Wednesday 30 June 2010

மழையே மழையே...4(கடைசிப்பாகம்).



சூரிய பகவானின் தரிசனம் கண்டு ரெண்டு மூணு நாள் ஆகியிருக்கும். அன்னிக்கு மதியத்துக்கு மேல மழை கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு நிக்க ஆரம்பிச்சுடுச்சு. மழை விட்டும் தூவானம் விடாத கதையா, ஹை டை இன்னும் முடியாததால தண்ணீர் மட்டம் அப்படியே இருந்தது. பசங்களெல்லாம் கிடைச்ச வாய்ப்பை நழுவ விடாம கப்பல் செஞ்சுவிட்டு விளையாடிக்கிட்டிருந்தாங்க. மெதுவா காரை நிறுத்தியிருந்த இடத்துக்கு போய் பார்த்தேன்.எதிர்பார்த்ததுதான்... மிக்ஸிங் எதுவுமில்லாமலேயே தண்ணியில மிதந்துக்கிட்டிருக்கு. நல்லவேளை இருக்கைகள் வரை தண்ணி ரொம்பலை. ஆக்ஸிலேட்டர் நல்லா கடப்பாரை நீச்சலடிச்சு குளிச்சிக்கிட்டிருக்கு. இந்த மழைக்கப்புறம் எல்லா சர்வீஸ் செண்டர்களிலும் பயங்கர பிஸினெஸ் தெரியுமோ..

மதியத்துக்கு மேல நீர்மட்டம் குறைய ஆரம்பிச்சது. இப்ப ரங்க்ஸ் பையரை கூட்டிக்கிட்டு, 'சும்மா.. அப்டிக்கா போயிட்டு வர்றேன்'ன்னு நழுவிட்டார். போயிட்டு சாவகாசமா, ஆடி அசைஞ்சு அரைகப் பால் பாக்கெட்டோட வர்றாங்க. ஏது இதுன்னா.. ரெண்டுபேரும் ஊர்க்காடெல்லாம் சுத்திச்சுத்தி, ஊருக்கு வெளிய இருக்கிற பண்ணைக்கு பக்கமா போயிருக்காங்க. அங்க பால்சப்ளை நடக்கிறதை பார்த்ததும் வாங்கிட்டு வந்திருக்காங்க. அரைகப் பால் வெறும் முப்பதே ரூபாய்தானாம். இதுல, அரைமணிக்கொருக்கா ஊசிபோட்டு பால்சுரக்க வெச்சு, காசுபார்த்த கொடுமையும் அங்கெல்லாம் நடந்துக்கிட்டிருந்ததாம். நெறைய மாடுகள் வெள்ளத்தில் அடிச்சிக்கிட்டு போயிட்டதால உரிமையாளர்களுக்கு பெருத்த நஷ்டம். அதை இப்படி ஈடுகட்டி மழையுள்ளபோதே நனைஞ்சிருக்காங்க.

கிட்டத்தட்ட நாலாம் நாள் தண்ணீரெல்லாம் சுத்தமா வடிஞ்சு, தரையெல்லாம் கொஞ்சம் காயவும் ஆரம்பிச்சுடுச்சு. அப்பாடா... இனி இயல்பு நிலை திரும்பிடும்ன்னு நினைச்சிருந்தோம். வீட்டுக்குள்ளேயே இருந்தா ஊர் நிலவரம் எப்படி தெரியும்!!. கிளம்பிட்டேன்.. ரோடெல்லாம் ஒரே குப்பை. தண்ணீரில் ஊறிப்போன ஃபர்னிச்சர்கள், மெத்தைகள். பாய் தலையணைகள், உணவுப்பொருட்கள்ன்னு எல்லாத்தையும் மக்கள் வெளியே கொண்டு வந்து குப்பையா குமிச்சிக்கிட்டிருக்காங்க . வீட்டை சுத்தம் பண்ண வேணாமா.. கடைத்தெருவிலிருந்த ஒண்ணு ரெண்டு கடைகளை தவிர மற்ற இடங்களில் தண்ணீர் புகுந்ததால ஊறிப்போன அரிசி, சோளம், கோதுமை மூட்டைகளை அப்படியே குப்பைத்தொட்டிக்கு பக்கத்துல கொண்டாந்து கொட்டியிருந்தாங்க.

ஒருகடையின் வெளியே வெச்சிருந்த போர்டை பார்த்ததும் திக்குன்னு ஆயிடுச்சு. 'பக்கத்தூர்ல இருக்கிற அணை எப்போ வேணும்ன்னாலும் உடையலாம், எல்லாரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க'ன்னு எழுதி வெச்சிருந்தாங்க. அந்த அணை நிரம்பிவழியுது, ஏகப்பட்ட ஷட்டர்களை திறந்து தண்ணீரை வெளியேத்துறாங்கன்னு தோழி ஏற்கனவே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. உடனே வீட்டுக்கு ஓடிவந்தேன். இங்கே என்னடான்னா அதுக்குள்ளே இதப்பத்தி கேள்விப்பட்டு மீட்டிங்கை கூட்டிட்டாங்க. அப்படி அணை ஒடைஞ்சா தண்ணி அரை மணி நேரத்துல இங்கே வந்துடும். மொதல்ல தரைத்தளம் மற்றும் முதல் தளத்துல இருக்கிறவங்க, முக்கியமான பொருட்களை (documents, pass books, passport, jewels,cash) எடுத்துக்கிட்டு மேல்தளங்கள்ல இருக்கிறவங்க வீட்டுக்கு போயிடுங்கன்னு அறிவிச்சாங்க. எங்க வீட்டுக்கும் ரெண்டு ஃபேமிலியை அழைச்சோம். முக்கியமான பொருட்களோட கம்ப்யூட்டர், டிவி, உணவுப்பொருட்கள்ன்னு என்னல்லாம் கொண்டு வரமுடியுமோ, அதையெல்லாம் எங்க வீட்டுல பத்திரப்படுத்தினாங்க.

அந்த சூழ்நிலையில் எனக்கு 'கள்ளிக்காட்டு இதிகாசம்'தான் ஞாபகம் வந்தது. வைகை அணையில் நீர் நிரம்பும்போது இப்படித்தானே ஊர்களெல்லாம் மூழ்கும். அந்த சூழ்நிலையிலும் ரங்க்ஸ் கிட்டபோய் செயின் இருக்கான்னு கேட்டேன். கடைசி நேரத்துல காமெடி பண்றாளே.. பயத்துல மூளை கலங்கிடுச்சோன்னு நினைச்சாரோ இல்லியோ.. 'எதுக்கு?' ன்னார். 'இல்ல, காரை கட்டிப்போட்டா வெள்ளத்துல அடிச்சிக்கிட்டு போவாதில்ல'ன்னு சொன்னப்புறம்தான் நான் கேட்டது தங்கச்செயின் இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டு நிம்மதிப்பெருமூச்சு விட்டார். அணை உடைஞ்சு வெள்ளம் வந்தா அந்த வேகத்துல நம்ம பில்டிங்கே நிக்குமோ நிக்காதோ.. ஸ்டீல் செயினெல்லாம் எந்த மூலைக்கு.. பொழச்சுக்கெடந்தா நம்ம கார்ல பயணம்.. இல்லேன்னா தேவலோக வாகனத்துல பயணம். எது வாய்க்குதோ பாக்கலாம்.

இத்தனை பேர் ஒரே சமயத்துல வந்தா ட்ராபிக் ஜாம் ஆயிடும்ன்னு நெனைச்ச முப்பத்து முக்கோடி தேவர்களெல்லாம் ஓவர்டைம் பாத்து, அந்த அணையை காப்பாத்திட்டாங்க. சில இடங்களில், அணை உடையப்போவுதுன்னு வதந்தியா கிளப்பறதுக்கே சில காமெடிபீஸ்கள் அலைஞ்சுக்கிட்டிருந்தது. ஒடனே மாநகராட்சி ஜீப்புல ஆட்களை அனுப்பி,' வதந்திகளை நம்பாதீர்'ன்னு தண்டோரா போட்டப்புறம்தான் வதந்தியலை ஓய்ஞ்சது. ஒரு வாரத்துக்குள்ள மும்பை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பிடுச்சு.

மும்பை நகருக்குள் வெள்ளசேதம் நிறைய ஏற்படுவதற்கு நகருக்குள் ஓடும் Mithi நதியும் ஒரு காரணம் . Powai, மற்றும் விஹார் ஏரிகளிலிருந்து மும்பைக்கு குடி நீர் வழங்கப்படுது. இந்த ஏரிகளிலிருந்து வெளியாகும் அதிகப்படியான நீரே அந்த நதி. இது, Powai, Saki Naka, Bandra Kurla complex, calina, Dharavi மற்றும் பல இடங்கள் வழியா ஓடி மாஹிம்மில் அரேபியக்கடலில் கலக்குது. பேருக்குத்தான் இது நதியே தவிர எல்லாவிதமான மற்றும் தொழிற்சாலைக்கழிவுகளை கொட்டும் இடமாத்தான் இருக்குது.அதோட மழை நீர் வடிகாலாகவும் இது இருக்குது. மக்கள் கொட்டிய குப்பைகள் , கழிவுகளெல்லாம் அதோட ஓட்டத்தையே திசைதிருப்பிடுச்சு. மும்பையின் கலீனா பகுதிதான் வெள்ளத்தின்போது ரொம்பவும் சேதப்பட்டது. அதற்கு இந்த நதியே முக்கிய காரணம். போதாக்குறைக்கு பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் இதன் பாதையை மறித்துக்கட்டப்பட்டதால் மழைத்தண்ணீர் போக்கிடமில்லாம ஊருக்குள் புகுந்துடுச்சுன்னும் அரசியல் நடந்தது. வெள்ளமெல்லாம் வடிஞ்சப்புறம் அந்த நதியை தூர்வாரி ஆழப்படுத்தி சுத்தமும் செஞ்சாங்க. இப்பவும் வருஷாவருஷம் அந்த சடங்கு நடக்குது. நீர்மட்டம் கொஞ்சம் உயர்ந்தாலும் சரி.. உடனே வெள்ள எச்சரிக்கை கொடுத்து, அந்த பகுதி மக்களை உஷார்படுத்திடுவாங்க.

Mithi நதியின் பாதை.

மழையெல்லாம் முடிஞ்சப்புறம், பாலிதீன்பைகள் சாக்கடைகள், மற்றும் வடிகால்கள்ல போய் அடைச்சிக்கிட்டதாலதான், வெள்ள அபாயம் வந்துச்சுங்கிற ஒரு ஒலக மகா உண்மைய ரூம்போட்டு யோசிச்சு கண்டுபிடிச்சாங்க. (அவங்கவங்க இருந்த இடத்துல, ரெண்டு நாளா மாட்டிக்கிட்டு,... நகரமுடியாம இருந்த சந்தர்ப்பத்துல,.. யோசிச்சதாத்தான் இருக்கணும்). மழைக்கப்புறம் ஒரு மாசத்துக்குள்ளாற கடைக்காரர்களெல்லாம், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறதுக்காக அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிற பாலிதீன்பைகளை காலிபண்ணனும், அதுக்கப்புறம் அவங்க ஸ்டாக் வெச்சிருக்கிறதா கண்டுபிடிச்சா அபராதம், பொதுஜனங்கள் யாராவது கேரிபேக்கை கையில் வெச்சிருக்கிறதை பாத்தா ஆயிரம்ரூபாய் அபராதம்ன்னு சட்டம் போட்டாங்க. அப்புறம் 50 மைக்ரான் கள் அளவுக்கு பாலிதீன்பைகள் தயாரிச்சிக்கலாம்ன்னு ரெண்டு படி இறங்கிவந்தாங்க. இப்போ, 20 microns அதாவது .002 cm வரை அனுமதி கொடுத்திருக்காங்க. எதுவோ தேஞ்சு கட்டெறும்பு ஆச்சுதாமே!!! அந்தக்கதை ஞாபகம் வருதா :-))

மும்பையை பொறுத்தவரை, எந்த சீசனா இருந்தாலும் நல்லா ஜாலியா எஞ்சாய்பண்ணுவோம். மழை வந்தாத்தான் எங்களுக்கு ஐஸ்க்ரீமே ருசிக்கும் :-) வினாயகர் சதுர்த்திக்கப்புறம் நாரியல் பூர்ணிமான்னு ஒரு பண்டிகை வரும்... அதுவரை மழை இருக்கும். இங்கே கொஞ்சமா தண்ணி தேங்கறது, பஸ், ரயில் போக்குவரத்து தாமதப்படுவது, நிறுத்தப்படுவதெல்லாம், அன்றாட நிகழ்ச்சி... சொல்லப்போனா, நாங்களே அதை எதிர்பார்க்கிறதுண்டு... ஏன்னா மும்பை மக்கள் த்ரில் பிரியர்கள். இதோ இப்பக்கூட.. மும்பையின் புற நகர்பகுதியான தானாவில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துருக்கு. இதையும் தாண்டி வருவோமில்ல....

நாலு நாளா பெஞ்ச மழையில் எங்கூடவே நனைஞ்ச உங்களுக்கு ரொம்ப நன்றி. யாருக்காவது சளி பிடிச்சிருந்தா, சொந்த அனுபவத்தில் ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன்... செஞ்சு பாருங்க.

ஒரு கைப்பிடி துளசியும், ரெண்டு ஸ்பூன் பனங்கற்கண்டும், ரெண்டு கப் தண்ணியில் போட்டு கொதிக்கவெச்சு ஆறவிடுங்க. ஆறியதும் ஒரு ஸ்பூன் தேனை அதில் விட்டு, ஒரு நாளுக்கு ரெண்டுவேளைன்னு மூணு நாள் குடியுங்க. சளி, இருமல் ஓடிப்போயிடும்.

வர்ட்ட்டா....

Monday 28 June 2010

மழையே மழையே..-3

(உதவி: கூகிள்)

மின்சாரம் நின்னு போயிட்டதால் இன்வர்ட்டர்+பேட்டரியும் எப்போ வேண்ணா மண்டையை போடலாம்ன்னு எதிர்பார்த்து, இட்லி மிளகாய்ப்பொடி, சாம்பார்ப்பொடி, ரெண்டும் தயார்செஞ்சு ஸ்டாக் வெச்சிருந்தேன். அதைவெச்சு ரெண்டு நாள் ஓட்டியாச்சு. இன்னிக்கு மழை கொஞ்சம் குறைஞ்சிருக்கு, ஆனா நிக்கலை. அதனால தண்ணியும் வடியலை. இதுக்கு மழை மட்டுமல்ல.. வேறொரு காரணமுமிருக்கு.

மும்பையிலுள்ள சாக்கடைகளாகட்டும், மழைநீர் வடிகாலாகட்டும்.. எல்லாமே வெள்ளைக்காரன் காலத்துல நிர்மாணிக்கப்பட்டு கட்டப்பட்டது. அதுக்கப்புறம் மாறிவரும் காலத்துக்கேற்ப, பெருசா ஒண்ணும் மாத்தியமைக்கலை. மும்பை என்பது ஏழு தீவுகளை ஒன்றிணைத்து உண்டாக்கப்பட்டது. அந்தக்காலத்தில் மக்கள்தொகை அதிகமில்லை. அதனால வசதிகளும் அதற்கேற்ப இருந்தது. இப்ப அப்படியில்லியே... ஆனா, மறுசீரமைப்புத்தான் ஒண்ணும் நடக்கலை.இங்கேதான் இயற்கையும் தன்னை கூட்டுச்சதியில் இணைச்சுக்கிட்டது.

ஹை டைட், லோ டைட் பத்தி உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம்.
தெரியாதவங்களுக்காக... சந்திரன் பூமியை சுத்துதுன்னு சின்னப்புள்ளைல பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கோமில்லையா. இந்த ரெண்டுக்கும் நடக்கிற டக் ஆஃப் வார்தான் டைட் ஏற்பட காரணம். பூமிக்கு புவி ஈர்ப்பு விசை இருக்கிற மாதிரி சந்திரனுக்கும் ஈர்ப்பு விசை இருக்குது... அது பூமியை தன்னை நோக்கி இழுக்குது. ரெண்டும் காந்தம் மாதிரி ஒண்ணையொண்ணு இழுக்கிறதாலதான் சந்திரன் ஆயிரக்கணக்கான வருஷங்களா பூமியை பிரியாம இருக்கு. இல்லைன்னா, கோலிகுண்டாட்டம் தெறிச்சி வானவீதியில் ஓடிப்போயிருக்கும்.

சந்திரன், பூமியின் எந்தப்பக்கம் தன்னுடைய அருகில் இருக்குதோ,.. அதை தன்னை நோக்கி இழுக்கும்போது , 'நீ இழுத்த இழுப்புக்கெல்லாம் வரமுடியாது'ன்னு பூமி அசையாம நின்னுக்கிடும். ஆனா தண்ணி கிட்ட பூமியின் பாச்சா பலிக்காது. அதைப்பிடிச்சு வெச்சுக்கிட முடியாததால் ஈர்ப்பு விசைக்குட்பட்டு தண்ணீர் சந்திரனின் பக்கம், அதாவது பூமியின் மேல்புறமாக பொங்குகிறது. இதனால் கடற்கரைப்பக்கம் வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கிறது. இது காயல்கள் வழியாகவும், கழிமுகம் வழியாகவும் ஊருக்குள் புக வாய்ப்பிருக்கு. மும்பையில் மழை நீர் வடிகால்களின் மட்டம், கடல் மட்டத்தைவிட தாழ்வா இருந்ததால், மழை நீர் வடிந்து கடலுக்குள் போறதுக்கு பதிலா கடல் தண்ணீர், வடிகால்கள் மற்றும் சாக்கடை வடிகால்கள் வழியா நகருக்குள் புகுந்துடுச்சு.

மேலும், நம்ம மக்கள் கொட்டின குப்பையும் பழி வாங்கிடுச்சு. கடைத்தெருவில் ரெண்டு ரூபாய்க்கு பச்ச மொளகா வாங்கினாக்கூட பாலிதீன் கவர்ல போட்டுத்தான் கொடுப்பாங்க. இப்பிடி நெறைய சேர்ந்து போற ப்ளாஸ்டிக் குப்பைகளை மக்கள் அப்படியே போறபோக்குல வீசிட்டு போறதுதான்.. சாக்கடைகளில் போய் அடைச்சிக்கிட்டு மழைத்தண்ணி வடியவிடாம செஞ்சுடுச்சு. இது கூட டைடும் சேர்ந்துக்கிட்டதுதான் இந்த மோசமான நிலைமைக்கு முக்கியமான காரணம். வெள்ளத்திலிருந்து மீண்டதும் அரசு செஞ்ச முதல்வேலை பாலிதீன் கவர்களுக்கு தடா போட்டதுதான். ஏதாவது கடைகளில் பாலிதீன் கவர்களில் பொருட்கள் கொடுக்கிறமாதிரி தெரிஞ்சா, அவங்களுக்கு அபராதம், அடிக்கடி கடைகளில் சர்ப்ரைஸ் விசிட்ன்னு எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்தது. ஆனாலும், எந்த ஒரு நல்ல காரியத்துக்கும் ஆயுசு குறைவுன்னு சொல்லணுமா என்ன!!.

ரோட்டுல தண்ணி தேங்கினதால வாகனங்களின் எஞ்சினுக்குள் தண்ணி புகுந்து நடுரோட்டில் நின்னுடுச்சு. பெரிய வி.வி. ஐ. பிக்கள் கூட வாகனங்களை விட்டுட்டு நடந்து போக வேண்டியதாப்போச்சு. அவ்வளவு கிட்டக்க பாலிவுட் நட்சத்திரங்களை பாத்தவங்களுக்கு, இது அதிர்ஷ்டமா, துரதிர்ஷ்டமான்னு நிர்ணயிக்க முடிஞ்சிருக்காதில்லே . ஒரு சில இடங்களில் கார்க்கதவை திறக்க முடியாம உள்ளேயே மாட்டிக்கிட்டவங்க, மூச்சுமுட்டி இறந்த செய்திகளும் கிடைச்சது. இன்னும் கொஞ்ச நேரத்துல சரியாயிடும்ன்னு நம்பிக்கையில கண்ணாடிய ஏத்திவுட்டுட்டு, ஏசியையும் ஆன்பண்ணிட்டு உக்காந்திருந்தவங்களுக்கு,கடைசியில அதுவே எமனா வந்துடுச்சு:-((

(உதவி: கூகிள்)
அன்னிக்கு மழைக்கு தோதா, வத்தக்குழம்புக்கு அரைச்சு முடிக்கப்போகும் நேரம்.. விர்ர்ர்ர்ரூம்ன்னு ஓடிக்கிட்டிருந்த மிக்ஸி சொய்ங்க்ன்னு நோஞ்சான் மாதிரி குரல் கொடுத்துச்சு. ஆஹா.. பேட்டரியும் அவுட்டா!!!.. போச்சுடா.. ஹையா!!... இனிமே சமைக்க வேணாம்ன்னு இருக்கமுடியாதே :-((. கொஞ்ச நாள் கற்கால வாழ்க்கை வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு பாஸிட்டிவா திங்க் பண்ணனும் ஆம்மா :-))). வெளியே நிலவரம் எப்படியிருக்குன்னு பாத்துட்டு அப்படியே மெழுகுவர்த்தி வாங்கலாம்ன்னு கிளம்பினேன். எந்தளவுக்கு வசதிகளுக்கு பழகிப்போயிருக்கோம்ன்னு, இதுமாதிரி சிக்கல்கள் வரும்போதுதான் உணரமுடியுது.

கடையில் பால் இல்லை. ஆனா,.. பால் பவுடர் கிடைச்சது. அவசர ஆத்திரத்துக்கு இதுவாவது கிடைச்சதேன்னு கிடைச்சதை வாங்கிக்கிட்டு, மேற்கொண்டு தேவைப்பட்டதையும் வாங்கும்போதுதான் ஞாபகம் வந்தது. சர்க்கரை வேணுமே.. ஆனா, ஒருத்தருக்கு ஒரு கிலோவுக்கு மேல கிடைக்காதாம்.விலையும் டபுள். நாங்க பத்துவருஷ வாடிக்கையாளர்ன்னதால சலுகையா ஒண்ணரைகிலோ கிடைச்சது. அதே வரிசையில் இருக்கிற அவங்களோட இன்னொரு கடையில், இன்னோரு ஒண்ணரைகிலோ சர்க்கரையும், கொஞ்சம் பால்பவுடரும் வாங்கி, கைக்குழந்தைக்காரியான என் சினேகிதிக்கு கொண்டு போய் கொடுத்தேன்.அவ வீட்டுக்காரர் நகராட்சியில் சிவில் எஞ்சினீயரா இருக்கார். வெள்ள நாட்களில் கூடுதல் வேலைல மாட்டிக்கிட்டார். அவருக்கு வீட்டுக்கு வரமுடியாத சூழ்நிலை, உதவிக்கும் யாரும் கிடையாது. மேலும் அவளோட குட்டிப்பையன் கிட்டத்தட்ட என்னோட வளர்ப்புமகன். பாத்துக்கிட்டிருக்க முடியுமா என்ன?..

கடையில் பால்பவுடர் வாங்கிட்டு திரும்பும்போது பாக்கிறேன். ஒருத்தர் கண்டென்ஸ்ட் மில்க்(மில்க் மெய்ட்) வாங்கிட்டு போறார். எலி மாட்டுச்சுன்னு , அவங்க சம்சாரம் பரிசோதனை ஏதாவது செய்றாங்களோ என்னவோ?.. இல்லையாம்.. அதை dilute செஞ்சு டீ, காப்பிக்கு உபயோகப்படுத்தவாம்... கடைக்காரர் சொல்றார். தேவைன்னு வரும்போதுதான் மக்களோட புத்தி என்னமா வேலை செய்யுது :-)).

ஒண்ணு சொல்லணும்... இந்த மழையால நிறைய சேதம், உயிரிழப்பு எல்லாம் ஏற்பட்டிருந்தாலும், மக்களுக்கிடையே உதவும் மனப்பான்மை, மனிதாபிமானம் எல்லாம் இன்னும் கூடுதலாக இது ஒரு சந்தர்ப்பமா இருந்திச்சின்னே சொல்லலாம். சில குடும்பங்களில் அப்பாவோ, அம்மாவோ, மழைகாரணமா வெளியே மாட்டிக்கிட பக்கத்துவீட்டுக்காரங்கதான் உதவியா இருந்தாங்க. எங்க வீட்டுலயும், அன்னிக்கு ரங்க்ஸ் வழக்கம்போல ஆப்பீசுக்கு போயிருந்தார்ன்னா என்ன கதியாகியிருப்போமோ :-(( .. பணியிடத்திலோ இல்லை வீட்டிலோ, ஏதாவது ஒரு இடத்துல இருந்தா நிம்மதியாயிருக்கும். பாதிவழி வந்துட்டு வெள்ளத்துல மாட்டிக்கிட்டா வீட்டுல இருக்கிறவங்களுக்கு கவலை வராதா என்ன.!!!

ஆசிரியையா இருக்கும் என்னுடைய தோழி, வீட்டுக்கு வரமுடியாம பள்ளிக்கூடத்துல மாட்டிக்கிட்டாங்க. வீட்டிலோ வயதான மாமியாரும் கணவரும் மட்டுமே. அம்மாவை காணாம அழுது ஏங்கிப்போன, அஞ்சுமாதமேயான பையனை சமாளிக்கமுடியாம, ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. தோழி பள்ளிக்கூடத்துல பத்திரமா இருப்பாங்கன்னு நெனைச்சா வெள்ளத்தோட போராடி , மூணாம் நாளே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாங்க. ஸ்கூல்ல இருந்து ரெண்டு நாள், நடந்தே வந்திருக்காங்க. தரைத்தளத்தில் வெள்ளம் புகுந்த இடங்களிலெல்லாம், மேல்மாடிகளில் இருந்தவர்கள்தான் அடைக்கலம் கொடுத்து ஆதரவா இருந்திருக்காங்க.

ரோடுகளில் அங்கங்க சாக்கடை மூடிகள் திறந்திருக்கிறது தெரியாம அதுல மாட்டி நிறையபேர் உயிரிழந்துட்டாங்க. தண்ணி தேங்கியிருக்கிற இடத்துல, ரோடு எங்கிருக்கு, சாக்கடை எங்கிருக்குன்னு தெரியாதில்லையா... அதனால பெரிய மரக்கிளைகளை வெட்டி அந்த திறந்த சாக்கடைகளில் போட்டு வெச்சு அடையாளப்படுத்தினாங்க. தண்ணீர்ப்பரப்புக்கு மேலாக இலைதழைகளை பார்த்ததும் மக்கள் சுதாரிச்சுக்கிடுவாங்கன்னு இந்த ஐடியா. பொதுவா மும்பை மக்கள் கொஞ்சம் பிந்தாஸா இருப்பாங்க. கூடுமானவரை எதையுமே ஈஸியா எடுத்துக்கிட்டு போயிட்டே இருப்பாங்க.. ஆனா, ஒரு பொதுப்பிரச்சினைன்னு வந்தா ஒருத்தருக்கொருத்தர் ரொம்பவே அனுசரணையா இருப்பாங்க. தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வாங்க.. அது, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் சரி.. ஒவ்வொரு இயற்கை மற்றும் செயற்கை ஆபத்துகளிலிருந்து மும்பை மறுபடி மறுபடி மீண்டு, புத்துணர்வோடு எழுந்து நிற்கிறதே இதுக்கு சாட்சி.

(மழை பெய்யும்)




Thursday 24 June 2010

மழையே மழையே...-2

(உதவி:கூகிள்).


பிரளயமே வர்றாப்ல மழை அடிச்சு ஊத்துது. பசங்க எழுந்து, ஸ்கூலுக்கு தயாராக ஆரம்பிச்சாங்க. 'இன்னிக்கு ஸ்கூல் போக வேணாம்'ன்னு சொன்னேன். 'ஐயோ !! இன்னிக்கி பரீட்சை இருக்குது தெரியுமில்ல. போக வேணாம்ன்னு சொல்றீங்களே'ன்னு பதறினாங்க. பாவம்.. என்ன நடந்ததுன்னு அவங்களுக்கு எப்டி தெரியும். ஜன்னல்கிட்டே கூட்டிட்டு போய் வெளியே காமிச்சேன். அதிர்ந்துட்டாங்க. பக்கத்து பில்டிங்கில் க்ரவுண்ட் ஃப்ளோரில்,வீடுகளுக்குள் தண்ணி புகுந்தாச்சு. நிச்சயமா இடுப்பளவுக்கும் மேலேயே இருக்கும். ரெண்டு கட்டடங்களுக்கிடையே இருந்த தடுப்புச்சுவர் இடிஞ்சு கிடக்கு. அதான் அந்த 'தடால்'... நேர்ல பாத்துட்டு அதிர்ந்து போயிட்டேன்.

எங்க பில்டிங் கொஞ்சம் உசரமான இடத்தில் இருப்பதால் தரைத்தளத்தில் தண்ணீர் வரலை. ஆனா,.. முன்பகுதி, பார்க்கிங் பகுதியெல்லாம் தண்ணீர் தேங்கி நிக்குது. எதிர்வரிசையில் தாழ்வான பகுதியில் இருக்கும் வரிசை வீடுகளில் (இங்கே அதை chawlன்னு சொல்லுவோம்) ஜன்னல் வரைக்கும் தண்ணீர் வந்துவிட்டது. மெல்ல மெல்ல எல்லோரையும் கலவரம் தொற்றிக்கொள்ள ஆரம்பிச்சது. டிவியில் வேறு,.. செய்திகள் வரிசையா வர ஆரம்பிச்சு விட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறையும் அறிவிச்சுட்டாங்க. மொட்டைமாடியில் ஏறிப்போய் பாத்தா சுத்திலும் ஒரே வெள்ளக்காடா கிடக்குது. பக்கத்து பில்டிங்கில் எல்லாம் வாகனங்கள் மூழ்கிக்கிடக்கு. டிவியில் எந்தக்காலத்திலோ பாத்ததெல்லாம் இப்போ கண்முன்னாடி நடக்கிறதை நினைச்சா நம்பவே முடியலை. ஹெலிகாப்டரில் வரும் சாப்பாட்டு பொட்டலங்களை நம்பி இருக்கவேண்டி வந்துடுமோன்னு நினைப்பு ஓடுது.

( பில்டிங்கின் முன்னால் கேட்டை பாத்தே வெளியே எவ்வளவு தண்ணி நிக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்).
மதியத்துக்கு மேலும் மழை விட்ட பாடில்லை. தண்ணீரும் வடிந்த பாடில்லை. சோதனையா மின்சாரசப்ளையும் நின்னு போச்சு. மொபைல் ரேடியோதான் நிலவரங்களை தெரிஞ்சுக்கவும், பொழுது போக்கவும் துணையா இருந்திச்சு. மின்சாரம் இல்லாததால வீடுகளுக்கு தண்ணி சப்ளையும் வராது. தரைத்தளத்தில் இருக்கிற வாட்டர் டேங்கில் இருந்து நாங்களே எடுத்துக்க வேண்டிய சூழ்நிலை. டேங்கை காலி பண்ணலைன்னா அழுக்குத்தண்ணி கலந்துடுற அபாயம். லிப்ட் வேலை செய்யாததால், மக்களெல்லாம் தண்ணிக்குடத்தை சுமந்துக்கிட்டு ஆறுமாடி ஏறி இறங்கியதை மறக்க முடியாது. பசங்களெல்லாம் அவங்க பங்குக்கு சின்னச்சின்ன பாத்திரங்களை நிரப்பிக்கிட்டு போனாங்க.

மதியத்துக்கு மேல ராஜாவும் ராணியுமா நகர்வலம் கிளம்பினோம். மழை இருந்ததால் கேமராவுக்கு தடா..காம்பவுண்டை விட்டு வெளியே வந்தா... இடுப்பளவு தண்ணியில் நிக்கிறோம். அப்படியே மெதுவா நகர்ந்து வந்து மெயின் ரோட்டுக்கு வந்தோம். அங்கெல்லாம் ப்ராப்ளம் இல்லை. ரயில்வே ஸ்டேஷனில் நிலைமை மோசமா இருக்குன்னு கேள்விப்பட்டு, பக்கத்திலிருந்த பாலத்தில் ஏறி நின்னு பாத்திட்டிருந்தோம். ட்ரெயின்களெல்லாம் அரைப்பாகத்துக்கு மேல மூழ்கியிருக்குது. ட்ரெயினுக்கும் ப்ளாட்பாரத்துக்குமா கயிறு கட்டி உள்ள இருந்தவங்களையெல்லாம் அதை பிடிச்சுக்கிட்டே நடந்துவரச்செஞ்சு காப்பாத்திட்டாங்க. சில இடங்களில் அது முடியாம,..ரெண்டு நாளா ட்ரெயினுக்குள்ளயே மாட்டிக்கிட்டு இருந்துருக்காங்க.
(உதவி:கூகிள்).

எங்க பக்கத்துவீட்டு ஆன்ட்டியோட பையர், இதேமாதிரி ட்ரெயினுக்குள்ள மாட்டிக்கிட்டார். உசிரை காப்பாத்திக்கிட, அப்பர் பெர்த்தில் ஏறி உக்காந்துக்கிட்டு இருந்திருக்கார். ரெண்டு நாளுக்கப்புறம் தண்ணி வடிஞ்சப்புறம் தண்டவாளம் வழியாவே நடந்து அக்கா வீட்டுக்கு வந்திருக்கார். அங்கிருந்து போன் வர்றவரைக்கும் , பாவம்.. அந்த மாமி வேண்டாத தெய்வமில்லை. சில இடங்களில் ப்ளாஸ்டிக் டப்பை உபயோகப்படுத்தி,அதிலே உக்காரவெச்சு கயிறுகட்டி இழுத்து, ஆட்களை காப்பாத்தியிருக்காங்க.ஆனா.. நிறைய பேருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்கலை.

வெள்ளத்தில் நிறைய தட்டுமுட்டு சாமான்கள், ஃபர்னிச்சர்கள் எல்லாம் அடிச்சிக்கிட்டு வர்றதை, கையாலாகாத்தனத்தோட பாத்துக்கிட்டிருந்தோம். காட்டாறு மாதிரி வேகமா ஓடுற வெள்ளத்தில், அதுவும் ரெண்டாளு உசரத்துக்கு போயிக்கிட்டிருக்கிற சமயத்தில் ஆட்களே விழுந்திருந்தாகூட காப்பாத்தியிருக்க முடியாது. மும்பை நகருக்குள், அப்படி காப்பாத்தப்போயே நிறைய பேரு உசிரை விட்டுட்டாங்க.

அங்கிருந்து கிளம்பி அப்படியே தெரிஞ்ச ஏரியாவுல எல்லாம் சுத்தினோம். தாழ்வான பகுதிகள்ல எல்லாம் கட்டிடங்கள் முதல்மாடிவரைக்கும் மூழ்கியிருந்தது. கார்களெல்லாம் எங்கே நிக்குதுன்னே தெரியலை. சில கார்களின் மேல்கூரை மட்டும் தெரியுது. ரங்க்ஸோட ஃப்ரெண்ட் அதுக்கு நாலுமாசம் முன்னால்தான் லட்சக்கணக்கில் செலவு செஞ்சு வீட்டுக்கு இண்டீரியர் மாத்தியிருந்தார். எல்லாம் போச்சு. உழைப்பாளிகளோட நிலையோ இன்னும் மோசம். இருக்கிற வீடும் முங்கிப்போச்சு. கடைகளிலோ பொருட்களெல்லாம் மிதக்குது... தள்ளி நின்னு பாத்துட்டு வந்தோம்.இன்னொரு ஃப்ரெண்ட் முதல்மாடியில் குடியிருந்தார். வெள்ளம் பெருக ஆரம்பிச்சதும் அந்த கட்டிடத்தில் இருந்தவர்களை ஃபைபர் போட் மூலம் காப்பாத்தினாங்க.

கிட்டத்தட்ட எல்லோருமே, வீட்டுச்சிறையில் இருப்பதை போல்தான் இருந்தோம். இன்னும் எத்தனை நாளுக்குன்னு தெரியலை. நல்லவேளையா அப்பத்தான் வாராந்திர ஷாப்பிங் முடிச்சிருந்ததால், ஃப்ரிஜ்ஜும்,ஷெல்பும் ரொம்பியிருந்தது. மெடிக்கல் கிட்டையும் மாதாந்திர சாமான்கள் வாங்கும்போதே சரிபார்த்து அடுக்கியாச்சு. அதனால அவசரத்துக்கு மருந்தும் ரெடியாயிருந்தது. சாலை, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்ததால பால், மற்றும் மற்ற உணவுப்பொருட்கள், காய்கறிகள் கிடைக்கவேயில்லை. கிடைச்சாலும் வெளியே வரமுடிஞ்சாத்தானே வாங்குறதுக்கு. கைக்குழந்தைகள், இருக்கிற வீடுகளில் ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.

மின்சாரம் இல்லாட்டாலும் பேட்டரி,இன்வர்ட்டர் இருந்ததால் ஓரளவு ஒப்பேத்தினோம். மிக்ஸி ஓடணுமே... இல்லாட்டா மழைத்தண்ணியத்தான் குடிச்சு உசிர் வாழ்ந்திருக்க வேண்டி வந்திருக்கும். என்னதான்,கரண்ட் தட்டுப்பாட்டை உத்தேசிச்சு அரைச்சு விட்ட மசாலா தேவைப்படாத நாலு ரெசிபிக்களை கத்து வெச்சுக்கிட்டாலும்,.. நாக்கு கேக்கணுமே. தினமும் அந்த கரம்மசாலாவையும், பாவ்பாஜி மசாலாவையும் தின்னா நொந்துடும்.. வாழ்க்கை. அதுக்கும் வந்தது ஆபத்து...

(மழை பெய்யும்)..

Monday 21 June 2010

மழையே மழையே..

2005-ல் வெள்ளம்( உதவி கூகிள்)

மும்பையில் மழை பெய்ய ஆரம்பிச்சுடுச்சு. உஸ்ஸ்.. அப்பாடா!! என்ன வெய்யில்... ரெண்டு துளி மழைத்தண்ணி பூமில விழுந்திச்சின்னா நல்லாருக்குமே!!ன்னு நினைக்கிற அளவுக்கு வெய்யில் வாட்டி எடுத்தது போக, இப்போ ஜிலீர்ன்னு நல்ல க்ளைமேட்டா இருக்கு. பொதுவா ஜூன் மாத முதல்வாரத்தில் ஆரம்பிக்கும் மழை, ஒரு காட்டு காட்டிட்டுத்தான் ஓயும்.இப்பவே மும்பையில் நிறைய இடங்களில் தண்ணீர் தேங்க ஆரம்பிச்சு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பையும் ஏற்படுத்துது.

ஒவ்வொரு வருஷமும் மழை ஆரம்பிச்சப்புறம் , ஒன்றிரண்டு நாளுக்காவது அங்கங்க தண்ணி தேங்கி, தண்டவாளங்கள் மூழ்கி, ட்ரெயின் லேட்டாவது நடக்கும். ஏதாவது ஒரு நாளுக்காவது,"இன்னிக்கு ட்ரெயின் ஓடாதாம்.. மழை காரணமா ரத்தாம்"ன்னு செய்தி வரும். அப்பத்தான் எங்களுக்கு, 'இந்த வருஷம் நல்லா மழை பெஞ்சிருக்கு'ன்னு திருப்தியாகும். இயந்திர வாழ்க்கையில் எதிர்பாராம கிடைக்கிற ஒரு நாள் லீவு அடடா!!!! அனுபவிச்சாத்தான் தெரியும்.

ஆனா,... கடந்த சில வருஷங்களா மழை ஆரம்பிச்சிட்டாலே, எல்லோர் மனசிலும் அந்த கறுப்பு வருஷத்தின் நினைவுகள் எட்டிப்பாக்கும். ஜூலை 2005ஐ மும்பை மக்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க மாட்டார்கள்.. மறக்கவும் முடியாது.
ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு வழியில் பாதிக்கப்பட்ட, அல்லது பாதிக்கப்பட்டவர்களை பார்த்த அனுபவம் இருக்கும்.

எப்பவும் போல்தான் அந்த நாளும்,.. எல்லோருக்கும் போல் எங்களுக்கும் விடிந்தது. அந்த சமயத்தில் பசங்களுக்கு பரீட்சை நடந்துக்கிட்டிருந்தது. பரீட்சை சமயத்தில் ஸ்கூலுக்கு நானே கொண்டு போய் விட்டுட்டு, அப்றம் மறுபடி போய் அழைச்சிட்டு வர்றது பழக்கம். அன்னிக்கும் அப்படித்தான்... ஸ்கூலுக்கு போய் பசங்களை அழைச்சுட்டு வர்றதுக்காக கிளம்பினேன். மொத நாள் இரவிலிருந்தே மழை பெஞ்சுக்கிட்டிருந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வில், ரங்க்ஸ் கிட்ட, 'இன்னிக்கி ஆப்பீசுக்கு லீவு போட்டுடுங்களேன்'னு சொன்னேன். எப்படா சொல்லுவான்னு காத்துக்கிட்டிருந்தாரோ என்னவோ....'சரி'ன்னு சொல்லிட்டு விட்டதூக்கத்தை தொடர போயிட்டார்.

பொண்ணோட பரீட்சை முடிஞ்சு, காத்துக்கிட்டிருந்தா,.. பையருக்கு பரீட்சை முடிய இன்னும் நேரமிருக்கு. அதுவரை காத்திருக்க வேணாம். அவர் ஸ்கூல் பஸ்லயே வந்துடட்டும்ன்னு நாங்க ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினோம். ரோடெல்லாம் ஒரு முழம் உசரத்துக்கு தண்ணி நிக்குது. வண்டியெல்லாம் வேகமா போகமுடியாம நத்தை மாதிரி ஊர்ந்து போகுது. ஏன்னா,.. தண்ணிக்குள்ள பள்ளம், மேடு தெரியாது. ஒரு வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். ஆனா... மணி ரெண்டாகியும் பையர் வீட்டுக்கு வரலை. எனக்கோ கலக்கமா இருக்கு. பேசாம ஸ்கூல்லயே வெயிட் பண்ணி ரெண்டு பேரையும் சேத்து கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு தோணுது.

எதுக்கும் மறுபடி பள்ளிக்கூடத்துக்கு போய் பாத்துட்டு வரலாம்ன்னு ஆட்டோ நிறுத்தம்வரை வந்தேன். அப்பாடா!!! எதிர்க்க ஸ்கூல் பஸ் வருது. 'ஏண்டா லேட்டாச்சு'ன்னு பையரை கேட்டா...'ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பயங்கர வெள்ளம். தண்ணி பஸ்ஸுக்குள்ள அலையடிச்சு வருதுன்னா பாத்துக்கோங்க. மெதுவா நின்னு... நின்னு வந்தோம்'ன்னார். அன்னிக்கு முழுக்க மழை விட்ட பாடில்லை..அதுவும், வழக்கத்தைவிட அதிகமா பெய்யுது. ஆனா.. அப்ப ஒண்ணும் பெரிசா தோணலை.ஏன்னா.. சீசன்ல 24 மணி நேரம்,30 மணி நேரத்துக்கு மேல விடாமழை பெய்றது சகஜம். இந்த வருஷம் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு வராதுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டோம். அவரவர் ஒர்ரீஸ் அவரவருக்கு :-)))

மறு நாளும் பரீட்சை இருந்ததால், சீக்கிரமே எழுந்து எல்லாம் ரெடி பண்ணிட்டு எனக்கான காபியுடன் பால்கனிக்கு வந்து வெளியே பார்த்தா.. ஐயோ!!! இதென்ன... அப்ப திடீர்ன்னு தடால்ன்னு ஒரு சத்தம்...

(மழை பெய்யும்...)

Saturday 12 June 2010

பாம்புன்னா....

நவி மும்பையில் பாம் பீச் ரோடு,(palm beach road) பாம் பீச் ரோடுன்னு ரெண்டில்லை,... ஒரே ஒரு ரோடு இருக்கு. இது, CBD Belapurல் ஆரம்பிச்சு வாஷி வரைக்கும் இணைக்கிறது. இந்தப்பக்கம் மூணு, அந்தப்பக்கம் மூணுன்னு ட்ராக்குகள். நடுவில் தடுப்பாக நடப்பட்ட palm மரங்கள். பெயர்க்காரணம் வந்த கதை புரிஞ்சுதா?.. வாக்கிங், ஜாகிங் போறதுக்கு அருமையான இடம்.

ஸ்பீடா வண்டி ஓட்ட ஆசைப்படறவங்க, புதுசா வண்டி ஓட்ட கத்துக்கிறவங்க இந்த ரோட்டை ரொம்பவே விரும்புவாங்க. சல்லுன்னு வண்டி போகும்போது சும்மா பறக்கிறமாதிரியே இருக்கும். ஊருக்கு வெளியே இருக்கிறதால போக்குவரத்து நெரிசலும் இருக்காது. ஆனா.. அழகு இருக்கும் இடத்தில்தான் ஆபத்தும் இருக்கும்ன்னு சொல்லுவாங்களே!! அதை இந்த பகுதி அடிக்கடி நிஜமாக்கி காட்டும்.

Palm beach road..

ஒரு நாள் சொந்த வேலையா வாஷி போகவேண்டிய சந்தர்ப்பம். வாஷியை நெருங்கிக்கிட்டிருக்கும்போது, அந்தப்பக்கத்து ரோட்டில் ஒரே கூட்டமா தெரியுது. ஏழெட்டு கார்கள் வரிசையா நிக்குது. கூட்டத்துல கோன் ஐஸ் மாதிரியான மைக்கை பிடிச்சுக்கிட்டு ஒருத்தர், வீடியோ கேமரா மேன் மாதிரி இன்னொருத்தர். எங்க வண்டியை ஓரங்கட்டிட்டு ரோட்டை க்ராஸ் பண்ணி அந்தப்பக்கம் போனோம். அம்மாடி!!!... ஏழெட்டு வண்டிகள் நின்னுக்கிட்டிருந்ததுன்னு சொன்னேனில்லையா.. அப்பளம் மாதிரி நொறுங்கியிருந்ததுன்னு சேர்த்துக்கோங்க :-(



அப்பளம்.?..

இதுல அந்த செய்தியாளர்கள் ஓரொருத்தர் கிட்டயும் போய் பேட்டி எடுத்துக்கிட்டிருந்தாங்க . அனேகமா உள்ளூர் டிவி சேனல்களா இருக்கும். அங்கே நின்னுக்கிட்டிருந்த ஒருத்தர் கிட்டே என்னாச்சுன்னு விசாரிச்சேன். ஒரு ஆக்ஸிடெண்ட் ஆகிப்போச்சுன்னார். அதான் கார்களை பாத்தாலே தெரியுதே... அதுவும் ஏழெட்டு கார்கள் டேமேஜ் ஆகி நிக்குதுன்னா சம்பவம் பெரிசாத்தானே இருக்கணும்!! . மேற்கொண்டு கேட்டதில் அவர் சொன்னது....

வழக்கம்போல இந்த ரோட்டில் கார்கள் ஸ்பீடா வந்திட்டிருந்தபோது, திடீர்ன்னு... முன்னாடி போயிட்டிருந்த கார், சடன் ப்ரேக் போட்டு,.. நடுரோட்டில் நின்னிருக்கு. இதை எதிர்பார்க்காததினால், அதை தொடர்ந்து, பின்னாடி வந்திட்டிருந்த கார்கள், டமடமன்னு ஒண்ணோடு ஒண்ணு மோதியிருக்கு. திடீர்ன்னு சம்பவிச்சதால் ஸ்பீடை கட்டுப்படுத்த முடியலை போலிருக்கு. முதல் கார் ஏன் சடன் ப்ரேக் போட்டுச்சாம்?..

அந்த ரோட்டில் ஒருபக்கம் கட்டிடங்களும், எதிர்பக்கம் மாங்குரோவ் காடுகளுமா இருக்கும். காட்டிலிருந்து , பில்டிங்கில் இருக்கும் சொந்தக்காரங்களை பார்த்துட்டு, வீட்டுக்கு திரும்பிக்கிட்டிருந்த பாம்பு ஒண்ணு, ரோட்டில் ஊர்ந்து போறதை டிரைவர் கவனிச்சிருக்கார்.. அதுவும் கிட்டே வந்ததுக்கப்புறம். பாம்பு அடிபட்டுடக்கூடாதேங்கிற நல்லெண்ணத்துல ப்ரேக் போடப்போய்...

நல்லவேளை யார் உசிருக்கும் ஆபத்தில்லை. ஆனா, ஏதோ ஒரு காரில், சீட் பெல்ட் போடாம உக்காந்திருந்த ஒரு அம்மணி, காருக்குள்ளேயே தூக்கி வீசப்பட்டு... கையில் எலும்பு முறிவு. ஆம்புலன்ஸ் வந்து ஆஸ்பத்திரிக்கு கூட்டி போயிருக்கு.

திடீர்ன்னு ஒருத்தர் தண்ணி பாட்டிலை எடுத்துக்கிட்டு ரோட்டுக்கு எதிர்பக்கம் நின்னுக்கிட்டிருந்த கூட்டத்தை நோக்கி ஓடினார். யாருக்கு என்னாச்சோன்னு நாங்களும் பின்னாடியே போனோம். அங்க போயி பாத்தா.. இவ்வளவு ப்ரச்சினைக்கும் காரணமான பாம்பார் மயங்கி கிடக்கிறார். இவ்ளோ பெரிய ஆக்ஸிடெண்டுக்கு காரணமா இருந்தாலும்,.. வாலில் லேசான அடியோட தப்பிச்சிக்கிட்டார். ஒருத்தர் அதுமேல பாட்டில்லேர்ந்து தண்ணியை தெளிச்சி மயக்கத்தை தெளிவிக்க முயற்சி பண்றார். இன்னொருத்தர் ஒரு குச்சியை வெச்சிக்கிட்டு தள்ளிவிட முயற்சி செய்யறார். ஒண்ணும் பலிக்கலை... இருந்தாலும், நான் ஓடுறதுக்கு தயாரா நின்னுக்கிட்டு.. ரெண்டு க்ளிக்... பாம்பு படம் எடுக்காட்டி என்ன?.. நான் எடுத்துட்டேனே :-)))





அன்னிக்கு டேமேஜான கார்களின் மொத்த மதிப்பு லட்சக்கணக்கில் வரும். இதுல ரெண்டுமூணு கார்கள், ஒவ்வொண்ணும் பத்துப்பதினஞ்சு லட்சம் மதிப்புள்ளவை . என்னதான் இன்ஷூரன்ஸ் கிடைக்குமுன்னாலும், உயிர் சேதாரம் ஏதாவது ஆகியிருந்தா??.. கேட்க நினைக்கும் எல்லாக்கேள்விகளுக்கும் பதில் ஒண்ணுதான்.. 'மனிதாபிமானம்'. பாம்பாயிருந்தாலும் அதுவும் ஒரு ஜீவன்தானே!!. மனுஷங்களுக்கு அடிபட்டாலே காரை நிறுத்தாம போற இந்த உலகத்துல இப்படியும் ஒருத்தர் !!!.

Thursday 10 June 2010

அள்ளித்தந்த வள்ளல்...

இந்த உலகத்துல இப்படியெல்லாம் நல்ல மனசுக்காரங்க இருக்கிறதாலதான் நாட்டுல மழை பெய்யுது. மின்னஞ்சலில் வந்த பணமழை இதோ...


Dear Selected Winner,

Subject: You have won £ 600,000.00 GBP (Kuwaiti dinars 265,128.672)

Congratulations your email is among the two lucky winners that won Six Hundred Thousand British Pounds (UK £ 600,000.00 = 265,128.672 Kuwaiti dinars) each in the just concluded draw held to promote this year's (November -2010) coming up Lebara Wireless to Kuwait sponsored by the Wireless Industry Research Conglomerate.

To this effect, you are therefore mandated to contact Mr. Samuel Taylor (Claims Manager) via email:
samueltaylor@zing.vn for your Prize Claim.

-And therefore provide the following information via email for the processing of your Prize Fund.

Claims Requirements:
* Full Name: ---------------------------------------------- ---------
* Full Postal Address: --------------------------------------------- ----------- * Zip Code: -------
* Country of residence: -------------------------* Age: ----------
* Occupation: ------------------------------------- * Phone / Fax: ----- ----------------------
* Alternative Email Address: ----------------------

Winning information attached to your email:
* Promotion Claim Reference: 07VZ-Y654522-09-KK
* Our Reference: 980047-002623 - KK-073

Please quote your Reference Numbers Promotion Claim in any correspondences with your designated agent.

Yours sincerely,

Roland Kobold
Promotion coordinator
Admin Team - wireless Industry Research Conglomerate.


OFFICIAL USE ONLY
Winning Address Security Code
|||||||||||||||||||||||||||||||||||||||
Draw Notification Date: 08/06/2010

இந்த பரிசுப்பணத்தை வெச்சு ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன். எங்கூட பரிசை பகிர்ந்துக்கிற அந்த நல்ல ஆத்மா யாருன்னு தெரியலை :-))))). யாரா இருந்தாலும் சரி... உங்க பங்கை என்னோட ட்ரஸ்டுக்கே அன்பளிப்பா கொடுத்துடுங்க. உங்களுக்கு ஆயுசு முழுக்க வருமானவரி விலக்கு மட்டுமல்ல,.. வருமானத்துல இருந்தே விலக்கு அளிக்கப்படும்.

நான் கணக்குல ரொம்ப monthதம் .( எப்பவும் வீக்ன்னே சொல்லி போரடிச்சுடுச்சு.) அதனால இந்திய மதிப்புல எவ்ளோ ரூபாய்ன்னு கணக்கு போட்டு சொல்லுங்களேன். அப்படியே இலங்கை, சீனா, மலேஷியா, அம்பேரிக்கா, ஆப்பிரிக்கா,இங்கேலாந்து மற்றும் அண்டார்டிகா முதலிய கோபால் பல்பொடி புகழ் பரவியுள்ள நாடுகள், கண்டங்களிலும் , அவங்க நாட்டு மதிப்புல,பரிசுப்பணத்தை கணக்கு போட்டு சொல்லுங்க :-))). எவ்ளோன்னு தெரிஞ்சுக்கணுமில்ல....



Monday 7 June 2010

கடலுக்குள் ஒரு மர்ம கோட்டை.

எதுக்கும் ஒரு நேரம் வரணும்ங்கிறது சரியாத்தான் இருக்கு. ரங்க்ஸோட வேலை நிமித்தம் இந்த ஊரில்( Alibaug) ரெண்டு வருஷம் இருந்திருக்கோம் . வீட்டுல, மொட்டைமாடியில் இருந்து பார்த்தா நல்லா தெரியும். ஆனா,.. உள்ளே போய் பார்க்கிறதுக்கு இப்போத்தான் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. பொண்ணோட பரீட்சை நிமித்தம், அலிபாக் போறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சதும் , கடலுக்குள்ள இருக்கிற கோட்டைக்கு எப்படியும் விசிட் அடிக்கணும்ன்னு முடிவு செஞ்சேன்.

அலிபாக்... மும்பையிலிருந்து சுமார் 108 கி.மீ தூரத்தில் இருக்கிறது. சாலைவழியா வந்தா மும்பை-கோவா ஹைவேயில் வரணும். wadkhal என்னும் இடத்தில் சாலை ரெண்டா பிரியும். வலதுபக்கச்சாலையை பிடிச்சுக்கிட்டு நேரா வரலாம். மும்பை கேட் வே ஆஃப் இண்டியாவிலிருந்து படகுப்போக்குவரத்தும் உண்டு. Mandhwa என்னும் இடம்வரை படகில் வந்து அங்கிருந்து பஸ்ஸிலும் அலிபாக் வரலாம். இந்த மாண்ட்வாவில் நிறைய வி.ஐ.பிக்களின் கடலோர பங்களாக்கள் இருக்கின்றன.

பொண்ணை பரீட்சை ஹாலில் விட்டுட்டு ,கடற்கரைக்கு போனோம். சாயந்திரம் நாலுமணிவரை நேரத்தை போக்கணும். அதுக்கு இதுதான் பெஸ்ட் இடம். முன்னைக்கு இப்போ சுத்தமா இருக்கு. இங்கே உள்ள கடற்கரைகளில், கடல் உள்வாங்குறதையும் ...அதையே நாலஞ்சு மணி நேரத்துக்கு அப்புறம் தளும்பத்தளும்ப தண்ணீரோடும், பாக்கலாம். High tide, Low tideன்னு சொன்னா இன்னும் சுலபமா புரியும். சும்மா... ரெண்டு மூணு கிலோமீட்டர்வரைக்கும் கடல் நீர் உள்ளே போயிடும். டைமிங் தெரிஞ்சிருந்தா , கடலுக்குள்ள ஒரு ஜாலி வாக் போயிட்டு வரலாம். தண்ணீர் நிறைஞ்சிருந்தாலும் அப்படி ஒண்ணும் பெருசா ஆழம்கிடையாது. குறைவான அலைகள் இருப்பதால் இடுப்பளவு தண்ணியில் பயப்படாம நிக்கலாம்.

இன்னிக்கு எங்க அதிர்ஷ்டம்.. hightide இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு. கோட்டைக்கு போகிற குதிரை வண்டிகள், முழங்காலளவு தண்ணியில் போய்க்கிட்டிருக்கு. நடந்து போறவங்களும் ஜாலியா போய்க்கிட்டிருக்காங்க. தண்ணி கூடுதலாயிட்டா குதிரை வண்டி சர்வீஸ் நிறுத்திட்டு, ஃபைபர் போட் சர்வீஸ ஆரம்பிச்சுடுவாங்க. குதிரை வண்டியில் போயிட்டு வர்றதுக்கு தலைக்கு நூறு ரூபாய். போட்டில் கொஞ்சம் கூடுதல். கடலுக்குள் அங்கங்க படகுகளை பார்க்கிங்கில் விட்டிருக்காங்க.


குதிரை வண்டியும் தொலைவில் கோட்டையும்..

தண்ணியில் ஓடும் குதிரைகள்..
சுமார் ஆறுபேர் உக்காந்துக்கிறமாதிரியான இருக்கை அமைப்பு. ஒரு த்ரில்லிங்குக்காக நானும் ரங்க்ஸும் , முன்பக்கம், குதிரை ஓட்டியின் பக்கத்து இருக்கைகளில் உக்காந்துக்கிட்டோம். வாயில்லா ஜீவனை கஷ்டப்படுத்துறோமேன்னு பாவமா இருந்துச்சி . இருந்தாலும் ரெவ்வெண்டு கிலோமீட்டர் தண்ணீரில் நடந்துட்டு வந்தா, நான் காலில்லா ஜீவன் ஆகிடுவேனே :-((

கரையிலிருந்து பாக்கிறப்ப கோட்டை பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, அங்க போக சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்கு மேலயே பிடிக்குது.இதை மராட்டிய மன்னர், 'மலை எலி'ன்னு அழைக்கப்படும் சிவாஜி மகராஜ் கடல் பாதுகாப்பை பலப்படுத்தறதுக்காக கட்டியிருக்கார். இதை கொலாபா கோட்டைன்னு சொல்றாங்க. மும்பையிலும் ஒரு கொலாபா இருக்கு. மும்பையில் இருப்பது 'colaba' , அலிபாக்கில் இருப்பது 'kolaba' .

1698 ல் முதன்மை தளபதியா இருந்த Sidoji Gujarன் மறைவுக்குப்பின்னால் ,துணை தளபதியாக இருந்த கங்கோஜி அங்க்ரே(Kanhoji Angre) என்பவர் , முதன்மை தளபதியானார். கடற்படையில் இவருக்கிருந்த திறமை காரணமா, kolabaவும் மற்ற கடற்புர கோட்டைகளும் இவருடைய கண்காணிப்பில் வந்தன.

இந்த கொலாபா கோட்டைக்குள்ள இவருக்குன்னு ஒரு அரண்மனை இருந்திச்சு. அவரோட மனைவி பெயரால மரியாதையா 'நானி சாகேப் அரண்மனை'ன்னு அழைக்கப்பட்டது. அம்மாவோட அம்மாவ இங்கே 'நானி'ன்னு கூப்பிடுவாங்க. அவரோட மனைவி பேர் லஷ்மிபாய். ஆனா, மக்கள் ஒரு பிரியத்தால நானின்னு கூப்பிடுவாங்களாம்.


நானிம்மா இருந்த மாளிகை.

எங்களை கரையில் இறக்கிவிட்டுட்டு , ஏற்கனவே சுத்திப்பாத்து முடிச்சிட்டு காத்திட்டிருந்தவங்களை கூட்டிட்டு குதிரை வண்டி போயிடுச்சு. இன்னும் அரைமணி நேரம் கழிச்சு எங்களை கூட்டிட்டு போக வரும். கோட்டை சிதிலமடைஞ்சு இருந்தாலும் வரலாற்று எச்சங்களை பார்க்கிறதுல ஒரு த்ரில்தான். வடக்குப்பார்த்த பிரதான நுழைவாயில் ரெண்டுஆர்ச்சுகளால் ஆனது.இதை மஹா தர்வாஜான்னு சொல்வாங்க. தர்வாஜான்னா வாசல், கதவு, ன்னு அர்த்தம். மஹாராஷ்டிர மக்களின் இஷ்ட தெய்வமான கண்பதி அம்சமா உக்காந்திருக்கார். இன்னும் ஏதேதோ விலங்குகளோட சிற்பங்களெல்லாம் மங்கலா தெரியுது.


பிரதான நுழைவாயில்..

உள்ளே தொல்பொருள் துறையினர் அஞ்சு ரூபா வசூலிச்சுக்கிட்டு அனுமதி சீட்டு கொடுக்கிறாங்க. ஃபோட்டோ எடுக்க கட்டணம் தேவையில்லை. இந்த கோட்டைக்குள் சிதைந்த அரண்மனைகளும், சின்னதா ரெண்டு மூணு கோயில்களும், கோயிலில் பூஜை செய்றவங்களும் இருக்காங்க. ஒரு காலத்துல சுமார் 700 படைவீரர்கள், குதிரைகள், இன்னபிற விலங்குகளெல்லாம் இருந்ததுண்டு. இப்போ, பூஜை செய்ற பண்டிட்டுகளும், அவங்க குடும்பங்களுமா, பத்துப்பதினஞ்சு பேர் கோட்டைக்குள்ளேயே குடியிருக்காங்க. பசங்களை ஊரில் சொந்தக்காரங்க வீட்டில் தங்கி படிக்க வெச்சுட்டு, இவங்க இங்கியே இருக்காங்க. எதாவது தேவைன்னா தண்ணி வத்தினப்புறம் கரைக்கு நடந்துவருவாங்க.

சிவாஜி மஹராஜோட இஷ்ட தெய்வமான பவானிக்கு , இங்கே ஒரு கோயில் இருக்கு. எந்த போருக்கு புறப்பட்டாலும்... பவானியின் காலடியில் தன்னோட வாளை வெச்சு ஆசிர்வாதம் வாங்கிட்டுத்தான் புறப்படுவாராம். கோயிலுக்கு பின்பக்கம், கண்ணை உருட்டி முழிச்சிட்டு ஒரு சிலை.. 'மஹிஷாசுர மர்த்தினி'யாம்.மஹிஷாசுரமர்த்தினிக்கு முன்புறம் அதாவது பாதையின் இடது பக்கம் நானிசாகிப்பின் அரண்மனை. ஒரு பெரிய தீவிபத்தில் இந்த அரண்மனை சேதமடைஞ்சதா சொல்றாங்க.

இதுக்கு பக்கத்துலதான் அவரோட மகன் ரகுஜி அங்க்ரே கிபி 1816 ல் இன்னொரு அரண்மனை கட்டியிருக்கார். ஐந்து மாடி கட்டிடமா இருந்தது,.. விபத்துக்குப்பின் முதல் நிலை வரைமட்டும் தப்பிப்பிழைச்சிருக்கு. இந்த அரண்மனைகளுக்கு முன்புறம் குதிரைகள், சண்டை ஆடுகள், செல்லப்பறவைகள் இவையெல்லாம் தங்குறதுக்கான இடமா இருந்திருக்கு. அரண்மனைக்கு கிழக்குப்பக்கத்தில் கிட்டங்கிகளும் இன்னபிற சின்னச்சின்ன கட்டிடங்களும் இருந்திருக்கு.

கோட்டையின் நடுநாயகமா பிள்ளையார் கோவில். சித்தி புத்தியோட, வலதுபக்கம் அப்பாவும், இடதுபக்கம் மாமனும், மாமாவோட பின்னால மஹிஷாசுர மர்த்தினியும், அமர்ந்த நிலையில் பிரம்மாவும்... (அப்படித்தான் நினைக்கிறேன். மகன் நாரதரை மடியில் வெச்சிருக்காரே :-)). புடைசூழ காட்சியளிக்கிறார். கர்ப்பக்கிரகமும், முன்மண்டபமுமா ரெண்டே நிலைகள்தான். இந்த கோயிலுக்கு வலதுபுறம் சிவனும் , இடதுபுறம்,.. வாலில் மணிகட்டிய ஆஞ்சனேயரும் தனிக்கோயில்களில் இருக்காங்க. புள்ளையார் மற்றும் சிவன் கோயில்களின் நடுவே எட்டுமுக கல்பீடம் ஒன்னு இருக்குது. ஒவ்வொரு பக்கத்திலும் தானியக்கதிர்,அர்ஜூன் தவம்,இன்னும் என்னன்னவோ செதுக்கியிருக்காங்க.


புள்ளையார் ஃபேமிலியோட இருக்கார்.

கோயிலுக்கு முன்னாடி பிரம்மாண்டமான குளம். பல்டியடிச்சு குளிக்கிறதுக்கேத்தவாறு பெரிய சுத்துச்சுவர்கள். கோயில்லேர்ந்து வெளியே வந்து தெக்குப்பார்த்து நடந்தோம். கோட்டையின் தெற்குக்கடைசியில் இருக்கும்
யஷ்வந்த் அல்லது தர்யா தர்வாஜான்னு சொல்லப்படுற நுழைவாயில், கடலைப்பார்த்தவாறு அமைஞ்சிருக்கு. இந்தப்பக்கம் கடல்ல கப்பல்களை நிறுத்தி வெச்சிக்கிட்டு , பிரிட்டிஷ்காரங்க தாக்குவாங்களாம். அதனால எப்பவும் வீரர்கள் இங்கே காவல் இருப்பாங்களாம். டூட்டி முடிஞ்சதும் அங்கியே படுத்து ஓய்வெடுத்துக்க வசதி இருக்கு. ஆயுதங்களை மறைச்சு வெச்சுக்கவும் சுவரில் ஒரு குழி மாதிரி இருக்கு.


யஷ்வந்த் தர்வாஜா...

படைவீரர்கள் தற்காலிக ஓய்வுக்கான இடம்..

தெம்பிருந்தா கோட்டைச்சுவர் மேல ஏறி நடக்கலாம். மேற்குப்பக்கத்துல ரெண்டு இடங்களில் அரைவட்ட வடிவமா பதுங்குகுழிகள் இருக்குது . உடனே எங்க கற்பனைக்குதிரை பறக்க ஆரம்பிச்சிட்டது. அது அகழிதான்.. எதிரிகள் உள்ளே நுழைஞ்சா முதலைகளைவிட்டு கடிக்க விடுவாங்கன்னு ரங்க்ஸ் சொல்றார். இல்லையில்லை,.. எதிரிகளை உள்ளே போட்டு அடைச்சுட்டு, கிளேடியேட்டர் மாதிரி சிங்கத்தையோ, புலியையோ தொறந்து விட்டுடுவாங்கன்னு நான் சொல்றேன். எது கரெக்ட்ன்னு அந்தக்காலத்துக்கே போய் தெரிஞ்சுட்டு வந்து சொல்லணும் :-))

கோட்டையின் வடக்குப்பக்கத்தில் கடலைப்பார்த்தமாதிரி ரெண்டு பீரங்கிகள் இருக்கு. இது எதிரிகளை தாக்குறதுக்கு மட்டுமல்ல.... மழை மற்றும் புயல் காலங்களில் ஏதாவது கப்பல் தெரியாத்தனமா கோட்டைக்கு பக்கத்துல வந்துட்டா வெடி மூலம் எச்சரிக்கை செய்வாங்களாம்.. வாண வேடிக்கை!!!!

இந்தப்பக்கம் கடல் ஆழம் கிடையாது. ரொம்ப கிட்டக்க வந்துட்டா தரைதட்டி நிக்க வேண்டியதுதான். இங்க ரொம்ப பிடிச்ச விஷயம் ஒன்னு..., தேசியக்கொடியேத்த கொடிமரம் ஒண்ணு இருக்குது. நல்ல நாள் பெரிய நாள்கள்ல கொடியேத்துவாங்களாம். இந்த கோட்டைக்குள்ள இப்ப மிஞ்சிப்போனா... இருபது இருவத்தஞ்சு பேரு இருந்தாலே அதிகம். ஆனாலும் கடமையை விடாம செய்றாங்க....

இந்த கோட்டைக்குள்ள சுத்திக்கிட்டிருக்கும்போது ஒரு விஷயம் கவனிச்சேன். ஒவ்வொரு வாசல்லயும் வெள்ளையா ஒரு பூச்சும் அது நடுவுல சிந்தூரப்பூச்சும் இருந்தது. இதுமாதிரி நிறைய பூசி வெச்சிருக்காங்க. என்னன்னு விசாரிச்சப்ப.. " வீரர்களெல்லாம் அவங்கவங்க குல தெய்வத்தை நினைச்சு சாமிய அங்க வரைஞ்சு வெச்சு கும்பிடுவாங்களாம். அதாவது , அந்தப்பூச்சுதான் கோயிலும், சாமியும். அதுதான் தங்களுக்கு போர்முனையில் காவல் வருதுங்கிறது அவங்க நம்பிக்கை".


எங்கிருந்தாலும் சாமிதான்..

வெளிய வந்து காத்திட்டிருந்த குதிரை வண்டியை நோக்கிப்போனோம். ரங்க்ஸ் முதல்ல ஏறி, காமிராவை வாங்கிக்கிட்டார். நான் இருக்கையின் கம்பியை பிடிச்சிக்கிட்டு, வண்டிச்சக்கரத்தில் கால் வெச்சு.. ஏற முயன்றேன். குதிரை லேசா முன்னோக்கி நகர்ந்தது. அவ்வளவுதான்.... கால் வழுக்கி , முருங்கைமரத்து வேதாளம் மாதிரி, அந்தரத்தில் தொங்கிக்கிட்டிருக்கேன். பிடிச்ச பிடியை விடலை. கை கம்பியில் மோதி, அடிபட்டுச்சா இல்லையான்னு தெரியலை... சுளீர்ன்னு வலிக்குது. சமாளிச்சுக்கிட்டு ஏறி உக்காந்தேன். கை லேசா வீக்கம் இருந்தமாதிரி இருக்கு . ஆரம்பத்திலிருந்தே அந்தக்குதிரை என்னை விரோதமாவே பாத்துக்கிட்டிருந்தமாதிரி ஒரு தோணல். என்னோட ப்ளாக்கை படிக்குமோ என்னவோ!!!. இந்தக்கைதானே ப்ளாக் எழுதுதுன்னு சமயம் பார்த்து பழி தீர்த்துக்கிட்டது. :-))) .கரைக்கு வந்து எப்பவும் ஹேண்ட்பேகில் வெச்சிருக்கும் வலி நிவாரணியை எடுத்ததும் ஒரு ரெண்டு மூணு மணி நேரத்துக்கு சரியாப்போச்சு :-)

கொஞ்ச நேரத்துலயே வண்டியை நிறுத்திட்டு , போட் சர்வீஸ் ஆரம்பிச்சுட்டது. பின்னே,..இப்ப கடல்தண்ணி கரை வரைக்கும் வந்துட்டதே. இங்கே வசிச்ச காலத்தில் , ப்ளாஸ்கில் காப்பியை எடுத்துக்கிட்டு, மொட்டை மாடிக்கு போயிடுவோம். டைடினால் கடலில் ஏற்படுற மாற்றங்களை கவனிச்சிக்கிட்டே அரட்டை அடிச்சுட்டு அப்றம், மெதுவா வீட்டுக்கு வருவோம். தோணினால் ஃப்ரெண்ட் குடும்பத்தோட பீச்சுக்கு போவோம். கடலில் அதிகம் ஆழமில்லாததால் பசங்களை தைரியமா விளையாடவிடலாம் . இங்கே கிடைக்கிற "ரகடா பேட்டிஸ்" பயங்கர டேஸ்டா இருக்கும். பேல்பூரி, பானிபூரி, தஹிபூரின்னு ச்சாட் அயிட்டங்களுக்கும் பஞ்சமில்லை. இந்த பிரதேசத்தில் தென்னைமரங்கள் கூடுதல் இருக்கிறதால நல்ல இளநீர் கிடைக்கும்.




கடலின் வெவ்வேறு நேரத்தோற்றங்கள்.. ரெண்டு மணி நேரத்துக்குள்..

அலிபாக்கை சுத்திலும் சுமார் முப்பத்தாறு கி.மீ சுத்தளவில் நிறைய பீச்சுகள் இருக்கு. மாண்ட்வா, அக்ஷி, தள், ரேவ்தண்டா, ஸ்ரீவர்தன், முருட், இதில் குறிப்பிடத்தகுந்தது. இதில் ரேவ்தண்டா மட்டும் நான் போனதில்லை. அக்சி ரொம்ப பிடிக்கும். சுத்தமான பட்டுப்போன்ற மணலும் .. சுத்திலும் சவுக்கு மரங்களுமா அவ்வளவு அருமையா ஏகாந்தமா இருக்கும். சில சமயம் ஷூட்டிங் கூட நடக்கும் . மாண்ட்வாவுக்கு ஹேப்பி ந்யூ இயர் சொல்லப்போயிருக்கேன். பேல்பூரிக்கான பொருட்கள் எல்லாவற்றையும் கொண்டுபோய் தயார் செஞ்சு, ஏழெட்டு குடும்பங்களாக எஞ்சாய் செஞ்சுட்டு வந்தது இன்னும் ஞாபகம் இருக்கு. அலிபாக் மற்றும் முருட் பீச்சை தவிர மத்த இடங்களில் குடிக்க தண்ணிகூட கிடைக்காது. அதனால் கட்டுச்சோறு எடுத்துக்கிட்டு போறது நலம்.

Saturday 5 June 2010

சாரலும் ஜூன் ஐந்தும்...

1996Howard Stern Radio Show premieres in Memphis, Tennessee on WMFS 92.9 FM
199529th Music City News Country Awards: Alan Jackson and Reba McEntire
1994"Gray's Anatomy" opens at Beaumont Theater New York City for 8 performances
199464th French Mens Tennis: S Bruguera beats A Berasategui (63 75 26 61)
199464th French Womens Tennis: A Sanchez Vicario beats M Pierce (64 64)
19947th Children's Miracle Network Telethon
1994Beth Daniel wins LPGA Oldsmobile Golf Classic
1993"Livin' On The Edge" by Aerosmith hits #18
1993125th Belmont: Julie Krone aboard Colonial Affair wins in 2:29.8
199363rd French Womens Tennis: Steffi Graf beats M J Fernandez (46 62 64)
1991Mikhail Gorbachev receives his 1990 Nobel Peace Prize
1991Space Shuttle STS-40 (Columbia 12) launched
1990South African troops plunder Mandela's dwelling
198923rd Music City News Country Awards: R Van Shelton and Randy Travis
1984Indira Gandhi orders attack on Sikh's holiest site, Golden Temple
198337th Tony Awards: Torch Song Trilogy and Cats win
198353rd French Mens Tennis: Yannick Noah beats Mats Wilander (62 75 76)
1983Alice Miller wins West Virginia LPGA Golf Classic
1982"Murphy's Law" by Cheri hits #39
1982114th Belmont: Laffit Pincay, Jr. aboard Conquistador Cielo wins in 2:28
198252nd French Womens Tennis: M Navratilova beats Andrea Jaeger, 76 61

1975Egypt president Sadat reopens Suez Canal, closed since 1967

1907Automatic washer and dryer are introduced
1876Bananas become popular in U.S., at Centennial Exposition in Philadelphia
1875Pacific Stock Exchange formally opens
1873Sultan Bargash closes slave market of Zanzibar
1661Isaac Newton admitted as a student to Trinity College, Cambridge.

மேலே குறிப்பிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. எதுன்னா... இதெல்லாம் ஜூன் அஞ்சாம்தேதி நடந்தவை. அதுசரி... எல்லாமே வெளி நாட்டுல நடந்ததா இருக்கே,.. இந்தியாவுல, அன்னிக்கு ஒரு வரலாறுமே நடக்கலையான்னு சரித்திரம், பூகோளம் எல்லாம் புரட்டிப்பாக்க வேண்டாம். இதமான மாலை நேரத்தில், பூஞ்சாரலுடன் மெல்லிய தென்றல் கை கோத்துக்கொண்டு மெல்ல நடந்தது, இவர்களுடன் சேர்ந்துகொள்ள, வானிலிருந்து ஒரு நட்சத்திரப்பூ உதிர்ந்து தரைக்கு வந்தது.. இப்டில்லாம் பில்டப் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும். ஆனா அன்னிக்கு பார்த்து அப்டில்லாம் ஒண்ணும் நடக்கலை . ஆனா,..அன்னிக்குத்தான், தமிழ் நாட்டில்.. பிற்காலத்தில் தமிழ்மணத்தில் இடம்பிடித்த,... நட்புகளால் அமைதிச்சாரல் என்று அன்போடு அழைக்கப்படும், பதிவர் பிறந்தார்.


Tuesday 1 June 2010

நினைப்பதெல்லாம்...

"ஹனி,... வெய்யில்ல நிக்காதே.. உள்ள வா"... பக்கத்து வீட்டிலிருந்து கொஞ்சலாக ஒரு குரல் கேட்டது.

"ஹனி,... ந்யூஸ் பேப்பர் வந்தாச்சா பாரு.. வந்துட்டுதுன்னா கொஞ்சம் எடுத்துட்டு வந்துடேன்... ப்ளீஸ் " ஒரு ஆணின் குரல் , அதிகாரத்தை பாலிஷாகப்போட்ட மென்மையுடன் ஒலித்தது.

பக்கத்து வீட்டில் ஒரு இளம்ஜோடி , புதுசா குடிவந்திருக்கிறது. ப்ளாட் கலாச்சாரத்தை காப்பாற்றும்பொருட்டு ,... எந்நேரமும் அடைக்கப்பட்ட கதவுகள் , வீட்டில் இருப்பவர்களைப்பற்றிய தகவல்களை, வெளியே கசியவிடாமல் பாதுகாத்தன.

"என்னதான் புதுசா கட்டிக்கிட்ட ஜோடின்னாலும் இப்படியா!!!" அவ்வப்போது என் அப்பா முணுமுணுப்பார். "வயசாயிட்டாலே காதும் கண்ணும் கூர்மையாயிடும் போலிருக்கு" என் மனைவி வாய்க்குள்ளாகவே புராணம் பாடுவதை அவர் பொருட்படுத்தியதே இல்லை.

"ப்ளீஸ்டா... டி.வி பாக்கும்போது தொந்தரவு செய்யாதே. சீரியல்ல முக்கியமான கட்டம் போயிட்டிருக்கு. அவனோட affair அவன் மனைவிக்கு தெரிஞ்சுடுமோன்னு நான் டென்ஷனோட நகம் கடிச்சிட்டிருக்கேன். இந்த சமயத்துல வந்து பசிக்குதுன்னு சொல்றியே!!! தட்டுல சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன்.சாப்பிட்டுடு "

" பால்கனில காத்தாட உக்காரலாமா ஹனி?... பௌர்ணமி நிலா அப்படியே பால்மாதிரி பொழியுது!! " பக்கத்துவீட்டு பால்கனியில் குரல் கேட்டதும் எதேச்சையாக திரும்பிப்பார்த்தேன். நிலா வெளிச்சத்தில், உட்கார்ந்திருந்தார்கள் . இங்கிதம் கருதி வீட்டுக்குள் வந்துவிட்டேன்.

"ஹனி..ஹனின்னு என்னமா உருகறாங்க ரெண்டுபேரும். நீங்களும்தான் இருக்கீங்களே..." என் மனைவி பெருமூச்செறிந்தாள்.

"பத்து வருஷத்துக்கப்புறமும் இப்படி உருகுவாங்களான்னு கேட்டுச்சொல்லு"

"க்க்கும்.. போதுமே" முகவாய்க்கட்டையை தோளில் இடித்தபடி உள்ளே சென்றுவிட்டாள்.

எதேச்சையாக ஒரு நாள் பக்கத்துவீட்டு பெண்ணை , லிஃப்டில் சந்தித்தேன் . ஒன்றிரண்டு முறை அவர்களை பார்த்திருக்கிறேன் என்றாலும் பேசியதில்லை. ஒரு புன்னகையோடு சரி... இன்றும் பலவீனமான ஒரு புன்னகையை சிந்தினாள். முகம் ஏனோ வாடியிருந்தது . . 'கேட்டுவிடலாமா?.. என்னதான் அறிமுகம் இல்லை என்றாலும் பக்கத்து வீட்டுக்காரர்கள்... தனிக்குடித்தனம் இருக்கும் இளம்ஜோடிகள் . ஒரு ஆத்திர அவசரத்துக்கு உதவவில்லையென்றால் அப்புறம் என்ன மனிதம் வேண்டிக்கிடக்கிறது??...

"ஹலோ"

"ஹாய்"

"வெயில் ரொம்ப அதிகமா இருக்கு இல்லையா?.. இந்த வெயிலில் வெளியே போகணுமா??.."

"அது... ஹனிக்கு உடம்புக்கு முடியலை.. ஆஸ்பத்திரியில் நிறைய டெஸ்ட் எடுத்திருந்தாங்க.. அந்த ரிப்போர்ட்டுகளை வாங்கத்தான் போயிருந்தேன் " தழுதழுப்பான குரலில் சொன்னது போலிருந்தது எனக்கு..

"என்னம்மா நீ!!! உடம்பு சரியில்லாத நிலையில் இப்படி தனியா விட்டுட்டு போகணுமா?.. ஏதாவது உதவி வேணும்ன்னா... எங்கிட்டேயோ இல்லை அண்ணிகிட்டேயோ கேக்கலாமில்ல.. சமயத்துக்கு உதவல்லைன்னா அப்புறம் என்ன பக்கத்து வீட்டுக்காரங்க. ஆமா,.. என்ன உடம்புக்கு?.."

"டயபடீஸ்ன்னு சொல்றார். கொஞ்சம் வெயிட்டும் கூடியிருக்காம்.. ஒபிசிடி வந்துடாம கவனிச்சுக்க சொல்லியிருக்கார் டாக்டர். மருந்து மாத்திரையெல்லாம் கொடுத்திருக்கார் ".

"இவ்வளவுதானா!!! டெய்லி காலைல வாக்கிங் ,ஜாகிங் கூட்டிட்டு போங்க. நாளடைவுல சரியாயிடும்.. டயட்டை கன்ட்ரோல்ல வையுங்க . ஒண்ணு பண்ணுங்களேன். எனக்கு டெய்லி காலைல வாக்கிங் போற பழக்கமுண்டு. எங்கூட அனுப்பி வையுங்களேன். பேச்சு சுவாரஸ்யத்துல நாப்பது கிலோமீட்டர் நடந்தாலும் தெரியாது "

நன்றியுடன் கண்கள் மின்ன, என்னைப்பார்த்தாள். " ரொம்ப தேங்க்ஸுங்க. காலைல அஞ்சு ,அஞ்சரை மணிக்கெல்லாம் கூட்டிட்டு வரட்டுமா?".

"ஓ.. தாராளமா"

ரொம்ப நாளைக்கப்புறம் என் ஆலோசனைகளே கேட்க ஒருத்தன் மாட்டியிருக்கான். விடக்கூடாது... "ஐயோ, பாவமே . போயும் போயும் உங்ககிட்டயா அவர் ஐடியா கேக்கணும்" என்ற என் இல்லத்தரசியின் மதிப்புரையை கிடப்பில் போட்டேன். உடம்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை, வலியுறுத்தி , சொல்லப்பட வேண்டிய ஆலோசனைகளை தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவன் எப்படியோ தூங்கிவிட்டேன் .

காலையில் எழுந்து, தயாராகி... ஜாகிங் ஷூக்களை மாட்டும்போது அழைப்புமணி ஒலித்தது . என் மனைவி கதவைத்திறந்தாள். பக்கத்துவீட்டுப்பெண் நின்று கொண்டிருந்தாள். "எங்கே.. லேட்டாகிவிடுமோன்னு நினைச்சேன்" என்று அவள் சொன்னபோது , "அதெல்லாம் ஒண்ணுமில்லை... ரிட்டையர்டுக்கப்புறம் சும்மாத்தானே இருக்கார். அவருக்கும் பொழுது போகணுமில்லையா " என்று சமயம் பார்த்து தங்கமணி என்னுடையஇமேஜை , டேமேஜ் பண்ணினாள்.

"ஹனி... hurry up. இல்லைன்னா அங்கிள் உன்னை விட்டுட்டு போயிடுவார்.. சீக்கிரம் வா" என்று குரல் கொடுத்தாள்.

அவள் வீட்டுக்குள்ளிருந்து... நாலுகால், ஒரு வால், கழுத்துப்பட்டையுடன் ஓடிவந்தது ஹனி . " கழுத்துப்பட்டைய கட்டியாச்சுன்னா,.. உடனே வெளிய புறப்பட்டாகணும் இவனுக்கு. டேய்.. அங்கிள் கூட பத்திரமா போயிட்டு வா செல்லம் ".

நான் பேச்சு மூச்சற்று நின்றுகொண்டிருந்தேன்..


LinkWithin

Related Posts with Thumbnails