Saturday, 9 November 2013

எப்படிச்சொல்வேனடி தோழி!! (குங்குமம் தோழியின் தினமொழிகளில் சாரல் துளிகள்)

ஃபேஸ்புக்கில்"குங்குமம் தோழி" பத்திரிகை, நண்பர்களின் சிந்தனைகளை தினமொழி என்ற தலைப்பில் வெளியிட்டு வருகிறது. எனது சாரல்துளிகளும் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கம் என்றாலும் இந்தத்தடவை தனது அளவற்ற அன்பினால் என்னைத் திக்கு முக்காடச் செய்து விட்டாள் என் தோழி. செப்டம்பர் இறுதி நாளில் தொடங்கி அக்டோபர் 10-ம் தேதி வரைக்கும் ஒன்றிரண்டு நாட்களைத்தவிர தினமும், அதாவது கிட்டத்தட்ட அந்த வாரம் முழுவதையுமே எனது "சாரல் துளிகளுக்காக" ஒதுக்கிய அவளது அன்பை என்னவென்பது.

"இந்த வாரம்.. எனது வாரம்" என்று வீட்டில் சற்றே கர்வப்பட்டுக்கொண்டேன். பின்னே,.. நம் அருமை பெருமைகளை வீட்டிலுள்ளவர்களிடம் இது மாதிரியான சமயங்களில்தானே டமாரம் அடித்துக்கொள்ள முடியும். நமக்கென்று ஒரு கெத்து இருக்கிறதல்லவா :-)))

உங்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதே சமயம் என் கல்வெட்டுகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டுமே. ஆகவே இங்கே பகிர்ந்து விட்டேன் :-)
இன்னொரு முறை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி.

Monday, 4 November 2013

பாதுகாப்பே மகிழ்ச்சியானது..

தீபாவளிக்கொண்டாட்டமெல்லாம் நல்லபடியாக முடிந்ததா?.. பெண்களெல்லாம் பலகாரங்கள் சுட்டு முடித்த களைப்பில் இருப்பார்கள். மற்றவர்கள் அவற்றை ஒரு கை பார்த்த களைப்பிலும் புதுப்படங்களைக் கண்டு களித்த மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். ஆனால், இந்தப் பொட்டுப்பொடிசுகளுக்கு மட்டுந்தான் இன்னும் தீபாவளி முடியவில்லை. பின்னே.. வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் இன்னும் மீதம் இருக்கிறதே :-) நடுராத்திரி என்றும் பாராமல் வெடித்துத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். சிறிசுகள் பட்டாசு கொளுத்தும் ஸ்டைலைப் பார்த்தால் பழமொழியில் பொய்யில்லை என்றுதான் தோன்றும் :-). புதுத்துணிகள் பலகாரங்கள் கொடுப்பதை விட பட்டாசுகள்தானே அவர்களுக்கு தீபாவளி மகிழ்ச்சி.

"எக்கா.. லெச்சுமி வெடி, குருவி வெடியெல்லாம் வெடிக்கறது இருக்கட்டும். அணுகுண்டை வெச்சு வெடிக்க வைப்பியா?" என்று நக்கலுடன் கேட்டான் வயதில் இளையவனானாலும் விளையாட்டுத்தோழனான வெங்கிட்டு. எல்லாம் ஒரு காலத்தில் நான் பட்டாசு வெடித்த லட்சணத்தைப் பார்த்துத்தான். ஒரு தாளைக் கிழித்து அதில் பட்டாசுத்திரி படும்படி வைத்துவிட்டு தாளின் ஒரு முனையைக் கொளுத்தி விட்டு ஓடி வந்து விடுவேன். தீ பரவி பட்டாசுத்திரியைத் தொட்டதும் படாரென்று வெடிக்கும். அவ்வளவு வீர தீர தைரியசாலியான என்னை.. என்னைப் பார்த்து ஒரு சிறுவன் இப்படிக் கேட்கலாமோ!! :-))). நக்கலடித்ததுமில்லாமல் "நானெல்லாம் அணுகுண்டு வெடிக்க பயப்படவே மாட்டேன். ஒண்ணு வெடிச்சுக் காட்டட்டுமா" என்று உதார் வேறு விட்டுக்கொண்டே ஒரு அணுகுண்டைக் கையில் எடுத்தான். சரி,.. ஊதுவத்தியைக் கொடுத்து விட்டு நாம் ஓட்டம் பிடித்து விடலாம் என்று நம்ம்ம்ம்பி கொஞ்சம் இந்தப்பக்கம் திரும்பினேன். 'பட்ட்டார்' என்றொரு சத்தம் காதைப்பிளந்தது. திடுக்கிட்டுத்திரும்பினால் கொதகொதவென்று வெந்த கையுடன் நிற்கிறார் அண்ணாத்தை. என்னடாவென்றால் அணுகுண்டை கையிலிருக்கும்போதே பற்ற வைத்து தூக்கி எறிந்து ஆகாயத்தில் வெடிக்க வைக்கலாம் என்று நினைத்தாராம். ஃப்ளாப் ஆகிவிட்டதாம். கூலாகச் சொல்கிறார். 

 நன்றாக நாலு திட்டு திட்டிவிட்டு, தரதரவென்று வீட்டுக்குள் இழுத்து வந்து குளிர்ந்த தண்ணீரில் கையை விடச்சொல்லி, பின் இங்க்கையும் நிறைய ஊற்றி, "வீட்டுக்குப் போய் அம்மா கிட்ட காமி. மருந்து இருந்தா போட்டு விடுவாங்க. இல்லைனா ஆசுத்திரிக்குப் போ" என்று சொல்லி அனுப்பினேன். இத்தனை களேபரத்திற்கும் பிள்ளையாண்டன் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வர வேண்டுமே!! மூச்.. அத்தனை வேதனையையும் எப்படித்தான் அடக்கிக் கொண்டிருந்தானோ. இப்பொழுது நினைத்தாலும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

இங்கேயும் சில பிரகஸ்பதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். வெடிகளை மட்டுமென்ன, ராக்கெட்டுகள், பூச்சட்டி என்று சொல்லப்படும் பொறிவாணங்களையும் கூட அனாயாசமாகக் கையில் பிடித்துக்கொண்டுதான் பற்ற வைக்கிறார்கள்.அது பொங்கி மங்களம் பாடும்போது இவர்களும் சேர்ந்து கொண்டு "ஐயோ.. அம்மா, வலிக்குதே" என்று கோரஸ் பாடுவதுண்டு.

மும்பையில் தீபாவளி தேய்பிறை ஏகாதசியன்று ஆரம்பித்து, வளர்பிறை துவிதியை வரைக்கும் ஏழு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் லக்ஷ்மி பூஜை மிகவும் முக்கியமான பண்டிகை. இதைப்பற்றி விவரமாக ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சாயந்திரம் வீட்டில் லக்ஷ்மி பூஜையை முடித்து விட்டு, புதுசை உடுத்திக்கொண்டு பார்க்கிங்கிற்குப் போய் வாகனங்களுக்குப் பொட்டிட்டு, மாலை சாற்றி, ஊதுவத்தி காண்பித்து பூஜை செய்தபின் பட்டாசுகளைக் கொளுத்துவது இங்கே வழக்கம். நாங்களும் வழக்கம்போல் வீட்டில் பூஜை முடித்து, வாகனங்களுக்கும் பூஜை செய்து விட்டு பட்டாசு கொளுத்த ஆரம்பித்தோம். பையருக்கு நட்சத்திரப்படி நேற்று பிறந்தநாளும் கூட :-))

எங்கள் வீட்டில் கடந்த சில வருடங்களாக ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளைக் குறைத்துக்கொண்டு ஒளிவெள்ளத்தில் மூழ்கடிக்கும் பட்டாசுகளை வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். "Go green" என்று சிந்திக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளைகளின் ஆர்டர். அவ்வப்போது குழந்தைகள் சொல்வதையும் பெரியவர்கள் கேட்க வேண்டும்தானே :-). இந்த வருடம் மும்பை முழுக்கவே ஒலிப்பட்டாசுகள் குறைவாகவும் ஒளிப்பட்டாசுகள்தான் அதிகமாகவும் வெடிக்கப்பட்டதாக நாளிதழ் தகவல் கொடுத்தது. இதைக் கண்கூடாகவும் கண்டோம். 

பட்டாசு கொளுத்தி முடித்தபின் வீட்டுக்கு வந்து, தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்கள் பில்டிங்கின் எதிர் வரிசையிலிருக்கும் குடியிருப்பில் கீழ்த்தளத்தில் கடைகளும் உண்டு. கடைக்காரர்கள் பை நிறைய விதவிதமான பட்டாசுகளை வைத்துக்கொண்டு ஜமாய்த்துக்கொண்டிருந்தார்கள். கேலியும் கூத்துமாகப் பொழுது போய்க்கொண்டிருந்தது. வெடிகளில் 25 shots என்றொரு வெடிவகை உண்டு. இரண்டு செங்கல்களை ஒட்டி பாக்கெட் போட்டுக்கொடுத்தாற்போன்ற அமைப்பிலிருக்கும் அதை திரியைக் கொளுத்தி வைத்து விட்டால் போதும். 25 வெடிகளும் பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகக் கிளம்பி வானத்தில் போய் வெடித்துப் பூப்பூவாய்ச் சிதறும். இதை அந்த இளைஞர் கூட்டத்தில் ஒருத்தர் பற்ற வைத்து விட்டு யதாஸ்தானம் திரும்பினார். அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

