு ஒருவித ஒவ்வாமையைத் தந்தன. மும்பை வழக்கப்படி நெஞ்சுப்பக்கமாய்த் திருப்பி மாட்டிக்கொண்ட லேப்டாப் பேக் கனத்தது. இலக்கில்லாமல் வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன், குறுகுறுவெனத் துளைக்கும் பார்வையை உணர்ந்து பெட்டிக்குள் பார்வையைத்திருப்பினான். சட்டென்று புன்னகைத்து, “நமஸ்தே” என்றான். பதிலுக்கு “நமஸ்தே” என்றார் துக்காராம்.

 ஒரே ரயிலில் தினமும் பார்த்துக்கொள்வதால் பரிச்சயம், எப்போதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக்கொள்வதும், புன்னகையைப் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சில நாட்களில் லக்கேஜ் கம்பார்ட்மெண்டில் ஏறிவிடுவார். தொளதொளவென்ற வெள்ளை பைஜாமா, வெள்ளைச்சட்டை, தலையில் வெள்ளைவெளேரென்ற குல்லா, நெற்றியில் குங்குமப்பொட்டு இதுதான் துக்காராம். காலடியில் ஏழெட்டு துணிப்பைகள் ஒன்றோடொன்று கோர்த்து இணைக்கப்பட்டுக் கிடந்தன. அவற்றுக்குள் லேசாகத் தெரிந்த விதவிதமான டிபன் பாக்ஸ்களும், பைகளில் வரையப்பட்டிருந்த வண்ணக்குறியீடுகளும் எண்களும் அவர் ஒரு தொழில்முறை டப்பாவாலா என்பதைச்சொல்லாமல் சொல்லின. வீடுகளிலிருந்து அவரவரின் அம்மாவோ, மனைவியோ கொடுத்துவிடும் சூடான சாப்பாட்டை அலுவலகங்களில் குறித்த நேரத்தில் கொண்டு சேர்ப்பவர்கள் அவர்கள்.  

வண்டி வாஷி பாலத்தைக் கடக்கத் தொடங்கியது. கீழே ததும்பிக்கொண்டிருந்த அரபிக்கடலலைகளும், மேலே பறக்கும் கடற்பறவைகளும் ஒரு கணம் கார்த்திக்கின் கவனத்தைத் திருப்பின. அந்த முதியவர் அவனை உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு கருணையும், அதே சமயம் ஒரு பிடிப்பும் இருந்தது. அனுபவசாலியான அவரது பார்வை அவனை அளந்தது. 

"என்ன தம்பி... யோசனை ரொம்ப பலமா இருக்கு?"

அவர் கேட்டது மராத்தியில் என்றாலும், அவரின் கண்களில் இருந்த கனிவு அவனுக்குப் புரிந்தது. ‘ப்ச்’ என்ற ஒலியோடு ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அசட்டுச்சிரிப்புடன் அவனுக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பதில் சொன்னான். "ஒன்னுமில்லை சாச்சா, இந்த ஊரு எனக்குச் செட் ஆகலை.. இங்க இருக்கற வாழ்க்கைமுறை ரொம்பவே பரபரப்பா இருக்கு. நான் எங்க ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன்"

“ம்… நீ மும்பைக்கு வந்து எத்தனை வருஷங்களாகுது?”

“ஆறு மாசம்..”

“இவ்வளவுதானா?.. ஆறு மாசத்தில் இந்த ஊரைப்பற்றி என்ன புரிஞ்சுக்கிட்டே? இந்த ஊரு இருக்கே.. இதுக்கு நீ என்ன கொடுக்கறியோ அதைப் பத்து மடங்கா உனக்குத் திருப்பிக்கொடுக்கும். மும்பை உன்னைத் தூக்கி எறியாது தம்பி. நீ இந்த ஊரை நேசிச்சா, இந்த ஊர் உன்னைத் தன் குழந்தையா ஏத்துக்கும்” என்றவர் சற்று நேரம் வெளியே ஓடும் காட்சிகளில் லயித்துவிட்டுத்தொடர்ந்தார். “என் அனுபவத்துல சொல்றேன், பிழைப்புத்தேடி வர்றவங்களை, கடுமையா உழைக்கிறவங்களை இந்த மும்பாதேவி என்னிக்கும் கைவிட்டதில்லை. காலூன்றி நிற்க இடம் கிடைச்சாலும் போதும், அதிலும் ஒருத்தன் ஒத்தைக்கால்லயாவது நின்னு வியாபாரம் செஞ்சு சம்பாதிப்பான் பார்த்திருக்கியா?”

நிறையவே பார்த்திருக்கிறான் அவன். ரயிலுக்குள் வரும் சிறு வியாபாரிகளையும் கூட. 

“ஆனாலும், இந்தப் பரபரப்பு.. இந்த வேகம்.. யாரும் யாரோடும் ஒட்டாத தன்மை.. என்னவோ எனக்கு பேசாம ஊருக்கே போய் உறவுகளோட இருந்து கூழோ கஞ்சியோ குடிச்சுட்டுக் கிடக்கலாம் போலிருக்கு” என்றான். 

பெரியவர் மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பில் ஒரு முதிர்ச்சியும், பல ஆண்டுகால அனுபவமும் தெரிந்தது. "மும்பையில வேகம் இருக்கு தம்பி, ஆனா அந்த வேகத்துலதான் இந்த நகரத்தோட உயிர் இருக்கு. யாரோ போல் விலகி நடக்கற இதே மனிதர்கள்தான் மும்பைல ஒவ்வொரு அசம்பாவிதம் நடக்கும்போதும் உறவுகளை விட நெருக்கமா ஒருத்தருக்கொருத்தர் துணையா நிற்பாங்க தெரியுமா?” என்றவர் அமைதியாகி இலக்கில்லாமல் வெளியே பார்த்தார். பின், “இதே மஹாராஷ்ட்ரால சாங்க்லிங்கற ஊர்லதான் பிறந்து வளர்ந்தேன். விவசாயம் பொய்ச்சுப்போய் பிழைக்க வழியில்லாம, நான் மும்பைல வந்து விழுந்தப்ப இந்த நகரம் என்னையும் ஏந்திக்கிட்டு உசிர் கொடுத்தது. ஒட்டுதல் இல்லாத மனிதர்களா இருந்திருந்தா நான் இங்கே பிழைச்சிருக்க முடிஞ்சுருக்குமா? ஆச்சு.. முப்பது வருஷம். எனக்குச்சோறு இந்த ஊர்லதான்னு முடிவாகிருச்சு” எனப் பெருமூச்செறிந்தார்.

விழிகள் விரியக்கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக் குறுக்கிட்டான். “உங்க வாழ்க்கை சுலபத்தில் நல்லா அமைஞ்சுட்டுது, எல்லோருக்கும் அப்படியிருக்குமா?” என்றான்.

பெரியவர் பகபகவெனச்சிரித்தார். “இல்லை தம்பி, இங்க ஒவ்வொரு நொடியும் போராட்டம்தான். நான் ஒரு ரயிலைத்தவற விட்டாலும் அன்னிக்கு சில உசிர்களைப் பட்டினி போட்ட பாவத்துக்கு ஆளாகிருவேன். நல்ல வேளையா அந்த பாண்டுரங்கன் என்னை எப்பவும் காப்பாத்தறான். கொரோனா தாண்டவமாடி, லாக்டவுன் முடிஞ்சப்புறம் எங்க பிழைப்பு பழைய மாதிரி இல்லை தம்பி,. ஒரு நாளைக்கு நாப்பது அம்பது டப்பாக்கள் டெலிவரி கொடுத்த இடத்துல இப்ப பத்துப்பதினஞ்சு டப்பா ஆர்டர் கிடைச்சாலே அதிகம். இப்பத்தான் எல்லோரும் ஆன்லைன்லயே சாப்பாடு ஆர்டர் செஞ்சுக்கறாங்களே.”

ரயில் காற்றில் கலைந்த முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டான். “அப்புறம் எப்படிச்சமாளிக்கறீங்க?”

“கொஞ்சம் பேர் செக்யூரிட்டி வேலைக்குப்போனோம், சிலர் கிடைச்ச வேலைகளைச்செஞ்சோம். கடனேன்னு செய்யாம கடமையைச்செஞ்சா சலிப்பு வராது” என்ற பெரியவர் கண் சிமிட்டினார். “நாங்க கூரியர் சர்வீஸும் செய்ய ஆரம்பிச்சுட்டோம். எங்க கிட்ட கொடுத்தா எந்த டாகுமெண்டையும் சரியான ஆள் கிட்ட சேர்த்துருவோம். வெள்ளைக்காரனே பாராட்டுன சிஸ்டமாக்கும் எங்களோடது”

“கேக்கறதுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கு” என்ற கார்த்திக் தொடர்ந்தான். “ஊரை விட்டு வந்தப்புறம் ஒவ்வொரு நாளும் மனசுக்குள்ள போராடிக்கிட்டே இருக்கேன்”

ரயில் பேலாப்பூரை சமீபித்துக்கொண்டிருந்தது. "தம்பி, கஷ்டம் எல்லா இடத்துலயும் இருக்கும். நீ வெறுக்கற இந்தப் போராட்டம் உன்னை ஒரு மனுஷனா செதுக்கும். சவாலான வாழ்க்கை உன்னைப் பக்குவப்படுத்தும். போராட்டமே இல்லாத வாழ்க்கை, உப்பு இல்லாத சோறு மாதிரி. போராடி ஜெயிக்கிறதுதான் உனக்கு ஒரு அடையாளம் கொடுக்கும்," என்றவர் கனிவுடன் தொடர்ந்தார்.

“ஊருக்குப்போனா மட்டும் சோறு சும்மா வந்துருமா? அங்கியும் உழைப்பேதானே? அந்த உழைப்பை இங்க போடு, நாலு காசு சம்பாதி. கூடப்பிறந்தவங்களுக்கும் உழைக்கக் கத்துக்கொடு. முடிஞ்சா அவங்களுக்கும் நல்ல வழி காட்டி முன்னேத்து. உன்னைப்பார்த்து மத்தவங்களும் கத்துக்கற மாதிரி இரு. வெறுங்கையோட மட்டும் போய் நிக்காதே, அவங்க பார்க்கற பார்வையில் குறுகிடுவே. புத்தியாப்பொழைச்சுக்கோ.. அப்றம் உன் இஷ்டம்”

பெரியவர் பேசப் பேச, கார்த்திக்கின் மனதில் இருந்த பாரம் மெல்லக் குறைந்தது. அவன் இதுவரை மும்பையைப் பார்த்த கோணம் விலகி வேறு கோணம் தெரிந்தது. வாசலருகே நின்றிருந்தவன் எட்டி வெளியே பார்த்தான். ப்ளாட்ஃபாரமும் அதில் அலைமோதி நின்றிருந்த ஜனத்திரளும் தெரிந்தன. இப்போது அந்த வேகம் அவனுக்குப் பயத்தைக் கொடுக்கவில்லை. மாறாக, அந்த வேகம்தான் இந்த நகரத்தின் இதயத்துடிப்பு என்பதை அவன் உணர்ந்தான்.

ரயில் பேலாப்பூர் ஸ்டேஷனை நெருங்கியது. கார்த்திக் தன் போனைப் பார்த்தான். அதில் இருந்த அந்த ராஜினாமா டிராஃப்ட்டை ஒரு நிமிடம் உற்று நோக்கினான். பின், ஒரு தீர்க்கமான முடிவோடு அதை அழித்தான். வண்டி நின்றதும் மனிதக் கூட்டம் ஒரு அருவியைப் போல உள்ளே நுழையத் தொடங்கியது. அந்த நெரிசலுக்குள் துக்காராம் ஒரு மீனைப் போல நீந்தி வெளியேறி மறைந்தார். வெண்முத்துப்போல் அவரது தொப்பி மட்டும் தெரிந்துக்கொண்டிருந்தது. கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு கார்த்திக் பிளாட்பாரத்தில் கால் வைத்தபோது, அவனது கால்களில் ஒரு புதிய உறுதி இருந்தது.

ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தபோது, வழக்கமாக எரிச்சலூட்டும் அந்த ஹார்ன் சத்தங்கள் இப்போது ஒரு இசையாகத் தெரிந்தன. பிளாட்பாரத்தில் ஓடும் மனிதர்கள் அவனுக்கு அந்நியர்களாகத் தெரியவில்லை; அவர்களும் அவனைப் போலவே ஏதோ ஒரு லட்சியத்தை நோக்கி ஓடும் சக பயணிகள் என்று புரிந்தது. அந்தப் பிரம்மாண்டமான மனிதக் கடலில் ஒரு துளியாகக் கலப்பதில் ஒரு நிம்மதியைக் கண்டான். மும்பை இப்போது அவனுக்கு அந்நியமாகத் தெரியவில்லை. இதுவும் என் ஊர்தான் என எண்ணிக்கொண்டான்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட வாசகசாலை மின்னிதழுக்கு நன்றி.

Saturday, 23 August 2025

அம்மாவின் சேலை - "பூபாளம்" இதழில் வெளியானது

சிறுகதையை வெளியிட்ட "பூபாளம்" இதழுக்கு நன்றி

பீரோவைத்திறந்து, அடுக்கப்பட்டிருந்த அம்மாவின் சேலைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் ரகு. ரகம் வாரியாகப் பிரித்து வெகு நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் அம்மா. விசேஷங்களுக்கு உடுத்தும் பட்டுப்புடவைகள், சில்க் காட்டன், ஜரிகை போட்ட ஜிகுஜிகுவென்ற புடவைகள் ஒவ்வொன்றும் பழைய தலையணை உறைகளுக்குள் தனித்தனியாகப் பொதியப்பட்டிருந்தன. அக்கம்பக்கம் கோவில்களுக்குப்போக, ஷாப்பிங் மற்றும் உற்றார் உறவினர் வீடுகளுக்குப் பளிச்செனச்செல்ல என அதற்கேற்ற வகையில் உள்ள புடவைகளை இன்னொரு அடுக்கில் வைத்திருந்தாள். தினப்படி வீட்டில் உடுத்தும் எளிய காட்டன் புடவைகள் நடுத்தட்டில் ஒரு ஓரமாக அடுக்கப்பட்டிருந்தன.

அம்மாவுக்கு எல்லாவற்றிலும் நேர்த்தி வேண்டும், ஏனோதானோவென செயல்படுவது அவளுக்குப் பிடிக்காது. வீட்டில் உடுத்தும் சேலைகளைக்கூட அவ்வப்போது கஞ்சி போட்டு, மொடமொடப்பாக அயர்ன் செய்து உடுத்துவாள். எப்போது அவளைப் பார்த்தாலும் ஏதோ இப்போதுதான் வெளியில் கிளம்பத்தயாராய் இருப்பது போல் பளிச்சென்று இருப்பாள். ரகு லேசாக முன்னகர்ந்து வாத்சல்யத்துடன் சேலைகளைப் பட்டும்படாமலும் வருடியபோது, பொத்தென்று ஒரு சேலை கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அசங்கி, உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த மேட்சிங் ப்ளவுஸ் லேசாக சேலைக்கு வெளியே வந்து தெரிந்தது. 

குனிந்து எடுத்து முகத்தை சேலையில் புதைத்துக்கொண்டு முகர்ந்து அனுபவித்தான். அந்த மென்மையும் வாசனையும் அவளது மடியில் படுத்துக்கிடந்த தினங்களை ஞாபகப்படுத்தியது. அம்மாவின் மடியில் யார் படுப்பதென்பதில் எப்பொழுதும் அவனுக்கும் சின்னக்காவுக்கும்தான் போட்டி. வெளியூரில் வேலை கிடைத்து, பெட்டியை அடுக்கும்போது முதலாவதாக அம்மாவின் பழம்புடவையொன்றைத்தான் எடுத்து வைத்துக்கொண்டான். வீட்டு ஞாபகம் மேலிட்டு அதிகமாகி ஏக்கமாக மாறி தூக்கம் தொலைத்த இரவுகளில் அதைப் போர்த்திக்கொண்டு உறங்குவான். அம்மாவே அருகிலிருந்து தலையைக்கோதி தூங்க வைப்பதுபோல் உணர்வான்.

கையிலிருந்த புடவையின் மேல் அவன் பார்வை சென்றது. இதே மாதிரியான புடவையால்தான் அன்றைக்கு அம்மாவுக்கும் பாட்டிக்குமிடையே சண்டை வந்தது. இதுதானா அது?! இல்லையில்லை.. இது பிங்க் கலர் அல்லவா!, அம்மாவிற்குக் கோபமேற்படுத்திய அந்தப்புடவை நல்ல வாடாமல்லி கலர். பேத்தியின் பிறந்த நாளுக்கென பாட்டி வாங்கி வைத்திருந்தாள். புடவையைக் கண்டதும் பெரியம்மாவின் கண்கள் விரிந்தன. அவளது வழக்கப்படி முதலில் விலையைப் பார்த்தாள். விலையுயர்ந்த புடவை என்றதும் ஆசையில் பளபளத்தன அவள் கண்கள். “இதை நான் எடுத்துக்கறேனே அம்மா?” என மூத்த மகள் ஆசைப்பட்டுக்கேட்டதும் புடவையை அவளிடம் தூக்கிக்கொடுத்து விட்டு பேத்திக்கு வாடாமல்லி கலரில் ஒரு புடவையை வாங்கிக்கொண்டு சின்ன மகளின் வீட்டுக்கு வந்தார். 

வந்தவர் வாயை வைத்துக்கொண்டு சும்மாயிராமல், நடந்ததைச் சொல்லிவிட அம்மாவுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. ‘எம்புள்ளையோட பொறந்த நாளுக்குன்னு வாங்குனதை நீங்க வழக்கம்போல ஒங்க மூத்தமகளுக்கே தாரை வாத்துட்டு வந்துருக்கீங்களா’ என ஆவேசப்பட்டுச்சீறியவர், அந்த புதுப்புடவையை வாங்கி, பாட்டி பதறப்பதற சரிபாதியாக இரண்டாகக் கிழித்தார். “அடுத்த வீட்டு ராகினி அக்காட்ட கொடுத்து ஒனக்கும் கீதா அக்காக்குமா ரெண்டு பாவாடை தைக்கச்சொல்லு” என சின்னக்காவை அனுப்பினார். நடந்ததைக் கேள்விப்பட்ட பெரியம்மா அதன்பின் அடுத்தவர் புடவைகளுக்கு, முக்கியமாய் தங்கையின் உடமைகளுக்கு ஆசைப்படுவதையே விட்டுவிட்டார்.

அவர்களது குடும்ப வட்டாரத்தில் அவளது உடைரசனை மிகவும் பிரசித்தம். “ஏட்டி சியாமளா.. ஒனக்குன்னு எங்கேருந்துதான் கிடைக்குதோ?!!.. நாங்களுந்தான் நாகருகோயிலு, திருனேலின்னு கட கடயா அலஞ்சு அலசுதோம். இந்தக் கலருதாம் வேணும்ன்னு கட கடயா முங்கி முத்தெடுத்தோம். அப்புடியும் வீட்டுக்கு வந்து பிரிச்சுப்பாத்தா அந்தச்சேல அவ்வளவா நல்லாயில்லாத மாதிரி தோணி, புடிக்காம போயிட்டு. ஒனக்கு எந்தச்சேல கட்டுனாலும் அம்சமா பொருத்தமா இருக்கு” என பாதி வயிற்றெரிச்சலில் குமைவார்கள். “அவளும்.. அவளுக்க சீலையும்.. பெரிய ஆப்பீசர் கணக்கால்லா மினுக்கிட்டு அலயுதா” என்பவர்கள் கூட, “சியாமளா.. நாளைக்கு மகன் கல்யாணத்துக்கு சொந்தக்காரங்க சொக்காரங்க, அப்றம் கல்யாணப்பொண்ணுன்னு எல்லாருக்கும் சேலை எடுக்கணும். நீயும் வாயேன், உன் செலக்ஷந்தான் டாப்பா இருக்கும்” என கூச்சநாச்சமில்லாமல் அழைப்பார்கள்.

இத்தனைக்கும் ஒவ்வொரு பெண்களைப்போல் பத்து கடைகள் ஏறியிறங்கி, எல்லாப்புடவைகளையும் கலைத்துப்போடச்சொல்லி கடை ஊழியர்களின் பொறுமையைச் சோதிக்கும் ரகமில்லை அவள். ரேக்குகளில் அடுக்கப்பட்டிருப்பவைகளை கண்ணாலேயே அலசி ஆராய்ந்து நாலைந்தை எடுத்துப்போடச்சொல்லி ஒன்றை செலக்ட் செய்து ஐந்து நிமிடத்தில் கடையை விட்டு வெளியே வருபவள் அவள். “உங்களுக்கு உங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா? எங்கப்பா வாங்கித்தர்றது பிடிக்குமா?” என அவன் ஒரு நாள் கேட்டதற்கு, “எனக்கு நான் வாங்கிக்கறதுதான் பிடிக்கும்?” என குறும்புடன் சொன்னாள்.

“பீரோ முழுக்க புடவையா வாங்கி அடுக்கி வெச்சிருக்கியே.. கொடுத்து வெச்சவதான் போ..” என ஓர் உறவுக்காரி சொல்லிவிட்டுப்போன அன்றைக்கு அந்திக்கருக்கலில், உப்பும், மிளகும், கடுகும், வரமிளகாயுமாய் பொட்டலம் கட்டி, புடவைகளுக்கு திருஷ்டி சுற்றிப்போட்டவள் அவள். அம்மாவின் புடவைக்காதலைப் பற்றிப் புரிந்திருந்த மகள்களும் மகன்களும் அவளுக்கு விதவிதமாய் வாங்கிக்கொடுத்தாலும், அவளுக்கு ரகு ஒவ்வொரு முறையும் வெளியூர்களுக்குப்போய் வரும்போது அந்தந்த ஊரின் ஸ்பெஷல் என வாங்கி வரும் புடவைகள் என்றால் தனிப்பிரியம். “பணக்கார மகன் வாங்கிக்கொடுக்கறதுதானே ஒனக்குப்புடிக்கும், நாங்க வாங்கிக்கொடுக்கறதுல்லாம் புடிக்குமா?” என சின்னக்கா ஒரு நாள் குத்தலாகச்சொன்னபோது, “ஏட்டி.. என்ன வார்த்தை சொல்லுகே? தாய்க்கு எல்லாப்புள்ளையளும் ஒண்ணுதான்” என அடக்கிவிட்டாள்.

“கையைத்தூக்க முடியலைப்பா இப்பல்லாம், ப்ளவுஸ் போடறதுக்குள்ள சீவன் போகுது” வயோதிகத்தின் முதல்படியில் நின்றுகொண்டு அலுப்புடன் அம்மா சொன்னபோது, முதன்முதலாக நைட்டி அணிய நேர்ந்த கூச்சமும், இனிமேல் புடவையே கட்டிக்கொள்ள முடியாமல் போய்விடுமோ என்ற அச்சமும் அவளிடம் லேசாக எட்டிப்பார்த்தது. நாளாக ஆக நடமாட்டம் குறைந்தபோது பார்த்துப்போகவென வந்திருந்த சின்னக்கா, “இனும உடுத்தமுடியாதுன்னு ஆயாச்சுன்னா, எங்களுக்கு ஆளுக்கு ரெண்டு புடவைங்களைத் தரலாமில்ல? நாங்களாவது கட்டி அனுபவிப்போம்” என்றதற்கு,

“என் கண்ணுள்ள வரைக்கும் எல்லாம் அப்படிக்கப்படியே இருக்கட்டும், நான் போனதுக்கும்பொறவு என்னமும் செஞ்சுக்கோங்க” என்று ஒரேயடியாய் மறுத்துச் சொல்லிவிட்டாள்.

அப்படியெல்லாம் சேலைகளை ஆசையுடன் கட்டிக்காத்த அம்மாவைத்தான் இன்று சிதையில் வைத்து விட்டுத் திரும்பியிருந்தார்கள் அவனும் அண்ணனும். நினைவுகளில் ஆழ்ந்திருந்தவனை, பின்னால் கேட்ட பேச்சுக்குரல் நனவுக்குக்கொண்டுவந்தது.
அக்காக்களும் அண்ணியும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“என்னதான் சொல்லுங்க.. அம்மாவோட கலெக்ஷன் போல வராது”

“அப்பம்லாம் அம்மா புதுப்புடவை எடுத்தா, மொதல்ல என்னைத்தான் கட்டச்சொல்லுவாங்க. அதென்னவோ அம்மாவுக்கு அப்படி ஒரு செண்டிமெண்ட்” இது பெரியக்கா.

“நீ கல்யாணமாகிப்போனப்புறம் அம்மா என்னைக் கட்டிக்கச்சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க” இது சின்னக்கா.

“எனக்கு அம்மாவோட ஞாபகமா ஒரு சேலை வேணும்”

“எனக்கும்..”

“எனக்கும்..” 

சேலைக்கடை போல் ஆகியிருந்தது வீட்டுக்கூடம்.

“அடடா!!.. அதுக்கென்ன? ஒண்ணென்ன?! யார்யாருக்கு என்னென்ன வேணுமோ எடுத்துக்கிடுங்க” என்றான் பெரியண்ணன்.

அவர்கள் வருவதை உணர்ந்து வழிவிட்டு, அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்துகொண்டான் ரகு. அவர்கள் ஆர்வமாக ஒவ்வொரு புடவையாகக் கையிலெடுத்துப்பார்த்து, பிடித்தவற்றை.. முக்கியமாக விலையுயர்ந்தவற்றைத் தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்கள். அவரவர் வாங்கிக்கொடுத்தவற்றையும் கவனமாக அவரவரே எடுத்துக்கொண்டனர்.

“இந்த காப்பிப்பொடி கலர் புடவை, மகேசுக்கு நல்லாருக்கும், அவளுக்குத்தான் கொடுக்கப்போறேன்னு அத்தை சொல்லிக்கிட்டே இருந்தாங்க” என்றாள் அண்ணி. மகேசு என்ற மகேஸ்வரி அவள் மகள்.

“அந்தப்புடவை அம்மாவோட சித்தி பையன் அவன் மகளோட கல்யாணத்துக்கு அம்மாவுக்கு வச்சுக்குடுத்ததுதானே? அம்மா சார்பா அந்தக்கல்யாணத்துக்கு நான் ஐயாயிரம் ரூவா மொய் செஞ்சேன் பாத்துக்கோ. பரவால்ல, மாமா நல்ல புடவையாத்தான் எடுத்திருக்கார்” என்ற சின்னக்கா புடவையைத் தன்மேல் போட்டுக்கொண்டு அழகு பார்த்தாள்.

“எம்புள்ள இன்ன நேரம்ன்னு கிடையாது.. பெரியவளாகிருவா. அவளுக்கு ஆச்சியோட சீரா, மொதப்பொடவையா இத கொண்டுட்டுப் போறேன். காப்பிப்பொடி கலர் அவ நெறத்துக்கு நல்லா எடுப்பா இருக்கும்” என்றாள் பெரியக்கா.

புடவைகளின் சரசரப்பினூடே பேச்சும் சலசலத்துக்கொண்டிருந்தது. ஒரே புடவைக்கு அத்தனை பேரும் போட்டி போடும்போது பெண்கள் நடத்தும் நுண்ணரசியலை நினைத்து அவனுக்கு வியப்பாக இருந்தது. ‘இது எனக்கு வேண்டும்’ என்று பட்டவர்த்தனமாகச் சொல்லாமல் அதே சமயம் அத்தனை பேருக்கும் அழுத்தமாகப் புரியும் வண்ணம் எப்படி சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், ஒரு சதுரங்க ஆட்டத்துக்கேயுரிய லாவகத்துடன் எத்தனை அழகாகக் காய் நகர்த்தி பாகம் பிரித்துக்கொள்கிறார்கள் என ஆச்சரியப்பட்டான். தனக்குத் திருமணமாகியிருந்தால் இந்நேரம் தன் மனைவியும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பாளோ என யோசனையாக இருந்தது. இவர்கள் அம்மாவின் நினைவுகளைப் பகிர்கிறார்களா அல்லது அதைச்சாக்கிட்டு அவளது பொருட்களை மிச்சமில்லாமல் சுருட்டுகிறார்களா எனப்புரியவில்லை.

அண்ணி அவனது மௌனத்தைக்கலைத்தாள். “ஒங்களுக்கு ஒண்ணும் வேண்டாமா கொழுந்தம்பிள்ளே?”

வேண்டாமெனச்சொல்லலாமா என ஒரு நிமிடம் யோசித்தான். அம்மையை வேண்டாமென அப்படி சுலபமாகச் சொல்லிவிட முடியுமா? 

சுற்றிலும் பார்த்தான். கொடிக்கயிற்றில் அம்மாவின் இன்னும் துவைக்காத ஒரு நைட்டி தொங்கிக்கொண்டிருந்தது. அவள் இறப்பதற்கு முந்தைய நாள்தான் உடம்பு துடைப்பதற்காக அட்டெண்டர் அதை அவிழ்த்துப்போட்டிருந்தார். அதை அள்ளிச்சுருட்டி எடுத்துக்கொண்டான். அம்மாவின் கடைசி வாசனை,.. இனியெப்போதுக்குமாக இது போதும். நைட்டிக்கும் முந்தானை உண்டு, அம்மாவை நினைத்து ஏங்கும் பிள்ளைகளை அது அரவணைத்து ஆறுதலளிக்கும். நாப்தலீன் மணக்கும் சேலைகளை மற்றவர்களே வைத்துக்கொள்ளட்டும்.

அவன் நைட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு அணைத்தாற்போல் ஆதுரத்துடன் பிடித்துக்கொண்டு எழுந்தான். அம்மையே குழந்தையாக அவன் தோளில் சாய்ந்திருப்பதுபோல் ஒரு தாய்மையுணர்வை உணர்ந்தபோது அவனுக்குச் சிலிர்த்தது. நைட்டியின் கைப்பாகம் அவனது கையில் உரசியபோது அம்மாவே தன் கையைப்பற்றியிருப்பது போல் உணர்ந்தான். “நடுச்சாமம் ஆகப்போகுது, போய்த்தூங்கு மக்கா” என்ற அம்மாவின் குரல் காதில் கேட்டதுபோல் இருந்தது. நைட்டியைத்தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். 

வெகு நாட்களுக்குப் பின் அம்மையின் மடியில் தலை வைத்துப்படுத்திருப்பது போல் ஒரு ஆறுதல், கொந்தளித்துக்கொண்டிருந்த அவனது மனதைச் சற்று அமைதியுறச்செய்தது. மரத்துப்போயிருந்த மனது மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தது. இனிமேல் அம்மையை எப்போதுமே பார்க்க முடியாதே என்ற ஏக்கம் தாக்க, சூடான கண்ணீர் அவன் இமைகளினோரம் வழிந்து நைட்டியை நனைத்தது.  கண்ணீர் வழிய வழிய துக்கம் மெல்ல மெல்ல கரைந்து, தூக்கம் கண்ணைச்சுழற்றியது. மின்விசிறியின் காற்றில் மெல்ல படபடத்துக்கொண்டிருந்த நைட்டி மெதுவாக அவன் கன்னத்தை உரசியது. “அழாதே மக்கா..” என அம்மையே அவனது கண்ணீரைத் துடைத்ததுபோல் உணர்ந்தான். ‘என் அம்மா.. எங்கூடவேதான் இருப்பா” என தனக்குத்தானே ஆறுதலாகச் சொல்லிக்கொண்டான். அம்மாவின் கை தனது தலையைக்கோதுவது போன்ற கற்பனையுடன், இமைகள் கனக்க  ஆழுறக்கத்தில் இன்னும் இன்னுமென அமிழத்தொடங்கினான்.

Thursday, 14 August 2025

மனத்துக்கண் மாசிலன்.. ( பண்புடன் இதழில் வெளியானது)


செக்கச்சிவந்திருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் விளிம்புகளில் செம்பஞ்சுக்குழம்பைப்பூசிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தன. வினோதுக்கு மருதாணியின் சிவப்பு மிகவும் பிடிக்கும். பூசிய மறுநாள் தோன்றும் இளஞ்சிவப்பு, நாளாக ஆக மெருகேறி அடர்வண்ணமாய் மின்னும் ரத்தச்சிவப்பு, கொஞ்சங்கொஞ்சமாய் நிறமிழந்த ஜாங்கிரி வண்ணம் என ஒவ்வொன்றையும் ரசிப்பான். சூரியனும் பளீரென்ற நீலவானில் ஒரு ஜாங்கிரியாக மிதந்து கொண்டிருந்தது. அழகான வளையம் வளையமாக ஜீராவின் மினுமினுப்புடன் பார்த்தாலே தின்னத்தூண்டுவதாக.. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. கையை நீட்டி அதை எடுத்தான். கைக்குச்சிக்காமல் அது நழுவிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. “அம்மா..” என கத்தினான். 

“இங்கேதான்ப்பா இருக்கேன், என்ன வேணும்?” கமலம்மாளின் மென்மையான குரல் பக்கத்தில் கேட்டது.

“இந்த ஜாங்கிரி தட்டோடு ஒட்டிக்கிச்சு. எடுக்க வரலை, எடுத்துக்கொடுங்களேன்” என்றான்.

“எங்கேப்பா?”

“இங்கதான்..” என்றவாறு திரும்பியவன் திகைத்தான். எங்கே போச்சு அதுக்குள்ள!! எனக்குழம்பினான். டேபிளின் துணியை இழுத்து அதனடியில் பார்க்க முற்பட்டான். அம்மா சட்டென்று கையை நீட்டித்தடுத்தாள். “போகட்டும் விடு.. உனக்கு ஜாங்கிரிதானே வேணும். சாயந்திரம் அண்ணனை வாங்கிட்டு வரச்சொல்றேன். இப்ப இந்த இட்லியைச்சாப்பிடு. அம்மா வேண்ணா ஊட்டி விடட்டா?” அவனது பதிலுக்குக் காத்திராமல் கொஞ்சிக்கெஞ்சி ஊட்டி விட்டு, வாய் துடைத்து, அவனது மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே சரிந்து தூங்க ஆரம்பித்தான்.

‘இன்னிக்கு மனப்பிரமையால கொஞ்சம் அதிகமா கஷ்டப்படறான் போலிருக்கே’ கவலையுடன் அவனையே நோக்கியபடி பக்கத்தில் அமர்ந்தார் கமலம்மாள். சில நாட்களாகவே வினோத் சரியாகத் தூங்கவில்லை. ஆகவே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே அவனது வழக்கமான மாத்திரைகளோடு தூக்க மாத்திரையையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். எப்போதுமே தூக்கமின்மையைத் தொடர்ந்து வரும் சில நாட்களை அவன் பெரும் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் மாயக்காட்சிகளால் பெரும் குழப்பமடைந்தான். அவன் சொல்வதை யாராவது நம்ப மறுத்தாலோ அல்லது காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்தாலோ பெருங்கோபம் கொண்டான். “இல்லாததைச்சொல்ல நானென்ன பைத்தியமா?” எனக்கத்தியபடி கையில் கிடைத்ததைப் போட்டுடைப்பது வழக்கமாக ஆகியிருந்தது. 

“இதை ஹாலுஷினேஷன்னு சொல்லுவாங்க”

அவனைப் பரிசோதித்து முடித்து, கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்த டாக்டரின் முன் அவனது மெடிக்கல் ஃபைல் விரிந்து கிடந்தது. ஏகப்பட்ட டெஸ்டுகள், அவற்றின் ரிசல்ட் ரிப்போர்ட்டுகளோடு சமீபத்தில் எடுத்த எம் ஆர் ஐ ரிப்போர்ட்டும் இணைந்திருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து அலசி விட்டுத்தான் அதைச்சொன்னார். 

“அப்படீன்னா?” என வினோதின் அப்பா கேட்டார்.

“மாயத்தோற்றம். ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லே. இல்லே.. ஆனா இருக்குங்கற மாதிரியான விஷயம்” என்றார் டாக்டர்.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் டாக்டர்”

“இப்ப, இந்த ரூம்ல நீங்க, நான், இந்த டேபிள், சேர்ன்னு இருக்கறது எல்லாம் வினோதுக்கு மட்டும் வேற மாதிரி தெரியும். வேற மாதிரி உணர்வார், வேற எங்கியோ இருக்கற மாதிரி புரிஞ்சுக்குவார். அதையே நம்பவும் செய்வார்”

“ஆமா டாக்டர். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்ப கூட ‘அப்பா.. ஃப்ளைட் ஏன் லேட்டாகுதுன்னு கவுண்டர்ல விசாரிங்கன்னு நச்சு பண்ணிட்டிருந்தான்”

“எங்க ஆஸ்பத்திரியோட லைட்டிங் அமைப்பு, யூனிஃபார்ம் உடுத்திய ரிசப்ஷன் பெண்கள், அடுத்த நோயாளிக்கான அழைப்பைச்சொல்லும் ஸ்பீக்கர் இதெல்லாமும் அவருக்கு ஏர்போர்ட்டை நினைவுபடுத்தியிருக்கு. அதான் ஆஸ்பத்திரி அவருக்கு ஏர்போர்ட்டா தெரிஞ்சுருக்கு, அதனால அப்படிக் கேட்டிருக்கார்”

“இது இப்படியேதான் இருக்குமா டாக்டர்? சரியாகாதா? வாழ வேண்டிய வயசுப்புள்ளை இவன்” தழுதழுத்தாள் கமலம்மாள்.

“கவலைப்படாதீங்க, நம்ம உடம்பு அடிப்படையில் கெமிக்கல்களாலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. உடம்போட சுரப்பிகள், ஹார்மோன்கள் எல்லாத்துக்குமே அடிப்படை உப்புகள்தான், அதாவது கெமிக்கல்கள்தான். இதோட விளையாட்டுதான் நம்ம உணர்ச்சிகள், நம்ம சிந்தனைகள் எல்லாத்துக்கும் அடிப்படை. இவரோட எண்ணங்களும் மனசும் ஒண்ணையொண்ணு இயக்குது. ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரின்னு வெச்சுக்கோங்க. மனசைக்கட்டுப்படுத்தத்தெரிஞ்சா எண்ணங்களும் கட்டுப்படும். இந்த பிரமைகளும் குறையும். ஆனா, எண்ணங்களால சுரக்கற கெமிக்கல்களால இவரோட மனசு கட்டுப்பட மறுக்குது. இவரோட ரத்தத்துல சோடியம் அதிகமா இருக்கறதால கொஞ்சம் உக்கிரமா இருக்கார். இவரோட சாப்பாட்டில் உப்பைக்குறைங்க” 

“மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு, முன்னைக்கு இப்ப முன்னேற்றம் தெரியுது. மருந்துகளோட உங்க ஒத்துழைப்பும் கவனிப்பும் பாசமும் அவருக்கு இப்ப ரொம்பவே தேவை. அவர் மனபிரமையால ஏதாவது பேசறப்ப மறுத்துப்பேசாம அவர் போக்கிலேயே பேச விடுங்க. கொஞ்ச நேரத்துக்கப்றம் தான் என்ன பேசினோம்ங்கறதே அவருக்கு ஞாபகம் இருக்கப்போறதில்லை. அதனால அவர் பேசறதை சீரியஸா எடுத்துக்காதீங்க. மறுக்கறப்பதான் வயலண்ட் ஆவாங்க. மனசறிஞ்சு எந்தத் தீங்கும் செய்யவோ பேசவோ மாட்டார். அதை நீங்க புரிஞ்சுக்கணும். மருந்துகளோட டோஸைக் கொஞ்சம் மாத்தியிருக்கேன். கொஞ்சம் தூங்குவார்.. தூங்க விடுங்க. அடுத்த மாசம் கூட்டிட்டு வாங்க. ஆல் தி பெஸ்ட்”. ப்ரிஸ்க்ரிப்ஷனை டைப் செய்து பட்டனைத்தட்டினார். அருகிலிருந்த ப்ரிண்டர் துப்பிய ப்ரிஸ்கிரிப்ஷனை ஃபைலின் உள்ளே வைத்து மூடி நீட்டினார். 

ஒரு வாரமாக அவர் அறிவுறுத்தியபடியேதான் எல்லோரும் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அவன் என்ன பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள். பக்குவமாகப் பதிலளித்தார்கள். ஆனாலும் சில சமயங்களில் சற்று மிகையாக நடந்து கொள்ளும்போது, கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திருப்பித்திருப்பிச்சொல்லும்போது தங்கள் பொறுமை உடைந்து விடக்கூடாதே எனப் பயந்தார்கள். அவனது உடல் தன்னைச்சரி செய்து கொள்வதற்கான நேரத்தை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையை அம்மாதிரியான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதல் போல் சொல்லிக்கொண்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகத்தான் இப்படியிருக்கிறான். அதற்கு முன் அவனும் மற்ற ஆண்களைப்போல் இயல்பாக இருந்தவன்தான். கல்லூரி முடித்ததுமே வேலையும் கிடைத்துவிட, வழக்கமான அம்மாக்கள் போல் தன் பிள்ளைக்கொரு கல்யாணத்தைப்பண்ணிப் பார்த்து விட வேண்டுமென கமலம்மாள் முனைந்திருந்த நேரம். அன்றைக்கு மட்டும் அந்தச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் கூடி வந்து இன்றைக்கு அவனும் ஒரு குடும்பஸ்தனாகியிருப்பான்.

அன்றைக்கு கமலம்மாள் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். பருப்பு டப்பாவைத்தேடியபோதுதான் கை மறதியாக அதை மேல்தட்டில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எட்டி எடுக்க முனைந்தாள், எட்டவில்லை. நாற்காலியைப்போட்டுக்கொண்டு ஏறி எடுக்கலாம் என அவள் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வரத் திரும்பும்போதுதான் வினோத் தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தான். இல்லையில்லை… விதி அவனை இழுத்து வந்தது. 

“இதுக்குத்தான் அப்பாவையும் என்னையும் மாதிரி ஒசரமா வளரணும்ங்கறது. நகருங்க.. நான் எடுத்துத்தரேன் என்றவாறு டப்பாவை இழுத்தவன் தலையில் நங்கென்று ஏதோ விழுந்தது. “அம்மா..” எனக்கத்தியவாறு தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். டப்பா விழுந்து மொத்தமும் சிதறியதையும் பையன் தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததையும் கண்டவள் பதறியடித்து மகனிடம் ஓடி வந்தாள். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டாள். அதற்குள் எலுமிச்சை அளவுக்கு உச்சந்தலையில் புடைத்து வீங்கியிருந்தது. “தேய்ச்சு விட்டுராதே.. ஐஸ் ஒத்தடம் கொடுத்தா சரியாப்போயிரும்” என்றபடி அவனை அழைத்து வந்து ஹாலில் உட்கார வைத்து, துணியில் கட்டிய ஐஸ் துண்டங்களால் ஒத்தடம் கொடுத்தாள்.

களேபரம் கொஞ்சம் ஓய்ந்தபின் அடுக்களைக்குச்சென்று அத்தனையையும் சீராக்கியபோதுதான் அவன் தலையில் விழுந்தது என்னவென்று கண்டாள். இஞ்சி, பூண்டு, ஏலக்காய் போன்றவற்றை இடிப்பதற்காக வைத்திருந்த சின்ன கல்பத்தா சரிந்து கிடந்தது. காலையில்தான் மூத்தவனின் குழந்தை அடுக்களையில் வந்து குறும்பு செய்து கொண்டிருந்தபோது, அவன் காலில் போட்டுக்கொண்டு விடக்கூடாதென அவசரத்தில் கைக்குக்கிடைத்த இடத்தில் அதைச் செருகி வைத்திருந்தாள். இப்போது அதுவே தீம்பாக முடிந்ததையெண்ணி தன்னைத்தானே கடிந்துகொண்டாள். “புள்ளைய ஆஸ்பத்திரிக்குப்போயி வீக்கம் வத்தறதுக்கு ஒரு ஊசியைப்போட்டுட்டு வரச்சொல்லணும். சரியாப்போயிரும்” என எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவள் எண்ணியது போல அது சரியாகப்போகவில்லை. அப்போதைக்கு வீக்கம் வற்றி அவர்களும் அதை மறந்து விட்டிருந்தார்கள். ஒரு மாதம் போல் கழிந்திருக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது என வினோத் சொல்ல ஆரம்பித்தான். விண்விண்ணெனத் தெறிக்கும் வலியோடு தலையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருப்பான். சாத்தியமான எல்லா நோய்க்கூறுகளுக்கும் டாக்டர் பரிந்துரைத்த டெஸ்டுகளையெல்லாம் எடுத்து எல்லாமே நார்மல் என ரிப்போர்ட் வந்தது. எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு வெகு நேரமாய் அவன் அமர்ந்திருப்பது ஆரம்பித்தது. டிவியிலிருந்து ஆட்கள் இறங்கி வந்து தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக அவன் சொன்ன அன்றுதான் குடும்ப மருத்துவர், “நீங்க ஒரு ந்யூராலஜிஸ்டைப் பார்க்கறது நல்லது” என்றார். 

