Thursday 29 November 2012

திருவிளக்கிற்கோர் பண்டிகை திருக்கார்த்திகை..


ஐப்பசி மாதம் அமாவாசை கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வரும்போதே, கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படும் திருக்கார்த்திகைப் பண்டிகைக்கான உற்சாகமான மனநிலையையையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே குறைந்த அளவே கால இடைவெளி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். முன்பெல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடித்து முடியாமல் மீதம் வந்த மத்தாப்பு, வெடிகளை திருக்கார்த்திகை சமயம் காலி செய்தது போய், இப்போதெல்லாம் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கும்போதே இதற்கும் சேர்த்து வாங்கும் காலமாகி விட்டது.
கொண்டாடப்படும் விதத்திலிருந்து, நைவேத்தியம் வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கும். பனைமரத்துண்டால் கட்டப்பட்ட கம்பத்தில் பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு வந்து மேலிருந்து கீழ்வரை வரிசையாக அடுக்கிக்,கோபுரம் போல் கட்டி விடுவார்கள். தீபாராதனை ஆனதும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதன் சாம்பலையும், பாதி எரிந்த ஓலைத்துண்டுகளையும் பிரசாதமாக வீட்டுக்குக் கொண்டு போவார்கள். அந்த ஓலைத்துண்டை வயலில் நட்டு வைத்தால் விளைச்சல் அதிகமாகக் கிடைக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. சின்ன வயதில் பாட்டியின் ஊரில் ஒருதடவை சொக்கப்பனை முதலும் கடைசியுமாகக் காணக் கிடைத்தது.

திருக்கார்த்திகைக்கு தமிழ் நாட்டின் சில ஊர்களில் கார்த்திகைப்பொரி செய்யப்படும். ஆனால், நாஞ்சில் நாட்டில் தெரளியப்பமும், இலையப்பமும்தான் அதிகம் செய்யப்படும். பிரிஞ்சி இலை என்று சொல்லப்படும் கிராம்பு இலையைத்தான் நாங்கள் தெரளி இலை என்று சொல்லுவோம். சுற்று வட்டாரங்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாக முதல் நாளே பச்சைப்பசேலென்று கொத்துக்கொத்தாக வந்து இறங்கி விடும். மும்பையில் அதற்கு வழி கிடையாது, ஆகவே சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கொண்டு வந்திருந்த இலைகளை, அதெல்லாம் காய்ந்து விட்டாலும்கூட பத்திரப்படுத்தி வைத்து, உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று. பண்டிகையன்று ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட்டால் ஃப்ரெஷ் இலை ரெடி. வாசனையும் பரவாயில்லை. மரத்திலிருந்து பறித்தவுடன் விற்பனைக்கு வரும் அந்த இலையின் கிறுகிறுக்க வைக்கும் வாசனை இங்கே மிஸ்ஸிங்தான்.
தெரளியப்பம்..
அரிசி உணவைப் பையர் சில காலமாக அறவே தவிர்த்து விட்டதால், பச்சரிசி மாவுக்குப் பதிலா ராகி மாவு, கரகரப்புக்குக் கொஞ்சம் தினை ரவை சேர்த்த கலவையை, சுக்கும் ஏலக்காயும் தட்டிப்போட்ட, வெல்லம் கலந்த கொதிக்கும் நீரில் போட்டு கிண்டோ கிண்டென்று கிண்டி, ஆற வைத்தபின், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து, தெரளி இலையில் சுருட்டி, இட்லிப்பாத்திரத்தில் வேக வைத்ததும் தெரளியப்பம் ரெடி. வெல்ல நீரில் கல், மண், பூச்சிகள் எதுவுமில்லாதபடிக்கு வடிகட்டி விட்டு அப்புறம் மாவைச் சேர்ப்பது உத்தமம். இல்லையென்றால் “கல்லைத்தான் மண்ணைத்தான் அவித்துத்தான் தின்னத்தான் கற்பித்தானா” என்று கொழுக்கட்டைப் படைப்புத்தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் பேச்சு கேட்க வேண்டியிருக்கும்.

தங்கள் கலைத்திறமையைக் காட்ட நினைக்கும் இளவயசுப் பெண்கள் சாயந்திரம் விளக்கு வைக்கும் மணைப்பலகை, விளக்கைக் கொண்டு வந்து வைக்கப்போகும் வாசல் முற்றத்திலிருந்து வீடு முழுக்க இண்டு இடுக்கு இடம் கூட விடாமல் மாக்கோலம் போட்டு வைத்து, அது காயும் வரை வீட்டிலிருக்கும் மற்றவர்களைத் தாவித்தாவி பாண்டி விளையாட வைக்கலாம். “கொழுக்கட்டை எப்போம்மா ரெடியாகும்?” என்று நச்சரிக்கும் சிறுவர்களையும், ரவுசு பண்ணும் மற்றவர்களையும், “அதெல்லாம் ஆகுறப்ப ஆகும். இப்ப இலையப்பம் அவிக்கணும். அதுக்கு பூவரச இலை வேணும். இல்லைன்னா வாழையிலையாவது வேணும். அதுக்கான வழியைப் பார்க்கக்கூடாதா?” என்று கிளப்பி விட்டு, அவை வந்து சேர்வதற்குள் உண்டான அவகாசத்தில் பரபரவென்று நைவேத்தியத்திற்கான ஏற்பாட்டை, சாமர்த்தியமுள்ள இல்லத்தரசி கவனிக்கலாம்.

கார்த்திகை விளக்கு வைப்பதற்காக வீட்டிலிருக்கும் வெண்கலம், பித்தளை முதற்கொண்டு அகல் விளக்குகள் வரைக்கும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஆனால், வீடு முழுக்க விளக்குகள் ஜொலிக்கிறதைப் பார்க்கும்போது அந்த அழகில் அப்படியே மனது நிறைந்து போய் விடுகிறது. வீட்டின் பூஜையறையிலிருக்கும் வாழைப்பூ விளக்கை வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் வைத்து ஐந்து முகமும் ஏற்றி, சுற்றிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நாஞ்சில் நாட்டு வழக்கம். வீட்டில் திண்ணைகளோ மதில் சுவர்களோ இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்கப்படும். நீளமான தெருவாயிருந்தால் தெரு முழுக்க விளக்குகளெரியும் இந்தக்காட்சி தகதகவென்று அப்படியே அள்ளிக்கொண்டு போகும்.
மும்பையின் தமிழர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்காகக் கட்டி வைக்கப்படும் அலங்கார மின்விளக்குகளை கார்த்திகைப் பண்டிகை முடிந்துதான் கழற்றி வைப்போம். வாசலிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி விட்டு, பால்கனியிலும் விளக்கேற்றி நிமிர்ந்தால், ஹைய்யோ!!.. ஆகாயத்திலும் விளக்கேற்றி வைத்திருக்கிறாள் இயற்கையன்னை. ஜொலித்துக்கொண்டிருக்கிறது விளக்கு கார்த்திகைப் பௌர்ணமியாக..

Sunday 25 November 2012

பூந்தோட்டம்.. (25-11-2012 அன்று பூத்தவை)


அனிச்சம்: சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி அதனால் உயிரிழந்த கதைகளை நிறையக்கேட்டிருக்கிறோம். இங்கே சாப்பிடும் முன்பே, அந்தச் சாப்பாட்டாலேயே உயிரை இழக்க நேரிட்ட நிலை ஒரு பாம்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் இங்கல்ல தைவான் நாட்டில். Nantoun பகுதியில் குடியிருப்புக்குப் பக்கத்துல சுமார் 35 அங்குலம் அளவு நீளமுள்ள விரியன் பாம்பைப் பார்த்த மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்து சொன்னதும் வீரர்கள் வந்து அதை அள்ளிக்கொண்டு போனார்கள். மிருகக்காட்சிச்சாலையில் ஒப்படைக்குமுன் அதைப் பாதுகாப்பாக இருக்கட்டுமென்று சின்னக் கூண்டு ஒன்றில் அடைத்து வைத்தார்கள். வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உபசாரமாக மதிய உணவாக எலி ஒன்றையும் அந்தக்கூண்டுக்குள் அனுப்பினார்கள். கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிடுவதென்று அந்த எலி தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. சுமார் 30 நிமிடப்போராட்டத்திற்குப்பின் எட்டிப்பார்த்த வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகளுடனும் கடிபட்ட காயங்களுடனும் பாம்பு இறந்து கிடக்க எலி, ”இந்த வீரச்செயலுக்கு விருதொன்றும் கிடையாதா?” என்று பார்வையால் அவர்களைக்கேட்டது. 

இயல்வாகை: எங்கோ வாசித்ததில் பிடித்தது --- Manage your anger which is one letter shorter than danger.

வாகை: நமக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் ஒரு தடவை தொலைந்தாலோ, அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ மறுபடியும் அதைப்பெறுவதற்குள் ‘உன்னைப்பிடி, என்னைப்பிடி’ என்று ஆகிவிடுகிறது. ஆனால் மும்பையைச் சேர்ந்த மோதிவாலாவுக்கோ இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். கிட்டத்தட்ட ஆறு வருட காலமாக, உரிமம் பறிபோனபோதெல்லாம் மறுபடியும் சம்பந்தப்பட்ட ஆபீசுக்குப் படையெடுத்தோ, அல்லது அபராதம் கட்டியோ மீட்டு விடுவார், அல்லது டூப்ளிகேட் உரிமமாவது வாங்கி விடுவார். இந்த உண்மை இப்போது சமீபத்தில்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. கெத்து அதிகமாகி ஒரு நாள் உரிமமே இல்லாமல் வண்டி ஓட்டியபோது பிடிபட்டார். ஃபோர்ஜரி மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து 700 ரூபாய் அபராதமும் விதித்ததோடு அல்லாமல் அவரது உரிமமும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

அனங்கம்: பேஸ்புக்கில் வாராவாரம் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்ட இப்படம், முத்துக்கள் பத்தில் ஏழாவது முத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கார்த்திகைப்பூ: குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற கருத்தில் நமக்கெல்லாம் கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் ரஞ்சனி பரஞ்ச்பாயே என்பவர் ஒரு படி மேலே சென்று அவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறார். மும்பையின் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சித்துறைத்தலைவியாக இருக்கும் அவர், ஒரு சமயம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க ஆர்வமிருந்தாலும் தொழில் காரணமாக அடிக்கடி நேரும் இடப்பெயர்ச்சியின் விளைவாக படிக்க முடியாமலிருப்பதை அறிந்தார். இவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக “வீட்டருகே பள்ளி” என்ற முறையில் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார். கட்டிடத்தொழில் நடைபெறும் அந்த இடத்திலேயே, ஒரு ஓரத்தில் அமைக்கப்படும் தகரக்கொட்டகைதான் பள்ளிக்கூடம். இந்தப்பள்ளியில் சேருவதற்கு மூன்று வயது நிரம்பியிருந்தால் போதும்.வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். கணக்கு, அறிவியல், சமூகவியல் போன்றவை மராத்தி மீடியத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்புவரை படித்தவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு மும்பை மற்றும் பூனாவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் இப்பள்ளிகளில் சுமார் 25000 பேர் பயில்கிறார்களாம். குழந்தைகளால் இயலும் பட்சத்தில் நகராட்சிப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில இங்கே தயார்படுத்தப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். கைக்குழந்தைகளாக இருக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு காரணமாக பள்ளிக்கு வர இயலாமலிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பேபி சிட்டிங்கும் இங்கே இருக்கிறது. “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்” மனித நேயமிக்க இவர்களைப் போன்றவர்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறையத்தேவை.

காகிதப்பூ: "இனியெல்லாம்.." என்ற எனது சிறுகதை இன் அண்ட் அவுட் சென்னை இதழின் செப்டம்பர் மாதப் பதிப்பில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இதழாளர்களுக்கு நன்றி.   

Tuesday 20 November 2012

கடைசித் துருப்புச்சீட்டு..

  • புகழை ஏற்றுக்கொள்ள முன் வருவதைப்போன்றே அதற்கான தனது கடமையையும் பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  • எந்த விதப் போலித்தனமுமின்றி நாம் நாமாக இருக்க முடிவது உண்மையான நட்புகள் மற்றும் உறவுகளின் முன் மட்டுமே.

  • நேற்றைய சரித்திரங்களைப்பற்றியே எப்போதும் மலைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்றைய சரித்திரத்தின் ஒரு துளியாக நாளைய சரித்திரத்தில் பேசப்படப்போவதை அறியாமலே.

  • உதிர்ந்த இலையொன்று வியந்து கொண்டிருக்கிறது மரத்தின் பிரம்மாண்டத்தினைக்கண்டு. அதன் ஒரு பகுதியாகத் தானும் இருந்ததை அறியுமுன் அடித்துச் செல்கிறது காற்று.

  • எல்லாமே அற்புதங்களாகவும் அர்த்தமற்றும் ஒரே நேரத்தில் தெரியும் வாழ்க்கையை அதிகம் ஆராயாமல் அதன் போக்கில் விடுவதே அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான முதல் முயற்சி.

  • நம்பிக்கையே உணவாய், நற்செயல்களே நிழலாய், அறிவே பகலொளியாய், மனதின் வழிகாட்டல்களே இருளின் வழித்தடமாய்க் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கைப்பயணம்.

  • ஜெயித்து விட்ட நிம்மதியுடன் நிமிர்ந்து அமரும்போதுதான் கடைசித்துருப்புச் சீட்டை இறக்குகிறது விதியென்று சொல்லப்படும் ஒன்று.

  • பறவைக்குஞ்சின் திறந்த அலகினுள் வந்து விழும் உணவாய்ச் சில வெற்றிகள் தாமாகவே வாய்த்து விடுகின்றன, பிறர் உழைப்பை விழுங்கிக்கொண்டு.

  • வெற்றி பெற உழைப்பதை விட,தோற்று இருப்பைத் தொலைத்து விடாமலிருக்க அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறது.

  • எதிர்பார்த்த சம்பவங்களாயினும் எதிர்பாரா சந்தர்ப்பங்களில் நிகழ்ந்து விடும்போது ஒரு சிறிய பரபரப்பு அலை பரவித்தணிகிறது.

Friday 16 November 2012

கொண்டாட்டங்கள் முடியவில்லை..

மழை முடிந்தபிறகு குடை பிடித்த கதையாக தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் இப்போது சொல்லிக்கொள்கிறேன். எங்களூரில் இன்னும் தீபாவளி முடியவில்லை. ஆகவே வாழ்த்துச்சொல்வதிலும் தப்பில்லை :-)
செமஸ்டர் பரீட்சையைக் காரணம் காட்டி சிஸ்டத்தைக் குழந்தைகள் பிடுங்கிக்கொண்டு விட தற்காலிகமாகவும் வலுக்கட்டாயமாகவும் ஓய்வெடுக்க வேண்டியதாயிற்று. பற்றாக்குறைக்கு செமஸ்டர் பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முதல் நாள், மகள் கீழே விழுந்து உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் அடி பட்டுக்கொண்டு வந்தாள். மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் பரீட்சை சமயம் உறக்கம் வந்தாலும் வரலாம். அப்புறம் பட்ட பாடெல்லாம் வீணாகி விடும் என்று வெறும் முதலுதவியோடு நிறுத்திக்கொண்டு விட்டாள். அவள் நன்கு தூங்கி விட்டாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, "பரீட்சைக்காக விழுந்து விழுந்து படிச்சதுல அடிபட்டிருச்சு" என்று வாய்மொழியை உதிர்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார் பையர். பின்னே, மகளின் காதில் இந்த கமெண்ட் விழுந்தால் யார் மாத்து வாங்குவது? :-) அப்புறம் பரீட்சைகள் முடிந்தபின் ஸ்கேன் எடுத்தல், எக்ஸ்ரே எடுத்தல் என்று மருத்துவமனைக்கு அலைந்தது தனிக்கதை :-)

இந்த களேபரத்தில் வீடு சுத்தம் செய்வது, அலங்கார மின் விளக்குகள் கட்டுவது போன்ற தீபாவளி வேலைகளை பையரின் உதவியோடு ஓரளவு செய்து முடித்து, தீபாவளிக்கு முதல் நாள் மிச்சம் மீதி ஷாப்பிங்கும் முடிந்தது. பட்டாசு விலையேற்றம் காரணமாகவும், சுற்றுப்புற சூழல் மீதுள்ள அக்கறை காரணமாகவும் இந்த வருஷம் மும்பையில் அமைதியான தீபாவளியாகக் கழிந்தது. புது வருடத்தை மிகவும் தாம்தூமென பட்டாசு வெடித்துக் கொண்டாடும் குஜராத்தியர் கூட கொஞ்சம் அடக்கியே வாசித்தனர். 
கடைகளில் தொங்கும் கந்தில்கள் எனப்படும் விளக்கலங்காரங்கள்..
எக்கச்சக்க அலங்காரங்கள், விளையாட்டுகள் என்று களை கட்டும் மால்கள் கூட கொஞ்சம் சுரத்தின்றி ஆனால் ஓரளவு களையுடன் இருந்தன. 
இருந்தாலும் எண்ணெய்யின்றி திரியுமின்றி விளக்கேற்றி,
பட்டாசு வெடித்து,
 



நேற்றைய பாவ்பீஜ் வரைக்கும் தீபாவளியைக் கொண்டாடி முடித்தாயிற்று. ஆனால் இன்னொரு கொண்டாட்டமும் இன்றைக்கு இருக்கிறது. இன்று அதாவது நவம்பர்-16 என் பையரின் பிறந்த நாள். 

எல்லாச் செல்வங்களும் நலங்களும் பெற்று நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மனமார்ந்த ஆசீர்வாதங்கள் பாஸ்கர்..
கேக்கை மட்டும் அவனிலும் சுடவில்லை, காமிராவாலும் சுடவில்லை. கூகிளில் சுட்டேன் :-)

LinkWithin

Related Posts with Thumbnails