சர்ர்ர்ரென்று வேகமாக வந்த ஹோண்டா சிட்டி வாகனமொன்று புகைந்து கொண்டிருந்த வெடியின் மேலாகக் கடந்து அதை இழுத்துக்கொண்டு சென்றது. "அரே.. பாப்ரே.." என்று அலறினார்கள் அக்கம்பக்கம் நின்றவர்கள் அனைவரும். நடந்த விபரீதத்தை வண்டியின் டிரைவர் உணருமுன்னே வண்டிக்கடியில் மாட்டியிருந்த பெட்டியிலிருந்து ஒவ்வொரு வெடியாகக் கிளம்பி டாம்.. டாமென்று வெடிக்க ஆரம்பித்தது. அவ்வளவுதான் தடதடவென்று வண்டியிலிருந்தவர்கள் இறங்கி ஓடி  பாதுகாப்பாக நின்று கொண்டார்கள். உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஓடுவது என்று சொல்வார்களே!! அதை அன்று கண் முன் கண்டேன். கெட்டதிலும் நல்லதாக ஒரு விஷயம் நடந்திருந்தது. அதாவது வண்டியில் மாட்டி இழுத்த வேகத்தில் பெட்டி கிடைமட்டமாகச் சரிந்திருந்ததால் வெடிகளும் மேற்புறமாகக் கிளம்பாமல் கிடைமட்டமாகச் சாலையில் சென்று வெடித்துக்கொண்டிருந்தன. மேற்புறமாகக் கிளம்பியிருந்தால் வண்டி என்னவாகியிருக்குமென்று நினைத்துப்பார்க்கவே குலை நடுங்குகிறது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதேனும் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதே. அதுவும் குஞ்சும் குளுவானுமாகக் குழந்தை குட்டிகளுடன் சென்று கொண்டிருந்த குடும்பம் அது.

சாலைகளில் வெடிகளை வைப்பவர்கள் கடந்து செல்பவர்களை எச்சரிக்க வேண்டாமோ!! வழக்கமாக "பட்டாசு வெச்சிருக்கோம். கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க" என்று அனைவரும் எச்சரிக்கை செய்வது வழக்கம்தான். என்னவோ போங்க.. அன்றைக்கு அந்தக் குடும்பத்தினரின் தலை தப்பித்தது தம்பிரான் புண்ணியந்தான். காரின் கீழிருந்து புறப்பட்டு வந்த ஒவ்வொரு வெடிகளையும் பதைபதைக்கும் மனங்களோடு நாங்களும் பார்த்துக்கொண்டிருந்தோம்.

ஒரு சின்னப்பொறி எத்தனையோ குடும்பங்களின் வீடுகளை ஒளிவெள்ளத்தில் ஆழ்த்துகிறது. அதேபோல் கண்ணீர்க்கடலிலும் மூழ்கடித்து விடவும் வல்லது. நாம் மட்டுமல்ல நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கத்தான் பண்டிகைகளும் கொண்டாட்டங்களும். காலத்துக்கும் நினைத்துப் பார்த்து வெம்பி வேதனைப்பட அல்ல.
நேற்று இரவில் சுமார் பதினொரு மணியளவில் பக்கத்துப் பில்டிங்கில் எல்லோருடைய தூக்கத்தையும் கலைக்கும் வண்ணம் அதிரும் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. தவுசண்ட் வாலாவோ என்னவோ!!. "திவாலி முடிஞ்சாச்சு.. போய்த்தூங்குங்க" என்று கத்த வேண்டும் போலிருந்தது. அதன் பின் ஒன்றரை மணியளவில் ஆரம்பித்து விடியற்காலை சுமார் நான்கு மணி வரைக்கும் கூட பட்டாசுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாம். ear muffler மற்றும் ear plugs துணையிருந்தும் சத்தம் காரணமாகத் தூங்க முடியாமல் தவித்த பையர் விடியலில்தான் தூங்கியிருக்கிறார். நமக்கே இப்படியென்றால் கைக்குழந்தைகள் முதியவர்கள் இருக்கும் வீடுகளில் என்ன கதியோ!!. பண்டிகையின் மகிழ்ச்சியையே கெடுத்து விடுகிறது இப்படிப்பட்ட சிலரின் செயல்கள். அததற்கென்று நேரம் காலம் இருக்கத்தானே செய்கிறது.

எல்லோரும் சந்தோஷப்படத்தான் பண்டிகைகள். அத்தனை பேரையும் வேதனைக்குள்ளாக்கி ஒரு சிலர் சந்தோஷப்பட அல்ல. நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்.. நம்மைச்சுற்றியிருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. (எங்கூர்ல இன்னும் திவாலி முடியலை :-))

LinkWithin

Related Posts with Thumbnails