Friday 23 August 2013

இலைகள்.. PIT போட்டிக்காக..

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலைகள்"தான் இம்மாத 'பிட்'போட்டிக்கான கருப்பொருள். கண்டதையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்ததில் இரண்டாவது படத்திலிருக்கும் க்ரோட்டன்ஸ் 'நான் போட்டிக்குப் போகிறேன்' என்று அடம் பிடித்ததால் அதை 'சென்று வா.. வென்று வா' என்று வீரத்திலகமிட்டு வாழ்த்தி அனுப்பியிருக்கிறேன். மீதமிருப்பவை எக்ஸிபிஷனில்..

நான் போட்டிக்குப் போறேனே..










 காடு மேடு எல்லாம் சுற்றினாலும் தோட்டத்து மூலிகையை மறந்து விட முடியுமோ!!.. எங்கள் வீட்டு வெற்றிலைகள் முகம் மறைத்து.. 

Monday 19 August 2013

கிளைத்துச்செழித்த மரம்..

சிலரிடம் நேரிடையாகப் பேசும்போதுதான் அவர்களைப்பற்றி அதுகாறும் நாம் கொண்டிருந்த மதிப்பீடும் புரிதலும் மறுமதிப்பீட்டிற்குள்ளாகிறது.

ஒரு செயலில் இறங்கும்போது, அந்த ஆர்வத்திற்கு அணை போடுவதற்குக் காரணமாக அமைவது அழுக்காறா அக்கறையா என்பது அதைச்செய்பவர்களுக்கும் நமக்குமான உறவைத்தீர்மானிக்கிறது.

பயத்தைக் களைந்து, துணிச்சலை வார்த்து வந்தால் தன்னம்பிக்கை மரம் கிளைத்து வளரும்.

எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் ஒரு துளி உதவி கொடுக்கும் நிம்மதியைப் பெருஞ்செல்வம் கூட சில சமயங்களில் கொடுத்து விட முடிவதில்லை.

கடனே என்று கடமையைச் செய்வதை விட சும்மா இருப்பது மேலானது. சும்மா இருப்பதை விட மன நிறைவுடன் கடமையைச் செய்வது அதிமேலானது.

வியாபாரம் போன்ற தொழில்களில் உறவுகள் உருவானால் இரண்டும் செழிக்கும். அதுவே உறவுகளுக்கிடையே வியாபாரம் நுழைந்தால் இரண்டும் இல்லாமற்போய்விடும்.

நெல்லிடை வளரும் புல் களையெனக் கொள்ளப்படுகிறது. இருந்தும் கால்நடைகளுக்குத்தீவனமாய் பிறருக்குப் பயன்படும்படி அதன் வாழ்வு அமைகிறது. அவ்வாறே மனிதருக்கும் தத்தம் பிறவிப்பயன் என்று ஒன்றுண்டு.. கண்டறிவோம்.

பிரச்சினைகளைக் குறித்து வெறுமனே கவலைப்படுவது நம்மைக் கட்டிப்போடுகின்றது. அவற்றைத் தீர்க்கும் சிந்தனை ஒன்றே அதிலிருந்து நமக்கு விடுதலை தருகிறது.

இதழ்களில் ஏந்திக்கொள்ளும் சிறுபுன்னகை, மோசமான தினத்தைக்கூட ஓரளவு சீரமைக்கும் வல்லமை கொண்டது.

கடமை சமைக்கிறது.. அன்பும் பாசமும் ருசியைக்கலக்கின்றன.

Saturday 17 August 2013

"என்னவோ போடா மாதவா.."

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது. தேசத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் வாழ்வையும் ஈந்த எத்தனையோ தியாக உள்ளங்களைப்பற்றியும் அவர்கள் செய்த தியாகங்களையும் நம் வருங்காலத்தலைமுறையினருக்கு நம்மில் ஒருசிலரேனும் எடுத்துரைத்துக்கொண்டுதானிருக்கிறோம். என்றாலும் பிற பண்டிகைகளையும் காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற சிறப்பு தினங்களையும் கொண்டாடும் அளவுக்கு நாம் குடியரசுதினத்தையும், சுதந்திரதினத்தையும் கொண்டாடுகிறோமா என்றால் வேதனைக்குரிய பதில்தான்  கிடைக்கிறது. அதிலும், "குடியரசுதினம் கொண்டாடப்படுமளவுக்குச் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறதா?.. இங்கே மட்டுந்தான் இப்படியா? அல்லது தேசம் முழுக்கவே இப்படியான மனோநிலைதான் நிலவுகிறதா!" என்பதில் எனக்கு என்றுமே சந்தேகமுண்டு..
மற்ற இடங்களில் எப்படியோ.. மும்பையில் குடியரசுதினம் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது. குடியிருப்புகளும் அரசாங்க அலுவலகங்களும், வீதிகளும் அன்று அட்டகாசமாக தேசியக்கொடியின் தோரணங்களாலும், வண்ணக்காகிதங்கள் மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும். காலையில் கொடியேற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தேறும். அதன்பின் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக விளையாட்டுப்போட்டிகளும் நடத்திப் பரிசளிக்கப்படும். அன்று நல்ல நேரத்தில் சத்ய நாராயணா பூஜை செய்யப்பட்டு தேச, மற்றும் மக்கள் நலனுக்காகப் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடக்கும். மாலையில் பெண்கள் மட்டுமே பங்குபெறும் ‘ஹல்திகுங்கும்’ நிகழ்ச்சியுமுண்டு. குடியிருப்பில் அன்று லஞ்சோ அல்லது டின்னரோ கட்டாயமுண்டு.


இத்தனை அமர்க்களங்களும் வேண்டாம்.. அதில் ஒன்றிரண்டையாவது சுதந்திரதினத்தன்று கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். அரசு அலுவலகங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான ஒரு சில குடியிருப்புகளையும் தவிர மற்ற இடங்களில் கொடி கூட ஏற்றுவதில்லை. இப்படியிருக்கும் சுதந்திரத்தையும் அந்தச்சுதந்திர தினம்தானே நமக்கு வழங்கியிருக்கிறது. 

சென்ற சுதந்திர தினத்தன்று, வழக்கம்போல் புகைப்பட வேட்டைக்காகப் புறப்பட்டேன்.(வண்டிக்கருகில் வந்த விற்பனையாளர்களைத்தவிர சாலைக்காட்சிகளெல்லாம் நகர்ந்துகொண்டிருந்த வாகனத்திலிருந்து எடுக்கப்பட்டவை. குற்றம் குறை பொறுத்தருள்க). ஒன்றிரண்டு இடங்களிலாவது பொதுஇடங்களில் கொடியேற்றும் வைபவம் நடக்கும்.. பார்க்கலாம், காமிராவிலும் பிடிக்கலாம் என்று ஆசையோடு கிளம்பிய எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. வழியில் தென்பட்ட ஒன்றிரண்டு மாண்டிசோரி நர்சரிப்பள்ளிகளில் மட்டும், மூவர்ணப்பலூன்களும் கொடிகளுமாக அலங்காரங்களும் தேசபக்திப்பாடல்களுமாகக் குழந்தைகள் கொண்டாடிக்கொண்டிருந்தனர். ஏதோ.. குழந்தைகளாவது கொண்டாடுகிறார்களே என்று திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். இதைத்தவிர தெருவில் சுதந்திரதினம் என்பதற்கான எந்த அடையாளமுமில்லை. அரசு அலுவலகங்களிலும்கூட பிரத்தியேகமான அலங்காரங்கள் எதுவும் தென்படவில்லை. போனால் போகிறதென்று கொடி மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. 



தொல்லைக்காட்சியின் முன் மக்கள் முடங்கி விட்டதால், அதிகம் ஆளரவமற்ற கடைத்தெருவிலும் சாலைகளின் சிக்னல்களிலும் கொடிகளை விற்றுக்கொண்டிருந்தவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்தியமாக இதுவும் இன்னொரு நாளாகத்தான் தெரிந்தது. வீட்டுக்குத்திரும்பும்போது வாங்கி வந்த காகிதக்கொடிகளில் ஒன்றைக் குடியிருப்பின் வாசலில் அமர்ந்திருந்த காவலாளியின் மேசையில் குத்தி வைத்து விட்டு வந்தேன். இப்படியாக, ‘எங்க குடியிருப்பிலும் கொடியேத்தியாச்..”

Wednesday 14 August 2013

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்..

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்"

பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-)

நகர்வலக் காட்சிகளில் ஒரு சில உங்களுக்காக..




'இரவினில் சுதந்திரம் வாங்கி விட்டோம் அதனால்தான் இன்னும் விடியவில்லை' என்று இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறோம். ஒவ்வொருவரும் வாய்ப்பேச்சை விட்டுச் செயலில் இறங்கினால் இந்தியா நிச்சயம் இப்போதிருப்பதை விட இன்னும் நல்ல நிலைக்கு முன்னேறும். லஞ்சம், ஊழல், பெண்சிசுக்கொலை போன்ற புரையோடிப்போயிருக்கும் சமூகச் சீர்கேடுகளால் நோயுற்றிருக்கும் பாரதமாதாவை, தனிமனித மனமாற்றம் என்னும் தடுப்பூசியால்தான் குணப்படுத்த முடியும்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..

Monday 12 August 2013

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை)

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கும் மட்டுமல்லாது, அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அவர்கள் செய்த செயல்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன அவர்களது நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்ட சிலைகள். இவ்வாறு சிலைகள் மட்டுமன்றி, ஒரு சில நிகழ்வுகளை என்றென்றும் நினைவு கூரும் வகையில் ஒரு சில கட்டிடங்களோ அல்லது அமைப்புகளோ கூட நினைவுச்சின்னங்களாக எழுப்பப்படுகின்றன.

இன்னும் சில, அப்படியெல்லாம் எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலே எழுப்பப்பட்டாலும் நாளடைவில் நினைவுச்சின்னங்களாக ஆகிவிடுகின்றன. மும்பையில் 'க்ராஸ் மைதான்' என்றழைக்கப்படும் சிலுவை மைதானத்திலிருக்கும் 'சர்க்கா' அப்படியானவற்றில் ஒன்று. மும்பையிலிருக்கும் 'கேட் வே ஆஃப் இந்தியா'வைப்போன்று இப்போது சர்க்காவும் மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சர்க்கா 'நூரு கரீம்' என்ற ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்டது. இவர் இதை, மும்பையில் டாடா ஸ்டீல் கம்பெனியும் I&Bயும் (Indian Architect and Builder) சேர்ந்து நடத்திய architectural and engineering design போட்டிக்காக வடிவமைத்திருந்தார். நாடு முழுவதுமிலிருந்து சுமார் நூறு பங்கேற்புகள் அந்தப்போட்டியில் இடம்பெற்றன. நூறையும் பின்னுக்குத்தள்ளி விட்டு நூரு கரீமின் படைப்பு போட்டியில் வென்றது. அப்படியென்ன சிறப்பு அந்தப்படைப்பில் இருக்கிறது?.
 நாட்டியமாடும் சர்க்கா..
இந்தியா என்றதுமே எப்பொழுதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காந்தியும், சர்க்காவுமாகத்தான் இருக்கும். அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரித்து அவர் உபயோகிக்கச் சொன்ன சுதேசிப்பொருட்களில் முக்கிய இடம் பெற்றது கதர்தானே. அதை நூற்க அவர் உபயோகித்த சர்க்காவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் நூரு கரீம் இதை உருவாக்கியிருந்தார். 'சமகாலத்திய அளவில் இந்தியாவிற்கான அடையாளம்' என்பதைத் தலைப்பாகக் கொண்டிருந்த போட்டியில், என்றுமே இந்தியாவிற்கு முக்கிய அடையாளமாக விளங்கும் சர்க்கா ஜெயித்ததில் ஆச்சரியமென்ன! நமது தேசியக்கொடியிலிருக்கும் அசோகச்சக்கரம் கூட ஒரு வகையில் சுழலும் சக்கரத்தைக்கொண்டிருக்கும் சர்க்காவைத்தானே நினைவு படுத்துகிறது.

வட்டத்துக்குள் கட்டம் கட்டப்பட்டிருப்பதுதான் மும்பையின் மேற்கு ரயில்வேயின் தலைமையகம்..
சுமார் 30 அடி அளவு உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த சர்க்கா மும்பைக்கு வந்த விதம் சுவாரஸ்யமானது. காந்தியின் கொள்கையைப் பிரதிபலிப்பதால் இதைக் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் காந்தி நகரிலும், அவர் ஒரு தடவை சிறை வைக்கப்பட்டிருந்த பூனாவிலும் நிறுவ இடம் பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் சரிப்படாமல் கடைசியில், க்ராஸ் மைதானத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஓவல் (Organisation for Verdent Ambience and Land (OVAL)) ட்ரஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இதை இங்கே நிறுவினார்கள். இதைத்தான் 'வரணும்ங்கறது வராம இருக்காது' என்று சொன்னார்களோ :-))
கடிக்க வரும் சுறாமீனை நினைவுபடுத்துகிறது இந்தக்கோணம்..
முப்பதடி உயர அளவில் கைமுறுக்கு மாதிரியும் ஜாங்கிரி மாதிரியும் முறுக்கித் திருகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி தருகிறது. சர்க்கா சுழலுவதையே இதன் திருகல்கள் குறிக்கின்றனவாம். காந்தியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் கடந்த 2011-ம் வருஷம், அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று டாடா ஸ்டீலின் வைஸ் சேர்மன் முத்துராமன் முன்னிலை வகிக்க இயக்குனர் R.K.கிருஷ்ணகுமார் திறந்து வைத்திருக்கிறார். இங்கே வரும் மக்கள் விவரம் அறிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகக் கல்வெட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில்தான் கல்வெட்டு இருக்குமா என்ன? மும்பையிலும் இருக்கிறதாக்கும் :-)
வாஸ்து எதுவும் பார்க்காமலேயே இந்த சர்க்கா சரியான இடத்தில் அமைந்து விட்டது போலிருக்கிறது. ஒரு புறம் வி.டி ஸ்டேஷன், அடுத்த புறம் சர்ச் கேட் ஸ்டேஷன் என்று இரண்டு பிரபலமான ரயில் நிலையங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு மும்பையின் பிரபலமான ஃப்லோரா ஃபவுண்டனுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. வி.டி. மற்றும் சர்ச் கேட் நிலையங்களை இணைக்கும் பாதையாகவும் இந்த மைதானம் அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கும், பொழுதைப்போக்க வருபவர்களுக்கும் குறைவில்லை. இந்தப்பாதைதான் மும்பையின் சரித்திரப்புகழ் பெற்ற காவூ கலி(khau gali) என்று அழைக்கப்படுகிறது. மராட்டியில் காவூ என்றால் தின்பண்டம். gali என்றால் தெரு அல்லது சந்து என்று அர்த்தம். பேல்பூரி, சேவ்பூரி, வடாபாவ், ஆலு டிக்கி, போன்றவையும் மேலும், விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் எப்போதும் விற்பனையாகிக்கொண்டிருப்பதால் இரண்டு ஸ்டேஷன்களிலும் இருந்து வெளி வரும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குப்போகுமுன் இங்கு வந்து பேட்பூஜா அதாவது வயிற்றுக்கும் சிறிது ஈயாமல் செல்வதில்லை. பற்றாக்குறைக்கு கிரிக்கெட்டு விளையாடும் சிறுவர்களுக்கும் குறைவில்லை. எப்பொழுதும் ஜேஜேவென்று இருக்கும், புகழ்பெற்ற ஃபேஷன் ஸ்ட்ரீட்டும் இங்கேதான் இருக்கிறது.
புதுக்கோணம்.. புதுத்தோற்றம்..
சர்க்காவின் அருகிலேயே குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டுச் சாதனங்களடங்கிய பூங்காவும், வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற சிமிண்டுத்திண்ணைகளும் இருப்பதால் குடும்ப சகிதம் வருபவர்களும் உண்டு. வி.டி ஸ்டேஷனிலிருந்து டாக்சி மூலம் இங்கே வரலாம். ஆசாத் மைதான் அருகே என்று சொன்னால் நிறையப்பேருக்குப் புரியும். முதன் முதலில் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போன்று வினோதமாகத் தோன்றத்தான் செய்கிறது. இதற்காகவே மக்கள் இதன் முன் நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன. இதனருகில் செல்ல அனுமதியில்லை என்றாலும், வெள்ளை வெளேரென்று தந்தம் போல் மின்னும் இந்த அமைப்பு கிட்டே போய்த் தொட்டுப்பார்க்கத் தூண்டுவதென்னவோ நிஜம்.

Thursday 8 August 2013

முதன்முதலாக... பரவசமாக..

முதன்முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தபோதும், அதைக் கையாண்டபோதும் ஏற்பட்ட அனுபவங்களை எழுதச்சொல்லி ஆதி அழைத்திருக்கிறார். 

'விக்ரம்' படம் வந்தபொழுது, அந்தப்படத்தை மிகவும் ஆவலாக அனைவரும் போய்ப்பார்த்தமைக்கு கமலோ, அம்பிகாவோ, வசனமெழுதிய சுஜாதாவோ ஒவ்வொரு வகையிலும் காரணமென்றாலும், 'கம்ப்யூட்டரெல்லாம் காட்டறாங்கப்பா." என்ற காரணம்தான் அதிமுக்கியமானதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் ஆ.. ஊ என்றால் எதற்கெடுத்தாலும், எந்தப்பொருளையாவது விற்கவேண்டுமென்றாலும் அதைக் கம்ப்யூட்டருடன் சம்பந்தப்படுத்தினால் போதும். மார்க்கெட் பிய்த்துக்கொண்டு போகும். டிஸ்கோவுக்கும் நதியாவுக்கும் அடுத்தபடியாக கம்ப்யூட்டரின் பெயரைச்சூட்டிக்கொண்டிருந்த பொருட்கள் எத்தனையெத்தனையோ. 'கம்ப்யூட்டர் சேலை' என்று ஒன்று பிரமாதமாக வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதுவே டிசைன் செய்ததாம். ராக்கெட் விடும் கம்ப்யூட்டருக்கு சேலை நெய்யுமிடத்தில் என்ன வேலை என்று நினைத்தாலும், ஆளுக்கொன்று வாங்கத்தவறவில்லை நாங்கள்.

இப்படியாகத்தானே பெயருடன் முதலில் பரிச்சயம் ஏற்பட்டாலும் நேரில் அதைத் தரிசனம் செய்யும் வாய்ப்பென்னவோ கன காலம் கழித்துத்தான் கிடைத்தது. இந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டர் என்பது நவீன முறையிலான டைப்ரைட்டர் என்ற எண்ணம் மாறி, அது என்னவெல்லாம் செய்யுமென்று ஓரளவு தெளிவு வந்திருந்தது. விண்டோஸ் 3.1 கோலோச்சிக்கொண்டிருந்த அந்தக்காலகட்டத்தில்தான் விண்டோஸ்-95வை அறிமுகப்படுத்துவதற்காக NIITயினர் தொலைக்காட்சியில் தொடராக கேள்வி பதில் முறையில் ஒரு நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து பார்த்ததில் 'இதான்,.. இப்படித்தான்' என்று புரிதல் ஏற்பட்டிருந்தது. நாமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று ஆரம்பித்து, ரங்க்ஸ், "மைக்ரோசாப்ட் ஆபீஸ் கத்துக்கோ. பிரயோசனமா இருக்கும்' என்றதில் வகுப்பில் சேர்வதில் முடிந்தது.

தேடிப்பிடித்து, இன்ஃபொடெக்கின் franchise நடத்திக்கொண்டிருந்த ஒரு வகுப்பிலும் சேர்ந்தேன். அப்பொழுதெல்லாம் மைக்ரோசாப்ட் ஆபீசில் வேர்டு, எக்செல், பவர்பாயிண்ட் மட்டுந்தான் இருந்தது. அதிலும் வீட்டில் வெட்டி ஆபீசராய் இருந்த காரணத்தாலோ என்னவோ 'ஆபீஸ் கத்துக்கறேன்' என்று சொல்லிக்கொள்வதே ஒரு பெருமையாகவும் இருந்தது. கி..கி..கி.. முதல் நாள் வகுப்பில் கம்ப்யூட்டர் முன்னாடி அமர்ந்ததும் ஏதோ தெய்வத்தின் முன் அமர்ந்திருந்தது போலிருந்தது. கர்சர், மௌஸ் என்று ஒவ்வொன்றையும் பிரமிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரியும் ஆகவே ஃபிங்கரிங் பிரச்சினை இல்லை. டைப்ரைட்டரில் அடுத்த வரி டைப் செய்ய வேண்டும்ன்றால் ஒரு லீவரை நகர்த்த வேண்டும். இதில் தானாகவே நகர்ந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அந்த வகுப்பு முடியுமுன்பே அதெல்லாம் சலித்து விட்டது :-) என்றாலும் அவர்கள் நடத்திய தேர்வில் ஒவ்வொரு தாளிலும் நல்ல மதிப்பெண்கள் வாங்கி மொத்தமாக 96% எடுத்தேன். 