ஆதியோடந்தமாய் அத்தனையையும் கேட்டுக்கொண்ட ந்யூராலஜிஸ்ட், அவர் பங்குக்கு சில டெஸ்டுகளை எடுத்தார். சில விவரங்களை அவனிடமும் குடும்பத்தினரிடமும் தனித்தனியாகக் கேட்க வேண்டுமென்றார். அவனிடம் பேசியபின், “அம்மாவை வரச்சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க” என்றார். வெளியே வந்தவன், “அம்மா.. டாக்டர் கேக்கறதுக்கு கவனமா பதில் சொல்லுங்க, இல்லைன்னா எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குன்னு நினைச்சுக்கப்போறார்” என்றான்.

“போடா..” என்றுவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

அவளிடமும் பேசி விவரங்களை அறிந்து கொண்டபின், “இதோ பாருங்கம்மா, தலைல கனமான பொருள் விழுந்ததால ஒரு சின்ன ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கு. மருந்துகளால அதைக் கரைச்சிரலாம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா அந்தக்கட்டியால ரத்த ஓட்டம் தடைபட்ட பகுதிகள்ல சின்ன பாதிப்பு இருக்குது. ஆண்டவன் அருளால, நினைவாற்றல் பாதிக்கப்படலை, கை கால் இயக்கம் முடங்கலை. ஆனா கொஞ்சம் சித்தப்பிரமை மாதிரி அப்பப்ப ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஏற்படும். மாயத்தோற்றங்கள் தென்படும். அதால அவருக்கு எது நிஜம்? எது மாயைங்கற குழப்பம் ரொம்பவே இருக்கும். அந்த சமயங்கள்ல அதெல்லாத்தையும் அவர் நம்பறதோட நீங்களும் நம்பணும்ன்னு எதிர்பார்ப்பார். சில சமயம் அந்தக் கனவுலகிலேயே வாழவும் செய்வார். கொஞ்சம் பொறுமையா கையாண்டுதான் இதை சரி செய்யணும். எப்பவுமே குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருந்தாதான் எதையும் சரிவர நடத்த முடியும். அதுவும் நீங்க அவரோட அம்மா. இதில் பெரும்பான்மையான பங்கு உங்களோடதாத்தான் இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். மருந்துகள் எழுதித்தரேன், நாளடைவில் சரியாகிரும்” என்றார் மருத்துவர்.

ஆடிப்போயிருந்தாள் கமலம்மாள். ‘தெய்வமே.. என் குழந்தையை காப்பாற்றிக்கொடு, உன் சந்நதிக்கு வரேன் தாயே’ என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள். “எல்லாம் சரியாப்போயிரும்” என எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல் தனக்குத்தானேயும் சொல்லிக்கொண்டாள். வினோதின் அண்ணன் தினேஷுக்கு மட்டும் மருத்துவர் சொன்னதை சொல்லி வைத்தாள். ‘மெடிக்கல் லீவ் போடேன்ப்பா.. உடம்பைச் சரியாக்கிட்டு அப்றம் வேலைக்குப் போகலாமில்லே?’ என வினோதைத் தாஜா செய்து லீவ் போட வைத்தாள். பிரமை கூடிவரும் நேரங்களில் பிள்ளை எங்காவது தொலைந்து விடுவானோ அல்லது அவனைப்பற்றி அக்கம் பக்கம் யாராவது வம்பு பேசி அதனால் அவனது பிற்காலத்தில் அமையப்போகும் திருமண வாழ்வுக்குப் பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்தாள். சிகிச்சையாலும் அவளது அன்பான கவனிப்பாலும் அவனும் கொஞ்சங்கொஞ்சமாகத் தேற ஆரம்பித்திருந்தான்.

மொபைல் கிணுகிணுத்தது… சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள். ‘அடக்கடவுளே.. உட்கார்ந்து கொண்டே தூங்கிட்டேன் போலிருக்கு’ கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். வினோத் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் போயிருப்பான் என எண்ணிக்கொண்டவள் மணியைப்பார்த்தாள், மதியம் இரண்டரை ஆகியிருந்தது. “வினோத்.. சாப்பிட வாப்பா. தட்டு வைக்கிறேன்” குரல் கொடுத்து விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தாள். தெருவில் கலவையான குரல்கள் கூச்சலும் குழப்பமுமாய்க் கியாமுயாவெனக் கேட்டுக்கொண்டிருந்தன. நகர்ந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி விசித்திரமாயிருந்தது.

முழு சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரியை, சாதாரண லுங்கியும் பனியனும் அணிந்த, பொதுஜனம் போல் தோன்றிய ஒருவன் கைகளைக் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று கொண்டிருந்தான். தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்தார்களேயன்றி யாரும் அதைத்தடுக்க முயலவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்த தினேஷிடம்,  ‘ஒரு போலீஸை இப்படி நடத்துவது அரசாங்கக்குற்றம் அல்லவா?’ என மருகினாள் கமலம்மாள்.

“ஐயோ அம்மா!.. உங்களுக்கு விஷயமே தெரியாதில்லே. அந்த போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கறவன் உண்மைல ஒரு ஃப்ராடு. வாடகைக்கு யூனிஃபார்மை வாங்கிப்போட்டுக்கிட்டு அங்கங்க மிரட்டி காசு பிடுங்கிட்டிருந்தான். அவனை கையும் களவுமா பிடிக்க ஒரு நிஜமான போலீஸ் ஆபீசர் ரொம்ப நாளா மஃப்டில சுத்திட்டிருந்தார். இன்னிக்கு, அவர் கிட்டயே கைவரிசையை காமிச்சிருக்கான். அதான் அந்தக்கையைக்கட்டி இழுத்துட்டுப்போறார். தெருமுனைலதான் போலீஸ் ஜீப் நிக்குது. பாத்துட்டுதான் வரேன்” என்றான் தினேஷ்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! சட்டத்தின் கைகள் நீளமானவை, அதன் பிடியிலேர்ந்து தப்ப முடியுமா. சரி.. அது அதன் கடமையைச்செய்யட்டும், நாம நம்ம கடமையைச்செய்வோம். சாப்பாடு ஆறி அவலாகறதுக்குள்ள மொதல்ல சாப்பிடுவோம்” என்றாள்.

“சட்டத்தோட கைகள் மட்டுமில்லே.. இந்த பொடிப்பயலோட கைகளும் வரவர நீளுது. பாருங்க, எப்படி கிள்ளறான்னு. ஆமா, வெளில என்ன கலாட்டா? ஒரே சத்தமா கேட்டுது?” முகத்தைத்துடைத்த டவலை நாற்காலியின் முதுகில் போட்டு விட்டு அமர்ந்தான் வினோத்.

“அது ஒண்ணுமில்லைப்பா.. சும்மா ஏதோ சத்தம்” வினோதுக்குத்தெரியாமல் அம்மாவுக்கு மட்டும் ‘எதுவும் பேசாதீங்க’ என்பது போல் கண்ணைக்காட்டி ஜாடை செய்தான் தினேஷ். பேசும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்று கூட வினோதைத் தூண்டுவதாக அமைந்து விடலாம் என்பதால் அவனிடம் சற்றுக் கவனமாகவே பேசுவது வழக்கம்.

மனம் ஒரு விசித்திரமான ஜந்து. அதை ஆற்றுப்படுத்தும் சொற்களையோ செயல்களையோ விட, அதை ஆட்டுவிக்கும் விதமாய் நடப்பவற்றையே அது மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. இறுகப்பற்றிக்கொள்கிறது, மிட்டாயைக் கொடுக்க மறுக்கும் குழந்தையாய் நம்முடைய சமாதானச்சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அலறி அழுகிறது. அதன் போக்கிலேயே விட்டுத்தான் அதை வசப்படுத்த வேண்டும். கடைசிச்சந்திப்பின்போது மருத்துவர் சொல்லியிருந்தது நினைவில் மோத ‘வினோதின் மனமும் விரைவிலேயே அவன் வசப்படும். என் குழந்தையும் மற்றவர்களைப்போல் நன்றாக வாழ்வான்.. வாழ வேண்டும்’ என அந்தத்தாயுள்ளம் பிரார்த்தித்தபடி பூஜையறை இருக்கும் திசை நோக்கி கை கூப்பியது.

டிஸ்கி: கதையைப் பிரசுரித்த பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Friday, 17 January 2025

விடுதலை

 
கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலை எடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும் மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும் மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை இன்னும் சற்று நெகிழ்த்தி தோள் வரை ஏற்றிக்கொண்டு போர்த்திக்கொண்டான். போர்வையை விட இப்படிப்போர்த்திக்கொள்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். கதகதப்பாகவும் இருக்கும், வழக்கத்தை விட இன்னும் சற்று நேரம் உறங்குவான். இன்று கூட இன்னும் சற்று உறங்கலாம், "எழுந்து என்ன செய்யப்போகிறோம்? ஆபீஸ் போவதா பாழாய்ப்போகிறது?" தனக்குள் நினைத்தபடியே அப்படியே கிடந்தான். 

என்றைக்கு இந்த பாழாய்ப்போன கொரோனா கிருமி நாட்டுக்குள் நுழைந்ததோ அன்றைக்குப்பிடித்தது கேடு. முதல் தடவை லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது எல்லோரையும் போல அவனும் ‘அப்பாடா.. தினமும் அவதியவதியாய் ஆபீசுக்கும் வீட்டுக்கும் ஓடுவதிலிருந்து சற்று விடுதலை கிடைத்தது’ என மகிழ்ந்தவன்தான். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோது, அதையும் ஒரு மகிழ்வுடனேயே எதிர்கொண்டான். ஆனால், எத்தனை பிரியமானவர்களானாலும், வீட்டுக்குள் அடைந்து கொண்டு எந்நேரமும் இருபத்து நாலு மணி நேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் அன்பொழுகப் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது என்ற நிதர்சனம் அப்புறம்தான் அவர்களுக்கு உறைத்தது. லேசாகச் சீறினார்கள், கத்தினார்கள்.. பின் ஒருத்தரையொருத்தர் பிறாண்டிக்கொண்டார்கள். வீட்டிலும் ஆபீஸிலும் இருவரும் வேலை பார்த்துக்கிழிக்கும் லட்சணத்தை விமர்சித்துக்கொண்டார்கள். எதிர்பாரா விதமாய் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே போனபோது, இது வீடுமல்ல… தாங்கள் வாழ்வது வாழ்க்கையுமல்ல.. எனவும், மீள முடியாத நரகத்தில் மாட்டிக்கொண்டு அழுந்துவதாகவும் சுயபரிதாபப்பட்டார்கள். இத்தனை நாள் இனித்த சம்சாரம் இப்போது இருவருக்கும் கசந்தது, கசப்பை வார்த்தைகளால் துப்பிக்கொண்டார்கள். வழித்துப்போட்டுவிடவோ துடைத்துப்போட்டு விடவோ முடியாத காஞ்சிரக்கசப்பு வழிந்தது வார்த்தைகளில். 

உலகம் முழுக்கவே பொருளாதாரம் அடி வாங்கிக்கொண்டிருந்தபோது இவர்களது வாழ்வு மட்டும் விதி விலக்கா என்ன? அவன் வேலை பார்த்த கம்பெனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாமல், ஆட்குறைப்பு என்ற பெயரில் அவன் சீட்டைக் கிழித்தது. கையிருப்பைக் கணக்கிட்டபோது எப்படியும் நாலு மாதங்களுக்குத் தாக்குப்பிடித்து விடலாமெனத்தெரிந்தது. அதற்குள் வேறு வேலை ஏதேனும் தேடிக்கொள்ள வேண்டும். வீட்டுக்கடனின் மாதத்தவணை, மகளின் படிப்பு, அம்மாவின் மருத்துவச்செலவு, எதிர்காலச்செலவுகள் என எல்லாமும் மனக்கண்ணெதிரே நின்று பயமுறுத்தின. இரவுகளில் தூக்கம் வராமல் தவித்தான். எப்படியோ ஒரு மாதம் ஓடி விட்டது.. ‘சீக்கிரத்திலேயே ஒரு வேலையைத்தேடிக்கொள்ளாவிடில் சீரழிவுதான்’ என நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தான். அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் பூமுகத்தை ஒரு கணம் வாத்சல்யத்துடன் பார்த்து விட்டு, அவள் உறக்கம் கலையாமல் தலைமுடியைக் கோதினான், பின் நன்கு இழுத்துப்போர்த்தி விட்டு வெளியே வந்து வாசல் திண்ணையில் அமர்ந்தான்.

இரவில் கனத்த மழை பெய்திருக்க வேண்டும்.. எதிர் வீட்டுக்கூரையில் பதித்திருந்த ஓடுகளிலிருந்து வழிந்த தண்ணீர் மண்ணில் சொட்டிய இடங்களில் சிறு குழிகளைப்பறித்திருந்தது. சொட்டிய தண்ணீர் வெளியேற்றிய கருமண், பருக்கை மணல் நிரம்பிய குழிகளைச்சுற்றிப் படர்ந்து அழகிய கோலம் போல் தோற்றமளித்தது அவனுக்குப்பிடித்திருந்தது. இன்றைய தினம் இப்படியொரு அழகிய காட்சியுடன் விடிந்தது அவனுக்கு மனதுக்கு சொல்லவொண்ணா நிறைவாக இருந்தது. எதிர்வீட்டு முருங்கை மரத்தின் பழுத்த இலைகள் காற்றில் உதிர்ந்து மழையில் நனைந்து தரையுடன் ஒட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்தன. பழுத்த செம்பருத்தி இலையொன்று, ஒரு பூ உதிர்வது போல மேல்கிளையிலிருந்து சொட்டிய நீர்த்துளி பட்டு, மெல்லென ஆடி உதிர்ந்தது. இப்படியே இதைப்பார்த்துக்கொண்டே வாழ்நாளைக் கழித்து விட, முடிந்தால் அந்த இலையைப்போல் யாருக்கும் தெரியாமல் உதிர்ந்து விட முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். எதற்கு இத்தனை பாடுகள்? 

சூடாக ஒரு காப்பி குடித்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. இரவு சாப்பிடாததாலோ என்னவோ நெஞ்சுக்குள் காந்தியது. உள்ளே வந்தான்.. பல் தேய்ப்பதற்காகப் பாத்ரூம் பக்கம் போனவன், திரும்பி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டுக்கொண்டே அடுக்களைப்பக்கம் நகர்ந்தான். யானையெல்லாம் பல்லா தேய்க்கிறது? ஒரு நாள் பல் தேய்க்காமல் காப்பி குடித்தால் ஒன்றும் குறைந்து விடாது. அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தான், மனைவியையும் காணோம், அம்மாவையும் காணோம். திரும்பி ஹாலுக்கு வந்தான், டைனிங் டேபிளில் மகள் உட்கார்ந்திருந்தாள்.

“ம்ம்ம்.. எஞ்செல்லக்குட்டி” கொஞ்சிக்கொண்டே வளைத்து அணைக்க வந்தவனின் கைகளைத் தடுத்தாள் மகள்.

“எப்பா… ஹோம்வொர்க் பண்றேன், டிஸ்டர்ப் பண்ணாதே. ஆன்லைன் க்ளாஸ் முடிஞ்சப்புறம் கொஞ்சிக்கோ”

“ஏதுடி இது? புது பென்சில் பாக்ஸ் மாதிரி இருக்கு? கடையெல்லாம் அடைச்சு மூடிக்கிடக்கே.. எங்க வாங்குன?”

“சரியான மக்குப்பா நீ. ஆன்லைன்லதான் எல்லாமும் கெடைக்குதே, பெரீப்பா வாங்கிக்குடுத்தாங்க”

“போன வாரம் பூப்போட்ட குடை, அதுக்கும் முன்னால ஸ்கூல் பேக்கு, இப்ப பென்சில் பாக்ஸா? ஹூம்… ஒனக்கென்னா!!! தாங்குகதுக்கு ஆளு இருக்கு. ஒங்காரியமெல்லாம் கரெக்டா நடந்துரும் போ. எங்க அண்ணன நல்லா கொள்ளையடி” பெருஞ்சிரிப்புடன் மகளின் முன்னுச்சி முடியைக் கலைத்தான்.

“போப்பா… கண்ணு போடாத” என்றபடி பெண் திரும்பிக்கொண்டது.

“ஆச்சியையும் அம்மையையும் எங்கடீ?. ஒரு காப்பி போட்டுக் கேக்கலாம்ன்னா ஒருத்தரையும் காணோம்”

“அம்மா மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க, ஆச்சி இன்னா வந்தாச்சு” என்றபடி முகவாயை நீட்டி அவன் பின்னால் காண்பித்தது.

“துணி காயப்போட மாடி ரூமுக்குப் போனேன் மக்கா. மேலயும் கீழயும் ஏறி எறங்குறதுக்குள்ள காலு முட்டு ரெண்டும் கழந்துரும் போல இருக்கு. காயப்போட்டுட்டுப்போன்னு ஒம்பெண்டாட்டி… அந்தப்புண்ணியவதிட்ட சொன்னேன், காதுலயே வாங்காம போயிட்டா. மாமியார் சொல்லுக்கு கொஞ்சமாது மதிப்பிருக்கா? எனக்க சாஸ்தாவே… நீதான் இதெல்லாம் கேக்கணும்” நாற்காலியில் உட்கார்ந்து மூட்டுகளை நீவி விட்டுக்கொண்டாள் அவனது அம்மா.

“எம்மா… எம்மா.. காலைலயே ஆரம்பிக்காதீங்கம்மா. ஒங்க பஞ்சாயத்து பெரும்பஞ்சாயத்துல்லா.. தீத்து முடியாதும்மா” அவசரமாய் உதடுகளின் குறுக்கே விரலை வைத்துக்காட்டினான்.

“பொண்டாட்டிய விட்டுக்குடுக்க மாட்டியே, இந்த அழகுசுந்தரிய கெட்டுனதுக்கே இந்தப்பாடு. ஒனக்கெல்லாம் இன்னுங்கொஞ்சம் அழகா, சம்பாதிக்கற பொண்டாட்டி வாச்சிருந்தா ஒன்னிய கையிலயே புடிக்க முடியாது போ. நேத்து என்ன செஞ்சா தெரியுமா?”

“நீங்க சொல்றதத்தான் அவ கேக்க மாட்டான்னு தெரியுமில்லே, எதுக்கு வம்பு வளர்த்துதீங்க?. அவ கிட்ட ஒரு வேலையைச் சொல்ல வேண்டியது, அப்றம் அங்கியே நின்னு மேற்பார்வை பாத்துக்கிட்டு நொட்டை சொல்லிட்டே இருக்க வேண்டியது. மாமியா இப்படியிருந்தா எந்தப்பொம்பளைக்கும் கோவம் வரத்தாம்மா செய்யும். அவள நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு நகர்ந்துருங்க, சரியாச்செய்யலைன்னா அப்றம் திருத்தம் சொல்லுங்க. அத விட்டுட்டு எப்பமும் சண்டை போட்டுட்டே இருந்தா எப்படிம்மா?”

“எலேய்.. போக்கத்துப்போயி ஒனக்க வீட்டுல வந்து கெடக்கேம்லா.. நீ இதுவும் பேசுவ.. இன்னுமும் பேசுவ. இதே.. ஒங்க மயினின்னா, எம் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச மாட்டா தெரியுமா?”

அவனுக்குச் சிரிப்பாக வந்தது. அம்மை படுத்தும் பாடு தாங்காமல் புருஷனுக்குச் சாவி கொடுத்து அம்மையை இங்கே அனுப்பியதே அண்ணிதான். கொஞ்ச நாளாவது அண்ணி நிம்மதியாக இருக்கட்டுமென இவனும் போய்க் கூட்டி வந்து விட்டான். வந்த இரண்டாம் நாளிலிருந்தே மாமியாருக்கும் மருமகளுக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. நோய்த்தொற்றைப்பற்றிய பயமும், எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையின்மையும் மனித மனங்களை மிகவும் பலவீனமாக்கி விட்டிருப்பதும், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்காதா!! வீட்டிலிருக்க மாட்டோமா!! என ஏங்கியது போய்  இப்போது காற்று வாங்கக்கூட வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பது அப்பலவீனத்தை இன்னும் பெருக்குவதும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது. பெருகிய பலவீனம் தற்கொலை எண்ணங்களைத் தோற்றுவித்தது. இப்படியே போனால் மனநோயாளியானால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை எனத்தோன்றியது. “இனிமேல்தான் ஆக வேண்டுமா?” என மனைவி கேட்பாள். சிந்தனை விளைவித்த சிரிப்பை அடக்கியதில் லேசாகப் புரையேறி இருமினான். நெஞ்செரிச்சல் அதிகப்பட்டது போல் தோன்றியது, நீவி விட்டுக்கொண்டான்.

“எம்மா.. சூடா ஒரு கப் காப்பி தாருங்க, நெஞ்சுக்குள்ள என்னமோ போல இருக்கு, சூடா என்னமும் குடிச்சா கொள்ளாமாட்டு இருக்கும்”, 

“இன்னா தாரேன்” அம்மா எழுந்து போய் பாலைச்சூடாக்க அடுப்பில் வைப்பது தெரிந்தது. தலை கனத்தது, டேபிளில் கவிழ்ந்து கொண்டான்.

“சூடாட்டு குடி மக்கா, இப்பம் ஒரு நிமுசத்துல இட்லி அவிச்சுருதேன், சாப்புடு. அசிடிட்டியெல்லாம் ஓடிப்போயிரும். நேரா நேரத்துக்குச் சாப்பாடு குடுக்காம கொள்ளாம எம்புள்ளைக்கு வியாதிய வரவழைச்சுட்டாளே மகராசி” கையில் காப்பியைக் கொடுத்து விட்டு நகர்ந்தாள் அம்மா.

வாங்கிக்கொண்டு ஒரு மிடறு உறிஞ்சியபடி திரும்பியபோது, கைகளில் கனத்த பைகளுடன் மூச்சு வாங்க அவன் மனைவி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். காப்பியை அப்படியே டேபிளில் வைத்து விட்டு விரைந்து போய் பைகளை வாங்கிக்கொண்டான். ‘அம்மா சொன்ன வார்த்தைகளில் எதெல்லாம் இவள் காதில் விழுந்திருக்குமோ!! இன்னிக்கு எப்படில்லாம் ஆடப்போறாளோ!!’ நெஞ்சத்துடிப்பு காது வரைக்கும் கேட்டது. பைகளை உள்ளே கொண்டு வைத்து விட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு முன்னறை நோக்கி நகர்ந்தான். உள்ளே அம்மாவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடப்பது காதில் விழுந்தது.

அலுப்பாக உணர்ந்தான், ‘போதும்டா சாமி’ என எரிச்சலாக இருந்தது. சோபாவில் மடங்கிப்படுத்துக்கொண்டான். ‘ஏ.. யப்பா!!.. இன்னும் மழை அடிக்கும் போலிருக்கு, என்னமா புழுங்கி வேர்த்து ஊத்துது’ புரண்டு அப்படியே கிடந்தான்.

‘ஃபேன் போட்டுக்கோ’ என்றது ஒரு மனம்

‘ஆம்மா.. நீ கெட்ட கேட்டுக்கு ஃபேன் ஒண்ணுதான் குறைச்சல்’ என கரித்துக்கொட்டியது இன்னொரு மனம். கண்ணைச்சுழட்டிக்கொண்டு வர அப்படியே மெல்ல.. மெல்ல.. அமிழ்ந்தான்.

டேபிளின் மேலிருந்த காப்பிக்கோப்பையை சற்று நேரம் கழித்துதான் அவன் அம்மா பார்த்தாள். ‘புள்ள சூடா கேட்டான், ஆறிப்போயிட்டுதே.. யெய்யா வேற காப்பி கொண்டாரட்டுமா? என குரல் கொடுத்தாள்.

பதில் வரவில்லை.

அவனைத்தேடி முன்னறைக்கு வந்து மறுபடியும் கேட்டாள்

பதிலில்லை.

தூங்கி விட்டானோ எனத் தோன்றினாலும் அவன் படுத்திருந்த கோணத்தில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள், அருகில் வந்து அவன் தோளைப்பற்றி உலுக்கினாள்… வியர்த்துக் குளிர்ந்திருந்தான்.

“ஏ எம்மா… எம்புள்ள என்னமோ போல கெடக்கானே, யாராச்சும் வந்து என்னன்னு பாருங்களேன்” அவள் போட்ட கூப்பாடில் அடுக்களையிலிருந்த அவன் மனைவி ஓடி வந்தாள், எதிர் வீட்டினர் வந்தனர், அடுத்த தெருவிலிருந்து அழைத்து வந்திருந்த டாக்டர் பார்த்தார். இசிஜி மெஷினை இணைத்தார், நீளநீளமான கோடுகளாக தாளில் வரைந்து தள்ளியது அது. பார்த்து விட்டு, அவன் கழுத்தில் இரு விரல்களால் லேசாக அழுத்தி சோதித்து விட்டு,   “மாஸிவ் அட்டாக் மாதிரி தெரியுதும்மா, ஹி இஸ் நோ மோர்” என்று உதட்டைப்பிதுக்கி விட்டு போய் விட்டார்.

அங்கமெல்லாம் பதற, கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த அவன் மனைவியை நோக்கி கையை நீட்டியபடி கத்தத்தொடங்கினார் அவன் அம்மா ”அடிப்பாவி.. டென்ஷனக்குடுத்துக்குடுத்து எம்புள்ளயக்கொன்னுட்டியே. மாரடைப்புல மனுசன் சாகறது என் பரம்பரைலயே கெடையாதே”

அவன் உடல் குளிர்ந்து சில்லிட ஆரம்பித்திருந்தது. நிகழ்கால எதிர்காலக் கவலைகளிலிருந்து ‘அவனுக்கு’ விடுதலை கிடைத்து விட்டது. “மல மாதிரி சப்போர்ட்டா இருந்தியளே, இப்பம் என்னை நட்டாத்துல விட்டுட்டியளே.. இனி எனக்கு ஆரு இருக்கா? ஓரோருத்தர் கிட்ட ஏச்சு வாங்க வெச்சுட்டுப்போயிட்டியளே” பெருங்குரலெடுத்து அவன் மனைவி அழுத குரல் வீடெங்கும் எதிரொலித்தது.

தேற்றத்தான் அவன் இல்லை.

சிறுகதையை வெளியிட்ட "விருட்சம்" நாளிதழுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails