1.இளைப்பாறுதலை அடுத்த கட்டத்திற்கான திட்டமிடலுக்குப் பயன்படுத்துபவன் முன்னேறுகிறான், சோம்பியிருப்பவனோ புலம்பித்திரிகிறான்.
2.கூரையில் விழுந்த இறகுப்பந்தை, "எனது எந்த நண்பனுடையதாய் இது இருக்கக்கூடும்!" என்று திகைப்புடன் பார்க்கிறது புறா.
3. இறந்தபின்னும் பறக்கிறது ஒரு பறவை, இறகுப்பந்தாய்..
4.மாற்றிக்கொள்வதை விட திருத்திக்கொள்வது நல்லது, அதுவே நீடித்து நிற்கும்.
5.முன் தீர்மானங்களுடன் பேசுபவரிடம் விவாதிப்பதென்பது, ஸ்டாண்ட் போடப்பட்டிருக்கும் சைக்கிளை ஓட்டி சக்தியை வீணாக்குவதற்குச் சமம்.
6.நினைவுகளைச் சுமந்து நிற்பவையல்ல நினைவுச்சின்னங்கள். பார்க்கும் போதும், எண்ணும்போதும் நம் மனதிலிருக்கும் நினைவுகளைக் கிளறி விடுவதைத் தவிர்த்த மற்ற நேரங்களில் அவை சும்மாதான் இருக்கின்றன.
7.விதிமுறைகளைத் தளர்த்திக்கொள்வதில் ஆரம்பிப்பது இறுதியில் விதிமீறலுக்கு வழி கோல்கிறது.
8.நிதானமும் பொறுமையும் சஞ்சலத்துக்குட்படும் தருணங்களில்தான் அதிக மனவுறுதி தேவைப்படுகிறது. ஒரு நிமிட நிதானமின்மை ஒட்டுமொத்த காரியத்தையும் கெடுத்து விடும்.
9.விழுங்கிக் கடக்கும்போது நம்மைப் புடம் போட்டு விடுவதால் பெருங்கசப்பும், பெருந்துயரும் கூட நல்லதே.
10.தலைக்கு மேல் வட்டமிடும் பருந்தை அறியாது வனத்தைக் கர்ப்பம் சுமந்த பழத்தை உண்டு கொண்டிருக்கிறது குருவி. காடு பிழைக்குமோ.. பருந்து பிழைக்குமோ.
5 comments:
படமும் மொழிகளும் மிக அருமை. பாராட்டுகள்.
அனைத்தும் மிக அருமை.
புகைப்படம் மிக அழகு! கருத்துக்களும் அருமை!!
அனைத்தும் அருமை அக்கா...
படம் அப்படியே அள்ளுது!!!!
கருத்துக்களும்தான்.
Post a Comment