உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக, பொரியல், குருமா, பாயசம், அவியல், பச்சடி, என்று எல்லா வகைச் சமையலிலும் பயன்படுத்தப்படும் இதன் பயன்கள் ஏராளம். வாரத்திற்கு குறைந்தது ஆறு காரட்டுகளாவது சாப்பிட்டு வந்தால் இதய அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப் படுகிறதாம். இதிலிருக்கும் விட்டமின் ஏ தெளிவான கண்பார்வைக்கு மிகவும் நல்லது. இது தவிர புற்று நோய்க்கான எதிர்ப்பு சக்தி, தோலின் நிறத்தைக் கூட்டுதல், இதய சம்பந்தமான நோய்களைத் தடுக்கும் சக்தி, மற்றும் வயதாகும் வேகத்தைக் குறைத்தல் போன்ற நன்மைகளையும் உடலுக்குக் கொடுக்கிறது.
இதன் அசட்டுத் தித்திப்பு காரணமாக சில குழந்தைகள் காரட் சாப்பிட மறுப்பதுண்டு. அவர்களுக்குப் பிடித்தமான வகையில் அல்வா செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் உடலில் விட்டமின் ஏ-யின் சத்துக் குறைபாட்டால் பார்வைக்கோளாறுகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கலாம். இந்த அல்வா குஜராத்தியர்கள், மற்றும் ராஜஸ்தானியர்களுக்கு மிக விருப்பமான ஒன்று என்பதற்கு அவர்களின் திருமணங்களில் கட்டாயம் இடம் பெறுவதே சான்று.
அல்வா கொடுக்க தேவையானவை:
கேரட்-1 கிலோ
சர்க்கரை-400 கிராம்
இனிப்பில்லாத கோவா-100 கிராம்
இது கிடைக்கல்லைன்னா கடைகளில் கிடைக்கும் மில்க் மெயிட் எனப்படும் கண்டென்ஸ்ட் மில்க் அல்லது, பால்கோவாவையும் உபயோகப் படுத்திக்கலாம். அப்படி உபயோகப் படுத்தும்போது சர்க்கரையின் அளவில் 100 கிராமை குறைச்சுக்கோங்க.
பால்- கால் லிட்டர்
ஏலக்காய்-2 பொடித்தது
எப்படி தயாரிக்கிறது:
கேரட்டை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலைச் சீவிக் கொள்ளவும். பின் மெல்லியதாக துருவிக் கொள்ளவும்.(சோப்பு போட்டேத்தான் கழுவணுமா, வாஷிங் மெஷின்ல வாஷ் செஞ்சா ஆகாதா,.. இல்லை ஆலாவுல ஊற வெச்சு கழுவணுமா.. டவுட்டு)
இப்போது அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யைச் சூடாக்கி அதில் கேரட்டைப் போட்டு வதக்கவும். (மொதல்ல அடுப்பை பற்ற வையுங்கப்பா..)
லேசாக நிறம் மாறி வருகையில் பாலை ஊற்றிக் கிளறவும். பாலிலேயே கேரட் வேக வேண்டும். அடுப்பு மெல்லிய தீயில் எரிய வேண்டும். (அடுப்பு எரிஞ்சா அதுல இருக்கற வாணலியும் எரிஞ்சுடாதா, அடுப்பை எதுல வெச்சு எரிக்கணும்ன்னு சொல்லவேயில்லை.. டவுட்டு)
(பால் முழுவதும் உறிஞ்சப்பட்டதும் சர்க்கரையைப் போட்டுக் கிளறவும். முதலில் நீர்த்து பின் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து வரும்.
இப்போது கோவா, அல்லது கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் நன்கு சுருண்டு வரும்போது ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி விடவும்.(பாத்திரத்தோட ஒன்றிப் போச்சுன்னா அது பேரை ஜிவாஜி அல்வான்னு மாத்திக்கலாமா.. டவுட்டு)
விரும்பினா வெள்ளரி விதை அல்லது மெல்லியதாகத் துருவிய முந்திரி அல்லது பாதாம் பருப்பைச் சேர்த்து அலங்கரிச்சுக்கோங்க. (பாஸ்..ட்ரை ஃப்ரூட் ஃபேஷியலுக்கப்றம், அதை, ஐ-மேக்கப்,லிப்ஸ்டிக், காம்பேக்ட்டெல்லாம் போட்டு அலங்கரிக்கலாமா.. டவுட்டு)
டிஸ்கி1: வீட்ல இருக்குங்கறதுக்காக இஷ்டத்துக்கு கிசுமிசுவைச் சேர்த்து காரட் கேசரி ஆக்கிடாம, அல்வாவாக சாப்பிடுங்க. வடமாநிலங்களில் இந்த அல்வாவை பூரி மற்றும் ஐஸ்க்ரீமுடன் சாப்பிடுவார்கள்.
புது வருசத்துக்காகவும்,
என்னோட ப்ளாக் ஆரம்பிச்சு இன்னியோட ரெண்டு வருசமும் ஒரு வாரமும் நிறைவடைஞ்ச சந்தோஷத்தைக் கொண்டாடவும்,
புதுப்பொறுப்புகள், சூழ்நிலைகள் காரணமா அடிக்கடி இடுகை போட முடியாட்டியும், எப்பவாவது போடும் இடுகைகளுக்கு கடைக்கு வந்து உற்சாகமூட்டிய உங்க பொறுமைக்கான பரிசாகவும் அல்வா கொடுத்து புத்தாண்டு வாழ்த்தும் நன்றிகளும் சொல்லிக்கிறேன்.
எல்லோரும் கேக் எடுத்துக்கிட்டு கொண்டாந்துருக்கற கிஃப்டை மறக்காம கொடுத்துடுங்க :-)










