Monday 13 May 2019

தால் ப்ரோக்கோலி.

முட்டைக்கோஸ் குடும்பத்தைச்சேர்ந்த ப்ரோக்கோலி, அமைப்பில் கொஞ்சம் காலிஃப்ளவரை ஒத்திருக்கும். நடுத்தண்டிலிருந்து கிளைகள் போன்ற அமைப்புகள் கிளம்பி பரவியிருக்கும். அவற்றில் சிறு இலைகளுடன் பூக்கள் அமைந்திருக்கும். இப்பூக்கள் அடர்ந்த பச்சை நிறத்திலும், நடுத்தண்டு இளம் பச்சை நிறத்திலும் காணப்படும். அடர்ந்த பச்சை நிறத்திலிருக்கும் பூக்களின் மேல் லேசான மஞ்சள் நிறம் தோன்றுமுன் அதைச் சமைத்து விட வேண்டும். காலிஃப்ளவரைப்போன்றே இதன் தண்டு, பூக்கள் என எல்லாப்பாகங்களும் உண்ணத்தகுந்ததே. சமைத்து உண்பதை விட, ப்ரோக்கோலியைப் பச்சையாக சாலட்டில் சேர்த்து உண்பதால் பல நன்மைகள் அதிகம் கிடைக்கின்றன. 

ஆனால், நமக்கோ வேக வைத்து கறியாகவோ , பொரித்து பகோடா, பஜ்ஜி, மற்றும் மஞ்சூரியன் போன்ற வகைகளாகவோ உண்டால்தான் நாக்கு ஜென்ம சாபல்யமடையும். அடிக்கடி சூப் செய்து சாப்பிட்டு வந்தாலும் ஜென்மம் கடைத்தேறும். எனினும் சப்பாத்தி தேசத்து குடிமகளாக இருப்பதால் முன்பொரு முறை காலிஃப்ளவரில் செய்த அதே கறியை இப்போது ப்ரோக்கோலியிலும் செய்து பரிமாறியிருக்கிறேன். 

ஒரு ப்ரோக்கோலி, ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூணு பச்சைமிளகாய், அரை கிண்ணம் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரை கப் ஊறவைத்த கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1 டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் கரம்மசாலா, தேவைக்கேற்ப உப்பு இருந்தா இதை ஈஸியா செஞ்சுடலாம்.

பருப்பு ஊறவைக்க நேரமாகுமேன்னு நினைக்க வேண்டாம்.  கொதிக்க  வைத்த தண்ணீரை ஃப்ளாஸ்க், அல்லது ஹாட்பேக்கில் விட்டு அதுல பருப்பைப்போட்டு மூடிவெச்சுடுங்க. ஜஸ்ட்... பதினஞ்சு நிமிஷத்துல ஊறிடும். அதுக்குள்ள, நீங்க காய் நறுக்கி, மசாலா அரைச்சு வெச்சுட்டு, சப்பாத்தியை ரெடிபண்ணுங்க.. இல்லைன்னா வேற வேலை ஏதாவது இருந்தா பாத்துட்டு வாங்க.

ப்ரோக்கோலியை சின்னச்சின்ன பூக்களாக உதிர்த்து வெச்சுக்கோங்க, உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் அளவுக்கு துண்டுபோட்டுக்கோங்க.

சீரகம், கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், மஞ்சள், கரம்மசாலா இதையெல்லாம் நல்லா மசிய அரைச்சு வெச்சுக்கோங்க.

இப்ப, அடுப்பில் சூடாகிக்கிட்டிருக்கிற கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களையும், கடலைப்பருப்பையும் லேசா வதக்குங்க. அப்புறம் அரைச்சு வெச்ச மசாலாவைப் போட்டு நல்லா கிளறிவுடுங்க. பச்சைவாசனை போனதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரை கப் தண்ணீரும் ஊத்தி, தேவையான அளவு உப்பும் போடுங்க. இப்ப, இதை குக்கரில் ரெண்டு விசில் வரும்வரை வேக விடுங்க. ப்ரஷர் பேனில் செய்யறதாயிருந்தா அப்படியே மூடி போட்டு வெயிட்டைப் போட்டுடலாம்.

அவ்வளவுதான்... வெந்ததும் அதை மறுபடி ஒரு நிமிஷம் கொதிக்க வெச்சா இன்னும் ருசியாயிருக்கும். விரும்பினால் பச்சைப்பட்டாணியும் கூடுதலா சேர்த்துக்கலாம். 

டிஸ்கி: செய்முறையை ஒரு சின்ன வீடியோவாகவும் பதிவிட்டிருக்கிறேன். யூ டியூபிலும் கண்டு தெளியலாம்.

Friday 10 May 2019

இளநீர் பாயசம்..

கோடைக்காலம் தொடங்கி முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் வெயிலும் வெம்மையும் வாட்டியெடுக்கத் துவங்கி விட்டன. தாகத்தைத் தணிக்க ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், இளநீர், குளிர் நீர் என இப்போதே குளிர்பதனப்பெட்டியை நிரப்பி வைக்கவும் ஆரம்பித்து விட்டோம். வெயில் இப்போதே இந்த போடு போடுகிறதே.. இன்னும் ஏப்ரல், மே வந்தால் என்னாவோமோ!!

கோடைக்காலத்தில் உடற்சூடு காரணமாக ஏற்படும் வயிற்று வலி, கண் எரிச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவற்றுக்கு இயற்கை இதே கோடை காலத்தில் மருந்தும் வைத்திருக்கிறது. இளநீர், நுங்கு போன்றவைதான் அவை. உள்ளுக்குச் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவது மட்டுமல்ல, நுங்கினுள்ளிருக்கும் நீரையோ அல்லது இளநீரையோ கொஞ்சம் எடுத்து முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொண்டால் கோடையில் ஏற்படும் வியர்க்குரு, கொப்புளங்கள் போன்றவை மறையும். கொஞ்சம் சந்தனப்பவுடர் அல்லது கடலை மாவுடன் கலந்து பேக்காவும் போடலாம்.

வீரியம் அதிகமுள்ள மருந்துகளை உட்கொள்ளும் சமயத்தில் வயிற்று வலி ஏற்படுவது சகஜம். என்னதான் மருத்துவர்கள் ஆன்ட்டி-அசிடிட்டி வகை மாத்திரைகளைப் பரிந்துரைத்தாலும் ‘அவ்வப்போது’ இளநீர் குடிப்பது வயிற்றைப் புண்ணாகாமல் பாதுகாக்கும். இதில் சோடியம் அதிகமிருப்பதால் இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்களும், டயபடீஸ் உள்ளவர்களும் அளவுடன் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப் படுகிறார்கள்.

மஹாராஷ்ட்ராவில் “பானி வாலா, மலாய் வாலா” என இரு வித இளநீர்கள் கிடைக்கும். தண்ணீர் மட்டும் போதும், உள்ளே இருக்கும் வழுக்கை வேண்டாமென்றால் ‘பானி வாலா’ எனக் கேட்டு வாங்குவோம். அதுவே மதிய உணவு நேரங்களில் வெளியே செல்ல நேரிட்டால், ‘மலாய் வாலா’ உகந்தது. தண்ணீரைக் குடித்து விட்டு, உள்ளே இருக்கும் வழுக்கையையும் சாப்பிட்டால் வயிறு திம்மென்று ஆகிவிடும். அதிலும் ‘பத்லா மலாய்’ எனக் கேட்டு வாங்க வேண்டும். அதுதான் இளசாக சாப்பிட நன்றாக இருக்கும். ‘கடக் மலாய்’ வாங்கி விட்டாலோ வீட்டிற்கு எடுத்து வந்து கறி சமைக்க வேண்டியதுதான். லேசாக முற்ற ஆரம்பித்ததை வேறென்ன செய்வது. வாய் வலிக்க வலிக்க சாப்பிட்டுத் தீர்க்க வேண்டியதுதான்.

இளநீரை அப்படியே சாப்பிடுவது ஒரு ருசி என்றால் அதையே பாயசமாக்கிச் சாப்பிடுவது வேற லெவல் ருசி. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் ஏகப்பட்ட செய்முறைகளை ஆராய்ந்ததில், பெரும்பான்மையானவை பிற பால்பாயசங்களின் முறையையே ஒத்திருந்தன. அப்படியிருந்தால் இதற்கும் மற்றவைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? வித்தியாசம் தேடி அலைந்தபோது கிடைத்தது இந்த செய்முறை. அதிகம் சமைக்கவே தேவையில்லாத, நெய், முந்திரிப்பருப்பு என எதுவும் போடாத இந்தப் பாயசம் அட்டகாசமான ருசியில் அமைந்தது.

தேவையானவை அதிகமில்லை ஜெண்டில் மென் அண்ட் விமென்.

இரண்டு கப் கெட்டியான பசும்பாலை லேசாகச் சூடாக்கி அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அகர் அகரைக் கரைத்து விடவும். பின், காய்ச்சிக்கொதிக்க வைத்து பால் ஒரு கப் அளவுக்குக் குறுகும் வரை வற்ற விட்டு இறக்கி அறை வெப்ப நிலைக்கு வரும் வரை குளிர வைக்கவும். அடுப்பின் பங்கு இத்தோடு முடிந்தது. இனியெல்லாம் அடுப்பில்லாச் சமையலே..

ஒரு கப் இளநீர் வழுக்கையை எடுத்துக்கொண்டு அதில் கால் கப் அளவு எடுத்து தனியே வைக்கவும். பின், மீதமிருக்கும் வழுக்கையுடன் கொஞ்சம் கொஞ்சமாக இளநீரைச் சேர்த்து மைய அரைக்கவும். இதற்கு, ஒரு கப் இளநீர் போதும். மீதமிருந்தால் கடகடவென குடித்து விடுங்கள். தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான் தெரியுமோ!!!!!

அரைத்த விழுதை, ஏற்கனவே சுண்டக்காய்ச்சி ஆற வைத்திருக்கும் பாலில் சேர்த்துக் கலக்கவும். 

அரை மூடி தேங்காயைத் துருவி நன்கு அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பாலெடுத்து இரண்டையும் கலந்து ஒரு கப் எடுத்துக்கொண்டு அதையும் இத்துடன் சேர்க்கவும்.

எடுத்து வைத்த வழுக்கைத் தேங்காயைப் பொடிப்பொடியாக நறுக்கி அதையும் சேர்த்துக் கலக்கி, கொஞ்சமாக ஏலக்காய்ப் பொடியையும் தூவிக்கொள்ளவும். அவ்வப்போது கடிபடும் தேங்காய்த்துண்டங்கள் வாழ்வின் சுவாரஸ்யத்தைக் கூட்டும். கொஞ்சம் இளசான துண்டங்கள் கிடைத்தால், “டிவைன்” என கண்மூடிச் சொக்கலாம்.

பாயசம் என்றால் இனிப்பு இல்லாமலா? அரை கப் சர்க்கரையைப் பொடி செய்து சேர்க்கலாம். ஆனால், ஒரு கப் கண்டென்ஸ்ட் மில்க்கைச் சேர்த்தால் ருசியும் நிறமும் மணமும் நன்றாக இருக்கிறது.

அவ்வளவுதான், பாயசப்பாத்திரத்தை ஃப்ரிஜ்ஜில் வைத்து மூன்று மணி நேரத்திற்குக் குளிர விடுங்கள். காலைச் சமையல் முடிந்த கையோடு பாயசத்தைத் தயார் செய்து வைத்து விட்டால், லஞ்சுக்கு டெஸர்ட் ரெடி கண்ணாடிக்கிண்ணங்களிலோ அல்லது பழரசக்கோப்பைகளிலோ பரிமாற வேண்டியதுதான்.

கொஞ்சம் ரிச்சாக பரிமாற நினைத்தால், கொஞ்சம் பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி சின்னச்சின்னதாக ஸ்லைஸ் செய்து, அதை பாயசத்தின் மேலாகத் தூவிப் பரிமாறலாம். நெய்யில் வறுத்த முந்திரி திராட்சையெல்லாம் உங்கள் ச்சாய்ஸ். இளநீர்ப் பாயசத்தின் தனிச்சுவையை அனுபவிக்க விரும்பியதால் நான் அதெல்லாம் சேர்க்கவில்லை. செய்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டால் டின்னருக்கோ, வார இறுதி விருந்துகளுக்கோ பரிமாறி அசத்தி விடலாம். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, சூட்டு வலி என எல்லாவற்றையும் சரி செய்யும். தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய் வழுக்கை வயிற்றுப்புண்ணை ஆற்றும், உடலுக்குக் குளுமை தரக்கூடியது. என நன்மைகள் அனேகம். எல்லாவற்றையும் விட வெயில் காலத்தில் ஜில்லென்று சாப்பிட உகந்த ஒரு உணவு என்பதற்கு மேல் வேறென்ன வேண்டும்?

படங்களை ஒரு சின்ன வீடியோத்தொகுப்பாக யூ டியூபில் வலையேற்றியிருக்கிறேன். பிற்கால சேமிப்பிற்காக :)


Tuesday 7 May 2019

ஃப்ரெஷ் பட்டாணி குருமா செய்முறை

தினமும் இட்லி, தோசை, உப்புமா வகைகள் சாப்பிட்டுச்சாப்பிட்டு போரடித்துப்போய் குடும்பத்தினர் கொலைவெறியில் இருப்பார்கள். அவர்கள் சாதாரணமாகப் பார்க்கும் பார்வையில் கூட, "உனக்கு வேற டிபனே செய்யத்தெரியாதா?" என்ற கேள்வி சொட்டும். அப்படியொரு பொழுதில் 'நாளை என்ன டிஃபன் செய்யலாம்?' என முந்தின தினமே மதியத்தூக்கத்தைத் தியாகம் செய்து விட்டு சைடு வாக்கில் படுத்து சிந்திக்கவும்.

"ஆ!!!! சப்பாத்தியும் பட்டாணி குருமாவும் செய்யலாம்' என்று பளிச்சென ஐடியா உதித்ததும், உடனே அடுக்களைக்குச் சென்று ஒரு கிண்ணத்தில் தேவையான காய்ந்த பட்டாணியைப் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும். பின் அன்றாட வேலைகளைத் தொடரவும்.

'முளை விட்ட பட்டாணியில் குருமா செய்தால் குடும்பத்தினருக்குத் தேவையான ப்ரோட்டீன் சத்து கிடைக்குமே' என்றொரு எண்ணம் தோன்றினால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப இஸ்திரி என அறிக. இரவு பத்தரை மணி வாக்கில், ஊற வைத்த பட்டாணியை நீரை வடித்து விட்டு முளை கட்ட எத்தனிக்கும்போதுதான், கோதுமை மாவு தீர்ந்து விட்ட விவரமும், அந்நேரத்துக்கு கடைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டிருக்கும் என்ற விவரமும் மூளையின் டேட்டாபேஸிலிருந்து சப்ளை ஆகும். "ச்சே... எடுத்து வெச்சிருந்தாலும் கொடுத்து வெச்சிருக்கணும். சப்பாத்தி குருமாவை நாளாக்கழிச்சு பார்த்துக்கலாம்" என அலுத்துக்கொண்டு பட்டாணி போட்டு வைத்த டப்பாவை மூடி, ஃப்ரிஜ்ஜில் உள்ள்ள்ளே தள்ள்ளி வைத்து விடவும். மறுநாள் காலை வழக்கம்போல் உப்புமா செய்து வீட்டினரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளவும். அன்றாட வேலைகள் மற்றும் பிக்கல் பிடுங்கல்களிடையே பட்டாணி டப்பா நினைவின் அடுக்குகளில் அமிழ்ந்து மறைந்தே போகும்.

ஒரு சுபயோக சுபதினத்தில், புதைபொருள் ஆராய்ச்சியின்போது.. அதாவது, வேறு ஒரு பொருளைத் தேடும்போது, அந்த டப்பா தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். அதில் என்ன வைத்தோமென்ற ஆவல் மீதூற டப்பாவைத் திறந்து நோக்குங்கால் பட்டாணிகள் முளை கட்டி, முளைத்து, வேர் விட்டு, பசிய சிறு இலைகளுடன், கூட்டில் சின்னஞ்சிறு குஞ்சுகளென அண்ணாந்து நம் முகம் நோக்கும்.

கசிந்து, கண்ணீர் மல்கி, 'ஒரு மாசத்துக்கு மேலாகியும் இது எப்படி பொழைச்சுக் கிடக்குது பாரேன்!!' என ஆனந்தித்து, "வா.. என் ஷெல்வமே" என தோட்டத்திற்குக் கூட்டிச் சென்று குழியில் தள்ளி மூடி விட வேண்டும். போனால் போகிறதென்று ஒன்றிரண்டு செடிகள் வளர்ந்து பூத்துக் காய்க்கும்.

அப்புறமென்ன??.. ஃப்ரெஷ்ஷாகப் பறித்த பட்டாணியில் நீங்கள் புலாவ்தான் செய்வீர்களோ இல்லை மட்டர் பனீர், ஆலு மட்டர் என வகைவகையாய் செய்வீர்களோ... உங்கள் பாடு.

குருமா செய்முறையா??.. குருமா தவிர்த்த குழம்புகளாலும் ஆனது இவ்வுலகம்.

LinkWithin

Related Posts with Thumbnails