வகுப்புக்குப் போய்க்கொண்டிருந்த சமயம், ரங்க்சின் ஆபீசில் ஒவ்வொரு செக்ஷனுக்கும் மேம்பாட்டுக்காக ஒரு தொகை ஒதுக்கிக் கொண்டிருந்தார்கள். ரங்க்சிடம் நான் ஆபீசுக்குக் கம்ப்யூட்டர் வாங்கிப்போடச்சொன்னேன். அதான், மைக்ரோ சாப்ட் ஆபீஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து அது ஆபீஸ் வேலைகளை எப்படியெல்லாம் எளிதாக்குகிறது என்பது நான் வகுப்புக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து புரிய ஆரம்பித்திருந்ததே. ரங்க்ஸின் வேலைப்பளு குறையுமே என்ற நல்லெண்ணம்தான். ஆபீசில் கம்ப்யூட்டர் வாங்கியபிறகு, அடிக்கடி போன் செய்து சந்தேகம் கேட்டுக்கொள்வார். 

ஆபீசில் வாங்கிய கம்ப்யூட்டரைப் பார்க்க ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களையெல்லாம் அழைத்துச்சென்றார். குழந்தைகள் கேம்சில் மும்முரமாகிவிட நான் எனக்குத் தெரிந்ததை ரங்க்சிற்கு வகுப்பெடுத்தேன். முக்கியமாக எக்செலும், வேர்டில் மெயில் மெர்ஜும் கற்றுக்கொண்டார். அதன் பின் அடிக்கடி நாங்கள் ஆபீசுக்குப் போவது வழக்கமானது. குழந்தைகள் கேம்சை விட்டுவிட்டு பெயிண்ட் ப்ரஷ், வேர்ட் போன்றவற்றில் பழக ஆரம்பித்தனர். நானோ வகுப்பில் கற்றுக்கொண்டதை இங்கே பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பேன். 
இந்தச்சமயத்தில்தான் வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கலாமென்று முடிவெடுத்தோம். குழந்தைகளின் படிப்புக்கும், ரங்க்சின் வேலைக்கும் உதவியாய் இருக்குமென்று முடிவெடுத்து, வாங்கி வீட்டினுள் அது வலது காலெடுத்து வைத்து நுழைந்தபோது ஏதோ சாதித்து விட்ட பெருமிதமும் ஏற்பட்டது. குழந்தைகள் விளையாடிய நேரம் போக என் கைக்கும் எப்பவாவது கிடைக்கும் :-)) பாட்டுக்கேட்பது, சினிமா பார்ப்பது என்று அது ஒரு மினி டிவியாகவும் ரேடியோவாகவும் உருவெடுத்தது.

கற்றுக்கொண்டாலும் வேலைக்குச்செல்ல நான் முயற்சிக்கவில்லை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆளில்லாத சூழ்நிலையில் இரண்டொரு சமயம் குழந்தைகளையும் வகுப்புக்குக் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை அங்கே ஆபீஸ் ரூமில் உட்கார வைத்து விட்டு நான் வகுப்புக்குப் போன சம்பவங்களுமுண்டு. இந்த நிலையில் வேலைக்கு எங்கே முயற்சி செய்ய?.. எம்மெஸ் ஆபீசைத்தவிர வேறு கோர்ஸுகள் கற்றுக்கொள்ள நான் முயற்சிக்கவுமில்லை. இதனாலேயே பக்கத்துப் பள்ளியில் கிடைக்கவிருந்த கம்ப்யூட்டர் டீச்சர் வேலை கைவிட்டுப்போனது. அதற்கு basic-க்கும் கற்றிருக்க வேண்டுமாம். இந்த பேசிக் நாலெட்ஜ் இல்லாததால் ஒரு நல்ல டீச்சரை அந்தப் பள்ளி இழந்தது (யாருப்பா அங்கே கல்லெடுக்கறது?.. உண்மையைச்சொன்னா ஒத்துக்கணும். ஓக்கே? :-) ). ஆனாலும் கற்ற வித்தை கை கொடுத்தது. எங்கள் குடியிருப்பில் காஷியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்ததால் வரவு செலவு இத்யாதிகளை வீட்டிலிருந்த கம்ப்யூட்டரில் அழகாகக் கணக்கிட்டு, ப்ரிண்ட் எடுத்து ஒவ்வொரு wing-ன் நோட்டீஸ் போர்டுகளிலும் ஒட்டச்செய்தேன். இது அனைவருக்கும் மிகவும் பிடித்துப்போனது. 

சினிமா பார்க்கவும் சாலிடெர், ஃப்ரீசெல் போன்ற ஒலிம்பிக் தரமுள்ள விளையாட்டுகளை விளையாடுவதையும் தவிர எப்பவாவது வேலையும் செய்யும் கம்ப்யூட்டரில் அப்பொழுதெல்லாம் சில சமயங்களில் மட்டும்தான் எதையாவது வாசிப்பேன். அதுவும் தமிழ் வாசிப்பது அபூர்வம். தமிழிலும் இருக்கிறதென்று தெரிந்தால்தானே வாசிப்பதற்கு :-). அப்படியிருந்த நிலை மாறி இப்பொழுது கம்ப்யூட்டரே பழியாகக் கிடப்பதும், அதில் எழுத ஆரம்பித்திருப்பதும் எனக்கே ஆச்சரியமூட்டுகிற மாற்றம்தான். அதைப்பற்றியும் எழுத வேண்டும்தான். தம்பி குமாரும் அதைத்தான் எழுத அழைத்திருக்கிறார். எழுதி விடுவோம் :-))

விருப்பமிருப்பவர்கள் அனைவரும் இந்தத்தொடர்பதிவைத் தொடரலாம்..

Monday 5 August 2013

மிசல் பாவ்.. அம்ச்சி மும்பை ஸ்பெஷல்.

மழைக்காலமும் அதற்குப் பின் குளிர்காலமும் வந்தாலே, சூடாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் நச்சென்று நாலு அயிட்டங்களைக் கேட்கிறது நான்கு இஞ்ச் நீளம் கூட இல்லாத இந்தப் பொல்லாத நாக்கு. இன்றைக்கு அதை 'மிசல் பாவ்' கொடுத்து அடக்குவோம். 'மிசல்பாவ்' மஹாராஷ்ட்ராவில் வடாபாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு. டிபனாகவோ அல்லது லஞ்ச், மற்றும் ப்ரேக்ஃபாஸ்டாகவோவும் சாப்பிடப்படுகிறது. சின்னச்சின்ன டிபன் ஸ்டால்களிலும்கூட இதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. வாருங்கள்,.. இதை நாம் வீட்டிலும் செய்து ரசித்துப் புசிப்போம்.

மிசல் செய்ய அரைகப் வெள்ளை அல்லது பச்சைப்பட்டாணி, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் சோளே மசாலாத்தூள், இரண்டு தேக்கரண்டி சமையல் எண்ணெய், உப்பு, இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், ஒரு பெரிய தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு டிஷ்யூ டவல், இரண்டு சின்னக்கிண்ணங்கள், ஒரு பெரிய கிண்ணம், எலுமிச்சை இவற்றுடன் கொஞ்சம் பொறுமையும் தேவை.

முதலில் பட்டாணியை அளந்து எடுத்துக்கொள்ளவும். அரை கப் அளவு இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சரியாக இருந்தால் உங்கள் திறமைக்கு ஷொட்டும், இல்லையென்றால் குட்டும் கொடுத்துக்கொள்ளவும். இதை வேண்டிய அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். வேண்டிய அளவு என்றால் எவ்வளவு என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இந்தத்திருநாட்டில் உண்டு. ஆகவே அதைப் பயன்படுத்திக்கொண்டு, பட்டாணி நன்கு முழுகி நீச்சலடிக்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி விட்டு, பொறுமை என்னும் நகையை அணிந்து கொண்டு கடலை நன்கு ஊறும் வரைக்கும் வேறு ஏதாவது வெட்டி வேலை பார்க்கவும்.

கடலை ஊறியபின் தண்ணீரை வடித்து வைக்கவும். முதலில் பூர்வாங்க வேலைகளைச் செய்து வைக்கலாம். எலுமிச்சையைத் துண்டுகளாக அரியவும். ஒரு தக்காளியை வட்டவட்டமாக அரிந்து கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் நறுக்கும்போது வழியும் கண்ணீரை டிஷ்யூவால் துடைத்துக் கொள்ளவும். 'இதை' மட்டும் வீட்டிலிருக்கும் ரங்க்ஸ்களின் முன்னால் செய்தால் பல அற்புதங்கள் நடக்கும்.

இப்போது குக்கரையோ அல்லது அடிப்பாகம் கனமான பாத்திரத்தையோ எடுத்துக்கொள்ளவும். ‘குக்கர் என்றால் குக் செய்பவர்தானே?. எங்க வீட்டில் ‘*****’தான் குக்கர் என்றெல்லாம் மொக்கை போடக்கூடாது. அழுது விடுவேன் ஆமாம் :-). இப்பொழுது பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, அதில் எண்ணெய்யை ஊற்றவும். சீரகத்தைப் போட்டு வெடிக்க விட்டபின் இஞ்சியை அதில் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் தக்காளியைப் போட்டு லேசாக வதங்கியபின், மசாலாத்தூள்களையும் ருசிக்கேற்றபடி உப்பையும் போட்டு இன்னும் வதக்கவும். வெந்து குழைந்து கிடக்கும் தக்காளிக்கலவையின் மேல் பட்டாணியைப்போட்டு, மூன்று கப் தண்ணீரை ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் குளிருவதற்குள் சாப்பிடுவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். ஒரு வெங்காயத்தைப் ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போடவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்ட வெங்காயங்களை நறுக்கும்போது கண்ணீர் வருவதில்லை என்பது இங்கே சொல்லாமல் சொல்லப்பட்ட டிப்ஸ் எனக்கொள்க. இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் கொத்துமல்லித்தழைகளை நறுக்கி வைக்கவும். இப்பொழுது ஆவி அடங்கிய குக்கரைத்திறந்து, மிசலை இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். ரொம்பவும் நீர்க்க இருப்பதைப் பார்த்து பயந்து விட வேண்டாம். தண்ணீர் நிறைய இருந்தால்தான் அதில் போடப்படும் மிக்சர் நன்கு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். பின் மிசலை இன்னொரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, சாப்பிடும் இடத்தில் கொண்டு போய் வைத்துக்கொள்ளவும். 

பரிமாறும் தட்டில், மிசலை ஊற்றவும், அதன் மேல் ஒரு பிடி மிக்சரைப் போடவும். இங்கே, மும்பையில் கிடைக்கும் மிக்சரை நாங்கள் ஃபர்ஸாண் என்று சொல்லுவோம். பின் கொஞ்சம் வெங்காயத்தைத் தூவவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலையால் அலங்கரித்து, ஒரு ஸ்பூனும் போட்டு, ஒரு எலுமிச்சைத்துண்டும் வைத்து இரண்டு பாவ்கள் அல்லது ப்ரெட்டுடன் பரிமாறவும். இந்த இடத்தில், முன்னொரு முறை சாப்பிட்ட பாவ்பாஜி உங்கள் நினைவுக்குக் கண்டிப்பாக வரும். 

எலுமிச்சையை இரண்டு சொட்டுகள் மிசலில் பிழிந்து கொண்டு, ஸ்பூனால் எல்லாவற்றையும் கலக்கிக்கொண்டு பாவை குழம்பில் முக்கிச்சாப்பிடவும். விரும்பினால் இடையிடையே மிசலையும் ஸ்பூனால் சாப்பிடலாம். மும்பைக்கர்களைப் பொறுத்தவரை இது ரெடி டூ ஈட் அயிட்டம். மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைப்பவற்றை வாங்கி வந்து வீட்டில் சட்டென்று ரெடி செய்வதுதானே ரெடி டூ ஈட்டின் தத்துவம் :-). தத்துவத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பது எப்படியென்றால், மும்பை மார்க்கெட்டுகளில் நவதானியங்களைத் தனித்தனியாக ஊறவைத்து முளைகட்டி விற்கப்படுபவற்றை, ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போதோ, அல்லது மிசல்பாவ் செய்ய வேண்டுமென்று நினைத்தவுடனோ சட்டென்று தேவைக்கேற்ப ஊற வைத்த பட்டாணி, மற்றும் இத்யாதிகளை வாங்கி வந்து டின்னருக்கு ஐந்து நிமிடத்தில் மிசல் பாவ் ரெடி செய்வதுதான். தன் கையே தனக்குதவி என்றிருப்பவர்கள் தனித்தனி டப்பாக்களில் தலா நூறு கிராம் விரும்பிய தானியங்களை ஊற வைத்து முளைகட்டி ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம். வேண்டிய சமயம் வெளியே எடுத்தால் விதவிதமான அயிட்டங்களை நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம்.

Thursday 1 August 2013

நிழல் யுத்தம்.. (தினமலர்-பெண்கள் மலரில் வெளியானது)

கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வாரத்தைத் தொட்டுத்தொட்டு விளையாடிக்கொண்டிருந்தது. தென்னையோலைகளின் மேல் ஓடுவதும் பின் அங்கிருந்து மதில் சுவரின் மேல் பாய்வதுமாக இரண்டு அணில்கள் தொட்டுப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தன. வழக்கமாக இதையெல்லாம் ரசிப்பவள் அன்று சூன்யத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள். அவளது பார்வையைக் கவனித்தால் அவள் மனம் இந்த உலகத்திலேயே இல்லை என்பது போலிருந்தது.

“புதனோட புதன் எட்டு.. நேத்து ஒன்பது.. இன்னிக்குப் பத்து. ஹூம்.. அந்தப்புள்ளையோட பேசி இன்னியோட பத்து நாளாச்சுது. “அத்தை.. அத்தை”ன்னு காலைச் சுத்திச்சுத்தியே வளர்ந்த புள்ளை. இன்னிக்கு அது என்னியப்பாத்தாலே வெலகிப்போற மாதிரி ஆக்கிட்டாரே இந்தப் பெரிய மனுஷன்.. வயசான காலத்துல புத்தி இப்படியா போகணும்?” நினைக்கும்போதே கரகரவென்று கண்ணீர் ஊற்றெடுத்து கையின் வழி சொட்டித் தரையை நனைத்தது. அப்படியே படுத்துக்கிடந்தவள் பெருமூச்சுடன் எழுந்தமர்ந்து, கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டாள். ஒரு கையைத் தரையில் ஊன்றி மெதுவாக எழுந்தவளின் கை சுளீரென்று வலித்த இடுப்பை அனிச்சைச்செயலாகப் பற்றிக்கொண்டது. முந்தானையை உதறி அதிலேயே முகத்தைத்துடைத்துக்கொண்டு இடுப்பில் செருகிக்கொண்டவள் அடுக்களையை நோக்கி நடந்தாள்.

சாயந்திர டிபனுக்காக நனைத்து ஒட்டப்பிழிந்த அவலைத் தாளிதத்தில் போட்டுக்கிளறியவள் ஒரு கை தண்ணீரை எடுத்து அதில் பட்டும் படாமல் தெளித்தாள். சுர்ர்ர்ர்ர்.. என்ற ஓசையுடன் ஒன்றிரண்டு அவல் துகள்கள் குதித்தன. மூடி போட்டு வெந்ததும், உப்பு சரி பார்த்து கைப்பிடித்துணியால் கை சுட்டு விடாமல் இறக்கி வைத்தாள். “அவலு தாளிச்சதுன்னா ஆலாப்பறப்பாளே” மனதுக்குள் நினைத்தபடி ஒரு கிண்ணத்தில் அள்ளி வைத்துக்கொண்டு முந்தானையால் பொதிந்துகொண்டு கொல்லைப்புறத்துக்குச்சென்றாள். இடது பக்க வீட்டை நோக்கி மண் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு எட்டிப்பார்த்தாள். எதிர்பார்த்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் “ ஏட்டி,.. இந்தா. அவலு தாளிச்சேன், வந்து வாங்கிக்கோ” என்று அழைத்தாள்.

அந்தப்பக்கம் அமர்ந்திருந்த இளம்பெண் அதைக்காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.

மறுபடி மறுபடி அழைத்துப்பார்த்துச் சலித்த விசாலாட்சி, ”ஏட்டி,.. பெரியவங்க இன்னிக்கு சண்டை போட்டுக்கிடுவாங்க, நாளைக்கு சேர்ந்துக்கிடுவாங்க. நீ எதுக்கு நடுவுல வாரே? உனக்கும் எனக்கும் என்ன சண்டை? நீ எங்கிட்ட பேசுறதுக்கு என்னா? வீம்பு பிடிக்காதே” என்று கெஞ்சினாள்.

“ஆமா, வீம்பு பிடிக்கிறாங்க வீம்பு. இவங்க வான்னா வரணும்,.. போன்னா போகணுமா?.. களவாணிக வீட்டுக்கெல்லாம் இவங்க வந்தா இவங்க கவுரவம் என்னாவுறது?” என்று வேண்டுமென்றே சத்தமாகப்புலம்பி விட்டு அந்தப்பெண் வீட்டினுள் சென்று விட்டாள்.

பெருமூச்சுடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் விசாலாட்சி. இதே மாதிரியான ஒரு சாயந்திரத்தில்தான் அந்த இரண்டு குடும்பங்களுக்குமிடையேயான பிளவின் அஸ்திவாரத்தில் முதல் கல் விழுந்தது. இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு ஆற மாட்டேன் என்கிறது அவளுக்கு.

அந்த மாலைப்பொழுதில்,..

“காப்பி ஆறிப்போவுது. இன்னுமா குடிக்காம வெச்சிருக்கீங்க?.. இது கொள்ளாம். பொறவு “ஆறிப்போச்சு சூடாக்கித்தா”ன்னு வந்து நிப்பீங்க. அத சூட்டோட குடிச்சாத்தான் என்ன?” வாசலை நோக்கி எதற்கோ வந்தவள் டீபாயின் மேலிருந்த காபியின் மேல் படிந்திருந்த ஆடையை விரலால் எடுத்துச் சுண்டியவாறே கேட்டாள்.

“ஒரு நிமிஷம் இரு வாரேன். மளிகைக்கு ஐயாயிரம், பாலுக்கு ஆயிரம், ம்… அப்றம்,.. அவ்ளோதான்” சொல்லியபடியே டைரியில் எழுதியிருந்த லிஸ்டைச் சரி செய்து பேனாவால் டிக் செய்த சொக்கலிங்கம், ஒற்றைத்தாளாய் மீதியிருந்த ஐநூறு ரூபாய் பணத்தை டைரியின் உள்ளேயே வைத்து மூடினார். பேனாவின் மூடியைத்திருகி மூடியவர் கையில் அப்பியிருந்த மசியைத் தலையில் தேய்த்துக்கொண்டார்.

“என்ன அத்தான்?.. காப்பி குடி நடக்குது போலுக்கு.” மிதியடியில் காலைத்தேய்த்துத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தார் குரலுக்குச் சொந்தக்காரர். கூடவே நுழைந்தனர் ஒன்றிரண்டு நண்பர்கள்.

“யாரு?.. பெருமாளா?.. வா.. வா.. சாலாச்சி, திருக்கழுக்குன்றம் கழுகு பதிவா வர்ற நேரம் தப்பினாலும் தப்பும், ஒங்கண்ணன் காப்பி நேரத்துக்கு வாரது தப்பாது. போயி சூடா கொண்டா” 

“எங்க அண்ணனை வம்புக்கு இழுக்கலைன்னா உங்களுக்கு தின்ன சோறு செரிக்காதே. மலைக்குப் போனாலும் மச்சான் தயவு வேணும்ன்னு சொல்லுவாங்க.  எங்கண்ணங்கிட்ட  பார்த்துப் பேசுங்க  ஆமா,.. சொல்லிட்டேன்”  என்று சிரித்துக்கொண்டே வந்தவள் “இந்தாங்கண்ணே” என்று டம்ளர்களை அண்ணனிடமும் மற்றவர்களிடமும் கொடுத்து விட்டு உள்ளே போனாள்.

மச்சானும் மச்சினனும் நாட்டு நடப்புகளைப்பேசிக்கொண்டிருந்தார்கள். “ஊர் ஞாயம் பேச ஆரம்பிச்சா ரெண்டு பேருக்கும் நேரம் போறதே தெரியாதே” என்று புன்னகையுடன் நினைத்தபடி அடுக்களையில் இரவுச் சமையலுக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டாள் அவள். கால் மணி நேரம் சென்றிருக்கும். வாசல் மணி அழைத்தது. எழுந்து வாசலுக்குச் சென்றார் சொக்கலிங்கம்.

“என்னடா?..  “

“அப்பா காலைல வந்த பேப்பரை வாங்கிட்டு வரச்சொன்னா மாமா” 

உள்ளே வந்து ஹாலெங்கும் தேடி எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டு வந்தார். “சரி,.. அப்போ நான் வீட்டுக்குப் புறப்படறேன்” என்று எழுந்த பெருமாள், பேயறைந்த முகத்துடன் எதையோ தேடிக்கொண்டிருந்த சொக்கலிங்கத்தைப் பார்த்து ஒரு நிமிடம் நின்று “ என்ன தேடுறீங்க அத்தான்?” என்றார்.

அவர் அதைக் காதிலேயே வாங்கவில்லை. வாய் மட்டும் தன்னிச்சையாகப் புலம்பிக்கொண்டிருந்தது. கைகள் மேஜை இழுப்பறையைத் திறந்து கலைத்துப் போட்டுக்கொண்டிருந்தன.

“இப்பத்தானே உள்ளே வெச்சேன். எங்கே போச்சு?” 

“என்ன போச்சுங்கறீங்க”

“காணலை.. கை கால் முளைச்சு நடந்து போயிருக்குமா? இதென்ன அதிசயமா இருக்கு”

“இப்படி மொட்டையாச் சொன்னா என்னத்தைப் புரியும்?. எதைக்காணலைன்னு சொல்றீங்க?”

“டைரிக்குள்ள வெச்சிருந்த ரூவாயக் காணலைய்யா. ஐநூறு ரூவாயாச்சே..”

“ஐநூறு ரூவாயா? அத பீரோவுல வைக்காம டைரிக்குள்ளயா வெச்சீங்க. சரி, பீரோவுக்குள்ள வச்சுட்டு மறந்து போயி வேற இடத்துல தேடிட்டிருக்கப்போறீங்க. ஒங்களுக்குத்தான் வெச்ச இடம் ஒரு நாளும் ஓர்மை இருக்கது கெடையாதே. இன்னொருக்க தேடிப்பாருங்க”

“எங்கியும் வைக்கலையே.. இப்பத்தான் நீங்க வர்றப்பதான் உள்ளே வெச்சேன். அப்றம் நாம பேசிட்டிருந்தோம், அப்றம் நான் வெளியே போனேன். இப்ப உள்ளே வந்து பார்த்தா ரூவாயக் காணலை”

“அது எப்படிக்காணாமப் போகும்?”

“அதானே எனக்கும் தெரியலை. பெருமாளு, அத்தான் கிட்ட வெளையாடலாமேன்னு நீங்க சும்மா வெளையாட்டுக்காக ஏதாவது..” என்று இழுத்தார். 

பெருமாளின் முகம் கறுத்தது. “என்னிய சந்தேகப்படறீங்களா?.. ரூவாய நான் எடுத்துருப்பேன்னு நினைக்கிறீங்களா?” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார்.

“நீங்க வேணும்ன்னு எடுத்திருப்பீங்கன்னு சொல்லலை. சும்மா வெளையாட்டுக்கு செஞ்சீங்களான்னுதான் கேட்டேன்.”

“ரெண்டுக்கும் அர்த்தம் ஒண்ணுதான்யா. ச்சே.. ஒங்கள என்னவோ பெரிய மனுஷன்னு நினைச்சேன். புத்தியைக் காட்டிட்டீரே. இத்தனை பேருக்கு நடுவுல சபையில மூக்கறுத்துட்டீரே”

சொக்கலிங்கம் சூடானார் ”தங்கச்சி வீட்டுலயே கையை நீட்டுறது மட்டும் நல்ல புத்தியோ?”

அவ்வளவுதான் பெருமாளின் ஆத்திரம் தலைக்கேறியது. “பொண்ணையும் கட்டிக்கொடுத்து களவாணிங்கற பட்டமும் வாங்கிக்கிட்டாச்சு. இத்தனை பேரு இருக்கையில அது எப்படிய்யா என்னைப் பார்த்து இப்படிக் கேக்கத்தோணிச்சு?. அப்படி இத்தனி நாளு உங்க வீட்டுலேர்ந்து எத்தனை பொருளைய்யா திருடியிருக்கேன்?. போதும்யா உங்க சகவாசம்” என்றபடி விறுவிறுவெனப் படியிறங்கி விட்டார்.

நடந்த விவரமறிந்த விசாலாட்சிதான் பாவம் திருகையிலகப்பட்ட தானியமாய் அரைபட்டுக்கொண்டிருந்தாள். இந்தப்பக்கம் கணவன், அந்தப்பக்கம் சகோதரன். பாவம்… யாருக்குத்தான் பரிந்து பேசுவாள். மடை திறந்த வெள்ளமென சொக்கலிங்கம் திட்டிக் கொட்டிக் கொண்டிருந்த வார்த்தைகளனைத்தையும் மௌனமாக உள்வாங்கிக்கொண்டிருந்தாள். விஸ்வரூபமெடுத்தவர் ஒருவாறு அடங்கி அமர்ந்தபோது டைரியின் பக்கங்கள் மட்டும் மௌனத்தைக் குலைத்து காற்றில் படபடத்துப் பேசிக்கொண்டிருந்தன. எழுந்து அதை பீரோவில் வைப்பதற்காக எடுக்கப்போனவள் திடுக்கிட்டாள். படபடத்த பக்கங்களுக்கிடையே மறைந்து மறைந்து பளிச்சிட்டுக்கொண்டிருந்தது ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு.

பரபரப்புடன், “ஏங்க,.. இங்கே பாருங்க” என்று கூவினாள்.

“அடச்சை.. இது இங்கேயா இருக்கு. தாளுக்களுக்கு இடையில ஒட்டிக்கிட்டிருந்ததுல கவனிக்காம உட்டுட்டேன். இப்ப என்ன செய்யறது?”

“ஆமா,.. இப்பக் கேளுங்க. எதுக்கெடுத்தாலும் அவசரப்பட்டு என்னத்தையாம் செய்ய வேண்டியது. பொறவு முழிக்க வேண்டியது. ஒங்களுக்கு இதே பொழப்பாப்போச்சு. இருங்க.. வாரேன்” என்றவள் டைரியை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறத்துக்கு ஓடினாள். பின் வாசல் வழியாக அண்ணனின் வீட்டுக்கு. 

இதற்குள் செய்தி அங்கேயும் எட்டியிருந்தது. அனைவரின் முகங்களும் இறுகிப்போய்க்கிடந்தது. எதிர்பார்த்ததுதான் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் அண்ணனின் அருகில் சென்றாள். டைரியை விரித்து பக்கங்களுக்கிடையில் இருந்த ரூபாயைக் காட்டினாள்.

“தப்பு நடந்து போச்சுண்ணே.. ஒக்கல்ல புள்ளைய வெச்சுட்டு ஊர் முழுக்கத் தேடுன மாதிரி ரூவாய இதுக்குள்ள வெச்சுட்டு வேண்டாத்த பேச்சு பேசிட்டார் அந்த மனுஷன். எனக்காச்சுட்டி அவர மன்னிச்சுருங்க. மயினி,.. நீங்களும் எங்கள மன்னிச்சுருங்க. அண்ணங்கிட்ட எடுத்துச் சொல்லுங்க..” என்று அண்ணியின் மோவாயைத் தொட்டுக் கெஞ்சியவள், “ஏட்டி, நீயாவது அப்பாட்ட சொல்லுட்டி,. நீ சொன்னா அப்பா கேப்பாரு” என்று அண்ணன் மகளைத்துணைக்கழைத்தாள்.

“மன்னிக்கச் சொல்லுகதுக்கு என்ன இருக்கு அத்த?.. என்னதான் சொந்தம்ன்னாலும் நாலு பேத்துக்கு மத்தியில மாமா எங்க அப்பா மேல திருட்டுச் சொல்லு சொல்லிட்டாரே. இனிமே யார் வீட்டுக்கும் போனாலும் எப்படி மன சமாதானமா போக முடியும்? என்னத்தையும் காணலைன்னா எங்களைச் சொல்லிருவாங்களோன்னு பயந்துல்லா கெடக்கணும்.” சூடாக வந்தது பதில்.

அன்றிலிருந்து தொடங்கியது நிழல் யுத்தம். தெருவில் எதிரெதிரே வரும்போது முகத்தைத் திருப்பிக் கொள்வதில் ஆரம்பித்து, அந்த வீட்டுப்பெண்கள் குழந்தைகள் கூட கூப்பிட்ட குரலுக்கு என்னவென்று கேட்காமல் இருப்பது வரை யுத்தம் தொடர்ந்து கொண்டிருந்தது. சொக்கலிங்கமே நேரடியாகப் போய் மன்னிப்புக் கேட்டுச் சமாதானப்படுத்த முயன்றும் இறங்கி வரவில்லை. “சபையில மூக்கறுத்துட்டு தனியா வந்து மருந்து தடவுதீங்களா?” என்று விறைப்பாகப் பதில் வந்ததாகச் சொன்னார் விசாலாட்சியிடம். 

ஊருக்குள்ளும் அரசல் புரசலாகச் செய்தி பரவியிருந்ததில் வெளியே தலை காட்ட இரு குடும்பத்தினருமே சங்கடப்பட்டுக்கொண்டிருந்தனர். நகமும் சதையுமாக இருந்தவர்களை ஊர் மெச்சிய காலம் போய், இப்போது ஊருக்கு அவலாக தங்கள் வீட்டு சங்கதி ஆகி விட்டதே என்று விசனப்பட்டனர். அப்படியும் இப்படியுமாக இரண்டொரு மாதங்கள் உருண்டோடின. முன் பகல் நேரத்துத் தாளித வாசனையாய் வன்மம் பரவிக்கொண்டுதான் இருந்தது. பலகாரங்கள் பகிர்ந்து கொள்ளாமல், பிடிக்குமே என்று பதார்த்தங்கள் கொடுத்தனுப்பப் படாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

வழக்கம்போல் சாயந்திரம் கோயிலுக்குப் புறப்பட்டார் சொக்கலிங்கம். பிரகாரம் சுற்றி வந்து பிரசாதம் வாங்கி விட்டு, “என்னப்போ… ஈஸ்வரா” என்று மெலிதாய் அந்த ஈஸ்வரனுக்கு மட்டுமே கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு கோயிலின் திண்ணையை நோக்கி நகர்ந்தார். தோளிலிருந்த துண்டை எடுத்துத் திண்ணையில் பட்டும் படாமல் அடித்துத் தூசியைத் துரத்தி விட்டு உட்கார்ந்து கொண்டார். 

கோயிலுக்குள்ளிருந்து வருவது,.. யாரது?.. பெருமாளா? அவரேதான். ‘கிட்டப்போயி பேசினா சுள்ளுன்னு விழுவான். அதுக்காக அப்படியே உட்டுர முடியுமா?’ நினைத்தபடி எழுந்து அருகில் சென்றார். இவரைக் கண்டதும் பெருமாள் விலகி நடக்க முயன்றார்.

“செரி,.. போட்டும். தப்பு நடந்துட்டுது. இன்னும் எத்தனை தடவதான் ஒங்க கிட்ட கெஞ்சட்டும் நான்?. மன்னிச்சு உடுவீங்களா.. அத விட்டுட்டு இன்னும் அதையே புடிச்சுத் தொங்கிட்டிருக்கீங்களே” என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு நயமாகப் பேச்சைத்தொடங்கினார் சொக்கலிங்கம்.

“சபையில அவமானப்படுத்துன ஒம்ம கிட்ட எனக்கென்ன பேச்சு?.. வழிய விடுங்க.” என்றபடி கையை விடுவித்துக்கொள்ள முயன்றார் பெருமாள். இருவரின் கைகளிலும் விரோதத்தின் பழைய விறைப்பு இல்லை. பாசத்தின் அதிர்வுகளையும் எங்கோ ஒரு ஆழத்தில் உணர முடிந்ததில் கண்கள் பனித்தன இருவருக்கும்.

“சரி,.. இன்னும் அதையே சொல்லிட்டிருக்காதீங்க. அவசரப்பட்டு ரெண்டு குடும்பத்தோட சந்தோஷத்தையும் நானே கெடுத்துட்டேன். இப்ப என்ன?.. இத்தனை பேர் நெறைஞ்சுருக்காங்க இந்தக்கோயில்ல. எல்லாத்துக்கும் மேல என்னப்பன் தாணுமாலயன் கருவறைக்குள்ள உக்காந்து எல்லாத்தையும் பாத்துக்கிட்டு ‘நடத்துங்கடே’ன்னு சொல்லி சிரிச்சிட்டிருக்கான். இவங்க முன்னாடி மன்னிப்பு கேட்டா போதுமா?.. எல்லோரும் நல்லாக்கேட்டுகிடுங்க. என் மச்சினர் அப்பாவி, ஒரு பாவமும் அறியாத்தவர். அவசரப்பட்டு நாந்தான் அவரு மேல திருட்டுப்பழிய போட்டுட்டேன். என்னய மன்னிச்சுக்கிடுங்க” என்று சொன்னவர் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் மளாரென்று பெருமாளின் காலில் விழுந்தார் அத்தனை பேர் முன்னாலும்.

அவரவரும் நின்ற இடத்திலேயே நின்று போயினர். முதலில் சுய நினைவுக்கு வந்த பெருமாள்தான் துள்ளி விலகி “என்ன காரியம் செஞ்சீங்க. எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க. எங்கால்ல விழறதாவது? மொதல்ல எந்திரிங்க..எந்திரிங்க சொல்றேன்” என்று தங்கை கணவரை எழுப்பித் தோள் சேர்த்துக் கொண்டார். 

“மனசுல ஒண்ணும் வெச்சுக்கிடாதீங்க..” என்று மச்சினரின் தோளில் சாய்ந்து விம்மினார் சொக்கலிங்கம்.

“அடப்போங்க அத்தான்.. ஒங்களை எனக்குத்தெரியாதா?.. அவசர புத்தியில ஏதாச்சும் செஞ்சுட்டு முழிப்பீங்க. என்ன?.. இந்தத்தடவை என் கழுத்துக்கு கத்தி வெச்சிட்டீங்க. சரி, போட்டும். ஆண்டவன் சன்னிதியில சொன்னதே போறும் எனக்கு.. சவத்தெ விடுங்க. நம்ம மேல பட்ட திருஷ்டி வெலகிச்சுன்னு நினைச்சுக்கறேன். என்ன சிக்கல்ன்னா வீட்டுல இருக்கற உருப்படிகளைச் சமாதானப்படுத்த கொஞ்சம் காலம் செல்லும். எல்லாம் சரியாயிரும்.. நீரடிச்சா நீர் வெலகப்போவுது” என்று அவர் சொன்ன தினுசிலேயே தன்னை மன்னித்து விட்டார் என்று சொக்கலிங்கத்திற்குப் புரிய மனசு லேசானது. 

கை கோர்த்துக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினர் இரண்டு பெரியவர்களும்.
டிஸ்கி: இந்தச்சிறுகதையை 'பெண்கள் மலரில்' வெளியிட்ட தினமலருக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails