Monday, 5 March 2018

படமும் பாடலும் - இரட்டுற மொழிதல்

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்து நின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும், சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும். இரட்டுறமொழிதல் அணிப்படி எழுதப்பட்ட சில வெண்பாக்கள் இங்கே.


சீறிச் சினந்தெழும் சிந்தியதும் பின்வாங்கும்
ஊறில் மருந்தாம் உடலுக்கு வேறிலை
மாலுவந்த பள்ளி மணவழ கந்தரிக்கும் 
பாலுக்குப் பாம்பென ஓது (இரு விகற்ப இன்னிசை வெண்பா) 

விளக்கம்:

பால்-பொங்கி வரும்போது சினந்து சீறி வருவது போலிருக்கும். பொங்கிச் சிந்தி விட்டால் அடங்கி பாத்திரத்தில் பின் வாங்கி விடும். உடலுக்கு ஊறு விளைவிக்காத மருந்தாகவும் செயல்படுகிறது(கால்ஷியம் குறைபாடுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்). திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறார். மணவழகரான சிவனோ அபிஷேகப்பொருளாகத் தரித்துக்கொள்கிறார். 

பாம்பு - சினங்கொண்டு சீறும், விஷத்தைச் சிந்தி விட்டால் ஆக்ரோஷம் அடங்கிப் பின்வாங்கி விடும். பாம்புக்கடிக்கு பாம்பின் விஷத்திலிருந்து மாற்று மருந்து பலபடியான சோதனைகளுப்பிறகு பெறப்படுகிறது. திருமால் பள்ளி கொண்டால் சிவன் அணியாகத் தரித்துக்கொண்டிருக்கிறார்.

ஆகவே பாலுக்குப் பாம்பு நிகரெனக்கூறுவாயாக.
வெண்மையால் தண்மையால் வெண்மணி நேரலால்
கண்சாத்தும் கன்னியர் காதலால் வேண்டலால்
பெண்மீனாள் மாநகரில் பேர்புகழ் கொண்டன்று
வெண்ணிலவும் மல்லிகையும் நேர். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா)

(நேரலால்-ஒத்திருத்தலால், வெண்மணி-முத்து, கண்சாத்துதல்- அன்போடு நோக்குதல், வேண்டல்- விரும்புதல், கொண்டன்று- கொண்டது)

மல்லிகைப்பூ- வெண்ணிறம் கொண்டது, குளிர்ச்சியானது, வெண்முத்தையொத்த மொட்டுகளைக் கொண்டது, கன்னியர் அன்போடு நோக்கி இம்மலரை விரும்புவர், மீனாட்சியானவள் பெண்மீனைப்போல் காத்துவரும் நகரமான மதுரை மல்லிகைப்பூவுக்குப் பெயர்போனது.

நிலவு - வெண்ணிறத்தோடு ஒளிர்வது, குளிர்ச்சியான ஒளியைப்பொழிவது, வெண்முத்தைப்போல் நிறங்கொண்டது, காதல் வயப்பட்ட கன்னியரால் அன்போடு விரும்பி நோக்கப்படுவது. மீனாட்சி ஆளும் மதுரையில் நிகழும் சித்ரா பௌர்ணமி விழா மிகவும் புகழ் பெற்றது.

ஆகவே மல்லிகைப்பூவும் நிலவும் நிகரானது.

மடுவிருக்கும் ஓசையொடு முட்டவரும் வாங்கும்
உடுநீர் அணுக்கத் துரப்பும் கடுகிக்
குறுவிலை போக்கும் திறந்ததும் பாவும் 
அறுமையும் ஆவும் நிகர். (இரு விகற்ப நேரிசை வெண்பா)

(உடுநீர் - அகழி
அணுக்கம் - அருகில்,அண்மையில்
உரப்பும் - ஓசையெழுப்பும்
கடுகி - விரைந்து
குறுவிலை - பஞ்சம்
பாவும் -தாண்டும், பரவும்
அறுமை - ஆறு)

பசு: பால் நிரம்பிய மடுவிருக்கும், ஓசையிட்டுக்கொண்டு முட்ட வரும். நீர் நிலைகளில் நீரருந்தும், அருகில் சென்றால் கத்தும், வறுமையுற்ற குடும்பத்தின் பஞ்சகாலத்தை விரைந்து போக்க உதவியாய் இருக்கும். தொழுவத்துக் கதவைத் திறந்தவுடன் வெளியே தாண்டி ஓடிச்செல்லும்.

ஆறு: ஆற்றின் பாதையில் மடு எனப்படும் பள்ளங்கள் நிறைய உண்டு. நீர் நிரம்பி ஓசையுடன் இருபக்கக் கரைகளையும் முட்டித்தொட்டுக்கொண்டு வரும். பழைய காலங்களில் ஆற்று நீரைக் கொண்டு வந்து அகழி அமைத்தனர்.. தொலைவில் அமைதியாகத் தெரியும் நதி அருகில் செல்லும்போதுதான் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருப்பது தெரியும். தண்ணீர் பசுமையைப் பெருக்கி பஞ்சத்தைப் போக்குகிறது. அணை,மதகு போன்றவற்றின் மடைக்கதவு திறந்தவுடன் ஓடி வெளியாகும்.

ஆகவே ஆறும் பசுவும் நிகரானது.

மண்டுதலால் கொத்துக் குடுமி யிருத்தலால்
தண்ணிழற் தண்டின்பாற் கண்டிசின் பண்டிதர்
கண்படின் சீருறும் மண்ணகத்து பீலிக்கண்
தண்தேங்காய் ஒத்தது வாம். (ஒரு விகற்ப நேரிசை வெண்பா) 

(மண்டுதல்- நெருங்குதல்,அதிகமாதல்,திரளுதல்.
கண்டிசின்- கண்டேன்,பார்ப்பாயாக
பீலிக்கண்- மயில்தோகைக்கண்)

பீலிக்கண் - மயிற்தோகையில் மிகுதியாகக் காணப்படும், கிருஷ்ணனின் கொத்துக்குடுமியில் இருக்கும். தண்ணிழலைத்தரும் தண்டின் முடிவில் இருப்பதைப் பார்ப்பாயாக. வித்தை கற்றவர் கண்டால் சீர் செய்து அலங்காரப்பொருளாக்குவர். இம்மண்ணில் பீலிக்கண்ணும் தேங்காயும் ஒன்று.

தேங்காய்- தென்னை மரத்தின் உச்சியில் தேங்காய்கள் பெருகி நெருங்கி விளைந்திருக்கும். உரித்தபின் உச்சியில் கொத்தாய் குடுமி போன்று நார் இருக்கும். குளிர்ந்த நிழலைத்தரும் ஓலைகளையுடைய மரத்தண்டின் முடிவில் காணலாம். கைவினை வித்தையறிந்தவர் கண்டால் இதைக்கொண்டு கைவினைப் பொருட்கள் செய்வர். இம்மண்ணி்ல் தேங்காயும் பீலிக்கண்ணும் ஒன்று.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails