Tuesday 15 April 2014

ஜய.. ஜய.. ஜய..

பூக்கள் புதிது
புலர்காலை புதிது
இன்பம் புதிது
இனியவை புதிது
காற்று புதிது
கடப்பவை புதிது
வசந்தம் புதிது
வருடமும் புதிது
ஆனால்
அதே பழைய 'நான்'
தூக்கியெறிவோம்
புதிதாய்ப்பிறப்போம் 'நாம்'
எதிலும் ஜெயம் கண்டிடுவோம்
இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

வால்: வாழ்த்துகளைச் சுமந்து கொண்டு யானைகளிரண்டும் இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க அன்ன நடையிட்டு வந்ததால் அனைவருக்கும் ஒரு நாள் தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள் :-)))

Thursday 10 April 2014

வனம் சுமந்த பழம்..

1.இளைப்பாறுதலை அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்துபவன் முன்னேறுகிறான், சோம்பியிருப்பவனோ புலம்பித்திரிகிறான்.

2.கூரையில் விழுந்த இறகுப்பந்தை, "எனது எந்த நண்பனுடையதாய் இது இருக்கக்கூடும்!" என்று திகைப்புடன் பார்க்கிறது புறா.

3. இறந்தபின்னும் பறக்கிறது ஒரு பறவை, இறகுப்பந்தாய்..

4.மாற்றிக்கொள்வதை விட திருத்திக்கொள்வது நல்லது, அதுவே நீடித்து நிற்கும்.

5.முன் தீர்மானங்களுடன் பேசுபவரிடம் விவாதிப்பதென்பது, ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளை ஓட்டி சக்தியை வீணாக்குவதற்குச் சமம்.

6.நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.

7.விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதில் ஆரம்பிப்பது இறுதியில் விதிமீறலுக்கு வழி கோல்கிறது.

8.நிதானமும் பொறுமையும் சஞ்சலத்துக்குட்படும் தருணங்களில்தான் அதிக மனவுறுதி தேவைப்படுகிறது. ஒரு நிமிட நிதானமின்மை ஒட்டுமொத்த காரியத்தையும் கெடுத்து விடும்.

9.விழுங்கிக் கடக்கும்போது நம்மைப் புடம் போட்டு விடுவதால் பெருங்கசப்பும், பெருந்துயரும் கூட நல்லதே.

10.தலைக்கு மேல் வட்டமிடும் பருந்தை அறியாது வனத்தைக் கர்ப்பம் சுமந்த பழத்தை உண்டு கொண்டிருக்கிறது குருவி. காடு பிழைக்குமோ.. பருந்து பிழைக்குமோ.

Saturday 5 April 2014

ஜீவ ஒளியும் குமிழ் முத்தமும்..

ஓட்டைப்பாத்திரமும் நிம்மதியற்ற மனமும் ஒருநாளும் நிறையாது,.. அவற்றை நிரந்தரமாய் அப்படியே விட்டு வைக்கும்வரை.

கூத்து நிறைவுற்றபின் ஒப்பனையைக் கலைக்கத்துவங்கினர் ஒவ்வொருவராக, அடுத்த திருவிழாவை எதிர்நோக்கியபடி முடங்கிக்கிடந்தது காவல்தெய்வம் சருகுகளைச் சுமந்தபடி.

வெறுமனே பேச்சளவில் திட்டமிடுபவனை விட திட்டத்தின்படி செயலைச் செய்து முடிப்பவனே பாராட்டத்தக்கவன்.

நடந்த தவறுக்காய் பிறரைக் குற்றம் சாட்டுமுன் ஒரு நிமிடம் நிதானித்து யோசிப்பது நல்லது, ஏனெனில் தவறுக்கான ஆரம்பம் நம்மிலிருந்தும் இருக்கலாம்.

நம் திறமையையும் வளர்ச்சியையும் மதிப்பிட எப்பொழுதும் பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டிருக்காமல், நமது முந்தைய மற்றும் தற்போதைய நிலைகளையும் அவ்வப்போது ஒப்பிட்டு நோக்குவோம்.

இரை கவ்வி நீராழம் பதுங்கிய மீன் பரிசளித்த குமிழ் முத்தத்தை, கன்னம் மாற்றிக் குதூகலிக்கிறது குழந்தை.

கூடு கட்ட சுள்ளிகளைப்பரிசளித்த மரத்திற்கு குஞ்சுமொழியில் தினம் நன்றி நவில்கிறது பறவை

அத்தனையையும் அழுதோ சிரித்தோ தீர்த்துவிட முடியுமென்றால் எத்தனை நன்றாக இருக்கும்!. முடியாதென்பதால்தான் செயலில் ஈடுபடுகிறோம்.

உண்மையின் உறுதியான குரலுக்கு முன் பொய்யின் ஆரவாரக்கூச்சல் தேய்ந்து முடிவில் ஓய்ந்து விடுகிறது.

இடைஞ்சல்கள் சூறாவளியாய்ச் சுழன்றடித்தாலும், மனதிலிருக்கும் வெல்ல வேண்டுமென்ற ஜீவஒளியை அணையாமல் பார்த்துக்கொண்டால் அதுவே நமக்கு வழிகாட்டி வெளிக்கொணர்ந்து விடும்.

LinkWithin

Related Posts with Thumbnails