Tuesday 29 March 2011

ஒரு பிளாஸ்டிக் மழை இங்கு பொழிகின்றது...

பாலைவனம் வழியா தன்னோட ஒட்டகத்துல பயணம் செஞ்சுக்கிட்டிருந்த ஒருத்தர், ராத்திரி ஆனதும் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்ன்னு ஒரு இடத்துல கூடாரம் அமைச்சி தங்கினார். ராத்திரி நேரமாக ஆக பயங்கரமா குளிர ஆரம்பிச்சதும் கம்பளியை இழுத்துப்போத்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சார். அரைத்தூக்கத்துக்கு போயிருப்பார். அவரோட கையை யாரோ சுரண்டறமாதிரி உணர்ந்து திடுக்கிட்டு முழிச்சார். யாருன்னு பாத்தா.. அவரோட ஒட்டகம் பாவமா முழிச்சிக்கிட்டு நின்னுட்டிருந்தது.

"வெளியே குளிர் தாங்கலை.. என்னோட முன்னங்கால்களை கூடாரத்துக்குள்ள வெச்சிக்கட்டுமா.. கொஞ்சம் இதமா இருக்கும்.."ன்னு பரிதாபமா கேட்டதும் சரின்னு ஒப்புக்கிட்டார்.(ஒட்டகம் எங்கியாவது பேசுமான்னு ஆராவது கேட்டீங்க ஒட்டகத்து கிட்டயே பிடிச்சுக்கொடுத்துடுவேன் :-)) இன்னும் கொஞ்சம் நேரமானதும் பாதி உடம்பை கூடாரத்துக்குள்ள வெச்சிக்க அனுமதி கேட்டது. கூடாரத்துக்குள்ள கொஞ்சம் இட நெருக்கடியாக இருக்குமேன்னு யோசிச்சாலும் ஒட்டகத்து மேல பரிதாபப்பட்டு சரின்னுட்டு ஒரு ஓரமா ஒதுங்கி படுத்துக்கிட்டாரு.. இன்னும் கொஞ்ச நேரமானதும், 'ரொம்ப குளிருது.. கூடாரத்துக்குள்ளயே வந்துடறேனே'ன்னு சொல்லிச்சு.

'வேண்டாம்.. கூடாரத்துக்குள்ள ரெண்டுபேரு தங்கற அளவுக்கு இடமெல்லாம் கிடையாது'ன்னு அவர் சொல்லிக்கிட்டிருக்கையிலேயே ஒட்டகம் கூடாரத்துக்குள்ள வந்து நின்னுது. சுத்தும் முத்தும் பாத்துட்டு, 'நீ சொன்னது சரிதான், இந்த கூடாரத்துக்குள்ள ஒருத்தருக்கு மட்டும்தான் இடமிருக்கு.. அதனால, நா இங்கே தூங்கறேன். நீ வெளியே படுத்துக்கோ'ன்னு சொல்லி பயணியை வெளியே தள்ளிட்டுது. பாவம் அவர்.. பரிதாபப்பட்டு இடம் கொடுத்ததுக்கு தனக்கு இப்படி ஒரு கதியான்னு குளிர்ல வெறைச்சிப்போயி நின்னாரு.

கிட்டத்தட்ட இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. ஒரு காலத்துல, வீட்டுக்கு ஏதாவது பொருட்கள் வாங்குனா, அதை காகிதப்பைகள்ல போட்டுக்கொடுப்பாங்க. சிலசமயங்களல நம்ம அஜாக்கிரதையால பேப்பர் கிழிஞ்சுட்டா, பொருட்கள் எல்லாம் சிந்திடும். முக்கியமா.. மழைக்காலங்கள்ல பேப்பர்லாம் தண்ணியில ஊறிப்போயி பொருட்களும் கெட்டுப்போயிடும். அந்த சமயத்துல, ப்ளாஸ்டிக் பைகள் பேப்பரின் உபயோகத்தை குறைச்சு, மரங்களை காப்பாத்த வந்த ஆபத் பாந்தவன், அனாத ரட்சகனா தெரிஞ்சதுல வியப்பேதும் கிடையாது. பல்பொருள் அங்காடிகளில் மட்டுமல்ல, இப்பல்லாம் சின்னக்கடைகளில் கூட சின்ன அளவுகளான அம்பதுகிராம், நூறுகிராம்லயும் பொருட்களை எடைபோட்டு, பாக்கெட் போட்டு வெச்சிடறாங்க. நாம கேட்டதும் சட்ன்னு எடுத்துக்கொடுத்துடறாங்க.

அதுவுமில்லாம அப்பல்லாம் ஏதாச்சும் வாங்கணும்ன்னா, கையில் பை கொண்டு போகணும். திரவப்பொருட்களான பால்,தயிர், எண்ணெய் இதெல்லாம் வாங்கணும்ன்னா பாத்திரம் கொண்டு போகணும்.இதையெல்லாம் நொச்சுப்பிடிச்ச வேலையா நினைச்ச மக்களுக்கு, மார்க்கெட் போகணும்ன்னா கையை வீசிக்கிட்டுப்போலாம்,  எதுவானாலும், அவங்களே பையில் போட்டுக்கொடுத்துடுவாங்க.. என்ற நினைப்பே தேவாமிர்தமா இனிச்சிருக்கும். பலன்.. கிராமங்கள், பெருநகரங்கள்ன்னு பாகுபாடு இல்லாம ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பைன்னு வாங்கி குப்பையை குவிச்சிக்கிட்டிருந்தாங்க.. ஆனா இந்த விஷயத்துல, கிராமங்களால நகரங்கள விட கூடுதல் குப்பை சேர்க்கமுடியலை.. என்ன இருந்தாலும் நகரத்துக்காரங்க கொஞ்சம் ஃபாஸ்டு இல்லியா :-))

முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு. இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா ?... சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.

நாம வேணாம்ன்னு தூக்கிப்போடற பிளாஸ்டிக்குகள்தான் கொஞ்சம் கொஞ்சமா நம்மோட சுற்றுப்புற சூழ்நிலையை கெடுக்குது. அங்கங்கே உண்டாகும் குப்பை மலைகள், அப்புறம் காத்துல பறந்து ஆபத்தை விளைவிக்கும் பாலிதீன் பைகளைப்பத்தி சொல்லவே வேணாம். இந்தப்பைகளெல்லாம் கழிவு நீர்க்கால்வாய்கள், மழை நீர் வடிகால்கள் இதிலெல்லாம் போய் அடைச்சிக்கிட்டா அங்கங்கே தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு அதிலெல்லாம் கொசுக்கள் வாடகை கொடுக்காமலேயே குடியும் குடித்தனமுமா இருக்கும். மழை சமயங்கள்ல வெள்ளம் தேங்கி ஏகப்பட்ட சேதத்தையும் உண்டுபண்ணும். மும்பையில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவும் ஒரு காரணமா இருந்ததால்தான் அதுக்கப்புறம் பாலிதீன் பைகள் உபயோகப்படுத்துவதை தடைசெஞ்சாங்க. மீறி உபயோகப்படுத்தினா அபராதம்ன்னும் எச்சரிக்கை விடுத்தாங்க.

 நீர், நிலம், ஆகாயம், பூமின்னு இயற்கையின் நாலு பூதங்களையும் பயமுறுத்தும் ஆறாவது பூதம் இது. ஒரு பிளாஸ்டிக் துண்டு சிதைவடைய சுமார் ஆயிரம் வருஷங்களாகும். வெயில்ல காய்ஞ்சாலும் நுண்ணிய துண்டுகளாகுமே தவிர முழுசும் அழியாது. இந்த மாதிரி நுண்ணிய துண்டுகள்ல தண்ணீரில் அடிச்சிட்டுப்போறதெல்லாம் ஆத்துலயும் கடல்லயும் ஒதுங்கும், இல்லைன்னா மூழ்கிப்போயிடும். இப்படி மூழ்கற சின்னச்சின்ன துண்டுகளை சாப்பாடுன்னு நினைச்சு கடல்வாழ் உயிரினங்கள் முழுங்கிவெச்சுடும். வயித்துக்குள்ள போன பிளாஸ்டிக் செரிக்காம உணவுமண்டலக்குழாயை அடைச்சிக்கிடும். அதனாலயே பட்டினிகிடந்து மேலோகத்துக்கு டிக்கெட் வாங்கறதும் உண்டு.

கடலில் கொட்டப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அறுந்ததால் தூக்கிவீசப்பட்ட மீன்பிடி வலைகளில் மாட்டிக்கிட்டும் உசிரைவிடும் கடல்வாழ் உயிர்கள் ஏராளம். சுமாரா நூறுமில்லியன் மெட்ரிக் டன்கள் அளவுல கடல்ல ப்ளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டிருக்கலாமாம். இதனால ஏற்படக்கூடிய பாதிப்புகளை நினைக்கவே பயமாருக்கு. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காரீயம் போன்ற நச்சுப்பொருட்கள் தண்ணீர்ல கரைஞ்சு, மீன்களின் உடலில் கலக்குது. அதே மீனை மனுஷன் சாப்பிட்டா அந்த விஷம் மனுஷனோட உடம்பில் கலந்தா என்னெல்லாம் விளைவுகளை உண்டாக்கும் :-(

அளவுக்கு மேல சேருதேன்னு இதுகளை அழிக்கவும் முடியாது. தானாவே அழியறதுக்கு சுமார் ஆயிரம் வருஷங்களாவுதேன்னு தீக்கு தின்னக்கொடுத்தா அது சுற்றுச்சூழலை இன்னும் மாசுபடுத்துது. ப்ளாஸ்டிக்கிலிருக்கும் காட்மியம், காரீயம், பென்சீன், வினைல் க்ளோரைட், ஹைட்ரோகார்பன்கள், அப்புறம் எரிக்கும்போது வெளியேறும் நச்சுவாயுக்கள் கான்சரைக்கூட வரவழைச்சுடும். இதெல்லாம் தண்ணீரில் கரைஞ்சும், காத்துல கலந்தும் ஏற்படுத்தும் விளைவுகள் கணக்கிலடங்காது. இதெல்லாம் சுவாசிப்பதால் நம்ம நரம்புமண்டலமும் பாதிக்கப்படற அபாயம் இருக்கு.

பழைய பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டு, மெஷின் மூலம் நுணுக்கப்பட்டோ, அல்லது நார்களா உரிக்கப்பட்டோ மறுசுழற்சிக்கு தயாராகுது. மறுசுழற்சி செய்யறதுமூலம் பூமியிலிருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்ன்னாலும் அது நிரந்தரத்தீர்வாகாது. மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கின் தரம் நிச்சயமா குறைஞ்சதாகவே இருக்குது. அதுல காரீயத்தின் அளவு கூடுதலா இருப்பதாகவும், அதை உபயோகப்படுத்தி செய்யப்படும் பொருட்கள், முக்கியமா விளையாட்டுப்பொருட்கள் குழந்தைகள் உபயோகப்படுத்த ஏத்தவை இல்லைன்னும் சொல்லப்படுது. அதுவுமில்லாம உற்பத்தி செய்யப்படும்போது எப்படி நச்சு வாயுக்கள் வெளிப்படுதோ.. அதேமாதிரி மறுசுழற்சி செய்யப்படும்போதும் வெளிப்படுது. இது காத்துல கலக்கறதுனால, தோல் எரிச்சல், சுவாசக்கோளாறுகள் எல்லாம் உருவாகுது.

எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.

1 -  பெட் பாட்டில்கள்,

2 - HDPE ( High Density Polyethylene) லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது.

3 - PVC (Poly Vinyl Chloride)சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது.

4 - LDPE (Low Density Polyethylene) உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது.

5 - PP (Poly propylene) சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது.

6 - P (PolyStyrene) சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.

7 - இதர வகைகள். இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.

இதுல 3,6,7 ஆம் வகைகளை மறுசுழற்சி செஞ்சா சுற்றுப்புற சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும். மேலும் கெடுதலை தவிர்க்கணும்ன்னா உற்பத்தி குறைக்கப்படணும். இதனால இதுகளை உற்பத்திசெய்ய ஆகும் பெட்ரோல் செலவும் மறைமுகமா குறைக்கப்படுது. ஆனா, தண்ணியில விட்டதை தண்ணியிலேயே பிடிக்கிறமாதிரி, நாக்பூரில் ராய்சோனி எஞ்சினீயரிங் காலேஜ்ல விரிவுரையாளரா இருக்கும் அல்கா உமேஷ் சட்காவ்ங்கர் என்பவர் மார்ச் 3, 2003 அன்று, ஒருகிலோ ப்ளாஸ்டிக் கழிவிலிருந்து 800கிராம் பெட்ரோலை பிரிச்செடுத்து சாதனை செஞ்சுருக்கார்.

எல்லோருக்குமே சவாலா இருக்கறது பாலிதீன் பைகள்தான். மழைத்தண்ணி பூமிக்குள்ள போகாம இது பெரும்பாலும் தடுத்துடறதால நிலத்தடி நீர் குறையற அபாயமும் இருக்கு. வெய்யில்ல காய்ஞ்சு பொடிப்பொடியாகும் இந்தப்பைகள்ல இருக்கற காரீயம் போன்ற நச்சுக்கள் தேங்கற ஓரளவு நிலத்தடி நீர்ல கலந்து உடலுக்கு கெடுதல் விளைவிக்குது. காத்துல பறந்து வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் உண்டாக்குது. ஆடுமாடுகளும் அதை இரைன்னு நினைச்சு தின்னுட்டு உணவுப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு உசிரை விடுது.

இந்தப்பைகளை குப்பை சேகரிக்கறவங்க கிட்டேயிருந்து சேகரிச்சு அதை bitumen என்ற வேதிப்பொருளுடன் கலந்து ரோடு போடறதுக்கு பயன்படுத்தலாம்ன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. மதுரை தியாகராஜர் இஞ்சினியரிங் காலேஜ் ப்ரொஃபசரான ஆர். வாசுதேவன்தான் அந்த பெருமைக்குரியவர். நவம்பர் 2002ல் பரிசோதனை முயற்சியா ரோடும் போட்டிருக்காங்க. பைகளையும் அழிச்சாச்சு.. ஆயுசு கெட்டியான ரோடும் போட்டாச்சு.. குப்பைகளை சேகரிச்சு அதுல வரும் காசில் வாழ்ந்துக்கிட்டிருக்கும் எளிய மக்களுக்கு வேலையும் கொடுத்தாச்சுன்னு ஒரே கல்லுல மூணு மாங்கா :-)

சோதனை முயற்சியின் அடுத்த கட்டமா நம்ம பெங்களூர்ல இருக்கற k.k. plastic waste management கம்பெனி 3500 டன் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தி 1200கிலோமீட்டர் தூரத்துக்கான ரோட்டை அமைச்சிருக்காங்க. பிளாஸ்டிக்கை ஒழிக்கும் அதேசமயத்துல ஸ்ட்ராங்கான ரோடும் கிடைச்சிருக்கு.
(உபயம்: கூகிளாத்தா)

இருக்கற ப்ளாஸ்டிக்கை ஒழிக்க வழி கண்டுபிடிச்சாச்சு.. இனிமேலும் குப்பை சேராம இருக்க என்ன செய்யலாம் !!!

1. கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அது :-))

2.தவிர்க்கமுடியாம பைகள்ல பொருட்கள் வாங்க நேரிட்டா.. அதான் நிறைய கிடைக்குதேன்னு பொசுக்குன்னு தூக்கி வீசிடாதீங்க. நம்ம வீட்லயே அதுக்கு நிறைய உபயோகங்கள் இருக்குது. அடுத்ததடவை கடைக்கு போறப்ப அந்த பையை உபயோகப்படுத்தலாம். வீட்ல அடிக்கடி காணாமப்போற பொருட்கள், சாக்ஸ்போன்ற உள்ளாடைகளை போட்டு வைக்கலாம். முக்கியமா டஸ்ட்பின்னுக்குன்னு தனியா கார்பேஜ் பைகள் வாங்காம, சரியான அளவுல இருக்கற பையை மாட்டி ரப்பர் பேண்ட் போட்டுவிடுங்க. கார்பேஜ் பைகளின் தயாரிப்பும் குறையுமில்லே..

3. உங்க ஏரியாவுல ஏதாவது மறுசுழற்சி திட்டம் அமலுக்கு வந்தா பைகளை நன்கொடையா கொடுத்தீங்கன்னா, கல்வெட்டில் உங்க பேரும் இடம்பெறும்.

4.பாலிதீன் பைகள் நிறைய மிஞ்சிப்போனா, காய்கறி, பூ, மீன் விற்கிறவங்ககிட்ட அவங்களுக்கு தேவைப்படுமான்னு கேட்டு, பட்டா தயங்காம கொடுங்க.அப்புறம் உங்களுக்கு தனி கவனிப்பு கிடைப்பது நிச்சயம்.

5. பார்க், பீச்சுக்கு போனீங்கன்னா, குப்பைகளை மறக்காம குப்பைத்தொட்டியில் போடுங்க. மறந்தும் சாக்கடைகள்ல போட்டுடாதீங்க. அப்புறம் வாசனையால் அந்தப்பக்கமே போகமுடியாது..

6. சிலபேர் கார், பஸ், ட்ரெயின்ல பயணம் செய்யும்போது குப்பைகளை அப்படியே வெளியே வீசுவாங்க. இல்லைன்னா நடைபாதையில் நைசா போட்டுட்டு போயிடுவாங்க. மும்பையில் நகருக்குள் இப்படி குப்பைபோட்டு யாராவது பிடிபட்டா அபராதமும் உண்டு. தெரிஞ்சவங்க வந்தா 'சாக்லெட் தின்னுட்டு கவரை வெளியே வீசாதீங்க'ன்னு முதல் எச்சரிக்கையே அதுதான் :-)

 கடைக்காரங்களும் கொஞ்சம் கவனிக்கணும். டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸை பொறுத்தவரைக்கும் ஒவ்வொண்ணையும் பாக்கெட் போட்டிருக்கறது பத்தாதுன்னு, பில் போடுற இடத்துலயும் பைகளை அள்ளி வழங்குவாங்க. நாலே பைகள் ஆகற இடத்துல ஏழெட்டுப்பைகள். சொன்னாலும் சிலசமயங்கள்ல கேக்கறதில்லை. ட்ரெஸ் எடுக்கப்போனாலும் பேண்ட் ஒரு பையிலும், ஷர்ட் ஒரு பையிலுமா போட்டுக்கொடுக்கறாங்க. இதெல்லாம் ஆவுறதில்லைன்னு சொன்னாலும் 'காம்ப்ளிமெண்ட்தானே.. இருக்கட்டும்'ன்னு ஒரு பதில் கிடைக்குது.
( நானே சுட்டது)
இப்ப, 'டி மார்ட்'டில் புதுச்சா ஒரு திட்டம் கொண்டுவந்திருக்காங்க. அவங்க கொடுக்கற பைகளை திருப்பி அவங்ககிட்டயே கொடுத்துடலாமாம். நுழைவாசல்ல ரெண்டு பெரிய டப்பாக்களை வெச்சு பை சேகரிப்பு நடக்குது. மறுபடியும் உபயோகப்படுத்துவீங்களான்னு கேட்டா, மறுசுழற்சி செய்யறதுக்காம். சரி... நடக்கட்டும்.. நல்ல விஷயங்களெல்லாம் இப்படித்தான் ஆரம்பிக்கணும் :-))




Tuesday 22 March 2011

உலகம் முழுக்க தேடுறாங்க..


'சிலபல வருடங்களுக்கு முன்னால்'.... இந்த டைட்டிலை படிக்கிறப்ப புகைமண்டலத்துக்கு நடுவுல கொசுவத்தி சுத்தறமாதிரி கற்பனை செஞ்சுக்கணும். ரைட்டா??... கொசுவத்தி நம்மை கொண்டு சேர்க்கிற இடம் ஒரு வீடு. அந்த வீட்டின் மூன்று மருமகள்களில் ரெண்டாவது மற்றும் கடைசி மருமகள்களுடைய குழந்தைகள் மழலையில் திக்கித்திக்கி.. 'ம்மா.. ப்பா'ன்னு பேச ஆரம்பிச்ச அப்புறமும், மூத்த மருமகளுக்கு குழந்தைச்செல்வம் இன்னும் கிடைக்கலை. அதுவும் கல்யாணமாகி ஐந்துவருடங்களுக்கப்புறமும்..

அவங்களும் வேண்டாத தெய்வமில்லை.. போகாத கோயில்குளமில்லை. புகுந்தவீட்லேயிருந்து எந்த நெருக்கடியும் கொடுக்கலைன்னாலும் அவங்க மனசுல ஒரு பயம் இருந்துட்டேயிருந்தது. அந்த பயத்தை நீக்கி எல்லோர் மனதிலும் அமைதியை நிலவச்செய்தது ஒரு தளிரின் வருகை.. அதுக்கப்புறம்தான் க்ளைமாக்ஸே :-))). பேரு வைப்பதில்தான் ஒரே கச்சாமுச்சான்னு ஆச்சு :-)))).

அந்தக்காலத்துல தாத்தா,பாட்டியின் பேரை வைப்பதுதான் வழக்கம். அதுவும் மூத்த மகன்னா.. கண்டிப்பா அப்பாவழி தாத்தாபாட்டியோட பேரைத்தான் வைக்கணும். அம்மாவின் அப்பாவுக்கும், அப்பாவின் அம்மாவுக்கும் ஒரே பெயர்தான்.. சில பெயர்கள் பொதுப்பெயர்களா இருக்குமே.. அதுமாதிரி. அதனால 'பாட்டியோட பேரை வெச்சாலும், மாமனார் பேரைத்தான் வெச்சிருக்கான்னு சொல்லுவாங்க.. எதுக்கு வம்பு??..'ங்கற குழப்பத்துலயே பேருவைக்காமயே ரெண்டொருமாசம் ஓடிப்போச்சு. அப்புறம், எல்லாப்பிரச்சினையும் நீங்கி அமைதி நிலவட்டும்ன்னு என் பேரை எனக்கு வெச்சாங்க.

எல்லாக்குழந்தைகளுக்கும் உள்ள உலக வழக்கப்படி, எனக்கும்.. எம்பேரு மொதல்ல எல்லாம் எனக்கே பிடிக்காது. ஒவ்வொருத்தர் எவ்ளோ அழகா, ஸ்டெயிலா பேருவெச்சிருக்காங்க.. எனக்குன்னு தேடிப்பிடிச்சீங்களேன்னு புலம்புவேன். அதுவும் நம்ம டி.ராஜேந்தர், எம்பேர்ல ஒரு தேசியகீதத்தை இயற்றியதும் ரொம்ப வெக்ஸாகிடுச்சு :-))).. அதுவரைக்கும் என்னை வம்பிழுக்கிறதா நினைச்சுக்கிட்டு, தேசப்பிதாவை வம்பிழுத்து வெறும்வாயை மென்னுக்கிட்டு இருந்த ஜெலுசில்களுக்கு அவல்,பொரி,சுண்டல்ன்னு எல்லாமே கிடைச்சுப்போச்சு..

பட்டப்பெயரெல்லாம் எதுவும் எனக்கு வெச்சதில்லை.. ஏன்னா, நான் பேருக்கேத்தமாதிரி அமைதியாவே இருப்பேன்( நம்புங்கப்பா :-D). ஆனா, அதுக்கு பதிலா எம்பேரு எனக்கே மறந்துடுறமாதிரி இன்னொரு பேரு வந்து ஒட்டிக்கிச்சு. ஆறாம்வகுப்புல நுழைஞ்சப்ப, என்னோட பேர்ல இன்னும் ரெண்டுபேர் இருந்தாங்க. ஒருத்திய கூப்பிட்டா இன்னொருத்தி எழுந்து நிப்போம். ஒரே காமெடியா இருக்கும். கடைசியில எங்க செண்பகவல்லி டீச்சர் ஒரு வழி கண்டுபிடிச்சாங்க. அவரவர் அம்மா பேரோட முதலெழுத்தையும் இனிஷியலா சேர்த்துக்கச்சொன்னதோட பதிவேட்டிலும் பதிவு செஞ்சுட்டாங்க.

எங்க அம்மாவோட பேரு 'ராமலஷ்மி'.. எல்லோரும் 'லஷ்மி'ன்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க பேரையும் இனிஷியல்ல சேர்த்ததுலேருந்து எல்லோருக்கும் நான் 'L.S' ஆகிட்டேன். காலேஜ் வரைக்கும் இது தொடர்ந்துச்சு. வீட்ல இன்னிக்கும் எல்லோருக்கும் பாசமா... 'லேய்',  ரங்க்ஸுக்கு மட்டும் 'மக்கா :-)). என் பேரு எனக்கு ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சதுன்னா, என் பையன் பேச ஆரம்பிக்கச்சே மழலையில் என்னை பேருசொல்லி கூப்பிட்ட பொழுதுகள்லதான் :-)). அதுவும் அவன் சீனாக்காரன் மாதிரி மூக்கால பேசறச்சே இன்னும் அழகா இருக்கும் :-))

ப்ளாக் ஆரம்பிச்சப்ப, ஏற்கனவே ரெண்டுபேரு இதேபேர்ல எழுதிக்கிட்டிருந்தாங்க. அதனால, குழப்பம் வேணாம்ன்னு நினைச்சேன். அதுவுமில்லாம புனைப்பெயர்ல எழுதுனா ஒரு கெத்தாயிருக்குமேன்னு ஒரு நினைப்புதான். N.P.Kன்னு ஆரோ கூவுற சத்தம் கேக்குது :-)))))))). திருனேலிக்கு பக்கத்து ஊரான, வாசுதேவ நல்லூர்ல இருக்கற மாரியம்மனோட பேரைத்தான் ரங்க்ஸுக்கு வெச்சிருக்காங்க. மாரின்னா மழைன்னு அர்த்தமாகுது.. இல்லியா?.. அடிச்சிப்பெய்யற மழையை விட, இதமான மெல்லிய சாரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால, ப்ளாகுக்கு பேரு வைக்கிறப்ப ரங்க்ஸை கூட்டணியில் சேர்த்துக்கிட்டேன் (வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் கட்சியின் தலைவர் அவர் :-))). ஆனா, பேஸ்புக்கிலும், ஃப்ளிக்கர்லயும் சொந்தபேர்லதான் திருவுலா..

எவ்வளவு அருமையான அழகான பேரை சுமந்துக்கிட்டிருக்கோம்ன்னு உணர ஆரம்பிச்சப்போ, எனக்கே ரொம்ப பெருமையாயிருந்தது... புல்லரிச்சுப்போச்சு. அதுவும் வடநாட்டில் அடிக்கொருதரம் பேச்சில் என்பேரை உச்சரிப்பாங்க. நானில்லாம எந்தவொரு பூஜைகளும்கூட நிறைவுபெறாது, எந்தவொரு பேருக்கும் இல்லாத பெருமை எம்பேருக்கு இருக்குன்னு ஒரு சின்ன தற்பெருமையும் தலைதூக்கும். 'அந்தப்பேராலதான் உனக்கு பெருமை... அத மொதல்ல புரிஞ்சுக்கோ'ன்னு அந்த தற்பெருமையை தலைல குட்டி உக்காரவெச்சுடுவேன்.

உலகம் முழுக்க அமைதியை வேண்டி எத்தனை தேடல்கள்.. பிரார்த்தனைகள், வேண்டுதல்கள். எது இருக்கோ இல்லியோ அமைதி இருந்தாப்போதும்ன்னு எத்தனை பெருமூச்சுகள். இப்படி எல்லோரும் விரும்பற ஒரு பேரை எனக்கு வெச்சதுக்காக கணக்கில்லாத நன்றிகளை என்னை பெற்றவர்களுக்கு சொல்லிக்கிறேன். பெயர்க்காரணத்தை விளக்க கோபி வெச்ச அழைப்பிதழ் இங்கே இருக்கு.. அவருக்கும் நன்றிகள்.

இதை தொடர

வல்லிம்மா,

வை.கோபாலகிருஷ்ணன்.

அன்புடன் ஆனந்தி,

ஜெய்லானி,

நாஞ்சில் பிரதாப்,

லஷ்மிம்மா,

தேனம்மை,

ராமலஷ்மி..

ஆகியோரை அன்புடன் அழைக்கிறேன்..:-))

ஓம்.. ஷாந்தி.. ஓம்..



Monday 14 March 2011

தோட்டத்துப்பச்சிலை..


இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து மறுபடியும் அதன் இடத்திலேயே வைத்தான்..  இலக்கில்லாமல் எதிரிலிருந்த கணிணியை வெறித்துக்கொண்டிருந்தவன் தம்ளரின் மூடியை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு தண்ணீர் குடித்துக்கொண்டான். அப்படியே அழுந்த முகத்தைத்துடைத்துக்கொண்டு, நெற்றியில் கைகளை முட்டுக்கொடுத்து தாங்கிக்கொண்டு சிறிது நேரம் தலைகுனிந்து கண்மூடி அமர்ந்திருந்தான்...  மனசு கொஞ்சம் கொஞ்சமாக ஒருநிலைப்படத்தொடங்கியது.

'ச்சே... இந்த முறையும் தவறிப்போயிடுச்சே'.. சத்தமில்லாத வார்த்தைகள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. இந்த பதவி உயர்வை ரொம்பவே எதிர்பார்த்திருந்தான்..  நாலைந்து முறை அவனது பெயர் லிஸ்டில் வருவதும், சீனியாரிட்டி முறையில் மற்றவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுவதுமாக இருந்தது. இந்தமுறை அவனது பேட்ச்மேட் ப்ரேம்தான் அவனுக்கு போட்டியாக இருக்கப்போகிறான்,.. ஆகவே கேசவனுக்கு வாய்ப்பு உறுதி என்று தலைமையகத்தில், மேலதிகாரியின் அந்தரங்க உதவியாளராக இருக்கும் ஒரு நம்பகமான நண்பன் அடித்துச்சொல்லியிருந்தான். ஆகவே ரொம்பவே நம்பிக்கையோடிருந்தான்.

ஆனால், வந்த லிஸ்டைப்பார்த்ததும் நம்பமுடியாமல் தன்னுடைய நேரடி மேலதிகாரியிடம் விளக்கம் கேட்க ஓடினான் , அவர்தானே தலைமையகத்துக்கு சிபாரிசு செய்தது. ஆனால் இவனிடம் ஏதேதோ காரணங்களைக்கூறி சாக்குச்சொல்லிவிட்டார். 'சார்.. உங்களுக்கே தெரியும், நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன்னு' என்றவனிடம் ' என்னப்பா செய்யறது!! ப்ரேம்மாதிரி ஒரு ஹார்டுவொர்க்கர்தான் வேணும்ன்னு கேட்டப்ப என்னால தட்டமுடியல' என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த ஃபைலில் முகத்தை புதைத்துக்கொண்டார். 'நீங்க போகலாம்'என்பதற்கான மறைமுக உத்தரவு அது. தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கைக்கு திரும்பிவிட்டான்.

எல்லா எரிச்சலையும் சேர்த்துக்கொடுத்த உதையில் பைக் உடனே கிளம்பியது.. ட்ராபிக்கில் நீந்திவந்து வீட்டையடைந்ததும் சோபாவில் அமர்ந்தவன்,.. வழக்கம்போல ஷூக்களையும் காலுறைகளையும் மூலைக்கொன்றாக எறிந்தான். அவன் நீட்டிய ஃப்ரீப்கேசை வாங்கி டீபாயில் வைத்தவள், வழக்கம்போல ஷூக்களை அதற்கான அலமாரியில் வைத்துவிட்டு, காலுறைகளை அழுக்குத்துணிகளுடன் சேர்த்துப்போட்டாள்.

'ஏங்க... காபி, டீ... என்ன கொண்டுவரட்டும்??'

'காபி கொண்டுவா'

அவன் கொண்டு போயிருந்த டிபன் பாக்ஸை சிங்கில் கழுவப்போட்டபடி, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

'மத்தியானம் வத்தக்குழம்பு நல்லாயிருந்ததா??'

'வத்தக்குழம்புக்கென்ன?!!.. வத்தக்குழம்புமாதிரிதான் இருந்தது. ஒலகத்துலயே நீ ஒருத்திதான் அலுசமா குழம்பு செஞ்சுட்டியா??.. எங்கம்மா எவ்வளவு சூப்பரா பண்ணுவாங்க தெரியுமா!!'

பதில் பேசாமல் பாலை அடுப்பில் சுடவைத்தாள். காலையிலும் இப்படித்தான், பாத்ரூமிலிருந்து வந்தவன்..  அங்கிருந்தே குரலுயர்த்தி கத்தினான்.

'என்னோட கைக்குட்டையை எங்கே?.. ஆபீசுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்ன்னு தெரியாது??'

சர்ர்ர்ர்ர்ர்ர்...ர்...ர்..ர் ஓடிக்கொண்டிருந்த மிக்ஸி நின்றது. ஈரக்கையை துடைத்துக்கொண்டு வெளிப்பட்டவள், ப்ரீப்கேசின் பின்புறம் சரிந்து விழுந்திருந்த கைக்குட்டையை எடுத்து அதன்மேல் வைத்துவிட்டு அரக்கப்பரக்க சமையலறைக்கு சென்று டிபன் செய்வதில் முனைந்தாள். நேரமாகிவிட்டதென்றால் சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிவிடுவானே. ஆனாலும் அன்று 'அடையை இன்னும் கொஞ்சம் முறுகவிட்டிருக்கலாம்' என்ற 'அட்வைசுடன்' சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

அவன் இப்படித்தான்.. அவள் செய்யும் எல்லாவற்றிலும் நொட்டை சொல்வான்.  அவனைப்பொறுத்தவரை அவளுக்கு சாமர்த்தியம் போதாது..  இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக அவளை நாம்தான் உருமாற்றவேண்டும் என்ற நினைப்புதான்... மற்றபடி மனைவியை கொடுமைப்படுத்தும் ரகமில்லை. ஆரம்பத்தில் இது அவளுக்கும் மனக்கஷ்டமாகத்தான் இருந்தது.. மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டாள். அவளும் படித்தவள்தான்.. நறுவிசாக காரியம் பார்ப்பவள்தான். ஆனாலும், என்ன செய்தாலும் திருப்தியில்லாமல் குற்றம் கண்டுபிடிப்பவனை, என்ன சொல்லி திருத்துவது!!  என்று அவளுக்கும் புரியவில்லை.

டீயை கொண்டுவந்தவள் பக்கத்திலேயே ஸ்னாக்ஸ் தட்டையும் வைத்தாள்.

மெதுவாக விரல் நுனியால் தட்டை தன்னைவிட்டு நகர்த்தியபடி 'இன்னிக்கும் அதே மெதுவடையா... இன்னிக்கு மத்தியானம், எங்க ஆபீஸ்ல சுப்பு சார் வீட்லேர்ந்து கேசரி செஞ்சு குடுத்துவிட்டிருந்தாங்க. அடடா... என்னருசி தெரியுமா??.. ஏதோ மாம்பழ கேசரியாம். நீயும் அதேமாதிரி வெரைட்டியா செய்ய கத்துக்க..' என்றான்.

'சரி.. கத்துக்கறேன்... ஏன் ஏதோ மாதிரியாயிருக்கீங்க?? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினையா!!'

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு,' இந்தக்காலத்துல உழைக்கிறவனுக்கு ஏது மரியாதை.. எவ்வளவு உழைச்சாலும் மேலதிகாரிங்களுக்கு திருப்தி வரமாட்டேங்குது. எங்கிட்ட ஒரு வேலையை கொடுத்தா எவ்வளவு கஷ்டப்பட்டுன்னாலும் செஞ்சு முடிச்சிருக்கேனே தவிர, இன்னொருத்தர் கிட்ட அந்த வேலையை தள்ளிவிட்டதில்லை.. எவ்வளவுதான் மாங்குமாங்குன்னு உழைச்சாலும் அதுக்கொரு அங்கீகாரம் கிடைச்சாத்தானே நம்ம மனசுக்கும் ஒரு திருப்தி... ஹூம்!. இதெல்லாம் வீட்ல சொகுசா உக்காந்துக்கிட்டிருக்கிற உனக்கெங்கே புரியப்போவுது' என்றான்.

'ஏன் புரியாது??.. நல்லாவே புரியும்' என்றபடி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, இரவுசமையலை கவனிக்க அடுக்களைக்குள் புகுந்தாள். தினமும் அவள், தன்னுள்ளே நினைத்து நினைத்து புழுங்கும் எண்ணங்கள், இன்று அவன் வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிப்பட்டிருப்பதை சொல்லிக்காட்ட அவளுக்கு நேரமில்லை.. விருப்பமுமில்லை. என்றாவது ஒரு நாள் காலம் அவனுக்கு அதை உணர்த்தட்டும், என்று நம்பிக்கையுடன் நினைத்துக்கொண்டபடி சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

டீபாயில் கிடந்த மாதப்பத்திரிக்கையில்,.. அவள் எழுதியனுப்பி முதல்பரிசு பெற்ற சமையல் குறிப்பான, 'மாம்பழ கேசரி' .. அச்சாகி வெளிவந்திருந்த பக்கம் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தப்புத்தகம் பழசாகி, பழையபேப்பர்காரரின் கைக்குப்போகிறவரை.. அதை அவன் கவனிக்கவேயில்லை.

டிஸ்கி: என்னுடைய கவிதைகளைத்தவிர இந்த சிறுகதையையும் வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

Tuesday 8 March 2011

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா..


சிலபல வருடங்களுக்கு முன்னால், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு மும்பைக்கு ரயிலேறினப்ப,  என்னுடைய இந்தி புத்தகம் இருக்கையில் எனக்கென்ன கவலைங்கற தைரியமும் வித்தவுட்டில் என்னோட மும்பைக்கு வந்து இறங்குச்சு. ஏன்னா, மும்பையைப்பத்தி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பயமுறுத்தியிருந்தாங்க. இங்க வந்தப்புறம்தான் தெரிஞ்சுச்சு, வெறுமனே இந்தியை வெச்சிக்கிட்டு காலத்த ஓட்டமுடியாது, 'மராட்டி'ங்கற இன்னொரு வில்லனையும் சமாளிக்க வேண்டியிருக்கும்ன்னு.. வல்லாரைபொறியல்(வரலாறு புவியியலுக்கு நாங்க வெச்ச செல்லப்பேரு)வகுப்புகளை கவனிச்சுருந்தாத்தானே மஹாராஷ்ட்ரத்துல மராட்டிதான் தாய்மொழிங்கற உண்மை ஞாபகம் இருந்திருக்கும்.

இருந்தாலும், இந்தியில அனா, ஆவன்னாலேர்ந்து அஹன்னா வரைக்கும், அப்புறம் ஒண்ணு ரெண்டு லேர்ந்து இருபத்தஞ்சு வரைக்கும் நாமதான் பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கோமே.. சமாளிச்சுரலாம்ன்னு ஒரு நம்பிக்கை அந்த குளிர்காலத்துலயும் துளிர்விட்டு பூ பூத்துச்சு..அது ஏன் அத்தோட நிறுத்திட்டேன்னு நீங்க கேக்காம தலைதெறிச்சு ஓடினாலும், பிடிச்சு ஒக்காரவெச்சு சொல்லுவேன்ல..

ஒன்பதாம் வகுப்பு முடிகிற தருணத்தில்தான், எங்க ஸ்கூல்ல இந்தி வகுப்புகள் நடக்குதுன்னும், பரீட்சையெல்லாம் வெச்சு பாஸானவங்களுக்கு சர்டிபிகேட் கொடுப்பாங்கன்னும் தெரியவந்துச்சு. சரி.. ஒரு சர்ட்டிபிகேட்டை நாமளும் வாங்கிவெச்சா அப்புறம் ரிசர்வ் வங்கில கவர்னர் வேலைக்கு போகும்போது கையெழுத்துபோட ஒத்தாசையா இருக்குமேன்னு வகுப்பில் சேர்ந்துவெச்சேன்.  'வாணாம். அப்புறம் பொழுதன்னிக்கும் இதையே கட்டிட்டு அழணும். வழக்கமான பாடங்களை படிக்க நேரமிருக்காது'ன்னு ஏற்கனவே இந்தி படிச்சிட்டிருந்த, நண்பிகள் என்ற பெயரில் உலாவந்துக்கிட்டிருந்த ஜெலுசில்கள் பயமுறுத்துனாங்க.. நா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்துடுவேனோன்னு அவங்களுக்கெல்லாம் பொறாமை.

வகுப்பில் சேர்ந்ததுமே, முதல்வேலையா என்பெயரை இந்தியில் எப்படி எழுதணும்ன்னு ப்ராதமிக் முடிச்சிருந்த ஒரு ஜெலுசில் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன். நாளப்பின்ன, கையெழுத்து கூட போடத்தெரியாத கைநாட்டுன்னு வரலாறுல நம்மை தப்பா பதிஞ்சுடக்கூடாதில்லியா!!.. எம்பேருதான் அவளுக்கும், ஆனாலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட அவ சொல்லித்தந்ததும், அதையே அஞ்சாறு வருஷமா நான் கடைப்பிடிச்சதும், அப்றம் இங்கே வந்தப்புறம் 'ஞஞஞ' வானதும் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்யப்பட்ட பக்கங்கள் :-))). அப்றம் பத்தாம் வகுப்புக்கு போனதும், பொதுத்தேர்வை காரணம் காட்டி ரிசர்வ் வங்கிக்கனவு உடைக்கப்பட்டது. நஷ்டஈடா தங்கவங்கி கூட கிடைக்கலை :-))

இங்கே வந்தப்புறம், முதல் சிலமாதங்கள் நல்லாத்தான் போச்சு.. அக்கம்பக்கத்துல யாராச்சும் மராட்டியில ஏதாவது கேட்டா சின்ன சிரிப்போட நகர்ந்துடுவேன்.மராட்டி அப்புறமா கத்துக்கலாம். மொதல்ல இந்தியை ஒருவழி செய்யலாம்ன்னுட்டு வீட்ல இருக்கற நேரங்கள்ல என்னோட புத்தகத்தை வாசிக்கிறதும், ரங்க்ஸ் வந்தப்புறம் அர்த்தம் தெரிஞ்சுக்கிட்டு அந்த வார்த்தைக்கு பக்கத்துல எழுதிவெச்சுக்கிறதுமா என்னோட மொழியறிவு வளர ஆரம்பிச்சுச்சு. படிச்சதை பரிசோதனை செஞ்சு பார்க்க அக்கம்பக்கத்து குழந்தைகள் ஆப்டாங்க. அவங்க என்னத்தையாவது கேக்க, நான் என்னத்தையாவது சொல்லிவைக்க, அதுங்க பரிதாபமா முழிக்கும் :-). ஆனாலும் ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸாயிட்டோம் :-)). அவங்க வீட்டுக்கு என்னத்தையாவது வாங்கறதுக்கு கடைக்கு போனா, எங்கிட்ட வந்து, 'ஆன்ட்டி, ஐ கோயிங் ஷாப். யூ வாண்ட் வாட்?'ன்னு கேட்டுட்டு போகும்.

மொழியறிவை வளர்த்துக்க நான் கடைப்பிடிச்ச இன்னொரு வழி.. தூர்தர்ஷன். கேபிள்டிவி, மெட்ரோல்லாம் வர்றதுக்கு முன்னாடி மத்தியானம் ஒருமணி நேர நிகழ்ச்சியில சீரியல், சமையல்ன்னு கலந்துகட்டி அடிப்பாங்க. கர்மசிரத்தையா, அதுல வர்ற பொருட்கள், அதோட பேரு, சிலபல வினைச்சொற்கள் இதெல்லாம் ரொம்பவே கவனிச்சு வெச்சிக்கிட்டு, அர்த்தத்தை ஆராயறதுதான் வேலை. ஆச்சு.. அரைகுறை ட்ரெயினிங் போதும்.. இனி களத்துல இறங்கிடவேண்டியதுதான்னு நானே மார்க்கெட் போக ஆரம்பிச்சேன். ஆகவே மக்களே ஒரு புது மொழியை கத்துக்கணும்ன்னா டிவி, பக்கத்துவீட்டு பசங்க, மட்டுமல்ல சமயத்தில் நடைமுறை வாழ்க்கையும் உதவிசெய்யும். வீட்டுக்குள்ளயே ஒளிஞ்சு உக்காந்துருந்தீங்கன்னா ஒண்ணையும் கத்துக்கமுடியாது :-))))

பின்ன அளவுகளான கால்,அரை,முக்காலுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாது, காய்கறிகளோட பேரும் ஓரளவுக்குத்தான் தெரியும். இருபத்தஞ்சு வரைக்கும்தான் எண்களும் தெரியும். இப்படி எல்லாத்துலயும் அரைக்கிணறு தாண்டி அந்தரத்துல நிக்கிற நிலைமை. இதுல கொடுமை என்னன்னா, மார்க்கெட்ல, வெங்காயமும் கடலைமாவும் மாதிரி இந்தியும் மராட்டியும் கலந்து மணக்கும். ரெண்டுமொழியையும் கலந்துதான் பேசுவாங்க.'காய் பாஹிஜே தும்கோ'ன்னு அவங்க கேக்கறப்ப காய்தாம்ப்பா வேணும்ன்னு வாய்வரைக்கும் வர்ற வார்த்தைகளை அப்படியே முழுங்கிடுவேன். தூர்தர்ஷன் கொடுத்த ட்ரெயின் கடைசி ப்ளாட்ஃபார்முக்கு ஓடிப்போயிடுச்சு.

என்ன செய்வேன்னா... காய்கறிகளை பரிசோதனை செய்றமாதிரி பில்டப் கொடுத்துக்கிட்டே மத்தவங்க வாங்கறப்ப என்ன பேசிக்கிறாங்க, தராசில் என்ன எடைக்கல் விழுதுன்னு பார்த்து மனசில் பதிச்சிக்கிட்டு அப்றம் அதையே சொல்லி வாங்குவேன். இதனால சிலசமயங்கள்ல நூறுகிராமுக்குமேல அதிகம் தேவைப்படாத கொத்தவரங்காயை அரைக்கிலோ வாங்கிட்டு முழிச்சதும் உண்டு. ஏன்னா நூறுகிராமுக்கு என்ன சொல்லணும்ன்னு தெரியாதே :-)))). முக்கால் கிலோ வேணும்ன்னா மொதல்ல அரைக்கிலோ போடச்சொல்லிட்டு அப்றம் அப்பத்தான் ஞாபகம் வந்தமாதிரி 'அவுர் பாவ்கிலோ'ன்னு சொல்லுவேன். கொஞ்ச நாள்ல ரங்க்ஸுக்கே வகுப்பு எடுக்கற அளவுக்குவளந்தது தனிக்கதை.

ஏதாவது வாங்கிட்டு காசுகொடுக்கறப்பவும் இந்த மொழிப்பிரச்சினை ஈரக்கூந்தலை விரிச்சுப்போட்டுக்கிட்டு நிற்கும். அவங்க சொல்ற எண் இருபதுக்குள்ள இருந்திச்சின்னா, யோசிக்காம இருபது ரூபாயை எடுத்து நீட்டி பிரச்சினையை ஹேர்ட்ரையர் போட்டு காய வெச்சிடுவேன். இப்பத்தான் கால், அரை, முக்கால், முழுசுன்னு எல்லாமும் கொஞ்சம் பிடிபட்டுடுச்சே.. ஆனா, எனக்கு கண்டம் இருபத்தஞ்சுலேயும் முப்பதுலேயும் போய் கும்மியடிச்சிட்டிருக்கும். பீஸ்ன்னா இருபது.. தீஸ்ன்னா முப்பது, ஏற்கனவே கடைக்காரர் சொல்றது பீஸா, தீஸான்னு புரியாம நான் நொந்து பீஸ்பீஸாகிட்டிருப்பேன். இந்த லட்சணத்துல ஒரு நாள் பஞ்ச்வீஸ்ன்னு ஒருவார்த்தைய கேட்டதும் ஆடிப்போயிட்டேன். 'ஹாங் ஜீ'ன்னு நான் முழிச்சப்பவே அவருக்கு மத்ராசின்னு புரிஞ்சிபோச்..  'பச்சீஸ்.. ட்வெண்டிஃபாயிவ்'ன்னு முழிபேர்த்தார்.இருபத்தஞ்சை மராட்டியில சொல்றாராம் :-)))))

இந்த பீஸும் தீஸும் இன்னிக்கும் காமெடி பீசாக்கிக்கிட்டிருக்கு. முக்கியமா மீட்டர் சிஸ்டம் இல்லாத ஆட்டோரிக்ஷாவுல, எவ்ளோன்னு கேக்கறப்ப, அலட்சியமா எங்கியோ பாத்துக்கிட்டே ''#%$^"ன்னு சொன்னதுல காத்துல போனதுபோக மீதி பதில்வரும். புரியலைன்னா கடுப்பாகி திரும்பவும் கேக்கணும். இல்லைன்னா இறங்கறச்ச வேற கட்டணம் சொல்லப்பட வாய்ப்பிருக்கு. நேத்தும் இப்படித்தான்,.. ரயில்வே ஸ்டேஷன் போக ரிக்ஷா பிடிக்கணும்.

"ஸ்டேஷன் போகணும்.. எவ்ளோ??"

"@#%$&"

"ஹாங்ஜீ பையா??.."




Tuesday 1 March 2011

இனியெல்லாம்....


"இத்தன வருஷம் கழிச்சு எதுக்கு வந்திருக்கான்.. எங்கக்கா இருக்காளா, செத்துட்டாளான்னு பாக்க வந்தானா.." புருபுருவென முனங்கியவாறே வேகவேகமாகப் பித்தளைக்குடத்தைப் புளி போட்டுத் தேய்த்துக் கொண்டிருந்தாள் கமலம்.. கோபத்தில் சிவந்து மினுங்கிக் கொண்டிருந்த அவளது முகத்தைப்போலவே குடமும் பளபளத்துக்கொண்டிருந்தது.

"ஏய்.. ஏய்.. போதும்டி.. தேய்ச்சது. உங்க அத்தான் மேல உள்ள கோவத்த கொடத்து மேல ஏங்காட்டுத?. பாரு!!.. தேச்சுத்தேச்சு சொம்பு சைஸ்ல ஆயிட்டுது.."

"எக்கா.. என் வாயக் கெளறாத.. சொல்லிப்புட்டேன் ஆமா.. நானே வெந்துக்கிட்டிருக்கேன். நீ வேற ஏன் நொந்த மாட்ட நொகத்தடியால இடிக்கிறே.."

"கோவத்தப்பாரு!!. எப்பவும் சிரிச்சுட்டே இருக்கிற மொகத்துல, இன்னிக்கு சீதேவிக்கி அக்கா வந்து ஒக்காந்துருக்காளேன்னு சும்மா எடக்கு பண்ணேன்... கூடாதா??" என்று கேட்டபடி,.. தண்ணீர் நிறைந்த குடத்தை லாவகமாக ஒரு கையால் இழுத்துக்கொண்டே, பைப் தண்ணீர் கீழே விழாவண்ணம், அடுத்த குடத்தை டக்கென்று பைப்பின் வாயருகே பிடித்து மெதுவாகக் கீழே வைத்தவள், அழுவதற்குத் தயாராய் இருப்பதுபோல் கமலத்தின் முகம் கலங்கி கண்ணீர் திரையிடுவதைப் பார்த்து விட்டு, வேகமாகக் கிட்டே வந்தாள்.

"வேண்டாம்ன்னுட்டு போனவன், எந்த தேசத்து மஹாராஜாவா இருந்தா நமக்கென்னடி.. ஏதோ இந்த மட்டும் உங்கக்கா உசிரோட வந்தாளேன்னு நெனச்சுக்க. ஒதறித்தள்ளிட்டு சோலியப்பாப்பியா.." என்று உரிமையுடன் கடிந்து கொண்டவள் சேலை முந்தானையால், கமலத்தின் முகத்தை ஆதுரத்துடன் துடைத்து விட்டாள்.

கமலத்தின் அக்கா, பார்வதி.. பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்து விளையாட்டுப்போல் இரண்டு வருடங்கள் ஓடி விட்டன. திருமணமாகி முதல் ஆறு மாதங்கள் நன்றாகத்தான் போனது. அப்புறம்தான், எப்படியும் இந்தத் திருமணத்தை முடித்து விட வேண்டுமென்பதற்காக, முருகேசன் வீட்டார் சொல்லியிருந்த புளுகுமூட்டைகள் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்கின. லைப்ரேரியனாக வேலை பார்ப்பதாக சொல்லியிருந்த பொய்யும் ஒரு நாள் வெளிப்பட்டுவிட, அது அவர்கள் மணவாழ்வின் கடைசி நாளாக ஆகிப்போனது. தீர விசாரிக்காமல், பெண்ணைக்கொடுத்த தங்கள் முட்டாள்தனத்தை நொந்து கொள்வதைத்தவிர வேறொன்றும் செய்யத் தோன்றவில்லை, கிராமத்துக்காரர்களான படிக்காத பெற்றவர்களுக்கு.

ஒவ்வொரு முறையும் பார்வதியைத் தாஜா செய்து மன்னிப்புக்கேட்டுத் தப்பித்துக் கொண்டிருந்தவனால், இம்முறை தப்பிக்க முடியவில்லை. அவள் தொடுத்த எல்லா அஸ்திரங்களுக்கும் பதிலாக அவள் நடத்தையைக் குறி வைத்து ஒரே ஒரு அஸ்திரத்தை எய்தான் பாவி.. , "என்னைச்சொல்ல வந்துட்டியே.. நீ ரொம்ப ஒழுங்கா??.. என் தலைவிதி.. நல்ல எடத்தையெல்லாம் வேண்டாம்ன்னுட்டு, ஒங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன்..."

அவளுக்கு மனசெல்லாம் அமிலம் பட்டது போல எரிந்தது.., கோபத்தில் தலை கொதிக்க, முகமெல்லாம் ஜிவுஜிவு என்று சிவந்தது. " இது அநியாயம்.. நீங்கல்லாம் மனுசங்களா??.. செய்யற தப்பையெல்லாம் நீங்க செஞ்சுட்டு என்னிய இப்படி அபாண்டமா பேசாதீங்க, நாக்கு அழுகிரும்.. " வீண்பழியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் உள்ளம் கொதித்தது.

திடுதிடுவென்று வந்தவன், தரதரவென்று அவளைக் கையைப்பிடித்து இழுத்து, வாசலுக்கு வெளியே தள்ளினான். "இனிமெ ஒரு நிமிஷம் கூட நீ இங்கே இருக்கப்பிடாது.." என்று சொல்லி விட்டுக் கதவை அறைந்து சாத்த, அவள் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு போல் நேராகப் பிறந்தவீடு வந்து அம்மாவின் மடியில் விழுந்தாள். ரெண்டே மாதத்தில் பொங்கிக்கொண்டிருந்த மனமும், கண்களும் அமைதியாகி விட, அடுத்ததை யோசித்து.. தன்னுடைய ப்ளஸ்டூ தகுதிக்கேற்பப் பக்கத்திலிருந்த குழந்தைகள் காப்பகத்தில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டு விட்டாள். சமாதானம் பேசப்புறப்பட்ட ஒரு சில நாட்டாமைகளையும் தடுத்து விட்டாள். அமைதியாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில்தான், இப்போது மறுபடியும் தூது விட்டுக் கல்லெறிந்திருக்கிறான்.

வீட்டினுள் உலையும், வெளியே முருகேசனின் மனமும் கொதித்துக் கொண்டிருந்தன. வந்தவனை 'வா'ன்னு ஒப்புக்குக் கேட்டுட்டு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு தெசைக்குப் போயிட்டாங்க. மாமியார் மட்டும் ஒரு டம்ளரில் காப்பியைக் கொண்டாந்து பக்கத்துல வெச்சுட்டு அடுக்களைக்கு போயிட்டா. கழுத்தைப்புடிச்சுத்தள்ளி ஒவ்வொரு நிமிஷத்தையும் நகர்த்திக்கிட்டுருந்தான். 'கிணிங்.. கிணிங்..' சைக்கிள் மணியோசை வந்த பக்கம் பார்வையை எறிந்தவனுக்கு வயிற்றுக்குள் பனிக்கட்டி உடைந்தது போல் ஜிலீரென்றது. வாசலில் நிறுத்திய சைக்கிளை, ஹேண்டில்பார் ஒரு கையிலும், சீட்டுக்கு கீழே இருந்த பாரை இன்னொரு கையிலுமாக பிடித்துத் தூக்கிக் கொண்டு,  உயரமாக இருந்த வாசல்நடை தாண்டி வந்து முற்றத்தில் நிறுத்தினாள் பார்வதி. அவளைத்தொடர்ந்து தண்ணீர்க்குடத்துடன் கமலமும் உள்ளே வந்தாள். பின் அவன் அங்கிருப்பதையே கவனிக்காதது போல் உள்ளே சென்று விட்டார்கள். கசமுசவென்ற பேச்சுக்குரல்கள் எழும்பி அடங்கியதை இங்கிருந்தே கேட்டான் அவன்.

நிதானமாக உள்ளேயிருந்து வந்த கமலம், "எதுக்கு வந்தீங்க?.." என்று நேராகக் கேட்டாள்.

"இதென்ன சின்னப்புள்ளைத்தனமா கேக்குற. ஒரு புருஷன் எதுக்கு வருவான்.. பொண்டாட்டியக் கூட்டிட்டுப் போகத்தான்..."

"இங்க அப்படி யாருமில்ல.. ஏமாத்திக் கெட்டுனதுமில்லாம, கழுத்தப்புடிச்சு வெளிய தள்ளுனப்பவே ஒங்க பொண்டாட்டி செத்தாச்சு. இங்க இருக்கிறது எங்களப் பெத்தவங்களுக்கு மக மட்டுந்தான் .. அவள நாங்க அனுப்ப மாட்டோம் " நிதானமாகச் சொன்னாள்.

"நா செஞ்சதெல்லாம் தப்புத்தான்.. ஏதோ புத்திமாறி அப்படிச் செஞ்சுட்டேன். கடைசி தடவையா என்ன மன்னிச்சுடச்சொல்லு.. நா திருந்தி வாழணும்ன்னு நெனைக்கிறேன் "

லேசான சலிப்புடன் அவனை ஏறிட்டாள்.. "இன்னும் எத்தன தடவதான் இப்படி நடிப்பீங்க.. ஒங்களுக்கே அசிங்கமா இல்லியா.. அவ வர்றதா இல்ல. நீங்க போலாம்.."

"இத அவ சொல்லட்டும்.. நீ எங்க ஊடால வராத.."

"யாரு சொன்னாலும் முடிவு அதுதான்.." என்று உள்ளிருந்து குரலை மட்டும் அனுப்பினாள் பார்வதி.

"நெசமாவே மனசு திருந்தி வந்திருக்கேன்.. என்னை நம்பு.. "

"என் வேலைல வர்ற சம்பளத்துக்காகத்தானே இந்த நாடகத்த நடத்துறீங்க??. மொறைக்காதீங்க.. கெடச்ச ஒரு வேலையையும் காப்பாத்திக்கிடத் தெரியாம கல்லாவுல கைய வெச்சு, அசிங்கப்பட்டு.. நிக்கிறீங்க. ஊரு முகத்துல முழிக்க முடியாமத்தானே ஊர விட்டும் போனீங்க. இப்ப, நைசா என்னியக் கூட்டிட்டுப் போயிட்டா, என் சம்பளத்துல மஞ்சக்குளிக்கலாம்ன்னு நெனப்பு. அதுக்காகத்தானே திருந்திட்ட மாதிரி நடிக்கிறீங்க. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு பாக்குறீங்களா.. உங்கூரு என்ன சந்திர மண்டலத்துலயா இருக்கு??.. பக்கத்துலதானே!!?. இன்னும் ஒங்களை நம்பறதுக்கு நா ஒண்ணும் இளிச்சவாச்சி இல்ல" என்றபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவன் அப்படியே தளர்ந்து அமர்ந்தான். "உன்னை எப்படி நம்ப வைக்கிறதுன்னு எனக்குத் தெரியல.. தட்டிக்கேக்கவும், புத்தி சொல்லவும் ஆளில்லாம வளந்துட்டேன். கல்யாணம் செஞ்சு வெச்சாலாவது திருந்த மாட்டானான்னுதான் என்னைப்பெத்தவங்க உன்னை ஏமாத்துற அளவுக்குப் போயிட்டாங்க. அப்பவும் நான் திருந்தலை.. ஆனா, நீயில்லாத இந்த ரெண்டு வருஷத்துல உன்னோட அருமையை ரொம்பவே உணர்ந்துட்டேன். உனக்கேத்தவனா என்னை மாத்திக்கிட்டுதான் உன் முன்னாடி வரணும்ன்னுதான், இத்தனை நாளு உன்னப் பாக்கக்கூட வரல. இப்ப, சென்னைல ஒரு கடையில வேலை பாக்கேன். என்னைய நம்பி கடய உட்டுட்டு போற அளவுக்கு மொதலாளி கிட்ட நல்லபேரு எடுத்துருக்கேன். ஆனா, உங்கிட்ட நல்லபேரு வாங்கினாத்தான் நா செஞ்ச பாவங்களக் கழுவினதா அர்த்தம். எனக்கு பகட்டா பேசத்தெரியல.. ஆனா, நா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். என்னிய நம்பு.." என்றபடி அவள் கைகளைப் பற்றினான்.

கைகளை மெல்ல விடுவித்துக் கொண்டு அவனை ஏறிட்டாள்... பழைய முருகேசன் தொலைந்து போயிருந்ததை அவன் கண்களில் தெரிந்த உண்மையின் வெளிச்சத்தில் புரிந்து கொண்டாள். இருந்தாலும் சூடுபட்ட பூனையாயிற்றே.. "நா சொல்ற ஒரு நிபந்தனைக்கு கட்டுப்பட்டா நீங்க சொன்னதைப்பத்தி யோசிக்கிறேன்.."

"நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்.. ஜெயிலு கைதிங்களுக்கு கூட திருந்தி வாழச் சந்தர்ப்பம் கொடுக்கறாங்க. அப்படி நெனச்சு எனக்கும் ஒரு கடைசி வாய்ப்பு கொடுக்கக் கூடாதா??.." பேச முடியாமல் அவன் குரல் தழதழத்தது.

"நிச்சயமா கொடுக்கறேன்... இன்னிலேர்ந்து ஒரு வருஷத்துக்கு நீங்க என்னிய பாக்கவோ, பேசவோ முயற்சிக்கக் கூடாது. இந்த ஒரு வருஷத்துல நீங்க சொன்ன மாதிரியே திருந்தி நல்ல வழிக்கு ஆகியிருந்தீங்கன்னா, என்னிய வந்து கூட்டிட்டுப்போலாம். அப்படியில்லாம, வெவகாரமா ஒங்களப்பத்தி ஏதாச்சும் நான் கேள்விப்பட்டேன்னா, என்னிய மறந்துடுங்க. இதான், நா உங்களுக்கு தர்ற தண்டனை, வாய்ப்பு, பரீச்சை எல்லாமே..." குரலில் கம்பீரத்தைக் காட்டிக் கொண்டாலும், எந்த நிமிஷம் உடைந்து விடுவோமோ என்றிருந்ததை மறைக்க அவள் ரொம்பவே பாடுபட்டாள்.

"நிச்சயமா ஜெயிச்சு வருவேன்.. எனக்காகக் காத்திரு..." என்றபடி செருப்பை மாட்டிக்கொண்டு எழுந்தவன், "மொதமொதல்ல, என் சம்பாத்தியத்துல உனக்குன்னு வாங்கியது.. மறுத்துடாதே.." என்றபடி அவள் கைகளில் திணித்து விட்டுப் போன மல்லிகைப்பூப் பொட்டலத்தை ரொம்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது....

LinkWithin

Related Posts with Thumbnails