Wednesday, 4 July 2018

பிரம்ம கமல் என்ற நிஷாகந்தி.

இந்த வருடம் பூத்த முழு மலர்
இலையின் ஒரு துண்டை நட்டு வைத்து, செடி வளர ஆரம்பித்த நான்கு வருடங்களுக்குப் பிறகு, ஆண்டுக்கொரு முறை மட்டும் அதுவும் முன்னிரவில் மலர ஆரம்பித்து இரவில் நன்கு மலர்ந்து விடியுமுன் வாடிவிடும் ஓர் அரியவகை மலர்தான் பிரம்மகமல். மனதை மயக்கும் நறுமணம் கொண்ட இம்மலர் நிஷாகந்தி எனவும் அழைக்கப்படுகிறது. Epiphyllum oxypetalum என்ற தாவரவியல் பெயராலும், Dutchman's pipe cactus, queen of the night போன்ற பிற பெயர்களாலும் இது வழங்கப்படுகிறது. தெற்கு மெக்ஸிகோ மற்றும் தென்னமெரிக்காவைத் தாயகமாகக்கொண்ட இத்தாவரம் இப்பொழுது உலகெங்கும் விரும்பி வளர்க்கப்படுகிறது. 
சிறு மொட்டு
கேக்டஸ் அதாவது கள்ளி வகையைச் சேர்ந்த இச்செடியை வளர்க்க அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. வாரமிரு முறை நீர் ஊற்றினால் போதுமானது. தாய்த்தாவரத்திலிருந்து ஒரு முதிர்ந்த இலையைத் துண்டித்து மண்ணில் நட்டு விட்டால் போதுமானது. ஒரு இலையையே அதன் நீளத்தைப்பொறுத்து இன்னும் இரண்டு மூன்று துண்டுகளாக ஒடித்து அவற்றை நட்டு வைத்தால் அவையும் தனிச்செடிகளாக வளர்ந்து விடும். நட்டு வைத்த இலையிலிருந்தே பக்க இலைகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். நன்கு வேர் பிடித்து வளர ஆரம்பித்த பின் செடியை ஒட்டினாற்போல் குச்சி போன்று ஒல்லியான நீளமான முதன்மைத்தண்டுகள் தோன்றி வளர ஆரம்பிக்கும். முதன்மைத்தண்டின் நுனி, தட்டையான இலையைக் கொண்டிருக்கும். 
சற்றே வளர்ந்த மொட்டு
பிரம்மகமல் செடி இரண்டு மீட்டர் உயரத்திற்குக் குறையாத முதன்மைத்தண்டையும், 30 செ.மீ அளவு வரை நீளமாக வளரக்கூடிய பக்க இலைகளையும் கொண்டது. இதன் இலைகள் அலைபோல் நெளிநெளியான புறக்கோட்டைக் கொண்டவை. இக்கோடுகளிலிருந்துதான் மொட்டுகள் தோன்றும். புறக்கோடுகளிலிருந்து தொப்புள்கொடி போல் நீண்டு வளர்ந்த பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் தாமரை வடிவிலான மலர், விஷ்ணுவின் உந்தியிலிருந்து தோன்றிய பிரம்மா தாமரைமலரில் அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையொத்திருப்பதால் இப்பூ பிரம்மகமல் எனப்பெயர் பெற்றது. 30 செ.மீ நீளமுள்ள பூக்காம்பின் நுனியில் பூத்திருக்கும் பிரம்மகமல் பூக்கள் 17 செ.மீ அகலம் கொண்டவை. மழைக்காலமான ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில்தான் இது பூக்கும்.
பூக்கும் நாள் நெருங்குகிறது
மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது ஓர் அபூர்வ மலர் மட்டுமல்ல, தெய்வீக மலரும் கூட. தன் வீட்டில் வளர்க்க விரும்பி யாரேனும் இலையைக் கேட்டால் கொடுக்க மாட்டார்கள். அப்படிக்கொடுத்தால் அதிர்ஷ்டம் தன்னை விட்டுப் போய் விடுமென்று ஓர் நம்பிக்கை இங்கே நிலவுகிறது. ஆகவே பிறர் அறியா வண்ணம் யாருடைய தோட்டத்திலிருந்தாவது கொண்டு வந்துதான் வளர்க்க வேண்டும் என்பார்கள். ஒரு வீட்டில் பிரம்மகமல் பூப்பதென்பது அதிர்ஷ்டத்தைக்கொண்டு வரும் ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. இது பூக்கும்போது அருகிலிருப்பது அதிர்ஷ்டம் என்றும் அவ்வாறு அருகிலிருக்கும்போது வைக்கப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் கருதப்படுகிறது. தெய்வீக மலராகக் கருதப்படுவதால் இதைப் பறிக்க மாட்டார்கள். ஆண்டின் முதல் பூவுக்கும், செடியில் முதன்முதலாகப் பூக்கும் பூவுக்கும் தூபதீபம் காட்டி வழிபடுவார்கள். 
முழுமையடைந்த மொட்டு
மகளின் தோழி மனமுவந்து கொடுத்ததன் மூலம் இச்செடி எங்கள் வீட்டில் நுழைந்தது. நட்டு வைத்து நான்கு வருடங்களுக்குப் பின் மொட்டு விட்டபோது எங்கள் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மினியேச்சர் வாழைமொட்டு போல் தோன்றி தாமரை மொட்டு அளவில் வளரும் வரை தினமும் அதன் வளர்ச்சியைக் கண்டு ரசித்தோம். பூமியை நோக்கி வளர்ந்த மொட்டு ஒரு சமயம் யூ டர்ன் போட்டு வானத்தை நோக்கி வளைந்து வளர ஆரம்பித்தது. மொட்டு அப்படி வளைந்து வளர ஆரம்பித்தால் பூக்கும் நாள் நெருங்கி விட்டதென அர்த்தமாம்.  ஒரு நாள் மாலை, உள்ளிருந்து வெள்ளை நிற இதழ்கள் மெல்லத் தலை காட்டின. அங்கிங்கு நகராமல் அருகிலேயே அமர்ந்து பூவொன்று மலர்வதைப் படிப்படியாகக் கண்டு ரசித்தோம். சாயந்திரம் ஆறு மணிக்கு மேல் மெல்ல இதழ் விரிக்க ஆரம்பித்து ஒன்பது மணியளவில் சிறிய வெண்டாமரையொன்று முழுவதுமாய் மலர்ந்திருந்தது. வீடு முழுவதையும் சூழ்ந்திருந்தது அதன் நறுமணம். தொட்டாலே வாடிவிடும் மென்மையான இதழ்கள் கொண்டவையாய்த் திகழ்ந்தது அம்மலர். கைச்சூடு கூட தாங்காது எனக் கேள்விப்பட்டிருந்ததால் தொட்டு ரசிக்கத் துணியவில்லை. முதற்பூவை பூஜித்தோம். அதன் பின் அந்த சீசனிலேயே குறைந்தது நான்கு பூக்களாவது பூத்தன. அதன் பின் ஆண்டு தோறும் பூக்க ஆரம்பித்தது. 
மலரத்தயாராக
சில காரணங்களுக்காக வீட்டை இடமாற்றம் செய்ய நேர்ந்தபோது, ஷிப்டிங் வசதிக்காக செடியில் கொஞ்சம் இலைகளை வெட்டி ட்ரிம் செய்தேன். அவ்வளவுதான்.. பூப்பது நின்று போனது. அப்படிச்செய்யக்கூடாதாம், இலைகள் தானாகவே காய்ந்து உதிர வேண்டுமாம். அடக்கடவுளே!! இது தெரியாமல் போய் விட்டதே என நொந்து கொண்டு மறுபடி எப்போ பூக்குமோ என எல்லாக் கோட்டையும் அழித்து விட்டு முதலிலிருந்து காத்திருக்க ஆரம்பித்தேன். இதோ.. நான்கு வருடங்களுக்குப் பின் இந்த சீசனின் முதற்பூ பூத்திருக்கிறது.
இது சிலவருடங்களுக்கு முன் பூத்தது.
இரவு முழுவதும் மலர்ந்திருக்கும் இப்பூக்கள் பிரம்ம முஹூர்த்த காலத்துக்குப்பின், அதாவது விடியலில் கூம்பி மறுபடியும் மொட்டு போல் தோற்றம் கொள்கின்றன. அதேபோல் தண்டும் படிப்படியாகத் தளர்ந்து துவண்டு விடும். அ ந் நிலையில் நான்கைந்து நாட்கள் செடியிலேயே இருந்தபின் தண்டுப்பகுதி மெல்ல மெல்ல பழுத்து வெளிர் மஞ்சள் நிறம் கொள்ள ஆரம்பிக்கும். இது உதிரப்போகும் அறிகுறியாகும். தண்டு முழுவது மஞ்சள் நிறமானதும் ஓரிரு நாட்களில் காய்ந்து வற்றிச் சுருங்கி செடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு பந்தத்தை முடித்துக்கொள்ளும். 
மலர்ந்து மணம் பரப்பிய மறுநாளில்
சில வருடங்களுக்கு முன் தம்பி வீட்டில் பூத்தவை
செடி நடப்பட்டு நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பிக்கும். ஆகவே பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். ஆனால், என் வீட்டிலிருந்து பெங்களூருக்கு இலைத்துண்டைக் கொண்டு சென்று நட்டு வைத்து வளர்த்த தம்பி வீட்டில் ஒரு வருடத்திலேயே பூக்க ஆரம்பித்து விட்டது. அங்குள்ள சீதோஷ்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுவும் ஒரே தடவையிலேயே பத்துக்கும் மேற்பட்ட பூக்கள் பூத்திருந்தன. உண்மையிலேயே அரிய மலர்தான்.

3 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷாந்தி,
ப்ரம்ம கமலத்தின் வரலாறு அதன் தோற்றத்தைப் போலவே
உங்கள் எழுத்தில் வெகு அழகாக மலர்ந்திருக்கிறது.

இங்கே கிடைக்குமா என்று தெரியவில்லை.
எங்கள் சிங்கம் இருந்திருந்தால் இங்கே கொண்டு வந்திருப்பார்.

மிக நன்றி ஷாந்தி இந்தப் பதிவிற்கு. வாழ்க வளமுடன்.

Anuradha Premkumar said...

அரிய தகவல்களுடன்...மிக அழகிய படங்கள்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

அனுராதா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails