Monday 19 August 2024

திருநெல்விருந்து - சுகா

அனுபவக்கட்டுரைகள், ஆளுமைகளைப்பற்றிய பகிர்வுகள் எனப் பல்வேறு வகைகளில் மொத்தம் 22 கட்டுரைகளைக்கொண்டது சுகாவின் “திருநெல்விருந்து”. திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, எழுத்தாளர் என்பவை தவிர சமீபத்தில் கவிஞராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனந்த விகடனில் வெளியாகி மிகவும் பேசப்பட்ட தொடரான “மூங்கில் மூச்சு” உட்பட சுகா எழுதிய தாயார் சன்னிதி, வடக்கு ரத வீதி, சாமான்யனின் முகம் போன்ற புத்தகங்கள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றவை. “வேணுவனம்” என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

நெல்லையின் மண்வாசனை வீசும் இவர் எழுத்துகளை வாசிக்கும் ஒவ்வொருவரும், அவர்கள் எந்த ஊரைச்சேர்ந்தவராயிருந்தாலும் சரி.. அந்தந்த நிமிடங்களில் அந்தந்த சம்பவங்களோடு தம்மைத் தொடர்பு படுத்திப் பிணைத்துக்கொள்வது திண்ணம். அவரவர் ஆச்சிகளும் அவர்களோடு கழித்த பால்யமும் நினைவுக்கு வந்து ஒரு சில நொடிகளாவது அந்தக்காலத்துக்கே போய் வாழ்ந்து விட்டு வருவர்.

கலாப்ரியா அண்ணாச்சியின் எழுத்துகளுக்கு அடுத்தபடியாக திருநவேலியை, குறிப்பாக ரதவீதிகளை சுகாவின் எழுத்துகளில்தான் நான் நுட்பமாகத்தரிசித்தேன், காலார நடந்துவிட்டு மாரியம்மன் விலாஸில் திருப்பாகம் வாங்கிக்கொண்டும் வந்தேன். என்ன ஒன்று.. சுகாவின் நெல்லையின் மீனாட்சி சொன்னதுபோல் விஞ்சை விலாஸில் நன்னாரிப்பால் குடிக்கப்போக வாய்க்கவில்லை. போலவே நடைப்பயணம் சென்று நடைச்சித்திரம் வரைவதெல்லாம் சுகா போன்றோருக்கே சாத்தியம். நடைபயில்வோரை நம்பித்தானே அத்தனை சுக்குக்காப்பிக்கடைகளும் ஹோட்டல்களும் கட்டி வைத்திருக்கிறார்கள். 

அந்தந்த மாவட்டத்தில் இருக்கும் வரைதான் உள்ளூர் வெளியூர் என்ற நினைப்பெல்லாம். மாவட்ட, மாநில எல்லைகளைத்தாண்டி விட்டாலோ எல்லாமே நம்மூர்தான். அது ஆளாருச்சியாக இருந்தாலென்ன? கல்லிடைக்குறிச்சியாக இருந்தாலென்ன? மும்பையாகவே இருந்தாலும்தானென்ன? ஒரு சிலருக்கு மட்டுந்தான் ஊரோடு தொடர்பு வாய்க்கிறது. காசியின் இட்லிக்கடைக்காரரைப்போன்ற பலர் “தேவைப்படலை” என்றே இருந்து விடுகிறார்கள், “முப்பது வருஷமா இதுதான்யா நம்ம ஊரு” என்றிருக்கும் மும்பை ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சமையற்கலைஞரைப்போல.

திருநெல்விருந்தும் ஆத்மருசி கந்தையா பெரியப்பாவும் பின்னே மனோஜும் வெகுநாளைக்கு வாசகர் நினைவில் நிற்பார்கள். உணவின் ருசி என்பது நாக்கோடு நின்று விடுவதில்லை, அன்பும் பாசமும் நல்ல மனசும் சேர்த்துக்குழைத்துச்செய்த உணவின் ருசி ஆன்மா வரை சென்று படிந்து விடும், ஆகவேதான் அது அமிர்தமுமாகிறது. சொந்த ஊரின் மேல் கொண்ட பாசம் என்பது வெறும் கட்டடங்களாலும் மனிதர்களாலும் மட்டும் அல்ல, அவ்வூரின் உணவின் மேல் கொண்ட பற்றும்தான். ஊர் என்பது உணவோடு பின்னிப்பிணைந்ததும்தானே? புளியோதரையுடன் பொரிகடலைத்துவையலைத்தொட்டுக்கொள்வது என்பது நெல்லைக்கேயுரிய நுண்தகவல். இக்கட்டுரைகள் முழுக்க உணவைப்பற்றி.. குறிப்பாக நெல்லையின் உணவுகளைப்பற்றி எத்தனையெத்தனை தகவல்கள். பசி நேரத்தில் இக்கட்டுரைகளை வாசிக்காதிருப்பது நலம். நாக்கு அப்படியே மிதக்கிறது, என்றாலும் டிங்கிரி டோல்மா தோசையை மனோஜுக்காகவாது நூலாசிரியர் சாப்பிட்டுப்பார்த்து விட்டு  பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாம் எனத்தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. 

உணவு, இசை மட்டுமல்லாது சுவாளங்களின் மீதும் கோட்டி கொண்டவர் நூலாசிரியர் என்பது, அவரை அறிந்தவர்கள் நன்கறிந்தது. குஞ்சுவின் சம்பந்தியான பறக்கை கோலப்பனின் பைரவப்ரியமும் அதற்குக்கொஞ்சமும் குறைந்ததல்ல. எந்த வகையில் சம்பந்தியானார் என்பதை நூலில் வாசித்துத்தெரிந்து கொள்ளுங்கள். அக்கட்டுரையை வாசிக்கும்போது எழுத்தாளர் ஜெயமோகனின் வீட்டில் வளர்ந்த “ஹீரோ” நினைவுக்கு வந்தான்.

ஹாஸ்யமும் சுயபகடியும் சுகாவின் எழுத்தின் சிறப்பம்சம். ஆங்காங்கே கண்ணிவெடிகளைப்போல் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் அவற்றின் மேல் நாம்தான் கவனமாகக் கடந்து செல்ல வேண்டும். அவரது கட்டுரைகளில் “ஜயண்ட் வீல்”க்கு எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. வாசிப்பவர்கள் அனைவருமே சிலாகித்துச் சிரித்து உருள்வார்கள். அந்தப்பட்டியலில் இனிமேல் “சுளுக்கு” கட்டுரையும் இடம் பெறும். “இவளே” கட்டுரை அடுத்த கண்ணிவெடி. என்னமா எழுதறார்!!!!! என வியக்கும்போதெல்லாம் சட்டென நினைவுக்கு வரும், “இது தமிழ்க்கடலிலிருந்து பிறந்த நதியல்லவா!!” என்பது. தாமிரபரணிக் கரையில் பயணித்து இந்நதி கொணர்ந்து சேர்த்த அனுபவ முத்துகள் ஏராளம்.

பல்வேறு ஆளுமைகளுடன் பழகி அந்த நினைவுகளை நாம் இது வரை கண்டிராத கோணத்தில் நம்முடன் பகிர்ந்திருக்கிறார் சுகா. கோவிட் காலத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளில் என்றுமே எழுதித்தீராத அவரது நெல்லை நினைவுகளும் விதைக்கப்பட்டுள்ளன. அவை வாசகர் நெஞ்சில் நிச்சயம் அவரவர் ஊர் நினைவுகளாய் முளைத்தெழும். 

ஆசிரியர்: சுகா
பதிப்பகம்: சுவாசம்

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு. வேணுவனம் - அங்கே ஒரு சில பதிவுகள் வாசித்த நினைவு. மீண்டும் சென்று பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails