Wednesday, 28 July 2010

கண்ணாடி....


நம்ம தென்றல் தொடர்பதிவுக்கு கூப்பிட்டு கொஞ்ச நாள் ஆயிடுச்சு. இனியும் தள்ளிப்போட்டேன்னா.. புயலாயிடுவாங்க. ஆகவே..
ஆட்டம் ஆரம்பம்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

அமைதிச்சாரல்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

கிட்டத்தட்ட மாதிரிதான். தமிழ்ப்படுத்தியிருக்கேன்.. பேரு யோசிக்கும்போது காசை சுண்டிவிட்டேன். பூ விழுந்தா பூப்பாதை(சொந்தப்பேரு),தலை விழுந்தா சிங்கப்பாதை(புனைப்பேரு). அது என்னடான்னா ஓடிப்போயி சிஸ்டம் இருக்கிற டேபிளுக்கு கீழே போயி தூங்கிடுச்சு. என்னடா செய்யறதுன்னு யோசிச்சேன்.எனக்கு மழை பிடிக்கும்.. அதுவும் அடிச்சிப்பெய்யுற மழையை விட மெல்லிய சாரல் ரொம்பப்பிடிக்கும். அதனால அந்தப்பேரு.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
பொழுதுபோகாத ஒரு நாள்லதான் கூகிள்ல தமிழ்வார்த்தைகள் வர்றதை கண்டுபிடிச்சேன்.. அது என்னடான்னா துளசிதளத்துக்கு கொண்டுபோய் விட்டது. 'வாங்களேன்.. கேக் சாப்புடலாம்'ன்னு கூப்பிட்டு துளசியக்கா விருந்து வெச்சாங்க. அப்புறம் அங்கியே செட்டிலாயிட்டேன்.. மறுபடி கண்டுபிடிக்கத்தெரியாம ரெண்டுமூணு நாள் முழிச்சது தனிக்கதை. கடைசியில் கூகிள் அண்ணாச்சி கண்டுபிடிச்சுக்கொடுத்தார். மொதல்ல தமிழ்மணம் இருக்கிறது தெரியாது.. இடுகைகளுக்கு பின்னூட்டம் வரும்ன்னும் தெரியாது.. ஏன்னா.. நான் எப்பவும் ஹோம்பேஜ்ல போயில்ல நிப்பேன்.. கடைசியா பொடி எழுத்துக்கள்ல .. comments ன்னு எழுதப்பட்டிருப்பதை கண்டுபிடிச்சேன். அவங்களோட தமிழக சுற்றுலாப்பதிவுகளை படிக்கும்போதுதான், பின்னூட்டம் போட ஆரம்பிச்சேன்.அப்ப 'ஐம்கூல்' என்ற பேர்ல பின்னூட்டம் போடுவேன். கொஞ்சம் கொஞ்சமா தமிழ்மணம் பக்கமும் வர ஆரம்பிச்சேன். ரொம்ப நாளுக்கப்புறம் சொந்தவூடு கட்டலாம்ன்னு முடிவெடுக்கும்போதுதான் கெட்டப்பை கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு இந்தப்பேரு. இன்னும் கொஞ்சம் இங்கே சொல்லியிருக்கேன்.அக்காவுக்கு லாரி அனுப்ப யோசிக்கிறவங்க அது நெறைய ரோஜாப்பூவை அனுப்பிவையுங்க, முட்களை எம்பக்கம் அனுப்பிவிடுங்க :-)))

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மொதல்ல நான் பிரபலம் இல்லைன்னு உங்ககிட்ட சொல்லிக்கிறேன்.. இதுலேர்ந்தே தெரியும்.. நான் ஒண்ணும் செய்யலைன்னு.. பதிவை ஆரம்பிச்சு குடிபோகும்போது நாலஞ்சு பெரியவங்களுக்கு அழைப்பு வெச்சதை இதுல சேர்த்துக்கக்கூடாது :-))).

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நம்ம வலைப்பக்கத்துக்கு வந்தவங்களுக்கு தெரியும். அங்க ஓரளவு, சொந்தக்கத, சோகக்கதையெல்லாம் இருக்கும்ன்னு.. என்னுடைய அனுபவங்களில் எனக்கு படிப்பினை கிடைச்சிருந்தா அதப்பத்தி எழுதலாம்தானே.. மத்தவங்களாவது உஷாரா இருந்துப்பாங்கல்ல. ஏதாவது சுவாரஸ்யமா இருந்தா அதை நண்பர்களோட பகிர்ந்துக்கப்பிடிக்கும். அதனால எழுதுறதுண்டு..பதிவின் தலைப்பிலேயே சொல்லிட்டேனே "நினைத்ததெல்லாம் கிறுக்குவேன்" அப்படீன்னு. விளைவுகள்??? அப்படீன்னா என்னங்க :-))))

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிறைய சம்பாதிச்சிருக்கேன்..அதவெச்சு,மும்பையின் கொலாபாபகுதியில் வில்லா வாங்கிப்போடணும்ன்னு திட்டம்.எவ்வளவுன்னு சொன்னா ஐ.டி.லேர்ந்து ஆட்கள் வந்துடுவாங்க.:-))))). இப்படீல்லாம் சொல்லுவேன்னு நினைச்சீங்களா... நான் சம்பாரிச்சது ஓரளவு தன்னம்பிக்கையை.. நிறைய நட்புகளை, கொஞ்சூண்டு எழுத்தை.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணு உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச 'அமைதிச்சாரல்'.

தனியா தொகுக்க வசதியா 'கவிதை நேரமிது'

பேரண்ட்ஸ் கிளப்பிலும் இருக்கேன்.

எனக்கு கொஞ்சம் பாட்டுக்கிறுக்கு உண்டு. அதுக்காக ஆரம்பிச்சது குயில்களின் கீதங்கள். கொஞ்சம் டெக்னிக்கல்கோளாறுகளால் அப்டேட் செய்யாம இருக்கு.. (தமிழ்மணத்தில் இணைக்க முடியலை)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமும் பொறாமையும் ஒரு நாளும் இருந்ததில்லை.. பிரமிப்பு மட்டுமே உண்டு.. அந்த லிஸ்டில் நிறைய பேர் இருக்காங்க.
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

முதல்பின்னூட்டம் போட்ட சகோ எல்.கே,ராமலஷ்மி மேடம், துளசியக்கா, வல்லிம்மா,முத்தக்கா, அப்புறம் இப்ப பின்னூட்டத்துல பாராட்டுற நீங்க வரைக்கும் பெரிய லிஸ்டே இருக்குதே.. எதைன்னு சொல்ல!!! என் உடன்பிறப்பு ஒருத்தர், 'அமைதிச்சாரல்ன்னு பேரு வெச்சிக்கிட்டு அட்டூழியம் செஞ்சுக்கிட்டிருக்கே.. நல்லா எழுதறேக்கா' ன்னு தொலைபேசினார். இன்னிவரைக்கும் அது பாராட்டா.. உள்குத்தான்னு தெரியலை? :-)))))))))

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நானே என்னைப்பத்தி என்ன சொல்றது..என் எழுத்துக்கள் சொல்லட்டுமே..(அப்படி ஒண்ணு நான் போடுற மொக்கையில் இருக்கா என்ன???)
:-))))))

இதை தொடர நான் அழைப்பது,என்றும் அன்புடன்..

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்,

அமைதிச்சாரல்.


Thursday, 22 July 2010

வாங்கோ.. வாங்கோ..

என்னைய வளர்க்குற நைனாவும், நான் வளர்க்கிற மைனாவும் ஒரு விஷயத்துல ஒத்துமையா இருக்காங்க..

எப்படிடா!!!!

எப்ப என்னைய பாத்தாலும், ஒடனே கத்த ஆரம்பிச்சுடுறாங்க.

***********************************************************************************

தோசை, சட்டுவத்தைப்பார்த்து பஞ்ச் டயலாக் அடிச்சா என்ன சொல்லும்?..


' நா.. எப்ப வருவேன்.. எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்..

சட்டுவம் திருப்பிச்சொன்னது," அதிகமா டயலாக் பேசுனே.. பிச்சுப்புடுவேன் பிச்சி".

********************************************************************************
கற்றதனாலாய பயன் என்கொல் இண்டர்னெட்டில்
வலைப்பதிவு எழுதா விடின்.

ப்ளாக் எழுதி வாழ்வாரே பதிவர் மற்றவரெல்லாம்
வாசகரென்று அறியப் படுவர்.

கமெண்டென்ப ஏனை ஓட்டென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வலைப்பதி வாளருக்கு..

அகர முதல எழுத்தெல்லாம் தமிழ்
எழுதியில் எழுதிப் பழகு.

நாங்களும் எழுதுவம்ல வலைக்குறள்..(வசந்து தம்பி கோச்சுக்க மாட்டீங்கதானே)

*********************************************************************************

பெட்ரோலே இல்லாம ஓடுற காரு எது தெரியுமா?..

கங்காரு.

*********************************************************************************
அஞ்சு லட்சம் நட்சத்திரங்கள் வானத்துல இருக்குன்னு சொல்லுங்க.. கேள்வியே கேக்காம ஒத்துக்குவாங்க. அதுவே,' இந்த பெஞ்சில் அடிச்சிருக்கிற பெயிண்ட் ஈரமா இருக்குன்னு சொல்லுங்க.. தொட்டுப்பாத்தாத்தான் நம்புவாங்க".. ஏங்க இப்டி?..


***********************************************************

இஞ்சினீயரிங்க் காலேஜில் படிச்சா இஞ்சினியர் ஆகலாம்.. ப்ரெசிடென்சி காலேஜில் படிச்சா ப்ரெசிடெண்ட் ஆகலாமா?...

********************************************************************************

ஒரு ஆமையும் முயலும் நுழைவுத்தேர்வு எழுதின. ஆமைக்கு 75%ம், முயலுக்கு 80%ம் கிடைச்சது. ஆனாலும் ஆமைக்குத்தான் வேலை கிடைச்சது. ஏன்ன்ன்ன்?..

ஆமைக்கு வேலை கிடைச்சது 'ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல'.. ரெண்டுக்கும் பந்தயம் நடந்து ஆமை ஜெயிச்ச கதை நினைவிருக்கா!!

********************************************************************************

எதிரி மன்னன் புதுவிதமா நம்ம மன்னரை தோற்கடிச்சிட்டானா... எப்படி?

புறா காலில் 'சுறா' படத்துக்கான டிக்கட்டை கட்டி அனுப்பியிருக்கான்..

********************************************************************************

Photobucket என்னோட சிஸ்டம் ப்ரோக்ராமில் bug இருக்கிறதா அடிக்கடி மெஸேஜ் வருது.. ஏதோ ஒரு ஈமெயில் வழியா வந்திருக்கு. எப்படி சரிசெய்றதுன்னு தெரியலை.உதவி ப்ளீஸ்...
(thanks net for the picture).

********************************************************************************
ஒரு நாள் 'டோமினோஸ்' க்கு ஒரு போன் கால் வந்தது.
பணியாளர்: ஹலோ டோமினோஸ்.. வாட் கேன் ஐ டூ ஃபார் யூ?..

வாடிக்கையாளர்: "--------"

பணியாளர் : "&^%##@(!@%#*/+##"

சக பணியாளர் : என்னப்பா ஆச்சு.. ஏன் இவ்வளவு கோவமா திட்டுறே?..

பணீயாளர் : நல்ல பிஸ்ஸா சாப்பிடணும், pizza hut டோட நம்பர் கிடைக்குமான்னு கேக்குறார்..


Friday, 16 July 2010

குழந்தைகள் பலவிதம்..அந்த நீளமான கம்பியில் கைகளை கோர்த்துக்கொண்டு உடலையே ஊஞ்சலாக்கி ஆடிக்கொண்டிருந்தது அந்தக்குழந்தை. உற்சாகமிகுதியில் பாட்டு வேறு :-)).. வீசி வீசி ஆடும்போது, விலைமதிப்பில்லாத எதுவோ கிடைத்துவிட்ட சந்தோஷப்புன்னகை அதன் முகத்தில். நிம்மதி.. நிம்மதி என்று அலைபவர்கள் இந்தக்குழந்தையின் புன்னகையில் அதைக்கண்டுபிடிக்கலாம்.

ஆடிக்களைத்து விட்டதோ என்னவோ, 'தொப்' என்று கீழே குதித்தது. தவறி புல்வெளியில் விழுந்ததும் என்னவோ பெரிதாக அடிபட்டமாதிரி, 'ஆஆஆ' என்று பெரும் குரலெடுத்து கண்ணீர் வராமல் அழுதது. யாரும் கவனிக்கவில்லை என்றதும், தானே எழுந்து, இல்லாத மண்ணை தட்டிவிட்டுக்கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தது. ஒரு ஆள் உயரத்தில் நட்டு வைத்திருந்த, வரிசையாக இருந்த கம்பிகளில், டார்ஜான் போல் தன்னை நினைத்துக்கொண்டு, வினோதமான சப்தம் எழுப்பிக்கொண்டு அங்குமிங்கும் கைகளாலேயே பற்றிக்கொண்டு தொங்கியபடியே தாவியது. பக்கத்தில் தன்னுடைய வயதுள்ள குழந்தையும் இன்னொரு அங்கிளும் நிற்பதை பார்த்ததும் அதனுடைய விளையாடும் வேகம் அதிகமானது. 'நான் எவ்வளவு சிறப்பாக விளையாடுகிறேன் பார்' என்று காண்பிப்பதுபோல் இருந்தது அதன் நடவடிக்கைகள். ஓரக்கண்ணால் அந்தக்குழந்தை இன்னும் அங்கேயே நிற்கிறதா.. இல்லை,.. ஆளில்லாத கடையில் டீ ஆத்துகிறோமா என்று உறுதிப்படுத்திக்கொண்டது அவ்வப்போது :-)

யாருமில்லாத தனிமையில் விளையாடும் குழந்தைகளை கவனித்திருக்கிறீர்களா?.. அதற்கு அதைச்சுற்றிலும் இருக்கும் எல்லாமே, விளையாட்டுப்பொருட்கள்தான். அது வீசும் காற்றாகவும் இருக்கலாம், தோட்டத்திலிருக்கும் செடியாகவும் இருக்கலாம், ஏன் வீட்டிலிருக்கும் பண்டபாத்திரங்களாகவே இருக்கலாம். தன்னுடனேயே பேசி, சிரித்து, சண்டைபோட்டு.. சமாதானமாகி என்று ஒரு காவியமே நடக்கும். யாரும் கவனித்துவிட்டால் ஒரு வெட்கப்புன்னகையுடன் பதுங்கி, மறுவினாடியே பழைய வேகத்துடன் பாய்வது நடக்கும் :-) நிமிடத்தில் சண்டையிட்டு, பின் அதே வேகத்தில் சமாதானமாகும் வித்தையை, எங்கிருந்துதான் கற்றுக்கொள்கிறார்களோ இந்த ஆசான்கள்!!!.

எங்கிருந்தோ வந்த அந்த சினிமாப்பாடல் அதற்கு பிடித்ததாக இருந்திருக்க வேண்டும்.. மெலிதான நடனத்துடன் அதன் உடல் அசைய ஆரம்பித்தது. தன்னையே அந்த கதாநாயகியாக நினைத்துக்கொண்டு, லேசாக ஆட ஆரம்பித்த குழந்தையின் கவனத்தை ஊஞ்சலும் அதில் வரைந்திருந்த யானைகளும் கவர்ந்தன. யானைகள் வானில் பறப்பதை இனிமேல் யாரும் பார்த்தால் அதிசயப்படவேண்டாம். அவற்றுக்கெல்லாம் விடுதலையையும், சிறகுகளையும் அந்த சிறுகுழந்தை அளித்துவிட்டது.

'டமடம' என்று அதிர்ந்த இடி அந்தக்குழந்தையை பயப்படுத்தி இருக்கக்கூடும். திடுக்கிட்டு கைகளை இறக்கைகளாக விரித்தபடி எழுந்து, அம்மாவைத்தேடியது. அடுத்தடுத்த இடிகள், ' அம்மா.. அம்மா..' என்று அலறின. புல்வெளியில் காணோம்.. பெஞ்சுகளில் காணோம்.. நடைபாதையில் கூட காணவில்லை. பார்க்கும் முகங்களில் எல்லாம் அம்மாவைத்தேடியது அந்தக்குழந்தை. 'நீ எங்கே போனே!!' தனிமை பயம் கொடுத்தது.. பலூன் விற்கும் மாமாவின் அருகே நின்ற ஒரு புடவையை நோக்கி ஓடிச்சென்று, அவள் முழங்காலைக்கட்டிக்கொண்டு சிரித்தது..

உலகத்திலேயே மிகவும் சிரமமானது டீச்சராக இருப்பதுதானாம்... நாலுவயசு மனிஷா சொல்கிறாள். மூன்று தலையணைகள், இரண்டு பாத்திரங்கள் மற்றும் எட்டுமாதமாகும் சார்மிஷாவுடன் ஆரம்பமாகும் அவளது வகுப்பில், யாருக்குமே a,b,c,d, சொல்லத்தெரியவில்லையாம்!!!. நாலுமாதமாக படித்தும்கூட, என்ன கேள்வி கேட்டாலும், 'ஈ..' என்று மட்டுமே சொல்லத்தெரிகிறதாம் சார்மிக்கு. 'அதைச்சொல்லும்போது வாய் ஏன் இந்தக்காதுக்கும் அந்தக்காதுக்குமாக விரிய வேண்டும்??' என்பது மனிஷாவின் கேள்வி..

'நான் போயி தண்ணி குடிச்சிட்டு வர்றேன்.. அதுவரை யாரும் அசையப்புடாது.. யாராவது எந்திரிச்சிப்போனா அடி' என்று எச்சரிக்கப்பட்டும், சார்மி அதை மீறுவதாக குற்றச்சாட்டு பெற்றோர்களுக்கு போயிருக்கிறது. அவளது மற்ற ஸ்டூடன்ஸ், ரூல்ஸை கொஞ்சமும் மீறுவதில்லை என்பதில் அவளுக்கு மகா பெருமை. யாரும் படிக்க இஷ்டப்படாமல் டீச்சரை ராகிங் பண்ணினால்,' உங்களுக்கு டீச்சரா இருக்கிறதை விட நான் ராஜினாமா செஞ்சுடலாம்'ன்னு சொல்லிட்டு கலர்டவல்களை சுருட்டி வைத்துக்கொண்டு, 'கனகாம்பரம்.. சம்பங்கி, ரோஜா.. பூவு.. பூவு' என்று, என் பெண் சின்னவயசில் செய்தது மாதிரியே, அவளும் பூவிற்கப்போய்விடுவதுண்டு :-))

குழந்தைகளின் விளையாட்டை கவனிப்பதென்பது, பால்யத்துக்கே திரும்பப்போய்விடுவதைப்போல் இருக்கிறது. நிபந்தனைகளற்ற மிகப்பிரியமான அன்பும், விட்டுக்கொடுத்தலும் நிறைந்த தனிஉலகத்தில் அவர்கள் வளையவருகிறார்கள். அது அப்படியே இருக்கவேண்டும்..
Monday, 12 July 2010

ஓடமும் ஓர் நாள்...

"என்னா வெயில்.. மனுசன் வெளியில தலைகாட்ட முடியலை. மக்கா... வீட்டுலதான் இருக்கியா?.." குரலைக்கேட்டதும் சமையலறையிலிருந்தே யாரென்று எட்டிப்பார்த்தேன்.. அட.. செல்லம்மக்கா. செருப்பை வாசலில் கழட்டி விட்டுவிட்டு, வியர்த்திருந்த முகத்தை சேலைமுந்தானையால் துடைத்துக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்துகொண்டிருந்தார்.

"அடடே.. வாங்கக்கா, ரெண்டு வாரமா ஆளையே காணலியே!! ஊருல இல்லியா?" என்றவாறே ஃபேனைப்போட்டுவிட்டு ,"உக்காருங்கக்கா" என்றேன். அப்படியே மகன் பக்கம் திரும்பி," மக்ளே,.. ஓடிப்போயி முக்குக்கடையில அத்தைக்கு போஞ்சி வாங்கிட்டு வந்துரேன்" என்றேன். " அப்படியே, போயிலை வெச்சு ஒரு வெத்திலையும் வாங்கிட்டு வந்துரு மக்கா" என்றபடியே சோபாவில் அமர்ந்துகொண்டார்.

செல்லம்மக்கா என்ற செல்லம்மா எங்களுக்கு உறவில்லை.. ஆனால், உறவு மாதிரி. இந்த ஊருக்கு வந்தபுதிதில் எங்கள் பக்கத்துவீட்டில்தான் இருந்தார். வந்த கொஞ்ச நாளிலேயே தாயும் பிள்ளையுமாய் பழகிவிட்டோம். நாலுமாசத்துக்கப்புறம் மகனுக்கும் கல்யாணமாகி, வேலையும் மாற்றலானபோது, பக்கத்து ஊரில் இருந்தால் வேலைக்கு போய்வர சௌகரியமாக இருக்குமென்று, வீட்டை மாற்றிக்கொண்டு சென்றுவிட்டார்கள். ஆனாலும் பழகிய பழக்கத்தை மறக்காமல் அவ்வப்போது இந்தப்பக்கம் வந்து, எல்லார் வீட்டிலும் நலம்விசாரித்து செல்வார். அப்படியே, முதல்தடவை வந்தபோது கிடைத்த ஆர்டருக்கேற்ப, அப்பளம், வடகம், கூழ்வற்றல் போன்றவற்றை செய்து எடுத்து வந்து கொடுப்பார். கடைகளில் கிடைப்பதைவிட சகாயமாகவும், சுத்தமாகவும் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் அவர்கிட்டேயே வாங்குவது வழக்கம். 'செல்லம்மக்கா' என்றால் தெருவில் உள்ளவர்கள் அவ்வளவு மரியாதை, பாசம் வைத்திருந்தார்கள்.

" பழனிக்கு மக வீட்டுக்கு போயிருந்தேன்.. போனவாரமே வந்துருப்பேன், மக விடவே மாட்டேனுட்டா.. ஒரு மாசமாவது இருந்துட்டுத்தான் போகணும்ன்னு சொன்னா. ஒனக்கு தெரியாதா?.. நம்ம ஊரையும் ஆளுகளையும் விட்டுட்டு என்னால அவ்வளவு நாளு இருக்கமுடியாதுன்னுட்டு கிளம்பிட்டேன்.. சரி.. இதுல அம்பது அப்பளமும், ரெண்டுகிலோ கூழ்வத்தலும் இருக்கு, எடுத்து வெய்யி"

"ஆமா,.. இந்த உளுந்தங்கஞ்சிக்க மக தீயை வெச்சுக்கிட்டாளாமே.. நேத்துத்தான் எனக்கு தெரியும் பாத்துக்கோ.. அசல்ல கொடுத்தா அபாயம்ன்னு அக்காவீட்டுக்கே மருமகளா அனுப்பினானே..அப்படியுமா இந்தக்கதி!!" என்றவாறே வெத்திலையை வாயில் அடக்கிக்கொண்டார். செல்லம்மக்கா வாயில் வெத்திலையுடன் ஊர்வம்புகளையும் சேர்த்து மெல்ல ஆரம்பித்தார். உளுந்தங்கஞ்சி என்பது அவர் இட்ட பட்டப்பெயர். தெரிந்த மனிதர்களை, பட்டப்பேர் சொல்லி அழைக்கும் வாஞ்சைகலந்த நக்கல் அவருடையது.

" அது தலையெழுத்து.. மொதல்ல கட்டிக்கொடுத்து அஞ்சாவது மாசமே, அவன் ஆக்ஸிடெண்டில் போய்ச்சேர்ந்துட்டான். என்வீட்டுக்குன்னு பொறந்தவளை, அடுத்த வீட்டுக்கு அனுப்பினியே.. இப்பவாவது என்வீட்டுக்கு அனுப்புன்னு அக்காக்காரி மூக்கைச்சிந்தினதை பொறுக்காமத்தான், அவ மகனுக்கு கட்டி வெச்சார். அந்தப்பையன் என்னடான்னா, அதை அடிக்கடி குத்திக்காட்டி பேசியிருக்கான். பொறுக்க முடியாம அது போய் சேர்ந்துடுச்சு. விட்டுப்போன சொத்தும், சொந்தமும் திரும்ப கிடைச்சுடும்ன்னு மனக்கோட்டை கட்டிக்கிட்டிருந்த மாமியா, இப்போ உள்ளதும் போச்சேன்னு உக்காந்துக்கிட்டிருக்கா.. அது கெடக்குது, நீங்க இருந்து ஒருவாய் கஞ்சி குடிச்சிட்டுத்தான் போகணும்".

சாப்பிட்டுவிட்டு, மேலும் கொஞ்ச நேரம் அக்கம்பக்கத்து விஷயங்களை பேசிக்கொண்டு இருந்துவிட்டு, என் வீட்டிலிருந்து கிளம்பினார். மருமகளைப்பற்றி மகாபெருமை அவருக்கு. தேடிப்பிடித்தாலும் இப்படி ஒரு குணவதி கிடைக்கமாட்டாள் என்றே வாய்க்குவாய் சொல்லிக்கொண்டிருந்தார். 'கல்யாணமாகி மூணு வருஷமாச்சு.. வீட்டுல ஒரு தொட்டில் ஆடறதை பாத்துட்டேன்னா நிம்மதியா கண்ணை மூடிடுவேன். அதைத்தவிர வேற என்ன குறை எனக்கு?.. என் மருமக ..என் ராசாத்தி, என்னை தங்கம் மாதிரி தாங்குறா. அவளுக்காகத்தான் கோயில் கோயிலா போயிட்டிருக்கேன்' கிளம்பும் முன் சொன்னது ரொம்ப நேரம் என் தலைக்குள் ஒலித்துக்கொண்டிருந்தது.

அடுத்த வாரமே அவரை கோயிலில்வைத்து சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ' இன்னைக்கு பிரதோஷமுல்லா.. அதான் ஒரு எட்டு,.. கோயிலுக்கு வந்தேன், கடவுள் எப்போதான் கண்ணை திறக்கப்போறாரோ?.. ஹூம்.. நேரமாச்சு வாரேன்" என்று விரைந்து சென்றுவிட்டார். பாவம்.. முகமெல்லாம் வாடியிருந்தது.

அதற்கப்புறம் வேலைச்சுமைகள் அழுத்த, அவரைப்பற்றி மறந்தேபோனேன். பரீட்சைகளெல்லாம் முடிந்து விடுமுறைக்கு வந்திருந்த சொந்த பந்தங்கள், குழந்தைகள், எல்லோருக்கும் செல்லம்மக்கா செய்த அயிட்டங்கள் ரொம்ப பிடித்துப்போய்விட, பார்சல் கட்டும் வேலை சேர்ந்து கொண்டது. அக்காவும் வந்து ரொம்ப நாள் ஆனபடியால், நேரடியாக நானேபோய் வாங்கி வந்துவிடுவதென்று கிளம்பினேன். எப்பவோ ஒருமுறை வந்தது.. ' நீ எதுக்கு வெறுதா அலையுத.. நாந்தான் அப்பளம் கொண்டுட்டு வர சாக்குல உங்களையெல்லாம் பாக்க வந்துட்டுத்தானே இருக்கேன்' என்று தடுத்துவிடுவார்.

தேடிப்பிடித்து விலாசம் கண்டுபிடித்து, வீட்டை சென்றடையும் போது ஒரே கூச்சலும் குழப்பமுமாய் இருந்தது வீட்டுக்குள். ஒரு பெண்ணின் ஆங்காரமான கத்தலும் இன்னொரு பெண்ணின் கதறலும் கேட்டுக்கொண்டிருந்தது. வாசலில் ஒரு பத்துப்பதினைந்து பேர் கூடி நின்று, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தயக்கத்துடன் மெல்ல ஒரு பெண்ணின் தோளைத்தொட்டு, ' எக்கா.. இங்க என்ன கலாட்டா?' என்று கேட்டேன்.

" அந்த கொடுமைய ஏன் கேக்குறீங்க.. தங்கமும் வேண்டாம், வெள்ளியும் வேண்டாம் .. தங்கமான மருமக கிடைச்சாப்போறும்ன்னு தேடிக்கொண்டாந்தாங்க செல்லம்மக்கா. ஆனா,.. அவங்களுக்கு ஒரு தகரத்துக்குண்டான மரியாதையைக்கூட கொடுக்கிறதில்லை அந்தப்பொண்ணு. வயசான காலத்துல ஒரு வாய் கஞ்சி கூட ஒழுங்கா ஊத்தறதில்ல. பாவம், அந்தக்கா.. வெளியில எதையும் காட்டிக்காம, 'என்னையப்போல மகராணி உண்டுமா'ன்னு பொய்யா பெருமை பேசிக்கிட்டு,.. பசியை மறைக்க 'இன்னிக்கு விரதம்'ன்னு சொல்லிக்கிட்டு திரியுது. இப்படியும் உண்டுமா!!!" என்று நொடித்துக்கொண்டாள்.

ஒரு நொடி உலகமே தட்டாமாலை சுற்றுவது போலிருந்தது.இங்க கிடந்து கஷ்டப்படுறதுக்கு மக கிட்ட போய் இருக்கலாமே.. மனதில் தோன்றியதை வாய்விட்டே அரற்றிவிட்டேன். " அது இதுக்கு மேல.. மக வீட்டுல தங்கிட்டுவரப்போறேன்னு போனாங்க. அங்க என்ன ஆச்சோ.. ஒரே வாரத்துல திரும்பி வந்துட்டாங்க. ரெண்டுபேரும் அவங்களை இப்படி பந்து மாதிரி உருட்டிவிடுறதை நினைச்சா பாவமா இருக்கு. மகன் எதையுமே கண்டுக்கிறதில்லை.. அவங்க சம்பாத்தியத்தையும் ஏதாவது சாக்குச்சொல்லி அம்பது நூறுண்ணு வாங்கிர்றான். 'நா எங்கியாவது தனியா இருந்து பொழைச்சிக்கிறண்டா'ன்னு அழறாங்க. அவங்க வெளிய போயிட்டா தொரைக்கு கவுரவம் கொறைஞ்சிடுமாம்.. தாயை தவிக்க விட்டுட்டான்னு ஒலகம் பேசுமாம். அதனால போகக்கூடாதுன்னு தடுக்கிறான். ரெண்டு நாளா அவங்க வீட்டுக்குள்ள இதே போராட்டம்தான் நடக்குது.. நமக்கெதுக்கு அடுத்த வீட்டு பராதி. ஆமா!! நீங்க அந்தக்காவுக்கு தெரிஞ்சவங்களா?.."

நான் பதிலேதும் சொல்லாமல் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தேன். மருமகளின்முன், எண்சாண் உடம்பை ஒரு சாணாக குறுக்கிக்கொண்டு பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார் செல்லம்மக்கா. முகத்தை மூடிக்கொண்டிருந்தாலும் ,அவரது முதுகு குலுங்குவதிலிருந்தே.. அழுவது புரிந்தது. கம்பீரமாய் வலம்வரும் அவரெங்கே... கெஞ்சிக்கொண்டிருக்கும் இவரெங்கே... அவரை அந்த நிலையில் பார்க்கும்போது திரண்ட கண்ணீர் பார்வையை மறைக்க,.. ஒரு முடிவுடன் அந்த வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தேன்..


Tuesday, 6 July 2010

முள்ளில்லாத மீன்..

பேசும் திறன் என்பது கடவுள் ஒருத்தருக்கு கொடுக்கும் வரம். அது இல்லைன்னா அதைப்போல் ஒரு கஷ்டம் பெண்களுக்கு உண்டா என்ன?... விதிவசமா அப்படி ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்கு வந்துட்டா என்னாகும்.... இப்போ மட்டும் என்னவாம்?.. நிறையப்பெண்கள் வாயிருந்தும் ஊமைகளாகத்தானே இருக்கிறாங்க... மனசில் நினைக்கிறதெல்லாம் சொல்ல முடியுதா என்ன?.. இளமைக்காலத்துல பெற்றோர் சொல்படி கேக்கணும், கல்யாணத்துக்கப்புறம் கணவர் சொல்படி கேக்கணும், வயசான காலத்துல பசங்க சொல்படி கேக்கணும்.. கேளுங்க... கேளுங்க.. கேட்டுக்கிட்டே இருங்கன்னு நம்ம முன்னோர் பொன்மொழி சொல்லிவெச்சுட்டு போயிருக்காங்க. அதை மீறிட்டா நல்லபொண்ணு இல்லியாம் :-))).

கணவர்களெல்லாம், 'விடுதலை.. விடுதலை.. விடுதலை.. தங்கமணியின் அறுவைப்பேச்சிலிருந்து விடுதலை'ன்னு ஆனந்தப்பள்ளு பாடுவாங்க. அப்படி சந்தோஷப்பட விடலாமா!!.. வீட்டுல ஒரு கரும்பலகையை மாட்டிவெச்சு அதுல எழுதி,எழுதியே பேசுவோமில்ல. எங்ககிட்டேயிருந்து தப்பிக்க முடியாத்...சாக்பீஸ் செலவு எச்ட்ரா:-))). அப்புறம், காலங்காத்தால காப்பியோட,' எந்திரிங்க, பொழுது விடிஞ்சுடுச்சு'ன்னு சொல்லி எழுப்பமுடியாது. கைவளையலோட சத்தத்துலதான் எழுப்பணும். நல்லா ரெண்டு கை நிறைய டஜன் கணக்குல வளையல் போட்டுக்கிட்டாத்தான், லேசாவாவது சத்தம் வரும்... அது தங்கவளையலாத்தான் இருக்கணும்ன்னு சொல்லணுமா என்ன?....

பொதுவாகவே,..நம்ம மன உணர்வுகளை லேசுல யாரும் புரிஞ்சிக்கிறதில்லைன்னு எல்லோருக்குமே ஒரு நினைப்பிருக்கும். அதுவே, பேசமுடியாத ஒரு பெண்ணுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும். கோபமோ, ஆதங்கமோ, மகிழ்ச்சியோ எதையுமே வாய்விட்டு பகிர்ந்துகொள்ளமுடியாத சூழ்நிலை என்பது பெரும்கொடுமை. பக்கத்து வீட்டுல நடக்குற மாமியார் மருமகள் சண்டையை பார்த்து,' நாமளும் இப்படி சண்டைபோட முடியலியே'ன்னு ஏங்குறது எவ்வளவு பெரிய சோகம்.. பட்டுப்புடவை வேணும்ன்னு ரெண்டு வார்த்தையில சொல்லவேண்டியதை, ' அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா'ன்னு நீட்டி முழக்கி பாடமுடியுதா.. கடவுள் என்னைய ஏந்தான் இப்படி படைச்சு சோகக்கடலில் நீந்தவிட்டாரோ.....

நேத்துக்கூட... மழைபெய்யுதே, இந்த நேரத்துல சூடா வெங்காயபஜ்ஜி சாப்பிட்டா நல்லாஇருக்குமேன்னு நினைச்சு, அவரை கிச்சனுக்கு கூட்டிட்டுப்போயி வெங்காயத்தயும், வாணலியையும் காட்டி, பஜ்ஜி போடச்சொல்லி சைகை காட்டினா... 'அடடே... வெங்காய பக்கோடா செய்யப்போறியா.. சரி.. சரி.. அப்படியே மசால்டீயும் கொண்டுவாயேன்'னு சொன்னதும் இனிமே வீட்டுல வெங்காயபஜ்ஜியே சாப்பிடறதில்லை... ஹோட்டல்ல மட்டும்தான் சாப்பிடுவேன்னு முக்கியமான முடிவெடுத்துட்டேன் தெரியுமா.. அதைக்கூட அவருக்கு எப்படித்தான் புரியவைக்கப்போறேன்னு தெரியலை.

எனக்கு பேசமுடியாதுன்னு நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதேயில்லை. கடவுள் ஒரு கையை பறிச்சிக்கிட்டாலும் நம்பிக்'கை'ன்னு இன்னொரு கையை கொடுத்திருக்கார். மத்தவங்களைப்போல என்னாலும் சாதிக்கமுடியும். என்னுடைய குறையை ஊனமா நினைச்சு என்னை மண்புழுப்போல நடத்த முடியாது. முள் இல்லைன்னா மீன் புழுவாயிடுமா என்ன!!.. அப்படி புழுவாயிட்டா அது இன்னொரு மீனுக்கு உணவாயிடும். அதுக்கு இடம்கொடுக்காமல் எனக்கான கடலில் நான் நீந்திக்கொண்டுதான் இருப்பேன். என் குழந்தையை ஆசைதீர, 'கண்ணே.. மணியே'ன்னு கொஞ்ச முடியாத என் சோகம்கூட முத்தங்களாகவும், ஒருதுளி கண்ணீராகவும் உதிர்கிறது. கடவுள் என்முன்னால வந்து, 'உன்னை பேச வைக்கமுடியாது,.. அதுக்கு பதிலா வேற ஏதாவது கேளு'ன்னு சொன்னா,.. 'நான் யாருகிட்டயாவது பேச நினைச்சா அதுமட்டும்.. நல்லாக்கவனிங்க.. பேச நினைக்கிறதுமட்டும் என் கையில் டிவில வர்ற ஃப்ளாஷ் ந்யூஸ் மாதிரி வரணும்'ன்னு கேப்பேன். கைரேகை மாதிரி, எதிராளி அதைப்படிச்சுக்கட்டுமே.. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்,.. கை நீட்டப்படாதுன்னு எல்லாம் யாரும் சொல்லப்படாது.. :-))

ஒரு சினிமா பார்த்தாலோ.. நல்ல இசை கேட்டாலோ.. இல்லை ஒரு புத்தகம் படித்தாலோ பகிர்ந்துகொள்ள நல்லவழி தெரியாம இருந்தது. இப்பத்தான் இலவசமா வலைப்பூ வளர்க்கலாமாமே... எனக்கு பேசவராதுன்னா என்ன.. எழுதப்படிக்க தெரியுமே....

தொடர்பதிவுக்கு வித்திட்ட வித்தியாசவசந்துக்கு, நன்றி. இப்போ நானும் ரெண்டுபேரை அழைக்கணும்.

1. உங்களுக்கு ஒரு மாத்திரை கிடைக்குது. அதைச்சாப்பிட்டா நீங்க விரும்பிய வயதுக்கு செல்லலாம். அப்படீன்னா எந்த வயதுக்கு செல்ல ஆசைப்படுவீர்கள்?.. சென்று என்ன செய்வீர்கள்.. உங்கள் கற்பனையை எழுதுங்கள் கோமா.

2. ஒரு நாளைக்கு மட்டும் நீங்கள் விரும்பிய உருவத்தை பெறலாம்ன்னு ஒரு வரம் கிடைக்குது. என்ன உருவம் எடுக்க ஆசைப்படுவீர்கள்?.. உங்கள் அனுபவம் எப்படியிருக்கும்ன்னு எழுதுங்க ஹுஸைனம்மா.

ஹுஸைனம்மா லீவுலெட்டர் கொடுத்துட்டு ஊருக்கு போயிட்டாங்க. அதனால அவங்களுக்கு பதிலா, அந்தப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள சகோதரர் நாடோடியை அழைக்கிறேன்.

Friday, 2 July 2010

விருது விருது.... வருது வருது!!!

அன்பு சகோதரர்கள் எல்.கேயும், ஜெய்லானியும் தங்கமகன் விருது கொடுத்திருக்காங்க. தங்கம் விக்கிற விலையில், விருது கொடுத்த அவங்க அன்புக்கும்,தங்கமனசுக்கும் நன்றி. கிடைச்ச தங்கத்தை லாக்கர்ல வெச்சுக்காம, நானும் பகிர்ந்து கொடுக்க நினைக்கிறேன்.


இந்த விருதை பெற்றுக்கொள்ள நான் அழைப்பது,

மற்றும் அம்மு.Thursday, 1 July 2010

பொழுது போகலைன்னா இப்படியா?......

ஆய்வாளர்: ஏன் அந்தப்பையன், க்ளாஸ்ரூமுக்கு வெளியே நிக்கிறான்??..

தலைமையாசிரியர்: ஹி..ஹி.. அவந்தான் எங்க ஸ்கூலோட outstanding student.

**************************************************************************************

ஒரு இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள்;

  1. ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி.
  2. பிடித்தமான நாடுகள் ------------------------------- சிலி, இத்தாலி.
  3. பிடித்தமான விளையாட்டு வீரர் ------------------- ப்ரெட்லி
  4. பிடிக்காத வியாதி ------------------------------------ தலைவலி.
இப்படிக்கு : அடுத்த இண்டர்வியூவை எதிர் நோக்கியிருப்போர் சங்கம்..

***************************************************************************************

தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...

அம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..

மிக்ஸியில்----- சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

(சட்னி சாப்பிட்டே நொந்து போனோர் சங்கம். தலைவராக இருக்க, சட்னி அரைப்பதில் முன் அனுபவம் பெற்றோர் வரவேற்கப்படுகிறார்கள்)

**************************************************************************************

ஒருத்தர் ஒரு பல்கலைக்கழக வாசலில் நின்னுக்கிட்டு வேகவேகமா எதையோ எழுதிக்கிட்டிருந்தார். ஆர்வம் தாங்காத ஒருத்தர் அவர்கிட்டே போய் ,'என்னப்பா எழுதறீங்க?'ன்னு கேட்டார்.

எழுதிக்கிட்டிருந்தவர் சொன்ன பதில்: "பாத்தா தெரியலை??... நுழைவுத்தேர்வு எழுதிக்கிட்டிருக்கேன்".

******************************************************************************************

மூக்குல அணிஞ்சிக்கிறதாலதான் மூக்குக்கண்ணாடின்னு சொல்றோமாம். அப்படீன்னா பூதக்கண்ணாடிய பூதமா அணிஞ்சிக்கிடுது. யாராச்சும் பதில் சொல்லுங்களேன்.

யக்கா... நீ சொல்லேன்!!,. யண்ணே நீ சொல்லேன்,.!!!


**************************************************************************************************

"செடி கொடிகள்லாம் பச்சையா ஏன் இருக்கு தெரியுமா?.."

"ஏன்னா,.. அதுக்கு பச்சைத்தண்ணி ஊத்துறோம்ல அதான்"

அலோ .. யாருப்பா அது?!!.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது??.. நம்ம டவுட்டே வேற...

"பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"

*************************************************************************************

எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் எல்லாத்துக்கும் மருந்து, தடுப்பூசின்னு எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க,.. இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....

( கேள்விமட்டுமே கேட்கத்தெரியும்ன்னு சொல்லுவோர் சங்கம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).

******************************************************************************************************

முதலாமவர்: அந்த தாத்தாவுக்கு ஏதோ பரிசு கிடைச்சிருக்காமே!!!! என்ன பரிசு?.

இரண்டாமவர்: நோ 'பல்' பரிசு..


***************************************************************************************************

ஒருத்தர் ஒரு காட்டுவழியா நடந்து போயிட்டிருந்தார். அப்போ அவர்முன்னால் இருந்த மரக்கிளையில் பாம்பு ஒண்ணு தொங்கிக்கிட்டிருந்ததை பார்த்தார். அதைப்பார்த்து பயப்படுவார்ன்னு நினைச்சா,..நேரா அதுகிட்ட போயி ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் பாம்பு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சிட்டது. அப்படி அதுகிட்ட என்னதான் சொன்னார்?..
"
"
"
"
"
"

"இதப்பார்... இப்படி தொங்குறதால ஒண்ணும் பிரயோஜனமில்லை.. அம்மாவை காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு".

****************************************************************************************************

ஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.

அஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.

மூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.

ரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா!! டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.

ஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது புரிஞ்சிக்கோங்க...

***************************************************************************************


LinkWithin

Related Posts with Thumbnails