Monday 25 April 2016

நினைவுச்சின்னங்கள்- என் காமிராப் பார்வையில்(3)

சி.எஸ்.டி ரயில் நிலையம்
நாட்டிலேயே பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை சி.எஸ்.டி. ரயில் நிலையம் யுனெஸ்கோவால் 2004ல் உலக  பாரம்பரிய மிக்க கட்டிடம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில் போக்குவரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்து நான்கு கி.மீ பயண தூரத்தை 57 நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் முதல் ரயில் பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ். மும்பை கிழக்குக்கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரி பந்தர் எனும் பகுதியை ஆங்கிலேயர், ஏற்றுமதி இறக்குமதி பொருட்களைப் பாதுகாத்து வைப்பதற்காகத்  தேர்ந்தெடுத்தனர். இங்கே ரயில் போக்குவரத்து அவசியம் என்பதை உணர்ந்ததால் கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வே என்ற அமைப்பினை ஏற்படுத்தி 1850ம் ஆண்டில் இங்கு ரயில்நிலையம் அமைத்தனர். அது போரி பந்தர் டெர்மினஸ் என அழைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தேவை கருதி ரயில் நிலையக் கட்டடத்தைப் பிரம்மாண்டமாக கட்ட ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

கட்டடத்தை வடிவமைக்க அப்போது பிரபல நிபுணராக இருந்த பிரெடரிக் வில்லியம் ஸ்டீவன்ஸ் என்பவர் பணிக்கப்பட்டார். அதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 16.14 லட்சம்!. சுமார் பத்து மாதங்கள் பல்வேறு ரயில் நிலையங்களைச் சுற்றிப்பார்த்து ஆராய்ந்த பின்னர், மத்திய லண்டனின் செயின்ட் பாங்கிராஸ் ரயில் நிலையக் கட்டட வடிவமைப்பு பிடித்துப் போக அதைப்போலவே மும்பை ரயில் நிலையத்தையும் அமைக்க முடிவு செய்துள்ளார். கட்டடப் பணிகள் தொடங்கின. இந்திய, இத்தாலிய, கோதிக் கட்டடக்கலைகளின் கலவையாக, ஆங்கிலேய நிபுணர்களும் இந்தியக் கைவினைஞர்களும் இணைந்து தீட்டிய அழகோவியமாக உருவாக்கப்பட்டது மும்பை ரயில் நிலையம். மர வேலைப்பாடு, டைல்ஸ், அலங்கார இரும்பு வேலைப்பாடு என அனைத்திலும் கலைநயம் மிளிர அமைத்தனர். உள் அலங்கார வேலைப்பாடுகளில் பாம்பே ஸ்கூல் ஆப் ஆர்ட் (சர் ஜே.ஜே.ஸ்கூல் ஆப் ஆர்ட்) மாணவர்களும் கைவண்ணம் காட்டியிருக்கிறார்கள். இப்படிப் பிரம்மாண்டமாக உருவான ரயில் நிலையம் 1888ம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியைப் பெருமைப்படுத்தும் வகையில் விக்டோரியா டெர்மினஸ் எனப் பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து கிரேட் இன்டியன் பெனின்சுலார் ரயில்வேயின் தலைமையகமாக விக்டோரியா டெர்மினஸ் திகழ்ந்து வந்துள்ளது. ரயில் டிக்கெட்டுகளையும் இங்கேயே அச்சடித்து வந்துள்ளனர். இச்சிறப்பு மிக்க ரயில் நிலையத்துக்கு 1996ம் ஆண்டில் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜி நினைவாக சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்திய ரயில்வேயின் தலைமையகமாகவும் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிர்வாக கட்டடம் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பெருமையும் இதற்குக் கிடைத்துள்ளது. 
ரயில் நிலையக்கட்டிடத்தின் முன்புறத்தோற்றம்
கட்டடத்தின் பின்புறத்தோற்றம்.

கட்டடத்தின் உச்சியிலிருக்கும் முன்னேற்ற தேவியின் சிலை 1969-ல் இடியால் பாதிக்கப்பட்டு, செப்பனிடப்பட்ட பின்னர் மறுபடியும் நிறுவப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் பூதவுடல், தங்கச்சி மடம் பஞ்சாயத்துக்குட்பட்ட பேய்க்கரும்பு எனும் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக்கொட்டகை அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில் இப்பொழுது மணி மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.


ஃப்ளோரா ஃபவுண்டன்
ரோமானிய தேவதையான ஃப்ளோராவின் பெயரைத்தாங்கி நிற்கும் இச்செயற்கை நீரூற்று மண்டபம் மும்பையின் சி.எஸ்.டி ரயில் நிலையத்திலிருந்து அருங்காட்சியகம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. பெருவாரியான நேரங்களில் காய்ந்து கிடக்கும் இந்நீரூற்று மண்டபத்தில் எப்பொழுதாவது நீரூற்று வேலை செய்யும். மும்பை வர்த்தகச்சந்தைக்கட்டிடம், உயர்நீதி மன்றம், மும்பைப் பல்கலைக்கழகம், ஆகியவை இதன் அருகண்மையில் அமைந்துள்ளவற்றில் முக்கியமானவையாகும். இம்மண்டபத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் சர்ச்கேட் ரயில் நிலையமும் அமைந்திருக்கிறது. ஜூராசிக் காலத்தைச் சேர்ந்த சுண்ணாம்புக்கற்கள் போர்ட்லேண்டிலிருந்து கொண்டு வரப்பட்டு கட்டப்பட்ட இம்மண்டபத்தின் உச்சியில் பூக்களின் தேவதையான ஃப்ளோரா ஒயிலாக நின்று கொண்டு அக்காலத்திலிருந்து தற்காலம் வரை மும்பை அடைந்து வரும் மாற்றங்களைக் கண் கொட்டாமல் கவனித்து வருகிறாள். அவளுக்குத்துணையாக நான்கு தூண்களிலும் மேலும் நான்கு ரோமானிய தேவ,தேவதைகள் இருக்கிறார்கள். ஹூதாத்மா சவுக் என இப்பொழுது அழைக்கப்படும் இப்பகுதியில்தான் அக்காலத்தில் மும்பைக்கோட்டை இருந்தது, நகர விரிவாக்கத்திற்காக அப்போதைய கவர்னரான Sir Batle Fraire என்பவரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட இக்கோட்டைக்குள் நுழைய அப்போலோ, சர்ச்(புனித தாமஸ் கதீட்ரல்), பஜார் என மூன்று நுழைவாயில்கள் இருந்தன. இவற்றில் கதீட்ரலின் நுழைவாயில் இருந்த அதே இடத்தில்தான் தற்சமயம் ஃப்ளோரா ஃபவுண்டன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முதலில் பைகுல்லாவிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் நிறுவப்படுவதாக இருந்து, இறுதியில் சர்ச் கேட் பகுதியில் இடம் பெற்றது. உலகளாவிய புராதானச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இம்மண்டபம் மும்பையின் மிக முக்கியமான அடையாளமாகும்.


"கேட் வே ஆப் இண்டியா"
மும்பையின் "கேட் வே ஆப் இண்டியா" அதாவது இந்தியாவின் நுழைவாயிலைப்பற்றிக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது. இதைப்பற்றி முன்னெப்போதோ எழுதியது. "கேட் வே ஆஃப் இண்டியா" வெள்ளைக்காரங்க அவுங்க பாஷையில் வெச்ச பேரை, நாம தமிழ்ல இந்தியாவின் நுழைவாயில்ன்னு சொல்லிக்கலாமே. இது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல அப்போதைய ராஜாவும் ராணியுமா இருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், மேரியம்மா தம்பதியினரின் இந்திய வருகையைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கு. 1911-ல் அடிக்கல் நாட்டப்பட்டு 1924-ல் பணிகள் முடிவடைஞ்சு, அதே வருஷம் டிசம்பர் 4-ம் தேதி திறந்து வைக்கப் பட்டிருக்கு. இதோட உசரம் 85 அடிகளாம். ஜெய்ப்பூர்லேருந்து கொண்டு வரப்பட்ட துளையிட்ட ஜன்னல்கள்(இதுகளை ஜாலின்னு சொல்லுவாங்க) பார்க்கவே பிரமிக்க வைக்குது. இந்திய மற்றும் முகலாயக் கட்டிடக்கலையின் கலவை கட்டிடம் முழுசும் பிரதிபலிக்குது. மும்பைக்கு முதன்முதல்ல வந்திறங்கும் சுற்றுலாப்பயணிகள் தவறாம பார்வையிட்டு அதிசயிக்கும் இடங்கள்ல இதுக்குத்தான் முதலிடம். மும்பைக்கு வந்துட்டு கேட்வே ஆஃப் இந்தியாவைப் பார்க்கலைன்னா ஜென்ம சாபல்யம் கிடைக்காது தெரியுமோ :-)// 



//நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.// என எப்பொழுதோ எழுதிய சாரல் துளியொன்று நினைவுக்கு வருகிறது. ஆனாலும் அவை கிளறி விட்ட அந்த வாசம் நெடு நாட்களாய் மணத்துக்கொண்டே இருக்கிறது மனதில் :-)

Tuesday 19 April 2016

படமும் பாடலும் - 2

படக்கொடை-இணையம்
பத்தடிமேல் வந்ததால் பல்லற்று ஊசிவாய்
குத்துவதால் மன்னுயிர் கத்திடுதே – சத்தமின்றி
சுத்திடினும் மட்டையால் சாகும் மருந்துக்கு
எத்திடுமிப் பொல்லாக் கொசு (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)

ஆணவர் அஞ்சிட ஆரணங்கு செய்திட
மாணப் பெரிதே கவலையிது- வாணலியில்
அப்பாமல் வந்தால் அருசியாம் அம்முறைநீ
தப்பாமல் உப்புமா செய் (இருவிகற்ப நேரிசை வெண்பா)
அரும்பி அலர்ந்த அனற்பூவாம் கோடை
விரும்பி வனங்களை யுண்டு - கரும்பாய்
வருக்கையும் மாவும் வகையாய் அளித்தும்
வருத்திடவும் செய்யுதே காண் (ஒருவிகற்ப நேரிசை வெண்பா)
மாந்தரெலாம் ஏத்தி வணங்கும் பரம்பொருளாம்
நீந்துபுனல் கொண்டோன் அருளினால் - ஏந்துபுகழ்
நாஞ்சிலாம் நாடிதுடன் என்றென்றும் வாழியவே
நாஞ்சிலின் சீர்மிகு கூர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

அரவமிகு கோயிலின் நாமமிதன் பேராம்
அருமாந்த ஊரிதன் மன்புகழ் சாரலாம்
கொஞ்சும் இயற்கையையும் நங்கைநீ பாடுக
நாஞ்சிலின் நாரோயில் சீர் (இருவிகற்ப நேரிசை வெண்பா)

Saturday 16 April 2016

ஒரு சொல்.. பல பாக்கள் -1

படக்கொடையளித்த இணையம் வாழ்க
'அம்பு' என்ற சொல்லுக்கு வில்லிலிருந்து புறப்படும் அம்பைத் தவிர நீர், முகில், தளிர், மூங்கில்,வளையல் எனவும் வேறு அர்த்தங்கள் உள்ளன. இந்த அர்த்தம் வரும்படியாக 'அம்பு' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எழுதிய சில ஒரு விகற்பக்குறள் வெண்பாக்கள்.

1. அம்பு நிறைந்திட்ட அம்புடைந்து பெய்ததால்
அம்பது  ஓங்கியது காண்
விளக்கம்: (நீர் நிறைந்த முகிலுடைந்து பெய்ததால் மூங்கில் வளர்ந்தது காண்) 

2. அம்பணிந்த அம்புயத்தாள் அம்பெறிய ஓடியதே
அம்பு சுவைத்த பிடி
விளக்கம்: (வளையலணிந்த தளிர்க்கரத்தை உடைய பெண் அம்பெறிய, மூங்கிலைச் சுவைத்த பெண்யானை ஓடியதே)

3.நங்கையின் அம்புகளை தங்கையும் தேர்ந்ததால்
பங்கயத்தால் அம்புசொரிந் தாள்
விளக்கம்: [நங்கை(பெண்,பெயர்ச்சொல்) விரும்பிய வளையல்களைத் தங்கையும் விரும்பியதால் தாமரை போன்ற கண்களால் நீர் சொரிந்தாள்(அழுதாள்)] 

4.அம்பறுத்துச் செய்யம்பு இட்டு முகந்திட
அம்பது தோய்த்தது வாம்
விளக்கம்: (மூங்கிலை அறுத்துச்செய்த வளையல்களை அணிந்து தண்ணீர் முகந்திட நீர் அதை நனைத்தது)

5.தண்ணம்பு தூவித் துளிர்த்த விருட்சத்தை
மண்மீது காத்தல் கடன்
விளக்கம்: குளிர்ந்த மேகம் பொழிந்ததால் துளிர்த்து வளர்ந்த மரத்தைக்காத்தல் நம் தலையாய கடமையாகும்.

Wednesday 13 April 2016

சித்திரைப்பெண் வந்திட்டாள்..

விடிந்தால் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. வருஷாவருஷம் செய்யும் வழக்கப்படி இந்த வருஷமும் கனிகாண எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தாயிற்று. எப்பொழுதோ திருவாங்கூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பூர்வீகப் பாசம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளிலும் கோயில்களிலும் இருள் பிரியாத விடியலில் கனி கண்டு, தன்னிலும் வயதில் சிறியவர்களுக்குக் கைநீட்டம் கொடுக்கும் பழக்கம் இருந்து வருகிறது. மும்பையிலும் ஐயப்பன் கோயில்களிலெல்லாம் பெரிய உருளியொன்றில் எல்லா வகைப்பழங்களையும் நிரப்பி வைத்து, கனிகாணல் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டு, தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்குக் கைநீட்டமும் அளிக்கப்படுகிறது.

எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்ப்புத்தாண்டைக்கொண்டாடும் முறை பற்றி முன்பொரு முறை எழுதியதை இங்கே சுட்டியைச்சொடுக்கி வாசிக்கலாம்.

சற்றே எளிமையாக ஒரு கனிவைப்பு..

 கனிகண்டு கை நீட்டமும், மஞ்சள் குங்குமமும் எடுத்துக்கொண்டு,

கிருஷ்ணனின் அருள் பெற்று,


வாழ்வு என்றென்றும் ஒளிமயமாக இனிமையாக அமையட்டும்.
தமிழ்ப்புத்தாண்டை வரவேற்று ஒரு கலி விருத்தம்

எத்திக்கும் பொற்கொன்றை ஏந்தெழில் விளங்கிட
தித்திக்கும் கானத்தில் திளைத்திடும் கோகிலம்
சித்திரைப்பெண் வந்திட்டாள் சீர்நிறைக் கொடையொடு
சித்தமெலாம் இனித்திடவே சகமெலாம் வாழ்கவே

அனைவரும் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று  இனிதே வாழ இனிய சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

Monday 11 April 2016

படமும் பாடலும் - 1

(இருவிகற்ப நேரிசை வெண்பா)

மக்களைப் பள்ளியில் பார்வதி சேர்த்திடுமுன்
மிக்க விரைந்து உரைத்திடுக - தக்கதோர்
ஓலைக் கொருவிலக்கம் உண்ட துவல்லெனில்
மாலைக்குள் ஏறும் தொகை

குன்றும் கடலும் குமரனுக்கே அப்பனுக்கோ
என்றும் சுடலையே ஏற்றவிடம் - அன்னையவள்
கண்டாளே புற்றினைக் கோவிலாக பிள்ளையும்
கொண்டான் அரசடி தான்

கனியால் கசந்தவன் குன்றேறி நின்றான்
இனிதாய் உரைகூறி அம்மையும் பற்றிவர
ஒக்கல் இறங்காயோ ஓர்பிடி நீவிடாயோ
பக்கலில் தேடுகிறான் பார் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)


அழகிய படத்தைத்தந்துதவியமைக்கு நன்றி பத்மாசனி ஸ்ரீமதன்

குமிழ்நகை கண்டு குதித்துவந்த வானம்
குமிழொளிந்து வண்ணவில்லாய் தானிறங்கி பாலன்
மழலை மொழிகேட்டு தான்மயங்கி மங்கி
அழகற்றுச் செல்லுதே வில் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)


  நம் வித்யா சுப்ரமணியன் வரைந்த படத்திற்காக கிச்சா என்னை எழுத வைத்த வெண்பா

உருவுதடம் நீக்கி உறிதொங்கி வெண்ணெய்
திருடுவாய் ஏடணையொ ளிக்கவொட்டா கண்ணா
சதங்கை சிணுங்கிட சாயுமுரல் கத்த
சிதறுதே வெண்ணெயும் காண் (இருவிகற்ப இன்னிசை வெண்பா)

வால்: படங்கள் கொடுத்த தூண்டுதலால் என்னால் எழுதப்பட்ட வெண்பாக்கள் இங்கே சேமிக்கப்படுகின்றன.

Friday 1 April 2016

சக்கைப்பிரதமன்..

பங்குனி மாதத்தில் ஆரம்பித்து சித்திரை விஷூவில் நிலை கொண்டு ஆனி, ஆடி மாதங்கள் வரையிலும் திருமண விழாக்களிலும் வீட்டு விசேஷங்களிலும் சக்கைப்பிரதமன் எனப்படும் பலாப்பழப்பாயசம் செய்து ருசிக்கப்படுகிறது. அதிலும், நாஞ்சில் நாட்டுக்கல்யாணங்களில் பரிமாறப்படும் பால் மற்றும் வெல்லப்பாயசத்தைக்கொண்டு கல்யாணம் நடத்துபவரின் செல்வச்செழிப்பு புரிந்து கொள்ளப்படும். பாலடை, சேமியா, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு போன்றவற்றால் செய்யப்பட்ட வெல்லப்பாயசம் பரிமாறப்பட்டால் நடுத்தரமான நிதிவசதி கொண்டவர் என்றும் கூடுதலாகப் பால் பாயசம் பரிமாறப்பட்டு அதன் மேல் பூந்தியும் தூவப்பட்டால் “பார்ட்டி பெரிய கையாக்கும்” என அர்த்தம் கொள்ளப்படும். ஆனால், பலா மலியும் காலகட்டத்தில், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் விளம்பப்படும் ஒரே பண்டம் சக்கைப்பிரதமனே. 

என்ன ஒன்று.. ஏழைகள் மலிவான கூழன் சக்கையில் செய்தால் பணக்காரர்கள் விலையுயர்ந்த செங்கவருக்கை என அழைக்கப்படும் செம்பருத்தி வருக்கையில் செய்வார்கள். செம்புலப்பெயல் நீர் போல் தேங்காய்ப்பால் மற்றும் வெல்லக்கரைசலில் கலக்கும் பலாவின் மணமோ எட்டூருக்கு மணக்கும். முன்மதிய நேரத்து முஹூர்த்தமானால் மதியம் ஒன்று அல்லது ஒன்றரைக்கெல்லாம் பந்தி ஆரம்பித்து விருந்தினர்களின் எண்ணிக்கையைப்பொறுத்து நேரம் நீளும். உண்டு விட்டு வந்தவர்கள், “பாயாசங்குடிச்சது ஆயாசமாட்டுல்லா வருகு” என்றபடி வெற்றிலையை மென்று கொண்டிருப்பார்கள். மதிய வெய்யிலும் பிரதமனும் சேர்ந்து கிறக்கியதில், வீட்டுக்குப் போனதும் தூக்கம் கண்ணைச்சுழற்றிக்கொண்டு வருவது இயல்பே.

சக்கைப்பிரதமனின் பூர்வீகம் பலா தேசமான கேரளாவாக இருந்தாலும், அதிலிருந்து பிய்த்துக்கொண்டு தனிக்குடித்தனம் வந்த திருவாங்கூர் நாடு அதாவது கன்னியாகுமரி மாவட்டத்திலும் இது செய்யப்படுகிறது. கேரள மற்றும் கன்னியாகுமரி வீடுகளில் “சக்கவரட்டி” என அழைக்கப்படும் பலாச்சுளைகளைப் பதப்படுத்தி வைக்கும் ஒரு அருமையான பதார்த்தம் மிகவும் பிரபலம்.. அது மட்டும் கை வசமிருந்தால் வருடம் முழுக்க நினைத்த போதெல்லாம் சக்கைப்பிரதமன் செய்து கொள்ளலாம். இது மிக வேகமாகச்செய்து கொள்ளும் முறையும் கூட.  ஆனால், புதிய பழங்களை உபயோகிப்பது பாரம்பரியமான முறை. இப்போது நாம் செய்யப்போவதும் பாரம்பரியமான முறையில்தான்.
செம்பருத்தி வருக்கை எனப்படும் செங்கவருக்கை கிடைத்தால் நலம், இந்த ஒரு வகையில் மட்டும் சுளைகள் சிவப்பாக இருக்கும். மற்ற வருக்கை கூழன் வகைகளில் மஞ்சள் நிறச்சுளைகள் காணப்படும். செங்கவருக்கை இல்லாவிடில் சாதாரண வருக்கையும் உபயோகிக்கலாம். பலாப்பழத்தில் ‘வருக்கை’ என்பது மிக உயர்ந்த வகை. சதைப்பற்றுள்ள சுளைகளே இதன் சிறப்பு. தவிரவும் சுவையோ சொல்லி மாளாது. மும்பை வந்த இத்தனை வருடங்களில் இந்த வருடந்தான் செங்கவருக்கை கிடைத்தது. பொதுவாகப் பலாப்பழத்தைப் பார்த்தவுடன் இது என்ன வகை? என்பதையும் சுளைகள் அதிகமிருக்குமா இல்லையா? என்பதையும் அனுபவஸ்தர்கள் உடனே சொல்லி விடுவார்கள். அப்படியும் சந்தேகம் தீராமல், “சக்கைய சூந்து பாத்துதான் வேங்குவேன்” என்று அடம் பிடிப்பர் சிலர். கத்தியால் பழத்தில் குத்தி லேசாகச் சாய்த்துப்பிடித்தபடி சிறு வட்டமாகச் சுழற்றினால், கோன் ஐஸ் வடிவத்தில் ஒரு சிறு துண்டு வந்து விழும். அதிலிருக்கும் சுளைவளத்தைப் பார்த்தே பழத்தை வாங்குவதா? வேண்டாமா? என முடிவெடுக்கப்படும். நல்ல சுளைவளமுள்ள சக்கையாக இருந்து பழுத்திருக்கவில்லையெனிலோ கவலை கொள மாட்டார் எம்மக்கள். பழத்தில் சிறு துண்டு வேப்பங்குச்சியைச் செருகி வெய்யிலில் நாள் முழுவதும் போட்டு விட்டால் பழுத்து விட்டுப்போகிறது. 
செங்கவருக்கையும் சாதா வருக்கையும்..
முழுப்பழம் வாங்கி வந்து, பிசின் ஒட்டாமலிருக்க அரிவாள் மணையிலும் கைகளிலும் தேங்காயெண்ணெய் தடவிக்கொண்டு சுத்தம் செய்து, சுளை பிரித்து, சக்கை வரட்டி, சக்கைப்பணியாரம், சக்கைப்பிரதமன் என தினமொன்றாய் விதவிதமாய் ஆக்கி மகிழ்வர். என்னதான் பிரியமானவர்களாயிருப்பினும் கொண்டான் கொடுத்தான் வீடுகளுக்குள் பலாப்பழம் கொடுத்து வாங்க மாட்டார்கள். சண்டை வந்து விடும் என்பது நாஞ்சில் மக்களின் நம்பிக்கை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகனைப்பார்க்க வைத்து தான் தின்ன முடியுமா? அந்த வருத்தம் மகள் தலையிலல்லவா வந்து விடியும்!. அதனால் சாஸ்திரத்திற்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு மருமகனுக்குப் பலாப்பழ பதார்த்தங்கள் கொடுக்கப்படும்.

செங்கவருக்கையும் ஏதோவொரு வருக்கையுமாக சுமார் 400 கிராம் அளவில் பலாப்பழச்சுளைகள் ஃப்ரிஜ்ஜில் விழித்துக்கொண்டிருந்தன. தினம் அரைக்கிலோ வாங்கி வந்து செழிக்கத்தின்றாயிற்று. இன்று வேறு ஏதாவது, ஏன் பிரதமனே செய்யலாமென்று விபரீத யோசனை உதித்ததும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கின்றனவா என திடீர் சோதனை நடத்தினேன். சனிக்கிழமையன்று வீட்டில் நீராஞ்சனத்திற்காக தேங்காய் விளக்குப்போட உபயோகித்த தேங்காய் மூடிகள் ஃப்ரிஜ்ஜின் காய்கறிப்பகுதியில் இருந்தன. சுளைகளின் அளவுக்கு ஒரு மூடித்தேங்காய் போதுமென்று எடுத்துக்கொண்டேன். அதே ஃப்ரிஜ்ஜில் மேல் தட்டில் வெல்லமும், முந்திரிப்பருப்பும், உலர்திராட்சையும் இருந்தன. மசாலாப்பொருட்கள் வைக்கும் டப்பாவிலிருந்து நாலு ஏலக்காய்களையும் மருந்துச்சாமான்கள் வைக்கும் டப்பாவிலிருந்து அரை இஞ்ச் சுக்கையும் எடுத்துக்கொண்டாயிற்று. ஒரு கைப்பிடி கடலைப்பருப்புடன் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியைச் சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கப்பட்டது. கூடவே நெய்க்கிண்ணமும்.
எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டதும் களம் புகலாம். முதலில் பலாச்சுளைகளை புளியங்கொட்டை அளவில் சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும். சிலர் அரைத்தும் வைப்பார்கள். தேங்காயை ஒரு ஓரத்தில் கொஞ்சம் கீறி வில்லையாக எடுத்துக்கொண்டு அதைப் பொடிப்பொடிப் பற்களாக நறுக்கிக்கொள்ளவும். மீதித்தேங்காயைத்துருவி கொஞ்சமாகத்தண்ணீர் சேர்த்து அரைத்துப்பிழிந்து கெட்டியான முதல் பாலெடுத்து தனியாக வைக்கவும். பின் மேலும் இரு முறைகள் அரைக்கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, முறையே இரண்டாம் பாலும் மூன்றாம் பாலும் எடுத்து இவ்விரண்டையும் சேர்த்துக்கலக்கி வைக்கவும். அரைக்கச் சோம்பல் படுபவர்கள் தேங்காய்ப்பால் பொடியையும் உபயோகிக்கலாம். இரண்டு ஸ்பூன் பொடியை அரைக்கப் தண்ணீரில் கலக்கினால் முதல் பால் ரெடி. இன்னுமிரண்டு ஸ்பூன் பொடியை ஒன்றரைக்கப் தண்ணீரில் கலக்கினால் இரண்டாம்+மூன்றாம் பால் கலவை ரெடி. டப்பாவில் அடைத்த கெட்டியான தேங்காய்ப்பாலும் சந்தையில் கிடைக்கிறது. அதையும் இம்முறையில் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளலாம். முதல் பாலுக்கு மட்டும் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே ஊற்றவும்.

ஒரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீரைச் சூடாக்கி அதில் வெல்லத்தைப்போட்டுக் கரைய விட்டு, கல் மண் போக வடிகட்டி எடுத்து வைக்கவும். இனிப்பான சுளைகளானால் 300 கிராம் வெல்லம் போதும். சுமாரானதாயிருந்தால் ஐம்பது கிராம் கூடுதலாகப் போடவும். பாயசம் செய்ய இன்னொரு அடிகனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதிலேயே இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கவும். உருளி இருந்தால் அதிலும் செய்யலாம். நாம் பாரம்பரிய முறையில் அல்லவா செய்கிறோம்!!. நெய் சூடானதும், முதலில் தேங்காய்த்துண்டுகளைப்போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். பின் அதே நெய்யில் முந்திரி திராட்சைகளையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எல்லாவற்றையும் கண்மறைவாக எடுத்து வைக்கவும். இல்லாவிடில் அடுக்களைக்கு அடிக்கடி விஜயம் செய்யும் வீட்டுக்காரரோ அல்லது குழந்தைகளோ அதை அபேஸ் செய்யும் அபாயமோ அல்லது நாமே கையை நீட்டி விடும் அதி அபாயமோ இருக்கிறது. இப்போது நெய் சூடாக்கிய பாத்திரத்தில் பலாப்பழத்துண்டுகளைச்சேர்த்து நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்துக்கொள்ளலாம். இம்முறையில் செய்யப்படும் பிரதமன் சீக்கிரம் கெட்டுப்போகாது. முக்கால் வேக்காடு வந்ததும் பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்து, பழத்தை நன்கு மசித்து விட்டு மறுபடியும் அடுப்பிலேற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பாலின் கலவையை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லக்கரைசலையும் ஏற்கனவே வேக வைத்திருந்த கடலைப்பருப்புக்கலவையையும் சேர்க்கவும். கடலைப்பருப்பு சேர்ப்பதால் பாயசம் ‘கொழூக்க’ அதாவது கட்டியாக இருக்கும்.

பருப்பும் பழமும் நன்கு கரைந்து வந்ததும் தேங்காய்த்துண்டுகள் மற்றும் முந்திரி திராட்சையைச் சேர்க்கவும். பிரதமனுக்கே தனிச்சுவையைக் கொடுப்பவை இந்த வறுத்த தேங்காய்தான். ஆகவே அதைத்தவிர்க்க வேண்டாம். கூடவே சுக்கையும் ஏலக்காயையும் பொடி செய்து போடவும். எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் கெட்டியான முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி இரண்டு நிமிடம் சிறு தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யும் முந்திரியும் மிதக்க வெல்லமும் பழமும் மணக்க வீட்டில் திடீரென ஒரு திருவிழாச்சூழலை உணர வைக்கும் இந்தப்பிரதமன். இம்முறையிலேயே பாலடை, சேமியா, பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போன்றவற்றாலும் பிரதமன் ஆக்கி மகிழ்வீர்களாக. இதில் பாலடை மற்றும் சேமியாவை வென்னீரிலிட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரால் அலசியபின் பிரதமன் செய்தால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் வரும். பயத்தம்பருப்பை வாசனை வரும்வரை நெய்யில் வறுத்துச்செய்யவும். அப்பிராணி கடலைப்பருப்பை அப்படியே வேக வைத்து பிரதமன் செய்யலாம்.

எந்த வகைப் பிரதமனாக இருந்தாலும் கிண்ணத்திலிட்டு நாசூக்காக ஸ்பூனால் லேசாகத்தொட்டுத்தொட்டுச் சாப்பிடுபவர்களுக்கு ‘பிர’ எனும் கொடிய நரகம் வாய்க்குமென்று அடுக்களைச்சித்தர் அருளியிருக்கிறார். அதுவே, சிறிய தட்டில் பிரதமனை ஊற்றி அதில் மட்டிப்பழத்தையோ ரசக்கதலியையோ அல்லது அவரவர் இருக்குமிடத்தில் கிடைக்கும் வாழைப்பழத்தையோ தோலுரித்து இட்டு நசுங்கப்பிசைந்து, பொரித்த மலையாளப்பப்படத்தை நொறுக்கிச்சேர்த்து லேசாக விரவி, வாயிலிட்டால் அதன் சுவையில் சொக்கி மயங்கி தானாகவே அரைக்கண் மூடும். அவ்விதமே ரசனையுடன் உண்பார்க்கு வாழ்வில் இவ்வுலகிலேயே எந்நாளும் சொர்க்கமே வாய்க்குமாக..

LinkWithin

Related Posts with Thumbnails