Wednesday, 4 March 2015

மலைத்தேனும் மாத்தேரனும்..


சுற்றுலாவோ அல்லது சாதாரணப் பயணமோ.. நாம் சென்று வரும் ஒவ்வொரு ஊரும் தனது நினைவுத்தடங்களை நமது மனதில் பதித்து விடுகின்றன. பழைய நினைவுகளை அசைபோடும் தருணங்களில் பனியின் பின்னிருந்து மெல்ல மெல்ல புலப்படத்தொடங்கும் உருவங்களாய் ஒவ்வொரு ஊரின் நிகழ்வுகளும் மெல்ல மெல்ல ஒன்றைத்தொட்டு ஒன்றென மேலெழும்பி வருகின்றன. சுருக்கமாய்ச் சொன்னால் வாழ்நாள் முழுவதும் அந்த ஊர்களை மனதில் சுமந்து கொண்டுதான் நாம் திரிகிறோம். நிகழ்வுகளைப்பொறுத்தோ அல்லது ஏதாவதொரு காரணத்தாலோ சில ஊர்களின் மேல் நம்மையறியாமல் ஏதோ ஒரு பிடிப்பு ஏற்பட்டு மறக்க முடியாததாக்கி விடுகிறது. 

அவ்வப்போது சொந்தங்களின் ஊர்களுக்கும் ஒரு நாள் விசிட்டாக ஒரு சில ஊர்களுக்கும் போய் வந்திருந்தாலும், பக்காவாகத் திட்டம் போட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு எங்குமே அதுவரையிலும் பிக்னிக் சென்றதில்லை. இந்தக்குறையை நிவர்த்தி செய்ய பக்கத்திலிருக்கும் மலைப்பிரதேசங்களான ‘மாத்தேரன்’ போகலாமா? அல்லது ‘மஹாபலேஷ்வர்’ போகலாமா என்று ஹாலில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தோம். மாத்தேரனுக்கு அதிகபட்ச ஓட்டுகள் விழுந்ததால் அந்த வாரத்தின் சனி,ஞாயிறை மாத்தேரனுக்கு நேர்ந்து விட்டோம். 

கிளம்புவது என்று முடிவானதும், ரிஸார்ட்கள், ஹோட்டல்கள் எதிலும் தங்கவேண்டாம், அங்கிருக்கும் பேயிங் கெஸ்ட் வசதி கொண்ட வீடுகளில்தான் தங்குவது என்ற முக்கியமான முடிவும் எடுக்கப்பட்டது. அது எவ்வளவு சரியானது என்பதை அங்கே போனதும் உணர்ந்தோம். அழகான அந்தக் கிராமத்துச் சூழல் அட!!.. அட!! அட.. இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. நகரத்துச் சூழலையே பார்த்துப் பழக்கப்பட்ட கண்களுக்கு அந்த மலைக்கிராமம் எத்தனையோ குளுமையாக இருந்தது 

 மாத்தேரனுக்குள் வாகனங்கள் எதையுமே அனுமதிப்பதில்லை. நம் ஊட்டி ரயிலைப்போன்று ஒரு பொம்மை ரயில் மட்டுமே நேரல் ஸ்டேஷனிலிருந்து மாத்தேரனுக்குத் தைரியமாகச் சென்று வருகிறது. மற்றபடி புகையில்லாக் கிராமம்தான் மாத்தேரன். சுற்றுலா வரும் பயணிகளுக்கு இடங்களைச் சுற்றிக்காண்பிப்பதற்காக நிறையக் குதிரைகளையும், மட்டக்குதிரைகளையும் கூட்டிக்கொண்டு வீரர்கள் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். போக வேண்டிய இடங்களைச் சொல்லி பேரம் படிந்தால் குதிரைகளில் பயணிக்கலாம். இல்லையெனில் மூட்டு பலமுள்ளவர்களுக்காக இருக்கவே இருக்கிறது 11-ம் நம்பர் பஸ்.. அது வேறொன்றுமில்லை, நம் கால்கள்தான் :-)

 விடியற்காலையில் போய் இறங்கியதும் ஒரு வீட்டைப் பிடித்து, மூட்டை முடிச்சுகளை அங்கே போட்டோம். அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய படுக்கையறை மட்டுமே மொத்த ரூமும். வீட்டின் ஒரு பகுதியை இப்படி மாற்றியமைத்து வாடகைக்கு விடுகிறார்கள். போய் வர நமக்குத் தனி வழி. வீட்டுக்காரர்கள் ஒரு பக்கத்தில் வசிப்பார்கள். வேண்டியதைச்சொன்னால் சமைத்தும் கொடுப்பார்கள் என்பது முக்கியமான ஒன்று. காந்தாபோஹா,.. பாக்ரியுடன் கூடிய மஹாராஷ்ட்ரியன் தாலி என்று சிம்பிளான அதேசமயம் ருசியுடன் கூடிய சுத்தமான வீட்டுச்சாப்பாடு கிடைத்ததால் வயிறும் பாதிக்கப்படவில்லை. 

இயற்கை சிலம்பாட்டமாடும் மாத்தேரனில் ஒவ்வொரு இடமும் பார்க்க வேண்டியவைதான் என்றாலும் முக்கியமான ஒரு சில இடங்கள் மட்டும் பாயிண்ட்ஸ் என்ற அடைமொழியுடன் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சில பாயிண்டுகளில் பைனாகுலர் வைத்து மலையும் அடுத்துள்ள சமவெளியும் சுற்றுலாப்பயணிகளுக்குக் காண்பிக்கப்படுகின்றன. இந்த மலையிலிருந்து லோனவ்லாவை வெறும் கண்ணாலேயே பார்க்க முடியுமாம். அவசியம் பார்க்க வேண்டிய புண்ணியஸ்தலமென்று அங்கிருந்த கைடு எங்களுக்குக் காட்டியது ‘மனிஷா கொய்ராலாவின் பண்ணை வீடு’.

படம் - இணையத்திலிருந்து
மாத்தேரனில்  மொத்தம் 28 பாயிண்டுகள் எனப்படும் பார்வையிடங்கள் இருக்கின்றன. இவற்றில் மிகத்தூரத்தில் அமைந்திருக்கும் one tree point எனப்படும் இடத்திற்கு குதிரையில் மட்டுமே செல்ல இயலும்.  ஒவ்வொரு பாயிண்டிலும் பாயிண்டுகளின் மேப்பும் செல்லும் வழியும் பேனராக வைத்திருக்கிறார்கள். ஆகவே அவ்வளவு பெரிய காட்டில் வழி தவறும் வாய்ப்பில்லை. ஒரு சில உள்ளடங்கிய பகுதிகளில் பழங்குடியினரும் வசிக்கிறார்கள். அவர்களது முக்கியத்தொழிலே தேனெடுப்பதுதான். மலைகளின் செங்குத்தான பகுதிகளில் தேனடைகள் இருக்கும் பகுதிகளில் நூலேணிகள் மூலமாகப் போய் தேனெடுத்து வருவார்களாம். ஒரு சில நூலேணிகள் அபாயகரமான கோணங்களில் தொங்கிக்கொண்டிருப்பதை பைனாகுலர் மூலம் பார்த்த போது நடுக்கமாக இருந்தது. மலைத்தேனுக்கு இருக்கும் கிராக்கிதான் இவர்களை இப்படிக் கஷ்டப்படச்செய்கிறது என்பதை அறிந்து மலைத்தேன். 

மாத்தேரன் மொத்தத்தையும் சுற்றிப்பார்த்து இயற்கைச்சூழலில் திளைத்து வர குறைந்தது 3 அல்லது 4 நாட்களாவது தேவை. நாங்கள்  சென்ற முதல் நாளில் கால்களில் வலுவிருந்ததால் நடந்தே நிறைய இடங்களைச் சுற்றிப்பார்த்தோம். மறுநாள் ‘இதுக்கு மேல முடியாது சாமி’ என்று கால்கள் எங்களைக் கெஞ்சியதால் குதிரைகளின் உதவியை நாட வேண்டியதாகி விட்டது. கால்வலி போதாதென்று குதிரைப்பயணம் கொடுத்த இடுப்புவலியும் சேர்ந்து கொண்டது தனிக்கதை.

லோனாவ்லாவைப்போலவே இங்கேயும் கடலை, பாதாம், ராஜ்கீரா, இவற்றைத்தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ செய்யப்படும் 'சிக்கி' எனப்படும் இனிப்புப்பண்டம் மிகப்பிரபலம். சுற்றுலாப்பிரதேசங்களில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் பொருட்கள் கடைகளில் விற்கப்படுவது இயல்பு. அந்த வகையில் இங்கே கடைகளில் தேன், சிக்கி, மற்றும் பருவ காலங்களில் ஸ்ட்ராபெர்ரியும் கிடைக்கின்றன.

இதற்குப்பின் கொடைக்கானல், ஊட்டி என்று எத்தனையோ பிரயாணங்கள் சென்று வந்து விட்டாலும் மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)

வால்: தேனக்காவின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அளித்த பேட்டியை இன்னும் சற்றுக்கூடுதல் விவரங்களுடன் இங்கே கல்வெட்டிலும் செதுக்கி வைக்கிறேன். நன்றி தேனக்கா.

7 comments:

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!! தேனை ரசித்தேன்:-)

பூனாவிலஞ்சு வருசம் குப்பை கொட்டிக்கிட்டு இருந்த காலத்தில் மாத்ரேன் போகணுமுன்னுமாத்ரம் நிறைய தடவை நினைச்சதுண்டு.

உள்ளூர்லே எங்கே விடியுதுன்னு இருந்த காலமாச்சே அது:(

இப்ப ஒருக்காப் போக ஆசை இருந்தாலும் குதிரை பாவமில்லையோ!!!!

ராமலக்ஷ்மி said...

அருமையான பயணம். தகவல்களுடன் சிறப்பான பகிர்வு.

ராஜபாட்டை - ராஜா said...

செம ஜாலியா சுத்திட்டு வந்திருக்கிங்க

Kousalya raj said...

மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான இடத்தை நீங்க விவரித்ததை படித்து அங்கே செல்ல வேண்டும் என ஆசை வந்துவிட்டது

குதிரைப் பயணம் உண்மையில் ஒரு சுவாரசியம் தான் என்றாலும் இடுப்பு வலினு நீங்க சொன்னதையும் யோசிக்கணும் :-)

அருமை !!

Thenammai Lakshmanan said...

சூப்பர். :)

கோமதி அரசு said...

மாத்தேரனின் கிராமச்சூழல், விடியலின் விலகாத பனி, உச்சிக்கு ஏறிச்சென்றால் நட்சத்திரங்களையே பறித்து வந்து விடலாம் போன்ற உயரமான மரங்கள், சூரியனின் உறக்கம் கலைத்த கொக்கரக்கோ சேவல் என்று விடுமுறையுடன் கிராமச்சூழலையும் குழந்தைகளும் நாங்களும் அனுபவித்த நினைவுகள் இன்னும் பசுமையாகவே இருக்கின்றன.. எப்போதும் இருக்கும். :)//

இதை படித்தவுடன் பார்க்க தோன்றுகிறதே!


கரந்தை ஜெயக்குமார் said...

அருமையான பயணம்
என்றென்றும் நெஞ்சில் நீடித்து நிற்கும் நினைவலைகள்
அருமை
தம 1

LinkWithin

Related Posts with Thumbnails