Monday 29 July 2013

மழைப்பேச்சு கேட்க வாங்க..

எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்குவதை விட, அது தெறிக்க வைத்துச்செல்லும் மழைத்தண்ணீரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கும் மனிதர்களே அதிகம்.. ஸ்ஸ்ஸப்பா.. 

வருணரிடம் ஒப்படைத்துச்சென்ற மும்பை கரைந்திருக்கிறதா? அல்லது அப்படியே இருக்கிறதா? என்பதைப் பார்ப்பதற்காக ஒரு நாள் விசிட் வந்திருக்கிறார் சூரியர். காலையிலிருந்து வெய்யிலடிக்கிறது.

மழைக்காலத்தில் தண்ணீரைத்தான் வெந்நீராய்த்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்துக்கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள், 'தேவையில்லை அப்படியே அருந்துங்கள்' என்கிறார்கள் மினரல் வாட்டர் கம்பெனியினர்.. ஒரே கொயப்பமப்பா.
நாலு சக்கர வாகனத்தில் செல்லும்போது தேரில் அசைந்தாடிச்செல்லும் உணர்வையும், இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஒட்டகத்தில் பயணிக்கும் உணர்வையும் தருகின்றன மழை நீர் நிரம்பிய குண்டுகுழிகள். ஸ்ஸ்ஸப்பா..

மழைக்கோட்டின் தொப்பியிலிருந்து வழியும் தண்ணீரை உள்ளங்கையில் பிடித்துத் தெறித்து, குடைக்குள் தலை நனையாமல் வரும் அம்மாவின் முகத்தை நனைக்கிறது குறும்புக்குழந்தையொன்று.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர் குடை பிடிப்பதால் இருவருமே நனையாமல் செல்லலாம் என்பதைக் கண்டு கொண்டதால், மும்பையில் மழைக்கோட்டுகள் வியாபாரம் டல்லடிக்கும் அபாயம் இருக்கிறதென்று பட்சி சொல்கிறது.
மழைக்கு இதமாக எத்தனையிருந்தாலும் அத்தனையிலும் விஞ்சி நிற்பது இஞ்சி,ஏலக்காய் போட்ட தேநீர்தான், என்பதைக் கண்டறிந்தவன் மிகவும் ரசனைக்காரனாக இருந்திருக்க வேண்டும்.

ஸ்டைலான பட்டன் குடைகளை விட்டு, மும்பையின் கல்லூரிப்பெண்கள் பழைய, தாத்தா காலத்து வாக்கிங் ஸ்டிக் குடைகளுக்கு மாறி வருகிறார்கள். புதியன கழிதலும் பழையன புகுதலுமாய் உருளுகிறது ஃபேஷன் சக்கரம்.

நடந்து போவதற்குப் பதிலாக நாட்டியமாடியபடிச் செல்கிறார்கள்.. மழைநீர் தேங்கிய பள்ளங்களில் பதிக்கப்பட்டிருக்கும் சிறு கற்களின் மேல்..

தேங்கிய மழைநீரில் ஆட்டம் போடுகிறார்கள் சிறியவர்கள்,.. வீட்டினுள் வந்த நீரை ப்ளாஸ்டிக் முறமெடுத்து விரட்டுகிறார்கள் பெரியவர்கள்.. சம்பவம் நடந்தது, நடந்து கொண்டிருப்பது நடக்கப்போவது மும்பையில்..
நான்கடிக்கு ஒருமுறை முளைத்து உதிரும் நீர்ச்சிறகுகளை விரித்துப் பறந்து வருகின்றன வாகனப்பறவைகள்.

அலுவலகமோ கல்விச்சாலையோ விட்டு வெளியே வரும்போது நனையவா, குடைபிடிக்கவா என்று மனதில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு தலையில் நீர் தெளித்துத் தீர்ப்பளிக்கிறது மழை.

வரிசையில் செல்லும் எறும்புகளைப்போல் ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களினூடே குறும்புக்கார எறும்பாய், கிடைக்கும் இடைவெளிகளில் நுழைந்து செல்கிறது இருசக்கர வாகனமொன்று.

டிஸ்கி: மழைக்கால அவதானிப்புகள்.

Thursday 25 July 2013

குங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி.

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்தேன். அப்படி எழுதுவதற்காக ரூம் போட்டு உட்கார்ந்து சிந்திக்கும்போது வந்து விழுவது போதாதென்று அவ்வப்போது சில சிந்தனைகள் சுயம்பாகவும் உதிப்பதுண்டு. இப்படி ஒவ்வொரு துளிகளாகச் சேர்பவற்றை அவ்வப்போது எண்களிட்டு முகநூலிலும், குழுமங்களிலும் பகிர்வது மட்டுமன்றி "சாரல் துளிகள்" என்று என் வலைப்பூவிலும் தொகுத்துப் போடுவது வழக்கம்.

சாரல் துளிகளை ஆரம்பத்தில் சும்மா விளையாட்டாகத்தான் எழுத ஆரம்பித்தேன். அதன்பின் நாளாக நாளாக கண்ட, கேட்ட, உணர்ந்த விஷயங்களைப் பகிர்வதற்கான ஊடகமாகவும் இது ஆகிவிட்டதும் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வரவேற்பும் கிடைக்க ஆரம்பித்ததும் உற்சாகமாக எழுத ஆரம்பித்தேன். ஃபேஸ்புக்கில் எழுதும் துளிகளில் சிலவற்றைக் 'குங்குமம் தோழியின் தினமொழிகள்' வெளியீட்டிலும் காணும் பேறு கிடைத்தது. நமக்கான அங்கீகாரத்தை விடவும் மகிழ்ச்சியான விஷயம் இருக்கிறதா என்ன :-)

கொஞ்சம் கொஞ்சமாக ஃபேஸ்புக்கில் பகிர்பவற்றை குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில்(சுமார் 10 துளிகள்) சேர்ந்ததும் இங்கே ப்ளாகிலும் பகிர்ந்து வருகிறேன். பின்னாளில் என்றைக்காகவது புத்தகமாக வருமா? என்றும் சில நல்ல உள்ளங்கள் கேட்பதுண்டு. காலம்தான் அதற்குப்பதில் சொல்ல வேண்டும்.

'சாரல் துளிகள்' மொத்தமும் எப்பொழுது புத்தகமாக வருமென்று நானறியேன், ஆனால் இந்தத்தொகுப்பிலிருந்து ஒரு துளியான, 

"வேலி தாண்டும் வெள்ளாட்டை நினைவு படுத்துகிறது குறுகிய சாலைத்தடுப்பை அனாயாசமாகத் தாண்டிச்செல்லும் ஒரு வாகனம்."

என்ற துளி, அச்சுப்புத்தகத்தில், அதாவது இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியிருக்கிறது. 

குங்குமம் இதழுக்கு மிக்க நன்றிகள்.

Monday 22 July 2013

விருந்தோ விருந்து..

பார்க்க நன்றாக இருப்பதெல்லாம் சாப்பிடவும் நன்றாக இருக்குமென்று சொல்வார்கள். நன்றாக இருக்கிறதோ இல்லையோ,.. இருப்பது மாதிரியான தோற்றத்தைக் கண்டிப்பாக உண்டு பண்ணலாம். சுமாராக, கொஞ்சம் இனிப்புக்குறைவாக இருக்கும் பாயசத்தைக்கூட நாலைந்து வறுத்த முந்திரிப்பருப்புகள், திராட்சைப்பழங்களைக் கொண்டு அலங்கரித்து வைத்தால் பாயசம் வேண்டாமென்று சொல்பவர்கள் கூட அரைக்கிண்ணமாவது சாப்பிட்டு விடுவார்கள். காய்கறிகள் வேண்டாமென்று சொல்லும் குழந்தைகளை, இட்லியில் இருக்கும் பட்டாணிக்கண்களும், கேரட் மூக்கும், தக்காளி உதடுகளும் கவர்ந்திழுத்து விடும். சாப்பாட்டை அழகாக அலங்கரித்து வைக்கும் முறையில் இப்படி எதையாவது செய்து வயிற்றுக்குள்ளே தள்ளி விடுவது அம்மாக்களுக்கு மட்டுமல்ல உணவகங்கள் நடத்துபவர்களுக்கும் கை வந்த கலை.

ஆரம்பம் ஆப்பிளுடன்..
பொதுவாக சில உணவங்கங்களுக்குள்ளே நாலா பக்கமும், ஸ்னாக்ஸ், இட்லி வடை, பூரி போன்ற சாப்பாட்டு வகைகள், ஜூஸ் வகைகள் போன்ற உணவு வகைகளின் படங்களை அசத்தலான ஒளியமைப்புடன் மாட்டியிருப்பார்கள். அதுவும் ஐஸ்க்ரீம், ஃபலூடா, வட இந்திய இனிப்பு வகைகளுக்குக் கூடுதல் கவனமெடுத்து செய்திருப்பார்கள். இவற்றைப் பார்க்கும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் இது கண்டிப்பாகக் கவர்ந்திழுக்கும். இந்த வகை ஒளிப்படக்கலையை ஃபுட் ஃபோட்டோகிராபி என்று அழைப்பார்கள். ஒரு சில நுட்பங்களைப் பின்பற்றினாலே போதும்,.. "அட!!.. அந்த அயிட்டமா இது!" என்று பார்ப்பவர்கள் நாவில் எச்சில் ஊறச்செய்யும் அழகழகான படங்களை எடுத்துத்தள்ளலாம். ஒரு சில நுட்பங்களை இங்கேயும் தந்திருக்கிறார்கள். பார்ப்பதோடு மட்டுமல்லாமல், முயற்சித்தும் பயனடையுங்கள். என்னுடைய ஒரு சில முயற்சிகள் இங்கே உங்கள் பார்வைக்காக..

இவைகள் இல்லாத பால்யமா..

கேக்காமலேயே கிடைக்கும் கேக்..


த்த்த்த்த்த்த்தேன் மிட்டாய்..

கூட்டணியில் செஷ்வானும் மக்ரோனியும்..

கடாயில் இருப்பதால் இது கடாய் மஷ்ரூம்..

நான்கட்டாய்..(பிஸ்கட் வகை)


ப்ப்ப்ப்ப்ப்ப்பா.. பாஸ்தா.

மகள் செய்த Rabdi..

ஜலீலாக்காவிடம் பரிசு பெற்றுத்தந்த 'சூரா'..

ஆஹா.. வட போகலை. இங்கேயிருக்கு :-)

பார்த்த கண்கள் இதையும் ரசிக்குமே..

கண்களால் சாப்பிட்டாலும் ஜீரணமாக உதவும் பெருஞ்சீரகம் :-)

Thursday 18 July 2013

உலத்தி.. (கூந்தற்பனை)

கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் தோரணங்களுடன், வாசலில் குலையுடன் கூடிய வாழைமரம் போன்றவற்றைக் கட்டி வைத்து அலங்கரிப்பது வழக்கம். அதிலும் திருமணங்களில் கூடுதல் அலங்காரமாக செவ்விளநீர்க்குலைகளையும் வாசலில் கட்டி வைப்பார்கள். சில காலம் முன்பு வரைக்கும் திருமணங்களை வீட்டில், முற்றத்திலோ அல்லது வீட்டின் முன்பக்கத்திலோ, அருகிலோ இருக்கும் மைதானங்களில் தென்னையோலைக் கிடுகுகளால்(பின்னப்பட்ட ஓலைகள்) ஆன பந்தலிட்டு நடத்துவது வழக்கமாக இருந்தது. அப்போதெல்லாம் பந்தலைத் தாங்குவதற்காக ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும் மூங்கில் கம்புகளில் அலங்காரமாக வித்தியாசமான பச்சை ஓலைகளையும் செருகியிருப்பார்கள். மீன் வால் மாதிரியும் சிறகுகள் மாதிரியும் வித்தியாசமான அமைப்பைக் கொண்டிருக்கும் அந்த ஓலைகள் கூந்தல் பனை என்றும் உலத்தி என்றும் அழைக்கப்படும் மரத்தினுடையவையே.

கூடுதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வாசல் அலங்காரத்தில் கூந்தல் பனையின் கூந்தலையும் கட்டி வைப்பார்கள். ஒரு கூந்தலை இரண்டாக வெட்டி இரண்டு பக்கமும் கட்டுவது வழக்கம். "என்னது!!.. கூந்தலா?" என்றுதானே நினைக்கிறீர்கள்.பச்சைப்பட்டாணிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் நீளமான சாட்டைகளைச் சேர்த்துக் கட்டியதுபோல் காட்சியளிக்கும் பூங்கொத்தைத்தான் கூந்தல் என்று சொல்லுவோம். சிறுசிறு அரும்புகள் போன்று காட்சியளிக்கும் பூக்கள் முதிர்ந்து பட்டாணியளவில் சின்னஞ்சிறு காய்கள் ஒட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும். இப்பருவத்தில் ஒரு கூந்தலின் விலை இரண்டாயிரம் வரைக்கும் போகுமாம். கல்யாண வீடுகளில் முஹூர்த்தம் முடியும்வரைக்கும் கூடக் காத்திருக்காத பொறுமையிழந்த குழந்தைகள், இந்தச்சாட்டைகளை அறுத்து வைத்துக்கொண்டு மனம்போல் விளையாடுவதுண்டு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 'உலத்தி' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens.  'யா மரம்' என்று குறுந்தொகையிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ். லத்தீன்  மொழியில் urens என்ற பெயருக்கு 'அரிக்கும் தன்மையுடையது' என்ற அர்த்தமுண்டு. பெயருக்கேற்றாற்போல் கூந்தலில் இருக்கும் காய்களை வெகு நேரம் கையாண்டால் லேசான அரிப்பு ஏற்படும்.(இதிலிருக்கும் ஆக்சிலிக் ஆசிட்டின் காரணமாகவே அரிப்பு ஏற்படுகிறதென்று அறிவியல் சொல்கிறது.) இதற்காகவே சிறுவயதில் நாங்கள் இதை வைத்து விளையாடும்போது பெரியவர்கள் எச்சரித்த நினைவிருக்கிறது. 

இம்மரத்தைப் பார்க்கும்போது, குளித்து முடித்த பின் ஒரு பெண் தன் கூந்தலை விரித்து உலர்த்திக்கொண்டிருப்பது போலவும், பூங்கொத்துகள் நீளமான கூந்தலைப்போலவும் தோன்றுவதால் கூந்தற்பனை, மற்றும் உலத்தி என்ற பெயர்கள் பொருத்தமானதாகவே தோன்றுகிறது. பனைவகையைச் சேர்ந்த இம்மரங்கள் சுமார் 15 மீ. வரை வளரக்கூடியது. வழவழப்பான, உருண்டையான இதன் தண்டுப்பகுதி சுமார் 30 செ.மீ விட்டமுடையதானதாக இருக்கும். உதிர்ந்த இலைகள் இதன் உடலில் விட்டுச்செல்லும் தடங்கள் பார்ப்பதற்கு வளையங்களைப் பதித்தது போலவே இருக்கும்.  கூந்தற்பனை (இலங்கை வழக்கில் கித்தூள்) என்பது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர்,மியான்மர் ஆகிய நாடுகளில் மழைக் காட்டு நிலங்களில் வளரும் பனைக் குடும்ப பூக்கும் தாவரஇனமாகும்.

பொதுவாகவே பனைக்குடும்ப வகையைச் சேர்ந்த மரங்களிலிருந்து பதநீர் இறக்கப்படுவதும், அது காய்ச்சப்பட்டு வெல்லம் தயாரிக்கப்படுவதும் உண்டு. இதற்கு கூந்தற்பனைமரமும் விதி விலக்கல்ல. இதிலிருந்து இறக்கப்படும் நீர் 'கித்தூள் பானி' என்று அழைக்கப்படுகிறது. இளநீர், பதநீர் என்று அழைக்கப்படுவதால் சம்பந்தப்பட்ட மரங்களை இளநீர் மரம் என்றோ பதநீர் மரம் என்றோ நாம் அழைப்பதில்லை. மாறாக தென்னை, பனை என்று அழைக்கிறோம். ஆனால், கூந்தற்பனையிலிருந்து பெறப்படும் நீர் 'கித்தூள்' எனப்படுவதால் கித்தூள் மரமென்று அழைக்கப்படும் பெருமை இம்மரத்திற்கு மட்டுமே உண்டு. ஆமாம்,..இலங்கையில் இந்த மரத்தைக் கித்தூள் மரமென்றுதான் அழைக்கிறார்கள் :-)) சமையலில் வழக்கமான வெல்லத்திற்குப் பதிலாக இதைப்பயன்படுத்தி இனிப்புகள் செய்யலாம். 
இதன் அழகான கூந்தலுக்காகவும் இலையின் அழகுக்காகவும் இது வீட்டின் உள் மற்றும் வெளி அலங்காரத்திற்காகவும் வளர்க்கப்படுகிறது. ஓரளவு வளரும்வரை தொட்டிகளில் க்ரோட்டன்ஸ்களைப்போல் வீட்டுக்குள் வளர்த்துவிட்டு பின் வெளித்தோட்டத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நவிமும்பையில் சில பெட்ரோல் சேமிப்பு நிலையங்களில் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுவதுண்டு. இரண்டு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்ததுமே சின்னதாகப் பாளை விட்டு அரையடிக்கூந்தலை விரித்துப்போட்டுக்கொண்டு நிற்கும் சின்னஞ்சிறு உலத்திகளைப் பார்க்கும்போது 'பாப்'வெட்டிக்கொண்ட எலிக்கேஜி குழந்தையைப் போலிருக்கும். 

தென்னை மற்றும் பனை மரங்களைப்போலவே இதிலும் ஒவ்வொரு மடலுக்கும் ஒரு பாளை வரும். அந்தப்பாளை வெடித்து வரும்போது கூந்தலும் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்து இறுதியில் ஒன்பதடிக்கூந்தலை உலர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பாள் இந்தக் கூந்தலழகி. தனிமரம் தோப்பாகாதுதான். ஆனால், நன்கு செழித்து வளர்ந்த ஒரே ஒரு கூந்தற்பனை கிட்டத்தட்ட தோப்பையே வளர்க்கும் தோற்றத்தைக் கொடுக்கும். ஒரு கூந்தற்பனையை வீட்டு முன் தோட்டத்தில் வளர்த்தாலே போதும்.. வீட்டுக்கே ஒரு தனியழகு வந்தது போலிருக்கும். வீட்டின் முன் அலங்கரித்த தேரை நிறுத்தியிருப்பது போன்றதான, யானையைக் கட்டிப்போட்டு வளர்ப்பது மாதிரியான அழகு அது.

டிஸ்கி: இந்தக்கட்டுரை தமிழ்மரபு அறக்கட்டளையின் படக்காட்சி வலைப்பூவிலும் இணைக்கப்பட்டுள்ளது. மிக்க நன்றி சுபாஷிணி& கண்ணன்.

Monday 15 July 2013

மாற்றமும் முன்னேற்றமும்..

மகிழ்ச்சியாக இருப்பதை நிரந்தரமான வாழ்க்கை முறையாகவோ, அல்லது விடுமுறைக்கொண்டாட்டம்போல் எப்போதாவது வந்து போவதாகவோ அமைத்துக்கொள்வதென்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

செழித்துக்குலுங்கி நிற்கும் தாவரங்களையோ, ஓங்கியுயர்ந்து நிற்கும் கட்டிடங்களையோ மட்டுமே கண்டு பெருமூச்செறிகிறோம், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் உழைப்பைப் பொருட்படுத்தாமல்.

‘இந்தச்செயலைச் செய்து முடிக்க உன்னால் இயலாது’ என்று அனைவராலும் சுட்டப்படும் ஒன்றை வெற்றிகரமாக முடிப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

பிரிக்கப்படாத பரிசுப்பொட்டலம் போன்றதே வாழ்வும். அதனுள் நமக்காக என்னவெல்லாம் காத்திருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்வரை சுவாரஸ்யங்களுக்குக் குறைவிருக்காது.

வாழ்வின் அர்த்தத்தை அது கற்றுக்கொடுக்குமுன்பே, அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

மாற்றங்கள் இல்லாதவரை வளர்ச்சியும் ஏற்படுவதில்லை, வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றமுமில்லை.

எல்லா மனிதர்களும் சரியாகவே சிந்தித்துச் செயல்படுகிறார்கள், அவரவர் பார்வையில்.

நமது பலம் என்னவென்றே அறியாமலிருப்பதுதான் நமது பலவீனமாகவும் இருக்கிறது.

நம் மீதோ நாமோ, அன்பு வைத்திருப்பவர்களுக்காகச் சுமப்பவை சுமைகளாய்த்தெரிவதில்லை.

விளக்கியதால் மட்டுமே எல்லாம் விளங்கி விடுவதுமில்லை. விளக்காமல் இருப்பதால் விளங்காமல் இருந்து விடுவதுமில்லை. கற்றுக்கொண்டு விடுகிறோம் எப்படியாவது.

Thursday 11 July 2013

ஈச்சை... பேரீச்சை!!..

ஒரு காலத்தில் "பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழேம்ம்ம்ம்ம்" என்று கூவிக்கொண்டு வருபவரைக் கண்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம்தான். திருவிழாக்களிலும், பழைய பொருட்களை வாங்குபவரிடமும் மட்டுமே பேரீச்சம்பழம் கிடைத்துக்கொண்டிருந்த காலமது. இப்போது மாதிரி அப்போதெல்லாம் பிரபலமான கம்பெனிகளின் விதவிதமான பேரீச்சம்பழம் மற்றும் சிரப்புகளின் டப்பாக்கள் கடைகளில் மலிந்து கிடக்காது. எங்கள் கம்பெனிகளின் தயாரிப்புகள்தான் சிறந்தவை, அவைகளையே வாங்குங்கள் என்று வலிந்து வாய்க்குள் திணிக்காத  குறையாய் அலறும் விளம்பரங்கள் எதுவும் அப்போது வரவில்லை. இப்பவும்கூட கோயில் திருவிழாக்கள் என்றால் அங்கே பேரீச்சம்பழக் கடைகள் இல்லாமல் இருக்கின்றனவா என்ன?. நாங்களெல்லாம் சுசீந்திரம் தேரோட்டத்திற்குப் போவதே ஓலைப்பெட்டியில் பேரீச்சம்பழமும் வாங்குவதற்காகத்தான். அதெல்லாம் அப்போது காணாப்பண்டம் :-)) "இதெல்லாம் பாலைவனத்தில் மட்டுந்தான் வளருமாக்கும்" என்ற நினைப்பு வேறு அதை அபூர்வமாக்கி வைத்திருந்தது.

இங்கே வந்து இத்தனை நாட்களானபின்னும் அப்படியான நினைப்புதான் இருந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் அரைப்பக்குவமான மஞ்சள் நிறப் பழக்கொத்துகளைக் காண நேரும்போது கூட அது பேரீச்சம்பழம்தான் என்று அடையாளம் காணத் தெரியவில்லை. மால்களிலும் சூப்பர்மார்க்கெட்டுகளிலும் ஃப்ரெஷ் பழம் வேறு வழக்கமான அடர்ந்த பிரவுன் கலரில் இருந்து தொலைத்தால் என்னதான் செய்வது :-))) சத்தியமாக மரத்தையே போட்டுத்தாண்டினாலும் நம்பியிருக்க மாட்டேன். பின்னொரு காலம் அடர்சிவப்பில் மார்க்கெட்டில் மின்னிய பழங்களைக்கண்டதும், வாங்கி வந்தேன். இனிப்பும் லேசான துவர்ப்புமாக நன்றாகத்தான் இருந்தது. அப்பொழுது கடைக்காரரிடம் கேட்டபோதுதான் இது பாலைவனத்தில் மட்டுமல்ல, நன்கு பராமரித்தால் உள் நாட்டிலும் வளரும் என்றார். 

ஆச்சரியமாக இருந்தது.. முதன்முதலில் பேரீச்சை மரத்தை நேரில் கண்டபோது. அதுவும் அந்தச்சமயத்தில் பழங்களோடு இல்லாமல் இருந்திருந்தால் அப்போதும் தெரிந்துகொண்டிருக்க இயலாது. பட்டிக்காட்டாள் முட்டாய்க்கடையைப் பார்த்ததைப்போல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். நவிமும்பையில் பேலாப்பூரிலிருக்கும் croma-வின் வெளியே சுமார் இருபது மரங்களாவது இருக்கும். கடைக்காரர்கள் நன்றாகவே பராமரிக்கிறார்கள்.  வெயில் காலத்தில் பாளை விட்டுப்பூத்துக் காய்க்க ஆரம்பித்து மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.
பாளைச்சிரிப்புடன்..
குலை குலையாய்ப் பேரீச்சைக்காய்..
ஒரு மரப்பழங்களுக்கு ஒரு கொத்து பதம்..

பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருப்பது எல்லோரும் அறிந்ததே. வீட்டில் யாருக்காவது, முக்கியமாக கர்ப்பிணிப்பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக டாக்டர் சொல்லி டானிக்குகளை எழுதிக்கொடுத்தாலும், நாமும் நம் பங்கிற்கு கீரை முதலியவற்றுடன் பேரீச்சம்பழங்களையும் கொடுக்க ஆரம்பிப்பதுண்டு. என்னதான் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் குழந்தைகள் சரியான வளர்ச்சியில்லாமல் புஷ்டியாக இல்லாமல் இருந்தால் உடனே, "நாலஞ்சு பேர்த்தம்பழத்த பால்ல போட்டு கொதிக்க வெச்சு மசிச்சுக் கொடுக்கப்டாதா.. புள்ள நல்லா கிண்ணுன்னு ஆகிருவானே" என்று விவரமறிந்த பெரியவர்கள் சிபாரிசும் செய்வதுண்டு. பழத்தைத் தேனில் ஊறவைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் வலுவாக இருப்பார்கள்.

இப்படிப் பேரீச்சம்பழத்தைப் பாலில்  வேக வைத்துச்சாப்பிடுவது நிறையக் குறைபாடுகளை நீக்குகிறது. முக்கியமாக இதயத்திற்கும் நல்லது.  இதனுடன் ஒன்றிரண்டு பாதாம்பருப்புகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும், ஞாபகசக்தியும் கூடும். இதுபோகவும் இந்தப் பழத்தில் கால்சியம், விட்டமின் , பி, பி2, பி5 மற்றும் விட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கின்றனனவிட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வையில் கோளாறுகள் இருப்பவர்கள் இதைத்தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 
  

மங்களகரமாய் ஆரம்பம்..

பேரீச்சம்பழம் பனை வகையைச் சேர்ந்ததுதான். பொதுவாகப் பாலைவனம் அல்லது வறண்ட மண்ணில்தான் வளரும் என்றாலும், நம் நாட்டில் வேறு எங்கேனும் வளர்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக கூகிளாத்தாவை நாடியபோது, தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.

தண்ணீர் வளமுள்ள நம் தென்னிந்தியாவில் அதுவும் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில்  வளர்த்துச் சாதனை புரிந்திருக்கிறார் சகோ.திருப்பதி. திண்டுக்கல் நகர்ப்பகுதியில் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு பகுதிகளில் தானாகவே வளர்ந்திருந்த மரங்களைப்பார்த்துவிட்டு, இதை ஏன் நாம் பெரிய அளவில் முயற்சி செய்து வளர்க்கக்கூடாது என்று எண்ணினார். அப்போதுதான் குஜராத்திலிருக்கும் பேரீச்சம்பண்ணையைப் பற்றியும் அறிந்து கொண்டார். அங்கே நடத்திய விசாரணையில் 'பரி' என்னும் வகை மரத்திலிருந்து பறித்ததுமே சாப்பிட ஏதுவானது என்று தெரிந்து கொண்டார். இப்போது மார்க்கெட்டில் கிடைப்பதும் இந்த வகைதான். (சில வகைகளில் 'டாரின்' பால்சத்து கூடுதலாக இருக்கும். சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும், இவைகளைப் பதப்படுத்தாமல் சாப்பிட முடியாது) லண்டனிலிருந்து கொண்டு வந்த திசுக்கன்றுகளை குஜராத் பண்ணையின் உதவியுடன் வளர்த்து, பின் ஊருக்குக் கொண்டு வந்து சுமார் 12 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்.

பேரீச்சமரம் வளர அடிப்படைத்தேவையாக 40 டிகிரி வெப்பமும், தண்ணீர் வசதியுமே போதுமானது. நம்மூர் வெப்பநிலையும் கிட்டத்தட்ட இவ்வளவுதானே இருக்கிறது.  சொட்டு நீர்ப்பாசன முறையில் தண்ணீரும் கிடைத்ததில் மூன்று வருடங்களில் காய்க்க ஆரம்பித்து இப்போது ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ அளவில் பழங்கள் கிடைக்கிறதாம். கேரளாவிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வாங்கிப்போகிறார்களாம். இங்கே மும்பையிலும் இப்போது அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இப்போது நோன்பு காலமாதலால் விலை மலிவாகவும் கிடைக்கிறது. சீசன் ஆரம்பத்தில் கிலோ 200 ரூபாய் இருந்தது இப்போது 80 ரூபாயாக இருக்கிறது.

சீசன் சமயங்களில் பேரீச்ச மரத்திலிருந்து 'ரஸ்' (நம்மூர் பதநீர் மாதிரி) இறக்குவதுண்டு. இதிலிருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதைக் கதைக்களமாகக் கொண்டு அமிதாப், நூதன் நடித்து வெளியான 'சௌதாகர்' என்ற இந்திப்படம் ரொம்பவே பிரபலம். படத்தை விட 'சஜ்னா ஹை முஜ்ஜே.. சஜினா கே லியே' என்ற பாட்டு ரொம்பவே பிரபலம். அழகுசாதன விளம்பரங்கள் ஒன்றிலும் இந்தப்பாட்டை உபயோகப்படுத்தியிருந்தார்கள்.


பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழேம்ம்ம்ம்..

பதப்படுத்தப்பட்ட பழங்கள் ஒருவகை ருசி என்றால், 'பரி(றி)'த்த பழங்கள் இன்னொரு வகை ருசி. எக்கச்சக்கமான இனிப்புடன் அடிநாக்கில் லேசான துவர்ப்புடன் அருமையாக இருக்கிறது. நாமெல்லாம் அப்படியே சாப்பிடும் ரகம் என்றாலும் சமையல் ராணிகள் பக்குவப்படுத்தப்பட்ட பழங்களை வைத்து விதவிதமாகச் சமைத்து விருந்தே படைத்து விடுவார்கள். வழக்கமாகச் செய்யும் அல்வா, மில்க்ஷேக், லட்டு தவிரவும் எக்கச்சக்கமான தீனிகள் இங்கே மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நம்மூர் சிங்கம் விற்கும் பழங்களைத்தவிரவும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃப்ரெஷ் பழங்களும் மால்களில் கிடைக்கின்றன. ஏதாவது புதிதாக சாப்பாட்டுஅயிட்டம் செய்யலாம் என்று வாங்கி வந்தால் 'என்ன செய்யலாம்?' என்று சிந்திக்கும்போதே கைக்கும் வாய்க்குமாக வேலை கொடுத்து விடுகிறது அதன் ருசி :-)) அதனாலென்ன?.. 'அடுத்த தடவையாவது' என்ற வார்த்தை எதற்குத்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே அடுத்த தடவையாவது :-))))

Monday 8 July 2013

முரண்பாடுகளும் ஆழிப்பேரலைகளும்..

அலைகடலிடம் அமைதியையும், குளத்தில் ஆழிப்பேரலைகளையும் எதிர்பார்ப்பது போன்றதே சிலரிடம் வைக்கப்படும் எதிர்பார்ப்புகளும்..

உர்ர்ர்ர்ர்ர்சாகமாக விடியும் பொழுதை, சில இனிய நிகழ்வுகள் உற்சாகமாக மலர வைத்து விடுகின்றன.

ரசித்துச்சிரிக்கத் தெரிந்தவனுக்கு அழகாய்த்தெரியும் உலகம், தெரியாதவனுக்கு கரடுமுரடாய்க் காட்சியளிக்கிறது.

எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து விட்டு கடைசியில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம், பிடித்துப்போனதால் மட்டுமல்ல.. களைத்துப்போனதால் கூட இருக்கலாம்.

எறியப்பட்ட கல் குளத்தில் எழுப்பும் அலைகள் கரையிலிருப்பவரையும் தொட்டுச்செல்வது போல், ஒருவர் மேல் காட்டப்படும் கருணையானது பலருக்கும் பரவுகிறது.

அன்பு--- எல்லாச்சுமைகளையும் வலிகளையும் நீக்கவும், கொடுக்கவும் வல்ல ஒரே உணர்வு.

சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கான விலையென்பது, அதற்காகச் செலவிட்ட நம் வாழ்நாளின் பகுதியாகக்கூட இருக்கலாம்.

உண்மையாகவே மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புபவர்களின் கண்களுக்கு முட்டுக்கட்டைகள் தட்டுப்படுவதில்லை.

சிக்கல்களில்லாமல் எளிமையாக, நிம்மதியாக வாழ்வதென்பதே இன்றைய சூழலில் மனிதனுக்கு சிக்கலான பிரச்சினையாக இருக்கிறது.

முழுகிப்போய் விட்டாலும் கன்னத்தில் கை வைத்து அமராமல் இன்னொரு கப்பலை உருவாக்குகின்றனர் குழந்தைகள். முதலாவதை விடப்பலமானதாக, உறுதியானதாக.

Friday 5 July 2013

பூந்தோட்டம்.. (05-07-2013 அன்று பூத்தவை)

பச்சிலைப்பூ: எல்லா ஊர்களையும்போலவே மும்பையிலும் இவ்வளவு நாளாக சமையல் வாயு வேண்டுமென்றால் பதிவு செய்து காத்திருந்தோ அல்லது நேரடியாகப் போயோ வாங்கிக் கொண்டிருந்தோம். ஆனால், இனிமேல் ரீஃபில் சிலிண்டருக்கான பதிவு முறை மொபைல் போனிலோ அல்லது லேண்ட் லைன் மூலமாகவோ மட்டுமே செய்யப்படுமாம். இந்த முறை கோவா, ரத்னகிரி, சிந்துதுர்க் ஏரியாக்களில் ஆரம்பித்து மும்பை வரை  வந்திருக்கிறது. இதற்காகச் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமது வினியோகஸ்தர்களிடம் ரேஷன் கார்டு, மற்றும் கியாஸ் கார்டு சகிதம் சென்று, அதைக் கண்ணில் காட்டி விட்டு, இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்களது மொபைல் நம்பர், அல்லது லேண்ட் லைன் நம்பரைக் கொடுக்க வேண்டும். அவர்கள் நாம் அங்கேதான் இணைப்பு வாங்கியிருக்கிறோம் என்பதை உறுதிசெய்து, நம் விவரங்களை ஆன்லைனில் அவர்கள் தளத்தில் பதிவு செய்து வைத்துக்கொண்டு IVRS(Interactive Voice Response System)நம்பரான 9420456789ஐ கியாஸ்கார்டில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதன் பின் நமக்கு ரீஃபில் சிலிண்டர் தேவைப்படும்போது IVRS நம்பரை மட்டும் டயல் செய்தால் போதும். தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு விடும். 

மொபைல் நம்பர் மூலமாக சிலிண்டர் பதிவு செய்யும்போது reference நம்பர் எஸ்.எம்.எஸ் மூலமாக வந்து விடும். அதேபோல் சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டதும் அதை உறுதி செய்தும் ஒரு தகவல் கொடுத்து விடுவார்கள். இதையெல்லாம் கடை வாசலில் ஒரு பணியாள், அனைவருக்கும் விளக்கிக்கொண்டிருந்தார். இந்த ரெஜிஸ்ட்ரேஷனை, ஆபீசர் மூலமாக அல்லாமல் நாமே மொபைல் மூலமாகவும் செய்யலாம் என்றும், அதை எப்படிச்செய்வது என்று விளக்கி ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸுக்கு வழி காட்டிக்கொண்டுமிருந்தார். கடைக்குள் கூட்ட நெரிசலைத்தடுக்க இப்படியொரு ஐடியாவாம். எட்டியெட்டிப் பார்த்தும் தலைகள்தான் தெரிந்தனவேயல்லாமல் நோட்டீஸ் கண்ணில் படவில்லை. ஆகவே 'என் வழி நேர் வழி' என்று கடைக்குள் நேரடியாகப் போய்ப் பதிவு செய்தேன். www.ebharatgas.com என்ற அவர்களது தளத்திலும்போய்ப் பதிவு செய்து ivrs நம்பரைப் பெற்றுக்கொள்ளலாம். 

வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு சகோதரர் உதிர்த்த முத்து.. "இதுவரைக்கும் இதெல்லாம் தங்க்ஸ்கள் பாடுன்னு இருந்துட்டோம். இப்ப நம்ம மொபைல் நம்பரைக் கொடுக்கப்போறதால், இனிமேல் 'சிலிண்டர் புக் செய்தாச்சா?'ன்னு ஆப்பீசுக்கு வீட்டிலிருந்து அடிக்கடி போன் செய்து வறுத்தெடுக்கப்போறாங்க" மொபைல் நம்பரை மட்டும் கொடுப்பவர்கள் வீட்டில் லேண்ட்லைன் இல்லையென்பது அர்த்தமெனக்கொள்க. அதுதான் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது நான்கு மொபைல்களாவது இருக்கின்றனவே. அப்புறம் லேண்ட்லைன் எதற்கு :-)

வெட்சிப் பூ: ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் சென்ற வாரம் ஒரே வேடிக்கைதான். தலைப்பே அப்படியாயிற்றே. அசரடிக்கும் படங்கள் காட்டிய வேடிக்கையில் சென்ற வாரம் முழுதும் கலகலப்பாகப் போயிற்று. முத்துக்கள் பத்தில் எனது காமிராச்சிப்பி உதிர்த்ததும் இடம்பெற்றது.



யார் தந்த அரியாசனமிது :-))

செங்கோடுவேரிப்பூ: கணவரிடம் கோபித்துக்கொண்டு மனைவி, "நான் எங்க அம்மா வீட்டுக்குப்போறேன்" என்று கிளம்பினால்,  கணவர் அதைத் தடுக்கக் கூடாதாம். மாறாக, "பரவாயில்லைம்மா, நீ உங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டு வா,.. நானும் என் மாமியார் வீட்டுக்குப் போயிட்டு வரேன், நம்ம குழந்தைகள் அவங்க நானா, நானி(அம்மம்மா, அம்மாவின் அப்பா) வீட்டுக்குப் போயிட்டு வரட்டும்." என்று சந்தோஷமாகச் சொல்ல வேண்டுமாம். சமாதானப்படுத்த இதுவும் ஒரு வழி என்கிறார் உபதேசித்தவர். பதிலுக்குக் கோபப்படவோ சண்டையிடவோ செய்தால் சண்டை இன்னும் வலுக்கும், குடும்ப அமைதி குலையும். (சானல்களைத் திருப்பிக்கொண்டிருந்தபோது சமீபத்தில் ஒரு பக்தி சானலில் எதேச்சையாகக் கேட்டது)

தேமாம்பூ: குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்.. அது மனிதக்குழந்தையாக இல்லாவிட்டாலும் கூட :-)))


இது துள்சிக்காவுக்காக :-)

Tuesday 2 July 2013

தினகரன் நாளிதழும் ஞானும் பின்னே அல்வாவும்..

பாம்பே அல்வா என்று பெயரிடப்பட்டிருப்பதால் இது பாம்பேயாக இருந்து மும்பையாக மாறியிருக்கும் ஊரைத்தான் தாயகமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பதை வாசிக்கத்தெரிந்த சிறுகுழந்தை கூட சொல்லிவிடும். அதேபோல், சைனாக்ராஸ் எனப்படும் அகர்அகரை முதன்மை மூலப்பொருளாகக் கொண்டிருப்பதால் இந்த அல்வாவை சைனாவிலோ, பாம்பே அல்வா என்ற நாமகரணம் கொண்டிருப்பதால் மும்பையிலோ  செய்ய வேண்டுமென்ற அவசியமுமில்லை. எந்த ஊரில் செய்தாலும் அல்வா.. அல்வாதான்.

கோபால் பல்பொடி மாதிரியே இதுவும் ஆசியாவின் ஜப்பான், ஃபிலிப்பைன்ஸ், மலேஷியா, சைனா, போன்ற நாடுகளில் புகழ்வாய்ந்தது. அகர் அகர் உடல்சூட்டைத்தணிக்கும் குணம் கொண்டது. ஆகவே இதில் அல்வா,  புடிங் என்று வகைவகையாகச் செய்து அசத்தலாம். இளசான தேங்காயின் நறுக்.. நறுக்கையும் வழுவழுப்பையும் கொண்டிருக்கும் இந்த அல்வாவை வெயில் காலங்களில் மட்டுமல்லாது எல்லாக்காலங்களிலும் கொடுத்து மகிழலாம். என் வீட்டினருக்கு அல்வா கொடுப்பதென்று முடிவெடுத்து விட்டால் அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன். உடனே ஓடிவிடுவேன்.. பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு :-) நினைத்த போதெல்லாம் அல்வா செய்து கொடுத்து மகிழத்தான் கிட்ஸ் கம்பெனிக்காரர்கள் உடனடி மிக்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறார்களே. அதில் ஒன்றிரண்டு பாக்கெட்டுகளை அள்ளிக்கொண்டு வருவது வழக்கந்தான் :-)

முதன்முறை இந்த அல்வா செய்யப்போய் அது எனக்கு அல்வா கொடுத்த கதையும் உண்டு. கடைசித்தம்பியின் திருமணத்தின்போது அவனுக்கு என் கையால் அல்வா செய்து கொடுக்க வேண்டுமென்ற ஆசையில் மும்பையிலிருந்தே பாக்கெட் வாங்கிப்போயிருந்தேன். எவ்வளவு நேரம் காய்ச்ச வேண்டுமென்று தெரியாமல் நானே குத்து மதிப்பாக ஒரு கணக்கைப்போட்டுக்கொண்டு காய்ச்சிய பாலில் அல்வாமிக்ஸை மிக்ஸிவிட்டு அது  கரையும் வரையில் கிளறி, பாயசம் மாதிரியே இருக்கிறதே என்று மனதில் கடைசி வரையில் தோன்றிக்கொண்டே இருந்த எண்ணத்தைத் தூக்கிக்கடாசி விட்டு, அல்வாக்கலவையை தட்டில் கொட்டிவிட்டேன்.  அதுவானால் இறுகாமல் விழித்துக்கொண்டே இருந்தது. சரி, விடியும் வரைக்கும் விட்டு வைத்தால் இறுகிவிடும், டிபனுடன் பரிமாறலாமென்று எண்ணி, ஒரு தட்டைப்போட்டு மூடி வைத்து விட்டேன். விடிந்து பார்த்தால் தட்டிலிருந்ததில் பாதியைக்காணோம்.மீதி இன்னும் பாஸுந்தி மாதிரியே இருக்கிறது.

ஆஹா!!.. ருசியாகத்தான் இருக்கும் போலிருக்கிறது, வீட்டிலிருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் மீதம் வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் விழுந்தது மண். இரவோடு இரவாக உலா வந்த பூனையார் டேஸ்ட் பார்த்துவிட்டு மீதியை எங்களுக்கு விட்டு வைத்திருந்தார் :-) ஆகவே கிண்டிய அல்வாவை கடைசியில் குப்பையில் கடாச வேண்டியதாகப்போயிற்று. அதன்பின் அகர் அகர் அல்வா முயற்சியில் இறங்கவேயில்லை. சமீபத்தில் மகள் அழகாக பக்குவமாகச் செய்து பரிமாறினாள்... ஜூப்பர். கொஞ்சம் கெட்டியான பாயாசம் அளவுக்கு வரும்வரை சுமார் பத்து நிமிடங்களுக்காவது கிளறிக்கொண்டே இருக்க வேண்டுமாம், இதுதான் ரகசியம். அவ்வளவுதான்.. விட்ட பைத்தியம் மறுபடி பிடித்துக்கொண்டது எனக்கு. அரை லிட்டர் பால் மீந்தாலும் போதும். டின்னரில் தட்டில் அல்வா இருக்கும். உடலுக்கும் நல்லதாயிற்றே..

பாக்கெட்டைப் பிரித்து..

கொதித்த பாலில் அல்வா மிக்ஸைக்கொட்டிக்கிளறி..
தட்டில் ஊற்றி..
துண்டு போட்டால்..
அல்வா ரெடி..
துருவித்தூவிய பாதாம் மாயமாய் மறைந்த விந்தையென்ன என்று திகைக்க வேண்டாம். அது போன மாதம்.. இது இந்த வாரம் :-)

என்னதான் அதிலேயே ஸ்கிம்டு பால்பவுடர் இருந்தாலும் 80கிராம் பாக்கெட்டுக்கு அரை லிட்டர் பாலைக் காய்ச்சிச் சேர்த்துச் செய்தால் அருமையாக வருகிறது. பாதாம், ஏலக்காய், குங்குமப்பூ, பிஸ்தா என்று எல்லாமும் இருப்பதால் பார்ட்டிகளுக்கு ஏற்ற டெஸர்ட்டாகவும் இருக்கிறது. உலர்பழங்கள், பால் சாப்பிடப்பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படிச் செய்து கொடுத்து சத்தை உள்ளே தள்ளிவிடலாம். 

இப்பொழுது ஏன் அல்வா கொடுக்கிறேன் என்று இந்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கேட்க வேண்டும்.. கேட்காவிட்டால்?... ஹி..ஹி.. நானே சொல்லி விடுவேனாக்கும் :-)))

என்னுடைய புகைப்படப்பதிவுகளைப்பற்றிய பேட்டி குங்குமம் தோழி இதழின் "கண்கள்" பகுதியில் வந்தது தெரிந்ததே.
அந்தப்பேட்டி இப்பொழுது மே மாதம் எட்டாம் தேதி வெளியான தினகரன் நாளிதழிலும் மறுபதிப்பு ஆகியிருக்கிறது. கண்டெடுத்துச்சொன்ன புகைப்படப்பிரியன் அதிபர் சகோதரர் "மெர்வின் அன்டோ" அவர்களுக்கும், புகைப்படப்பிரியன் பக்கத்தில் அறிவித்த சகோதரர் "சுந்தரராஜன்"அவர்களுக்கும் வாழ்த்திய அனைவர்க்கும் எனது கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டாமா!! ஆகவேதான் அல்வா கொடுத்து நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன்.

தினகரன் நாளிதழின் மகளிர் பகுதியில் எனது நேர்காணலை வாசிக்கச் சொடுக்குங்கள் சாட்டையை.
http://www.dinakaran.com/Ladies_Detail.asp?cat=501&Nid=1792

LinkWithin

Related Posts with Thumbnails