Friday, 1 April 2016

சக்கைப்பிரதமன்..

பங்குனி மாதத்தில் ஆரம்பித்து சித்திரை விஷூவில் நிலை கொண்டு ஆனி, ஆடி மாதங்கள் வரையிலும் திருமண விழாக்களிலும் வீட்டு விசேஷங்களிலும் சக்கைப்பிரதமன் எனப்படும் பலாப்பழப்பாயசம் செய்து ருசிக்கப்படுகிறது. அதிலும், நாஞ்சில் நாட்டுக்கல்யாணங்களில் பரிமாறப்படும் பால் மற்றும் வெல்லப்பாயசத்தைக்கொண்டு கல்யாணம் நடத்துபவரின் செல்வச்செழிப்பு புரிந்து கொள்ளப்படும். பாலடை, சேமியா, கடலைப்பருப்பு, பயத்தம்பருப்பு போன்றவற்றால் செய்யப்பட்ட வெல்லப்பாயசம் பரிமாறப்பட்டால் நடுத்தரமான நிதிவசதி கொண்டவர் என்றும் கூடுதலாகப் பால் பாயசம் பரிமாறப்பட்டு அதன் மேல் பூந்தியும் தூவப்பட்டால் “பார்ட்டி பெரிய கையாக்கும்” என அர்த்தம் கொள்ளப்படும். ஆனால், பலா மலியும் காலகட்டத்தில், ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் விளம்பப்படும் ஒரே பண்டம் சக்கைப்பிரதமனே. 

என்ன ஒன்று.. ஏழைகள் மலிவான கூழன் சக்கையில் செய்தால் பணக்காரர்கள் விலையுயர்ந்த செங்கவருக்கை என அழைக்கப்படும் செம்பருத்தி வருக்கையில் செய்வார்கள். செம்புலப்பெயல் நீர் போல் தேங்காய்ப்பால் மற்றும் வெல்லக்கரைசலில் கலக்கும் பலாவின் மணமோ எட்டூருக்கு மணக்கும். முன்மதிய நேரத்து முஹூர்த்தமானால் மதியம் ஒன்று அல்லது ஒன்றரைக்கெல்லாம் பந்தி ஆரம்பித்து விருந்தினர்களின் எண்ணிக்கையைப்பொறுத்து நேரம் நீளும். உண்டு விட்டு வந்தவர்கள், “பாயாசங்குடிச்சது ஆயாசமாட்டுல்லா வருகு” என்றபடி வெற்றிலையை மென்று கொண்டிருப்பார்கள். மதிய வெய்யிலும் பிரதமனும் சேர்ந்து கிறக்கியதில், வீட்டுக்குப் போனதும் தூக்கம் கண்ணைச்சுழற்றிக்கொண்டு வருவது இயல்பே.

சக்கைப்பிரதமனின் பூர்வீகம் பலா தேசமான கேரளாவாக இருந்தாலும், அதிலிருந்து பிய்த்துக்கொண்டு தனிக்குடித்தனம் வந்த திருவாங்கூர் நாடு அதாவது கன்னியாகுமரி மாவட்டத்திலும் இது செய்யப்படுகிறது. கேரள மற்றும் கன்னியாகுமரி வீடுகளில் “சக்கவரட்டி” என அழைக்கப்படும் பலாச்சுளைகளைப் பதப்படுத்தி வைக்கும் ஒரு அருமையான பதார்த்தம் மிகவும் பிரபலம்.. அது மட்டும் கை வசமிருந்தால் வருடம் முழுக்க நினைத்த போதெல்லாம் சக்கைப்பிரதமன் செய்து கொள்ளலாம். இது மிக வேகமாகச்செய்து கொள்ளும் முறையும் கூட.  ஆனால், புதிய பழங்களை உபயோகிப்பது பாரம்பரியமான முறை. இப்போது நாம் செய்யப்போவதும் பாரம்பரியமான முறையில்தான்.
செம்பருத்தி வருக்கை எனப்படும் செங்கவருக்கை கிடைத்தால் நலம், இந்த ஒரு வகையில் மட்டும் சுளைகள் சிவப்பாக இருக்கும். மற்ற வருக்கை கூழன் வகைகளில் மஞ்சள் நிறச்சுளைகள் காணப்படும். செங்கவருக்கை இல்லாவிடில் சாதாரண வருக்கையும் உபயோகிக்கலாம். பலாப்பழத்தில் ‘வருக்கை’ என்பது மிக உயர்ந்த வகை. சதைப்பற்றுள்ள சுளைகளே இதன் சிறப்பு. தவிரவும் சுவையோ சொல்லி மாளாது. மும்பை வந்த இத்தனை வருடங்களில் இந்த வருடந்தான் செங்கவருக்கை கிடைத்தது. பொதுவாகப் பலாப்பழத்தைப் பார்த்தவுடன் இது என்ன வகை? என்பதையும் சுளைகள் அதிகமிருக்குமா இல்லையா? என்பதையும் அனுபவஸ்தர்கள் உடனே சொல்லி விடுவார்கள். அப்படியும் சந்தேகம் தீராமல், “சக்கைய சூந்து பாத்துதான் வேங்குவேன்” என்று அடம் பிடிப்பர் சிலர். கத்தியால் பழத்தில் குத்தி லேசாகச் சாய்த்துப்பிடித்தபடி சிறு வட்டமாகச் சுழற்றினால், கோன் ஐஸ் வடிவத்தில் ஒரு சிறு துண்டு வந்து விழும். அதிலிருக்கும் சுளைவளத்தைப் பார்த்தே பழத்தை வாங்குவதா? வேண்டாமா? என முடிவெடுக்கப்படும். நல்ல சுளைவளமுள்ள சக்கையாக இருந்து பழுத்திருக்கவில்லையெனிலோ கவலை கொள மாட்டார் எம்மக்கள். பழத்தில் சிறு துண்டு வேப்பங்குச்சியைச் செருகி வெய்யிலில் நாள் முழுவதும் போட்டு விட்டால் பழுத்து விட்டுப்போகிறது. 
செங்கவருக்கையும் சாதா வருக்கையும்..
முழுப்பழம் வாங்கி வந்து, பிசின் ஒட்டாமலிருக்க அரிவாள் மணையிலும் கைகளிலும் தேங்காயெண்ணெய் தடவிக்கொண்டு சுத்தம் செய்து, சுளை பிரித்து, சக்கை வரட்டி, சக்கைப்பணியாரம், சக்கைப்பிரதமன் என தினமொன்றாய் விதவிதமாய் ஆக்கி மகிழ்வர். என்னதான் பிரியமானவர்களாயிருப்பினும் கொண்டான் கொடுத்தான் வீடுகளுக்குள் பலாப்பழம் கொடுத்து வாங்க மாட்டார்கள். சண்டை வந்து விடும் என்பது நாஞ்சில் மக்களின் நம்பிக்கை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகனைப்பார்க்க வைத்து தான் தின்ன முடியுமா? அந்த வருத்தம் மகள் தலையிலல்லவா வந்து விடியும்!. அதனால் சாஸ்திரத்திற்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு மருமகனுக்குப் பலாப்பழ பதார்த்தங்கள் கொடுக்கப்படும்.

செங்கவருக்கையும் ஏதோவொரு வருக்கையுமாக சுமார் 400 கிராம் அளவில் பலாப்பழச்சுளைகள் ஃப்ரிஜ்ஜில் விழித்துக்கொண்டிருந்தன. தினம் அரைக்கிலோ வாங்கி வந்து செழிக்கத்தின்றாயிற்று. இன்று வேறு ஏதாவது, ஏன் பிரதமனே செய்யலாமென்று விபரீத யோசனை உதித்ததும் தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருக்கின்றனவா என திடீர் சோதனை நடத்தினேன். சனிக்கிழமையன்று வீட்டில் நீராஞ்சனத்திற்காக தேங்காய் விளக்குப்போட உபயோகித்த தேங்காய் மூடிகள் ஃப்ரிஜ்ஜின் காய்கறிப்பகுதியில் இருந்தன. சுளைகளின் அளவுக்கு ஒரு மூடித்தேங்காய் போதுமென்று எடுத்துக்கொண்டேன். அதே ஃப்ரிஜ்ஜில் மேல் தட்டில் வெல்லமும், முந்திரிப்பருப்பும், உலர்திராட்சையும் இருந்தன. மசாலாப்பொருட்கள் வைக்கும் டப்பாவிலிருந்து நாலு ஏலக்காய்களையும் மருந்துச்சாமான்கள் வைக்கும் டப்பாவிலிருந்து அரை இஞ்ச் சுக்கையும் எடுத்துக்கொண்டாயிற்று. ஒரு கைப்பிடி கடலைப்பருப்புடன் ஒரு ஸ்பூன் ஜவ்வரிசியைச் சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கப்பட்டது. கூடவே நெய்க்கிண்ணமும்.
எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டதும் களம் புகலாம். முதலில் பலாச்சுளைகளை புளியங்கொட்டை அளவில் சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கவும். சிலர் அரைத்தும் வைப்பார்கள். தேங்காயை ஒரு ஓரத்தில் கொஞ்சம் கீறி வில்லையாக எடுத்துக்கொண்டு அதைப் பொடிப்பொடிப் பற்களாக நறுக்கிக்கொள்ளவும். மீதித்தேங்காயைத்துருவி கொஞ்சமாகத்தண்ணீர் சேர்த்து அரைத்துப்பிழிந்து கெட்டியான முதல் பாலெடுத்து தனியாக வைக்கவும். பின் மேலும் இரு முறைகள் அரைக்கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, முறையே இரண்டாம் பாலும் மூன்றாம் பாலும் எடுத்து இவ்விரண்டையும் சேர்த்துக்கலக்கி வைக்கவும். அரைக்கச் சோம்பல் படுபவர்கள் தேங்காய்ப்பால் பொடியையும் உபயோகிக்கலாம். இரண்டு ஸ்பூன் பொடியை அரைக்கப் தண்ணீரில் கலக்கினால் முதல் பால் ரெடி. இன்னுமிரண்டு ஸ்பூன் பொடியை ஒன்றரைக்கப் தண்ணீரில் கலக்கினால் இரண்டாம்+மூன்றாம் பால் கலவை ரெடி. டப்பாவில் அடைத்த கெட்டியான தேங்காய்ப்பாலும் சந்தையில் கிடைக்கிறது. அதையும் இம்முறையில் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளலாம். முதல் பாலுக்கு மட்டும் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே ஊற்றவும்.

ஒரு பாத்திரத்தில் அரை தம்ளர் தண்ணீரைச் சூடாக்கி அதில் வெல்லத்தைப்போட்டுக் கரைய விட்டு, கல் மண் போக வடிகட்டி எடுத்து வைக்கவும். இனிப்பான சுளைகளானால் 300 கிராம் வெல்லம் போதும். சுமாரானதாயிருந்தால் ஐம்பது கிராம் கூடுதலாகப் போடவும். பாயசம் செய்ய இன்னொரு அடிகனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதிலேயே இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கவும். உருளி இருந்தால் அதிலும் செய்யலாம். நாம் பாரம்பரிய முறையில் அல்லவா செய்கிறோம்!!. நெய் சூடானதும், முதலில் தேங்காய்த்துண்டுகளைப்போட்டுப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். பின் அதே நெய்யில் முந்திரி திராட்சைகளையும் போட்டுப் பொன்னிறமாக வறுத்து எல்லாவற்றையும் கண்மறைவாக எடுத்து வைக்கவும். இல்லாவிடில் அடுக்களைக்கு அடிக்கடி விஜயம் செய்யும் வீட்டுக்காரரோ அல்லது குழந்தைகளோ அதை அபேஸ் செய்யும் அபாயமோ அல்லது நாமே கையை நீட்டி விடும் அதி அபாயமோ இருக்கிறது. இப்போது நெய் சூடாக்கிய பாத்திரத்தில் பலாப்பழத்துண்டுகளைச்சேர்த்து நன்கு வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நெய் சேர்த்துக்கொள்ளலாம். இம்முறையில் செய்யப்படும் பிரதமன் சீக்கிரம் கெட்டுப்போகாது. முக்கால் வேக்காடு வந்ததும் பாத்திரத்தைக் கீழே இறக்கி வைத்து, பழத்தை நன்கு மசித்து விட்டு மறுபடியும் அடுப்பிலேற்றி இரண்டாம் மற்றும் மூன்றாம் தேங்காய்ப்பாலின் கலவையை ஊற்றவும். கொதிக்க ஆரம்பித்ததும் வெல்லக்கரைசலையும் ஏற்கனவே வேக வைத்திருந்த கடலைப்பருப்புக்கலவையையும் சேர்க்கவும். கடலைப்பருப்பு சேர்ப்பதால் பாயசம் ‘கொழூக்க’ அதாவது கட்டியாக இருக்கும்.

பருப்பும் பழமும் நன்கு கரைந்து வந்ததும் தேங்காய்த்துண்டுகள் மற்றும் முந்திரி திராட்சையைச் சேர்க்கவும். பிரதமனுக்கே தனிச்சுவையைக் கொடுப்பவை இந்த வறுத்த தேங்காய்தான். ஆகவே அதைத்தவிர்க்க வேண்டாம். கூடவே சுக்கையும் ஏலக்காயையும் பொடி செய்து போடவும். எல்லாம் சேர்ந்து இறுகி வந்ததும் கெட்டியான முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி இரண்டு நிமிடம் சிறு தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யும் முந்திரியும் மிதக்க வெல்லமும் பழமும் மணக்க வீட்டில் திடீரென ஒரு திருவிழாச்சூழலை உணர வைக்கும் இந்தப்பிரதமன். இம்முறையிலேயே பாலடை, சேமியா, பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போன்றவற்றாலும் பிரதமன் ஆக்கி மகிழ்வீர்களாக. இதில் பாலடை மற்றும் சேமியாவை வென்னீரிலிட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி, குளிர்ந்த தண்ணீரால் அலசியபின் பிரதமன் செய்தால் ஒன்றுக்கொன்று ஒட்டாமல் வரும். பயத்தம்பருப்பை வாசனை வரும்வரை நெய்யில் வறுத்துச்செய்யவும். அப்பிராணி கடலைப்பருப்பை அப்படியே வேக வைத்து பிரதமன் செய்யலாம்.

எந்த வகைப் பிரதமனாக இருந்தாலும் கிண்ணத்திலிட்டு நாசூக்காக ஸ்பூனால் லேசாகத்தொட்டுத்தொட்டுச் சாப்பிடுபவர்களுக்கு ‘பிர’ எனும் கொடிய நரகம் வாய்க்குமென்று அடுக்களைச்சித்தர் அருளியிருக்கிறார். அதுவே, சிறிய தட்டில் பிரதமனை ஊற்றி அதில் மட்டிப்பழத்தையோ ரசக்கதலியையோ அல்லது அவரவர் இருக்குமிடத்தில் கிடைக்கும் வாழைப்பழத்தையோ தோலுரித்து இட்டு நசுங்கப்பிசைந்து, பொரித்த மலையாளப்பப்படத்தை நொறுக்கிச்சேர்த்து லேசாக விரவி, வாயிலிட்டால் அதன் சுவையில் சொக்கி மயங்கி தானாகவே அரைக்கண் மூடும். அவ்விதமே ரசனையுடன் உண்பார்க்கு வாழ்வில் இவ்வுலகிலேயே எந்நாளும் சொர்க்கமே வாய்க்குமாக..

12 comments:

கோமதி அரசு said...

நீங்கள் சொல்லும் அழகே அழகு.
உங்கள் எழுத்தில் சொக்கி போய் விட்டேன்.
செங்கவருக்கையை நான் பார்த்தது இல்லை.

Mahi said...

எனக்கு இந்தப் பிறவில நரகம்தான் போல!! ;) :) சொர்க்கத்துக்குப் போக நினைச்சாலும், நீங்க சொல்வது எதுவும் இங்க கிடைக்காது...ஹிஹி...

2 நாள் முந்தி பழத்தின் அழகைப் பாத்து மயங்கி ஒரு துண்டு வாங்கிவந்தேன், ஆனா அதில இனிப்பும் இல்ல..சரியாப் பழுக்கவும் இல்ல. என்ன செய்யறதுன்னு திங்கிங்...இந்த பிரதமனை செய்ய முயற்சிக்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க!

shameeskitchen said...

Neenga ezhuthiyirukkuradhe padichaale sakkai pirathaman saapta niraivu varukiradhu.

Suvaiyaana kurippu...adhanai Vida azhagaana ezhuththu nadai....

ஸ்ரீராம். said...

செங்கவருக்கை பார்த்ததில்லை. பலாச்சுளை சாப்பிட்டால் வரும் ஒரு மந்தநிளையைப் போக்கத்தான் சுக்கா?

வல்லிசிம்ஹன் said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். மஹா பொறுமை.ஷாந்தி. எழுதுவதற்குத் தான் சொல்கிறேன்.

கண்ணால் அனுபவிக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

நம் பக்கத்துத் திருமண விருந்துகளில் சுவைத்திருக்கிறேன்.

சக்கை பிரதமனின் சுவை சொட்டுகிறது ஒவ்வொரு எழுத்திலும்!
கூடவே பல தகவல்களும் அறியத் தந்திருக்கிறீர்கள். நாஞ்சில் நாட்டு சமையல் குறிப்புகள் நூலாக வேண்டும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

படத்தில் செக்கச்செவேரென்று இருக்கிறதே அதுதான் செங்கவருக்கை. ஊரை விட்டு வந்த இத்தனை வருடத்தில் இப்பொழுதுதான் நானும் நேரில் கண்டேன் :-))

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மஹி,

இனிப்பில்லாப் பழத்தையும் வெல்லம் சேர்த்து பிரதமன் செய்து அசத்தி விடுங்கள். வீணாகாது.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஷமீஸ்கிச்சன்,

எழுத்தையும் ரசித்தமைக்கும் முதல் வரவுக்கும் மிக்க நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

என் பிள்ளைகளும் இப்பொழுதுதான் முதன்முதலில் செங்கவருக்கையைக் கண்ணால் கண்டார்கள். சாயமேற்றியதோ என்ற ஐயத்தால் முதலில் வாங்கவே விடவில்லை. விளக்கிச்சொன்ன பிறகுதான் தெளிந்தது :-)

பொதுவாகவே வெல்லம், பனை வெல்லம் சேர்க்கும் எந்த வகை இனிப்பிலும் ஏலம் சேர்ப்பதானால் கூடவே சுக்கும் சேர்ப்பார்கள். செரிமானதுக்கு நல்லது. கூடவே சுவையையும் கூட்டும்.

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

இந்தியா வரும்போது சீசன் இருந்தால் நாவாலும் அனுபவிக்க வாழ்த்துகிறேன் :-)

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

நூலாக்கும் பொறுப்பை தாணுமாலயனிடமும் தவசி தம்பிரானிடமும் விட்டு விட்டேன். அவர்கள் பார்த்து எது செய்தாலும் சரிதான் :-))

இப்பொழுது பெங்களூரிலும் சக்கை கிடைக்குமென்று நினைக்கிறேன், கிடைத்தால் செய்து ருசியுங்கள்.

வரவுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails