ஓடினால்தான் நதி, தேங்கினால் கசம். வாழ்வும் அப்படித்தான்.. அதன்போக்கிலேயே நீந்திச் செல்பவன் மட்டுந்தான் கரையேறுகிறான். அப்படியில்லாமல் சற்றே தேங்குபவனை சுழியில் தள்ளி தத்தளிக்க விடுகிறது வாழ்வு. அப்படி நீந்தியும் தேங்கியும் வாழ்வோடு எதிர்நீச்சல் போடும் மனிதர்களைப் பற்றியதே வண்ணநிலவனின் "கம்பாநதி".
"அந்தக்காலத்துல.. பாண்டியராசா காலத்துல இந்த வழியாத்தான் கம்பாநதின்னு ஓர் ஆறு போச்சாம். பின்னால எப்படியோ அந்த ஆறு நின்னு போச்சு. அந்த ஞாபகத்துக்குத்தான் அந்தக் குட்டி மைய மண்டபம் இருக்குது... அந்த மண்டபத்துக்கு கீழ பாத்தியன்னா கசங் கணக்கா தண்ணி கெடக்கும்." திருநெல்வேலியில் ஒரு காலத்தில் ஓடிய கம்பாநதி இன்று காணாமல் போய் கசம் எனப்படும் சிறு குட்டை மட்டும் மீந்ததைப்போல் இக்கதையில் வரும் ஒவ்வொரு மாந்தருக்குள்ளும் ஓடிய ஆறும் சிறு மீதத்தை வைத்திருக்கிறது. ஆராம்புளியிலிருந்து தன் கணவனை விட்டு சங்கரன் பிள்ளையோடு வந்து குடும்பம் நடத்தத்தொடங்கி வெகு காலமான பின்னும் அவள் மனதில், "அதிகாரியாவே போயிட்டாஹ" என்று அவள் கணவன் நினைக்கப்படுவது கசமாக மீந்திருக்கும் அவர்கள் வாழ்வுதான்.
திருநெல்வேலியைக் கதைக்களமாகக் கொண்டு அம்மக்களின் மொழியைப் புழங்கும் இந்நாவலை வாசிக்கும்போது ஏற்படும் உணர்வுகளைக் கவனித்தால், வேறு ஊரைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும் இந்நாவல் இதே உணர்வுகளையே எழுப்பியிருக்கும் என்றே தோன்றுகிறது. வண்ணதாசன் மற்றும் சுகாவின் திருநெல்வேலியும் வண்ணநிலவனின் திருநெல்வேலியும் ஒன்றல்ல என்ற உணர்வு தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை.
வண்ணநிவலனின் மனிதர்கள் யாருக்கும் யார் மேலும் ஆவலாதி இல்லை. 'அவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?' என்ற கேள்வியோடு அவர்களைக் கடந்து செல்கின்றனர். யாரும் யாருக்காகவும் தேங்கி நின்று கம்பாநதியைப் போல் காணாமல் போய் விடுவதுமில்லை. நதிக்கரை மனிதர்களைப்போல் இந்நாவலின் மனிதர்களும் அவரவர்களுக்கான தனித்தனி வாழ்க்கையின் விவரிப்போடும் அதன் முக்கியத்துவத்தோடும் உலா வருகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்வும் பிறரின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பிணைந்தேயிருக்கிறது, பாலத்தை லாரி கடந்தால் தான் இண்டர்வியூவில் தேர்ச்சி பெற்று விடுவோம் என நம்பும் பாப்பையாவின் நம்பிக்கையைப்போல. வாசிப்பவருக்கு அது மூடநம்பிக்கையாய்த் தோன்றினாலும் அவனைப் பொறுத்தவரை வேலை கிடைத்து விட்டால் கோமதியைக் கல்யாணம் செய்து கொள்ளும் கனவுக்கான முதற்படியல்லவா..
நதியின் போக்கையும் வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பது யார் கையிலும் இல்லை. தன் போக்கில் செல்லும் நதியை மறித்து அதன் நீரை தேவைக்கு உபயோகப்படுத்துவதைப் போலவே கோமதியின் வாழ்வோட்டமும் பாப்பையாவை நோக்கிச் செல்லாமல் மறிக்கப்பட்டு கதிரேசனுடன் இணைக்கப்பட்டு விடுகிறது. இரண்டிலும் சம்பந்தப்பட்டவர் அனுமதி கேட்கப்படவேயில்லை. என்றாலும் அவை சுணங்காமல் புதுப்பாதையில் ஓடத்தான் செய்கின்றன. அதற்கான காரணகாரியங்கள் பிறர்க்குப் புரிவதில்லை. "என்னமோ போலத் தோணிச்சி. அதான், அழுதேன்" என்று கலுங்கில் அமர்ந்து அழுத கோமதி பாப்பையாவுக்குச் சொல்லும் காரணம் போலத்தான் அவையும்.
சங்கரன் பிள்ளை, அவரது மனைவிகளான மரகதம் மற்றும் சௌந்திரம் மற்றும் பிள்ளைகளின் பாத்திரப்படைப்பும் அப்படியே. ஒரே குடும்பத்தில் வாழ்ந்தாலும் ஒவ்வொருவரும் தனிமைப்பட்டே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். புரியாத காரணகாரியங்களால் நிகழ்ந்தவையும் நிகழ்பவையுமே அவ்வாழ்க்கையின் மர்ம முடிச்சு. "எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும், அதையே நினைத்துக்கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன". அப்படித்தான் ஒரேயடியாக கம்பாநதியைப் போல் வறண்டு போகாமல், தாமிரபரணியைப்போல் ஈரம் வற்றாத மனசைக் கொண்டிருக்கின்றனர் இம்மனிதர்கள். அந்த ஈரம் பட்டு வரும் காற்று வாசகரின் மனதையும் சற்றே ஆற்றுகிறது.
"நல்ல வேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாக அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது." ஆற்றின் போக்குப்போல் நகரும் கதையின் மாந்தர்கள் அவர்களுக்கான தனிப்பட்ட விசேஷமான குணங்களுடன் வலம் வரும்போது, தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது நாமும் அவர்களுடன் இரண்டறக் கலந்து விடுகிறோம். தன்னில் வந்து சேரும் எதையும் வாரியணைத்துச் செல்வதுதானே நதியின் இயல்பு? அப்படி நம்மைப் பயணப்பட வைப்பதே மனிதர்களின் அகஉணர்வுகளை அலசும் வண்ணநிலவனின் எளிமையான எழுத்தின் பலம்.
ஆன்லைனில் வாங்க.
No comments:
Post a Comment