Saturday 11 January 2020

வெந்தயக்காடி

சற்றே புளிக்க வைத்த கஞ்சி வகைகளைக் காடி என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நெல்லைச்சீமையில், சோளத்தைக் குத்தி அரிசியாக்கி களி போல் வேக வைத்து, ஆற விட்டு, மறு நாள் நீத்தண்ணி, மோர் போன்றவற்றை விட்டுக் கரைத்துக் கஞ்சியாகக் குடிப்பார்கள். இதை சோளக்காடி அல்லது சோளங்காடி என அழைப்பர். வேனிற்காலங்களில் ஏற்படும் உடற்சூட்டைத்தணிக்கும் வல்லமை கொண்டது அது. ஆனால் வெந்தயக்காடி அப்படிப்பட்டதல்ல, செய்த சூட்டோடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காலையில் செய்ததை இரவிலோ, அல்லது இரவில் செய்ததை மறுநாள் காலையிலோ கூட சாப்பிடலாம். நன்றாகவே இருக்கும். ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்துச்சாப்பிட்டாலும் தீங்கில்லை. வெந்தயத்தின் மணத்தோடு, கருப்பட்டியின் ருசியோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.  புளிப்பு ஏறுமுன் தீர்த்து விட வேண்டும். புளித்து விட்டால் சாக்கடைக்கு அபிஷேகம் செய்து விட வேண்டியதுதான்.
வெந்தயக்காடி
வெந்தயக்காடி பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் நெஞ்சுச்சளிக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. உளுந்து சேர்ந்திருப்பதால் இடுப்பெலும்பைப் பலமாக்கும். இதில் கலந்திருக்கும் வெந்தயமோ கோடை காலத்தில் உடற்சூட்டைத் தணித்து சூட்டு வலியிலிருந்து பாதுகாக்கிறது. சுருங்கச்சொன்னால், இதை இன்ன பருவகாலத்துக்கு மட்டும் ஏற்றது எனக் குறுக்கி விட முடியாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காடி எனப் பெயர் கொண்டிருக்கிறதே தவிர ருசியில் பாயசத்திற்கு தூரத்துச் சித்தி முறை.

மூலப்பொருட்களைப் பொதுவாக நன்கு ஊற விட்டு அரைத்துத்தான் செய்ய வேண்டும். ஆனால் அந்தக்காலத்தில், ஊற வைக்காமல், நேரடியாக  ஆட்டுரலில் இட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துத் தயாரிப்பார்கள் என ஒரு முறை கேள்விப்பட்டேன். இக்காலத்தில் மிக்ஸியில் அப்படியெல்லாம் அரைக்கப் புகுந்தால் இயந்திரம் பணாலாகி விடுமென்பது மட்டும் உறுதி. ஆகவே ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடவும்.


மூலப்பொருட்கள்
பச்சரிசி அரை கப் எனில், உடைத்த ஆனால் தோல் நீக்காத உளுந்து அரை கப் என்ற வீதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அரிசிக்குப் பதிலாக, சோளம், கம்பு, குதிரை வாலி , கேழ்வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கோதுமையைத்தவிர மற்ற எல்லா தானியங்களுக்கும் அனுமதியுண்டு.  பொதுவாகவே, அடுக்களையில் சட்டென்று வேலை ஆக வேண்டுமென்பதற்காக பெண்கள் சில 'ஜோல்ஜப்பாட்டா' வேலைகளைச் செய்வதுண்டு. அதாவது, சிறு தானியங்கள் முழுதாக இல்லாமல் மாவாகத்தான் இருக்கின்றன என்றாலும் பாதகமில்லை. அவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். தோல் நீக்கிய உளுந்து மட்டும் என்ன பாவம் செய்தது?. அதுதான் இருக்கிறதென்றால் அதையே எடுத்துக்கொள்வோம்.

ஒரு பாத்திரத்தில், பச்சரிசி அல்லது சிறு தானியம் அல்லது தானிய மாவை அரை கப் எடுத்துக்கொண்டு அத்துடன் அரை கப் உளுந்தைச் சேர்த்து கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேய்த்து அலசி வடித்து விட வேண்டும். பின் நன்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மாவை உபயோகிப்பதானால், அரிசியைக் கழுவிக்கொண்டு அதன் பின் பிற பொருட்களைச் சேர்க்கவும். அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். இரண்டு அங்குலம் அளவில் சுக்கை எடுத்து நன்றாகக் கழுவி, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். இரண்டு வட்டுக்கருப்பட்டிகளை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும். உடைத்துப்போட்டால் சட்டெனக்கரைந்து சமையல் எரிவாயு மிச்சப்படும். உடங்குடிக் கருப்பட்டிகளின் இனிப்பும் சுவையும் தனி என்ற தனிக்குறிப்பு இங்கே சேர்க்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் கருப்பட்டி கிடைக்கவில்லை எனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இங்கே இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.


அர்ஸீம்பருப்பும்... மன்னிக்கவும், அரிசியும் உளுத்தம்பருப்பும் வெந்தயமும் ஊறிய பின், அதை ஊற வைத்த தண்ணீருடன் மிக்ஸியிலிட்டு, இடித்து வைத்த சுக்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் அத்துடன் தேங்காயைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். வெண்ணெய் பதத்துக்கு அரைத்ததை விட சன்ன ரவை பதத்துக்கு அரைத்தெடுத்த மாவில் காடி காய்ச்சினால் அருமையாக வரும்.

ஒரு பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீரை ஊற்றி சூடானதும் தட்டி வைத்த கருப்பட்டித்துண்டுகளைப்போட்டு அது கரையும் வரை சூடாக்கவும். கரைந்தபின் கல், மண், பிசிறுகள் போக நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கருப்பட்டிப்பாலை மறுபடியும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. தண்ணீர் சூடானதும், அரைத்த மாவை இதில் கொஞ்சங்கொஞ்சமாக ஊற்றி கட்டிகளில்லாமல் கிளறிக்கொடுக்கவும். எல்லா மாவையும் சேர்த்தபின் தணலை நன்கு எரிய விட்டு, காடி அடிப்பிடிக்காமல், நீளமான அகப்பையொன்றால் நிமிடத்துக்கொரு முறை கிளறிக்கொடுக்கவும். கிராமங்களில் இம்மாதிரியான சமையல்களுக்காகவே 'துடுப்பு' என்ற நீளமான மரக்கரண்டியை வைத்திருப்பர். பெயருக்கேற்றாற்போல் துடுப்பின் தோற்றத்தை ஒத்ததாக அதன் மினியேச்சர் போல் இருக்கும். சூடான பதார்த்தம் கொதித்துத்தெறிக்கும்போது அது நம் கையில் படாமல் பாதுகாத்துக்கொள்ள இது ஏற்றது. 


காடி தளபுளவெனக்கொதித்து, ஒன்று சேர்ந்து வெந்து பளபளவென வரும். அந்நிலையில், தணலைக்குறைத்து இரண்டு நிமிடங்களுக்கு காடியைக் கைவிடாமல் கிளறி இறக்கவும். 

இதைச்செய்வது ஒரு கலை எனில், சாப்பிடுவதும் இன்னொரு கலையே. சூப் கிண்ணங்களில் ஊற்றி நாசூக்காகப் பருகலாம், தம்ளர்களில் ஊற்றி சர்ர்ர்ர்ரென்று உறிஞ்சிப் பருகலாம், அகன்ற தட்டங்களில் ஊற்றி கரண்டியால் எடுத்துக் குடிக்கலாம். அத்தனை விதங்களிலும் ருசித்திருந்தாலும், எங்கள் அப்பாவைப்பெற்ற ஆச்சி வீட்டில் ஒரு முறை வெந்தயக்காடி குடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது.
 கொதிக்க ஆரம்பித்து
வெந்தயக்காடி தயார்
வீட்டருகே வளர்ந்திருந்த வடலிப்பனையிலிருந்து இளங்குருத்தாக அகலமான இலைகளை ஆய்ந்து வந்து, கரண்டியின் அளவுக்கு துண்டு துண்டாக நறுக்கி அதை உபயோகித்து, காடியைக் குடிக்கச்சொன்னார்கள். உளுந்தின் ருசியும், வெந்தயத்தின் மணமும், கருப்பட்டியின் இனிப்புமாக தித்தித்துக்கிடந்த காடியின் ஊடே பனையோலையின் மணமும் ருசியும் ஊடறு பாவாகக் கலந்து சுவையைக் கூட்டியது வித்தியாசமானதுதான். அந்த ருசியும் அனுபவமும் அப்புறம் வாய்க்கவேயில்லை.

6 comments:

மனோ சாமிநாதன் said...

//உளுந்தின் ருசியும், வெந்தயத்தின் மணமும், கருப்பட்டியின் இனிப்புமாக தித்தித்துக்கிடந்த காடியின் ஊடே பனையோலையின் மணமும் ருசியும் ஊடறு பாவாகக் கலந்து சுவையைக் கூட்டியது வித்தியாசமானதுதான். அந்த ருசியும் அனுபவமும் அப்புறம் வாய்க்கவேயில்லை.//
கஞ்சியின் சுவை முழுவதும் இந்த வரிகளில் தெரிகிறது. அந்த அளவு ரசித்து அற்புதமாய் எழுதியிருக்கிறீர்கள். நல்லதொரு குறிப்பிற்கு நன்றி. செய்து பார்த்து விடலாம். கருப்பட்டி அளவு கப் அளவிற்கு சொல்ல முடியுமா? இதை சூடாக குடிக்க வேண்டுமா அல்லது ஆறி மறுநாள் குடிக்க வேண்டுமா?

Yaathoramani.blogspot.com said...

படங்களுடன் பகிர எத்தனை சிரமம்
எனபதை நினைக்க மலைப்பே வருகிறது
இரண்டையும் மிகச் சிறப்பாகச் செய்ய
சமையல் கலையிலும் கூடுதல்
திறமை வேண்டும்
காடிக்கான விளக்கத்துடன் பகிரந்தது சிறப்பு
ஏனெனில் நிறைய பேருக்கு அந்த வார்த்தையே
புதிதாகத் தான் இருக்கும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

வெந்தயக் காடி.... புதியதொரு சுவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஊருக்கு வரும்போது தான் இதைச் செய்ய, சுவைக்க வாய்ப்பு! :) இங்கே செய்வதற்கு வாய்ப்பில்லை.

தொடரட்டும் பதிவுகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோம்மா,

//செய்த சூட்டோடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காலையில் செய்ததை இரவிலோ, அல்லது இரவில் செய்ததை மறுநாள் காலையிலோ கூட சாப்பிடலாம். நன்றாகவே இருக்கும். ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்துச்சாப்பிட்டாலும் தீங்கில்லை//

கருப்பட்டியின் அளவை கட்டுரையிலேயே சொல்லியிருக்கேன். உத்தேசமாக இரண்டு அல்லது இரண்டரை கப் என்று வைத்துக்கொள்ளலாம். வேண்டுமானால், இரண்டு வட்டுக்கருப்பட்டிகளை எடுத்துக்கொண்டு அவற்றைத் தூளாக்கி அளந்து கொண்டால் தெரிந்து விடும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

ஒவ்வொரு பதார்த்தத்துக்குமென குறிப்பிட்ட சொற்கள் உள்ளன. இன்றைய கால கட்டத்தில் அவையெல்லாம் வழக்கொழிந்து ஒரே சொல்லாக மாறி வருகின்றன. காலத்தின் கோலம் :(

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

செய்து சாப்பிட்டு விட்டு சொல்லுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. முக்கியமாக ரோஷ்ணிக்கும் ஆதிக்கும்.

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails