Sunday, 8 March 2015

குங்குமமும் பிடித்த கவிதையும் பின்னே சாரலும்..

"போற்றவும் வேண்டா 
தூற்றவும் வேண்டா
சரிசமமாய் நடத்தப்படுவதெப்போ?''
முனைவர் அண்ணா கண்ணனின் "உச்சம் அடம் ஞானம் உயிர்ப்பு" என்ற கவிதைத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையின் சில வரிகள் குங்குமம் இதழ் சென்ற வருடம் மகளிர்தின சிறப்பாக வெளியிட்ட 'பிடித்த பெண் மொழிக்கவிதை' பகுதியில் வெளியாகியிருந்தது.. அண்ணா கண்ணனின் அத்தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த இன்னொரு கவிதையை அவரது தளத்திலேயே வாசிக்கலாம்.
குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு முன் அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் தன்னுள்ளேயே எழுப்பப்பட்ட கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார். ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளும் அப்படித்தான். இதற்கு மட்டும் ஜாதி, இன, மத, நாடு வேறுபாடுகளே கிடையாது. ஏதாவதொரு அளவில் எல்லா நாடுகளிலும் ஏதாவதொரு வகையில் அவள் வன்முறைக்குள்ளாகிக்கொண்டே இருக்கிறாள். ஆகவேதான் துணிந்து எதிர்க்குரலெழுப்பும் பெண்களையும், 'இதென்ன ஊர்ல நடக்காததா? வீட்டுக்கு வீடு வாசப்படி. பொம்பளைன்னா பொறுத்துத்தான் போகணும்" என்று சுலபமாக அடக்கி விடுகிறார்கள். உட்செலுத்தப்படும் காற்றின் அழுத்தம் அதிகரித்துக்கொண்டேபோகும்போது சட்டென்று வெடித்துவிடும் பலூனைப்போல் ஒரு கட்டத்தில்  அவள் வெடித்தெழும்போது இவளால் என்ன செய்து விட முடியும் என்று அலட்சியமாக அதுகாறும் ஆதிக்கத்துக்குட்படுத்தி வந்த கூட்டம் திகைத்துத்தான் போய் விடுகிறது.

முற்காலம் போல் தற்சமயம் எல்லாப்பெண்களும் கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அடுத்தவர்களின் கருத்துகளுக்குத் தலையாட்டுவதில்லை. அன்பினால் சிலர் கட்டுண்டிருந்தனர் என்றால் தங்களது சுயநலத்திற்காக அவர்களைச் சிந்திக்கத்தெரியாதவர்களாய்,  எல்லாவற்றிற்கும் தங்களையே சார்ந்திருக்கும்படி ஆக்கியிருந்தவர்களிடம் சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். இதனால் தங்கள் வாழ்க்கை, பொருள், நிம்மதி என்று தொலைத்தவர்களும் அதிகமே. இப்பொழுதோ பெண்கள் நல்லது கெட்டதை சுயமாகச்சிந்திக்கிறார்கள், திருமணம் போன்ற தங்கள் வாழ்க்கை முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு முன்னை விட பொறுப்பும் அதிகரித்திருக்கிறது.

பெண்களின் நிலை எந்தளவு மேம்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு முறை அலசும்போதும், பெண்சிசுவை வெறுத்தல், வரதட்சணைக்கொடுமை, பொருந்தாத்திருமணங்களினால் ஏற்படும் பிரச்சினைகள் போன்ற அம்சங்களில் பெரிதாக மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை என்ற நிலையே தெரிகிறது. வரதட்சணை கேட்கும் தாயை மகன் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது ஒரு பக்கம் என்றால் அப்படித்தடுக்கும் மகனை தாயே கடுஞ்சொற்கள் கூறியும், பயமுறுத்தியும் பணிய வைப்பதும் நடக்கத்தான் செய்கிறது. பெண் பிறந்தால், 'என் பிள்ளை பாரம் சுமக்க வேண்டி வருகிறதே' என்று புலம்பும் மாமியார்கள் அதே பிள்ளைக்கு திருமணத்திற்காகப் பெண் தேடி அலைந்த சரித்திரத்தையெல்லாம் வெகு வசதியாக மறந்தே விடுவார்கள். இதில் பெண்ணின் நிறம் கருப்பாக இருந்தால் அவ்வளவுதான்.. மனச்சித்திரவதை செய்தே அவளைச் சாகடித்து விடுவார்கள். சமீபத்தில் கூட குமரி மாவட்டத்தில் தன்னை கருப்பாக இருப்பதாக அடிக்கடி இடித்துக்கூறி வந்த கணவனின் கொடுமை தாங்க மாட்டாமல் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.

அடுப்பங்கரையிலேயே அடைந்து கிடந்த பெண்கள் வெளியே வந்து சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பது என்பது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அப்பெருங்கல்லைப் புரட்டிக்கொடுக்கும் நெம்புகோலாக இருந்த பெண்கள் எத்தனையோ பேர். குடும்பம், வேலை என்று இரட்டைச்சுமையுடன் சிரமப்பட்டபோதிலும், பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக நிற்கும் காலகட்டத்தில் வாழ நேர்ந்த போதும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகள் புரிந்து சிகரங்கள் தொடுகிறார்கள் பெண்கள். அவர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அப்படியென்றால் காலம் மாறவேயில்லையா?.. நிச்சயமாக மாறுகிறது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக... பெண்களுக்கு திருமணப்பத்திரிகையில் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொள்ளவோ, அல்லது வேலைக்குப்போய் சம்பாதிக்கவெனவோ வெறும் ஏட்டுக்கல்வியை மட்டும் அளிக்காமல் தற்காப்புக்கலை, தன்னம்பிக்கை, தனக்கு நேரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம், அவற்றை நல்ல முறையில் தீர்க்கும் அறிவு என்று அனைத்தும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்பட வேண்டும். சில இடங்களில் படித்த பெண்களை விட படிக்காதவர்களே தைரியமாக தங்களுக்கு நேரும் அநியாயத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்கள். தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.
வால்: பிடித்த பெண்மொழிக்கவிதையையும், சாரல் துளியையும் வெளியிட்ட குங்குமம் இதழுக்கு நன்றி.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்..

5 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகளிர் தின நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

மகளிர் தின நல்வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். மகளிர் தின வாழ்த்துகள்!

RAMVI said...

//தலையெழுத்து என்று முடங்குவதை விட்டு தங்களது நியாயமான உணர்வுகளை பெண் எப்போது வெளிப்படுத்துகிறாளோ, அப்போது நிச்சயமாக செவிகள் திறந்தே தீரும். அப்படித்திறக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருப்போம்.//
மிக அருமை. சிறப்பான பதிவு.
வாழ்த்துக்கள்.

பரிவை சே.குமார் said...

அருமை.
மகளிர் தின வாழ்த்துக்கள் அக்கா...

LinkWithin

Related Posts with Thumbnails