Thursday 26 July 2012

எங்க வீட்டு விருந்தாளிகள்..

பொழுது விடியுதோ இல்லையோ,.. பால்கனில வந்து கூப்பாடு ஆரம்பிச்சுரும். ஒரு கையளவுக்கு அரிசியோ சாதமோ போட்டு வெச்சா சமத்தா விழுங்கிட்டு, தட்டுல ஊத்தி வெச்சுருக்கும் தண்ணியையும் குடிச்சுட்டுப் போவாங்க. இவனுங்களைப் பத்தி ஏற்கனவே  பகிர்ந்துருக்கேன். மழைக்காலம் ஆரம்பிச்சதும் வேணுங்கற சாப்பாடும் தண்ணியும் வெளியவே கிடைக்க ஆரம்பிச்சதும் ஆளை அட்ரஸையே காணோம். இருந்தாலும் கடமை தவறாம சாப்பாடும் தண்ணியும் வைக்கிறதுதான். எப்பவாவது வந்து தரிசனம் கொடுத்துட்டுப் போறானுங்க.

இப்ப புது விருந்தாளிகளா குருவியும் அடிக்கடி வர ஆரம்பிச்சுருக்கு. அழிஞ்சுட்டு வர்ற இனம்ன்னு வேற ஆதங்கமாயிருக்கா. அதான் பிடிச்சுப்போட்டுட்டேன். நாளப்பின்னே நம்ம வலைப்பூவுல இருக்கற படத்தை வருங்கால சந்ததிக்குக் காமிச்சுக்கலாமில்லே.

நல்லா வயிறு முட்டச் சாப்பிட்ட அசதி இவருக்கு..

போட்டோ எடுக்கறேன்னதும் என்னா இஸ்டைலா போஸ் கொடுக்கறான் பாருங்க :-)

இவங்க குருவியக்கா.. பொண்ணா இருந்தாலும் மேக்கப் எல்லாம் இல்லாம எவ்ளோ சிம்பிளா இருக்காங்க..


இவரு குருவியக்காவோட ஊட்டுக்காரரு. 

மீசை, தாடிக்கெல்லாம் டையடிச்சுக்கிட்டு. லிப்ஸ்டிக்கெல்லாம் பூசிக்கிட்டு என்னா இஷ்டைலா இருக்காரு. ஆளுக்கு கெத்தும் கொஞ்சம் கூடுதல்தான். போட்டோ எடுக்கறப்ப அக்கா அழகா போஸ் கொடுத்தாங்க. ஒரே க்ளிக்குல ஓகேயாகிருச்சு. அக்கா ஊட்டுக்காரர்தான் ட்ரில் வாங்கிட்டார். போகஸ் செஞ்சு க்ளிக் செய்யப்போற நேரத்துல சட்ன்னு திரும்பிக்குவார். ஒரு வழியா அசந்த நேரத்துல சுட்டுட்டேன். 
திரும்பிக்கிட்டா உட்ருவோமா என்ன :-)
மழைக்காலம் ஆரம்பிச்சதுலேர்ந்து காலைல இவங்க சத்தத்துலதான் கண்ணு முழிச்சாறது. காலை வேளைகள்ல காக்கா, குருவி, புறா, மைனா, இன்னும் பெயர் தெரியாத ஒண்ணு ரெண்டு பறவைகள்ன்னு காச்..மூச் ன்னு ஒரே சத்தக்காடுதான். விடிஞ்சும் விடியாத அந்தக்காலை நேரத்துல இவங்க போடுற சந்தோஷக்கூச்சல்தான் அன்னிக்கு முழுக்க மனசை உற்சாகமா வெச்சுருக்குதுன்னும் கூட சொல்லலாம். 

Monday 23 July 2012

ஒரு வீடு பெயரிடப்படுகிறது..

வீடு கொடுத்த இணையத்திற்கு நன்றி :-)
"சுத்தம் சோறு போடும்.." வீட்டின் முகப்பில் பொறிக்கப்பட்டிருந்த பெயரை நிறுத்தி நிதானமாக வாசித்து விட்டு வீட்டைச் சுற்றிப்பார்ப்பதற்காக நகர்ந்தனர் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தவர்கள்.

“சும்மா சொல்லக்கூடாது. வீட்டை நல்லா பார்த்துப் பார்த்துதான் கெட்டியிருக்கான் உம்ம மருமவன்..” என்றார் ஒரு பெரியவர்.

“ஏன் பெரியத்தான் பிரிச்சுப்பேசறீங்க?.. எனக்கு மருமவன்னா ஒங்களுக்கு மவன் முறை வருது இல்லையா?.. தம்பி மகன் தன் மகனைப் போலன்னு சொல்லுவாங்க. ஆனாலும் உங்களுக்கு இந்த எடக்குத்தானே வேணாம்கறது” என்று சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார் இன்னொருவர்.

அந்தச் சின்னத்தெருவில் பாதியை அடைத்துக்கொண்டு போடப்பட்டிருந்த பந்தலில் நாற்காலிகள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடந்தன. குழந்தைகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தனர். பந்தல் வாசலில் கட்டப்பட்டிருந்த வாழை மரத்தை உண்டு இல்லை என்று ஆக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள், கடைசியில் அலுத்துப்போய் அதனுடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கூந்தல் பனையின் சாட்டைகளை அறுத்து எடுத்து, அதில் விளையாடுவதில் ஈடுபட்டிருந்தனர்.

மூன்றாம் பந்தியும் முடிந்து, சாப்பிட்டு விட்ட திருப்தியில் நான்கைந்து நாற்காலிகளை ஆங்காங்கே வட்டமாகச் சேர்த்துப் போட்டுக் கொண்டு வெகு நாட்கள் கழித்துச் சந்தித்த உறவினர்கள் பல கதைகளையும் வெற்றிலை பாக்குடன் சேர்த்து மென்று கொண்டிருந்தனர்.

“ஆமா,.. அதென்ன?. புது வீட்டுக்கு ஒண்ணு அப்பா, அம்மா பேரை வைக்கணும். இல்லைன்னா குலதெய்வம் பேரை வைக்கணும். புள்ளைங்க விருப்பப்பட்டா அதுங்க பேரையும் வைப்பாங்க சில பேர். அதெல்லாம் விட்டுட்டு “சுத்தம் சோறு போடும்”ன்னு அதென்ன அப்படியொரு பேரை வெச்சிருக்கான். புத்தி கித்தி கொழம்பிப்போச்சா அந்தப்பயலுக்கு?” என்று வம்பை ஆரம்பித்தார் ஒருவர்.

“எங்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும்?. இன்னா அவனே வாரான். அவங்கிட்டயே கேட்டுக்கிடுங்க” என்ற இன்னொருவர், “மக்கா விசுவநாதா,.. கொஞ்சம் இங்கே வந்துட்டுப்போப்பா. ஒங்க பெரியப்பாவுக்கு ஒனக்க கிட்ட என்னவோ கேக்கணுமாம்” எனவும்,

‘கேளுங்க..’ என்று சொல்வது போல் தன் பெரியப்பாவைப்பார்த்தான் விசுவநாதன்.

“அது ஒண்ணுமில்லேடே.. ஒன் வீட்டுக்குப் பேரு வெச்சிருக்கேல்லா, அதப்பத்தித்தான் கேட்டுட்டிருந்தேன். ஒங்க அப்பாவுக்க பேரோ இல்லைன்னா தாத்தாவுக்க பேரோ வெச்சிருக்கப்டாதா மக்கா. காலாகாலத்துக்கும் அவங்க பேரு தொலங்கியிருக்குமே” என்றார் பெரியவர்.

“பெரியப்பா,.. நாஞ்சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்ன்னு இல்லே. குடும்பத்தைக் கவனிக்காம குடிச்சுக்குடிச்சே கொடல் வெந்து எங்கப்பா செத்தப்புறம் நாங்க நடு ரோட்டுக்கு வந்துட்டோம். வீட்ல உள்ளவங்க விருப்பத்துக்கு மாறா எங்கம்மாவை எங்கப்பா கல்யாணம் முடிச்சுக்கிட்டதால ‘அவனே போயிட்டான்.. அவன் குடும்பம் என்ன ஆனா எனக்கென்னா’ன்னு எங்களை நம்ம குடும்பத்துல இருக்கற யாரும் திரும்பிக்கூட பார்க்கலை. பொழைப்பு தேடி எங்களைக்கூட்டிக்கிட்டு சென்னைக்கே போயிருச்சு எங்கம்மா. அங்க நாலு வீட்டுல தூத்து, தொளிச்சு, பத்துப்பாத்திரம் தேய்ச்சு, துணி துவைச்சுன்னு எல்லா வீட்டு வேலையும் பார்த்துத்தான் எங்களை வளர்த்து ஆளாக்கிச்சு."

"என்னிக்காவது ஒரு நாள் நாங்களும் நல்ல நிலைமைக்கு வருவோம். அப்படி வரப்ப நம்ம ஊருக்குத்தான் போயி செட்டிலாவணும்ன்னு சொல்லிச்சொல்லியே வளர்த்தாங்க எங்கம்மா. வனத்துல மேய்ஞ்சாலும் இனத்துல அடையணும்ன்னு சொல்லுவாங்களாமே. நாங்க, வெரட்டப்பட்ட எடத்துலயே நாலு பேரு முன்னாடி தலை நிமிர்ந்து வேரூணி நிக்கணும்ன்னுதான் இந்த ஊருலயே ஒரு வீட்டையும் கட்டி குடி வந்திருக்கோம். காலம் முழுக்க ஒரு வேலைக்காரியாவே காலத்தைக் கழிச்ச எங்கம்மாவை இன்னிக்கு ஒரு வீட்டுக்கு எஜமானியாக்கி அழகு பார்த்துட்டோம். இன்னிக்கு நாங்களும் ஆளாகி, நாலு பேர் மெச்சற மாதிரி இருக்கோம்ன்னா அது அன்னிக்கு அடுத்தவங்க வீட்டு அழுக்கைச் சுத்தப்படுத்தி எங்கம்மா சம்பாதிச்ச காசாலதான். எங்களுக்குச் சோறு போட்டது அந்தச் சுத்தப்படுத்துற வேலைதான். அந்த வாழ்க்கையை என்னிக்கும் மறக்கக் கூடாதுன்னுதான் வீட்டுக்கு இப்படிப் பேரு வெச்சிருக்கேன். நாஞ்செஞ்சது சரிதானே?..”

பெயருக்கான விளக்கத்துடன், தங்களுக்கும் சேர்த்து ஊசி செருகிய விசுவநாதனின் கண்களைச் சந்திக்க முடியாமல் தலை குனிந்து நின்றனர் வயதால் மட்டுமே பெரியவர்களான அவர்கள்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுன சிறுகதையை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Friday 20 July 2012

வாழ விடுங்கள்..


பிறந்த நாட்டைத் தாய்நாடென்று போற்றுகிறோம். நதிகள், மலைகள் யாவற்றையும் பெண்ணாக உருவகித்து வர்ணிக்கிறோம், வணங்குகிறோம். ஏன்!.. நிலவிலும், மலர்களிலும், இப்பூமியிலும் கூட பெண்ணின் மென்மையையும் குளுமையான பண்பையும், பொறுமையையுமே காண்கிறோம். இப்படி அனைத்திலும் பெண்மையைப் போற்றும் இப்பூமியில்தான் பெண்ணைச் சுமையாக எண்ணி அழிக்கும் மனிதர்களும் இருக்கின்றனர்.
இந்தியாவில் பெண்சிசுக்கொலை என்பது 1789-லிருந்தே ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. மற்றும் குஜராத்தின் மேற்குப்பகுதியிலிருக்கும் சூரத், கட்ச், மற்றும் உ.பியில் ராஜபுத்திரர்கள் வாழும் பகுதிகளிலும் இக்கொடுமை நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமுதாயத்தில் பெண்களின் மதிப்பிழந்த நிலை, வறுமை, வரதட்சணைக்கொடுமை, மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் போதிய அறிவின்மை என்பன காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. கட்டுப்படுத்தத் தெரியாமல் மேலும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் அக்குழந்தைகள் பெண்குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் சிசுக்கொலை செய்து விடுகின்றனர். அறியாமையின் உச்சத்தில் தாங்கள் செய்வது தவறு என்று கூட உணர மறுக்கின்றனர் இவர்கள்.

1986-ல் இந்தியா டுடே பத்திரிகைதான் முதன்முதலில் இக்கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உசிலம்பட்டியில் இக்கொடுமை அப்போது பெருமளவில் வெளிப்படையாகவே நடந்து வந்தது. இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்து விட்டால் வெளியே தெரியாமல் உடனேயே அதன் மூச்சை நிறுத்தி விடுவார்கள். வீடுகளிலேயே பிரசவம் நடைபெற்று வந்த அக்காலங்களில் இச்செயலை அப்பா வழிப்பாட்டியோ அல்லது பிரசவத்தின் போது உடனிருக்கும் தாதி பணத்தைப் பெற்றுக்கொண்டோ செய்வது வழக்கமாம். அக்காலத்தில் கள்ளிப்பாலோ, பாலுடன் நெல்மணிகளைச்சேர்த்துப் புகட்டியோ விடுவார்கள். இல்லையெனில் ஈரத்துணியை அதன் முகத்தில் போட்டு மூடியோ, பானையில் போட்டு இறுக மூடியோ இக்கொடூரம் நடப்பதுண்டாம். நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமைகளைச் செய்பவர்களைக் காவல்துறை கைது செய்து தண்டிக்க ஆரம்பித்ததும் தங்களது முறைகளை நவீனமாக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிறந்த குழந்தைக்குப் பால் தராமல் பசியால் அழ விட்டுச் சாகடிப்பது, சரியான ஊட்டம் தராமல் விட்டு விடுவது, பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டி முழுவேகத்தில் சுழலும் காற்றாடியின் முன் கிடத்தி மூச்சு முட்டியோ அல்லது ஜன்னி வந்தோ இறக்க விடுவது என்று புதிய வழிகளைக் கண்டறிந்து பெண் சிசுக்களை அழித்து விடுகின்றனர். இதனால் பிணப்பரிசோதனை செய்தாலும் இறப்பிற்கான காரணம் இயற்கையான முறையாகத்தான் தெரியுமாம். செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தப்பி விடுவார்கள்.

பிறந்தபின் பெண்குழந்தை என்று தெரிந்ததும் அழிக்கும் காலம் மலையேறி விட்டது. எதற்குப் பத்து மாதம் சுமந்து வேதனைப்பட்டுப் பெற வேண்டும். அதை விட கருவிலேயே பெண்குழந்தையென்று தெரிந்து கொண்டால் அழித்து விடலாமே என்று எண்ண ஆரம்பித்து விட்டனர் மக்கள். அதனால்தான் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் உடல் ரீதியாகவோ, மரபணு ரீதியாகவோ ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா? வளர்ச்சி நல்ல முறையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சை அளிக்கவும், பலன் தராத சிகிச்சையெனில், அக்குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கருவினைக் கலைத்து விடவும் மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தின் பலனாகக், கண்டுபிடிக்கப்பட்ட அல்ட்ரா சோனோக்ராபி, மற்றும் ஆம்னியோசெண்டசிஸ் போன்றவற்றைத் துர்பிரயோகம் செய்யவும் துணிந்து செயல்படுகின்றனர். உலகமெங்கும் இது நடந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிரண்டு இடங்களையும் வகிக்கும் சீனா மற்றும் இந்தியாதான் இக்கொடுஞ்செயலைச் செய்வதிலும் முன்னணி வகிக்கின்றன.

ஆம்னியோசெண்டசிஸ் என்பது பனிக்குட நீரை ஊசி மூலம் எடுத்து அந்த நீரிலிருக்கும் திசுக்களைச் சோதனை செய்யும் முறையாகும். ஸ்கேன் என்ற பெயரில் இப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியிருக்கும் அல்ட்ராசோனோக்ராபி என்பது ஒலியலைகளைச் செலுத்திக் கருவின் அப்போதைய நிலையைக் கண்டறியும் முறையாகும். இதெல்லாம் பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல்கள் ஏதேனும் ஏற்படக்கூடுமா என்பதை ஆராய்ந்து பிரசவகால மரணங்களைத் தவிர்க்கக் கண்டுபிடிக்கப் பட்டவை. ஆனால் இப்போது பெண்கருக்களைக் கண்டறிந்து அழிப்பதற்கே அதிகம் பயன்படுகின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் நடமாடும் ஸ்கேனிங் நிலையங்களே இருக்கின்றன. கிராமப்புறங்களுக்கு அடிக்கடி சென்று இச்சேவையை செய்து வருகிறார்கள் அவர்கள்.

1994-ல் இவ்வாறு கருவின் பால் பரிசோதனை செய்வதும், பெண்சிசு எனில் கருக்கலைப்பு செய்வதும் சட்டப்படிக் குற்றமாக்கப் பட்டன. ஸ்கேனிங் நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. என்.ஜி.ஓக்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி 1984-85ல் மட்டுமே 15,914 கருக்கலைப்புகள் நடந்தது அறியப்பட்டது. அவை அனைத்தும் பெண் சிசுக்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. நம் தமிழ் நாட்டிலும் ஆண்டொன்றுக்கு 4000 பெண்சிசுக்கள் அழிக்கப்படுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினையொன்று உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இங்கேயும் அப்படித்தான் பெண்களின் எண்ணிக்கை குறைந்து ஆண் பெண் விகிதாச்சாரம் மாறுபட்டதால் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடினர். 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 940.27 பெண்கள்தான் இருக்கின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலோ முறையே 126.1 மற்றும் 122.0 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கின்றனர். இது வட இந்தியாவில் இன்னொரு விபரீதத்திற்கு வழி வகுத்துள்ளது. என்னவெனில் அறியாச் சிறுமிகள் கடத்தப்பட்டு விற்கப்படுகின்றனர். “ஹ்யூமன் ட்ராபிக்கிங்” என்று அழைக்கப்படும் இக்கொடுமையைப் பற்றிச் சமீபத்தில் சோனி டிவியின் “க்ரைம் பேட்ரோல்” நிகழ்ச்சியில் கூட விரிவாக விளக்கினார்கள்.

கிராமப்புறங்களைப்பொறுத்தவரை ஆணோ பெண்ணோ பெற்றுக்கொடுப்பது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. க்ரோமோசோம் விளக்கங்களெல்லாம் அவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே பேர் சொல்ல ஒரு ஆண்குழந்தையைப் பெற்றுக்கொடுக்காத மருமகள் விரட்டப்பட்டு விடுகிறாள். அல்லது ஒரு வேலைக்காரியைப்போல் மூலையில் முடக்கப்படுகிறாள். அதன் பின் பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏவின வேலைகளைச் செய்யவும் இன்னொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்கு கடத்தப்பட்டு வரும் பெண்களை உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். விடிவுகாலம் ஏதுமில்லாமல் இச்சிறையில் அகப்பட்டுக் கண்ணீர் வடிக்கும் பெண்கள் எத்தனை எத்தனையோ!!
படங்கள் தந்த இணையத்துக்கு நன்றி..
பெற்றுக்கொள்ளும் குழந்தை பெண்ணாக இருந்தால் கொல்வது மட்டுமன்றி தேவையற்ற குழந்தையெனில் அது ஆணாக இருந்தாலும் கூட வீசி விடுகின்றனர். இவ்வாறு குடும்பத்தாராலேயே ஒதுக்கப்படும் குழந்தைகளுக்கென 1992-ல் தொட்டில் குழந்தைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்படி தொட்டிலில் விடப்பட்ட சுமார் 77 குழந்தைகளில் 20 பேர் தத்துக் கொடுக்கப்பட்டதாக புள்ளி விபரம் சொல்கிறது.

இவ்வாறு பெண்கள் ஒதுக்கப்பட என்ன காரணங்களென்று ஆராய்ந்தால் சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பில்லாத நிலை நிலவுவதும், வரதட்சணைக்கொடுமையும் முக்கிய இடம் வகிக்கின்றன. பெண் என்ற காரணத்தினாலேயே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அவள் சந்திக்க நேரிடும் இன்னல்கள் எக்கச்சக்கம். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் நிறையத் தாய்மார்களின் ஒரே கனவு, ‘தான் பட்ட கஷ்டம் எதையும் தன் பெண் படக்கூடாது. அவள் நன்றாக இருக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். பிறந்தபின் வாழ்க்கையில் கஷ்டப்படுவதைவிட போய்ச் சேருவதே மேல் என்றெண்ணித்தான் இக்கொடுமையை மனம் துணிந்து செய்கிறார்களோ என்னவோ 

இப்பொழுதெல்லாம் மக்கள் இவ்விஷயத்தில் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். மதுரையருகே ஒரு கிராமத்தில் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்கள் ஒன்றுகூடி இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதாக எங்கோ வாசித்தேன். அக்கிராமத்தில் ஒரு பெண் கர்ப்பமுற்றிருப்பதாகத் தெரிய வந்ததிலிருந்து அக்குழந்தை பிறக்கும் வரைக்கும் அடிக்கடி சென்று பார்த்துக் கொள்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்தால், தென்னை மரக்கன்று, மற்றும் குழந்தைக்கு வேண்டிய பொருட்களைச் சீராக ஊர்வலமாக எடுத்துச் சென்று அக்குழந்தையின் வீட்டாருக்கு பரிசளிக்கிறார்கள். அதன் பின் குறிப்பிட்ட காலம் வரைக்கும் குழுவிலிருக்கும் ஏதேனும் பெண்மணி அக்குழந்தைக்குக் காவலாகவும் இருப்பதுண்டு. இதனால் அக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

குடும்பத்தினருக்கு மன ரீதியான ஆலோசனை அளிப்பதும், குழந்தைகளை வைத்துக் காப்பாற்றும் அளவுக்கு அக்குடும்பத்தின் நிதி நிலைமை உயர தொழில் ஆரம்பிக்க ஆலோசனை கொடுப்பதும், அதுவரைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்குவதுமாக அரசாங்கமும் தன் பங்கைச் செய்து வருகிறது. சிசுக்கொலை நடந்திருக்கும் என்று சந்தேகம் வந்தால் சம்பந்தப் பட்ட அக்குடும்பத்தினரைப் பற்றிக் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்றாலும், முதல் தகவலறிக்கை பதியப்பட தாமதமாகி விட்டால் தடயங்கள் அழிக்கப்படும் அபாயமும், லஞ்சம் கொடுத்துச் சில காவலர்களைச் சரிக்கட்டும் நிலைமையும் ஏற்படக்கூடும். இவ்வளவு நடக்கும்போது இயற்கை மரணம்தான் நிகழ்ந்ததென்று பொய்ச்சான்றிதழ் பெறுதலும் நடக்காதா என்ன?

சட்டப்படிக் குற்றமென்று அறிந்தும், பால்பரிசோதனை அடிப்படையில் கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களைத் தண்டித்து அவர்கள் தொழில் புரியும் உரிமையைப் பறிக்க வேண்டுமென்று இப்போதெல்லாம் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. மஹாராஷ்ட்ராவின் ஷிக்ராபூரைச் சேர்ந்த மோகன் நகானே என்ற மருத்துவரின் தொழிலுரிமை அப்படித்தான் பறிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிய முனையும் பெற்றோரையும் அப்படிச்செய்யக் கட்டாயப்படுத்தும் சுற்றத்தாரையும் குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கும் வகையில் இ.பி.கோ-302-ல் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று எங்கள் சுகாதார அமைச்சர் சுரேஷ் ஷெட்டி வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். இதைப்பற்றிக் கடந்த பூந்தோட்டத்திலும் பகிர்ந்திருந்தேன்

எப்பொழுதுமே மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாத வரையில் எந்தவொரு சட்டமும் சீர்திருத்தமும் பலனளிக்காது. ஆணென்றால் வரவு, பெண்ணென்றால் செலவு, சுமை என்று ஒவ்வொரு பெற்றோரும் எண்ணும் வகையில் தலை விரித்தாடும் வரதட்சணைக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலே இக்கொடுமைக்கும் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பெண் குழந்தைகள் சுயமாகச் சம்பாதித்து தன் காலில் நிற்கும் வகையில் கல்வியறிவும் அளிக்க வேண்டும். குறைந்த பட்சம் தன்னுடைய ஆண்குழந்தைக்குத் திருமணம் பேசும்போது வரதட்சணை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் உறுதி பூண வேண்டும். குடும்பத்தினரும் அதற்குத் துணை நிற்க வேண்டும். வீட்டில் ஏற்படும் சிறு மாற்றங்கள்தானே நாட்டில் பெருமளவில் எதிரொலிக்கும்..


டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

Tuesday 17 July 2012

என்ன விலை உயிரே..

படம் இணையத்தில் சுட்டது..
விலைவாசி தாறுமாறாக ஏறி ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் கூடிக்கிடக்கும் இந்தக் காலத்தில் ஏதாவது மலிந்து கிடக்கிறதென்றால் அது மனித உயிர்கள் மட்டுந்தான். விபத்துகள், அஜாக்கிரதை, அலட்சியமென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. அதிலும் கையறு நிலையிலிருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு மனதை இன்னும் வேதனைப்படுத்துகிறது.

சில வருடங்களுக்கு முன் ப்ரின்ஸ் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து, மிகுந்த போராட்டத்துக்குப் பின் காப்பாற்றப்பட்டான். இது நடந்த சில நாட்களிலேயே இன்னொரு குழந்தை வேறொரு இடத்துல இதே மாதிரி ஆழ்துளைக் கிணற்றுக்குழியில் விழுந்தது. ஆனால், அதை உயிரோட காப்பாற்ற எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தோண்டிய குழியை அப்படியே விட்டுவிட்டுப் போகும் அதிகாரிகள், இப்படியொரு ஆபத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தும் குழந்தைகளைக் கண்காணிக்காமல், அந்த ஆபத்தோடு விளையாட விடும் பெரியவர்கள் என்று இவர்களின் அலட்சியத்துக்கும் பொறுப்பற்ற தன்மைக்கும் பல குழந்தைகளைப் பலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதே மாதிரியான சம்பவங்கள் நாடு முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய ‘மஹி’ வரைக்கும் இது தொடர்வது வேதனைக்குரியதுதான்.

ஸ்கூல் பஸ்களைப்பொறுத்தவரை இன்னின்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென்று ஒரு லிஸ்டே உண்டு.

1. பஸ்கள் எட்டு வருஷத்துக்கு மேல் பழசானதாக இருக்கக்கூடாது.

2.பஸ்களில் அவசரக் காலங்களில் வெளியேறுவதற்கு வழி இருக்க வேண்டும்.(மும்பையின் அரசுப்பேருந்துகளில் இந்த வசதி உண்டு. பஸ்ஸின் பின் பக்கக் கண்ணாடி நிரந்தரமாகப் பொருத்தப்படாமல், கதவு மாதிரி திறந்து மூடும் வகையில் இருக்கும். ஆபத்துக் காலங்களில் திறந்து கொண்டு சட்டென்று வெளியே குதித்து விடலாம்.

3. பஸ்ஸின் ஜன்னலில் மூன்று கிடைமட்டக் கம்பிகள் பதிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐந்து செ.மீ இடைவெளி கட்டாயமாக இருக்க வேண்டும். இது குழந்தைகள் கரம்,சிரம், புறம் நீட்டுவதைத் தவிர்ப்பதற்காக.

4. பஸ் ஓட்டுனர்களுக்கு சர்வீஸில் குறைந்த பட்சம் மூன்று வருஷ அனுபவம் இருக்க வேண்டும்.

5. பஸ்ஸில் குழந்தைகளைப் பத்திரமாப் பார்த்துக்கொள்ள உதவியாள் இருக்க வேண்டும். அது டீச்சராகவும் இருக்கலாம். என் குழந்தைகள் ஸ்கூலில் எல்கேஜி முதல் நாலாம் வகுப்பு வரையான குழந்தைகள் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ட்ரைவரின் மனைவியும், இன்னொரு உதவியாளும் கூடவே வருவார்கள். ஒன்றிரண்டு டீச்சர்களும் பஸ்ஸில் பயணிப்பதுண்டு.

6. முக்கியமாக ஸ்கூல் பஸ், வேன் முதலியவை பளீர் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, ஸ்கூல் பஸ் என்று முகப்பில் எழுதியிருக்கவும் வேண்டும். மும்பையைப் பொறுத்தவரை வேனில் ‘குழந்தைகள் வேனில் இருக்கிறார்கள்’ என்று பின்பக்கக் கண்ணாடியில் எழுதியிருக்கும். ஜன்னல்களில் வலையும் பொருத்தப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் சிலர் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. இதற்கு விலையாக சென்ற வருடம் நவம்பர் 23-ம் தேதியன்று மும்பை சயானைச் சேர்ந்த, ஒன்பதே வயதான விராஜ் பர்மார் தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

ஸ்கூல் பஸ் புறப்படும்போது ஜன்னல் கம்பிகள் வழியாக விளையாட்டாக வெளியே தலையை நீட்டிய விராஜின் நெற்றியில் சாலையோரத்து விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பர ஹோர்டிங் பலமாக இடித்தது. இடித்த வேகத்தில் மயங்கி விழுந்த பையனின் காதுகளிலிருந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்த மற்றவர்கள், பயந்து அலறி, ட்ரைவரிடம் சொன்னார்கள். பயந்து போன ட்ரைவரும், க்ளீனரும் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே போய், குழந்தைகள் விஷயத்தைச் சொல்லி, எல்லோரும் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயும் பலனில்லை. தங்களின் ஒரே குழந்தையை இழந்த பர்மாரின் பெற்றோருக்கு எந்த விதத்தில் இழப்பீடு செய்ய முடியும்? 

விபத்து நடந்ததும் கவனிக்காமல் ஓடி விட்ட ட்ரைவரின் தவறா?.. தகவல் அறிந்ததும் உடனே வராமல் நிதானமாக வந்த பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமா?.. விதி முறைகளுக்கு உட்படாத பஸ்ஸுக்கு லைசன்ஸ் கொடுத்த ஆர்.டி.ஓ ஆபீஸா?.. இல்லை, பாதுகாப்பு முறைகளை விளக்கிச் சொல்லி அறிவுறுத்தி வளர்க்காத பெற்றோரின் தவறா?.. எது பர்மாரின் உயிரிழப்புக்குக் காரணமென்று நிறைய விவாதங்களும் அப்போது நடந்தன. 

குதிரை ஓடியபின் லாயத்தைப் பூட்டுவதைப்போல, விளக்குக் கம்பங்களில் பொருத்தப் பட்டிருந்த ஹோர்டிங்குகளை உடனே அகற்றவும், விதிமுறைகளுக்கு உட்படாமல் ஓடிக்கொண்டிருந்த பஸ்களின் லைசன்ஸை பறிமுதல் செய்யவும், வேன்களில் வலைக்கம்பியும், பஸ்களில் மூன்று ஜன்னல் கம்பிகளும் பொருத்தப்பட வேண்டுமென்றும் நிறைய உத்தரவுகள் போடப்பட்டு சிலவையெல்லாம் நடைமுறைக்கும் வந்திருக்கின்றன. பஸ்ஸில் குழந்தைகளை அனுப்பப் பயந்த பெற்றோர்கள் கொஞ்ச நாள் வரைக்கும், தாங்களே குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனதும் நடந்தது.

கும்பகோணம், ஸ்ரீரங்கம் தீ விபத்துகளை யாராலும் மறக்க இயலாது. தீ விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மனிதத்தவறுகளாலும் பெரும்பான்மையானவை ஏற்படுகின்றன. சமீபத்தில் மஹாராஷ்ட்ராவின் தலைமைச் செயலகமான மந்திராலயாவில் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அது கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் பரவியதற்கு, ஒழுங்கு முறையின்றி கண்ட இடங்களிலும் அடைசலாக வைக்கப்பட்டிருந்த காகிதங்களும், கட்டிடத்தில் செய்யப்படும் மராமத்து காரணமாக ஆங்காங்கே இறைந்திருந்த மரத்துகள்கள், துண்டுகளே காரணமென்று சொல்லப்படுகிறது. 

பரவ ஆரம்பித்த தீயை அணைப்பதற்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவையும் வேலை செய்யவில்லையென்று முக்கியமான ஒருவரே தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நகரின் முக்கியமான இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டதில் மக்கள் அதிகமாகப் புழங்கும் அந்த இடங்களில், எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லையென்றும், மும்பையின் பழமையான சர்ச் கேட் ரயில் நிலையத்தில் அதே அரதப்பழசான, அபாயகரமான நிலையிலிருக்கும் ஒயர்களே உபயோகத்தில் இருக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது. 

அலட்சிய மனப்பான்மையால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் கூடுதல். உரிய சமயத்துல மருத்துவமனைக்குக் கொண்டு போகாமல் காலம் தாழ்த்துவதாலும், மருத்துவ உதவி இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் இடங்களில் வசிப்பதாலும், அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டு போனாலும் தாமதமான சிகிச்சை காரணமாகவும் எவ்வளவோ இழப்புகள் ஏற்படுகின்றன. போதாக்குறைக்கு தரமில்லாத மருந்துகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சரியான சிகிச்சை கொடுக்கப்படாமல் அலட்சியத்தால் ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறதென்றால் அது கொலைக்குற்றத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை.

மொபைல் போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை மற்றும் ரயில் பாதைகளைக் கடப்பது இவைகளும் அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. சமீபத்தில் சென்னையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கும் கூட மொபைலில் பேசிக்கொண்டே வண்டியோட்டியதுதான் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் வண்டியை ஓரம் கட்டி, போனில் பேசி முடித்தபின் பயணத்தைத் தொடருவதே நமக்கும் சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.

சாலைப்பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியும், தலைக்கவசத்தை உபயோகிக்கச்சொல்லியும் வலியுறுத்தினாலும் நம் மக்களில் அனேகம் பேர் இது எதையுமே கடைப்பிடிப்பதில்லை. குடிபோதையில் வண்டி ஓட்டக்கூடாது என்று, என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் அதிலிருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்து விடுகின்றனர். 

வாழும் காலத்தில் உடம்பையும் மனதையும் சந்தோஷப்படுத்திக்கொள்ள என்னவெல்லாமோ சௌகரியங்கள் செய்து கொள்கிறோம். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றாள் அவ்வை. அப்படி அரிதாய்க் கிடைத்த மானிடப்பிறப்பில் செய்யப்படும் ஒவ்வொரு தவறுக்கும் விலையாக நமது விலைமதிப்பில்லா உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற நமது மனதின் குரலை மட்டும் ஏனோ அலட்சியப்படுத்தி விடுகிறோம்.


டிஸ்கி: ஜூலை 15-31ல் வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது. வெளியிட்டமைக்கு நன்றி.

Thursday 12 July 2012

பூந்தோட்டம்.. (12-7-2012 அன்று பூத்தவை)


துளசி: உடல் எடை கூடிக்கிட்டே போகுதே!!.. எப்படிக்குறைக்கிறதுன்னு கவலைப்பட்டு ஜிம்மைத்தேடி இனிமே ஓட வேண்டாம். நல்லா காரமா சாப்பிட்டுக்கிட்டே எடையைக் குறைக்கலாம். ஆமாம்.. சிவப்பு மிளகாய்ல இருக்கற கேப்ஸைஸின் என்ற வேதிப்பொருள், கொழுப்பைக் கரைச்சு  உடல் எடையைக் குறைக்க உதவுதுன்னு மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துல இருக்கற உணவு விஞ்ஞானியான வைட்டிங் கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்கார்.
இந்த கேப்ஸைஸினின் உதவியால் நம்ம உடம்பில் சூடு அதிகமாகி அதனால் அட்ரீனலின் சுரப்பு அதிகமாக்கப்பட்டு இறுதியில் மூளைக்கு கொழுப்பைக் கரைக்கும்படி உத்தரவு கிடைக்குது. தனக்குக் கிடைச்ச உத்தரவைச் செயல்படுத்தும் மூளை உடம்புல இருக்கற கொழுப்பு செல்களை அழிக்கும்படி அடுத்த கட்ட உத்தரவை தன்னோட பணியாட்களான உடலின் இதர இயக்கங்களுக்குக் கொடுக்குது. இதனால உடம்பின் எல்லாப் பாகங்கள்லயும் கொழுப்பு கரைக்கப்பட்டாலும் வயிற்றுப்பகுதியில் இருக்கற கொழுப்புத்தான் முக்கியமா கரைக்கப்படுதுன்னு ஆராய்ச்சிகள் சொல்லுது. ஆகவே இனிமே உடம்பின் கொழுப்பையும் எடையையும் குறைக்கணும்ன்னா டயட்ங்கற பேர்ல பட்டினி கிடந்தோ, ஜிம்முக்குப்போயி உடம்பை வருத்திக்கவோ தேவையில்லை,.. நல்லாக் காரமாச் சாப்பிட்டே குறைக்கலாம்.

சோன் டக்கா: மும்பையை எப்படியாவது குப்பையில்லா நகரமாக்கியே தீரணும்ன்னு எங்க மாநகராட்சி கங்கணம் கட்டிக்கிட்டிருக்கு. நாளைக்கு நடக்கப்போற பொதுக்கூட்டத்துல, தங்களோட இருப்பிடத்தையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமா குப்பையில்லாம வெச்சுக்கற அபார்ட்மெண்டுகளுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும், சமூக சேவை நிறுவனங்களுக்கும் சொத்து மற்றும் தண்ணீர் வரிகளில் சலுகை வழங்கப்படும்னு தீர்மானம் கொண்டு வரப்போறாங்க. இந்தத்தீர்மானம் மட்டும் நிறைவேறிடுச்சுன்னா, இன்னும் மூணு மாசத்துல இதை அமலுக்கும் கொண்டாந்துருவாங்க.

இன்னும் பத்தாயிரம் இடங்கள்ல புதுசா குப்பைத்தொட்டிகள் வைக்கப்போறதாவும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளுக்குன்னு தனித்தனியா வெச்சு, மக்கும் குப்பைகளை உரத்துக்கும் மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கும் அனுப்பப் போறதாவும் சொல்லிட்டிருக்காங்க. கேக்க எல்லாம் நல்லாத்தான் இருக்கு. நடைமுறைக்கு வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

மகிழம்பூ: “வல்லமை” மின்னிதழில் ஒவ்வொரு வாரமும் ஒரு படைப்பாளியை, வல்லமையில் எழுதப்பட்ட அவர்களோட படைப்புகளின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து வழங்கப்படும் வல்லமையாளர் விருது திரு. இன்னம்பூரார் ஐயா அவர்களால் இந்த வாரம் எனக்கு வழங்கப்பட்டிருக்குது. வல்லமை இதழில் நான் எழுதி வெளிவந்த மந்திரச்சொல் என்ற கவிதைக்காக இந்த விருது கிடைச்சுருக்குது. மிக்க நன்றி இன்னம்பூரார் ஐயா. 

வேப்பம்பூ: நேத்து தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி உண்மையிலேயே நிறையப்பேரை அதிர வெச்சுருக்கும். உ.பியில் இருக்கும் ஒரு ஆஸ்பத்திரியில் மருத்துவர் பார்க்க வேண்டிய தையல் போடுதல், மற்றும் இஞ்செக்ஷன் கொடுக்கறது போன்ற வேலைகளை ஒரு வார்டு பாய் செஞ்சுட்டிருந்த காட்சிகளைத்தான் சொல்றேன்.

அவங்கல்லாம் மருத்துவப் பயிற்சி பெற்றவங்கதான்னும், சுமார் பத்து வருஷங்களாவே வெளி நோயாளிகள் பிரிவில் அவங்க நோயாளிகளுக்குச் சிகிச்சை கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்காங்கன்னும் கொஞ்சம் கூட தயக்கமில்லாம இயல்பா அந்த மாநிலத்தோட அதிகாரிகளும் அமைச்சர்களும் சப்போர்ட்டாச் சொன்னது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. எல்லாம் சரி,.. அவங்கல்லாம் அந்தளவுக்கு மருத்துவ அனுபவம் இருக்கறவங்கன்னா, பிரதம மந்திரி, அமைச்சர்கள், முதலமைச்சர்களுக்கும் இதே மாதிரி மருத்துவச் சேவை செய்வாங்களா?ங்கற கேள்விக்குத்தான் பதிலில்லை. இந்தப் பாக்கியமெல்லாம் நம்மைப் போன்ற சாமான்ய மனுஷங்களுக்குத்தான் கிடைக்கும் போலிருக்கு.

எருக்கம்பூ: எத்தனைதான் சட்டங்கள் கொண்டாந்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கும் பெண்களுக்கெதிரான குற்றங்கள் குறையற வழியைக் காணோம். பெண் சிசுக்கள் பிறந்தப்புறம் அழிக்கிறது பத்தாதுன்னு கருவிலேயேயும் அழிச்சுடறாங்க, ஆண் குழந்தை மோகம் அந்தளவுக்கு மக்களோட கண்ணை மறைச்சுருக்கு. இதுக்கு சில டாக்டர்களும், அல்ட்ரா சவுண்ட் என்ற அறிவியல் முன்னேற்றமும் துணை போறதுதான் வேதனை. இதைப்பத்தி விரிவா ஒரு பதிவே எழுதலாம். அந்தளவுக்கு விஷயமிருக்கு.
படங்கள் அளிச்ச கூகிளக்காவுக்கு நன்றி
இனிமே அப்படி, ஆணா பெண்ணான்னு கண்டறிஞ்சு பெண் குழந்தைகளை அழிக்கற பெற்றோர்களையும், அப்படிச் செய்யக் கட்டாயப்படுத்தற சுற்றத்தாரையும், கொலைக்குற்றம் சாட்டி, ஆயுள் தண்டனையோ அல்லது மரண தண்டனையோ விதிக்கலாம்ன்னு இ.பி.கோ செக்ஷன் 302ல் திருத்தம் கொண்டாரணும்ன்னு எங்க மாநில அரசு மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்போவதா எங்க சுகாதார அமைச்சரான சுரேஷ் ஷெட்டி சொல்லியிருக்கார். ஆண் குழந்தைகள்தான் பெத்தவங்களைக் காப்பாத்தும், பெண் குழந்தைகள் பெத்தவங்களுக்குச் சுமைங்கற இந்த மன நிலையிலிருந்து மக்கள் வெளி வரணும். அப்பத்தான் இதுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

Tuesday 3 July 2012

மும்பைக்கு வந்த தாய்லாந்து

தாய்லாந்துலேர்ந்து நம்ம தாய்நாட்டுக்கு வந்துர்க்காங்க இவங்க. ஊரு முழுக்க பத்தடிக்கு ஒரு வெளம்பரம் ஒட்டியும், ரோட்டுல வெளக்குக் கம்பங்கள்ல எல்லாம் பேனர் கட்டியும்,.. "வாங்க.. வாங்க"ன்னு கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. நாலு நாள்தான் எங்களுக்கு மும்பை வாசம், அதுக்கப்புறம் பொட்டியைக் கட்டிட்டுக் கிளம்பிட்டோம்ன்னா அடுத்த வருஷம்தான் வருவோம். அதனால அதுக்குள்ள வந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கூவிக்கூவிக் கூப்பிடறச்சே போய்த்தான் பார்ப்போமேன்னு தோணுச்சு.
இந்தியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே நல்லுறவை வளர்க்கறதுக்காகவும், பொருளாதார, வியாபார,  கலாச்சார இத்யாதி தொடர்புகளை ஏற்படுத்திக்கிறதுக்காகவும் வந்துருக்காங்க. இங்கே மும்பையின் கஃப பரேட் பகுதியில் இருக்கற உலக வர்த்தக மையத்துலதான் வருஷாவருஷம் கண்காட்சி நடக்கும். கண்காட்சியின் கடைசி நாள் வீக் எண்டாவும் அமைஞ்சுட்டதால் எங்களுக்கு வசதியாப்போச்சு. கண்டுக்கிட்டு வரலாம்ன்னு கிளம்பினோம்.

வீட்லேருந்து மின்சார ரயில்ல வி.டின்னு அப்பவும் சி.எஸ்.டி.ன்னு இப்பவும் அழைக்கப்படற எங்கூரு பெரிய ரயில் நிலையத்துக்குப் போய்ச்சேர்ந்தோம். சி.எஸ்.டிக்கு பக்கத்துல இருக்கற பஸ் நிலையத்துலேர்ந்து  2 அல்லது 138-ம் நம்பர் பஸ்ஸைப்பிடிச்சா, மும்பையைக் கொஞ்சம் இலவசமா சுத்திக் காமிச்சுட்டு உலக வர்த்தக மையத்துக்கு எதிரிலேயே இறக்கி விட்ருவாங்க. நாம ரோட்டைக் கடந்து வர்த்தக மையத்துக்கு வந்துரலாம். இல்லைன்னா டாக்ஸி பிடிச்சு சுருக்கு வழியிலும்  வரலாம்.

எல்லாக் கண்காட்சிகள்லேயும் நடத்தற சம்பிரதாயப்படி உள்ளே நுழையறப்ப படிவம் நிரப்பிக்கொடுத்ததும், ஒரு ஸ்டிக்கரை நம்ம கிட்ட தராங்க. நம்ம வசதிப்படி கையிலயோ, அல்லது பாட்ஜ் மாதிரி தோள்பட்டையிலயோ ஒட்டிக்கணும். அப்பத்தான் அனுமதி. 

இங்கே கிடைக்கும் பொருட்களெல்லாம் தாய்லாந்துலயே தயாரிக்கப்பட்டு, கப்பல்ல கொண்டு வரப்படுது. சுமார் எண்பது கம்பெனிகள் இந்தத்தடவை கடை விரிச்சுருக்காங்க. அழகு சாதனப்பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப்பொருட்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், வீட்டு உபயோகப்பொருட்கள், வீட்டு அலங்காரப்பொருட்கள், ஃபேன்ஸி நகைகள், செயற்கை மலர்கள், கலைப்பொருட்கள், தாய் மசாலா மற்றும் சாஸ் வகைகள், ஸ்பாவுக்கான பொருட்கள்ன்னு அத்தனையும் கொட்டிக்கிடக்குது. படம் எடுக்கத்தான் அனுமதி இல்லை. அலங்காரப் பூக்கள் வெச்சுருந்த ஒரு கடையில் மட்டும் அனுமதி கிடைச்சது. வெரைட்டி இருந்தாலும் ஃபேன்ஸி நகைகளுக்கான கடைகள் மட்டுமே அதிகம் இருக்கறதால சட்ன்னு சுத்திப்பார்த்து முடிச்சுட்டோம். மரச்சுள்ளிகளைக் குடைஞ்சு செஞ்சுருந்த பென்சில் ரொம்பவே அழகாருந்தது. வித்தியாசமாவும் இருந்தது. அலங்காரப்பொருளா வெச்சுக்கலாம். 
இந்தியச் சந்தையை உலக நாடுகளுக்காக இந்தியா திறந்து விட்டுருக்கறதால, இதைப் பயன்படுத்தி இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரத் தொடர்புகளை வலுவாக்கறதுக்காக, தாய்லாந்து அரசின் நிதித்துறையே இந்தக் கண்காட்சியை நடத்துதுன்னு ரிசப்ஷன்ல இருந்த ஒருங்கிணைப்பாளர் க்வாங் தெரிவிச்சாங்க. இவங்க  பூனாவில் ஒன்பது மாசம் வசிச்சுருக்காங்களாம். இந்தியாவை ரொம்பப் பிடிச்சுருக்குன்னு சொன்னாங்க. ஹிந்தியும் கூட "தோடா..தோடா" தெரியுமாம்.  இந்தியாவைத்தவிரவும் கிழக்கு ஆசிய நாடுகள்லயும் கூட இந்தக் கண்காட்சி நடக்குதுன்னு ஒரு பெரிய லிஸ்டே வாசிச்சாங்க. 
தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல்
சரி,.. இந்தியாவில் மும்பையில் மட்டுந்தான் இந்தக் கண்காட்சி நடத்தப்படுதான்னு கேட்டா.. இல்லையாம். இங்கிருந்து கிளம்பி  வர்ற அஞ்சாம் தேதியிலிருந்து எட்டாம் தேதி வரைக்கும் சென்னையிலும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரைக்கும் பெங்களூரிலயும் நடக்குமாம். மும்பையில் நடந்த விழாவின்போது தாய்லாந்தின் கவுன்ஸ்லேட் ஜெனரல் வந்து சிறப்பிச்சார்.

தினசரி மதியம் ரெண்டு மணிக்கு உணவுத்திருவிழாவும், அஞ்சு மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடக்கும். இருந்து கண்டுக்கிட்டுப்போங்கன்னு கேட்டுக்கிட்டாங்க. லோட்டஸ் ப்ளாஸம்ன்னு ஒரு ரெஸ்டாரண்ட்.  மும்பையில் பார்ட்டிகளுக்கான தாய் உணவைத்தயாரிச்சுத்தரும் கேட்டரிங் பிரிவை இப்ப புதுசா ஆரம்பிச்சுருக்காங்க. அதுக்கான அறிமுக விழாதான் இந்த உணவுத்திருவிழா. தினசரி புதுப்புது தாய் உணவுகளை செஞ்சு காமிச்சு, மக்களுக்கு ருசி காமிச்சுட்டிருக்காங்க. கூடவே அவங்களோட போன் நம்பரும், இமெயில் அட்ரஸும் சேர்த்து அச்சடிச்ச மெனு கார்டையும் விளம்பிட்டிருந்தாங்க. பார்ட்டிக்கு கேட்டரிங் செஞ்சு தரணும்ன்னா தொடர்பு கொள்ள வசதியாயிருக்கும் இல்லையா.
பூ செஞ்சு காமிக்கும் குமரேசன்
இந்தக் குழுவில் இருக்கும் குமரேசன், காய்கறிச் சிற்பங்கள் செதுக்கறதுல எக்ஸ்பர்ட். ஒரு வருஷ ஒப்பந்தத்துல தாய்லாந்துல வேலை பார்த்துட்டு, இப்ப தாய்நாடு திரும்பியிருக்கார். இந்த ஹைதராபாத்வாசி இனிமே மும்பை வாசியாம். அவரோட கை வண்ணத்துல பூசணிக்காயிலும், தர்பூசணியிலும் ரோஜாக்களும் தாமரையுமாப் பூத்துக்கிடந்தன. பத்தாக்குறைக்கு பார்வையாளர்களுக்காக வெள்ளரியில் இலையும், கேரட்டில் பூக்களும் செஞ்சு காமிச்சும் அசர வைச்சார்.
குமரேசனின் கைவண்ணம்
கண்ணுக்கு விருந்து கிடைச்சாப்போறுமா?.. அலைஞ்சு திரிஞ்சு அலுத்துப்போய் கடைசியில் காண்டீனுக்குப்போய் வடாபாவும் டீயும் வயித்துக்குள்ள தள்ளிட்டு, கொஞ்சம் பர்ச்சேஸும் முடிச்சுட்டுக் கிளம்பினோம். கடைசி நாளாப்போனதால் பாதி நாள் கழிஞ்சதும் ஒவ்வொரு கடையிலும் பொட்டியைக் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. பேரம் பேச நல்ல வாய்ப்பு தெரியுமோ. முதல் நாள் விலையை ஒப்பிடும்போது, கடைசி நாள்ல பாதி விலைக்கு கொடுத்துட்டிருந்தாங்க. சென்னை, மற்றும் பெங்களூர் வாசிகள் வாய்ப்பைத் தவற விடாம ஒரு எட்டு போயிட்டு வாங்க..

LinkWithin

Related Posts with Thumbnails