மனிதர்களைப்பற்றி, அவர்களின் அழகுகள், ஆசாபாசங்கள், பலம், பலவீனம் என அத்தனையையும் பற்றி எழுதியவர் தி.ஜானகிராமன். தஞ்சை மண்ணைச் சொந்தமாகக்கொண்ட அவரது கதைகளில் பெரும்பாலும் அம்மண்ணும் மண் சார்ந்த கலாச்சாரமுமே பெருமளவில் பிரதிபலிக்கின்றன. அதிக அலங்காரமில்லாத அம்மன் சிலையின் அழகைப்போன்ற எளிமையான அவரது எழுத்தில் இதுதான்..இப்படித்தான் எனப் பட்டவர்த்தனமாக கனமான விஷயங்களை நம்முன் பரிமாறிவிட்டு ஒதுங்கி விடுகிறார். ஜானகிராமனின் சிறுகதைகளில் சிறந்தவை என தனக்குப் பட்டவற்றைத் தொகுத்து எழுத்தாளர் பிரபஞ்சன் வழங்கியிருக்கும் “சிலிர்ப்பு” என்ற சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கதைகள் அனைத்துமே முத்தும் ரத்தினமுமேயாகும்.
//தி.ஜானகிராமனின் கதைகள் யதார்த்த வகைப்பட்டவை. ஆனால் அவரது யதார்த்தம் வேறுவகைப்பட்டது. இருப்பதை, கண்டதை எழுதிக்கொண்டு போவதன்று அவர் யதார்த்தம். அவர், ‘வாழ்க்கை’ என்று எதை நம்பினாரோ அதை எழுதிய யதார்த்தம் அவரது கதைகள்.// என தனது முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிட்டிருப்பது சத்தியமான உண்மை. கதையை வாசிக்க ஆரம்பித்தவுடனேயே நதிச்சுழல்போல் அது வாசகனை தன்னுடன் இழுத்துக்கொள்கிறது. எவ்வித அசௌகரியமுமில்லாமல் அவனும் அத்துடனேயே பயணிக்கிறான். தன்னையும் கோடானுகோடி நீர்த்துளிகளில் ஒன்றாக உணர்கிறான். கதையின் மாந்தர்களோடு தன்னையும் ஒரு பாத்திரமாக உணர்ந்து பங்கெடுக்கத்துவங்கி விடுகிறான். கதையின் இறுதியில் அவர்கள் இறக்கி வைக்கும் சுமையைத் தாளமுடியாமல் தத்தளிக்கிறான். மேலோட்டமாக வாசிக்கும்போது ஜனரஞ்சகமாகவும் சற்றே உள்நோக்கி வாசிக்கும்போது அழகிய இலக்கிய நுண்மை மிக்கதாகவும் இருக்கின்றன அவரது கதைகள். அந்த அழகின் ஆழத்தில் மனிதனின் ஆதார உணர்வுகளனைத்தும் அமிழ்ந்து கிடக்கின்றன. இச்சிறுகதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்குந்தோறும் அவை ஒவ்வொன்றாக மேலெழுந்து வருகின்றன.
ஜானகிராமன் எழுத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று உரையாடல் மூலமே கதையை நகர்த்திச்செல்வது. அவரது கதைகளில் தேவையற்ற விளக்கங்கள், வர்ணனைகள் என எதுவுமே இல்லை. உரையாடல் மூலமே பாத்திரங்களின் குணாம்சங்கள், அவர்களது உறவு முறைகள், மன ஓட்டம், பண்பு முதலிய அனைத்தையும் வாசகனுக்குப் புரிய வைத்து விடும் அபூர்வ எழுத்து அவருடையது. ஆண் பெண் உறவுகளைப்பற்றியும் அதிலிருக்கும் சிடுக்குகளைப்பற்றியும் அதிகம் எழுதிய ஜானகிராமன் தனது கதைகளில் பெண்களின் அசாத்திய ஆளுமையை அழகியலோடு பதிவு செய்திருக்கிறார். தன்னைப் போஷிக்கும் ஆணை, “எந்த நேரத்துலே பேசினாலும் எல்லாத்துக்கும் வரம்பு இருக்கு. பொம்மனாட்டி கொஞ்சம் பாக்கும்படியா இருந்திட்டா, இப்படிப் பைத்யம் புடிச்சுப் பாயைப் பிராண்டிக்கிட்டுப் பேத்திக்கிட்டுத் திரியணுமா?” என்று துரத்தும் ஆளுமை எப்பேர்ப்பட்டது!!. அப்படிப் பெண்ணின் ஆளுமை புரிந்த ஆணாக இருப்பதால்தான், “உள்ள போறியா இல்லையா?” என்று கபோதிக்கோபத்தில் கிழவியை விரட்டுகிறார் கிழவர். “என்னை மனுஷனா வச்சிருந்தியேடி, என் தங்கமே.. போயிட்டியேடி” என்று மனைவி வாலாம்பாளை நினைத்து உருகுகிறார் சாமநாது.
ஜானகிராமனின் கதைகளில் வரும் பெண்கள் தங்களது இன்ப துன்பங்களில் வெளிப்படுத்தும் ஆளுமை அழகியல் மிக்கது. அந்த ஆளுமையே நம்மை அவர்கள் மீது மரியாதை செலுத்தத் தூண்டுகிறது. வயிற்றுப்பாட்டிற்காக தன் குடும்பத்தைப் பிரிந்து எங்கோ தொலைதூரத்திலிருக்கும் கல்கத்தாவிற்கு குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்குப் புறப்பட்டிருக்கும் குஞ்சுவிற்கு வெறும் பத்து வயதுதான். குழந்தைத்தனம் மாறாத இச்சிறுவயதிலேயே முகம் தெரியாத ஏதோ ஒரு வீட்டிற்குப் பயணப்பட வேண்டியிருக்கும் அச்சூழலை அவள் எதிர்கொண்ட விதம்தான் என்ன!! பசியை வாயைத்திறந்து சொல்லக்கூட தயங்கி மறைப்பது சமர்த்தில் சேர்த்தியா? பட்டுப்பட்டு பாறையாய்க் காய்த்துப்போன உள்ளத்துக்குத்தான் அப்படி மறைக்க வரும். “எனக்குக் கொடுக்கணும் போல் இருக்கு, எனக்கு இதுக்கு மேல வக்கில்லை” என மறுகும் சக பயணியரில் ஒருவர்தான் நாம். கண்ணீர் வழியக் கடந்து செல்வதைத்தவிர நாம் செய்யக்கூடுவது வேறொன்றுமில்லை.
மனித மனங்களின் உணர்வுகளை உளவியல் கலந்து சொல்லிச்சென்றவர்களில் தி.ஜானகிராமனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு. ஆண்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்த்திருக்கும் ஜானகிராமன், போட்டி மனப்பான்மை, பொறாமை, கலக்கம், குற்றவுணர்வு, கையாலாகாத்தனம் என உணர்வுகளால் ஆட்டி வைக்கப்படும் மனிதர்களை நம்முன் ரத்தமும் சதையுமாய் உலவ விடுகிறார். இச்சிறுகதைத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் “பாயசம்” சிறுகதையில் வரும் சாமிநாது தனது உளவியல் சிக்கல்கள் தன் மனதில் ஏற்படுத்திய வெறுமையைச் சமாளிக்க தனது உடல்பலத்தை தனது பெருமையாய் எண்ணி அவ்வெறுமையை நிரப்புகிறார். தனது அண்ணன் மகனான சுப்பராயனுக்குக் கிடைக்கும் நற்பெயர் ஏற்படுத்திய பொறாமைப்புகைச்சலே அவரை நகர்த்த நாலாள் தேவைப்படும் பாயச ஜோடுதவலையை ஒற்றையாளாய்க் கவிழ்க்கச்செய்கிறது. தனது எதிராளிக்கு வயல் கிடைத்துவிடக்கூடாது என்ற போட்டி மனப்பான்மைதான் ஆயிரக்கணக்கில் பணம் நஷ்டமடையச்செய்கிறது சுந்தர தேசிகரை. அத்தனை நாள் வலதுகையாய் இருந்தவரை நம்பாமற்போனதால்தான் ஆண்டவன் தன்னைத் தண்டித்து விட்டான் எனக்குற்றவுணர்வு கொள்ளச்செய்கிறது.
பெரிய மனிதர்கள், சின்ன மனிதர்கள், ஆண்கள், பெண்கள் என அத்தனை பேரையும் தன் பார்வையில் எழுதிச்சென்ற ஜானகிராமனின் எழுத்து பல பரிமாணங்களிலும் நீள்வது. புதிய வாசகனுக்கு அவரது கதைகள் மேம்போக்கான, எளிமையானவையாகத் தோன்றினாலும் வாசிக்குந்தோறும் அவரது கதைகளில் ஒளிந்திருக்கும் அசாதாரணம் சாதாரணமாக வளைய வருகிறது. “கண்டதுக்கெல்லாம் தவங்கிடந்தா மனசுதான் ஒடியும். தண்டனைதான் கிடைக்கும்” எனவும், “எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி இந்த உடம்பையும் நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன். இல்லாட்டா பாவம் பின்னாலே வந்து வந்து அறுக்கும்” எனவும் கூறும் இவரது மனிதர்களில் ஒருவனான காலதேவன் பசியின் வடிவாக உட்கார்ந்திருக்கிறான். பார்க்கத்தான் நமக்கு அகங்காரமில்லாத கண் வேண்டும்.
தி.ஜானகிராமன் எழுதியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 கதைகளைக் கொண்டு, "சிலிர்ப்பு" எனத்தலைப்பிடப்பட்ட இச்சிறுகதைத்தொகுப்பு, எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களால் தொகுக்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.
3 comments:
அற்புதமான விமர்சனம்
அந்தக் கதைகளைப் படித்திருந்ததால்
உணர்ந்து படிக்க முடிந்தது
பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நல்லதொரு அறிமுகம். நன்றி.
அருமையான விமர்சனம்....
வாழ்த்துக்கள் அக்கா....
Post a Comment