Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Sunday, 2 July 2023

கூட்டாஞ்சோறு

வீட்டுக்குப் பக்கத்தில் எங்கேயாவது ஒரு நாள் பயணமாக சுற்றுலாவோ, பக்தி உலாவோ சென்று வர வேண்டுமா? ஒன்றிரண்டு குடும்பங்கள் மட்டும் கூடிக்களிக்கும் தினங்களா? எங்கேயாவது தோட்டம், அருவிக்கரை போன்ற இடங்களுக்கு வேண்டிய பொருட்களையெல்லாம் கொண்டு சென்று அங்கேயே சூடாகச் சமைத்துச் சாப்பிட்டு பொழுதைக்கழித்து வர விரும்புபவர்களா? புது மணமக்களுக்கான விருந்தா?... முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னெல்லாம் மக்களின் ஒரே விருப்பமாக கூட்டாஞ்சோறும் இருந்து வந்துள்ளது. 

சில சமயங்களில் கிளம்புவதற்கு முதல்நாள் இரவில் வீட்டுப்பெண்கள் கண் விழித்து ஆளுக்கொரு வேலையாகச்செய்து கூட்டாஞ்சோற்றைக் கிளறி தூக்குவாளிகளில் அடைத்து மேலாக வாழையிலை போட்டு மூடியால் இறுக மூடி விடுவர். தொட்டுக்கொள்ள கூழ்வற்றல், வெங்காய வடகம், பப்படம், ஊறுகாய், துவையல்கள் என பக்கவாத்தியங்களும், எல்லோருக்குமாக அளவாக நறுக்கப்பட்ட வாழையிலைத்துண்டுகளும் கூடவே பயணிக்கும். பயணம் போன இடத்தில் கொஞ்சம் சடவாறிவிட்டு, பக்கவாத்தியங்களுடன் மெயின் அயிட்டமான கூட்டாஞ்சோற்றையும்  வெளுத்துக்கட்டுவர். பேச்சும் சிரிப்புமாகக் கலகலவென உணவுநேரம் அமையும்போது கணக்கேயில்லாமல் கவளங்கவளமாக உணவு உள்ளே போகும். 

காலப்போக்கில், "எங்க போனாலும் இந்த அடுப்பங்கரையையே கெட்டிக்கிட்டு அளணுமா?" என பெண்கள் முணுமுணுக்கத் தொடங்க, 'போற எடத்துல என்னமும் கௌப்புக்கடையில சாப்புட்டுக்கலாம்' என மக்களின் மனநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறத்தொடங்கி விட்டது. ஆனாலும் எப்போதாவது நினைவின் ருசி மேலோங்கும்போது 'சாப்புடணும் போல இருந்திச்சின்னு அவ்வோ கேட்டா' எனவோ 'பிள்ளேளுக்கு ஒரு நல்ல சோறுகறி வச்சிக்குடுக்காண்டாமா?' எனவோ சொல்லிக்கொண்டு சமைத்துப் பரிமாறப்படுகிறது. 

நல்ல புழுங்கலரிசியில் சமைக்கப்பட்ட கூட்டாஞ்சோறு இன்னும் ருசி மிகுந்தது. ஆனால், எங்கள் வீட்டில் புழுங்கலரிசியில் சமைத்தால் அதை நான் மட்டுமே சாப்பிட வேண்டியிருக்கும். ஆகவே பச்சரிசியில் செய்தேன். 

எந்த அரிசியானாலும் அதோடு நாலுக்கு ஒரு பங்கு துவரம் பருப்பைக் கலந்து வையுங்கள். தண்ணீர் எதுவும் ஊற்றிவிட வேண்டாம்.

1 முருங்கை, 2 கத்தரி, கைப்பிடி சீனியவரை, 2 பெரிய வெங்காயம், 10 சின்ன வெங்காயம், 1 தக்காளி, 4 பச்சை மிளகாய்கள், பாதி மாங்காய், 2 உருளைக்கிழங்குகள், பாதி வாழைக்காய், 1 கேரட் என இவையெல்லாவற்றையும் பெரிய துண்டங்களாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

எலுமிச்சையளவு புளியை ஊற வைத்து நன்கு கசக்கிப்பிழிந்து ஒரு தம்ளர் அளவில் புளித்தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள்.

கொத்தமல்லித்தழையை நறுக்கியும், கறிவேப்பிலை இணுக்கை உருவியும், கைப்பிடி முருங்கைக்கீரையை ஆய்ந்தும் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். முருங்கைக்கீரை கிடைக்காத சமயங்களில் நான் வெந்தயக்கீரையை நறுக்கிச் சேர்ப்பதுண்டு.

ஒரு தம்ளர் அரிசிக்கு அரை தம்ளர் அளவு தேங்காய்த்துருவல் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சம் கூடுதலானாலும் பாதகமில்லை. அத்தோடு ஒரு பல் பூண்டு(விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்) ஒரு ஸ்பூன் சீரகம், காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும். 

முன்னேற்பாடுகள் தயாரெனில் இனி களம் புகலாம்..

ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு கப் அரிசிக்கு நான்கு கப் என்ற அளவில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பிலேற்றி சூடானதும் அரிசிபருப்பை இரண்டே இரண்டு முறை களைந்து போடவும்.

சோறு அரைவேக்காடானதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை மொத்தமாக அதனுடன் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நடுத்தரமான தீயில் வேக விடவும். பெரிய துண்டங்களாகச் சேர்ப்பதால் எல்லாம் ஒரே சமயத்தில் வெந்து விடுகிறது.

காய்கள் முக்கால் வேக்காட்டை நெருங்கும்போது புளித்தண்ணீரைச் சேர்த்து அடிமேலாகக் கிளறி விடவும். பச்சைவாடை போய் சாதமும் வெந்திருக்கும் பொழுதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் முருங்கைக்கீரையையும், கொஞ்சம் காயப்பொடியையும் சேர்த்து காய்கள் உடையாமல் ஒருசேர கிளறி விட்டு மூடி சிறு தீயில் வேக விடவும். முருங்கைக்கீரை இளசாக இல்லையெனில் புளித்தண்ணீர் ஊற்றும்போதே அதையும் சேர்த்து விடவும். கீரை வேகாமல் இருந்தால் ஜீரணமாகாது. 

எல்லாம் ஒன்று சேர வெந்ததும் லேசாகத் தளர்வாக இருக்கும்போதே இறக்கி வைத்து நறுக்கிய கொத்துமல்லி இலையையும் கொஞ்சம் தாராளமாக நெய்யையும் ஊற்றவும். கடைசியாக கடுகு கறிவேப்பிலை உளுத்தம்பருப்பு தாளித்துக்கொட்டி லேசாகக் கிளறி, கூட்டாஞ்சோற்றின் ஒவ்வொரு அணுவிலும் தாளிதத்தின் ருசி பரவச்செய்யவும். நேரமாக ஆக சோறு இறுகிக்கொள்ளும். பருப்பு வெந்து ரொம்பவும் குழைந்து விடாமல் லேசாக முழித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் எனக்குப் பிடிக்கும்.

இதைச் சூட்டோடு சாப்பிடுவது ஒரு ருசியெனில், வெச்சு சாப்பிடுவது தனி ருசி. ஒரு நாளைக்கு மேல் தாங்காது ஆகவே சீக்கிரம் தீர்த்துக்கட்டி விடவும்.

ஊரிலிருந்து போன வருஷம் கொண்டு வந்த நார்த்தங்காய்களை நானே ஊறுகாய் போட்டேன் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். நார்த்தங்காய் ஊறுகாயெல்லாம் கடைசியாக அம்மை கையால் 1989க்கு முன்னால் சாப்பிட்டது.



Tuesday, 27 July 2021

களிகாலம்..

கஞ்சி, களி, கூழ் போன்ற ஆரோக்கியமான கிராமத்து உணவு வகைகள் ஒரு காலத்தில் பட்டிக்காட்டு ஆகாரம் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பாவம்.. அறியாதவர்கள்.. இதன் அருமை புரியாதவர்கள். அவர்களை மன்னிப்போம், மறப்போம் :-) ஆனால், இப்பொழுதெல்லாம் களி, கூழ் போன்ற ஆகாரங்கள் தமிழ்நாட்டில் உணவகங்களில் விற்பனையாகின்றன என்பதைக் கேள்விப்படும்போது இப்போதாவது அதன் அருமையைத் தெரிந்து கொண்டார்களே என்று நிம்மதியும் ஏற்படுகிறது.
வடநாட்டில் கோதுமை. அரிசி போன்றவற்றை ஆகாரமாக எடுத்துக் கொண்டாலும் ராகி, கம்பு, சோளம், தினை போன்றவற்றையும் சப்பாத்தியாகவோ, தாலிபீட்டாகவோ அல்லது களியாகவும் கூட செய்து சாப்பிடுவார்கள். இந்தத் தானியங்களை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் கண்ணில் படாமல் போய்விட்ட இவற்றை மும்பைக்கு வந்தபின் மறுபடியும் பார்க்க முடிந்தது சந்தோஷமாக இருந்தது. இங்கெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகளில் சோளம், ராகி, கம்பு, தினை போன்றவற்றை மாவாகவும் இடித்து வைத்திருப்பார்கள். வாங்கி வந்து விரும்பிய அயிட்டங்களைச் செய்து சாப்பிட வேண்டியதுதான்.

சிறு வயதிலிருந்து இத்தனை நாளாக அரிசி உணவுகள் சாப்பிட்டு வந்த என் பையருக்கு இப்போதெல்லாம் சிறுதானிய உணவுகளின் மேல் ஆர்வம் வந்து விட்டது. அரிசியில் சமைத்த உணவுகளைச் சாப்பிடுவதில்லை. மாறாக அதையே கோதுமையிலோ அல்லது ஏதாவது தானியத்திலோ செய்து கொடுத்தால் சாப்பிடுவார். இப்பொழுது சமீபகாலமாக என் பாட்டி, அதாவது பையரின் கொள்ளுப்பாட்டி காலத்து ஆகார வகைகளை ருசி பார்க்க வேண்டுமென்ற ஆசை பையருக்கு எழுந்திருக்கிறது. "அதெல்லாம் சாப்பிட்டதால்தானே அவங்க கடைசி வரை ஆரோக்கியமா தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு திடகாத்திரமா இருந்தாங்க" என்பார். ஆகவே சோளம், ராகி மாவுகளைக்கொண்டு களி, கொழுக்கட்டை போன்றவற்றைச்செய்து கொடுப்பதுண்டு. களியிலும் கூட இனிப்பு, காரம் என்று வகை வகையாகச் செய்யலாம். பையருக்கு காரத்தை விட கருப்பட்டி என்று சொல்லப்படும் பனைவெல்லம் சேர்த்த இனிப்புக்களி மிகவும் பிடிக்கும்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களில் உளுந்துக்கு முக்கிய இடமுண்டு. அதுவும் தோல் நீக்கப்படாத கறுப்பு முழு உளுந்தென்றால் சத்துகளின் சுரங்கமென்றே சொல்லலாம். இடுப்பு எலும்புகளுக்குப் பலமூட்டுவதில் உளுந்து முதலிடம் வகிப்பதால் பெண்களுக்கு அதிகம் சிபாரிசு செய்யப்படுகிறது. பெண்களின் வாழ்வில் டீன் ஏஜ் முதல் 40+ வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் எத்தனையோ உடல்நலக்கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. எல்லாக்கால கட்டங்களிலும் அவள் உடலில் ஏற்படும் இழப்புகளைச் சரிக்கட்டி தெம்பூட்ட பலவகையான உணவுகள் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் உளுந்தங்களி, உளுந்தங்கஞ்சி, வெந்தயக்காடி, உளுந்தஞ்சோறு என்பவை முக்கியமானவையாகும்.

ஒரு பங்கு அரிசி அல்லது சிறு தானியத்திற்கு கால் பங்கு உளுந்து சேர்த்து மெஷின் அல்லது மிக்ஸியில் பொடித்து களி மாவு தயாரித்துக்கொள்ள வேண்டும். அந்தக்காலத்தில் வீடுகளில் கல்லால் செய்யப்பட்ட திரிகை எனப்படும் வீட்டு உபயோகப்பொருள் ஒன்று கண்டிப்பாக இருக்கும். இயந்திரம் என்றும் சிலர் சொல்வார்கள். அதில் கொஞ்சங்கொஞ்சமாக இட்டு திரித்து களி மாவு தயார் செய்வார்கள். உளுந்தை வாசனை வரும்வரை வறுத்து மாவு தயாரித்தால் களி அதிகம் பிசுபிசுப்பில்லாமல் வரும். ஆனால், பச்சையாக உளுந்தை இட்டு அரைத்தால்தான் சத்து என்பர்.

ஒரு தம்ளர் அரிசிக்கு கால் கிலோ கருப்பட்டி என்ற அளவில் எடுத்துக்கொண்டு அதை நான்கு கப் வெந்நீரில் போட்டு கரையும் வரை சூடாக்கவும். பின் அதை கல் மண், பூச்சிகள் போக வடிகட்டிக்கொள்ளவும். பின் அதை அடிப்பிடிக்காத ஒரு கனமான பாத்திரத்தில் ஊற்றிக்கொள்ளவும், இரண்டு ஏலக்காய்கள், ஒரு இஞ்ச் அளவிலான சுக்குத்துண்டு இரண்டையும் நன்றாகப்பொடி செய்து கருப்பட்டித்தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். ஒரு கையளவு துருவிய தேங்காயையும் அதில் சேர்க்கவும். பின் களி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டிகளில்லாமல் கிளறவும்.

மாவில் ஏற்கனவே கொஞ்சம் தண்ணீரைச் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்து வைத்துக்கொண்டும் ஊற்றிக்கிளறலாம். இது இன்னும் சுலபமாக இருக்கும். மாவு கொதித்து வெந்து பந்து போல் உருண்டு வரும். இப்பொழுது நாலைந்து ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டுக்கிளறவும். சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம். இனிப்புக்களி சாப்பிட ரெடி. சாப்பிடும்போது உருண்டை பிடித்து அதில் நடுவில் குழித்து ஒரு ஸ்பூன் நெய் விட்டுச்சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும். கருப்பட்டியும் நல்லெண்ணெய்யும் சேர்ந்திருப்பதால் உடலுக்கு பலத்தைக்கொடுக்கும். இதற்கு எந்த வகையான தானியமாவையும் பயன்படுத்திக்கொள்ளலாம். 

காரக்களி செய்ய எந்த வகையான மாவையும் பயன்படுத்திக்கொள்ளலாம். கோதுமைமாவில் கூட இந்தக்களியைச் செய்யலாம். எந்த வகை மாவாக இருந்தாலும் லேசாகச் சிவக்க வறுத்து வைத்துக்கொள்ளவும். சின்னச்சின்ன துண்டுகளாக நறுக்கப்பட்ட காரட்,பட்டாணி,முட்டைக்கோஸ், காலிஃப்ளவர்,உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளைக்கலந்து ஒரு கப் அளவில் எடுத்துக்கொள்ளவும். ஒரு சின்னத்துண்டு இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 
சோளக்களி..
ஒரு கடாயில் எண்ணெய்யைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும், உளுத்தம்பருப்பு சிவந்ததும், இஞ்சி, பச்சைமிளகாய் கறிவேப்பிலை இத்யாதிகளை சேர்க்கவும். வாசனை வந்ததும் காய்களைச் சேர்த்து தேவையான உப்பிட்டு வதக்கி, மூடி போடவும், முக்கால் வேக்காடு வந்ததும் தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்த மாவைச் சேர்த்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்து வந்ததும் மூடிபோட்டு வேக விடவும். வாசனை வந்து கூப்பிடும்போது திறந்து இன்னொரு முறை லேசாக அடிமேலாகக் கிளறி இறக்கவும். குழம்பு வகைகளுடன் பரிமாறி, மூக்கு வழி வெளியே வரும் வரைக்கும் ஒரு பிடி பிடிக்க வேண்டியதுதான்.

இதில் ராகியும் கோதுமையும் அதிகம் தண்ணீரை இழுப்பதில்லை. ஒரு கப் மாவுக்கு ஒண்ணேகால் கப் தண்ணீர்தான் தேவைப்பட்டது. அரிசி, சோள மாவு வகைகளை உபயோகிக்கும்போது ஒண்ணரை கப் தண்ணீர் தேவைப்படும். சரியான அளவு தண்ணீர் சேர்த்து நல்ல முறையில் வேக வைத்துச் சாப்பிட்டால்தான் பலன். இல்லையெனில் செரிமானமாகாமல் பிடுங்கிக்கொள்ளும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் வீட்டு அளவு டம்ளரில் இருக்கிறது.

இவற்றில் இனிப்புக்களி வாழ்வில் முதலும் கடைசியுமாக மை ரங்க்ஸ் மாடலிங் செய்ய குமுதம் சிநேகிதியில் வெளியானது.

Saturday, 15 February 2020

கோதுமை ரவை வெஜ் கிச்சடி.


உடல் நிலை சரியில்லையென்றால் நம்மூரில் ரசஞ்சாதம் சாப்பிடச்சொல்வதைப்போல, மஹாராஷ்டிரத்தில் டாக்டர்கள் கிச்சடி சாப்பிடச்சொல்வார்கள். காய்ச்சல் நேரத்தில் பட்டினி போட்டு உடலை மேலும் கெடுத்துக்கொள்ளாமல் சத்துள்ளதாகவும், வாய்க்கு ருசியாகவும் அதே சமயம் நலிவுற்றிருக்கும் உடலின் ஜீரணசக்திக்கு சோதனை வைக்காமலும் சாப்பிடக்கூடிய ஒரே அயிட்டம் கிச்சடிதான். செய்யப்படுவதென்னவோ அர்சீம்பருப்பு மாதிரிதான், ஆனாலும் சிற்சில மாற்றங்களுடன் செய்தால் அன்றாடச் சமையலிலும் ஓர் அயிட்டமாகச் சேர்த்துக்கொள்ளலாம். தினப்படிச் சமையல் போரடிக்கும்போதோ அவசர அடியாகவோ செய்ய உகந்தது. பையரும் ரங்க்ஸும் தற்சமயம் அரிசியில்லாக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதால் கோதுமை ரவையில் செய்தேன். 

இவ்வளவுதான் தேவை:
அரிசி 1 கப் அல்லது வறுக்கப்பட்ட கோதுமை ரவை 1 கப், 
வேக வைக்கப்பட்ட துவரம் பருப்பு கால் கப்
காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள்
கொஞ்சமாக மஞ்சட்பொடி
ருசிக்கேற்ப உப்பு
சிட்டிகை பெருங்காயப்பொடி
சீரகம் கால் ஸ்பூன்
நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு தலா அரை ஸ்பூன், வெங்காயம் ஒன்று
கொத்துமல்லி இலை 1 கப். 
நறுக்கப்பட்ட தக்காளி ஒன்று
நறுக்கப்பட்ட கேரட், பட்டாணி, முட்டைக்கோஸ் கலவை 1 கப்
இரண்டு கப் தண்ணீர்,
இரண்டு டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
கொஞ்சமாக நெய்
ஒரு அகலமான பாத்திரம்.

இப்படித்தான் செய்யணும் கிச்சடி:
1. சட்னி ஜாரில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, மிளகாய், மஞ்சள் தூள்களைப்போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

2. அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி அதில் சீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொரிந்ததும், பெருங்காயப்பொடியைப்போட்டுக்கிளறி, உடனேயே அரைத்த மசாலையை அதோடு சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போனதும், தக்காளித்துண்டுகளைப்போட்டுக் கிண்டி,  ஒரு ஸ்பூன் உப்புப்போட்டு தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்,

3. தக்காளி வெந்ததும் கேரட் முதலான காய்கறிக்கலவையைச்சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் வேக விடவும்.

4. தண்ணீரைச் சேர்த்து, சூடானதும், கோதுமை ரவையைச்சேர்த்து அரை வேக்காடு வரும் வரை சமையுங்கள்.

5. இப்போது வெந்த பருப்பை நன்கு மசித்துச் சேர்க்கும் தருணம். சேர்த்தபின் நன்கு தளபுளவெனக்கொதிக்கும்போது கொஞ்சமாக நெய் சேருங்கள்.  இன்னும் சத்துள்ளதாகச் செய்ய விரும்பினால் ஏதாவதொரு கீரையை நறுக்கி கைப்பிடியளவு சேர்க்கலாம். கஸூரி மேத்தியை கொஞ்சமாக அள்ளிப்போட்டால் மணத்துக்கொட்டும். இங்கெல்லாம் ஹோட்டல்களில் "பாலக் கிச்சடி" மிகவும் பிரசித்தம். கிச்சடி இறுகலாகவோ, தளதளவெனவோ வேண்டுமென்றால் அதற்குத்தகுந்தாற்போல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நன்கு சேர்ந்து மணம் வந்ததும், உப்பு காரம் சரி பார்த்து இறக்கி விடலாம். பொதுவாக மராட்டியத்தில் கொஞ்சம் தளதளவெனத்தான் கிச்சடி செய்வார்கள். பருப்பு சேர்ப்பதால் நேரமாக ஆக தானாகவே இறுகிக்கொள்ளும்.

அரிசி சேர்த்து கிச்சடி செய்வதென்றால், ஒரு கப் அரிசி, கால் கப் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அப்படிச்செய்யும் போது மூன்றாவது பாயிண்டிலிருந்து நேராக ஐந்தாவது பாயிண்டிற்குப் பாய்ந்து விடவும். மற்றவையெல்லாம் ஒரே மாதிரிதான்.

கிச்சடிக்குத்தொட்டுக்கொள்ள பப்படம், ஊறுகாய், சமோசா, ஃபாஃப்டா, வெங்காய ராய்த்தா என எத்தனை இருந்தாலும் எலுமிச்சை ஊறுகாய்தான் முன்னிலையில் இருக்கிறது. கிச்சடியில் காரம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அதை நிரவும் பெரும்பொறுப்பை சுர்ர்ர்ர்ரென நாக்கில் உறைக்கும் ஊறுகாய் எடுத்துக்கொள்கிறது.

Saturday, 11 January 2020

வெந்தயக்காடி

சற்றே புளிக்க வைத்த கஞ்சி வகைகளைக் காடி என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நெல்லைச்சீமையில், சோளத்தைக் குத்தி அரிசியாக்கி களி போல் வேக வைத்து, ஆற விட்டு, மறு நாள் நீத்தண்ணி, மோர் போன்றவற்றை விட்டுக் கரைத்துக் கஞ்சியாகக் குடிப்பார்கள். இதை சோளக்காடி அல்லது சோளங்காடி என அழைப்பர். வேனிற்காலங்களில் ஏற்படும் உடற்சூட்டைத்தணிக்கும் வல்லமை கொண்டது அது. ஆனால் வெந்தயக்காடி அப்படிப்பட்டதல்ல, செய்த சூட்டோடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காலையில் செய்ததை இரவிலோ, அல்லது இரவில் செய்ததை மறுநாள் காலையிலோ கூட சாப்பிடலாம். நன்றாகவே இருக்கும். ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்துச்சாப்பிட்டாலும் தீங்கில்லை. வெந்தயத்தின் மணத்தோடு, கருப்பட்டியின் ருசியோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.  புளிப்பு ஏறுமுன் தீர்த்து விட வேண்டும். புளித்து விட்டால் சாக்கடைக்கு அபிஷேகம் செய்து விட வேண்டியதுதான்.
வெந்தயக்காடி
வெந்தயக்காடி பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் நெஞ்சுச்சளிக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. உளுந்து சேர்ந்திருப்பதால் இடுப்பெலும்பைப் பலமாக்கும். இதில் கலந்திருக்கும் வெந்தயமோ கோடை காலத்தில் உடற்சூட்டைத் தணித்து சூட்டு வலியிலிருந்து பாதுகாக்கிறது. சுருங்கச்சொன்னால், இதை இன்ன பருவகாலத்துக்கு மட்டும் ஏற்றது எனக் குறுக்கி விட முடியாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காடி எனப் பெயர் கொண்டிருக்கிறதே தவிர ருசியில் பாயசத்திற்கு தூரத்துச் சித்தி முறை.

மூலப்பொருட்களைப் பொதுவாக நன்கு ஊற விட்டு அரைத்துத்தான் செய்ய வேண்டும். ஆனால் அந்தக்காலத்தில், ஊற வைக்காமல், நேரடியாக  ஆட்டுரலில் இட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துத் தயாரிப்பார்கள் என ஒரு முறை கேள்விப்பட்டேன். இக்காலத்தில் மிக்ஸியில் அப்படியெல்லாம் அரைக்கப் புகுந்தால் இயந்திரம் பணாலாகி விடுமென்பது மட்டும் உறுதி. ஆகவே ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடவும்.


மூலப்பொருட்கள்
பச்சரிசி அரை கப் எனில், உடைத்த ஆனால் தோல் நீக்காத உளுந்து அரை கப் என்ற வீதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அரிசிக்குப் பதிலாக, சோளம், கம்பு, குதிரை வாலி , கேழ்வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கோதுமையைத்தவிர மற்ற எல்லா தானியங்களுக்கும் அனுமதியுண்டு.  பொதுவாகவே, அடுக்களையில் சட்டென்று வேலை ஆக வேண்டுமென்பதற்காக பெண்கள் சில 'ஜோல்ஜப்பாட்டா' வேலைகளைச் செய்வதுண்டு. அதாவது, சிறு தானியங்கள் முழுதாக இல்லாமல் மாவாகத்தான் இருக்கின்றன என்றாலும் பாதகமில்லை. அவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். தோல் நீக்கிய உளுந்து மட்டும் என்ன பாவம் செய்தது?. அதுதான் இருக்கிறதென்றால் அதையே எடுத்துக்கொள்வோம்.

ஒரு பாத்திரத்தில், பச்சரிசி அல்லது சிறு தானியம் அல்லது தானிய மாவை அரை கப் எடுத்துக்கொண்டு அத்துடன் அரை கப் உளுந்தைச் சேர்த்து கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேய்த்து அலசி வடித்து விட வேண்டும். பின் நன்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மாவை உபயோகிப்பதானால், அரிசியைக் கழுவிக்கொண்டு அதன் பின் பிற பொருட்களைச் சேர்க்கவும். அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். இரண்டு அங்குலம் அளவில் சுக்கை எடுத்து நன்றாகக் கழுவி, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். இரண்டு வட்டுக்கருப்பட்டிகளை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும். உடைத்துப்போட்டால் சட்டெனக்கரைந்து சமையல் எரிவாயு மிச்சப்படும். உடங்குடிக் கருப்பட்டிகளின் இனிப்பும் சுவையும் தனி என்ற தனிக்குறிப்பு இங்கே சேர்க்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் கருப்பட்டி கிடைக்கவில்லை எனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இங்கே இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.


அர்ஸீம்பருப்பும்... மன்னிக்கவும், அரிசியும் உளுத்தம்பருப்பும் வெந்தயமும் ஊறிய பின், அதை ஊற வைத்த தண்ணீருடன் மிக்ஸியிலிட்டு, இடித்து வைத்த சுக்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் அத்துடன் தேங்காயைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். வெண்ணெய் பதத்துக்கு அரைத்ததை விட சன்ன ரவை பதத்துக்கு அரைத்தெடுத்த மாவில் காடி காய்ச்சினால் அருமையாக வரும்.

ஒரு பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீரை ஊற்றி சூடானதும் தட்டி வைத்த கருப்பட்டித்துண்டுகளைப்போட்டு அது கரையும் வரை சூடாக்கவும். கரைந்தபின் கல், மண், பிசிறுகள் போக நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கருப்பட்டிப்பாலை மறுபடியும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. தண்ணீர் சூடானதும், அரைத்த மாவை இதில் கொஞ்சங்கொஞ்சமாக ஊற்றி கட்டிகளில்லாமல் கிளறிக்கொடுக்கவும். எல்லா மாவையும் சேர்த்தபின் தணலை நன்கு எரிய விட்டு, காடி அடிப்பிடிக்காமல், நீளமான அகப்பையொன்றால் நிமிடத்துக்கொரு முறை கிளறிக்கொடுக்கவும். கிராமங்களில் இம்மாதிரியான சமையல்களுக்காகவே 'துடுப்பு' என்ற நீளமான மரக்கரண்டியை வைத்திருப்பர். பெயருக்கேற்றாற்போல் துடுப்பின் தோற்றத்தை ஒத்ததாக அதன் மினியேச்சர் போல் இருக்கும். சூடான பதார்த்தம் கொதித்துத்தெறிக்கும்போது அது நம் கையில் படாமல் பாதுகாத்துக்கொள்ள இது ஏற்றது. 


காடி தளபுளவெனக்கொதித்து, ஒன்று சேர்ந்து வெந்து பளபளவென வரும். அந்நிலையில், தணலைக்குறைத்து இரண்டு நிமிடங்களுக்கு காடியைக் கைவிடாமல் கிளறி இறக்கவும். 

இதைச்செய்வது ஒரு கலை எனில், சாப்பிடுவதும் இன்னொரு கலையே. சூப் கிண்ணங்களில் ஊற்றி நாசூக்காகப் பருகலாம், தம்ளர்களில் ஊற்றி சர்ர்ர்ர்ரென்று உறிஞ்சிப் பருகலாம், அகன்ற தட்டங்களில் ஊற்றி கரண்டியால் எடுத்துக் குடிக்கலாம். அத்தனை விதங்களிலும் ருசித்திருந்தாலும், எங்கள் அப்பாவைப்பெற்ற ஆச்சி வீட்டில் ஒரு முறை வெந்தயக்காடி குடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது.
 கொதிக்க ஆரம்பித்து
வெந்தயக்காடி தயார்
வீட்டருகே வளர்ந்திருந்த வடலிப்பனையிலிருந்து இளங்குருத்தாக அகலமான இலைகளை ஆய்ந்து வந்து, கரண்டியின் அளவுக்கு துண்டு துண்டாக நறுக்கி அதை உபயோகித்து, காடியைக் குடிக்கச்சொன்னார்கள். உளுந்தின் ருசியும், வெந்தயத்தின் மணமும், கருப்பட்டியின் இனிப்புமாக தித்தித்துக்கிடந்த காடியின் ஊடே பனையோலையின் மணமும் ருசியும் ஊடறு பாவாகக் கலந்து சுவையைக் கூட்டியது வித்தியாசமானதுதான். அந்த ருசியும் அனுபவமும் அப்புறம் வாய்க்கவேயில்லை.

Tuesday, 19 November 2019

புட்டமது மகாத்மியம்.

புட்டமது, புட்டமுது, புட்டாமிர்தம் என குமரி மண்ணில் அழைக்கப்படும் இந்த இனிப்பை தமிழகத்தின் பிற பகுதிகளில், வெல்லப்புட்டு என்று அழைப்பர்.

ஒரு காலத்தில் குமரி மண்ணின் கோவில்களில், குறிப்பாக அம்மன் கோவில்களில் புட்டமதுதான் முக்கியமான பிரசாதமாக விளம்பப்படும். இன்றும் குமரி மண்ணில், வீடுகளில் யாருக்காவது அம்மை கண்டு குணமாகி தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றியபின் முதன் முதலாகக் கோவிலுக்கு அழைத்துச்சென்று அம்மனைத் தரிசித்து புட்டமது விளம்பி விட்டு வந்தபின்தான், மறு வேலை.

சாயந்திரம் கோவிலுக்குப் போவதென்றால் காலையிலேயே புட்டமது தயார் செய்யும் வேலை ஆரம்பித்து விடும். பச்சரிசியைக் களைந்து, அரை மணி நேரம் கொவரப்போட்டு, நீரை வடித்தெடுத்தபின் ஈரம் போக நிழலில் உலர்த்தியெடுத்து, கை வலு உள்ள பெண் ஒருத்தி அரிசியை உரலிலிட்டு இடியாப்ப மாவு பக்குவத்தில் இடித்துக் கொடுத்து விடுவாள்.

அதன் பின் அந்த மாவை துணியில் பொட்டலம் போல் கட்டி, ஆவியில் வேக வைத்தெடுத்து ஆறியபின் உதிர்த்து கட்டிகளில்லாமல் ஆக்கிக்கொண்டபின் வெல்லப்பாகும் ஏலஞ்சுக்கும் தேங்காய்ப்பூவும் இட்டு விரவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினால், "ஏ... புட்டமது வெளம்பப்போறாங்க" எனக்கூவிக்கொண்டு நண்டு சிண்டு படை பட்டாளம் எல்லாம் திரண்டு வந்து விடும். அப்புறம் வீட்டுக்கு வெறுஞ்சட்டிதான் வந்து சேரும்.
பச்சரிசி புட்டமது
நவராத்திரி வெள்ளிக்கிழமைக்கு புட்டமது செய்தேன். மகனார் "இதை சிறுதானிய மாவில் செய்ய முடியுமா?" என வழக்கம்போல கோரிக்கை வைத்தார். சிறுதானியங்களின் மகிமை மிகுந்து வரும் இந்நாட்களில், அரிசிக்குப் பதிலாக சிறுதானியங்களை உபயோகித்து அதே உணவு வகைகளைப் பரீட்சார்த்தமாகவேனும் செய்து பார்த்து விடும் மனப்பாங்கு வந்து விட்டது. அதுவும் வீட்டில் சோதனை எலி இருந்தால் தைரியமாக விஷப்பரீட்சையில் இறங்கலாம். அந்தப்படியே முதலில் கேழ்வரகில் புட்டமது செய்து பார்த்தேன். நன்றாகவே அமைந்தது.
ஒரு கப் மாவை விரவி
 
 ஆவியில் வேக விட்டு
  நன்கு ஆற விட்டு
 வெல்லப்பாகு தயார் செய்து

 ஏலஞ்சுக்கும் தேங்காயும் சேர்த்தால்
கேழ்வரகு புட்டமது தயார்
அரிசி மாவைப்போல் கேழ்வரகு மாவு அதிகத்தண்ணீரை இழுத்துக்கொள்ளாது. ஆகவே, ஆவியில் வேக வைத்து ஆற விட்டு, பின் உதிர்த்துக்கொண்ட கேழ்வரகு மாவில் கொஞ்சங்கொஞ்சமாக வெல்லப்பாகைச் சேர்த்துக் கிளற வேண்டும். கொஞ்சம் சேர்ந்தாற்போல் வந்ததும் நிறுத்தி விட வேண்டும். நேரம் ஆக ஆக பொலபொலவென உதிர்ந்து வந்து விடும். ஆகவே தேவைப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன் கூட்டியே புட்டமுதைத் தயாரித்துக் கொள்க.

தவிரவும், தமிழ்க்கடவுளாம் முருகவேள் குடியிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் இது முக்கியமான பிரசாதமாமே. ஆகவே உண்மையான தமிழனாக இருந்தால் கேழ்வரகு புட்டமது செய்யவும்.

Saturday, 9 November 2019

மெழுகுப்பாகற்காய் துவரன்

பாகற்காயின் தூரத்துச் சொந்தமான மெழுகுப்பாகல், Kantola என இந்தியிலும் Kartoli என மராட்டியிலும், spine gourd என ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. மழைக்காலங்களில் அதிகமும் சந்தையில் காணக்கிடைக்கும் இக்காய் உடலுக்கு எல்லா வகையிலும் நன்மை செய்யக்கூடியது, குறிப்பாகக் கண்ணுக்கும் மூளைக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் கொண்டவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் நலம்.
கடினமான முட்கள் படர்ந்திருப்பது போல் தோற்றமளித்தாலும், கைகளை உறுத்தாமல் மென்மையாகவே இருக்கின்றன. குட்டிக்குட்டியாக நெல்லிக்காய் அளவில் இருக்கும் இவற்றை நீள வாக்கில் நாலாக நறுக்கிப்பிளந்து, கல் போன்ற கடினமான விதைகளை நீக்கி, அதன் பின் பொடியாக நறுக்கி.. என அரை கிலோ காய் எக்கச்சக்கமாக வேலை வாங்கி விட்டது. கொஞ்சம் பிஞ்சாக இருந்தால் விதைகளை நீக்க வேண்டாம். அப்படியே நறுக்கி விடலாம். ஒன்றிரண்டு காய்களிலிருந்து கிடைத்த முற்றிய விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். இது வளர வெப்பம் அதிகம் தேவையாம். கோடை ஆரம்பத்தில் நட்டுப்பார்த்தால் ஆயிற்று.
விதையில்லாப்பிஞ்சு

முற்றிய விதை கொண்டவை
பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்ததானாலும் கொஞ்சங்கூட கசக்காது எனக்கேள்வி. 

மெழுகுப்பாகற்காயின் பயன்கள் அனேகம். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவை சில.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக்குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இதை விடச்சிறந்த பலன் உண்டா என்ன? புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளைக்குறைக்கிறது. இளமையைத்தக்க வைக்கிறது. பார்வைக்கூர்மையை மேம்படுத்துகிறது, ஆகவே கண் பார்வை சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகம் சாப்பிடுவது நல்லது. சிலருக்கு எப்போது பார்த்தாலும் வியர்த்துக்கொட்டி தெப்பமாய் நனைந்து விடுவார்கள். இந்த அதிகப்படியான வியர்வைப்பிரச்சினையைச் சரி செய்கிறது நார்ச்சத்தும் ஆண்ட்டி ஆக்சிடெண்ட்ஸும் நிறைந்திருப்பதால் செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்கிறது. சிறுநீரகக்கற்களைக் கரைக்கிறது, மூல நோயைக் குணப்படுத்துகிறது. சுவாசப்பிரச்சினைகள் மற்றும் இருமலைக் குறைக்கிறது. 

கொடி வகையைச்சேர்ந்த இத்தாவரம் நன்கு செழித்து வளர வெப்பம் தேவை. ஆகவே, கோடை காலத்திலும், மழைக்காலத்துக்குப் பின் வரும் வெப்பக்காலத்திலும் பயிரிடப்படுகிறது. கோடை காலத்தில் பயிரிடப்பட்டு நன்கு விளைந்து மழைக்காலத்தில் சந்தைக்கு வருகிறது. சந்தையில் சிறு வியாபாரிகளும் வயதான பெண்மணிகளும் தத்தம் தோட்டத்தில் விளைந்தவற்றை தலைச்சுமையாகக் கூடைகளில் கொண்டு வந்து விற்பனைக்காகப் பரப்பியிருப்பர். முன்பெல்லாம் அதிகம் காணக்கிடைத்தாலும், கசப்பாக இருக்குமோ என்றெண்ணி இதை வாங்கியதேயில்லை. கிலோ கணக்கில் வாங்கிச் சமைத்து விட்டு, யாரும் சீந்தாமல் போய் விட்டால் என்ன செய்வது? வாரக்கணக்கில் வைத்து தனியாளாகத் தின்ன முடியுமா என்ன? ஆனால், ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே என்று கொஞ்சமாக அரை கிலோ வாங்கி வந்தேன். முதலில் துவரன் செய்து , வீட்டிலுள்ளவர்களுக்குப் பிடித்துப்போய் விட்டால் மற்ற அயிட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்யலாமென எண்ணம். துவரன் எப்படிச்செய்தாலும் ருசியாக அமைந்து விடும். அதுவே புளிக்குழம்பு, அரைத்து விட்ட குழம்பு, ரோஸ்ட் என ஏதாவது செய்து, ருசி பிடிக்கவில்லை எனில் ஜென்மத்துக்கும் மெழுகுப்பாகலை வீட்டுக்குள் சேர்க்க இயலாது.

பாகற்காய் துவரன் செய்வது போல்தான் இதையும் சமைக்க வேண்டும். கழுவி தண்ணீர் வடிய விட்டு, துடைத்தெடுத்து நாலாக வகுந்து, பின் கடினமான விதைகளை வழித்து நீக்கிய பின், பொடியாக நறுக்கிக்கொண்டாயிற்று. கொஞ்சம் இளசான காய்களில் விதை இருப்பதில்லை. அவற்றை அப்படியே பொடியான நறுக்கிப்போடலாம். சிலர் வட்ட வட்டமாக அரிந்து போடுவதுண்டு. ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொண்டால் தாளிக்கும்போது போடலாம். ஒரு கப் தேங்காய்த்துருவலுடன்  கால் ஸ்பூன் சீரகம், ஒரு பல் பூண்டு, மூன்று பச்சை மிளகாய்கள், கால் ஸ்பூன் மஞ்சட்பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொண்டால் துவரன் மசாலாவும் தயார். பச்சை மிளகாய்க்குப்பதில் மிளகாய்த்தூள் சேர்த்தாலும் பாதகமில்லை.
இப்போது அடுப்பில் சீனிச்சட்டியை ஏற்றி அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச்சூடாக்கி, கடுகை இட்டு அது வெடித்ததும், உளுத்தம்பருப்பைப்போட்டு அது சிவந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை இட்டு வதக்கிக்கொண்டு, வெங்காயம் சிவந்ததும் காய்த்துண்டுகளைப்போடவும். அரை ஸ்பூன் உப்பிட்டு லேசாகப்பிரட்டி, ஒரு கை தண்ணீர் தெளித்து மூடியிட்டு வேக விடவும். முக்கால் வேக்காடு வரை வேகட்டும். இடையிடையே காயை நன்கு பிரட்டிக்கொடுக்கவும். இல்லையெனில் ஒன்று போல் வேகாது. சரியான பதம் வந்ததும், துவரன் மசாலாவைப்போட்டு சிட்டிகை உப்பிட்டு, கிளறி ஒரு நிமிடம் வரை, குறைந்த தணலில் மூடியிட்டு வேக விடவும். 
துவரன் தயார்
வெந்ததை அதன் மணமே அறிவித்து விடும். இப்போது மூடியைத்திறந்து துவரனை ஈரப்பசை ஏதுமின்றி பொலபொலவென ஆகும் வரை கிளறி இறக்கலாம். கொஞ்சங்கூட கசப்பேயில்லை. லேசாக பாகற்காய் வாசனையுடன் கோவைக்காய்த் துவரனின் ருசியுடன் இருந்தது மெழுகுப்பாகற்காய் துவரன். சாம்பார், பருப்புக்குழம்புகளுக்கு நன்கு பொருத்தமாக இருக்குமெனத்தோன்றுகிறது.

Wednesday, 18 September 2019

பச்சை ஆப்பிள்(க்ரானி ஸ்மித்) பச்சடி

சந்தையிலோ மால்களிலோ சிவப்பின் பல்வேறு வண்ணக்கலவைகளில் குவிந்து கிடக்கும் ஆப்பிள்களைப் பார்த்திருப்போம். இந்தியாவின் புகழ்பெற்ற சிம்லா ஆப்பிள் முதல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பல்வேறு வெளிநாடுகள் வரையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்காகக் காத்திருப்பவை அவை. அவற்றினூடே வித்தியாசமாய் பச்சை நிறத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஆப்பிள்களையும் கண்டிருக்க வாய்ப்புண்டு. காய் போல் தோற்றமளித்தாலும் அவையும் கனிகள்தாம். இவை, மற்ற ஆப்பிள்கள் அளவுக்கு இனிக்காது. ஆனால் சாறு நிரம்பியிருக்கும். இவ்வகை ஆப்பிள்கள் க்ரானி ஸ்மித் என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த மரியா ஆன் ஸ்மித் என்பவரால் 1868ல் உருவாக்கப்பட்ட ஒட்டு வகையான இது அவரைக்கௌரவிக்கும் பொருட்டு அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது.
முழுக்க முழுக்கப்புளிப்பும் எங்கோ ஒரு மூலையில் லேசாக அசட்டு இனிப்பும் கொண்ட இந்த ஆப்பிள் சமைத்து உண்ண ஏற்றது. வெளிநாடுகளில் இதை உபயோகித்து "Pie" எனப்படும் பதார்த்தம் சமைக்கப்படுகிறது. காரட், பீட்ரூட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை உபயோகித்து காய்கறி ஜூஸ் தயாரிக்கும்போது அரை ஆப்பிளையும் அதில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கிறது, உடம்புக்கும் நல்லது. நன்கு முற்றிய காய்ப்பருவத்தில், மாங்காயைப்போன்றே கடும் புளிப்புச்சுவை கொண்ட இந்த ஆப்பிளை மாங்காய்க்கு மாற்றாக உபயோகிக்கலாம். மாங்காய் கிடைக்காத மழைக்காலங்களில் கூட மாங்காய் சேர்த்த அயிட்டங்களை ருசித்த திருப்தி கிடைக்கும். 'மாங்காய் வைக்கும் இடத்தில் ஆப்பிளை வைத்தாற்போல' என்று அடுக்களைச்சித்தரே ஒரு முறை நெகிழ்ந்து அருளுரை அளித்தமை இங்கே நினைவு கொள்ள வேண்டிய ஒன்று. அவியலில் சேர்த்தால் சற்று அதிகமாகவே குழைந்து விடுகிறது. ஆனால் கூட்டாஞ்சோற்றில் சேர்த்தால் ருசி அள்ளும். அந்தப்படியே க்ரானி ஸ்மித்தை உபயோகித்து கேரளத்தின் புகழ்பெற்ற உப்பிலிடு எனும் பச்சடி அயிட்டத்தைச் செய்தேன். நன்றாகவே வந்தது.
ஒரு பச்சை ஆப்பிளை நன்கு கழுவித்துடைத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுதெல்லாம் பளபளப்பாக இருப்பதற்காக ஆப்பிளின் மேல் ரசாயனங்கள் பூசப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி நம் வயிற்றில் புளியைக் கரைக்கின்றன. ஆகவே கவனம் தேவை. துடைத்து எடுத்துக்கொண்ட ஆப்பிளை தோலுடன் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சட்பொடி, முக்கால் ஸ்பூன் மிளகாய்த்தூள், முக்கால் ஸ்பூன் உப்பு, கால் ஸ்பூன் ஆம்ச்சூர் பவுடர் அதாவது உலர்ந்த மாங்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். ஆம்ச்சூர் பவுடர் சேர்ப்பதால் முழுக்க முழுக்க மாங்காயின் ருசி வந்து விடும். ஆம்ச்சூர் பவுடர் இப்பொழுதெல்லாம் கடைகளில் சுலபமாகக் கிடைக்கிறது.

இரண்டு கரண்டி சமையல் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்யைச் சூடாக்கி, அதில் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு போன்றவற்றைத் துளி போலச் சேர்க்க வேண்டும். கடுகு வெடித்ததும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவிப்போட்டு அதுவும் பொரிந்ததும், பச்சடியின் தலையில் கொட்டவும். பின்பு நன்கு கலந்து இரண்டு மணி நேரமாவது ஊற விட்டு பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். இது மாங்காய்ப்பச்சடி இல்லை என்று நாம் சொன்னாலொழிய யாராலும் கண்டு பிடிக்க இயலாது. வெளியில் வைத்திருந்தால் மறுநாளே தீர்த்து விட வேண்டும். ஃப்ரிஜ்ஜில் வைப்பதானால் ஒரு வாரம் வரை வைக்கலாம். அதற்கு மேல் தாங்காது, கெட்டுப்போய் விடும். மாங்காய் உப்பிலிடின் ஆயுட்காலமும் இதேபோல் குறைவானதுதான் எனினும் ஆப்பிளின் ஆயுள் அதை விடக்குறைவாக இருக்கிறது.

மாங்காய் உப்பிலிடு, கேரளாவிலும் அதையொட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் விருந்துகளின்போது தவறாமல் இலையில் பரிமாறப்படும் ஒரு அயிட்டமாகும். தயிர்சாதம், கூட்டாஞ்சோறு, எலுமிச்சஞ்சாதம் போன்றவற்றுக்கு வெகு அமர்க்களமாகப் பொருந்திப்போகும் ஒரு தொடுகறி. வேனிற்காலத்தில் மட்டுமே மாங்காய் கிடைப்பதால் உப்பிலிடு ருசி கண்ட நாக்கு மற்ற காலங்களில் அதை நினைத்து ஏங்கி, அடுத்த வேனிற்காலம் எப்போ வருமோ? என்றெண்ணிக் காத்திருக்கும். இனிமேல் அப்படிக் காத்திருக்கத்தேவையில்லை. அதுதான் வருடம் முழுவதும் பச்சை ஆப்பிள் கிடைக்கிறதே. உப்பிலிடு செய்தால் ஆயிற்று. 

Thursday, 11 July 2019

முப்பொழுதும் க்ரீன் டீ..

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டத்துவங்கியிருக்கும் காலகட்டம் இது. ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள், மிதமான மற்றும் கடுமையான உடற்பயிற்சி முறைகள் என ஒரு சாரார் தீவிரமான முனைப்பிலிருக்க, இன்னொரு பக்கம் நோகாமல் நோம்பு கும்பிடும் மக்களும் உள்ளனர். இரண்டாம் வகை மக்களுக்கு க்ரீன் டீ ஓரளவு உதவுகிறது. ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீயுடன் மிதமான உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தால் உடற்பருமன் மற்றும் எடை குறைந்து கட்டுக்குள் வருகிறது. 

க்ரீன் டீக்கும் சாதாரணமாகக் கடைகளில் கிடைக்கும் தேயிலைத்தூளுக்கும் என்ன வித்தியாசம்?. பறிக்கப்பட்ட தேயிலைக்கொழுந்துகளை முறைப்படிப் பதப்படுத்தாமல் அதன் பசுமை அதிகம் மாறிவிடாமல் வைத்தால் அதுவே பசுந்தேயிலை எனப்படும் க்ரீன் டீ. பதப்படுத்தப்பட்ட தேயிலை கறுப்பு வண்ணத்தில் இருக்கும். பசுந்தேயிலை தூளாகவும் காய்ந்து சுருங்கிய இலைகளாகவும் கடைகளில் கிடைக்கிறது. இதில் தூளை விட இலைகள் மிகவும் சிறப்பான பலன்களைத்தருகின்றன. சாதாரணமாக ஒரு நாளைக்கு மூன்று கப் க்ரீன் டீ குடிப்பதே போதுமானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே.

க்ரீன் டீயிலிருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் நமக்கு பல வகையிலும் பலன் கொடுக்கின்றன. இவை நம் உடலின் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி கலோரிகளை எரிக்கின்றன. இதனால் உடலின் அதிகப்படி கொழுப்புகள் கரைந்து உடல் மெலிந்து, எடை குறைந்து, வயதான தோற்றம் மாறி இளமைத்தோற்றம் கிடைக்கிறது. உடல் எடை மற்றும் கொழுப்பு காரணமாக சீர் கெட்டிருந்த ஆரோக்கியம் சீர் படுகிறது. இரத்தத்திலிருக்கும் கொழுப்பு கரைவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.  க்ரீன் டீயில் குறைந்த அளவிலிருக்கும் காஃபின் நமது மூளை நரம்புகளைத்தூண்டி, அதன் செயல்திறனை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது. ஞாபகசக்தியும் மேம்படுகிறது. அல்ஸீமர் எனும் மறதி நோயிலிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. கட்டிகளைக் கரைத்து புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு அளிப்பதாகச் சொல்லப்பட்டாலும் அது இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. அது சம்பந்தமாக ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
நிறைய சாதகங்கள் இருப்பது போல் ஒரு சில பாதகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நாணயத்துக்கு இருபக்கங்கள் இருப்பது போல் என்றும் சொல்லிக்கொள்ளலாம். கொழுப்பைக்கரைக்கும் தன்மை காரணமாக ஸ்ட்ரோக், மாரடைப்பு போன்றவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும் அதே தன்மையின் காரணமாக ரத்தத்தைச் சட்டென்று உறைய விடாமலும் தடுக்கிறது. ஆகவே ரத்தத்தை நீர்க்கச்செய்யும் மருந்துகள், ஆஸ்ப்ரின், விட்டமின் கே போன்றவற்றை  எடுத்துக்கொள்பவர்கள், Anxiety எனும் மனப்பதற்றப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பின் க்ரீன் டீயை எடுத்துக்கொள்வது நன்று. ஏனெனில் ரத்தம் ஏற்கனவே நீர்த்து இருக்கும்பொழுது அதை இன்னும் நீர்க்கச்செய்யும் விதமாக க்ரீன் டீயை அருந்தினால் இரத்த அழுத்தம் அதிகமாகக்கூடும். படபடப்பு, லேசான மயக்கம் போன்றவை ஏற்படும். க்ரீன் டீயிலிருக்கும் காஃபின் மனப்பதற்றத்தை மேலும் அதிகரிக்கச்செய்யும். பொதுவாகவே காஃபின் ஒவ்வாமை உள்ளவர்கள் காஃபி, டீ வகைகளைத் தவிர்ப்பது சிறந்தது.

க்ரீன் டீயை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது, அசிடிட்டி, அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது எனவும் கூறப்படுகிறது. வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடித்தால் வயிற்று உபாதைகள் வரும் என்று கேள்விப்பட்டாலும் அவ்வாறு வரவில்லை என்று சொந்த அனுபவத்தில் கண்டு கொண்டேன். கொதிக்கக்கொதிக்கவும் இல்லாமல் ஆறிக் குளிர்ந்தும் இல்லாமல் பொறுக்கும் சூட்டில் குடித்தால் துவர்ப்பு தெரியாது. 

க்ரீன் டீயைத் தயாரிப்பது மிகவும் சுலபம். இதற்கு பால் தேவையில்லை. கொதி நிலையிலிருக்கும் ஒரு கப் வெந்நீரில் சிறிது தேயிலைத்தூளையோ அல்லது க்ரீன் டீ பாக்கெட்டையோ போட்டு இரண்டு நிமிடம் மூடி வைத்து விட வேண்டும். பின் வடிகட்டிக் குடிக்கலாம். சுவைக்கேற்ப சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். அப்படியில்லாமல் அடுப்பில் வைத்தும் தயாரிக்கலாம்.
இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். அதிலேயே சிறிதளவு இஞ்சியைத் துருவிப்போட்டுக்கொள்ளவும். விரும்பினால் இஞ்சிக்குப் பதிலாக அரை ஸ்பூன் சுக்குப்பொடியையும் போட்டுக்கொள்ளலாம். மழை மற்றும் குளிர் காலங்களில் சுக்கு தொண்டைக்கு எவ்வளவு இதம் தரும் என்பதைக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லைதானே? கால் ஸ்பூன் டீ மசாலாவையும் சேர்த்துக் கொதிக்க வைத்தால் ருசியும் மணமும் அதிகரிக்கும், புதிதாக அருந்த ஆரம்பித்திருப்பவர்களுக்கு துவர்ப்புச்சுவை உறுத்தாது. கொஞ்சம் நாக்குக்குப் பழகியபின் டீ மசாலா போடுவதை நிறுத்திக்கொள்ளலாம். எல்லாம் சேர்ந்து நன்கு கொதித்ததும், இரண்டு டீ சாஷேக்களையோ அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் க்ரீன் டீத்தூளையோ போட்டு, அடுப்பை குறைந்த தணலில் ஒரு நிமிடம் வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக டீத்தூளின் சாரம் தண்ணீரில் இறங்கட்டும். லேசான பொன்னிறத்திற்கு தண்ணீர் மாறுவதைக் கண்கூடாகக் காணலாம். சட்டென்று வேலை ஆக வேண்டுமென்று அதிகத்தணலில் வைத்தால் டீ கடுத்து ருசி கெட்டு விடும். குடிக்கவே இயலாது.

ஒரு நிமிடத்திற்குப் பின் இறக்கி வடிகட்டி, ஒரு கப் தேநீருக்கு அரை மூடி எலுமிச்சையைப் பிழிந்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து பயன்படுத்தலாம். மீதமிருக்கும் ஒரு கப் தேனீரை ஃப்ளாஸ்கில் ஊற்றி வைத்தால் அடுத்த முறைக்கு ஆகும். என்னிடமிருக்கும் மில்டன் ஃப்ளாஸ்க் 22 மணி நேரம் வரை சூடு தாங்குகிறது. ஆகவே கொஞ்சம் மொத்தமாக தேனீர் தயாரித்து அதில் ஊற்றி வைத்துக்கொள்வது வழக்கம். வேண்டும்போது சட்டென கோப்பையில் ஊற்றி சுடச்சுட அருந்தலாம். கேஸ் செலவும் மிச்சம்.  ஆஃபீசுக்கு டப்பாவுடன் வழக்கமாக வெந்நீர் எடுத்துச்செல்லும் என் மகள் தற்பொழுதெல்லாம் தானே க்ரீன் டீ தயாரித்து, எடுத்துச்செல்ல ஆரம்பித்திருக்கிறாள். அப்படியொரு பொழுதில் அதை வீடியோவாக எடுத்து  என்னுடைய யூ டியூப் சேனலில் வலையேற்றியதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். கண்டு க்ரீன் டீ தயாரித்து பலனடையுங்கள்.

பால் மற்றும் பால் பொருட்கள், நமது உடல் எடையைக் கூட்டுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறதென்று சொல்லப்படுகிறது. பால் சேர்க்காமல் தயாரிக்கப்படுகிறது ஆகவே, க்ரீன் டீயால் எடை கூடுதலாகாது. கொழுப்பைக் கரைப்பதனால் எடை குறையவே செய்யும். தயாரித்த பின் எஞ்சும் சக்கையை நன்கு ஆறவிட்டு, அதன் பின் செடிகளுக்குப் போட்டால் நல்ல உரமாகிறது. ஏனோதானோவென பூத்துக்கொண்டிருந்த எங்கள் வீட்டு ரோஜா, டீத்தூள் உரத்தைப்போட ஆரம்பித்தபின் கப்பும் கவறுமாகக் கிளை விட்டு, முன்பை விட அதிகமாகவும் பெரிதாகவும் பூக்க ஆரம்பித்திருக்கிறது. வடிகட்டிய டிக்காக்ஷனில் ஃபேஸ் பேக்கைக் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் ஊற விட்டுக் கழுவிக்கொண்டால் சுருக்கங்கள் குறைந்து தோல் மென்மையாகவும் பளபளப்பாகவும் ஆகிறது.

LinkWithin

Related Posts with Thumbnails