Thursday, 29 November 2012

திருவிளக்கிற்கோர் பண்டிகை திருக்கார்த்திகை..


ஐப்பசி மாதம் அமாவாசை கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை வரும்போதே, கார்த்திகை மாதம் பௌர்ணமியன்று கொண்டாடப்படும் திருக்கார்த்திகைப் பண்டிகைக்கான உற்சாகமான மனநிலையையையும் சேர்த்தே கொண்டு வந்து விடும். இரண்டு பண்டிகைகளுக்கும் இடையே குறைந்த அளவே கால இடைவெளி இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். முன்பெல்லாம் தீபாவளிக்கு வாங்கி வெடித்து முடியாமல் மீதம் வந்த மத்தாப்பு, வெடிகளை திருக்கார்த்திகை சமயம் காலி செய்தது போய், இப்போதெல்லாம் தீபாவளிக்குப் பட்டாசு வாங்கும்போதே இதற்கும் சேர்த்து வாங்கும் காலமாகி விட்டது.
கொண்டாடப்படும் விதத்திலிருந்து, நைவேத்தியம் வரைக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசப்பட்டுக் கொண்டாடப்படுகிறது. சில கோயில்களில் சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கும். பனைமரத்துண்டால் கட்டப்பட்ட கம்பத்தில் பனைமரத்தின் ஓலைகளைக் கொண்டு வந்து மேலிருந்து கீழ்வரை வரிசையாக அடுக்கிக்,கோபுரம் போல் கட்டி விடுவார்கள். தீபாராதனை ஆனதும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இதன் சாம்பலையும், பாதி எரிந்த ஓலைத்துண்டுகளையும் பிரசாதமாக வீட்டுக்குக் கொண்டு போவார்கள். அந்த ஓலைத்துண்டை வயலில் நட்டு வைத்தால் விளைச்சல் அதிகமாகக் கிடைக்குமென்பது அவர்களின் நம்பிக்கை. சின்ன வயதில் பாட்டியின் ஊரில் ஒருதடவை சொக்கப்பனை முதலும் கடைசியுமாகக் காணக் கிடைத்தது.

திருக்கார்த்திகைக்கு தமிழ் நாட்டின் சில ஊர்களில் கார்த்திகைப்பொரி செய்யப்படும். ஆனால், நாஞ்சில் நாட்டில் தெரளியப்பமும், இலையப்பமும்தான் அதிகம் செய்யப்படும். பிரிஞ்சி இலை என்று சொல்லப்படும் கிராம்பு இலையைத்தான் நாங்கள் தெரளி இலை என்று சொல்லுவோம். சுற்று வட்டாரங்களிலிருந்து ஃப்ரெஷ்ஷாக முதல் நாளே பச்சைப்பசேலென்று கொத்துக்கொத்தாக வந்து இறங்கி விடும். மும்பையில் அதற்கு வழி கிடையாது, ஆகவே சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தபோது கொண்டு வந்திருந்த இலைகளை, அதெல்லாம் காய்ந்து விட்டாலும்கூட பத்திரப்படுத்தி வைத்து, உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று. பண்டிகையன்று ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறப்போட்டால் ஃப்ரெஷ் இலை ரெடி. வாசனையும் பரவாயில்லை. மரத்திலிருந்து பறித்தவுடன் விற்பனைக்கு வரும் அந்த இலையின் கிறுகிறுக்க வைக்கும் வாசனை இங்கே மிஸ்ஸிங்தான்.
தெரளியப்பம்..
அரிசி உணவைப் பையர் சில காலமாக அறவே தவிர்த்து விட்டதால், பச்சரிசி மாவுக்குப் பதிலா ராகி மாவு, கரகரப்புக்குக் கொஞ்சம் தினை ரவை சேர்த்த கலவையை, சுக்கும் ஏலக்காயும் தட்டிப்போட்ட, வெல்லம் கலந்த கொதிக்கும் நீரில் போட்டு கிண்டோ கிண்டென்று கிண்டி, ஆற வைத்தபின், பிடி கொழுக்கட்டைகளாகப் பிடித்து, தெரளி இலையில் சுருட்டி, இட்லிப்பாத்திரத்தில் வேக வைத்ததும் தெரளியப்பம் ரெடி. வெல்ல நீரில் கல், மண், பூச்சிகள் எதுவுமில்லாதபடிக்கு வடிகட்டி விட்டு அப்புறம் மாவைச் சேர்ப்பது உத்தமம். இல்லையென்றால் “கல்லைத்தான் மண்ணைத்தான் அவித்துத்தான் தின்னத்தான் கற்பித்தானா” என்று கொழுக்கட்டைப் படைப்புத்தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் பேச்சு கேட்க வேண்டியிருக்கும்.

தங்கள் கலைத்திறமையைக் காட்ட நினைக்கும் இளவயசுப் பெண்கள் சாயந்திரம் விளக்கு வைக்கும் மணைப்பலகை, விளக்கைக் கொண்டு வந்து வைக்கப்போகும் வாசல் முற்றத்திலிருந்து வீடு முழுக்க இண்டு இடுக்கு இடம் கூட விடாமல் மாக்கோலம் போட்டு வைத்து, அது காயும் வரை வீட்டிலிருக்கும் மற்றவர்களைத் தாவித்தாவி பாண்டி விளையாட வைக்கலாம். “கொழுக்கட்டை எப்போம்மா ரெடியாகும்?” என்று நச்சரிக்கும் சிறுவர்களையும், ரவுசு பண்ணும் மற்றவர்களையும், “அதெல்லாம் ஆகுறப்ப ஆகும். இப்ப இலையப்பம் அவிக்கணும். அதுக்கு பூவரச இலை வேணும். இல்லைன்னா வாழையிலையாவது வேணும். அதுக்கான வழியைப் பார்க்கக்கூடாதா?” என்று கிளப்பி விட்டு, அவை வந்து சேர்வதற்குள் உண்டான அவகாசத்தில் பரபரவென்று நைவேத்தியத்திற்கான ஏற்பாட்டை, சாமர்த்தியமுள்ள இல்லத்தரசி கவனிக்கலாம்.

கார்த்திகை விளக்கு வைப்பதற்காக வீட்டிலிருக்கும் வெண்கலம், பித்தளை முதற்கொண்டு அகல் விளக்குகள் வரைக்கும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். ஆனால், வீடு முழுக்க விளக்குகள் ஜொலிக்கிறதைப் பார்க்கும்போது அந்த அழகில் அப்படியே மனது நிறைந்து போய் விடுகிறது. வீட்டின் பூஜையறையிலிருக்கும் வாழைப்பூ விளக்கை வாசலில் போட்டிருக்கும் கோலத்தின் நடுவில் வைத்து ஐந்து முகமும் ஏற்றி, சுற்றிலும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது நாஞ்சில் நாட்டு வழக்கம். வீட்டில் திண்ணைகளோ மதில் சுவர்களோ இருந்தால் அங்கும் விளக்கேற்றி வைக்கப்படும். நீளமான தெருவாயிருந்தால் தெரு முழுக்க விளக்குகளெரியும் இந்தக்காட்சி தகதகவென்று அப்படியே அள்ளிக்கொண்டு போகும்.
மும்பையின் தமிழர்களைப் பொறுத்தவரை தீபாவளிக்காகக் கட்டி வைக்கப்படும் அலங்கார மின்விளக்குகளை கார்த்திகைப் பண்டிகை முடிந்துதான் கழற்றி வைப்போம். வாசலிலும் வீட்டினுள்ளும் விளக்கேற்றி விட்டு, பால்கனியிலும் விளக்கேற்றி நிமிர்ந்தால், ஹைய்யோ!!.. ஆகாயத்திலும் விளக்கேற்றி வைத்திருக்கிறாள் இயற்கையன்னை. ஜொலித்துக்கொண்டிருக்கிறது விளக்கு கார்த்திகைப் பௌர்ணமியாக..

14 comments:

ராமலக்ஷ்மி said...

சுடர் விடுகிறது பகிர்வு.

தீபத் திருநாள் தினம் தினம் கார்த்திகை மாதத்தில். இனிய வாழ்த்துகள் சாந்தி.

மோகன் குமார் said...

படங்கள் அழகு. எப்படி தான் அவ்ளோ வேலையும் செய்து கொண்டு படமும் எடுத்தீர்களோ?

தெரளியப்பம் பார்த்து ரொம்ப ஆசையாகிடுச்சு. நீங்க எழுதிருக்க செய் முறையை காட்டி எங்க ஹவுஸ் பாசை செய்ய சொல்லலாம் :)

கோமதி அரசு said...

தெரளி இலை கொழுக்கட்டை சிறு வயதில் திருவனந்தபுரத்தில் ஆச்சி வீட்டில் சாப்பிட்டது அதன் மணம் இன்னும் மறக்க வில்லை. அதை மீண்டும் நினைவு படுத்தி விட்டது உங்கள் பதிவு. கார்த்திகை என்றால் அம்மா, பிடி கொழுகட்டை செய்வார்கள், வெல்லம் பாகு எடுத்து ஊற்றி அதில் எள், பாசிபருப்பு தேங்காயை பல் பல்லாய் நறுக்கி நெய்யில் வதக்கி போட்டு செய்யும் கொழுகட்டை கெட்டு போகாமல் நிறைய நாள் சாப்பிடலாம் , பின் அப்பம், அடை, உப்பில்லா கொழுகட்டை, அவல் பொரி, நெல்பொரி, வெல்லம் போட்டது என்று செய்வார்கள். அரிசியில் 27 விளக்குகள் நடிவில் இருக்கும் விளக்குக்கு மட்டும் ஒரு தட்டு இருக்கும். (மாவில் செய்த தட்டு தான்)அதை ஆவியில் வேக வைத்து அதில் நெய் விட்டு விளக்கு ஏற்றி வைப்பார்கள் பின் அதை சாப்பிட கொடுப்பார்கள்.
இப்போது இவ்வளவும் செய்ய முடியவில்லை, சாப்பிடவும் ஆள் இல்லை.
நான் இந்த முறை மகனை அனுப்பி விட்டு கார்த்திகை தீபத்திற்கு முதல் நாள் தான் வந்தேன். அவல்பொரியும், பழங்களும் தான் இறைவனுக்கு.

நாங்களும் சிறு வயதில் எரிந்த குச்சிகளை வீட்டிற்கு கொண்டு வருவோம் , தொட்டி செடிகளில் நட்டு வைப்போம்.
உங்கள் பதிவு மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டது சாந்தி மகிழ்ச்சி. நன்றி.

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவு மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பகிர்வு... படங்கள் Classic...

தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
tm3

ஹுஸைனம்மா said...

பண்டிகை வாழ்த்துகள்.

எப்படிக் கொண்டாடினோம்னு எழுதிருக்கீங்க. ஆனா, பண்டிகைக்கானக் காரணம் - எதற்காகன்னு - எழுதலையே.

கோவை2தில்லி said...

தெரளியப்பம் சாப்பிடும் ஆசையை தூண்டி விட்டது. படங்கள் அழகு.

நானும் வாழைப்பூ விளக்கை வைத்து சுற்றிலும் விளக்குகள் வைப்பேன். அவல்பொரிஉருண்டை, நெல்பொரி உருண்டை, பொரியாலேயே பருப்பு தேங்காய் பிடிப்போம். அப்பம் பழங்களுடன் நைவேத்தியம் செய்வோம். இம்முறை அப்பமும், பழங்களும் தான்....

தீபத்திருநாள் வாழ்த்துகள்.

புதுகைத் தென்றல் said...

photos supera iruku. romba pidichiruku

ஹேமா said...

என்னெனமோ சொல்லியிருக்கிறீங்க சாரல்.எங்க வீட்ல வீடெல்லாம், வளவெல்லாம் விளக்கேத்தி வைக்கிறது மட்டும்தான் ஞாபகமிருக்கு !

Lakshmi said...

நாங்கல்லாம் நெல்பொரி, அவல் பொரி உருண்டை அதிரசம் கடலை உருண்டைசெய்வோம் பெரியமகன் மனைவி வெல்லச்சீடையும் செய்வா அவ மதுரைக்காரி ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கே

S.Menaga said...

புகைப்படங்கள் அழகாயிருக்குக்கா.....தெரளியப்பம் புதுசா இருக்கு...பழம்,கார்த்திகைப் பொரிவடை,பாயாசம் இவற்றைதான் நிவேதனம் செய்வோம்.

வெங்கட் நாகராஜ் said...

தெரளியப்பம்.... அடடா பேரைக் கேட்டவுடனேயே சாப்பிடணும்னு தோணுதே....

பம்பாய்கு தான் வரணும்... :)

சா.கி.நடராஜன். said...

மிகவும் அருமையான விளக்கம்
அருமையான பதிவு
வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...


முதல் படம் ஜோர்.

தெரளியப்பம் நாவின் சுவை நரம்பை மீட்டி, சோதிக்கிறது.

மூன்றாவது படமும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails