Monday, 12 August 2013

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை)

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கும் மட்டுமல்லாது, அவர்கள் வாழ்ந்த காலங்களையும் அவர்கள் செய்த செயல்களையும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன அவர்களது நினைவுச்சின்னங்களாக எழுப்பப்பட்ட சிலைகள். இவ்வாறு சிலைகள் மட்டுமன்றி, ஒரு சில நிகழ்வுகளை என்றென்றும் நினைவு கூரும் வகையில் ஒரு சில கட்டிடங்களோ அல்லது அமைப்புகளோ கூட நினைவுச்சின்னங்களாக எழுப்பப்படுகின்றன.

இன்னும் சில, அப்படியெல்லாம் எந்தவொரு கட்டுப்பாட்டுக்குள்ளும் வராமலே எழுப்பப்பட்டாலும் நாளடைவில் நினைவுச்சின்னங்களாக ஆகிவிடுகின்றன. மும்பையில் 'க்ராஸ் மைதான்' என்றழைக்கப்படும் சிலுவை மைதானத்திலிருக்கும் 'சர்க்கா' அப்படியானவற்றில் ஒன்று. மும்பையிலிருக்கும் 'கேட் வே ஆஃப் இந்தியா'வைப்போன்று இப்போது சர்க்காவும் மும்பையிலிருக்கும் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்று விட்டது. இந்த சர்க்கா 'நூரு கரீம்' என்ற ஆர்க்கிடெக்டால் வடிவமைக்கப்பட்டது. இவர் இதை, மும்பையில் டாடா ஸ்டீல் கம்பெனியும் I&Bயும் (Indian Architect and Builder) சேர்ந்து நடத்திய architectural and engineering design போட்டிக்காக வடிவமைத்திருந்தார். நாடு முழுவதுமிலிருந்து சுமார் நூறு பங்கேற்புகள் அந்தப்போட்டியில் இடம்பெற்றன. நூறையும் பின்னுக்குத்தள்ளி விட்டு நூரு கரீமின் படைப்பு போட்டியில் வென்றது. அப்படியென்ன சிறப்பு அந்தப்படைப்பில் இருக்கிறது?.
 நாட்டியமாடும் சர்க்கா..
இந்தியா என்றதுமே எப்பொழுதுமே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காந்தியும், சர்க்காவுமாகத்தான் இருக்கும். அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரித்து அவர் உபயோகிக்கச் சொன்ன சுதேசிப்பொருட்களில் முக்கிய இடம் பெற்றது கதர்தானே. அதை நூற்க அவர் உபயோகித்த சர்க்காவை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டுதான் நூரு கரீம் இதை உருவாக்கியிருந்தார். 'சமகாலத்திய அளவில் இந்தியாவிற்கான அடையாளம்' என்பதைத் தலைப்பாகக் கொண்டிருந்த போட்டியில், என்றுமே இந்தியாவிற்கு முக்கிய அடையாளமாக விளங்கும் சர்க்கா ஜெயித்ததில் ஆச்சரியமென்ன! நமது தேசியக்கொடியிலிருக்கும் அசோகச்சக்கரம் கூட ஒரு வகையில் சுழலும் சக்கரத்தைக்கொண்டிருக்கும் சர்க்காவைத்தானே நினைவு படுத்துகிறது.

வட்டத்துக்குள் கட்டம் கட்டப்பட்டிருப்பதுதான் மும்பையின் மேற்கு ரயில்வேயின் தலைமையகம்..
சுமார் 30 அடி அளவு உயரத்தைக் கொண்டிருக்கும் இந்த சர்க்கா மும்பைக்கு வந்த விதம் சுவாரஸ்யமானது. காந்தியின் கொள்கையைப் பிரதிபலிப்பதால் இதைக் காந்தி பிறந்த மண்ணான குஜராத்தின் காந்தி நகரிலும், அவர் ஒரு தடவை சிறை வைக்கப்பட்டிருந்த பூனாவிலும் நிறுவ இடம் பார்க்கப்பட்டது. ஆனால் எதுவும் சரிப்படாமல் கடைசியில், க்ராஸ் மைதானத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்த ஓவல் (Organisation for Verdent Ambience and Land (OVAL)) ட்ரஸ்டிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் இதை இங்கே நிறுவினார்கள். இதைத்தான் 'வரணும்ங்கறது வராம இருக்காது' என்று சொன்னார்களோ :-))
கடிக்க வரும் சுறாமீனை நினைவுபடுத்துகிறது இந்தக்கோணம்..
முப்பதடி உயர அளவில் கைமுறுக்கு மாதிரியும் ஜாங்கிரி மாதிரியும் முறுக்கித் திருகிக்கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஒவ்வொரு கோணத்திலும் ஒவ்வொரு மாதிரி காட்சி தருகிறது. சர்க்கா சுழலுவதையே இதன் திருகல்கள் குறிக்கின்றனவாம். காந்தியின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதால் கடந்த 2011-ம் வருஷம், அவரது பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதியன்று டாடா ஸ்டீலின் வைஸ் சேர்மன் முத்துராமன் முன்னிலை வகிக்க இயக்குனர் R.K.கிருஷ்ணகுமார் திறந்து வைத்திருக்கிறார். இங்கே வரும் மக்கள் விவரம் அறிந்து கொண்டு பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஏதுவாகக் கல்வெட்டும் இருக்கிறது. தஞ்சாவூரில்தான் கல்வெட்டு இருக்குமா என்ன? மும்பையிலும் இருக்கிறதாக்கும் :-)
வாஸ்து எதுவும் பார்க்காமலேயே இந்த சர்க்கா சரியான இடத்தில் அமைந்து விட்டது போலிருக்கிறது. ஒரு புறம் வி.டி ஸ்டேஷன், அடுத்த புறம் சர்ச் கேட் ஸ்டேஷன் என்று இரண்டு பிரபலமான ரயில் நிலையங்களுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. பற்றாக்குறைக்கு மும்பையின் பிரபலமான ஃப்லோரா ஃபவுண்டனுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. வி.டி. மற்றும் சர்ச் கேட் நிலையங்களை இணைக்கும் பாதையாகவும் இந்த மைதானம் அமைந்திருப்பதால் பார்வையாளர்களுக்கும், பொழுதைப்போக்க வருபவர்களுக்கும் குறைவில்லை. இந்தப்பாதைதான் மும்பையின் சரித்திரப்புகழ் பெற்ற காவூ கலி(khau gali) என்று அழைக்கப்படுகிறது. மராட்டியில் காவூ என்றால் தின்பண்டம். gali என்றால் தெரு அல்லது சந்து என்று அர்த்தம். பேல்பூரி, சேவ்பூரி, வடாபாவ், ஆலு டிக்கி, போன்றவையும் மேலும், விதவிதமான சாப்பாட்டு அயிட்டங்கள் எப்போதும் விற்பனையாகிக்கொண்டிருப்பதால் இரண்டு ஸ்டேஷன்களிலும் இருந்து வெளி வரும் பெரும்பாலான மக்கள் வீட்டுக்குப்போகுமுன் இங்கு வந்து பேட்பூஜா அதாவது வயிற்றுக்கும் சிறிது ஈயாமல் செல்வதில்லை. பற்றாக்குறைக்கு கிரிக்கெட்டு விளையாடும் சிறுவர்களுக்கும் குறைவில்லை. எப்பொழுதும் ஜேஜேவென்று இருக்கும், புகழ்பெற்ற ஃபேஷன் ஸ்ட்ரீட்டும் இங்கேதான் இருக்கிறது.
புதுக்கோணம்.. புதுத்தோற்றம்..
சர்க்காவின் அருகிலேயே குழந்தைகள் விளையாட வசதியாக விளையாட்டுச் சாதனங்களடங்கிய பூங்காவும், வருபவர்கள் அமர்ந்து இளைப்பாற சிமிண்டுத்திண்ணைகளும் இருப்பதால் குடும்ப சகிதம் வருபவர்களும் உண்டு. வி.டி ஸ்டேஷனிலிருந்து டாக்சி மூலம் இங்கே வரலாம். ஆசாத் மைதான் அருகே என்று சொன்னால் நிறையப்பேருக்குப் புரியும். முதன் முதலில் இந்த அமைப்பைப் பார்ப்பதற்கு எலும்புக்கூடு போன்று வினோதமாகத் தோன்றத்தான் செய்கிறது. இதற்காகவே மக்கள் இதன் முன் நின்று படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். குழந்தைகளோ இதையும் ஒரு விளையாட்டுப்பொருளாக எண்ணி ஏணிப்படிகளில் ஏறுவதுபோல் கடகடவென்று ஏற ஆரம்பித்து விடுகின்றன. இதனருகில் செல்ல அனுமதியில்லை என்றாலும், வெள்ளை வெளேரென்று தந்தம் போல் மின்னும் இந்த அமைப்பு கிட்டே போய்த் தொட்டுப்பார்க்கத் தூண்டுவதென்னவோ நிஜம்.

10 comments:

ஸ்ரீராம். said...

புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். பார்க்க வித்தியாசமாக இருக்கிறது.

பார்வதி இராமச்சந்திரன். said...

அழகான புகைப்படங்கள். அருமையான தகவல்கள். இதைப் பார்க்கவே ஒரு முறை மும்பை வரவேண்டுமென்று தோன்றுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

பார்வதி இராமச்சந்திரன். said...

அழகான புகைப்படங்கள். அருமையான தகவல்கள். இதைப் பார்க்கவே ஒரு முறை மும்பை வரவேண்டுமென்று தோன்றுகிறது. நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அழகான படங்களுடன் செய்திகள் அருமை.

ராமலக்ஷ்மி said...

ஃப்ளிக்கரில் இரசித்த படங்கள். இரண்டாவது மிக அருமையான கோணம். தகவல்களுக்கும் நன்றி சாந்தி.

ஸ்கூல் பையன் said...

நானும் மும்பை சென்றிருக்கிறேன்... அலுவல் விஷயமாக... அடுத்தமுறை சுர்ரிப்பார்க்கச் செல்லவேண்டும்...

கரந்தை ஜெயக்குமார் said...

அழகான புகைப் படங்கள் அருமையான தகவல்கள்

ஹுஸைனம்மா said...

வித்தியாசமாக, கவரும்வண்ணம் இருக்கிறது.

ஆமா, ஒவ்வொரு கோணத்துலயும் ஒவ்வொரு விதமாத் தெரியுது, சரி. ஆனா, ஒரு கோணத்திலயும் ‘சர்க்கா’ மாதிரித் தெரியலையே? என் பார்வையின் ‘கோணம்’தான் சரியில்லியோ? அவ்வ்வ்....

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட நட்புகள் அனைவருக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails