Thursday 28 June 2018

சாரல் துளிகள்

மதங்கொண்டு புத்தியழிந்த யானையின் பாதையில் குறுஞ்செடி எங்ஙனம் பிழைக்கும்?.

வான்வெளியின் எங்கோ ஒரு மூலையில் கவனிக்கப்படாமலேயே அவிந்து வீழ்ந்த எரிநட்சத்திரங்கள் ஒன்றிணைந்து பெருநட்சத்திரமான போழ்து ஆங்கொரு பிரபஞ்சம் பிறந்தது.

நினைவுகளால் கனத்துத் ததும்பித் திணறும் இவ்விரவு அந்நினைவுகளையே ஊன்றிக்கொண்டு மெல்ல நகர்கிறது.

மழை தெளித்த முற்றத்தின் மீது சிறகுதிர்த்துக் கோலமிட்ட ஈசல்களுக்கு, அதை ரசிக்கத்தான் பொழுதில்லை.

காலம் ஒரு நெருப்பாறு. இறங்கிக் கரையேறுகிறவர்களைப் புடம் போட்டும், பொய் வேஷத்தைக் கலைத்து அடையாளம் காட்டியும், மூடிய மாசெரித்து மின்னவும் வைத்து விட்டு தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சிறுகுழந்தையின் கையிலகப்பட்ட லட்டைப்போல் நொறுங்கிக் கரைந்து கொண்டிருக்கும் அம்மலையின் விலாவில் கிச்சுக்கிச்சு மூட்ட முயல்கிறது ஒரு இயந்திரம்.

கேட்கக் காதுகள் இல்லாவிடத்தில் துயரம் தன்னைக் கண்ணீரால் வரைந்து கொள்கிறது. கண்ணுடையவன் பார்க்கக் கடவன்.

உளுத்துப்போன பேழையில் காக்கப்படும் பொக்கிஷத்தையொத்ததே, தகுதியில்லார் மேல் வைக்கப்படும் நம்பிக்கை. இரண்டுக்குமே உத்தரவாதமில்லை.

உண்மைத்தன்மை சோதித்தறியும் நோக்கில் தோலுரிக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் நிலையிலும் மனங்கசிந்து நேசிக்கும் ப்ரியத்தின்முன் குற்றவுணர்வு கொள்கிறது நப்பாசை. கை வீசி அப்பால் விலகிச்செல்கிறது நம்பிக்கையின்மை.

நிதர்சனத்தை எதிர்கொள்ள அஞ்சுபவர்களே முப்பொழுதும் கற்பனையுலகில் சஞ்சாரித்துக் கிடப்பர். அல்லாதோர் எதிர்கொண்டு வென்று கடப்பர்.

Thursday 14 June 2018

சாரல் துளிகள்


எதுவும் மீதமில்லாமல் எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்த பின்னும், இன்னும் ஏதோ எஞ்சுகிறது.

ஒன்று கடந்து போகக் காத்திருந்து அடுத்தது வந்து நிற்கிறது. சற்று முயன்று தள்ளி இதையும் கடத்தி விடலாமென முயலும்போது இன்னொன்று தொலைவில் நின்று கையசைக்கிறது. ஒவ்வொன்றையும் புறந்தள்ளியபடி கடக்கிறோம் நாம்.

பாட்டிகள் சீரியல்களில் கரைந்து கொண்டிருக்க, பேரன்பேத்திகள் மொபைல் விளையாட்டுகளிலும் சிறப்பு வகுப்புகளிலும் மூழ்கி முத்தெடுக்க, கோலாகலமாய்க் கரைகிறது கோடை விடுமுறை.

எங்கோ ஒரு கிளையில் மரமறியாமல் மலர்ந்திருந்த பூ, எதுவும் மிச்சமின்றி தன்னை விடுவித்துக்கொண்டு அக்கைகளில் சரணடைந்த அவ்வினிய பொழுதில் முதல் மழைத்துளி திலகமிட்டது.

இன்னும் வெளுக்க ஆரம்பிக்காத அடிவான இருளில் புதைந்து கிடக்கும் ஒற்றை நட்சத்திரத்தின் தனிமையை விரட்ட மேலும்மேலும் முயன்று கொண்டிருக்கிறது சிறு அலை.

ஒரு யோகியைப் போல் மலை மேல் தனிமைத்தவத்திலாழ்ந்திருக்கும் அந்த அலைபேசிக் கோபுரத்திற்கு இடைஞ்சலுண்டாக்குவதெப்படியென்று பேசிக்கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.

விரும்பாத ஒன்றை. விலக்கிச் செல்வதை விட, விரும்பிய ஒன்றை விரும்பாததுபோல் கடந்து செல்லத்தான் அதிக மனத்திண்மை தேவை.

பச்சையமிழந்த செடியினின்று உதிர்ந்து அழுக்குப் பிடித்த சாலையில் உருண்டு புரண்டு கதறிக்கொண்டிருக்கும் போகன்வில்லாப் பூவைத் தேற்றுகிறது அமிலப்புகையில் குளித்த செம்பருத்திப்பூ.

காலொடிந்த இதய சிம்மாசனத்தில் அமர, இளைய ராணிகளையும் குறு ராணிகளையும் கெஞ்சியழைத்துக் கொண்டிருக்கிறார் பல் கொட்டிப்போன ராஜா.

அதிக அடக்குமுறைகளுடன் பொத்திப்பொத்தி வளர்க்கப்படும் மனிதர்களும் போன்சாய் தாவரங்களும் ஒன்றுதான். இரண்டுமே தம் இயல்பான குணத்தை இழக்கின்றன.

LinkWithin

Related Posts with Thumbnails