Tuesday, 17 July 2012

என்ன விலை உயிரே..

படம் இணையத்தில் சுட்டது..
விலைவாசி தாறுமாறாக ஏறி ஒவ்வொரு பொருட்களின் மதிப்பும் கூடிக்கிடக்கும் இந்தக் காலத்தில் ஏதாவது மலிந்து கிடக்கிறதென்றால் அது மனித உயிர்கள் மட்டுந்தான். விபத்துகள், அஜாக்கிரதை, அலட்சியமென்று ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படும் உயிரிழப்புகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது. அதிலும் கையறு நிலையிலிருக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு மனதை இன்னும் வேதனைப்படுத்துகிறது.

சில வருடங்களுக்கு முன் ப்ரின்ஸ் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றுக்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து, மிகுந்த போராட்டத்துக்குப் பின் காப்பாற்றப்பட்டான். இது நடந்த சில நாட்களிலேயே இன்னொரு குழந்தை வேறொரு இடத்துல இதே மாதிரி ஆழ்துளைக் கிணற்றுக்குழியில் விழுந்தது. ஆனால், அதை உயிரோட காப்பாற்ற எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. தோண்டிய குழியை அப்படியே விட்டுவிட்டுப் போகும் அதிகாரிகள், இப்படியொரு ஆபத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தும் குழந்தைகளைக் கண்காணிக்காமல், அந்த ஆபத்தோடு விளையாட விடும் பெரியவர்கள் என்று இவர்களின் அலட்சியத்துக்கும் பொறுப்பற்ற தன்மைக்கும் பல குழந்தைகளைப் பலி கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதே மாதிரியான சம்பவங்கள் நாடு முழுக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய ‘மஹி’ வரைக்கும் இது தொடர்வது வேதனைக்குரியதுதான்.

ஸ்கூல் பஸ்களைப்பொறுத்தவரை இன்னின்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென்று ஒரு லிஸ்டே உண்டு.

1. பஸ்கள் எட்டு வருஷத்துக்கு மேல் பழசானதாக இருக்கக்கூடாது.

2.பஸ்களில் அவசரக் காலங்களில் வெளியேறுவதற்கு வழி இருக்க வேண்டும்.(மும்பையின் அரசுப்பேருந்துகளில் இந்த வசதி உண்டு. பஸ்ஸின் பின் பக்கக் கண்ணாடி நிரந்தரமாகப் பொருத்தப்படாமல், கதவு மாதிரி திறந்து மூடும் வகையில் இருக்கும். ஆபத்துக் காலங்களில் திறந்து கொண்டு சட்டென்று வெளியே குதித்து விடலாம்.

3. பஸ்ஸின் ஜன்னலில் மூன்று கிடைமட்டக் கம்பிகள் பதிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் இடையில் ஐந்து செ.மீ இடைவெளி கட்டாயமாக இருக்க வேண்டும். இது குழந்தைகள் கரம்,சிரம், புறம் நீட்டுவதைத் தவிர்ப்பதற்காக.

4. பஸ் ஓட்டுனர்களுக்கு சர்வீஸில் குறைந்த பட்சம் மூன்று வருஷ அனுபவம் இருக்க வேண்டும்.

5. பஸ்ஸில் குழந்தைகளைப் பத்திரமாப் பார்த்துக்கொள்ள உதவியாள் இருக்க வேண்டும். அது டீச்சராகவும் இருக்கலாம். என் குழந்தைகள் ஸ்கூலில் எல்கேஜி முதல் நாலாம் வகுப்பு வரையான குழந்தைகள் வந்து கொண்டிருந்த பஸ்ஸில் ட்ரைவரின் மனைவியும், இன்னொரு உதவியாளும் கூடவே வருவார்கள். ஒன்றிரண்டு டீச்சர்களும் பஸ்ஸில் பயணிப்பதுண்டு.

6. முக்கியமாக ஸ்கூல் பஸ், வேன் முதலியவை பளீர் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு, ஸ்கூல் பஸ் என்று முகப்பில் எழுதியிருக்கவும் வேண்டும். மும்பையைப் பொறுத்தவரை வேனில் ‘குழந்தைகள் வேனில் இருக்கிறார்கள்’ என்று பின்பக்கக் கண்ணாடியில் எழுதியிருக்கும். ஜன்னல்களில் வலையும் பொருத்தப்பட்டிருக்கும்.

இதையெல்லாம் சிலர் சரியாகக் கடைப்பிடிப்பதில்லை. இதற்கு விலையாக சென்ற வருடம் நவம்பர் 23-ம் தேதியன்று மும்பை சயானைச் சேர்ந்த, ஒன்பதே வயதான விராஜ் பர்மார் தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

ஸ்கூல் பஸ் புறப்படும்போது ஜன்னல் கம்பிகள் வழியாக விளையாட்டாக வெளியே தலையை நீட்டிய விராஜின் நெற்றியில் சாலையோரத்து விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பர ஹோர்டிங் பலமாக இடித்தது. இடித்த வேகத்தில் மயங்கி விழுந்த பையனின் காதுகளிலிருந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்த மற்றவர்கள், பயந்து அலறி, ட்ரைவரிடம் சொன்னார்கள். பயந்து போன ட்ரைவரும், க்ளீனரும் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு ஓடி விட்டார்கள். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே போய், குழந்தைகள் விஷயத்தைச் சொல்லி, எல்லோரும் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போயும் பலனில்லை. தங்களின் ஒரே குழந்தையை இழந்த பர்மாரின் பெற்றோருக்கு எந்த விதத்தில் இழப்பீடு செய்ய முடியும்? 

விபத்து நடந்ததும் கவனிக்காமல் ஓடி விட்ட ட்ரைவரின் தவறா?.. தகவல் அறிந்ததும் உடனே வராமல் நிதானமாக வந்த பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமா?.. விதி முறைகளுக்கு உட்படாத பஸ்ஸுக்கு லைசன்ஸ் கொடுத்த ஆர்.டி.ஓ ஆபீஸா?.. இல்லை, பாதுகாப்பு முறைகளை விளக்கிச் சொல்லி அறிவுறுத்தி வளர்க்காத பெற்றோரின் தவறா?.. எது பர்மாரின் உயிரிழப்புக்குக் காரணமென்று நிறைய விவாதங்களும் அப்போது நடந்தன. 

குதிரை ஓடியபின் லாயத்தைப் பூட்டுவதைப்போல, விளக்குக் கம்பங்களில் பொருத்தப் பட்டிருந்த ஹோர்டிங்குகளை உடனே அகற்றவும், விதிமுறைகளுக்கு உட்படாமல் ஓடிக்கொண்டிருந்த பஸ்களின் லைசன்ஸை பறிமுதல் செய்யவும், வேன்களில் வலைக்கம்பியும், பஸ்களில் மூன்று ஜன்னல் கம்பிகளும் பொருத்தப்பட வேண்டுமென்றும் நிறைய உத்தரவுகள் போடப்பட்டு சிலவையெல்லாம் நடைமுறைக்கும் வந்திருக்கின்றன. பஸ்ஸில் குழந்தைகளை அனுப்பப் பயந்த பெற்றோர்கள் கொஞ்ச நாள் வரைக்கும், தாங்களே குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனதும் நடந்தது.

கும்பகோணம், ஸ்ரீரங்கம் தீ விபத்துகளை யாராலும் மறக்க இயலாது. தீ விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மனிதத்தவறுகளாலும் பெரும்பான்மையானவை ஏற்படுகின்றன. சமீபத்தில் மஹாராஷ்ட்ராவின் தலைமைச் செயலகமான மந்திராலயாவில் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அது கட்டிடத்தின் ஒரு பகுதி முழுவதும் பரவியதற்கு, ஒழுங்கு முறையின்றி கண்ட இடங்களிலும் அடைசலாக வைக்கப்பட்டிருந்த காகிதங்களும், கட்டிடத்தில் செய்யப்படும் மராமத்து காரணமாக ஆங்காங்கே இறைந்திருந்த மரத்துகள்கள், துண்டுகளே காரணமென்று சொல்லப்படுகிறது. 

பரவ ஆரம்பித்த தீயை அணைப்பதற்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தவையும் வேலை செய்யவில்லையென்று முக்கியமான ஒருவரே தெரிவித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து நகரின் முக்கியமான இடங்களில் பரிசோதனை நடத்தப்பட்டதில் மக்கள் அதிகமாகப் புழங்கும் அந்த இடங்களில், எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லையென்றும், மும்பையின் பழமையான சர்ச் கேட் ரயில் நிலையத்தில் அதே அரதப்பழசான, அபாயகரமான நிலையிலிருக்கும் ஒயர்களே உபயோகத்தில் இருக்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது. 

அலட்சிய மனப்பான்மையால் ஏற்படும் உயிரிழப்புகள் இன்னும் கூடுதல். உரிய சமயத்துல மருத்துவமனைக்குக் கொண்டு போகாமல் காலம் தாழ்த்துவதாலும், மருத்துவ உதவி இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் இடங்களில் வசிப்பதாலும், அப்படியே மருத்துவமனைக்குக் கொண்டு போனாலும் தாமதமான சிகிச்சை காரணமாகவும் எவ்வளவோ இழப்புகள் ஏற்படுகின்றன. போதாக்குறைக்கு தரமில்லாத மருந்துகள் கொடுக்கப்படுவதால் ஏற்படும் அசம்பாவிதங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். சரியான சிகிச்சை கொடுக்கப்படாமல் அலட்சியத்தால் ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறதென்றால் அது கொலைக்குற்றத்துக்குக் கொஞ்சமும் குறைந்ததில்லை.

மொபைல் போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை மற்றும் ரயில் பாதைகளைக் கடப்பது இவைகளும் அசம்பாவிதங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. சமீபத்தில் சென்னையில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கும் கூட மொபைலில் பேசிக்கொண்டே வண்டியோட்டியதுதான் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டு நிமிடங்கள் வண்டியை ஓரம் கட்டி, போனில் பேசி முடித்தபின் பயணத்தைத் தொடருவதே நமக்கும் சாலையை உபயோகிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு.

சாலைப்பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்கச் சொல்லியும், தலைக்கவசத்தை உபயோகிக்கச்சொல்லியும் வலியுறுத்தினாலும் நம் மக்களில் அனேகம் பேர் இது எதையுமே கடைப்பிடிப்பதில்லை. குடிபோதையில் வண்டி ஓட்டக்கூடாது என்று, என்னதான் கடுமையான சட்டங்கள் இயற்றினாலும் அதிலிருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பித்து விடுகின்றனர். 

வாழும் காலத்தில் உடம்பையும் மனதையும் சந்தோஷப்படுத்திக்கொள்ள என்னவெல்லாமோ சௌகரியங்கள் செய்து கொள்கிறோம். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றாள் அவ்வை. அப்படி அரிதாய்க் கிடைத்த மானிடப்பிறப்பில் செய்யப்படும் ஒவ்வொரு தவறுக்கும் விலையாக நமது விலைமதிப்பில்லா உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற நமது மனதின் குரலை மட்டும் ஏனோ அலட்சியப்படுத்தி விடுகிறோம்.


டிஸ்கி: ஜூலை 15-31ல் வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது. வெளியிட்டமைக்கு நன்றி.

25 comments:

ராமலக்ஷ்மி said...

சிறப்பாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள், சாந்தி. அவசியமான பகிர்வு.

/ஒவ்வொரு தவறுக்கும் விலையாக நமது விலைமதிப்பில்லா உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்ற நமது மனதின் குரலை மட்டும் ஏனோ அலட்சியப்படுத்தி விடுகிறோம்./

விழிப்புணர்வு ஏற்படட்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விதிகளை மதித்து நடந்தால் விபத்து ஏது? விதிகளை மீற சற்றும் தயக்கம் காட்டாதவர்களை என்ன சட்டம் கொண்டுவந்தாலும் தண்டிக்க முடிவதில்லை. நல்ல பயனுள்ள பதிவு

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. அவசியமானதும் கூட. உயிருக்கு விலையில்லை இந்த ஊரில். எல்லா விதத்திலும் ஒரு அலட்சியம். இரண்டு நாட்கள் முன்பு தில்லியில் உள்ள பள்ளிக் குழந்தை ஒன்று பள்ளியின் வாசலில் இருந்த சாக்கடையினுள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த செய்தி இன்னமும் நெஞ்சுக்குள் வடுவாக!

Yaathoramani.blogspot.com said...

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய
கடைபிடிக்கவேண்டிய பயனுள்ள்ள தகவல்கள் அடங்கிய
அருமையான பதிவு.
பகிர்வுக்கு நன்றி
வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

VijiParthiban said...

நல்ல தகவல் . அருமையான பகிர்வு... "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" ....வாழ்த்துக்கள் அக்கா....

குறையொன்றுமில்லை. said...

அனைவரும் படித்து கவனத்தில் கொள்ளவேண்டியபதிவு இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வந்ததற்கு வாழ்த்துகள்.

துளசி கோபால் said...

அருமையான பதிவு! சிறந்த ஆக்கம்!

நம்மூரில் மனுச உயிர்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை என்பது பெரிய சோகம்:(

விதிகள் பல இருந்தாலும் எல்லாம் ஏட்டளவில்தான். யாரும் சிரத்தையாப் பின்பற்றுவதில்லை:(

ஸ்ரீராம். said...

ஸ்கூல் பஸ் டிரைவர் அந்த வண்டியிலேயே தனது மனைவியும் குழந்தையும் இருந்தால் கவனமாக ஓட்டுவார் என்பது சாத்தியம். அவர் குழந்தையையும் அந்தப் பள்ளியிலேயே சேர்த்து விடலாம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவரச் செய்யாத நிர்வாகத்தையும், அதைச் சோதனை செய்து சான்றிதழ் தரும் அரசு அதிகாரிகளையும் எப்படி சரியாக வேலை பார்க்க வைப்பது? சுயவிழிப்புணர்வு இல்லாமல் எந்தத் தவறுமே சரியாகாது!

CS. Mohan Kumar said...

மிக மிக அவசியமான பதிவு. இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானதற்கு வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

மிக மிக முக்கியமான பதிவு... அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்...
ஸ்கூல் பஸ்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த லிஸ்ட்டை அறிந்து கொண்டேன்..

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 7)

என் தளத்தில் :
"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

ஹுஸைனம்மா said...

ரொம்ப அருமையாச் சொல்லிருக்கிங்க.

/இந்தக் காலத்தில் ஏதாவது மலிந்து கிடக்கிறதென்றால் அது மனித உயிர்கள் மட்டுந்தான்//
முதவரியே முழு சேதியைச் சொல்லுது.

மற்றவர்களின் அலட்சியத்தால் ஒருவருக்கு ஆபத்து ஏற்படுவதைவிட, தனக்குத்தானே (மொபைல் போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுவது, சாலை மற்றும் ரயில் பாதைகளைக் கடப்பது, ஹெல்மெட் போடாதது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது போன்றவை) ஆபத்து விளைவிச்சிக்கிறவங்களை என்ன சொல்றது!!

மாதேவி said...

அவசியமான பகிர்வு. நாள்தோறும் விபத்து மரணங்கள்.:(

வாழ்த்துகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முரளிதரன்,

தனி மனித ஒழுக்கம்+கட்டுப்பாடு இல்லாதவரைக்கும் என்ன கடுமையான சட்ட திட்டங்கள் வந்தாலும் முழுசா நிறைவேறுவதென்பது சிரமம்தான்.

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜி,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துள்சிக்கா,

வாசிச்சதுக்கு நன்றிக்கா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

//சுயவிழிப்புணர்வு இல்லாமல் எந்தத் தவறுமே சரியாகாது!//

ரொம்பச் சரியாச் சொன்னீங்க..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன் குமார்,

வாசிச்சதுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இந்த மொபைல் போன்ல பேசிட்டே ரோட்ல நடக்குற பழக்கம் இங்கே சமீபத்துல கூட ஒரு இளம்பெண்ணைக் காவு வாங்கியிருக்குது.

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வாசிச்சதுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails